Jump to content

மலேசியாவில் சூடு பிடிக்கும் விடுதலைப் புலிகள் விவகாரம்! முன்னாள் பிரதமர் புலிகள் ஆதரவாளரா?


Recommended Posts

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி. சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு அக்டோபர் 21 ஆம் திகதி விசாரணை செய்ய உள்ளது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்.

இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதானவர்களில் இருவர் அந்நாட்டின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும், இருவரும் நாட்டை ஆளும் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

எனினும் மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலேயே விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்துள்ளது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், மலேசிய ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பொய்யான செய்திகள், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கட்சி மீது பழி சுமத்தப்படுவதாகச் சாடி உள்ளார்.

அமெரிக்கா, இஸ்‌ரேல், விடுதலைப் புலிகள் ஆகிய சர்வதேச சதிகாரர்களுடன் ஜனநாயக செயல் கட்சிக்கும் தொடர்புள்ளது என்று மலேசிய எதிர்க்கட்சியான ´பாஸ்´ (PAS) தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டானது பொய்யான, வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றச்சாட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்படியானால் நஜிப்பும் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று தமது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஜனநாயக செயல்கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே முன்பு கூட்டணி இருந்தது. ஏன் அப்போதெல்லாம் எங்கள் கட்சிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்புள்ளதாக பாஸ் கட்சித் தலைமை ஏன் புகார் எழுப்பவில்லை?" என்பதும் கிட் சியாங்கின் கேள்விகளில் ஒன்றாகும்.

கடந்த 1976 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், அதன் பிறகான 43 ஆண்டுகளில் அந்த அமைப்புக்கு ஜனநாயக செயல் கட்சி ( ஜசெக ) ஆதரவு தெரிவித்ததாக ஒருமுறை கூட குற்றம்சாட்டப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 1983 தொடங்கி 2009 வரை இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த வேளையில், ஜசெக மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளிலும் அந்த அமைப்பினரோடு எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

"இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜசெக மீது திடீரென பாஸ் கட்சியின் ஆதரவுப் பத்திரிகை ஏன் குற்றம்சாட்டுகிறது. தற்போது செயல்பாட்டில் இல்லாத எல்.ரி.ரி.ஈ, இஸ்ரேல், அமெரிக்காவுடன் ஜசெகவையும் தொடர்புப்படுத்தி அப்பத்திரிகை ஏன் செய்திகளை வெளியிட வேண்டும்?" என்றும் கிட் சியாங் மேலும் பல கேள்விகளை அடுக்கி உள்ளார்.

பொதுமக்களுக்கு உதவி செய்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று தவறாகக் கருதப்படுவது சரியல்ல என்று மலேசிய பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தகையவர்கள் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டுபவர்களாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

"இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்களில், சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எனவே தான் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் மலேசியர்கள் பலர் நிதி உதவி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உதவி செய்தவர்களை தவறாக நினைக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதாகி உள்ள ஜனநாயக செயல்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அதே கட்சியை சேர்ந்த ராம் கர்ப்பால் சிங், ஆர்எஸ்என் ராயர் ஆகிய வழக்கறிஞர்களை நியமித்துள்ளது ஜசெக தலைமை.சட்டமன்ற உறுப்பினர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது தவறு என்று இவர்கள் வாதிட உள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், எந்தவித விசாரணையும் இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படலாம்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் (மஇகா) கைதான சாமானியர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், தங்களுக்கு 28 நாட்கள் அவகாசம் உள்ளது என்று பொலிஸ் நிதானப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது எனவும் மஇகா உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி உள்ளன.

விடுதலைப் புலிகள், ஜாகிர் நாயக் விவகாரங்களை தொடர்புப்படுத்தி வெளிப்படையாகப் பேசி வருகிறார் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி.

இந்நிலையில், இவர் மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார் ஜாகிர் நாயக்.

தம்மை பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவிக்க ராமசாமிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமது மனுவில் ஜாகிர் நாயக் வலியுறுத்தி உள்ளார்.

இதற்காக துணை முதல்வர் ராமசாமிக்கு, ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது ஜாகிர் நாயக் தரப்பு.மலேசியாவின் பாதுகாப்புக்கு தாம் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, தம்மை ஏளனப்படுத்தி, மோசமாக சித்தரித்ததாகவும் ராமசாமி மீது ஜாகிர் நாயக் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தை மதபோதகர் ஜாகிர் நாயக்குடன் ஒப்பீடு செய்வது ஏன்? என பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ முஜாஹித் யூசோஃப் கேள்வி எழுப்பியுள்ளார்."புலிகள் விவகாரம் குறித்துப் பேசும்போது எதற்காக ஜாகிர் நாயக் பெயரை இழுக்கிறார்கள்.

அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை."தீவிரவாத தொடர்புகள் இருப்பின் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதவர் எனும் பாகுபாடு ஏதுமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தகுந்த ஆதாரங்கள் இருப்பின் இதற்காக யாரை வேண்டுமானாலும் பொலிஸார் தடுத்து வைக்கலாம்," என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசியாவில் புத்துயிரூட்ட சிலர் முயற்சிப்பதாக மலேசிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் இருப்பதாகவும், நிதி திரட்டுவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த துணை முதல்வர் ராமசாமி,

ஜாகிர் நாயக் விவகாரத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.இதை அடுத்தே புலிகள் விவகாரத்தில் மதபோதகர் ஜாகிர் நாயக் பெயரை இழுப்பது சரியல்ல என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் கூறியதாகக் கருதப்படுகிறது.

ஜாகிர் நாயக்கின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

ஜாகிர் நாயக்கை ஏளனப்படுத்தவும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தமது தரப்பில் எத்தகைய காரணங்களும் இல்லை என்கிறார் ராமசாமி."பின்வாசல் வழியாக மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றுள்ள ஒருவர், இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த என் மீது வழக்குத் தொடுக்கிறார்.

பல்வேறு இனங்கள், மதங்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வையும் பதற்றத்தையும் அவர் ஏற்படுத்தி உள்ளார். என்னை நீதிமன்றத்திற்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அவருக்கு தைரியம் அளித்துள்ளனர்.

எனவே நீதிமன்றத்தில் சந்திப்போம். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன," என்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை முதல்வர் ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் குறித்து தாம் கருத்து தெரிவிப்பதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ராமசாமி, தம்மிடம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்கப் போவதாகக் கூறினார்.

"பங்களாதேஷ், இலங்கையில் நிகழ்ந்துள்ள பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. மேலும், கிளந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் தெரிவித்த இனவாதக் கருத்துக்கள் குறித்தும் தெரிவிப்போம்.""பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. எனினும் அந்நாட்டைத் தவிர வேறு எந்த நாடும் அவரை விரும்பவில்லை," என்று துணை முதல்வர் ராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/malaysia/80/129798

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.