Jump to content

பாடுபட்ட சிலுவையள்


Recommended Posts

பாடுபட்ட சிலுவையள்-சிறுகதை-தமிழ்க்கவி

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AA%E0%

காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு. கால்களை அவ்வப்போது வழுக்கிக் கொண்டிருந்தது. அதென்ன, புல் இல்லாத இடத்தில் கால் பட மண் ஒட்டுது. அந்தக்காலை புல்லில வைக்க பனி நனைக்குது. வழுக்கத்தானே செய்யும் என்றாலும், அவளுடைய நடையில் ஒரு கொஞ்சமும் வேகம் குறையவில்லை. அதுமட்டுமல்ல அவளுடைய தலையில் ஏற்றியிருந்த சுமைகூட அப்படியே இருந்தது. அவளுடைய ஒருகையில் அரிவாள் அவளுடைய கைவீச்சுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தது. மறுகையில் தண்ணீர்க்கலயம். அதன் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கில் பிடிக்கப்பட்டிருந்தது. தலைச்சுமை சுருட்டி வைத்த சும்மாட்டில் சிவனேயென்று கிடந்தது.

என்னதான் வேகமாக நடந்தாலும் அவளுடைய உடலில் இன்றைக்கு ஏற்பட்ட மாற்றம் அவளை மகிழ்வடைய வைக்கவில்லை. நாரியில் விடுவிடுப்பு வயிற்றிலும் ஒரு உளைவு இது போக, அவளுடைய கவட்டுக்குள் நசநசவென்று வெப்பம் கலந்த பிசுபிசுப்பு. அதற்காக அவள் கட்டியிருந்த பழந்துணி கைவிட்டுவிட்டதை தெரிவித்துக் கொண்டிருந்தது. ‘சனியன் இன்னும் ஏழெட்டு நாள் கிடக்கு அதுக்குள்ள வந்து துலைச்சிட்டுது’ அவள் புறுபுறுத்தவாறே காறாப்பிச்சு எட்டித்துப்பியவாறே நடந்தாள்.

அந்த நாளையில இப்பிடி வீட்டுக்குத்தூரமெண்டா கரிக்கோடு போட்டு தனிச்சு விட்டிருவினம். மூண்டுநாளைக்கு தனியத்தான் பின்னையும் அஞ்சு நாளைக்கு தனியத்தான். கிணத்தில தண்ணியள்ள ஏலாது. சுட்டிபானையில தொட ஏலாது அதுகள் தொட்டா சட்டிபானை உடையுமாம் கிணத்துக்க பொக்கான் செத்து மிதக்குமாம். ஆ..எல்லாம் அம்மாட தலைமுறையோட போச்சு. இப்பத்தயில் பிள்ளையளுக்கு வாறது தெரியுதோ போறது தெரியுதோ…அதென்னவோ அவளின்ர வாழ்க்கையிலயும் இந்த சட்டமறுப்புத்தான். அது தானாகவே தேவைகருதி உடைஞ்சு போச்சு.

சேனைப்பிலவுக்க வந்து சேந்தபிறகு தலைச்சுமைய காந்தன் வந்து இறக்கினான்.

“என்னம்மா விடியக்காத்தால சோறு காச்சினநியே. அங்கின பாணைக்கீணை வாங்கியிருக்கலாமே.”

நடந்துவந்த அழல் இன்னும் தீராமலே அதை செவிமடுத்தவள்:

“************…பாணுக்கு காசு கிடக்கே? அதை திண்டிட்டு ஈரவயலுக்க இறங்க அதுகும் முடிஞ்சுபோம்…நம்ம நெல்லுத்தானே கொக்காளவை குத்தினாளவை. பாலைவிட்டு பால்புக்கையா காச்சியிருக்கிறன். ஒரு காட்டமான சம்பல் இருக்கு சாப்பிடுங்கோ. மத்தியானமும் உதுதான்  இனி வீட்ட போக ஏலாது” என்றாள் அவள்.

“எங்கயம்மா உன்ர ‘கஸ்பண்ட்ட’ காணேல்ல வருவாரோ…?” ஒருகேள்வியோடு அவளைப்பார்த்தான் அவன். அவனை ஒரு முறாய்ப்போடு திரும்பிப் பார்த்தவள்,

“எட அவங்கள் குருச்சந்திர யோகத்தில பிறந்தவங்கள். இந்த சேத்தில இறங்கிறாங்களே… நாங்க இருக்கிறந்தானே பாடுபட்ட சிலுவையள்.” அவளுடைய நாரி விடுவிடுப்பு அவளுக்கு மேலும் எரிச்சலைத்தந்தாலும் அவள் மேற்கொணடு பேசவில்லை.

ராத்திரி கொஞ்சம் கூடித்தான் போச்சுது, பகல்முழுக்க ஈரத்துக்க நிண்டது கைகால் உழையுதப்பா. வேண்டாம் எண்டு சொல்லித்தான் பாத்தாள். ஊகும்… அவன் தந்திரமா வாங்கிவச்ச சாராயத்தை ஊத்தி ‘கொஞ்சம் குடியப்பா அலுப்புக்கு நல்லம் ’ எண்டு சொல்ல, அவளும் அறிவு கெட்டதனமா வாங்கி வாயில ஊத்தப்போக, போதையில அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைஞ்சு, புதுசு புதுசா அவன் செய்த காமசூத்திர பரிசோதனையளுக்க மாட்டி, விடியமுன்னம் தீட்டிறைக்கத் துவங்கீட்டுது. அதை இவனட்ட என்னண்டு சொல்ல…ச்சைக் ‘காஞ்சமாடு கம்பில விழுந்தமாதிரி’

இரண்டு நாட்களுக்கு முன்தான் அவன் எங்கோ வேலைக்குப்போய் ஒரு மாதத்தின் பின் வந்திருந்தான். அதனால் அவளும் அதை எதிர்பார்த்திருந்தவள் தான். அவனை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, அது அந்த உறவு, உடலுக்கு தேவைப்பட்டதே.

மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அவள் வயலுக்குள் இறங்கும்போதே சேனைக்குள் மந்து வெட்டும் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கான வேலையை குறித்துக் கொடுத்தாள். என்னதான் வீம்பாக வயலுக்குள் இறங்கி வேலை செய்தாலும் வயிறும் நாரியும் கொதித்துக் கொண்டிருந்தது. வாயில் வழக்கமாக அந்தநாட்களில் ஊறும் விழுவிழுப்பான எச்சிலை அடிக்கடி துப்பியவாறே அவள் வேலை செய்தாலும் முடியவில்லை. அவளுடைய நல்ல நேரம் ராசதுரை வந்து சேர்ந்தான். அவனைச்சாட்டி வரம்புக்கு ஏறியவள் அவனோடு கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

ராசதுரை அந்த ஊரின் கிராமச்சங்கம், கோவில் சபைகள் என்பவற்றில் தலைவனாக இருந்தான். ஊருக்குள் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியாமல் நடக்காது. இப்ப வயல் தண்ணீர் பிரச்சனை பற்றி பேச வந்திருந்தான். பொதுவாக அவன் நல்ல அழகன்தான். அவன் இந்த கிராமத்துக்கு வந்தபோது அப்போதிருந்த அனைத்து இளம் பெண்களின் கண்களும் மனமும் அவனைச்சுற்றியே இருந்தன. அவன் யாரையும் பாராது தனது சொந்த ஊரிலிருந்து ஒரு பெண்ணை கொண்டு வந்து மணந்து கொண்டான். அதன்பிறகும் அவனை பெண்கள் தொடரத்தான் செய்தார்கள். அவளுக்கும் அப்போது அவனைப்போல ஒரு புருசன் கிடைக்க வேண்டும் என்ற ஆசைதான். அவனை பார்த்தாலே மனம் புளகிக்கும். ஊள்ளர உடலெங்கும் காமநீர் சுரக்கும். அடக்க முடியாமல் வேதனைப்பட்டிருக்கிறாள். அவனை காதலிக்கிறாளா என்றால்…இல்லவேயில்லை. அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்பதும் தெரியும். அவனிடம் தனக்கிருந்த உணர்வு என்ன என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாமலே அதை மறந்துபோனாள் என்பதை விட, மறக்கடிக்கப்பட்டுவிட்டது. என்பதே சரி.

காதலிக்க அவளுக்கு காலம் வாய்க்கவுமில்லை.

எங்கிருந்தோ ஒருவன் வந்தான் நான்கு பேர் கூடிப்பேசி முடிவெடுத்தார்கள். அவளுக்கும் காட்டினார்கள். அவளுக்கு… அதை சொல்லவும் அவள் பயந்தாள் பிடிக்கவில்லை. இவனைப்பிடிக்கவில்லை. ஆனால் அவர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. அது ஒன்றே அந்தக் கல்யாணத்தின் காரணியாயிற்று.

அந்த நிகழ்ச்சியில் அவளுக்கு கூறைப்புடவை கட்டிவிட்ட நவமணியும் ருக்குமணியும் பேசிக்கொண்ட வார்த்தைகள் (மிக ரகசியமாகத்தான்):

“என்ன இருந்தாப்போல கலியாணம்…அவனைப்பாக்க வயசாளிபோல கிடக்கு”என்ற நவமணிக்கு ருக்குமணி சொன்னதாவது,

“சீதனபாதனமில்லைப்போல.”

“உதென்ன சீலம்பாய்க்கதை. அவளென்ன குருடோ சொத்தியோ? கொண்டு போற சொத்து காணாதோ?” என்றவள் ‘களுக்’கென சிரித்து உடலை நொடித்து,

“ரெண்டு பந்தும் ஒரு பொந்தும்” என்று கூற,

சுற்றி நின்ற பெண்கள் “ச்சீக்……… என்ன கதை கிழவி” என்று முகத்தைசுழித்தனர். அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. இப்போது நினைத்துப் பார்த்தால். வேடிக்கையை விட வேதனையே தெரிகிறது.

ஆரம்பத்தில் அவனோடு படுக்கையை பகிர அவளுக்கு இஸ்டமேயில்லை. அது ஒரு மழைக்காலம் அந்த மண்வீடு மழைகாலத்தில் நிலமெல்லாம் ஊறி கசகசக்கும். நனைந்த ஈரலித்த வீட்டில் பலகைகளைப் பரப்பி அதன்மீது பாய்விரித்து இரண்டு தலையனைகளைப்போட்டு, அவர்களுக்கான முதலிரவு ப்படுக்கையை அவளுடைய தந்தையே செய்தான். அவள் ஒருபயம் கலந்த வெறுப்போடு அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய புருசன் அவளை வந்து படுத்துக்கொள்ளச் சொன்னான். அதில் எந்த இங்கிதமோ அன்போ தொனிக்கவில்லை. ஒரு புடுங்கல்தனமாக இருந்தது. அவனுடைய மூஞ்சியும், முகறைக்கட்டையும். அவள் சிலுப்பிவிட்டு ஒதுங்கியே நின்றாள்.

வீட்டின் ஓசைகள் அடங்கிய பின்  தூக்கம் கண்ணைச்சுற்ற அவள் எப்போது படுத்தாளோ. நன்றாக உறங்கிப்போனாள். அந்த நள்ளிரவில், அவளுக்கு விழிப்பு வந்தபோது அவள்மீது மிகுந்த பாரமாக அவன் அழுந்திக்கொண்டும் வேகமாக இயங்கிக் கொண்டுமிருந்தான். அவளால் உதறவோ கத்தவோ முடியவில்லை. சொல்லப்போனால் அதில அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது எனலாம்.

தொடர்ந்தும் அடுத்துவந்த சில நாட்களில் தினசரி அது நடந்தது. ஒரு புதிய அனுபவம் என்பதாக மட்டும் அவளால் அதை ஏற்க முடிந்தது. என்றாலும் காலப்போக்கில் என்னவோ ஊரார் சொல்லுவினமே புதிசா கலியாணம் முடிச்சவைக்கு சந்தோசம்தான். ஆனா ‘கப்பும் வளையும் பொறுக்கத் தெரியும்’ என்று. அப்படி கப்பும் வளையும் பொறுக்கத் தொடங்கிய போதுதான் அவனுடைய முகம் அவளுக்கு அருவருப்பாக தெரிந்தது. பிள்ளைகள் பிறக்கப்பிறக்க அவனுக்குள் ஒரு வெறியே கிளர்ந்தது. அவளால் முடியவில்லை. அவளே உழைக்கவேண்டியும் இருந்தது. அவன் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே கிடந்தான். எப்பவும் அவளுடைய உடலையே நினைத்தபடி அவன் அதற்கெனவே நல்ல வழியொன்றைக் கண்டுபிடித்தான். அவனுடனான உறவுக்கு அவள் சம்மதிக்கவில்லையென்றால் அயலில் உள்ள ஆண்களையெல்லாம் அவளுடைய வைப்பாட்டன்கள் என்று கூசாமல் சொன்னான். அந்த பட்டியலில் அவளுடைய தம்பிகள், தகப்பன், அக்காள் புருசன் அனைவருமே அடக்கம்.

“எடியே அவங்கட…ன்..பெரிசாப்போச்சே…”இன்னும் என்னென்னவோ கெட்டவார்த்தைகள் சரளமாக வந்து விழுந்தன. அவன்செய்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டாள். பிள்ளைகள் கூட அவளை கேள்வி கேட்க ஆரம்பித்தன.

“என்னத்துக்கம்மா நீங்க உழைச்சும் குடுத்துக்கொண்டு, அவரிட்ட அடி உதை பட்டுக்கொண்டு…உவ்வள பேச்சையும் கேட்டுக்கொண்டு, அழுதழுது கண்ணீரும் சோறும் தின்ன வேணுமே? கலைச்சு விடம்மா. நாங்க தனிய இருந்தாலும் கலங்காம இருப்பம்.”

ராசதுரைக்கு அவளில ஒரு கவனம் விழுந்திருந்துது. அவளுடைய மனதில் அறியாத வயதில் எற்பட்ட சலனம் இப்போதும் ஏற்பட்டது. அவனுடைய அறிவார்ந்த பேச்சு அக்கறையான விசாரிப்பு எல்லாமே பிடித்திருந்தது. ‘ச்சைக் நான் அப்ப நினைச்சிருந்தமாதிரி இவனே என்ர புருசனா வந்திருந்தா….’ அவனது

அருகிலிருந்து வீசும் ‘வூடோ’ பவுடரின் நறுமணம் அவளுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியது. இது தப்பா இல்லையா என்பதற்கு அப்பால் அறிவை முந்தி மனம் துடித்தது. ஊரெல்லாம் ‘பொம்பிளப்பொறுக்கி’ என்று பெயர்பெற்ற ராசதுரை அவளை மடக்கி விடுவானோ?

நான்கு நாட்களாக அவளுக்குள் ஒரு போராட்டம் நடந்து ஓய்ந்து போனது.

“மெய்யே இஞ்சேருங்கோ…ஒரு அரைப்போத்தல் சாராயம் வாங்கிக் கொண்டாங்க”  என்றவள் மகனிடம்,

காந்தா! கூட்டுக்க நிக்கிற பெரிய வெள்ளைக் கோழியைப் பிடிச்சு அடி.” என்றாள்

“ஏனம்மா இருந்தாப்போல?”

“கொப்பர் நாளைக்கு வேலைக்கு கிளிநொச்சிக்கு போறாராமடா………”

“அக்கா அம்மா திருந்தப்போறதில்ல. மணவாளனுக்கு விருந்து வைக்கப்போறா.”

அம்மாவின்ர தேவை என்ன? அதை நிறைவேற்ற அப்பாவால மட்டுந்தான் முடியும். எண்டதை அவன் அறிய கனநாள் எடுக்கும்.

தமிழ்க்கவி-இலங்கை

https://naduweb.com/?p=10438&fbclid=IwAR35V7RJYea3fVeCZkS4ptHYaBvMF2GmI0G5qdPw2DXA7CVV8u7t4VjTn14

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.