• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Justin

மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி!

Recommended Posts

 

மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி!

 மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன.  விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்து விட்டால், அவற்றின் ஆயுள் கொஞ்சம் அதிகரிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் பொறுத்த வரை, இது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொறிமுறை: உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு, இதய நோய் இரத்த அழுத்தம் போன்ற தற்காலத்தில் மரணத்திற்குக் காரணமான பல நோய்களைக் குறைத்து விடுவதால் ஆயுள் சிறிது அதிகரிக்கலாம். ஆனால், உணவும் அனுசேபமும் மட்டுமே இந்த நோய்களைக் குறைத்து விடுவதில்லை, மனப் பதட்டம் (stress) போன்ற சமூகக் காரணிகளும் நோய்களை உருவாக்கக் கூடியவை என்பதால் அந்த திசையிலும் ஆய்வுகள் நகர்கின்றன.

இந்தக் கோணத்தில் செய்யப் பட்ட ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவு தான் மேலே தலைப்பில் இருக்கும் "மூளைக்கு ஓய்வு" என்பது! நூறு பில்லியன் கலங்களால் ஆன மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விழுங்கிக் கொள்ளும் ஒரு உறுப்பு. அந்த நூறு பில்லியன் மூளைக்கலங்களான நியூரோன்களிடையே உருவாகும் நரம்புப் பிணைப்புகள் (synapses) ட்ரில்லியன் கணக்கில் இருக்கும். இந்த வலையமைப்பே (neural network) நாம் கற்றுக் கொள்ளவும், அனுபவம் பெறவும், உணர்வுகளால் நெகிழவும் காரணமான அடிப்படை அமைப்பாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது கொண்டிருக்கும் அதேயளவான நியூரோன்கள் தான் அது வளரும் போதும் அதன் மூளையில் இருக்கின்றன. ஆனால், இந்த நியூரோன்களிடையேயான தொடர்புகள் தான் மூளை வளர்ச்சியாக எமக்குத் தெரிகிறது. பின்னர் எமக்கு வயதாகும் போது கொண்டு வந்த நியூரோன்களில் சில ஆயிரத்தை நாம் இழக்கிறோம். அந்த இழப்போடு நரம்புப் பிணைப்புகளும் இழக்கப் படும் போது மூளைக்கு வயதாக ஆரம்பிக்கிறது. முதுமையின் இயற்கையான மாற்றம் இது. இந்த நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் வைத்திருக்க ஒரு வழி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது. பொதுவாகவே உடலில் சுவாசத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும் உடற்பயிற்சி முதல் மூளைக்கு வேலை தரும் கணக்கு, வாசிப்பு, யோசிப்பு, இசை வரை என பல வழிகளில் மூளையின் நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் காக்க முடியும்.

மூளையின் நியூரோன்கள் அதிகம் அளவுக்கு மீறி செயற்படாமல் பாதுகாப்பதாலும் ஒரு உயிரின் ஆயுளை அதிகரிக்கக் கூடும் என்று தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு மீறிய நியூரோன்களின் செயல்பாடு (excitation) என்பது எங்கள் மனப் பதட்டத்தின் பால் பட்டதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 80 வயதுவரை வாழ்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 85 வயது வரை வாழ்ந்தவர்களின் மூளையில் "றெஸ்ட்" (REST) எனப்படும் ஒரு ஜீனின் செயல்பாடு அதிகமாக இருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த றெஸ்ட் ஜீனின் வேலை மூளையின் நியூரோன்கள் அதிகமாக பதகளிப்பாகாமல் (over-excitation) பார்த்துக் கொள்வதாகும். இதே ஜீனினால் இயக்கப்படும் ஒரு நரம்பியல் பாதை தான் உடலில் மனப்பதட்ட நேரத்தின் போது நிகழும் அனுசேபத் தொழிற்பாடுகளையும் கட்டுப் படுத்துகிறது. எனவே, பதட்டம், அதனால் நிகழும் அனுசேபத் தொழில்பாடு அதோடு மூளையில் கொஞ்சம் அதிகமாகத் துள்ளும் நியூரோன்கள், இவையெல்லாம் இணைந்தே எங்கள் ஆயுளைக் குறைப்பதாக கருதுகிறார்கள்.

உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சில சமயங்களில் சாத்தியமில்லையானாலும் " அமைதியாய் இருந்தால் சில ஆண்டுகள் அதிகம் வாழலாமே?" என்ற கவர்ச்சிகரமான நன்மை கருதி இனி உணர்ச்சி மயமாவதைத் தவிர்ப்போம்! (இது எனக்குப் பொருந்தாத அட்வைஸ்!😎).

ஆய்வின் இணைப்பு:

https://www.nature.com/articles/s41586-019-1647-8

சாதாரண மொழியில் ஆய்வின் சுருக்கம்:

https://www.nature.com/articles/d41586-019-02958-x

நன்றி.

ஜஸ்ரின்

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this