சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

Robert-Destro-300x199.jpg

மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான றொபேர்ட் டெஸ்ரோ தெரிவித்துள்ளார்.

இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலரான றொபேர்ட் டெஸ்ரோ, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாக இருக்கும் இந்த நேரத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயரையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும், குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அமெரிக்க சட்டத்தின் கீழ், சிறிலங்கா இராணுவத்துடனான, இருதரப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று, சிறிலங்கா அதிபரிடமும், ஏனைய மூத்த அதிகாரிகளிடமும் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.

அதேவேளை, சவேந்திர சில்வா மற்றும் ஏனைய குற்றவாளிகளில் பொறுப்புக்கூறலானது, கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், பெரியளவிலான இராணுவ ஒத்துழைப்புக்கும் வழிவகுக்கும்.

சிறிலங்காவின் நீண்டகால அமைதி,  செழிப்பு, மற்றும உறுதிப்பாட்டுக்கு, மனித உரிமை பதிவுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் என்பது மிக முக்கியமானதாகும்.

சிறிலங்கா அடுத்த மாதம் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது.

சிறிலங்காவின் அடுத்த அரசாங்கம் மனித உரிமைகள் மீதான தனது கவனத்தை அதிகரிக்கும் என்றும், வளர்ந்து வரும் நல்லிணக்க நிறுவனங்களை மேம்படுத்தும் என்றும், நிலைமாறு கால நீதிக்கான அனைத்து வழிமுறைகளையும் செயற்படுத்தும் என்றும் அமெரிக்கா நம்புகிறது.

அத்துடன் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் உறுதி செய்ய வேண்டியது முக்கியமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.

https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add