Sign in to follow this  
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா?

Recommended Posts

திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா?

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்?

 

மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவதற்குப் பதிலாக, தீர்ப்பை எழுதிவிட்டு, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் தொனியில் இருந்த இவ்வினாவின் கொடும் நஞ்சு என்னை மனதளவில் வெகுவாகவே பாதித்தது.

 

உடனடியாக இக்குற்றச்சாட்டுக்கு விடை தரும் சிறிய பதிவைத் தந்தபின், ஒவ்வொன்றாக, ஆறு முறை புதிய செய்திகளுடன் புதுப்பித்தேன். யாழிணையம் இதழில் என் தமிழ்ச் சொந்தங்களுடன் பகிர்கிறேன்!

 

'பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையின்மேல் பாலியல் குற்றச்சாட்டு!

பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்று, அரண்மனைக்குச் சென்றபோது, அங்கிருந்த சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதுக்கு அழைத்தனர். சிறுகுழந்தையாயிருந்த சம்பந்தருக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சிய பாண்டிமாதேவியார். பாண்டிய மன்னனிடம், "முதலில் ஞானசம்பந்தர் உங்கள் வெப்புநோயை (ஜுரத்தை) நீக்கட்டும். அதன் பிறகு சமணர்கள் வாது செய்யட்டும்" என்றார்.

அப்போது, திருஞான , சம்பந்தர் மங்கையர்க்கரசியாரை நோக்கி, "பாண்டிமாதேவியாரே, என்னைப் பால்மணம் மாறாத சிறுவன் என்று எண்ணிக் கலங்க வேண்டாம். ஆனைமாமலை உள்ளிட்ட இடங்களில் வாழும் தீமையிழைக்கும் சமணர்களுக்கு நான் எளியேன் அல்லேன்! ஆலவாய் அரன் எனக்குத் துணை நிற்கின்றான். ஆகவே நீ அஞ்சாதே" என்று பின்வரும் இப்பதிகத்தைப் பாடியருளினார்.

மானினேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெருந்தேவி கேள்!

'பால்நல்வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்!' என்று நீ பரிவு எய்திடேல்!

ஆனைமாமலை யாதியாய இடங்களில் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு எளியேன் அலேன், திருவாலவாய் அரன் நிற்கவே!

"நான் பால் மணம் மாறாத துழந்தை என்று எண்ணி, பரிதாபப் படவேண்டாம்!", என்ற பொருளில் வரும் "பால்நல்வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று பரிவு எய்திடேல்!" - "என்ற சொற்றொடர், திருஞானசம்பந்தர் அப்போது மிகச்சிறிய குழந்தை வயதில் இருந்தார் என்பதைக் காட்டும் அகச்சான்று.

அப்படிப்பட்ட மிகச்சிறிய குழந்தை, 'சமணர் பெண்களை வன்புணர்வு செய்ய இறைவனை வேண்டிப் பாடல் பாடியது', என்ற குற்றம் சாட்டுபவரின் மனநிலை எத்துணை வன்கொடியது என்று எண்ணிப் பாருங்கள்! நெஞ்சு பொறுக்குதில்லையே! இவ்வன்கொடிய மனிதரை நினைந்துவிட்டால்!

இலக்கண வரம்பினுள் அடங்காத உள்நோக்க வினா!

வினாக்கள் அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறுவகை என்பர் தமிழ் இலக்கண அறிஞர்கள்! இங்கு கேட்கப்பட்ட இவ்வினா இந்த ஆறு வகையிலும் இல்லை.

எனவே, வேண்டுமென்றே, தமிழகத்தின் தொல்சமயமான சைவ சமயத்தின் முதற்குரவர் திருஞான சம்பந்தர் பெருமானின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவேண்டும் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டி வினவப்பட்ட இவ்வினா, உள்நோக்கங்கொண்ட 'குற்றச்சாட்டு வினா' என்ற புதிய வகை வினாவை Quora தமிழ் தளத்தின் மூலம் ஏவப்பட்டுள்ளது!

சைவசமயக் குரவர் திருஞானசம்பந்தரை இழிவுசெய்யும் உள்நோக்கம்!

சைவ சமயக் குரவர்கள் நால்வரில், முதன்மைக் குரவரான திருஞான சம்பந்தர் மீது வேண்டுமென்றே வலிந்து இக்குற்றச்சாட்டை சுமத்தவேண்டும் என்ற ஒரு கேவலமான உள்நோக்கம் இக்கேள்வியில் இருப்பதாகப் படுகிறது.

இங்கு தரப்பட்டுள்ள வலிமையான உண்மைப் பொருள் உரையால் அந்நோக்கம் நிறைவேறப்போவது இல்லை.

"திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்?" என்ற வினா "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என்ற தேவாரத்தின் பொருள் தவறான புரிதலினால் கேட்கப்பட்டிருந்தால் நான் இங்கு கொடுத்திருக்கும் விளக்கம் பயனுள்ளதாக இருக்கும். வினாத் தொடுத்தவரோ, தீர்ப்பை எழுதிவிட்டு, வாதத்தை முன் வைக்கிறார். தொடுத்தவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது வினாவின் தொனி!

திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுகிறார் என்பது உண்மையா?

கற்புஎன்ற சொல்லுக்கு கல்வி, கற்பனை, நீதிநெறி, மகளிர்நிறை, மதில், முறைமை, விதி, முல்லைக்கொடி என்னும் பல அர்த்தங்கள் தமிழ் மொழி அகராதியில் (பதிப்பு: நா. கதிரைவேற்பிள்ளை) உண்டு. இவைகளில், அந்தப் பதிகம் எந்தப் பொருள்பற்றிப் பாடப்பட்டதோ, அதற்கேற்ற பொருள்கொள்வதே கற்றோர்க்கு சிறப்பு.

அறிவு ஜீவிகள்என்று தம்மை அடையாளப்படுத்தவேண்டிச் செய்யும் செப்படி வித்தையோர் மலிந்துவிட்டனர்.

கற்பு என்பது கற்றலையும், கற்பித்த வழி நிற்றலையுமே குறிக்கிறது. பெண்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் கற்பித்த வழி நிற்றலே கற்பெனப் போற்றி வந்துள்ளனர்.

கற்பெனப்படுவது சொற்றிறம்பாமைஎன்னும் கொன்றைவேந்தன் 14ஆம் வரியும் நினைவு கூறத் தக்கது.

கற்பு என்ற சொல், பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவது காணலாம்.

பாண்டிய மன்னனின் வெப்புநோய் தீர்த்த திருஞானசம்பந்தப் பெருமானை சமணர்கள் வாதத்திற்கு அழைத்தபோது அவர் மதுரைத் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதர் சந்நிதியில் காட்டுமாவதுரித்துஎன்று தொடங்கும் பதிகம் (தி. 3 ப. 47 பா.1) உலகோர்க்கு அருளி, இறைவனை வழிபட்டார்.

இந்தப் பதிகம் திருஞானசம்பந்தப் பெருமானால் ஆலவாய் உறையும் சிவபெருமானிடம் சமணர்கள் ஏற்படுத்தியுள்ள தப்பான கற்பிதங்களை(முறைமைகளை)அழிக்க திருவுள்ளம் கொள்க என்று வேண்டுமாறு பாடப்பட்டுள்ளது.

இவ்வினாவில் குறிக்கப்பட்ட திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 'கற்பு' ஈனும் சொல் "கல்வி, அறிவு, கொள்கை நிலை, கொள்கை உறுதி" ஆகிய பொருள்களில் வருகின்றது.

திரண்ட பொருளாக, "அமணர் என்னும் அறிவிலிகளின் உள்ளத்தில் ஆழந்திருக்கும் சமண மதக் கல்வியை, கொள்கையை, உறுதியை, வேரோடு அழிப்பதற்கு சிவபெருமானே! நின் திருவுள்ளம் ஆயத்தம் தானே?" என்று வினவுவதாக அமைந்துள்ளது இத்தேவாரப் பாடல்!

பெண்அகத்து எழில்(அழகான பெண்ணுள்ளம் கொண்ட) - உள்ளத்தில் வலுவற்ற, சாக்கியப்பேய் அமண் தெண்ணர் - உடல்வலிமை கொண்ட பேய்ச் சமணர், கற்பழிக்கத் திருவுள்ளமே - கற்ற நீர்மையில்லாத கல்வியின் செயலை அழிக்கத் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதே பொருள்!

கொச்சைமொழி வசவும் இலக்கிய வசவும்!

'பொட்டப் பேய்ப் பயல்! சமணக்-குண்டன்!' என்ற கொச்சைமொழி வசவுக்கு இணையான, இலக்கியமொழி வசவுதான் 'பெண்அகத்து-எழில் சாக்கியப்பேய்!'-'அமண்-தெண்ணர்!' என்ற தொடர்!

அருஞ்சொற்பொருள்: அகம் - உள்ளம்; எழில் பெண் அகத்து சாக்கியப்பேய் - அழகிய பெண்ணுள்ளம் கொண்ட சாக்கியப்பேய்; அமண்-தெண்ணர் - சமணக் குண்டர்.

பாடல் இதோ:

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்

பெண் அகத்து எழில் சாக்கியப்பேய் அமண் -

தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே.

இங்கு கற்பு என்பதற்கு மகளிரின் ஒழுக்க நெறிகள் என்று பொருள் கொள்வது முற்றிலும் பொருந்தாது.

தருமை ஆதீனக் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் சிவபோகசாரம் என்னும் நூலில் அருளியுள்ள 'கற்பு' என்ற சொல் வரும் ஒரு பாடல் காண்போம்::

நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே

பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி

கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த

விழல்எனவே நீத்துவிடு. - - சிவபோக. பா. 130

இப்பாடலில், 'சோதிக் கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்தவிழல் எனவே நீத்துவிடு!' என்பது 'இறைவனின் திருவடிகளை அறியாத குருவும், திருமுறைகளைக் கல்லாத சீடனும் பாலைநிலத்துக்கு ஒப்பானவர்கள்! எனவே, அவர்களை விலக்கிவிடு! என்று குறிப்பதைக் காண்க!

சிவபோகசாரம் பிற்காலச் சைவ இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவநம்பிக்கைவாதிகளுக்காக, சங்ககால இலக்கியமான பதிற்றுப்பத்தில் இருந்தும் ஒரு சான்று காட்டுகிறேன்!

"இரவல் மாக்கள் சிறுகுடி பெருக

உலகந் தாங்கிய மேம்படு கற்பின்

வில்லோர் மெய்ம்மறை" (பதிற்றுப்பத்து: 59:7-9)

இரவல் மாக்கள் சிறுகுடி பெருக - பரிசில் வேண்டித் தம்மிடம் வந்த மக்களின் சிறுகுடில்கள் வளம்பெற்று உயருமாறு

உலகந் தாங்கிய மேம்படு கற்பின் - உலகத்தைக் காக்கும் மேம்பட்ட கல்வியை (கொள்கையை) உடையவனும்

வில்லோர் மெய்ம்மறை - வில்லாளியின் உடலைப் பகைவர்களிடமிருந்து காக்கும் கவசம் போன்றவனுமாகியவனே" என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேரப் பேரரசனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார்.

இங்கு, 'மேம்படு கற்பின்' என்ற சொற்கள் 'மேம்பட்ட கல்வி' என்ற பொருளில் பயின்று வருவதைக் கண்டு மகிழுங்கள்!

பதிற்றுப்பத்தின் எட்டாம் பதிகம் பத்தாம் பாடலில் வரும் இரண்டு பாடல் வரிகள் இப்போது உங்களுக்காக மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன.!

"....நல்லிசைத் தொலையாக் கற்ப!

நின் தெம்முனையானே" -

நல் இசை = நல்ல புகழ்; தொலையாக் கற்ப = அழியாத கல்வி உடையவனே!

நின் தெம்முனை யானே! - நின் போர்முனையில் யானே உள்ளனன்!

"நல்ல புகழையும் உடைய அழியாத கல்வியையும் உடையவனே!.நின் போர் முனையில்.. யானே உள்ளனன்"

என்று பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடிய சங்கப்பாடல் அவநம்பிக்கைவாதியின் வாயையும், அவதூறு பரப்புவோர் வாயையும் உறுதியாகக் கட்டிப் போடும்!.

'ஓதி ஓத்தறியா'?!?!!! அய்யோ! கேவலமான கெட்ட வார்த்தை!

தப்பாக சமணர் 'முறைமை-கற்பிதம்-விதி' செய்ததை அழிக்க திருவுள்ளம் கொள்க என வேண்டும் பாடலையே இத்தமிழ்ப் பேரறிஞர்கள் இப்படிப் பொருள் கொண்டால், 'ஓதி ஓத்து அறியா' என்ற சொற்கள் வரும் அடுத்த தேவாரப் பாடலுக்கு என்ன பொருள் கொள்வாரோ என்று அச்சமாக உள்ளது! அடுத்த பாடல் இதோ:

ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை

வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
 ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
 நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

'ஓத்து' என்ற சொல்லுக்கு 'மறை', எனத் தமிழ்அகராதி பொருள் கூறுகின்றது. 'ஓத்து' என்ற சொல்லுக்கு, இக்'கேள்வியின் நாயகர்' அறிந்த 'தற்காலத்துப் பொருளை பொருத்தினால் 'ஓதுதலும், பாலியல் புணர்வும் அறியாத சமணர்களை வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளம் கொள்க!' என்றல்லவா பொருளாகிவிடும்?

ஆரியகுலத்தில் அவதரித்தும், 'ஆரிய வேதம் நான்கினும் உயர்ந்த மெய்ப்பொருள் 'நமச்சிவாயவே!' என்று முழங்கினார்!

திருஞான சம்பந்தர் ஆரிய கவுணிக கோத்திரத்தில்(சரவடியில்) ஆரியப் பிராமணரான சிவபாத இருதயருக்குக் குழந்தையாக அவதரித்தவர்!

ஆரியரின் வேதம் நான்கைக் காட்டிலும் உண்மையான மெய்ப்பொருள், 'நமச்சிவாயவே' என்னும் எம் நாதன் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருநாமமே! என்று வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவேஎன்று முழங்கியமையால், சைவ சமயத்தின் முதல் சமயக்குரவர் என்று வணங்கப்படுகின்றார் திருஞான சம்பந்தர்!

தமிழ் மறைமொழிஎன்று முழங்கிய திருநெறிய தமிழ் ஞானசம்பந்தர்

தமிழ் மறைமொழிஎன்றும், தன்னைத் திருநெறிய தமிழ் ஞானசம்பந்தன்என்றும் தம் தேவாரப் பாடல்கள் நெடுகிலும் முழங்கினார் பெருமான்.

சாதியத்தை உடைத்த தமிழ் ஞானசம்பந்தன்!

தாழ்த்தப்பட்ட இனத்தில் அவதரித்த திருநீலகண்ட யாழ்ப்பாணருடனேயே அனைத்து சிவாலயங்களுக்கும் பயணித்து, அவருடனேயே வாழ்ந்து, அவரை ஐயரேஎன்று அழைத்தவர் திருஞானசம்பந்தர் பெருமான்.

'ஆரிய பிராமணர்' குலத்தில் அவதரித்து, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று தமிழ்மறை திருக்குறள் போற்றும் 'தமிழ் அந்தணராக' தமிழகமெங்கும் உலா வந்தவர் திருஞானசம்பந்தர் பெருமான்!

ஏழாம் நூற்றாண்டிலேயே சாதியத்தை உடைத்துப் புரட்சி செய்து வாழ்ந்து காட்டியவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

களப்பிரர்களால் கீழ்நிலையடைந்திருந்த தமிழையும் சைவத்தையும் ஒருங்கே வளர்த்தவர்.

பெருமான் திருஞானசம்பந்தரின் தேவாரத்தைக் கொச்சைப்படுத்தி கீழ்த்தரப் பொருள் உரைப்பவர்களை தமிழன்னை மன்னிக்கவே மாட்டாள்; வரலாறும் அவர்களைப் புறம் தள்ளும்.

திருநெறி என்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதம் நாமம் நமச்சிவாயவேஎன்று உணர்வதும், தமிழே அத்திருநெறி சாற்றும் வேத மொழியாம்என்று உணர்த்தவே, ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ்என்றும் ஆணை நமதே!என்றும் திருக்கடைக்காப்புச் பாடல்களில் இறைவன் உரையே தன்னுரையாம் என்னும் இறைஆணை – GOD’s ORDER – G.O’ அருளிச்செய்தார் திருஞானசம்பந்தர் பெருமான்.

ஒவ்வொரு பதிகத்தின் திருக்கடைக்காப்பும் இவ்வுயரிய ஞானத்தை வழங்கவே திருஞான சம்பந்தரால் அருளப்பட்டது என்று உணர்க.

வினாவின் இரண்டாம் பகுதியான "வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கலாம்! அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்?" என்பதும் 'குற்றச்சாட்டு வினா' சார்ந்ததே! ஆனால் பொத்தாம் பொதுவாகச் சொல்வதால், விடை சொல்லும் தேவை இல்லை.

என்னை நன்றாக இறைவன் செய்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!என்ற நம்பிரான் திருமூலரின் திருவாக்கும், திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கும் ஒன்றேயன்றோ?

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

 

 

Edited by நியானி
யாழ் களத்தில் தவிர்க்கப்படவேண்டிய சொல் தலைப்பில் மாற்றப்பட்டுள்ளது
 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பேராசிரியர் கிருஷ்ணன் அவர்களுக்குப் பணிவான நன்றிகளும் வணக்கங்களும்...!

திருஞான சம்பந்தர் ஒரு சமயக்குரவர் என்பதை விடவும்...அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்!

ஒரு கவிஞன் என்பவன் துணிச்சலானவன்! மற்றவர்களின் எதிர்பார்ப்புக்களுக்காகவோ ....விருப்பு வெறுப்புக்களுக்காகவோ...அவர்கள் கவி வடிப்பதில்லை! அது சோத்துக்கும்...கூழுக்கும் பாடுபவர்களுக்கே அதிகம் பொருந்தும்!

ஒரு சிறுவன்...மகாராணியைப் பார்த்து... மானிநேர்விழி  மாதராய்...என விழிக்கும் போதே அவரது துணிவு வெளிப்படுத்தப் படுகின்றது!

வேறொருவர் அரச சபையில்...மகாராணியை அவ்வாறு வர்ணித்திருந்தால் ...அவரது தலை நிச்சயம் ...தரையில் உருண்டிருக்கும்..!

அவரது கவிதை நயத்தின் இன்னொரு வெளிப்பாடு...திருக்கோணேஸ்வரப் பதிகம் ஒன்றில் வருகின்றது..!

நிரைகழல் அரவம்...சிலம்பொலி அலம்பும்...என்னும் பாடலே அதுவாகும்!

 

'வரை கெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த...வடிவினர்...கொடியணி இடையர்."

 

மேலுள்ள வசனத்துக்குள்.....புகுந்து விளையாடினால்....எத்தனை அர்த்தங்கள் அதனுள் புதைந்திருக்கின்றன என்பது புரியும்! அதனால் தான் அவரை...சமரசம் செய்யாத கவிஞன் என்றேன்!

கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
 அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்
 கோணமா மலையமர்ந் தாரே.  1 

  எனது தாய் நிலைத்தின்...அழகு முழுவதையும்....நாலு வரிகளுக்குள்...அவன் அடக்கியுள்ள அவனது திறமையை...எங்கு காண முடியும்?

அது மட்டுமல்ல...ஆரியர் வெறுக்கும்...இராவணனைக் கூடக் கோபுரத்தில் அவன் ஏற்றி வைத்த அழகையும் பாருங்கள்!

திருநீறின் மகிமையை...ஒப்பிடுவதற்கு...உவமானம் தேடியவன்....இராவணனைத் தான்....மிக உயர்ந்த உவமானமாகத் தெரிந்தெடுக்கிறான்! ஆரியர்களிடம் கூட ...அவன் சமரசம் செய்யவில்லை!

'இராவணன் மேலது....நீறு!

அவன் காய்க்கின்ற மரம்...! கல்லெறி விழுந்திருக்கும்...!

அதைப பெரிது படுத்துவர்களைப் பெரிது படுத்துவதை...விடவும்...வள்ளுவன் வார்த்தைக்கேற்ப ...இடுக்கண் வருங்கால் நகுவோமே...!

அவர்களுக்கு விளக்கமளிப்பது....அவர்களுக்கு விளம்பரம் செய்வது போன்றதே...!

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே...! நன்றி..!  

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஐயா, 

தாங்கள் ரசிகமணி டிகேசி அவர்களாகப் போனபிறவியில் இருந்திருப்பீர்கள் போலும். உங்கள் ரசனைக்கு ஈடு... வேறு யாரும் ... வாய்ப்பே இல்லை!!!

ரசனைக் கவிதைக்கு நன்றிகள் பல. வாழிய பல்லாண்டு!

அன்புடன்

கிருஷ்ணன்

Edited by பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

Share this post


Link to post
Share on other sites

பேராசியர் கிருஷ்ணன்,

உங்கள் சைவம் தமிழரின் தொன்மையான மதம் எனும் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை.    

மதப்போர்கள் என்ற பெயரில் தமிழர்கள் தமக்குள் வெட்டுண்டு அழிந்து போனதற்கும், தமிழின் சமண மொழி இலக்கியங்கள் பிற்காலத்தின் பார்வைக்கு வராமலே அழிந்து போனதிலும் சமய குரவரின் பங்கு கணிசமானது என்பதும் மறுப்பதற்கில்கை.

ஆனால் - சம்பந்தர் என்ன அர்த்தத்தில் பாடி இருப்பார் எனும் உங்கள் விளக்கத்தை நான் ஏற்கிறேன்.

கற்பு என்பதன் வேர் சொல் கற்றல் அல்லது கல்வியா?

தவிரவும் எதிர்மறையாகவேனும் தமிழ் இலக்கியம் குவொராவில் அலசப்படுவதும், அதில் உங்களை போன்றோரின் பங்களிப்பும் நல்ல விடயமே.

தற்போதைய யாழ் வழக்கில் சம்பந்தர் என்ன பாடி இருப்பார் என கீழே ஒரு சிறு கற்பனை 😂

“பொன்னையன், சமணத் தடியன் படிச்சதெல்லாம் மறந்து போகட்டும்”. 

Edited by goshan_che
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சமணப் பெண்களைச் கற்பழிக்க வேண்டுவதன் காரணம் அந்தக் காலத்தில் ஆண்களை விட சமணப் பெண்கள் படிப்பில் மேதைகளாக இருந்திருப்பார்களோ ? அதாவது கற்பில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் 😀 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, இணையவன் said:

சமணப் பெண்களைச் கற்பழிக்க வேண்டுவதன் காரணம் அந்தக் காலத்தில் ஆண்களை விட சமணப் பெண்கள் படிப்பில் மேதைகளாக இருந்திருப்பார்களோ ? அதாவது கற்பில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் 😀 

சமண ஆண்களைத்தான் பாடுகிறார். ஆனால் ஆணை இழிவுபடுத்த வேண்டும் என்றால் பெண்ணாக, பெண்மையுள்ளவனாக சித்தரிக்க வேண்டும் என்ற பெண்ணடிமை மனப்பாங்கு இங்கே வெளிவருவதும் மறுக்கவியலாதது.

என்னதான் ஞானக் குழந்தை என விதந்துரைத்தாலும், சம்பந்தர் தன் சமூகத்தில் நிலவிய prejudice ற்கு ஆட்பட்டுத்தானே இருந்திருப்பார்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஐயா தங்களது  பணியின்  சிறப்பு அபரிமிதமானது .அருமையான விளக்கங்கள்.....!

மேலும் புங்கையர் சொன்னதுபோல் எனக்கு மிகவும் பிடித்த தேவாரங்கள் "நிரைகழல்  ஆரவமும் " ---- "நத்தார் படை ஞானன் பசுவும் " இரண்டும் திருகோணேஸ்வரத்தையும்  திருகேதீஸ்வரத்தையும் குறிப்பிடுவதால் என நினைக்கின்றேன். யாழின் 20 வைத்து அகவையில் "காரும் கதியாலும் "  என்னும் கதையில் கூட அத் தேவாரத்தை பயன்படுத்தி இருக்கிறேன்........!   👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this