Sign in to follow this  
nunavilan

சிவப்பு மஞ்சள் பச்சையில்..

Recommended Posts

சிவப்பு மஞ்சள் பச்சையில்..

 
தொடர்ச்சியாக, பல வார இறுதிகளில் சென்னைக்கு பயணம் செய்து கதை விவாதத்தில் கலந்து கொண்ட படம் திரைக்கு வந்துவிட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை.
 
VMBG_120328000000.jpg
 
இயக்குநர் சசியின் இல்லம் கே.கே நகரில் இருந்தது. தமது வீட்டுக்கு மேல் உள்ள தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி வந்து அதிகாலையில் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே படுத்துக் கொள்வேன். எட்டு மணிக்கு எழுந்து தயாராகி உணவை முடித்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கலந்துரையாடல் தொடங்கும். மதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாலை வரை தொடரும். சில வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு. இல்லையெனில் கிளம்பி ஊருக்குச் சென்றுவிடுவேன்.
 
இடையில் தயாரிப்பாளர் மாறிய பிறகு அருகிலேயே இன்னொரு அலுவலகம் அமைத்து கதை விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு பாஃப்டா அலுவலகத்தில் ஓர் அறையில் சில நாட்கள் நடைபெற்றது. அப்பொழுதும் குளியல், தங்கல் எல்லாம் இயக்குநரின் வீட்டின் மேலிருந்த அலுவலகத்தில்தான். இயக்குநர் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சேலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அப்பா மளிகைக்கடை நடத்தி வந்தாராம். இயக்குநரிடம் பேசியதைவிடவும் அவரது பெற்றோரிடம் அதிகம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன். அப்படியான எளிய மனிதர்கள். சசியின் நேர்காணல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எந்தவிதமான பூச்சுகளும் இல்லாமல் பேசியிருப்பார். எப்படி பேசுகிறாரோ அப்படியேதான் வாழ்கிறார். இத்தகைய மனிதர்களிடம் எந்தவிதமான பாசாங்குமில்லாமல் மிக தைரியமாக உரையாடலை முன்னெடுக்க முடியும். 
 
இயக்குநரை சில வாரங்களுக்கு முன்பாகவே டிஸ்கவரி புக் பேலஸில்  முதன் முறையாகச் சந்தித்துப் பேசியிருந்தேன்.   ‘மாமா-மச்சான் கதைதான் அடுத்த படம்’ என்றார். அவருக்கும் எனக்கும் அதற்கு முன்பாக எந்தத் தொடர்புமில்லை. மகுடபதி என்ற நண்பர்தான் எங்களுக்கு இணைப்பு பாலம். அதன் பிறகு இயக்குநர் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே ‘அடுத்த படம் இதுதான்...யோசிச்சு வைங்க’ என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டார்.  
 
அதன் பிறகு மாமா-மச்சான் உறவுகள் பற்றிய கதைகளை தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். புத்தகங்களிலும் தேடல்களை நடத்தினேன். கிழக்குச் சீமையிலே மாதிரியான சில படங்களையும் பார்த்தேன். உள்ளூரின் சுவாரசியமான சீட்டாட்ட சண்டைகள், இணைந்து தொழில் தொடங்கிய மாமன்-மச்சான், மிகச் சாதாரண சச்சரவில் ஆரம்பித்து கடுமையான எதிரிகளாகிக் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டவற்றையெல்லாம் யோசித்து ஒரு சிறுகதை வடிவமாக்கி இயக்குநரை அலைபேசியில் அழைத்துச் சொல்வேன். தமக்குப் பிடித்தமானவையெனில் ‘இதை ரெக்கார்ட் செஞ்சு அனுப்புறீங்களா?’ என்று கேட்பார். அப்படி அனுப்பிய ஒரு சம்பவம்தான் படத்தின் இறுதிக்காட்சி என்று முடிவானது. அம்மாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி அனுபவத்திலிருந்து கேட்ட சம்பவம் அது. 
 
மெல்ல வளரும் கதை, அதனையொட்டிய சம்பவங்கள், அவற்றை இணைத்துக் கோர்வையாக்குவது என்று ஒவ்வொரு படியாக திரைக்கதை முன்னேறிக் கொண்டிருந்தது. விவாதம் நடக்கும் அறையில் வெள்ளைப் பலகை ஒன்றில் கதையின் தொடர்ச்சி எப்பொழுதும் எழுதப்பட்டிருக்கும். மிக நுணுக்கமான சில ஷாட்களை விவாதத்தின் போது அவர் சொல்லியிருந்தார். சிறுமியான அக்காவின் விரலைச் சூப்பியபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை, யாராவது மச்சான் என்று அழைக்கும் போது ஜி.வி.பிரகாஷ் கடுப்பாவது என்பதெல்லாம் தொடக்க காலத்திலேயே முடிவு செய்து வைத்திருந்தார். திரைக்கதை உருவான போதே சில வசனங்களையும் இயக்குநர் சொல்வார். அவைதான் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
கதையைச் சொல்லும் போது பெரிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் சொல்லும் இயக்குநர், சில காட்சிகளைச் சொல்லும் போது தம்மையும் மீறி அழுதார். ‘இதென்ன உண்மையா நடந்த கதையா இருக்குமோ’ என்று குழம்பிக் கொண்டிருந்தேன். கவனிக்கும் போது இயக்குநர் சசி அடிப்படையிலேயே அப்படிப்பட்டவர்தான். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆனால் உள்ளூர உணர்ச்சிகளால் உருவானவர் என்று தோன்றும்.  அவரது முந்தைய படங்களின் ஆக்கங்களிலும் அது தெரியும். ஆனால் தமது முந்தைய படங்களை அவர் விவாதத்தின் போது ரெஃபரன்ஸாக பேசியதாக நினைவில் இல்லை. வேறு சில படங்கள், இயக்குநர்களைத்தான் சுட்டிக் காட்டினார்.
 
கதை முழுமையடையும் வரைக்கும் யார் நாயகர்கள் என்றே தெரியாது. ‘கதைக்கு ஏத்த மாதிரி நடிகர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லியிருந்தார். கதையின் வடிவம், பெரும்பாலான காட்சிகள் முடிவு செய்யப்பட்ட பிறகு ஜி.வி.பிரகாஷையும், சித்தார்த்தையும் சந்தித்துக் கதை சொன்னார். நடிகர்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு கதையில் சில மெருகேற்றல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் பிறகு என்னுடைய பங்களிப்பு குறைந்துவிட்டது. 
 
இயக்குநரைச் சந்திக்கும் முன்பாக ‘வசனம் எழுதிப் பார்க்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில்தான் இருந்தேன். ஆனால் கதை உருவாக்கத்தில்தான் என்னுடைய உதவி இருந்தது. ‘சார், வசனம் எழுதிப் பார்க்கட்டுமா’ என்று கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் கேட்கத் தோன்றவில்லை. யாரிடம் எந்த வேலையைப் பெற வேண்டும் என்று அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.
 
உண்மையில், ஒரு கதை எப்படி திரைக்கதையாகி படமாகிறது என்பதை வெகு அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு. கதை உருவாக்கம் வகுப்பறை போலத்தான் நடந்தது. ஒரு சில உதவி இயக்குநர்கள் மிக பயந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் துணிச்சலாக இயக்குநரிடம் பேசுவார்கள். நான் சமநிலை குலையாமல் இருந்ததாக நம்புகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிரவும் பயணத்தில்தான் கழிந்தது. ஆனால் சலித்துக் கொள்ளவேயில்லை. சனிக்கிழமை புத்தம் புதியதாக இருக்கும். படமாகப் பார்க்கும் போது என்னுடைய உழைப்பு மிகச் சிறியதுதான் எனத் தோன்றுகிறது. அதற்கேற்ற கிரெடிட்டை வழங்கியிருக்கிறார்.

திரையில் பெயர் தோன்றும் போது நானே விசிலடித்துக் கவனத்தைத் திருப்பலாமா என்று நினைத்தேன். ‘டேய்...இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்று பல்லி கத்தியதால் அமைதியாகிக் கொண்டேன்.
 
1.jpg
 
ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி திரைப்பட உழைப்பாகக் கூட இருக்கலாம். பணம், புகழ் என்றில்லாமல் நம்முடைய அலைவரிசைக்கு ஏற்ற, உழைப்பைச் சுரண்டாத சசி மாதிரியான இயக்குநர்கள் அமைவது அபூர்வம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. நல்லதொரு அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

படம் தயாரான பிறகும் படத்துக்காக பெரிய விளம்பரங்களைச் செய்யவில்லை. ‘பிச்சைக்காரன்’ இயக்குநரின் அடுத்த படம் என்பதைத் தாண்டி பெரிய ப்ராண்டிங் இல்லை. படம் எப்பொழுது வெளியாகிறது என்பது கூட முந்தைய நாள் வரைக்கும் தெரியவில்லை. தி.நகரில் ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த போது திரையரங்கப் பணியாளரிடம் விசாரித்தேன். கடந்த இரண்டு நாட்களாக ‘பிக்கப்’ ஆகிக் கொண்டிருக்கிறது என்றார். சந்தோஷம்.
 
கதையை தமக்குப் பிடித்த வகையில் சமரசமில்லாமல் படமாக்கக் கூடிய இயக்குநர் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எடுத்திருக்கிறார். சிற்சில விமர்சனங்கள் இருந்தது. அதையும் அலைபேசியிலேயே சொன்னேன். எந்தவித மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டார். எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் நிறைவாகவும் இருக்கிறது. 
 
படத்தின் கதையில் பணியாற்றிய ஒருவன் கதையை, விமர்சனத்தை எழுதுவது சரியாக இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
Master.jpg

சிவப்பு மஞ்சள் பச்சை மினி விமர்சனம்

Samayam Tamil, Fri,6 Sep 2019 14:23:08 +05:30
விமர்சகர் மதிப்பீடு 3 / 5
வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5
நடிகர்கள்சித்தார்த்,ஜீவி பிரகாஷ்,லிஜோ மோல் ஜோஸ்,காஷ்மிரா.
இயக்கம்சசி
சினிமா வகைAction,Thriller
கால அளவு140
 
 
  கரு - உறவுகளுக்கிடையே ஏற்படும் முன்பகை, மனங்களை காயப்படுத்துவதும் அது மாறுவதும் தான் கரு.

  கதை - ஜீவி, லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார்.

  மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே கதை.

  மகாமுனி திரைவிமர்சனம்!

  விமர்சனம்: பிச்சைக்காரன் எனும் மெகா வெற்றிக்குப் பிறகு சசி தன் அடுத்த படைப்புடன் வந்திருக்கிறார். கமர்ஷியல் படமே என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் காலமும் சிரத்தையும் அவர் படத்தை தனித்துக் காட்டும். இது இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும் அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதை சொல்லியிருக்கிறது.

  ஒரு பக்கம் பைக் ரேஸ் இளைஞன், இன்னொரு புறம் நேர்மையான போக்குவரத்து அதிகாரி, இருவரின் வாழ்க்கையின் வழியே மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். சசி படங்களில் மனித உணர்வுகள்தான் மையமாக இருக்கும். அதுதான் காதாபாத்திரங்களின் பிரச்சினையாகவும் இருக்கும் அவர் திரைக்கதையும் எதிர்பார்த்த காட்சிகளின் வழியே உணர்ச்சிவயப்படும்படி இருக்கும்.

  இந்தப் படத்திலும் அது சரியாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கும்படியான கதைகளே இல்லாத தமிழ் சினிமாவில் சரியான நேரத்தில் வந்திருக்கிறது இப்படம். இக்கால இளைஞனின் அவசர வாழ்வைச் சொல்லும் வழியில் நாம் உணர வேண்டிய உறவின் மதிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறார். உறவில் ஏற்படும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிரச்சினைகளும் வெகு அழகாகத் திரைக்கதையில் வருகின்றன.

  Virat Kohli: சிவாஜி கொள்ளு பேரனுக்கு விராட் கோலி வாழ்த்து!

  சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாகத் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜீவியுடன் மல்லுக்கட்டுவது, பின் குடும்பத்திற்காக இறங்கி வருவது என அசத்துகிறார். ஜீவி இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு. அக்காவுக்காக அழும் இடத்தில் கவர்கிறார். லிஜோ மோல் ஜோஸ் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரம்.

  இருவருக்குமான பாலமாக இருக்கிறார். அன்பு, பிரிவு,வலி என அனைத்தையும் கண்களின் வழியே கடத்துகிறார். நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். காஷ்மிரா இன்னொரு ஹிரோயின் தமிழ் சினிமா ஹீரோயினின் மாறாத பாத்திரப் படைப்பில் வந்து போகிறார்.

  ஆண்கள் ஆடையை அணியப் பெண்கள் சங்கடப்படுவதில்லை, ஆனால் பெண்ணின் ஆடை ஏன் ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது, ஒரு நாட்டின் நிலமை தெரிய வீட்டைப் பார்க்க வேண்டாம், ரோட்டை பார்த்தால் போதும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். இசை படத்திற்கு மற்றுமொரு பலம். எடிட்டிங்கில் கிளைமாஸ் நீளத்தை குறைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ஓகே.

  Siddharth: போக்குவரத்து காவல்துறைக்கு மரியாதை கொடுக்கும் சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை!

  பைக் ரேஸ் காட்சிகளில் சிஜி அப்பட்டமாகத் தெரிகிறது. படம் சொல்லிவந்த கதையை க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வைத்து சொதப்பியிருக்கிறார்கள். அத்தனை நீளமான சண்டைக் காட்சி அவசியம்தானா?. சின்ன சின்ன உறவுச் சண்டைகளும், கூடலும் அழகாய் இருக்கும்போது சினிமாத்தனமான வில்லனும் அந்த மசலாத்தனமும் தேவைதானா?

  சசியின் ஒவ்வொரு படமும் தனித்துத் தெரியும். இப்படம் குடும்ப உறவைச் சொன்னதைத் தவிர சசியின் முத்திரைகள் பெரும்பாலும் படத்தில் மிஸ்ஸிங். இரு சிறுவர்கள் எப்படி ஒரு வீட்டில் வாழ முடியும் என ஆரம்பமே லாஜிக் கேள்வி எழுவது மைனஸ். தம்பிக்குக் கடைசிவரை அக்காவின் கர்ப்பம் தெரியாது எனபது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் சசி படத்தில் இருப்பது ஆச்சரியம்.

  படம் முழுக்க இப்படிச் சிறு சிறு குறைகள் எட்டிப்பார்த்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் நல்ல கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை.

  பலம்: குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை , நடிகர்கள்

  பலவீனம்: லாஜிக், க்ளைமாக்ஸ் நீளம்.

  மொத்தத்தில்: குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கமர்ஷியல் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
   
   

  Share this post


  Link to post
  Share on other sites

  Join the conversation

  You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

  Guest
  Reply to this topic...

  ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  Sign in to follow this