Jump to content

மன்னார் வளைகுடாவில் கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் - நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
மன்னார் வளைகுடா

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது.

உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் 150 வகையான வண்ண மீன்கள், பாலூட்டி வகையில் 12 வகையான் கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், 12 வகையான கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் வாழ்ந்து வருகின்றன.

வெடி வைத்து மீன் பிடித்தல், கடல் வளத்தையே அழிக்கும் வகையில் பல்வேறு மீன்பிடி முறைகள், கடல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் கடல்வளம் சிதைந்து குன்றிவருகிறது.

மன்னார் வளைகுடா

குந்துகால் கடல் பகுதியில்என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்ததால் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாம்பன் முதல் குந்துகால் வரையிலான கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசியது.

அதை தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் சென்று பார்த்த போது கடல்பகுதி பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. மேலும், மூன்று மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

இதேபோல், குந்துகால் கடற்கரைக்கு எதிரே உள்ள மன்னார் வளைகுடா தீவுகளான குருசடை தீவு மற்றும் சிங்கிள் தீவு பகுதிகளிலும் மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து மரைக்காயர் பட்டிணத்திலுள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மன்னார் வளைகுடா

கடல் நீரின் நிறம் மாறியது எப்படி? மீன்கள் இறந்தது ஏன்?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மரைக்காயர் பட்டிணத்திலுள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி ஜெயக்குமார், ”மன்னார் வளைகுடா கடற்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிகளவில் உற்பத்தியாகும். இதனை மீனவர்கள் 'பூங்கோரை' என்றழைப்பார்கள். மகரந்த சேர்க்கைக்காக இந்த பாசிகள் கடலில் படரும் போது கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். இந்நிகழ்வு வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடலில் ஏற்படும் நீர்ரோட்டம், கடல் அலைகளின் வேகம், சூறைக்காற்று காரணமாக கடலில் மிதந்து பல்வோறு பகுதிகளுக்கு பிரிந்து செல்வதால் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,” என்றார்.

மன்னார் வளைகுடா

மேலும், “கடந்த இரண்டு நாட்களாக பாம்பன் முதல் குந்துகால் வரையிலாக கடல் பகுதியில் நீர்ரோட்டம், கடல் அலைகள், பலத்த காற்று ஆகியவை இல்லாததாலும் கடல் நீரின் வெப்ப நிலை 34 டிகிரி உயர்ந்து (சராசரியாக 29 முதல் 32 டிகிரி வரை இருக்கலாம்) காணப்பட்டதால் கடலில் மிதந்து செல்ல முடியாமல் குறிப்பிட்ட பகுதிகளில் கடற்பாசி தேங்கி நின்றுள்ளது. அந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிட்டதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி உயிரிழந்தன,” என்றார்.

“பெரும்பாலும் ஓரா, கிளிமீன், கிளிஞ்சான் ஆகிய மீன்களே அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இதே போல் Noctiluca scintillans என்ற நுண்ணுயிரி கடந்த சில வாரங்களுக்குமுன், சென்னை கடற்கரை பகுதியில் திடீரென கடல் நிறம் மாறி நீல வண்ணத்தில் ஒளிர்ந்தது. அதேபோல்தான், பாம்பன் முதல் குந்துகால் வரை கடல் நீர் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது. இந்த கடல் பகுதியில் உள்ள மீன்களை மக்கள் சாப்பிடலாம். ஆனால் 'பூங்கோரை' நுண்ணுயிர் கடற்பாசியை சாப்பிட்டு உயிரிழந்த மீன்களை மக்கள் சாப்பிட்டால் வயிற்று போக்கு நோய் தாக்க வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு நாட்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இதனால், மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை,” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

மன்னார் வளைகுடா

குழப்பத்தில் மீனவர்கள்

கடலில் ஏற்படும் திடீர் மாற்றம் குறித்து பாம்பன் நாட்டு படகு மீனவ சங்க தலைவர் அருள் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”சுனாமி மற்றும் கஜா புயலுக்கு பின் மன்னார் வளைகுடா பகுதிகளில் பெரிய மாற்றங்களை மீனவர்களால் காண முடிகிறது. ஆரம்ப காலங்களில் மீனவர்கள் தொழில் செய்யும் போது வலைகளில் பிடிபடும் பல வகை மீன்களை தற்போது காணமுடியவில்லை. அதே போல் கடல் திடீரென உள் வாங்குவது, கடலில் நிறம் மாறுவது என அனைத்தும் மீனவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது,” என்றார்.

மன்னார் வளைகுடா

மீன்களை யாரும் சாப்பிட வேண்டாம்

கடல்நீர் பச்சையாக மாறியதை கண்ட மீனவர் விக்டர் பிபிசி தமிழிடம் பேசும் போது, ”நேற்று நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பிய போது, கடல் வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறமாக காணப்பட்டது. ஆனால், இன்று அதிகளவில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. உடனடியாக மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து இறந்த மீன்கள் மற்றும் கடல் நீரின் மாதிரிகளை சேகரித்ததுடன், இறந்து கரை ஒதுங்கிய மீன்களை மீனவர்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி சென்றனர். ஏன் கடலில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறது, எதனால் கடல் நீர் நிறம் மாறியது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து மீனவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.

https://www.bbc.com/tamil/india-49684963

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.