Jump to content

சந்திரயான் 2: ’விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை’ - இஸ்ரோ தலைவர் சிவன்


Recommended Posts

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது.

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் தனது வேகத்தை மட்டுப்படுத்தி மெதுவாக நிலவில் தரையிறங்கியிருக்கவேண்டும்.

இஸ்ரோவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாயின் பெயர்சூட்டப்பட்ட இந்த லேண்டர், 1471 கிலோகிராம் எடையைக் கொண்டது.

நிலவை நெருங்கியவுடன் மேன்ஸினஸ் சி மற்றும் சிம்பெலியஸ் என் என்ற இரு பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் உள்ள இடத்தில் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

சந்திரயான்படத்தின் காப்புரிமைISRO

இந்த குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடி மென்மையாக லேண்டர் தரையிறங்கியிருந்தால் அதிலிருந்து பிரக்யான் ரோவர் என்ற உலவி வாகனம் வெளியில் வந்து நிலவின் தரைப் பரப்பை ஆராய்ந்திருக்கும்.

ஆனால், சுற்று வட்டக் கலன் திட்டமிட்டபடி நிலவின் சுற்றுப் பாதையில் சுற்றி வந்தாலும், அதிலிருந்து பிரிந்து மென்மையாகத் தரையிறங்கியிருக்கவேண்டிய விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியிலிருந்து 2.1 கி.மீ. உயரத்தில் கீழ்நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அதனுடனான கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு அறுந்துபோனது.

நிலவில் ஒரு பகல் பொழுது என்பது புவியின் கணக்கில் 14 நாள்களாகும். நிலவின் தென் துருவப் பகுதியில் இந்த பகல் பொழுது தொடங்கும்போது விக்ரம் லேண்டர் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. சூரிய விசை உதவியோடு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த லேண்டர் இந்த 14 நாள் பகல் பொழுதில் மட்டுமே செயல்பட்டிருக்கும். நிலவில் இந்த லேண்டர் தரையிறங்கும் பகுதியில் இரவின் இருள் கவியும்போது அதன் செயல்பாடு முடங்கிவிடும்.

செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்போது விக்ரம் லேண்டருடன் தொடர்பு அறுந்துபோனாலும், மீண்டும் தொடர்பை உயிர்ப்பிக்க முயல்வதற்கு 14 நாள்கள் அவகாசம் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.

அந்த 14 நாள் அவகாசம் சனிக்கிழமை (இன்று) முடிந்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என சிவன் தெரிவித்துள்ளார்.

ஆனால், செப்டம்பர் 17-ம் தேதி இஸ்ரோ தமது டிவிட்டர் பக்கத்தில் தங்களோடு தொடர்ந்து ஆதரவாக நிற்பதற்கு நன்றி என்று தெரிவித்து ஒரு செய்தியைப் பகிர்ந்தது. "உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள், கனவுகளால் உந்தப்பட்டு நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்" என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது கிட்டத்தட்ட, விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்வதற்கான முயற்சி முடிவுக்கு வந்ததை குறிப்பாக உணர்த்தும் வகையில் இருப்பதாக பார்க்கப்பட்டது.

செப்டம்பர் 19ம் தேதி வியாழக்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவிலும் இஸ்ரோ விக்ரம் லேண்டர் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. "சந்திரயான்-2 சுற்றுவட்டக் கலன் திட்டமிட்ட அறிவியல் பரிசோதனைகளை திருப்திகரமாக நிறைவேற்றுகிறது. கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுநர்கள் அடங்கிய தேசியக் குழு விக்ரம் லேண்டருடன் தொடர்பு அறுந்துபோனதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சி பற்றி அதில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், முன்னதாக செப்டம்பர் 10ம் தேதி வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில், சந்திரயான் சுற்றுவட்டக் கலன் விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை அடையாளம் கண்டதாகவும், ஆனால், இன்னும் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை என்றும், தொடர்பை ஏற்படுத்த எல்லா முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நிலவை சுற்றும் கலனும் செப்டம்பர் 17-ம் தேதி விக்ரம் தரையிறங்க உத்தேசித்திருந்த பகுதியை கடக்கும்போது பல புகைப்படங்களை எடுத்தது. அந்தப் படங்கள் ஆராயப்படுவதாக நாசா குறிப்பிட்டது.

 

ஏன் தொடர்பறுந்தது விக்ரம் லேண்டர்?

விக்ரம் லேண்டர் தொடர்பறுந்து போனது ஏன் என்ற கேள்விக்கு சில உத்தேசமான பதில்களை பிபிசி தமிழிடம் பேசிய சந்திரயான்-1ன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பகிர்ந்திருந்தார்.

நிலவின் தரைப் பகுதியை நெருங்கும்போது லேண்டரின் வேகத்தை குறைக்கவேண்டும் என்பதற்காக இயக்கப்பட்ட நான்கு மோட்டார்களில் ஒன்று பழுதடைந்திருந்தாலும், லேண்டரின் திசை மாறியிருக்கலாம். வேகம் குறைவதற்கு பதிலாக வேகம் அதிகரித்திருக்கலாம். இறக்க உத்தேசித்த இடத்திலிருந்து வேறு இடத்தில் தரையிறங்கியிருக்கலாம். வேகமாக கீழே விழுந்திருக்கலாம் போன்ற சாத்தியப்பாடுகள் அவரது பதிலில் வெளிப்பட்டன.

மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதில் உள்ள சவால்களைப் பட்டியலிட்ட அவர்,

"அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பதை இரண்டு, மூன்று காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதாவது, அந்த லேண்டர் பவர் - ஆன் நிலையில் இருக்க வேண்டும். லேண்டர் ஆண்டனா தொடர்பு கொள்ளும் திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆண்டனாவோ, லேண்டரோ சேதமடைந்திருக்கக்கூடாது.

நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், லேண்டர் கிடக்கும் இடத்திற்கு மேல் 5-10 நிமிடங்கள்தான் வரும். அதற்குள் தகவல் தொடர்பு கிடைத்தால் உண்டு" என்று தெரிவித்திருந்தார்.

ஒருபுறம் விக்ரம் லேண்டரும், அதனுள் இருந்த பிரக்யான் உலவியும் திட்டமிட்டபடி அவற்றின் பணிகளைச் செய்ய முடியாமல் போனாலும், ஓராண்டு மட்டுமே இயங்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான்-2 சுற்று வட்டக் கலனில் நிறைய எரிபொருள் இருப்பதால் அதன் ஆயுளை 7.5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் கே.சிவன்.

https://www.bbc.com/tamil/science-49776173

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.