சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்?

wang-yi-300x200.jpg

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீனாவினால் மேற்கொள்ளப்படும், திட்டங்களை ஆய்வு செய்யவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 9 மணியளவில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நேற்று முன்தினம் தாமரைக் கோபுர திறப்பு விழாவில், உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தாமரைக் கோபுர கட்டுமானப் பணிக்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் சீன நிறுவனம் ஒன்றுக்கு முற்பணமாக செலுத்தப்பட்ட 2 பில்லியன் ரூபா காணாமல் போயிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, தாமரை கோபுரத்தைப் பார்வையிடும் திட்டத்தை சீன வெளிவிவகார அமைச்சர் கைவிட்டுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், பிற்பகல் 5 மணிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், மாலை 6 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார்.

இன்று பிற்பகல் 2.45 மணிக்கு கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையத்தை பார்வையிடும் சீன வெளிவிவகார அமைச்சர், பிற்பகல் 3.45 மணியளவில் கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவார்.

எனினும், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் பயணம் தொடர்பக உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வெளியிடப்படவில்லை.

அதேவேளை சீன ஊடகவியலாளர்கள் சிலர்  சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் குறித்த செய்தி சேகரிப்புக்காக வந்துள்ளனர், என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சீன கம்யூனினிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் செயலருமான சென் மின்’ னர் தலைமையிலான 17 பேர் கொண்ட சீன உயர்மட்டக் குழு நேற்று மாலை கொழும்பு வந்திருந்தது.

இந்தக் குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/09/18/news/40086