Jump to content

ஆயுத பூஜை பற்றி அறிஞர் அண்ணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

*"ஆயுதபூசை பற்றி அறிஞர் அண்ணா"*

எலக்ட்ரிக்,ரயில்வே,
மோட்டார், 
கப்பல், 
நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயு தங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், 
டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், 
புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் 

இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த,

 மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள்,
 ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.

 *சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!* 

அமெரிக்காவுக்கு வழி கண்டுபிடித்த கொலம்பஸ்,

 இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா,

 இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம்,

 ஆயுதபூசை செய்தவர்களல்ல!
நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும் மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

 தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்தது தான்.

நீ, கொண்டாடுகிறாய் -
சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சுயந்திரத் தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா,

 இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளை, பயனுள்ள பொருளைக் கண்டு பிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று

 யோசித்துப் பாரப்பா!

 கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள்.

 அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா?

 இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு,

 பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா?

 யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது  - என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே!

 அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை  - அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை,

 சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன்,
 தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது  - அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள் களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை - ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என் பதையும் மறந்து விடுகிறோம்.

 ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம்.

 இதுமுறைதானா?

பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த
சரஸ்வதி பூசை ஆயுத பூசை  -
நமக்குப் பலன் தரவில்லையே!

 அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால்

 முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார்  

அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

*- "திராவிடநாடு"  26.10.1947  இதழிலிருந்து..

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.