Jump to content

தேர்தல் புறக்கணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் புறக்கணிப்பு

 இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டுமொருமுறை தமிழ் மக்களிடையே, ‘ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கருத்தும் அந்தக் கருத்துகான எதிர்ப்பும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி வருகின்றன.

இந்த வாதப் பிரதிவாதங்களில், தேர்தல் புறக்கணிப்புப் பற்றிப் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.   

இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘புறக்கணிப்பு’ என்பதன் ஜனநாயக அரசியல் பங்கையும் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதுடன், இன்றைய சூழலுக்கு, அது ஏற்புடையதா என்ற வினாவுக்கு விடைகாண முயற்சிப்பதும் ஆகும்.   

இந்த அமைவுச்சூழலில், ‘புறக்கணிப்பு’ என்று தமிழில் பயன்படுத்தப்படும் சொல்லானது, ஆங்கிலத்தில் ‘போய்கொட்’ (Boycott) என்று வழங்கப்படுகிறது. ‘போய்கொட்’ என்பது, உண்மையில் ஒரு நபரின் பெயர்! புறக்கணிப்புக்கு, ‘போய்கொட்’ என்பவரின் பெயர் எப்படி வழங்கப்பட்டது என்பது, ஒரு சுவாரசியமான கதை.  

 ‘போய்கொட்’ என்ற சொல், ஆங்கிலமொழியில் நுழைந்தது, ஐரிஷ் ‘நிலப் போராட்ட’ காலத்திலாகும். பெரும் நிலப்பிரபுவான ஏர்ன் பிரபுவுக்கு, அயர்லாந்தில் சொந்தமாகவிருந்த பெருநிலப்பரப்புக்கு முகவராக, 1880களில் கப்டன் சார்ள்ஸ் போய்கொட் செயற்பட்டுவந்தார்.  

 குறித்த நிலங்களைப் பொதுமக்கள் பலரும்  குத்தகைக்குப் பெற்று, பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். குறித்த ஆண்டு, அறுவடை மோசமாக இருந்ததால், ஏர்ன் பிரபு, தனது குத்தகைக்காரர்களுக்கு அவர்களின் வாடகையில் பத்து சதவிகிதம் குறைப்பை வழங்கினார். ஆனால், குத்தகைக் காரர்களோ 25 சதவிகிதம் குறைப்பைக் கோரினார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள, ஏர்ன் பிரபு மறுத்துவிட்டார்.   

இதனைத் தொடர்ந்து, ஏர்ன் பிரபுவின் முகவராகச் செயற்பட்டு, குறித்த நிலங்களை நிர்வகித்து வந்த கப்டன் சார்ள்ஸ் போய்கொட், வாடகையைச் செலுத்தாத 11 குத்தகைக்காரர்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை முன்னெடுத்தார்.   

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், அந்த ஊரில் வாழ்ந்த மக்கள், ஐரிஷ் தேசியவாதத் தலைவர்களுள் ஒருவரான சார்ள்ஸ் ஸ்டுவர்ட் பானெல் வலியுறுத்தி வந்த, வன்முறைக்கு மாற்றான புறக்கணிப்பு எனும் அரசியல் ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அதன்படி குறித்த ஊரவர்கள், கப்டன் சார்ள்ஸ் போய்கொட்டைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.   

சாமானியர்களான பொதுமக்களுக்கு, பெரும் நிலப்பிரபுவின் முகவரைப் புறக்கணிப்பது ஆரம்பத்தில் இலகுவானதொரு காரியமாக இருக்கவில்லை. புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு குறுகிய காலப் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தபோதிலும், புறக்கணிப்பு கப்டன் போய்கொட்டை விரைவில் தனிமைப்படுத்தியது. அவரது தொழிலாளர்கள், வயல்வெளிகளிலும் தொழுவத்திலும் அவரது வீட்டிலும் வேலை செய்வதை நிறுத்தினர். உள்ளூர் வர்த்தகர்கள் அவருடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தினர். உள்ளூர் தபால்காரர் கூட, அவருக்குத் தபால் வழங்குவதை நிறுத்திவிட்டார். அவரது நிலத்தில் வளர்ந்த பயிர்கள், அறுவடைக்குத் தயாராக இருந்தது; ஆனால் அறுவடை செய்ய உள்ளூரில் ஒருவரும் வரவில்லை. கடைசியாக, வௌியூரிலிருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆட்கள் கொண்டுவரப்பட்டு, அறுவடையை கப்டன் போய்கொட் முன்னெடுத்தார். ஆனால் குறித்த ஆட்களை வரவழைக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பு என்பவற்றுக்கான செலவுகள், அறுவடையின் பெறுமதியையும் பார்க்க அதிகமாகவிருந்தது. அந்த ஊரின் ஐரிஷ் மக்களின் புறக்கணிப்பிலிருந்து, ‘போய்கொட்’ என்ற சொல் ஆங்கிலத்தில் பிரசவம் பெற்றது.  

‘புறக்கணிப்பு’, ‘போய்கொட்’ என்பது, பொதுவாகத் தார்மீக, சமூக, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, ஒரு நபரின், அமைப்பின், நாட்டின் மீதான எதிர்ப்பை வௌிப்படுத்தும் வழிமுறையாகும்.   

புறக்கணிப்பின் நோக்கமானது, ஒன்றில் அது இலக்காகக் கொள்ளும் விடயத்துக்குப் பொருளாதார அல்லது வேறுவகையான இழப்பை ஏற்படுத்துவது. அல்லது, தமது தார்மீகச் சீற்றத்தை, எதிர்ப்பை வௌிப்படுத்தவது ஆகும். இவற்றினூடாகக் குறித்த இலக்கின் ஆட்சேபனைக்குரிய நடத்தையை மாற்ற, இலக்கைக் கட்டாயப்படுத்த முயற்சிப்பது ஆகும்.   

ஆகவே, இந்தப் பின்புலத்தில் வைத்து நோக்கும் போது, ‘புறக்கணிப்பு’ என்பதும் ஒரு வகை ‘குடிசார் சட்டமீறல்’ (civil disobedience) நடவடிக்கையாகும். குடிசார் சட்டமீறல் என்பது, அரசாங்கத்தின் சில சட்டங்கள், கோரிக்கைகள், உத்தரவுகள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒரு குடிமகனின் செயற்பாடாகும்.   

குடிசார் சட்டமீறலாக ஒரு விடயம் அமைய வேண்டுமானால், அது வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் வரையறுப்பர். ஆகவேதான், ‘குடிசார் சட்டமீறல்’ என்பது எப்போதும் அமைதியான எதிர்ப்பு, வன்முறையற்ற எதிர்ப்பு நடவடிக்கையாகக் கருதப்படும்.   

அதில் வன்முறை சேரும் போது, அது ‘குடிசார் சட்டமீறலாகக்’ கருதப்படுவதில் சிக்கல்கள் உருவாகும். ஆயினும், மக்லொஸ்கி உள்ளிட்ட சில தத்துவறிஞர்கள் வன்முறையானது, அஹிம்சையை விட வினைதிறன் கூடியதாக அமையும் போது, அதுவும் ‘குடிசார் சட்டமீறலாகக்’ கருதப்படமுடியும் என்று வாதிடுகிறார்கள்.   

எது எவ்வாறாயினும், ‘குடிசார் சட்டமீறல்’ என்ற அரசியல், ஜனநாயக ஆயுதத்தை மிக வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களாக மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகியோரை வரலாறு கொண்டாடுகிறது. இதற்கு அவர்கள் கையாண்ட அஹிம்சை வழி முக்கியமானது.   

இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘குடியியல் சட்டமீறல்’ என்ற பெரும்பரப்பை ஆராய்வதல்ல; மாறாக, அதன் ஓர் அம்சமாகக் கருதக்கூடிய ‘தேர்தல் புறக்கணிப்பைப்’ பற்றி ஆராய்வதாகும்.  
தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது என்று வாதிடுவோர், அவர்களது நிலைப்பாட்டில் பல நியாயதர்மங்கள் இருந்தாலும், புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதமானது போன்று கருத்துகளை முன்வைப்பது முறையானதோ, பொருத்தமானதோ அல்ல.   

அண்மைக்காலத்தில் தேர்தல்காலம் வரும்போதெல்லாம், எல்லோரும் சென்று வாக்களியுங்கள்; வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்ற கோசங்கள் அனைவராலும் முன்வைக்கப்படுவதைக் காணலாம். இது நல்ல விடயம்.   

ஆனால், தேர்தல் தினத்தன்று சென்று வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்று அறிந்து வாக்களிப்பதும் முக்கியம்.   

வாக்களிப்பு என்பது ‘கடமையே’ எனக் கைவிரலில் மையைப் பூசிவிட்டு, வாக்குச் சீட்டில் உள்ள ஏதேனுமொரு சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு வரும் செயற்பாடல்ல. அது அதனைத்தாண்டிய பலமானதொரு ஜனநாயக ஆயுதம். அது ஒருவருக்கு நேரடியாக வாக்களிப்பது பற்றியது மட்டுமல்ல; ஒரு தனிமனிதன், அல்லது அந்த ஜனநாயகத்தின் பங்குதாரியான ஒரு மக்கள்கூட்டம், தன்னுடைய அரசியல் அபிப்பிராயத்தை வௌிப்படுத்தும் ஊடகமுமாகும்.   

அதனால்தான் உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு சமூகங்கள், மக்கள்கூட்டங்கள், அரசியல் கட்சிகள் என்பன ‘தேர்தல் புறக்கணிப்பை’, தமது அபிப்பிராயத்தைக் கூட்டாக வௌிப்படுத்தும் ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருப்பதை, காணக்கூடியதாக இருக்கிறது.   

ஜமெய்கா, ஸ்லொவாக்கியா, பங்களாதேஷ், வெனிசுவேலா, பெர்கினா ஃபாஸோ, கானா, மாலி, ட்ரினிடாட் அன்ட் டொபாகோ, டோகோ, ஐவரி கோஸ்ட், வட அயர்லாந்து, கம்பியா, சேர்பியா, அல்ஜீரியா, யுகோஸ்லாவியா, தாய்லாந்து, கென்யா, புஏர்டோ றீகோ, கடலூனியா, மசடோனியா உள்ளிட்ட நாடுகளில், வௌிப்படையான தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையால் வாக்குப்பதிவு சதவீதம் மிகப்பெருமளவு வீழ்ச்சிகண்ட சந்தர்ப்பங்களை இங்கு அடையாளம் காணலாம்.   

இதனைத் தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம். தேர்தல் புறக்கணிப்பு பற்றிக் கருத்துரைக்கும் அறிஞர்கள் பலரும், இதை ஒரு ஜனநாயக ரீதியாகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஆயுதமாக, அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள்.   

குறிப்பாகத் தேர்தல் மோசடிக்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாக்காளர்கள் கருதும் போது, நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையானது தாம் சார்ந்த வேட்பாளர்களுக்குச் சார்பில்லாததாகவும் எதிரானதாகவும் இருக்கும் போது, அல்லது நடத்தப்படும் தேர்தல் சட்டரீதியான தன்மை இல்லாததாக இருக்கும் போது, அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் மீது குறித்த மக்களுக்கு ஈர்ப்போ, ஆதரவோ இல்லாத போது, தேர்தல் புறக்கணிப்பு என்பது, மக்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தும் ஆயுதமாக அமைவதை அவதானிக்கலாம்.   

இதனைத் தவிர, வெகு சில சந்தர்ப்பங்களில் தேர்தல் தந்திரோபாயமாக தேர்தல் புறக்கணிப்பு கையாளப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். 

மறுபுறத்தில், வெகு சில சந்தர்ப்பங்களில், ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்பது மக்கள் மீது சில அமைப்புகள், ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஊடாகத் திணிக்கப்படும் ஒன்றாகக் கூட அமைகிறது.   

இந்தியாவில் மாவோயிஸ்ட் நக்ஸல்கள், தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் மீது, ‘தேர்தல் புறக்கணிப்பு’ திணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள், மிக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருவதை, இங்கு கருத்திற் கொள்ளலாம். ‘தேர்தல் புறக்கணிப்பு’ என்பது, அச்சுறுத்தல் ஊடாக முன்னெடுக்கப்படும் போது, அது அதன் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடுகிறது.  

இலங்கையின் 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலானது தந்திரோபாய ரீதியான ‘தேர்தல் புறக்கணிப்பு’, ஆயுத இயக்கமொன்றின் செல்வாக்கின்படியான ‘தேர்தல் புறக்கணிப்பு’ ஆகிய இரண்டுக்கும் உதாரணமாக இருக்கிறது.   

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் உள்ளிட்ட வடமாகாணத்தின் பெரும்பகுதியில், வெறும் இரண்டு சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.   

இதற்கு முக்கிய காரணம், குறித்த தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்தமையாகும். இந்த அறிவிப்பானது, தந்திரோபாய ரீதியாக அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்குச் சாதமாக அமைந்தது. குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்ஹவை 1,80,786 வாக்குகளால் தோற்கடித்திருந்தார்.   

அதேவேளை, தமிழ் மக்கள் வாக்களித்த பகுதிகளிலெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கணிசமான பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். ஒருவேளை, தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவிக்காது விட்டிருந்தால், வடமாகாணத்திலும் ரணில் விக்கிரமசிங்க கணிசமான பெரும்பான்மையைப் பெற்று, வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்று பல அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.   

ஆகவே, குறித்த தேர்தல் புறக்கணிப்பு என்பது, தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்துவதற்கான கருவியாக அமைந்திருந்தாலும், தந்திரோபாய ரீதியாக அது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு உதவிபுரிந்தது.   

‘தேர்தல் புறக்கணிப்பு’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மிகுந்த சிக்கல் தன்மையை எடுத்துக்காட்ட இது ஒரு முக்கிய உதாரணமாகும். குறித்த தேர்தலில், ராஜபக்‌ஷ வெற்றிபெற வேண்டும் என்பது, தமிழ் மக்களின் விருப்பமல்ல; ஆனால், அவர்களின் தேர்தல் புறக்கணிப்பின் பக்கவிளைவாக, அது அமைந்தது.   

இந்த இடத்தில்தான், ஜனநாயக ஆயுதமான ‘தேர்தல் புறக்கணிப்பை’ பயன்படுத்தும் போது, நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ‘வெறுமனே எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டு இயங்க முடியாது. ஏனென்றால் நமது நோக்கம், தூய்மையானதாகவே இருந்தாலும் விளைவுகளும் பக்கவிளைவுகளும் கசப்பானதாக அமைந்துவிடலாம்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-புறக்கணிப்பு/91-240134

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு

இலங்கையின் தேர்தல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், குறித்த தேர்தலானது ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடத்தப்படும்.   

இதன் பிரகாரம், மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது விருப்பத்தெரிவுகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம். மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து, மூன்றாவது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.  

உதாரணமாக, அ,ஆ,இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து, வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம்.   

வாக்குகளின் எண்ணிக்கையில், முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.   

ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதம், அதற்கு மேற்பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில், அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர். இதன் பின்னர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுகளிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால் அது, அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். 

ஆகவே, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், வாக்குச் சீட்டிலுள்ள நபர்களுக்கு ஒரு வாக்காளர் தனது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவு அடிப்படையில் வாக்களிக்கலாமே அன்றி, போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற விருப்பத் தெரிவைக் குறிப்பிடுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை.   

ஆகவே, வாக்காளர் ஒருவருக்குப் போட்டியிடும் எந்த வேட்பாளர் மீதும் விருப்பமில்லை எனில், அந்த வாக்காளருக்கு இருக்கும் தெரிவுகளானவை, ஒன்றில் வாக்களிக்காமல் விடுதல், வாக்கைச் செல்லா வாக்கு ஆக்குதல் என்பனவாகும்.  

ஒரு வாக்கைச் செல்லா வாக்கு ஆக்கும் போது, அந்த வாக்கு ஏன் செல்லா வாக்கு ஆனது என்பது வௌிப்படையாகத் தெரியாது. ஆகவே, தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், எதிர்ப்பை வௌியிட விரும்புபவர்களுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பது மட்டுமே இருக்கின்ற இலகுவான தெரிவு.  

மறுபுறத்தில் சிலர், போட்டியிடும் வேட்பாளர்கள் எவரிலும் திருப்தி இல்லையென்றால் தாம் விரும்பும் வேட்பாளரைக் களமிறக்கலாமே என்ற வாதத்தை முன்வைக்கலாம். இந்த வாதத்தில் சிக்கல் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ‘எவரும்’ போட்டியிட முடியாது. ஒன்றில் குறித்த நபர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினூடாக வேட்பாளராக வேண்டும்; அன்றில் அவர் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்க வேண்டுமாயின், அவர் இந்நாள் அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்பதுடன், போட்டியிடும் வேட்பாளர் கட்டுப்பணம் கட்டவும் வேண்டும்.   

ஆகவே, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றைச் சாராத, சாதாரண நபரொருவர், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், ஓர் உதாரணத்துக்குப் பார்த்தால், ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கொள்கையளவில் நிராகரிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் உறுப்பினர்கள் யாவரும், அதே ஒருமித்த நிலைப்பாட்டுடன், வேறொரு மாற்று வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று எடுகோள் கொள்ள முடியாது. போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கு உள்ள நியாயங்கள், ஒரு மாற்று வேட்பாளரை ஆதரிப்பதற்கு நேரடியாகப் பொருந்தி வராது. நிற்க!  

கட்டாய வாக்களிப்பு உள்ள இடங்களில் கூட, வாக்களிக்காமல் விடுதல் என்பது ஒரு ‘போராட்ட’, ‘ஒத்துழையாமை’ கைங்கரியமாகக் கையாளப்படுவதை நாம் அவதானிக்கலாம். இந்த இடத்தில், வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதைப்போன்று, வாக்களிக்காமல் விடுதல், ஓர் உரிமையா என்ற கேள்வி எழுகிறது.   

வாக்களிக்காமல் விடுவதும், ஓர் உரிமை என்று சிலர் வாதிடுவார்கள். இது பற்றிக் கருத்துரைக்கும் அரசறிவியல் ஆய்வாளர் லீஸா ஹில், “வாக்களிக்காமல் விடும் முறையை, ஓர் உரிமையாக அங்கிகரிக்க முடியாது; ஏனெனில், அது பொதுமைப்படுத்தப்பட முடியாது. அவ்வாறு செய்வது தற்போது நடைமுறையிலுள்ள, ‘ஜனநாயகம் ஒரு கூட்டு நன்மை’ என்ற அடிப்படையிலான அரசாங்கத்தின் வடிவத்தைக் குறைமதிப்பிடுவதற்கு உட்படுத்தும். வாக்களிக்காது விடும் உரிமை என்பதற்கு, முறையான சட்ட அல்லது தார்மீக அங்கிகாரம் இருக்கக்கூடாது. தன்னார்வ வாக்களிப்பு, நடைமுறையிலுள்ள இடங்களில் உள்ள பல குடிமக்கள், தங்களுக்கு ஏற்றவாறு வாக்களிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால், அவர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பதானது, ஒருபோதும் ஓர் உரிமையாகக் கருதப்பட முடியாது; கருதப்படவும் கூடாது” என்கிறார்.   

ஆகவே, தேர்தல் புறக்கணிப்பானது ஜனநாயக விரோதம் என்று சொல்லிவிடுவது எவ்வளவு சிக்கலானதோ, அதேயளவுக்கு வாக்களிக்காது விடுதல் ஓர் உரிமை என்று சொல்வதும் சிக்கலானது.  

ஆனால், இது வெறுமனே தத்துவார்த்த ரீதியில் மட்டும் அணுகப்படக்கூடிய விடயமல்ல; அரசியலில் நடைமுறை யதார்த்தம் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், அரசியலில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும் விளைவுகள் உண்டு. அரசியலில், தமது ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் ஒரு மக்கள் கூட்டம், அந்த முடிவுகளின் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டி வரும். ஆகவேதான், வெறும் தத்துவார்த்த அடிப்படையில் மட்டும் அரசியல் அணுகப்பட முடியாது.  

கடந்த 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சி மாற்றத்துக்காக அன்றைய பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டது. அதற்கு, அவர்களிடம் பலமான தத்துவார்த்த நியாயமொன்று இருந்தது.   

தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய தமது ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் பின்வரும் விடயத்தை குறிப்பிட்டிருந்தனர்: “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில், எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில், வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்; தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்; மிகக் கொடூரமான ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருப்பவர்; அவர் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.   

“மைத்திரியை எடுத்துக்கொண்டால், அவருக்கு முன்பாக ரணில் எனும் சமாதான முகமும், தமிழருக்கு சார்பானவர் என்ற முகமூடியும் போடப்படுகின்றது. ஆனால், அவருடன் அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாதக் கட்சிகளான ஹெல உறுமய, ஜே.வி.பி, சந்திரிகா போன்றோராவர்.  

“இந்தச் சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன? சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி, தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கொடுப்பேன் என்று வெளிப்படையாகக் கூறி, 62 சதவீதமான வாக்குகள் பெற்று ஆட்சிபீடமேறினார்.   

பின்னர், சமாதானத்துக்கான யுத்தம் நடத்தி, ஐந்து இலட்சம் மக்களைக் குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தார். ‘சத்ஜெய’, ‘எடிபல’, ‘ஜெயசிக்குறு’ போன்ற இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடத்தியவர். பல்லாயிரம் பேரைச் செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடுத் திருத்தலப் படுகொலைகள் உள்ளிட்ட, தமிழர் தேசத்தில் பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைக் கொலை செய்தவர். ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்த போது, ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுகளைப் பறித்து, சமாதான சூழலைக் குழப்பியவர்.   

“அன்று வாகரையிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் இலட்சம் இலட்சமாகக் கொல்லப்பட்ட போது, இந்த மைத்திரிபால, ராஜபக்‌ஷவுடன் கூடியிருந்து யுத்தத்தை நடத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும் ராஜபக்‌ஷ வையும் நியாயப்படுத்தியவர். இன்று ராஜபக்‌ஷவுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியேன் என்று தெளிவாகக் கூறியிருக்கின்றார். சமஷ்டித் தீர்வு கொடேன்; ஒற்றையாட்சியைப் பேணிப் பாதுகாப்பேன்; பௌத்தத்துக்கு அரசமைப்பிலுள்ளவாறு முன்னுரிமை என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார். எனவே, மைத்திரியின் ஆட்சியிலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லையெனின், தமிழர்கள் விடயத்தில், சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி என்ற பேச்சுக்கும் இடமில்லை.   

“இந்நிலையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது, எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் இன அழிப்பைத் தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும்”.  

தத்துவார்த்த ரீதியில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் தொடர்பான நிலைப்பாட்டில் மஹிந்தவும் ஒன்று, மைத்திரியும் ஒன்றுதான் என்ற இவர்களுடைய வாதத்தில் அர்த்தமிருக்கலாம். ஏனெனில், இலங்கையிலுள்ள எந்தப் பிரதான தேசியக் கட்சியும் தமிழர்களுடைய ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை; ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் மிகக் குறைவு.   

ஆகவே யார் வந்தாலும், கொள்கையளவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்ற வாதம், தத்துவார்த்த ரீதியில் பொருந்தினால்கூட, நடைமுறை யதார்த்தம் என்பது வித்தியாசமானது. மஹிந்தவின் ஆட்சியின் கீழிருந்த ‘வௌ்ளை வான்’ முதலான அடக்குமுறைகள் மைத்திரி ஆட்சியில் இல்லாது போயுள்ளன.   

இறுதி யுத்தத்துக்கான நீதி தொடர்பில் மஹிந்த, மைத்திரி ஆட்சியில் வேறுபாடுகள் இல்லாது இருந்தாலும், தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.   

இந்த நடைமுறை யதார்த்தம், மேற்குறித்த தத்துவார்த்த அணுகுமுறைக்குள் அடங்காது; ஆனால், யதார்த்த வாழ்வில் இது பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

ஆகவே, அரசியல் முடிவுகள் வெறும் தத்துவார்த்த அடிப்படையிலும், கடந்தகாலத்தை மட்டும் கருத்திற்கொண்டும் எடுத்துவிடக் கூடியதொன்றல்ல; மாறாக, அது நடைமுறை யதார்த்தம், அன்றாட வாழ்வியல் தேவைகள், எதிர்காலம் என்பவை குறித்த சிந்தனை, தந்திரோபாயம் என்பவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டியதாகிறது.  

2015இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்ட மேற்குறித்த நியாயங்கள், இன்றைக்கு கோட்டாவுக்கும் சஜித்துக்கும் கூடப் பொருந்திப்போகக் கூடியவைதான். ஆனால், மேற்குறித்த அதே காரணங்களுக்காக இந்தச் சூழலில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா, இல்லையா என்ற கேள்வி சிந்தித்து ஆராயப்பட வேண்டியதொன்றாகிறது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-புறக்கணிப்பு-அரசியலில்-யதார்த்தம்-வேறு-தத்துவார்த்தம்-வேறு/91-240263

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பா, தீமை குறைந்த தீயதா?

என்.கே. அஷோக்பரன்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வடக்கு-கிழக்கின் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, ஒரு காரியத்தைச் செய்துள்ளன. இந்தக் காரியத்தை, நடத்திவைத்தது, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.   

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது ஆதரவைப் பெற விரும்புபவருக்கு, தமிழ்த் தேசத்தைத் தனித்ததொரு தேசமாக அங்கிகரித்து, அதற்குத் தனித்துவமான இறைமையுண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கிகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணமொன்றைத் தயாரித்து, அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பித்துள்ளன.  

இந்த ஆவணத்தில், வடக்கு-கிழக்கு தாயக இணைப்பு அங்கிகாரம், தமிழ்த் தேச அங்கிகாரம், சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரம், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுதல், தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, வடக்கு-கிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், வடக்கு-கிழக்கில் அரச ஆதரவுடன் இடம்பெற்று வரும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், மகாவலி அபிவிருத்தி, மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டம் என்பவற்றின் போர்வையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் என்பவற்றுடன் ஏற்கெனவே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படுதல், வடக்கு-கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு சார்ந்து, நேரடியான வௌிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சட்டத்தடைகளை நீக்குதல், வடக்கு - கிழக்குக்கான அரச, தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை,  வடக்கு - கிழக்கைப் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி, அதன் அபிவிருத்திக்கான நிதியைக் கையாள்வதற்கு வடக்கு - கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில், பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதுடன், மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று, மூன்று மாதகாலப் பகுதிக்குள், தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த ஆவணத்தில் கையொப்பமிட இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை நிராகரிப்பது என்ற குறிப்பைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற அடிப்படையில், கையொப்பமிடாது இதிலிருந்து விலகி நிற்கின்றது என்று அறிவித்துள்ளது.   

தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை உள்ளடக்கிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, முதலாவது கோரிக்கையாகக் குறித்த ஆவணம் கொண்டுள்ள நிலையில், ‘இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை’ நிராகரிப்பது, ஏன் வௌிப்படையாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற யதார்த்தமான கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.   

அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் அரிதாக ஒன்றிணையும் தருவாயொன்றில், அடம்பிடிக்கும் குழந்தையைப் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடந்துகொள்வதானது, சிறுபிள்ளைத்தனமானது என்பது மட்டுமல்லாது, அதற்கெதிரான விமர்சனங்களை நியாயப்படுத்தும் செயலாகவும் அமைகிறது.   

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான, கோபதாப அடம்பிடிப்புகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைவிடாவிட்டால், தெற்கிலேயுள்ள ‘பிவித்துரு ஹெல உறுமய’ போன்ற, எவரும் முக்கியத்துவம் வழங்க விரும்பாத ‘கோமாளி’க் கட்சியாகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியத்துக்கான தூய்மையான விசுவாசத்தை, முன்வைப்பவர்களாக இருக்கலாம். ஆனால், அது அர்த்தமற்ற கோமாளிக் கூத்தாக மாறிவிடக்கூடாது. யதார்த்தம் உணர்ந்து, காலம் அறிந்து, அரசியல் பக்குவத்துடன் அவர்கள் செயற்பட வேண்டும்; இல்லையென்றால், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராத கதை’யாக அது ஆகிவிடும். நிற்க!  

குறித்த 13 அம்சக கோரிக்கைகள், திம்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். தத்துவார்த்த ரீதியான கோரிக்கைகளுடன், நடைமுறைப் பிரச்சினைகள் சிலவற்றையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் நிறைந்த ஆவணமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.   

தமிழர்களின் அரசியல் வரலாற்றில், இலங்கை அரசாங்கத்துக்குத் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைப் பத்திரங்களில் இந்தப் பத்திரமும் நிச்சயம் இடம்பெறும். அதேவேளை, இரண்டு பெரிய கட்சிகளை (கூட்டணியை) சார்ந்த, உண்மையான வெற்றி வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளரும், இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இங்கு வௌ்ளிடைமலை.   

தமிழ் மக்களைச் சுயநிர்ணயமுள்ள தனித்ததொரு தேசமாக அங்கிகரித்தலும் வடக்கு-கிழக்கைத் தமிழ் மக்களின் தாயகமாக அங்கிகரித்தலும், பிரதான கட்சிகளைச் சார்ந்த வெற்றி வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளரும் செய்யப்போகும் ஒரு காரியம் அல்ல; இந்த யதார்த்தம் இங்கு முக்கியமானது.   

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார் என்று சில செய்திகள் கூறுகின்றன. கோட்டா, இதனை ஏற்றுக்கொண்டிருந்தால்த்தான் அது ஆச்சரியம்.   

இந்த 13 அம்சக் கோரிக்கையை, தமிழ்க் கட்சிகள்  முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்கு அறிக்கை வௌியிட்ட தெற்கு மகா சங்கத்தின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஓமல்பே சோபித தேரர், “இந்த நாட்டிலுள்ள எந்தவொரு கட்சியும், இந்த அடிப்படைவாத, பயங்கரவாத, பிரிவினைவாதச் சிந்தனைக்கு, ஆதரவு வழங்க முடியாது. குறைந்த பட்சம், இந்தக் கோரிக்கைகளைக் கையில் எடுத்து வாசிப்பதற்குக்கூட, எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாது” என்று கூறியிருந்தார்.   

இதுவொன்றும் புதுமையான கருத்தல்ல; தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி’ என்பவை தொடர்பில், சிங்கள-பௌத்த பேரினவாதத் தேசியம், மிக நீண்டகாலமாகக் கொண்டுள்ள நிலைப்பாடு இது.   

ஆகவே, சிங்கள-பௌத்த தேசியவாதம், ஒருபோதும் திம்புக் கோட்பாட்டையோ, தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையோ, அது தற்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.   

ஏனெனில், தமிழ்த் தேசத்தின் கருத்துருவாக்கமானது, அவர்களுடைய சிங்கள-பௌத்த தேசக் கருத்துருவாக்கத்துடன் ஒன்றியைந்ததல்ல; ஆகவே, பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியை விரோதமூட்டும் செயற்பாடுகளை, எந்தப் பிரதான வேட்பாளரும் செய்யப்போவதில்லை.  

இந்தத் தேர்தலின் மூன்றாவது மாற்றாகக் கருதக்கூடிய, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூட, இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் மொத்தமாக ஆதரிக்கப் போவதில்லை.   
அண்மையில், ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்ட ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் கூட, “தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில், பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று குறிப்பிட்டதுடன், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம்; ஆகவே, அதனை எமக்குத் தாருங்கள் என்பதே, அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவும் வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கைத் தனி அலகாக அங்கிகரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.   

வடக்கு-கிழக்கு இணைப்பை நீக்குவதற்காக, வழக்கு வைத்து, அதனைச் சாதித்த கட்சி ஜே.வி.பி; ஆகவே, தமிழர்களின் ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி’ என்பவற்றை அவர்கள் கூட அங்கிகரிக்கப் போவதில்லை.  

மறுபுறத்தில், தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ‘அமைதி’ சாதிப்பதாகவே தெரிகிறது. இதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகக் கூடக் கருதலாம்.   

சஜித் இதை ஏற்றுக்கொண்டால், அது சிங்கள-பௌத்த தேசத்தை விரோதமூட்டும்; இதை அவர் நிராகரித்தால், அது தமிழ்த் தேசத்தை விரோதமூட்டும்; ஆகவே, சஜித் தனக்குப் போட்டியாகக் கருதும் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஏற்கெனவே தமிழர்கள் பெரிதும் விரும்பாத வேட்பாளராகக் காணப்படுகின்ற நிலையில், அவர் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளையும் நிராகரித்திருக்கிறார் எனும் போது, தமிழ் மக்கள் ‘தீயதில் தீமை குறைந்த தீயது’ என்ற அடிப்படையிலாவது, தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ரீதியில், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அமைதி காப்பது, அவரது தந்திரோபாயம் எனலாம். தமிழ் மக்களும் தவிர்க்க முடியாமல், இந்த நிலைப்பாட்டுக்கே வருவார்கள்.  

இந்த இடத்தில்தான், ‘தீயதில் தீமை குறைந்த தீயது’ என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் மீண்டும் எந்த நிபந்தனையுமின்றி, எழுத்துமூல அங்கிகாரமுமின்றி வாக்களிக்க வேண்டுமா? அல்லது, தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.   

தமிழர்கள் முன்பு இருப்பது, இந்த இரண்டு தெரிவுகள்தான் என்று நாம் எடுகோள் கொண்டால், இங்கு முக்கியத்துவம் பெறும் கேள்வியானது, தீமை குறைந்த தீயதுக்கு வாக்களிப்பதை விட, புறக்கணிப்பது, தமிழ் மக்களுக்கு எவ்வகையிலான அதிகரித்த நன்மையைத் தரப்போகிறது என்பதுதான்.   

தீமை குறைந்த தீயதைத் தேர்ந்தெடுக்கும் போது, தமிழ்மக்களின் பெரும் அபிலாசைகள் எதுவும் நிறைவேறாது விட்டாலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தீமைகளின் அளவு குறையும். உதாரணமாக, கடந்து ஐந்து வருடங்களாக வௌ்ளை வானில் கடத்தப்படுதல், காணாமல் ஆக்கப்படுதல் என்பவை இடம்பெறவில்லை என்பதுடன், அடக்குமுறை கணிசமானளவில் குறைந்துள்ளது என்பதை, மிகத்தீவிரமான தமிழ்த்தேசியவாதிகள் கூடத் தரவுகள் அடிப்படையில் மறுக்கமுடியாது.   

ஆகவே, புறக்கணிப்பு என்பது, தீமை குறைந்த தீயதை ஆதரிப்பதைவிட, தமிழ் மக்களுக்கு அதிக பயன்தரும் என்று, புறக்கணிப்பை ஆதரிப்பவர்கள் தமிழ் மக்களுக்குத் தரவுகள் அடிப்படையில் ஐயம்தௌிவுற எடுத்துக்காட்டும் வரை, புறக்கணிப்பு என்பது, தீமை குறைந்த தீயதுக்கு வாக்களிப்பதிலும் சிறந்ததொரு தெரிவல்ல என்பதே யதார்த்தமாக இருக்கும்.   

தேர்தல் புறக்கணிப்பு என்பது, ஜனநாயக விரோதமானது அல்ல; ஆனால், அது பயனறிந்து, நன்மையறிந்து, காலமறிந்து, தேவையறிந்து, சிந்தித்து, திட்டமிட்டு, தந்திரோபாய ரீதியாகப் பயன்படுத்தப்பட வேண்டியது.   

எல்லாவற்றையும் எதிர்க்கும் சிறுபிள்ளைத்தனமான பிடிவாத அரசியலின் ஆயுதமாகத் தேர்தல் புறக்கணிப்பு மாற்றப்பட்டால், அது, அதைக் கைக்கொள்ளும் மக்கள் கூட்டத்தைக் கோமாளிகளாக்கிவிடும்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புறக்கணிப்பா-தீமை-குறைந்த-தீயதா/91-240482

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.