Jump to content

கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்


Recommended Posts

கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்

சிவதாசன்
New-plan-to-diversify-foreign-student-in

பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில.

கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும்.

இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அவற்றை அரசாங்கம் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் தூர நோக்கான பொருளாதாரக் கொள்கைகளைப் புரிந்துகொள்பவர்கள் அரசின் நோக்கங்களையும் அங்கீகரிக்கிறார்கள்.

வெளிநாட்டு மாணவர்களின் வருகையை ஊக்குவிப்பதும் ஒரு வகையில் சிறந்த வியாபாரம் தான். 2018 இல் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி மற்றும் உணவு, உறைவிடங்களுக்காகக் கனடாவில் செலவழித்த பணம் $21.6 பில்லியன். இதில் அரைவாசியைக் கொண்டுவந்தது இந்திய, சீன மாணவர்கள்.

கனடாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, வெளிநாட்டு மாணவர்களின் பல்லினக் கட்டமைப்பை (diversify), அதாவது அவர்கள் எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதைச் சமநிலைப்படுத்துவதிலும் அம் மாணவர்கள் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்கிறார்கள் என்பதைத் திட்டமிட்டுச் செயலாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இத் திட்டத்தின் பின்னணியில் இரட்டை நோக்கங்களுண்டு. இங்குள்ள பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் வெளிநாட்டு மாணவர்களின் பணத்தில் சுகபோகம் கண்டுவிட்டன. உள்நாட்டு மாணவர்களின் அனுமதிப் பணத்தைவிடப் பல மடங்கு அதிகமாக வெளிநாட்டாரிடம் அறவிடலாம். வெளிநாட்டுப் பணம் வராதபோது இப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரசின் கைகளைத் தான் எதிர்பார்க்க வேண்டி வரும். எனவே உள்நாட்டு மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டு வருவதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தலாம் என்பது அரசின் கணிப்பு.

இரண்டாவதாக, வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் இங்குள்ள தனியார் நிறுவனங்களின் புத்திப் பசிக்கு, பிச்சைச் சம்பளத்துடன் ஆட்களைச் சேர்க்க இலகுவாக அமைந்து விடுகிறது. இதில் இந்திய, சீன மாணவர்களின் திறமையும் பணிவும், குறைந்த சம்பளத்தில் பணிகளைப் புரியத் தயாராகவிருக்கும் தன்மையும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும். வேலயில்லாதவர்களின் விகிதம் 6க் குக் குறைவாகின்றபோது சம்பள உயர்வும் அதன் விளைவாக பண வீக்கமும் அதிகரித்து அரசைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளீ விடும். எனவே அரசுக்கும் இது இலாபம் தரும் விடயம் தான்.

இதை விட இன்னுமொரு விடயம், கனடாவில் அதிகரிக்கும் வயோதிபர். இவர்களைப் பராமரிக்க இவர்களால் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் தேங்கியிருக்கும் பணம் போதாது. 70 வயதுவரை வாழமாட்டார்கள் எனத் திட்டமிட்ட ஓய்வூதியம் இப்போது 95 வயதையும் தாண்டி அவர்கள் வாழும் போது அதுவும் வரி எதுவும் செலுத்தாமல் வாழ்கின்றபோது அது அரசுக்குப் பாரிய பொருளாதாரச் சுமையாகவே (மருத்துவச் செலவு வேறு) இருக்கும். இதை ஈடு செய்ய அரசுக்கு வரி செலுத்தவல்ல மத்தியதரக் குடிமக்கள் தேவை. எனவே குடி வரவு அதிகரிக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாகிறது.

லிபரல் அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிவிப்பின்படி, வெளிநாட்டு மாணவர்களைப் பல நாடுகளிலிருந்தும் ‘இறக்குமதி’ செய்ய $148 மில்லியன்களை ஒதுக்குகிறது. இம் மாணவர்களைக் கொண்டுவருவதற்கான ‘ஆட் சேர்ப்பு’ முயற்சிகளுக்காக மட்டும் $30 மில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது.

இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வருகின்ற மாணவர்கள் கனடாவின் பெரிய நகரங்களான ரொறோண்டோ, கல்கரி, வான்கூவர் போன்ற இடங்களுக்குச் செல்வதால் இதர நகரங்கள் புலம்ப ஆரம்பித்துள்ளன. வீடுகளின் விலைகள், வாடகை இந் நகரங்களில் அதிகரிப்பதனால் அரசுகளுக்கு வேறு வகையான அழுத்தங்களும் வர ஆரம்பித்துள்ளன. இதனால் அரசாங்கம் முறையான திட்டமிடலுடன் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

இதன் பிரகாரம் அரசு மாணவர்களை எடுப்பதற்கு வேறெந்த நாடுகளைக் குறிவைத்துள்ளது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்….

http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்கள/?fbclid=IwAR3uTFTIu69_FqSazX_RNyNj7KvSEOmnYcdXySk5U31Tk2IJGDyAcqEnU98

Link to post
Share on other sites
  • 2 weeks later...

கனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

download-8.jpg
கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள்

இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை)

கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம்.

இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது.

மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது.

மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது.

இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும்.

“எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார்.

சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள்.

சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார்.

இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது.

 

 

 

http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/?fbclid=IwAR1KaEFCiKRdfr5Qk8GuN4GWKOQ_Wy2ec5bW8Mqi_yEDxmOAYMBMKxRsVoE

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.