Jump to content

ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை பறித்துக் கொள்ள நினைக்கும் தமிழ் தரப்பினர்கள்..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சஜீத் தோல்வியடையும் வேட்பாளர் என்று தெரிந்து கொண்டதன் பின்பே
 எந்தத் தரப்பும் ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான நிபந்தனைகளுடனான 13அம்ச கோரிக்கையை முன்வைத்து,  எந்த வேட்பாளருக்கும் நேரடி ஆதரவை தவிர்க்கும்  நோக்கத்துடன்,  ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்கள் தமிழ் அரசியல்வாதிகள். 
 
தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடானது, யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினர்களுடன் எவ்வகையிலும் கூட்டுச்சேர்ந்து பயணிக்க முடியாது என்பதேயாகும். அதன் காரணமாகவே மஹிந்தவுக்கு எதிரான அணியினருடன் பயணிப்பதே அவர்களுக்கு சிறந்ததாக அமைந்திருந்தது. அதனால்தான் 2010லும், 2015லும் மஹிந்த அணியினருக்கு எதிரான அணியினரோடு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பயணித்திருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பம் 2015ல் அவர்களுக்கு கைகூடியிருந்தது.
 
2015ல் அவர்கள் நினைத்தமாதிரி ஆட்சி அமைந்திருந்தாலும் அந்த ஆட்சியினரோடு பங்காளிகளாக மாறாமல் வெளியேயிருந்து ஆதரவு தெரிவித்து வந்தார்கள். தங்களுக்கு விருப்பமான ஆட்சியாக இருந்தாலும் அவர்கள் விரும்பிய முற்றுமுழுவதுமான தீர்வுகளை இந்த ஆட்சியின் மூலம் அவர்களினால் பெறமுடியாமல் போனது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் அது பெரிய ஏமாற்றத்தையே தந்திருந்தது. இருந்தாலும் ஆளும் கட்சியான ரணில் அணியினருக்கு ஆதரவு வழங்குவதிலும் அவர்கள் பின்னிற்கவில்லை. எந்த உரிமையையும் பெறாத தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது தமிழ் மக்களுக்கு இவர்களின் மேல் கோபத்தையே ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ரணில் அரசாங்கம் திருப்தியான முறையில் ஆட்சியை நடத்தவில்லை என்பது நாட்டு மக்களுக்கும், அதேபோன்று அவர்களது கட்சிக்காரர்களுக்கும் தெரிந்த ஒன்றாகவே இருந்துவந்தது. அதன் காரணமாகவே பிரதமர் ரணில் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்குவதற்குகூட அவர்கள் பயந்திருந்தார்கள். அதன் காரணமாகவே சஜீத் பிரமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டிய சூழ்நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த ஆள்மாறாட்ட போராட்டமானது ஏன் ஏற்படுத்தப்படுகின்றது என்பது நாட்டு மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல என்கின்றபோது, சஜீத் என்பவரும் படுதோல்வி அடைவார் என்பது நிதர்சனமான உண்மையாகி வருகின்றது.
 
இந்த நிலையை கருத்தில் கொண்ட தமிழ் தரப்பினர் தோல்வியடையப்போகும் சஜீதுக்கு பகிரங்கமாக ஆதரவு பண்ணி தாங்களும் தோல்வின் பங்காளர்களாக மாறுவதைவிட பேசாமல் இருந்துவிடுவதே மேல் என்று சிந்தித்தவர்களுக்கு கிடைத்த யோசனைதான் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத 13அம்ச கோரிக்கை என்ற விடயமாகும். இதன் மூலம் சஜீதும் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார், கோத்தா அணியும் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேநேரம் தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் காணவும் மாட்டார்கள். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என்ற சீலத்துக்கு அமைய அவர்களின் திட்டம் கட்சிதமாக நிறைவேற்றி  வருகின்றார்கள்.
 
அதேநேரம் கோதாபாயா ஆட்சிக்கு வந்தால் எட்ட நின்றே தங்களது போராட்டங்களை தொடங்குவதும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது எதுவித கூச்சமும் இல்லாமல் கோதாவுடன் நேர்க்குநேர் சந்தித்து பேசுவதற்கும் அது காரணமாகவும் அமையும். அப்படியில்லாமல் சஜீதுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துவிட்டு சஜீத் தோற்றுவிட்டால், பிறகு வெற்றியடைந்த கோதாவுடன் எப்படி தலைநிமிர்ந்து பேசுவது என்ற இக்கட்டான நிலைமையும் தோன்றும். இந்த நிலைமையானது எதிர்காலத்தில் தங்களுக்கு பாதகமாகவே மாறிவிடும் என்பதோடு நாங்கள் ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள்தானே என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிடும். இப்படியான நிலைமையானது தங்களுடைய நீண்டகால போராட்டத்தின் லட்சியத்தை கொச்சைப்படுத்தும் செயலாகவும் பார்க்கப்படும் என்ற என்னம் தமிழ் தரப்புக்கு இருந்தே வருகின்றது. 
 
ஆகவே யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்துவிட்டு அதன்பின் வெற்றியடையும் வேட்பாளருடன் பேசுவதற்கு எந்த சங்கோஜமும் ஏற்படபோவதில்லை. அதனால் யாருக்கும் பகிரங்க ஆதரவு கொடுக்காமல் இருப்பதற்காக எந்த வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளாத  13அம்ச கோரிக்கை என்ற தடைக்கல்லை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
 
ஆகவே சஜீத் நூறுவீதம் வெற்றியடைவார் என்று ஊர்ஜிதமாகியிருந்தால் நிச்சயமாக தமிழ் தரப்பினர் இப்படியான கடுமையான நிபந்தனைகளை விதித்து சஜீதை இக்கட்டான நிலைக்கு தள்ள நினைத்திருக்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய விடயம் என்னவென்றால் சஜீத் என்பவர் வெற்றியடைய முடியாத வேட்பாளர் என்பதை தமிழ் தரப்பினர் புரிந்துதான் செயல்படுகின்றார்கள் என்பதுவே..!
 
தமிழ் அரசியல்வாதிகளின் ராஜதந்திரம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்போனதுதான் நம் சமூகத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்பதே உண்மையாகும்.
 
எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.