Jump to content

பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி

1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான கட்டுரைகள் தன்னிகரற்றவை. தமிழ்க் கவிதைக்கு அவரளித்த கொடையாக அவை விளங்குகின்றன.

பிரமிள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக இருந்து வந்தது. குறிப்பாக அவரது கவிதைகள் குறித்து. சென்ற ஆண்டு 2018ல் பிரமிளின் மொத்த எழுத்துகளையும் கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், உரையாடல்கள், ஆன்மீகம் என ஐந்து பிரிவுகளில் ஆறு பெரும் தொகுப்பாக அவரது பதிப்பாளர் கால.சுப்பிரமணியம் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஓரளவு வாசித்த பின்னும் முன்னெட்டு வைப்பதில் ஒரு தயக்கம் இருந்தது. 6 தொகுப்புகளையும் முழுமையாய் வாசித்து விட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தும் போது எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது அத்தனை சீக்கிரம் ஆகக்கூடிய காரியமில்லை என்றே தோன்றுகிறது. எனவே அவ்வப்போது எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன்.

49544905_2024832094275336_18314331365845

ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் வரலாற்றில் மனிதர்களின் சுவடுகளை அழிக்கும் பழக்கம் இருந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு புகைப்படம் இருந்தால் கூட அதில் அந்த நபர் இருந்த இடத்தை மட்டும், அப்படி ஒருவர் இருந்த தடமே இன்றி எடுத்துவிடுவார்களாம். எல்லா ஆவணங்களிலும், செய்திகளிலும் அவர் பெயர் நீக்கப்பட்டுவிடும். அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை. இதற்குச் சற்றும் குறையாத ஒன்றுதான் பிரமிளுக்கு நடந்ததும் நடப்பதுவும். ஒரு சிறு உதாரணம், பெரிய எழுத்தாளர்கள் கொடுக்கும் இலக்கிய முன்னோடி வரிசை நூலை எடுத்துப் பாருங்கள், பிரமிள் என்று ஒருவர் கண்ணுக்குத் தட்டுப்படவே மாட்டார். முதுபெரும் எழுத்தாளர்கள்களின் கட்டுரைத் தொகுப்பில் அவர் எங்காவது இருக்கிறாரா என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும். கடைசிவரை, தனது தீட்சண்யமான மதிப்பீட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் தனியொருவராக இருந்து மறைந்தவர் பிரமிள். உள்ளும் வெளியும் ஒன்றாக இருந்தவர். தான் என்னவாக இருந்தாரோ அதையே எழுத்தில் பிரதிபலித்தவர்.

பிரமிள் தீவிரமாக இலக்கிய விமர்சனத்தில் இயங்கியது 1960-75 வரையான 15 ஆண்டுகள். அதற்குப்பின் அவரது பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்வினைகளாக, உட்சிக்கல்களைப் பிரஸ்தாபிப்பதாக அமைந்துவிட்டன. தனது மதிப்பீட்டு இயக்கத்தை நிலை நிறுத்த அத்தகு எதிர்வினைகள் அவசியம் என்று அவர் கருதினார். மேலும் தான் ஆரம்பத்தில் கனவுகண்ட இலக்கிய வளர்ச்சி அடுத்தகட்டத்துக்கு நகராமல், ஒருவித வணிகத்தன்மையோடு சற்று கீழிறங்கிய கதியில் செயல்பட ஆரம்பித்த போது அவரது எதிர்வினைகள் கடுமையாக இருந்தன. ஜாதீய ரீதியான குழுக்கள், அதன் அடிப்படையில் அமைந்த மதிப்பீடுகள் போன்றவற்றை தீவிரமாக, பட்டவர்த்தனமாக, திரும்பத்திரும்ப விமர்சித்தார். இப்போதெல்லாம் அது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாய் இருக்கிறது.

எழுத்து இதழில் பிரமிள் தொடர்ந்து எழுதி வந்தாலும் இதழாசிரியர் சி.சு.செல்லப்பா அதன் சாரத்தை உணர்ந்து கொண்டவராகத் தெரியவில்லை. இந்த ஏக்கம் நிச்சயம் பிரமிளுக்கு இருந்திருக்க வேண்டும். 1995ல், ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் (சிற்பி), பிரமிளுக்கு எழுதும் ஒரு கடிதத்தில், தமிழ்க் கவிதைகளைத் தொகுக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் பிரமிளின் கவிதைகளையும் சேர்த்திருப்பதாகவும் மேலும் சில விபரங்கள் வேண்டும் எனக் கேட்கிறார். பிரமிள் அதற்குப் பதிலாக, ஏன் அனுமதி பெறவில்லை எனக் கேட்க, அதற்கு அவரது பதில்: ‘அன்பிற்கினிய பிரமிள் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். தங்கள் முகவரி உடனடியாக என்னிடம் இல்லாதிருந்ததாலும் விரைவில் தொகுப்பைத் தர வேண்டியிருந்ததாலும், உங்களோடு தொடர்புகொள்ள இயலவில்லை. பேரலைகளைத் தமிழ்க் கவிதையிலும் சிந்தனையிலும் எழுப்பிய தங்கள் கவிதைகளைத் தேர்ந்து கொள்ளாமல், நவீனத் தொகுப்பு சாத்தியமாகுமா? ‘E=Mc² காலம் முதல் உங்கள் ஆராதகன் அல்லவா நான்? இது அரசுப்பணி என்பதை விட ஒரு வரலாற்றுப்பணி என்பதே பொருத்தமாகும். அதிகாரம் இல்லை. ஒரு முள்முடிச் சுமையே இது. அருள்கூர்ந்து தங்கள் அன்பு மனத்தால் தகவல் தந்துதவ வேண்டுகிறேன். இப்போது உங்கள் முகவரி இருப்பதால், சென்னை வரும்போது நேரிலும் சந்திப்பேன்…’

1995ல் வந்த கடிதம் இது. அந்த ஆண்டில் சி.சு.செல்லப்பாவுக்கு ‘விளக்கு’ விருது நியூயார்க்கில் வழங்கப்பட்டது. அதன் அறிவிப்புக் கடிதங்களிலோ, அழைப்பிதழிலோ முக்கிய எழுத்தாளர்கள் பட்டியலில் பிரமிள் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால் தனியாக அமைப்பாளரை அனுப்பி பிரமிளுக்கு அழைப்பு விடுக்கிறார், செல்லப்பா. அதன்பின் மூன்றுமுறை செல்லப்பாவைச் சந்திக்கிறார் பிரமிள். செல்லப்பா எழுத்து காலகட்டத்துக்குப் பிறகான விவாதங்கள், சித்தாந்தப் பூசல்கள், ஜாதிய மனோபாவங்கள் எதையும் வாசித்து அறியவில்லை என்பதை பிரமிள் உணர்கிறார். இது உண்மையில் அவருக்குப் பெரும் வருத்தத்தைத் தந்திருக்க வேண்டும். மேற்கண்ட வாசகரின் கடிதத்தின் நகலை செல்லப்பாவுக்கு அனுப்பி வைக்கிறார். ஒரு வாசகர் உணர்ந்து கொண்டதை 8 ஆண்டுகளாக தனது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும் நேரடிப் பழக்கமும் உள்ளவர் உணரவில்லையே.

மரபுக்கவிதையிலிருந்து தட்டுத்தடுமாறி புதுக்கவிதை வடிவமெடுத்து வந்தபோது, வடிவம், இலக்கணம் தாண்டி புதுக்கவிதை கவிதையாக பரிமளிக்கச் செய்யும் அம்சங்களை தனது ஆரம்பகாலக் கட்டுரைகளில் பிரமிள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

சொல்லும் நடையும் (எழுத்து இதழ் 16, ஏப்ரல் 1960)

சொல்

“சொற்களைப் பற்றிய ரகஸ்யம் என்னவென்றால், அர்த்தத்திற்குப் பிறகு தான் சொல் பிறந்தது”.

அமைப்பியம், பின் அமைப்பியம் சொற்களைச் சுற்றி மையம் கொண்டு பேசுகின்றன. அனைத்தையும் புறவயமாகப் பார்க்கும், இலோகாயவாதம் தனது எல்லைகளை முடிந்தவரை விஸ்தரித்துப் பார்க்கிறது. உள்ளே நனவிலி வரைக்கும் வந்திருக்கிறது. அதைத் தாண்டி அதனால் நுழைய முடியவில்லை. ஒரு வகையில் சொல்லுக்கு முன் அர்த்தம் என்பது அரிஸ்டாடிலியம் தான். (குரங்கு என்ற வடிவத்துக்கு முன் குரங்கு என்ற எண்ணமிருந்தது).

அறிவு பரிசுத்தமானது. கடவுளின் கரங்களைப் போல, நன்மை தீமை அற்றது. அந்த ஜ்வாலையை மனம் விருப்பப்படி பற்றவைக்கிறது. இது குணமாகிறது. பற்றும் நெருப்புக்கு விறகாய் ஐம்புலன்கள். விறகுகளையும் நெருப்பையும் பிரித்தறிதல் சிரமம். இதுதான் சொல்லையும் அர்த்தத்தையும் பிரித்துணர்வதில் உள்ள சிக்கல். சொல்லுக்கு முன்பே அர்த்தமிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டியதே இல்லை. அது உணரத்தக்கது.

”வார்த்தைக்கு அர்த்தம் இல்லை. அர்த்தங்கள் பலவற்றைச் சேர்த்து மனிதன் சிந்திக்கும்போது கற்பனையிலிருந்து பிறந்த சப்த ரூபம்தான் பாஷை. ஒரு பாஷையில் ஒரு சப்தம் ஒரு கருத்தைச் சொல்ல, மற்றொன்றில் அதே போன்ற சப்தம் இன்னொரு அர்த்தத்தைச் சொல்லுகிறது. உண்மையில் வார்த்தைக்கு அர்த்தம் என்று ஒன்று இருந்தால் அது, சர்வலோக உண்மை போல ஒரே அர்த்தத்தைத்தான் மொழிகள்தோறும் சொல்லவேண்டும்”

நடை

”வினைச்சொல்லில் தமிழ் வசனம் முடிவதால், தொடர்ந்து ஒரு பொருளைப் பற்றி விவரிக்கும்போது, அதைத் தொடரும் வினைச்சொற்கள் வேறுபட்டாலும், பொருளின் இருப்பு ஒரே காலத்தைப் பற்றியது என்ற காரணத்தால், ஒரே மாதிரி, வினைச்சொற்கள்-வசனங்கள்- முடிகின்றன. வினைச்சொல்லைத் தொடரும் காலக் குறிப்பான அசைச் சொல், தமிழில் நீளமாக இருக்கிறது.”

மொழிபெயர்ப்பாளர்களுக்கு மேற்சொன்ன கருத்து மிகவும் பரிச்சயமானது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கையில் நேரும் சிரமமிது. ஆங்கிலத்தில் குறைவான சொற்களில், எழுத்துக்களில் விசயத்தைச் சொல்லிவிட முடிகிறது. தமிழில் வினைச்சொல்லில் வாக்கியங்கள் முடிவடைகின்றன. அதில் காலமும் பொருதுகிறது. இதையே பாருங்கள், ’முடிவடைகின்றன’ என்பதில் 8 எழுத்துக்கள். ஆங்கிலத்தில் ends. I ate – நான் சாப்பிட்டேன். 4க்கு 8. சில வாக்கியங்களை தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றும் போது ஆங்கிலத்தை விடச் சுருக்கமாகத் தமிழில் சொல்லிவிட முடியும். பெரும்பாலும் உரையாடல்கள், சிறு வாக்கியங்களில் தமிழ் வாக்கியம் நீண்டு விடுகிறது. நடை சார்ந்து பேசும்போது பிரமிள் “கிறது, கிறேன், கின்றது” என வினையுடன் நீண்டு முடியும் தன்மையைக் குறித்து அலசுகிறார்.

“Sit என்ற ஆங்கில வினைச்சொல்லுக்கு, நிகழ்காலக் குறிப்பாகத் தொடர்வது ஒரு s தான்; sits – ‘இருக்கிறான்’.”

’sit=இரு’ என்று பொருந்தும்போது sit உடன் ஒரு s சேர்ந்து நிகழ்காலக் குறிப்பாக sits என்று சொல்லிவிட முடியும்போது தமிழில் “கிறான்” என்று மூன்று எழுத்துக்கள் சேர்க்கவேண்டியிருக்கிறது. இது இரு என்ற இரண்டு எழுத்துக்களையும்விட அதிகமாகிவிடுகிறது. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பார்க்கிறான் என்பதில், வினையுடன் காலமும் பாலும் சொல்லப்பட்டு விடுகிறது. ஆங்கிலத்தில் இதைச் சொல்ல ‘He looks’ என்று எழுதவேண்டும். எனினும் பிரமிள் குறிப்பிடுவது “தமிழ் வேகம் நிறைந்த பாஷை அல்ல. ரொம்ப மேன்மையானது; ஆனால் நுட்பமானது. அதுக்கு வேகம் கொடுக்கிறதில் வெற்றி கண்டவன் கம்பன். அப்புறம் இங்கே பாரதி பாட்டுக்கு வந்து நின்று சுற்றிப் பாருங்கள்; தமிழின் பழைய இயல்பான மென்மை, எப்படித் திருகி வீறுபெற்று வேகம் அடைந்து வந்திருகிறக்தென்று புரியும். எவ்வளவு வேகம் பெற்றும், இன்னும் தமிழில் வினைச்சொல் முதிரவில்லை. காரணம், ‘கின்றது, கிறது, கின்றனர், கின்றன’ என்ற இழுபடுகிற அசைகள்தான்.”

இப்போதெல்லாம் தமிழில் எண்ணி 50 வார்த்தைகள் தெரிந்தால்கூடப் போதும். இங்கே மண்ணின் மைந்தராய் மாறிவிட முடியும். பெயர்ச்சொற்கள் எல்லாம் ஆங்கிலமாகி விட்டன. அதை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. செய்ய வேண்டியதெல்லாம், வினைச்சொற்களைக் கற்றுக் கொள்வதுதான். “call எடு, injection போடு, phone போடு, on பண்ணு, work முடி, walk போலாமா” இப்படி வினைச்சொற்கள் மட்டும் அநாதையாய் கோவணத்துண்டாய் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் சுஜாதாவின் எழுத்து நடை நினைவுகூரத்தக்கது. இயல்பாகவே minimalism மீது அவருக்கு ஈடுபாடு உண்டு. அவரது சிறுகதைகளில் கூட தேவையின்றி ஒரு சொல்லும் இருக்காது. வினைச்சொல்லில் முடிவதுதான் தமிழின் அழகு என்றாலும் ‘கிறது’ என முடியும் இடங்களில்,  இலக்கண வரம்புகளை மீறுவதாய் இருந்தாலும் அதை வேறுமாதிரி முடிக்க விழிப்புடன் புதுமையாக முயற்சிக்கச் சொல்கிறார் பிரமிள்.

இதற்கு அடுத்த எழுத்து 17வது இதழில் ‘கவிதை வளம்’ என்ற தலைப்பிலான பிரமிள் எழுதிய கட்டுரை வருகிறது. இங்கு அதை விரிவாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டுரையில் புதுக்கவிதை மீதான விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிறார். கவிதையில் உயிர் இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, இசை நயம், யாப்பு அவசியமில்லை என்று வாதிடுகிறார். ஆரம்பம் முதலே பண்டித்யமும் படைப்பும் இருவேறாகப் பிரிந்திருப்பதை பிரமிள் சுட்டிக்காட்டி வருவதற்கு இந்தக் கட்டுரை ஒரு சான்று. பிற்பாடு கோட்பாடுகளும் கோட்பாட்டு விமர்சனமும் பெருகியபோது இந்தப் போக்கை பண்டித்யத்துடனேயே அவர் இனம் காண்கிறார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது புதுக்கவிதை என்ற சொல்லே 1959ல் முதன்முதலாக க.நா.சுவினால் தான் பயன்படுத்தப்பட்டது.  அதற்குமுன் வசன கவிதை (பிரமிள் சுயேச்சா கவிதை என்கிறார்) என்று அழைக்கப்பட்டு வந்தது. New Verse என்பதை க.நா.சு புதுக்கவிதை என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்த, அப்பெயர் நிலைத்துவிட்டது. 60களில் தான் புதுக்கவிதை தனக்கான பாதையைத் தேர்ந்து பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

39397614_1817810181588270_28310358106465

சுயேச்சா கவிதை – எழுத்து இதழ் 18, 1960

இந்தக் கட்டுரை புதுக்கவிதை குறித்து எழுதப்பட்டவற்றில் முக்கியமான ஒன்று. இந்தக் கட்டுரையில் ஒரேயொரு இடத்தில் புதுக்கவிதை என்ற வார்த்தையை பிரமிள் உபயோகிக்கிறார். மற்றபடி இந்தப் புதுவடிவக் கவிதைக்கான பெயர் முடிவாகாத நிலையிலேயே இருந்திருக்கிறது. சுயேச்சா கவிதை (தன்னிச்சைக் கவிதை) என்பது புதுக்கவிதைக்கு பிரமிள் சூட்ட விரும்பிய பெயராக எடுத்துக் கொள்ளலாம். பிரமிள் தரும் கீழ்க்கண்ட வாதங்கள் குறிப்பிடத்தக்கவை.

1. ’அடிமன’ உத்வேகத்தால் பாதிக்கப்பட்ட வார்த்தை விழுக்காட்டினால் தான் கவிதை சாத்தியம்.

2. வசனம் விஷயத்தொடர் உள்ளது. கவிதையோ உணர்ச்சித் தொடரை முக்கியமாக்கி வளர்வது. வசனத்தில் உணர்ச்சி கையாளப்படும் போதும் முக்கியத்துவம் விசயத்துக்குத்தான். கவிதையில் விஷயம் கையாளப்பட்டாலும் பிரதான்யம் உணர்ச்சிக்கு.

3. வசனத்திலும் சரி, கவிதையிலும் சரி உவமையே இலக்கிய நரம்பைக் கணிப்பது. பஞ்சேந்திரியங்களைப் பாண்டவராக்கி, சிற்றின்பத்தைத் திரௌபதியாகவும், கர்மாவில் தூண்டும் மாயைகளை துரியோதனாதியராகவும் ஆத்ம சொரூபினியாய் இந்திரியங்களை உயர்னெறியில் திருப்பும் சூட்சுமதாரியை கிருஷ்ணனாகவும் பாவித்து-உவமைப்படுத்திப்-பார்த்தால், பாரத காவியமே ஒரு முழு உவமை… ஒரு பிரம்மாண்ட உருவகம்.

4. கவிதையில் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லப்படும் மின்னடிப்புகளைப் பிசிர்பிசிராக்கி வரிபிளந்து சொல்வது வசனம். அப்படிச் சொல்லுகையில் உணர்ச்சியை நிச்சயம் கோட்டைவிட நேரும்.

எழுத வேண்டும் என்ற இச்சை எங்கிருந்து வருகிறது? உணர்வுகளை எல்லோரும்தான் வெளிப்படுத்துகிறார்கள், அனுபவிக்கிறார்கள் ஆனால் ஏன் ஒருவன் அதை வார்த்தைப்படுத்தி பொறித்து வைக்கிறான்? ஒரு குழந்தைகூட உடல்மொழியால் உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் செய்கிறது. பிரமிள் உணர்ச்சிகள் என்பதற்கும் உள்ளேபோய், ‘உத்வேகம்’ என்ற வார்த்தையைக் கண்டடைகிறார். அதை கவிதை வரிகளில் கண்டுணரலாம். அந்த உத்வேகமே எழுதத் தூண்டும் ஒன்றாக இருக்கிறது. எல்லாப் படைப்புக்கும் அடிப்படை உணர்வல்ல. உணர்வையும் தாண்டி நிற்கிற மானுட இனத்தின் ‘உத்வேகம்’. தான் இருக்கிறேன் என்று தனது உடலின் அத்தனை கூறுகளிலும் பறைசாற்றிக்கொள்ளும் ஒரு செடியைப் போல நிகழ்கிறது படைப்பு.

கதை கட்டுரைகளில் வாக்கியங்கள் எத்தனை கவித்துவமாக அமைந்தாலும் அதன் மையம் சொல்லவந்த விசயத்தை நோக்கியது. கவிதையையும், கதை கட்டுரையையும் வாசிக்க ஒரு கால நீட்சி தேவையாய் இருக்கிறது. இந்தக் கால அவகாசத்துக்குள், ஒலிக்குறிகளால் அமைந்த எழுத்துக்களால், சந்தத்துடன் அமைந்த வார்த்தைகளைக் கொண்ட ஒன்று கவிதையாகாது. அவ்வாறே, வெறுமனே உணர்ச்சியை வார்த்தைகளில் கொட்டுவதும் அதைக் கவிதையாக்குவதில்லை. உணர்வுகளையும் ஒலிநயத்தையும் தாண்டி கருத்தும் இணைகையில் கவிதையாகிறது. டெர்ரி ஈகிள்டன் தனது ‘கவிதை என்றால் என்ன?’ என்ற புத்தகத்தில் கவிதைக்கு உள்ளுறை நீதி அவசியம் என்ற கூற்றை வலியுறுத்துகிறார். நீதி என்பது நாம் வழக்கமாய்ப் பொருள் கொள்ளும் அர்த்தத்தில் அல்ல. ‘கூற்றைப் பிரதிபலித்தல்’. அதாவது எதிர்மறைப் பொருள் தரும் கருத்தைச் சொல்வதுவும் இதில் அடக்கம். எழுதுவதன் நோக்கம் இதன் மூலமே நிறைவுறுகிறது.

இந்தக் கட்டுரையில் கவிதை வாசிக்கப்படுவது குறித்துப் பேசும்போது, ’காதின் தொழிலைக் கண் ஏற்பது’ என்கிறார். இது ஒருவித மயக்கத்தைத் தோற்றுவிக்கும் வாக்கியம் போல் இருந்தாலும் (பிரமிள், கைலாஷ்சிவன் கவிதைகளில் இத்தகு மயக்கங்களை அதிகமும் காணமுடியும்) எளிமையான ஒன்றுதான். இதோ இந்த வரியை வாசிக்கும்போது, அந்த எழுத்துகளின் ஒலிக்குறிகள் எங்கே எதன்மூலம் உட்கிரகிக்கப்படுகிறது? அதைச்செய்வது கண்கள் தானே. கண்கள் சப்த ஒலிக் கோர்வையை புத்திக்கு அனுப்புகிறது. இவ்வாறு இந்தக் கட்டுரையில் புதுக்கவிதையின் அடிப்படைக் கூறுகள், கவிதையாக அதனை ஆக்கும் அம்சங்கள், வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளை அலசுகிறார்.

பாரதி கலை – எழுத்து இதழ் 34-35 (1961)

இந்தக் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் உட்கூறுகளை விவரிக்கிறார். முன்பே அவர் குறிப்பிட்டிருந்தபடி உணர்ச்சிக்கும் வேகத்துக்குமான நுட்பமான பாகுபாட்டை விளக்குகிறார். உணர்ச்சியை வெளிப்படுத்துவதோ, அடுத்தவருக்கு அதைத் தொற்றச் செய்வதோ கவிதையாவதில்லை.

”அப்படியானால் கவிதை என்றால் என்ன? – கவிதை என்பது சக்தி. சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. அது வார்த்தையினுள்- பாஷையினுள் அடைக்கப்படும் முன்பே படைப்பினுள் கவிதையாகவே கலந்து நிற்கிறது. கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்றுக்கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம்தான் கவிதை”

இந்தக் கூற்றின் அடிப்படையிலிருந்து, அதாவது சக்தி என்ற அளவுகோலை அடிமானமாக வைத்து ‘வேகம்’ கவிதைக்கு அடிப்படை என்று உரைக்கிறார். இங்கே மொழி என்பது கவிதை எனும் மின்னாற்றலைக் கடத்தும் செம்புக்கம்பி மட்டுமே. அந்த ஆற்றலைக் கடத்துவதற்கான உத்வேகமும் அது வரிகளில் வெளிப்படுவதும் தான் கவிதைக்கான அடிப்படை. இதற்கு அடுத்ததாக அர்த்தம், உணர்ச்சி, அழகுருவம், ஒலிநயம் போன்றவற்றை அடுக்குகிறார். இங்கே வேகம் என்ற வார்த்தையை பிரமிள் பயன்படுத்துவதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். வேகம் என்றால் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் இல்லை. அடுத்தவரின் மனோசக்தியைத் தூண்டிவிடும் வேகம்.

இந்த வேகத்தை உணர்வுகளா தாங்கி நிற்கின்றன? நிச்சயமாக அவை வார்த்தைகளில் இல்லை. மாறாக இயற்கையின் இயக்க சக்தி மொழிவழி கொள்ளும் பரிமளிப்புதான் வேகம் என்கிறார். உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த வேகம். அடுத்ததாக படிமமும் உணர்ச்சியும். படிமம் கவிதைக்கு ஆழமும் பொருட்செறிவும் கிடைக்கச் செய்கிறது. கற்பனையோடு, இயற்கை அனுபவங்களுக்கு கவிஞனின் இயல்பான பைத்தியக்காரத்தனத்தோடும், பித்து நிலையோடும் சிந்தனையும் கற்பனையும் கலந்து படிமம் வெளிப்படுகிறது.

உணர்ச்சியைப் பற்றிச் சொல்லும்போது அது களங்கமற்றது என்கிறார். கவிதை எழுதப்படுவது சிருஷ்டி சக்தியினால். சிற்றின்பத்தைப் பற்றி ஒரு கவிதை சொல்லும்போதும் அதனுள் பரிசுத்தத்தை உணர்த்தும் ஓரிடம் நிச்சயம் உண்டு என்கிறார். இதை இப்படிச் சொல்லலாம். ஒரு பாலியல் சிற்பத்தை வடிக்கும் சிற்பி அதன் முழுமையைத்தான் கனவு காண்கிறானே தவிர அது தரும் கிளர்ச்சியை அல்ல. கவிதையில் சம்பவங்கள் இல்லாவிடினும் அதற்கு வேகமளிப்பது, இயற்கையின் வேகத்தால் தூண்டப்படும் உணர்ச்சி. அவை தாமே எழும்பி அடங்குபவையாதலால் செய்யப்படக் கூடியவை அல்ல. இந்தக் கட்டுமானத்தின்படி பாரதி கவிதைகளை ஆய்வுசெய்கிறார் பிரமிள். பாரதி கவிதைக்கு அடிப்படை வேகம்தான். வேகத்தால் உணர்ச்சியும் அதிலிருந்து வார்த்தைகளும். இந்த வேகத்தை மிகச் சிறப்பாக கவிதைகளில் வெளிப்படச் செய்திருப்பதால் தான் அவர் மகாகவி என்கிறார்.

(தொடரும்)

 

http://tamizhini.co.in/2019/02/17/பிரமிள்-தனியொருவன்-பாலா/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரமிள்: தனியொருவன் (பகுதி 2) – பாலா கருப்பசாமி

by Gokul PrasadMarch 18, 2019

“Then his words were, ‘There is nothing to be said’. I was not surprised by this. It seemed correct, and I had already felt that it was to be myself alone, which would solve the problem.” 

’லயம்’ கால சுப்ரமணியம் ஒட்டுமொத்தமாகக் கொண்டு வந்திருக்கும் பிரமிளின் ஆறு தொகுப்புகளில் அவரது பேட்டிகள்-உரையாடல்கள் தவிர்த்து மீதி ஐந்தும் கிட்டத்தட்ட ஒரே அளவானவை. இதில் இரண்டு தொகுப்புகள் விமர்சனங்கள். அவை 1960-80 வரை மற்றும் 1981-2000 வரையானவை என பகுக்கப்பட்டுள்ளன. அதாவது கவிதை 1 தொகுப்பு, கதைகள் 1 தொகுப்பு, விமர்சனம் 2 தொகுப்புகள். கறாரான விமர்சகன் எப்போதும் தனித்து விடப்படுகிறான். அவன் ஒரு தனித்து அலையும் வேட்டை மிருகம். அப்படியான ஒருவரை நினைவில் கொண்டு வருவது கூட பலருக்கு கசப்பான நினைவுகளைத் தூண்டிவிடுகிறது.

53817033_1827235300715161_72779681978594

ஒரு கவிதை அல்லது கதையை எழுதிப் பொதுவில் பகிர்கையில் அது அவ்வளவு கவனம் பெறாவிட்டால் கூட உண்மையான கலைஞன் அதைப் பொருட்படுத்துவதில்லை. அது தன் வரையிலான, தன் அகம் சார்ந்த ஒன்று. அவன் அதனால்தானே ஏற்கெனவே தனித்திருக்கிறான். ஆனால், கட்டுரை அப்படியல்ல. அது தொடங்குவதற்கு முன்பே சமூகத்திற்காக என்று முடிவு செய்யப்படுகிறது. கவனம் பெறவேண்டும் என்ற நோக்கமும் அதில் இருக்கிறது. இதில் எழுதுபவன் பிரதானமல்ல. சொல்லப்படும் விசயம் கவனம் பெறவேண்டும்.

பிரமிள் பசுமை போன்ற இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளை வாசிக்கும்போது இலக்கியக் கட்டுரைகளுக்கும் அவற்றுக்கும் உள்ள வித்தியாசம் மலையளவு இருக்கிறது. பசுமைக்கு எழுதியவை மிக எளிமையானவை. இலக்கியக் கட்டுரைகள் தீர்க்கமான கவனம் கோருபவை. ஆனால் நம் சிந்தனையை மட்டும் அதை நோக்கி திருப்பிவிட்டால், அவைதான் எத்தனை எளிமையானவை.

அக உலகக் கலைஞர்கள் – எழுத்து, இதழ் 36 – டிசம்பர்’61

பிரமிள் கடைசிவரை கீழே இறக்காத இரண்டு எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும், மௌனியும். மௌனியின் படைப்புகள் மீது அவருக்கு உயர்ந்த மதிப்பீடு இருந்தது. இடையில் அவர் தமிழில் எழுதுவதை நிறுத்திய பிறகு, அதற்கு மௌனி சொன்ன காரணம் மற்றும் அவரது வைதீக ஈடுபாடு காரணமாக அவரை விமர்சித்திருக்கிறாரே தவிர படைப்புகளை மிக விரிவாக விமர்சித்து பாராட்டியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் புதுமைப்பித்தனை விட மௌனியையே சிறப்பிக்கிறார். புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. மூவரையும் ஒப்பிட்டுப் பேசுகிறது இந்தக் கட்டுரை. இதில் தூலம், உணர்ச்சி, அக உலகம் என்று மூன்று அடிப்படைகளைக் கையாள்கிறார்.

”ஸ்டெந்தால் அதைத்தான் ‘இன்றைய வசனம் இன்றைய கவிதையை விட உயர்ந்தது’ என்கிறார். கவிதை உயர்ந்த இலக்கிய உருவமாக இருந்தது, அதை ஆழ்ந்த உள்நோக்குள்ளவர்கள் கையாண்டபோது தான்.”

54211671_2293750700661786_41174675032259

கவிதைகள் அக உலகைத்தான் புறத்தில் வார்த்தைகளை ஊடகமாக்கிக் கொண்டு வருகின்றன. இது எந்தளவு ஆழமாகக் கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்து பரிசீலிக்கப்படுகின்றன. இத்தகு உள்நோக்கு பார்வையை சிறுகதை, புதினங்களில் தரும்போது அது கூடுதலான வாசகர்களைச் சென்றடைகிறது. அத்தகு படைப்பாளிகளாக புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. என மூவரைக் குறிப்பிடுகிறார்.

புதுமைப்பித்தன் மிகப்பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் எனினும், அவரது அக உலகப் பரிசோதனைகள் கவனப்படுத்தப்படவில்லை, மாறாக ஸ்தூலமான சமூகக் கருத்துக்களே பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவை கவனப்படுத்தப்பட்டிருந்தால், அவரோடு ஒப்பிட மௌனி எத்தனை கவனத்துக்குரியவர் என்பது தெரிய வரும் என்கிறார். பிரமிள் என்றாலே அவரது ‘காவியம்’ கவிதையை மட்டுமே எல்லோரும் குறிப்பிடுவதன் காரணமும் இதுதான். பிற கவிதைகள் அதிகமும் வாசிப்பவரைச் சார்ந்து நிற்பவை. இலகுவான மொழியில் எழுதப்படும் கவிதைகள் ஒருவகையில் திறந்த கோவில் வாசல் போல. வாசகர் எளிதில் உள்ளே சென்று பார்த்து வரலாம். சிற்பங்களின் சிறப்பு புரிகிறதோ இல்லையோ, நுழைவது எளிது. ஆனால் பிரமிள் வெளிப்பாட்டு விதத்தில், உணர்வுத் தீட்சண்யத்தை மொழிக்கு எடுத்து வருவதில் எவ்வித சமரசமும் செய்து கொண்டவரில்லை. இதனாலேயே அவை நுழையச் சிரமமானவையாகத் தோன்றுகின்றன, ஒரு பூட்டிய கோவிலைப் போல. வாசகர்தான் சாவி. நிற்க.

லா.ச.ரா.வை எடுத்துக்கொண்டால் அக உலகப் பார்வையை விட அது எழுப்பும் உணர்வலைகள் மீதே அவரது பாத்திரங்கள் மையம் கொள்கின்றன. இது ஒருவகையில் வாசிப்பவரை அணுக்கமாகக் கொண்டு வருகிறது.

”சாதாரண வாழ்வின் ஒரு சிறுநிகழ்ச்சியில் ஒருவன் கொள்ளும் உக்கிர மனநிலையை, அவர் தம் பாத்திரத்தின் வாழ்வுப் பாதை முழுதிலுமே தாராக உருக்கி ஊற்றி விடுகிறார். ஒரு பாத்திரத்தின் ஒரு கணமே, அதன் முழு வாழ்க்கையுமாகிறது. அதை முழு வாழ்க்கையையும் உணர்ச்சியால் நிரப்பிக் காட்டுகிறார். ஆனால் மௌனி, தூல உலகுக்கு உணர்ச்சியை இடம் மாற்றுவதில்லை. குறியீடுகள் என்ற கொக்கிகள் தான், மன உணர்ச்சிகளை நோக்கி மனசினுள்ளேயே வாசகனை இழுப்பதுக்காக, வெளிஉலகினுள் நீட்டி இருப்பவை. லா.ச.ரா.-விலுள்ளதுபோல் அகஉலகிற்குக் குறுக்கே, தூலமான காரியங்களோ உணர்ச்சிகளோ மௌனியிடம் இல்லை. எதிரே வெளியிடம்; அதனூடே அக உலகம் என்ற மௌனி சமைத்த இருட்குகை”

54520494_2566286883386012_20871215806215

ஓர் இலக்கியப்படைப்பு அகத்தை எந்தளவு மையம் கொண்டிருக்கிறதோ, அந்தளவு உயர்வானதாய் இருக்கும் என்று பிரமிளின் வாதத்தை முன்வைக்கலாம். ஒரு குளத்தில் கல்லெறிந்ததும் பரவும் வட்ட அலைகளைப் போன்றது உணர்ச்சிகள். அது கண்ணால் காணத்தக்கது. அந்த அலைகளை ஒவ்வொரு சுற்றாகக் கடந்து, அதை எழுப்பும் காரணிகளை, அதன் மையத்தை நோக்கி வாசகனை இழுத்துச் செல்வது நல்ல எழுத்து. சமகாலத்தில் எழுத்தாளர் தேவிபாரதியின் படைப்புகளை அகவயமான எழுத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம். எழுதும் போக்கில் தன்னை இழக்கும் தன்மை ஒரு தொழில்நுட்பமாக இல்லாமல், அதற்கு ஆட்படுபவராக, அதைப் படைப்பாக மாற்றும் தன்மை பெற்றிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இத்தகு தன்மையைக் காணமுடியுமென்றாலும், அவர் அதை ஒரு தொழில்நுட்பமாக, அதாவது அதன் மையம் இதுதான் என்று அறிந்து அதை ஒரு சூத்திரமாக, எழுத்து ஆளுமை என்ற திறன் கொண்டு அதை நுட்பம் என்ற பெயரில் வாசகரும் உணரத்தக்கபடி கோடிகாட்டியபடி கையாள்கிறார். இதனால் அது செயற்கையுறுகிறது.

எழுத்து இதழ் 37 (ஜனவரி 1962)-ல் எழுத்தாளர் சூடாமணியின் ’மனதுக்கு இனியவள்’ என்ற நாவலுக்கான மதிப்புரையை பிரமிள் எழுதுகிறார். அதை இப்படி முடித்திருக்கிறார்:

“மொத்தத்தில், குமாரி சூடாமணியின் நாவலைப் படிக்கமுடிகிறது என்பதனாலும், ஓரளவு எழுதும் திறமை இருக்கிறது என்பதனாலும், இந்த ஆசிரியையால் நல்ல நூல்கள் சிலவேனும் எழுதமுடியும் என்று எண்ண வேண்டியதாக இருக்கிறது. ஆனால் அப்படி அவர் எழுதுவதற்கு முன், தமிழ்ப் பத்திரிகை உலகப் பிரசுரத் தேவைகளை மறந்துவிட்டு எழுதப் பயிற்சி வேண்டும். பத்திரிகை தேவைகளை மட்டும் மனத்தில் கொண்டு எழுதப்படும் நாவல்களில், சிறந்தவையும் இப்படித்தான் இருக்கும் – இதற்குமேல் தரம் காணமுடியாது என்பதற்கு, குமாரி சூடாமணியின் மனத்துக்கினியவள் என்கிற நாவல் ஒரு நல்ல உதாரணமாகும்.”

ஒரு படைப்பானது தன்னிச்சையாக, தன்னை மீறியதாக, ஒரு நிகழ்வாக அமைய வேண்டும். ஆனால் பெருவாரியானவர்களுக்கு அதை அணுகுதல் சிரமம். இதுதான் பெரும் எழுத்தாளர்களும் சறுக்கும் இடம். சொல்லப்படுவது பிறருக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற கவனமெடுத்துச் செய்ய ஆரம்பிக்கையில் தொடங்குகிறது இது. பின் வெகுசனங்களை மையப்படுத்தியே தன்னை அறியாது படைப்பாளி இயங்க ஆரம்பிக்கிறார். இப்படி இல்லாது எழுத்தாளரின் படிநிலையே அந்தளவுதான் என்றும் இருக்கிறது. வாசகனுக்கு விருப்பமானபடி சமைத்துத் தருதல் இதன் அடிப்படை அம்சம். நுட்பமான எழுத்தாளர் வெகுசனப் பரப்பை அடைவதை தீவிர வாசகர்களும் உணராதபடி இலாவகமாக நடத்திக் காட்டுகிறார். ஒரு விமர்சகர் இதைச் சொல்கையில் இது யாருக்கும் புரிவதில்லை. அல்லது அவர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லாமல் இருக்கிறது. எனக்குத் தேவை அது சொல்லும் விசயம். அது கிடைத்துவிட்டது, பின் என்ன விமர்சனம்? காமாலைக்கண் இருந்தால் என்ன, என்னால் பார்க்கமுடிகிறதே.

தேசிய இலக்கியம் – மரகதம் இதழ், ஜனவரி 1962

“கலைத்தன்மையற்றவர்கள், அமெரிக்க இலக்கியத்தின் சிசுப் பருவத்தில், வானம்பாடிகளைப் பற்றிக் கவிதை எழுதினார்கள். ஆனால் இலக்கிய விழிப்பு ஏற்பட்ட பிறகுதான் – வானம்பாடி அமெரிக்காவில் இல்லையே; அமெரிக்கர்கள் முன்பு வாழ்ந்த இடத்து ஐரோப்பியப் பறவையாயிற்றே எனக்கண்டு – ஒரு விமர்சகர் கிண்டலாக, இனி வானம்பாடிக் கவிதைகள் வேண்டாம் என்றார். இலங்கைத் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை நேர்ந்திருப்பது அத்தகைய விழிப்புத்தான்.”

தேசியம் என்பது பௌதீகமான ஒன்றல்ல. ஒரு கலைஞன் உணர்வுப்பூர்வமானவன். அவன் படைப்புகள் தன் உணர்வுகளை, புறத்தால் ஏற்படும் உள்ளார்ந்த பாதிப்புகளை பிரதிபலிக்கிறான். எனவே எழுதுமுன்பே அவனுள் சூழல் என்ற வடிவில் தேசியம் இருக்கிறது. மேலும் சமகாலத்தில் பெருவாரியான மக்களைப் பாதித்த ஒரு விசயத்தை எழுத்தாளன் தன் படைப்பில் கொண்டுவர வேண்டிய கட்டாயமோ நெருக்கடியோ அவனுக்கு இல்லை. தன் மனநிலைகளைத் தூண்டாதவற்றை அவன் எழுதுவதில்லை. உதாரணம் புதுமைப்பித்தன்.

“ஒரு சுத்தமான கலைஞன், தன் நாட்டின் பெயரையே குறிப்பிடாமல் தன் நாட்டைப் பற்றிச் சொல்லக்கூடியவன். நாட்டைப் ‘பற்றி’ என்பது தவறு. நாடே அவனது விளைநிலம். ஆகவே நாட்டின் தன்மை அவனில் ஏறியிருக்கும். அவன் தன்னைப் பற்றிச் சொல்லும் போது தான், அவனிலிருந்தே அவன் புரண்ட மண்ணின் வாசம் அடிக்கிறது. அதுதான் இலக்கிய அர்த்தத்தில் தேசியம்.”

54268395_2272762872971589_72285329868434

புதுப்பாதை வகுக்கும் கவிஞன் – எழுத்து இதழ் 42, ஜுன் 1962

புதுக்கவிதை என்ற பெயர் உறுதிப்படாத காலத்தில், யாப்பிலக்கணத்துக்குள்ளும் அடங்காது வசனமென்றும் கருதமுடியாத கவிதை வரிகளைச் சுட்ட சுயேச்சா வசனம் என்ற வார்த்தையை பிரமிள் கையாள்கிறார். இந்தக் கட்டுரையிலும் மரபான யாப்பு முறையைப் பிடித்துத் தொங்குபவர்களுக்கான விரிவான பதிலைச் சொல்லிச் செல்கிறார்.

“கவிதை தரும் இன்பம் அதன் சப்த வடிவால் நேர்வதல்ல. இலக்கிய இன்பத்தைத்தான் கவிதை தருகிறது. இதுவரை கையாளப்பட்டு வந்த யாப்பு முறைகளைவிட இது ஒருவிதத்தில் உண்மைக் கவிக்கு வசதியானது என்றே எனக்குப் படுகிறது. ஒரே கவிதையில் ரஸம் திடீரென்று வீறு பெறும்போது, பழைய யாப்புமுறைச் சப்த நயத்தில் பேதம் உண்டாக்கி வெளியிடமுடியாது. ஏனென்றால் அதில் முதல்வரி போலவே மற்றைய வரிகளிலும் சப்தம் இருக்கும். ஆகவே சொற்களையோ படிமங்களையோ கொண்டுதான் அதில் மற்றைய ஓரிரண்டு வரிகளில் வேகம் காட்டலாம். புதுக்கவிதையிலோ, சொற்கள், படிமங்களோடேயே சப்தத்தின் கதியையும் மாற்றிக் காட்டி, அந்த வேகத்தை வித்தியாசப்பட எழுப்பலாம்”

இசைத்தன்மையோடு பாடத்தக்க வடிவில் மரபான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் இசை என்பது சொற்களைச் சார்ந்ததல்ல. ஒரு கவிதை தரும் அனுபவம் அதன் இலக்கிய நயத்தில்தான் உள்ளது. அதுவே கவிதைக்கு பிரதானமானது. பிரமிளின் இலக்கியத்தின் மீதான வீச்சு ஆன்மீகத்தை ஆதாரமாகக் கொண்டது என்றே சொல்லலாம். அதனால்தான், பூடகமான, பூசிமெழுகும், பீடிகை போடும் படைப்புகள் மீது சுளீர் என்று தாக்குகிறார். ஆன்மீகம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எத்தகு வாழ்வாயிருப்பினும், அதில் பிரக்ஞையுடன் வாழ்வதைப் பிரதானமான ஒன்றாக முன்வைக்கிறார். ‘புனித’ ஜெனேவை அவர் முன்னிறுத்துவதிலிருந்து இதை உணரலாம். மேலும் கோட்பாட்டாளர்கள், லோகாயவாதிகள் மீதான அவர் விமர்சனத்தையும் அவரது அளவுகோல்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தக் கட்டுரை முக்கியமாய் சிறப்பிப்பது ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளைத்தான். பாரதியே கையாளாத அளவு ஆழமான சிந்தனையைக் கவிதையில் முதன்முதலாகத் தமிழில் உபயோகித்தவர் ந. பிச்சமூர்த்தி என்கிறார். பாரதியின் வசனகவிதை இலக்கிய பூர்வமானதொன்று என்றாலும், அதைச் சாதனையாகக் குறிப்பிட முடியாது, ஆனால் பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை ஒரு சாதனையாக நிற்பதாகக் குறிப்பிடுகிறார்.

53783999_1409173339225754_29378263585306

இலக்கிய மதிப்பீடு – எழுத்து இதழ் 44, ஆகஸ்ட் 1962

பிரமிள் சொற்களுக்கு அர்த்தம் காணும் விதம் அலாதியானது. வெறுமனே எழுத்து அல்லது புணர்ச்சி அல்லது தழுவலைக் கொண்டு அல்லாமல் அச்சொல் மூலத்தில் உருவாகியிருக்கச் சாத்தியமான ஓர் மனோலயத்தைத் தொட்டெடுக்கிறார். உதாரணத்திற்கு,

“’தமிழ்’ என்ற பெயர்ச்சொல்லை எடுத்தால், இதை த=தம்முடைய, மிழ்=பேச்சு என்று பிரித்துப் பொருள்படுத்தலாம். மௌனம் அல்லது பேசாமை என்பது, இதேவழியில், ‘அமிழ்’ என்ற பதமாகிறது. அ=அல்ல, மிழ்=பேச்சு. நீரினுள் முங்குவதற்கே ‘அமிழ்’ என்பதனை இன்று உபயோகிக்கிறோம். நீரினுள் பேச்சு எழாது என்பதே, இந்தப் பொருள் இருமைக்குக் காரணம். ‘அமிழ்து’ என்பது, நீர் என்ற பொருளை இதேவழியில் பெறுகிறது. பேசாமை என்பது ஒரு நெறியாகும்போது கிடைப்பது மரணமிலாப் பெருவாழ்வு; எனவேதான், மரணமின்மைக்கு மருந்தாக ‘அமிர்தம்’ குறியீடாகிறது. உண்மையில் இது வெறும் உணவு அல்ல. கடைப்பிடிக்க வேண்டிய ‘பேசாமை’ என்ற நெறி; ‘சும்மா இருக்கும் திறன்’. ‘வாழ்வு’ என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுவது மரணமின்மையே ஆகும். இதனைப் பிரித்தால், வ=வலிமையுடன், ஆழ்வு=உட்செல்லல் என்றாகும். இது, தியான நிலையில் ஒரு தர்சி தன்னுள் ஆழ்ந்து நிலைத்த பெருநிலையைக் குறிக்கிறது. சம்ஸ்கிருதத்திலுள்ள ‘அம்ருத’வின் பொருள், அ=அல்ல, மிருத்=மரணம் என்ற அளவுடன் நின்றுவிடும். அமிழ்தம் என்ற பதத்திலோ, மரணமின்மைக்கு உபாயம் மௌனம் என்ற விரிவு உண்டு.” 

இந்தக் கட்டுரையில் ஆங்கிலத்தில் இலக்கியம் என்பதின் மூலச்சொல்லான letter (libi) என்பதையும் நம் மொழியில் இலக்கியம் என்பதையும் ஒப்பிடுகிறார். இலக்கியம் சமஸ்கிருதச் சொல்லான  லக்ஷியம் என்பதின் மரூவு. கலைகளில் ஒரு பிரிவு இலக்கியம் எனினும், பிற கலைகள் புலன்வழி அனுபவம் தருபவை. இலக்கியம் புலன்களை மீறிய அனுபவத்தைத் தருவதாதலால் பிற கலைகளுடன் ஒப்பிடக் கூடாது என்கிறார். எழுத்துகளை கண்ணால் பார்த்து மனதுள் சொற்களை ஒலித்துக் கேட்பினும் அது நேரடியாகச் செல்வது உள்ளத்தினுள் தான்.

இலக்கியத்தின் லக்ஷியம் என்ன? லக்ஷியம் நிச்சயம் அதுபேசும் உள்ளடக்கம் அல்ல. தமிழ்க்கவிதை என்ற நூலில் மார்க்சிய அறிஞரான கோவை ஞானி, இப்படித்தான் மார்க்சிய அளவுகோல்களைக் கொண்டு விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ஈரோடு தமிழன்பனின் கவிதை உள்ளடக்கத்தைக் கொண்டு அதை உயர்ந்த இடத்தில் வைக்கிறார். இது குப்பன் சுப்பன் கூட செய்யக்கூடிய ஒன்று. ஓர் இலக்கியப் படைப்பு இன்னின்ன விஷயங்களைத்தான் பேச வேண்டும் என்று நிர்ப்பந்தம் உள்ளதா? அதைப் பிரதானமான அளவுகோலாக வைக்க முடியுமா?

ஓர் எழுத்தாளன் தனது அனுபவச் சாரத்திலிருந்து எழும் உத்வேகத்தில் எழுதுவதன் உள்ளடக்கம் உலகளாவிய பிரச்சினையைப் பேசுவதாக இருக்க வேண்டும் என்றும், அது தொடும் பரந்துபட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடுவது சரியான அளவுகோலாக இருக்க முடியுமா? கொஞ்சம் சொற்களைக் கையாளும் திறனும், சமூகப் பிரச்சினைகளையும் எடுத்துக்கொண்டு கதையாகப் பண்ணி சமைக்கப்பட்ட விருதுகள் தான் எத்தனை. ஜோக்கர் திரைப்படம் கலாபூர்வமாக ஒரு குப்பை. ஆனால் அதைக் கொண்டாடச் செய்தது எது? கொண்டாடியது யார்?

”கலைத்தன்மையை மதிப்பிடுவது உள்ளடக்கத்தால் அல்ல. உள்ளடக்க மதிப்பீடு, கலைஞனின் மனிதத்தன்மையை மதிப்பிடவும் கலையின் உருவ, உத்வேகத்துக்கு உள்ளடக்கம் அளித்த பங்கை நிர்ணயிக்கவும்தான்.”

54080453_373941150119176_543340124455724

வெயிலும் நிழலும் – எழுத்து இதழ் 47-48, நவம்பர்-டிசம்பர் 1962

”இன்று பலர் கெட்டிக்காரத்தனமாக எழுதுவதை உயர்ந்த எழுத்தாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புத்திசாதுரியமான ஹாஸ்யத்துக்காக அவர்கள் படும் சிரமம் வரிதோறும் தெரிகிறது” – மௌனி

“கலைஞன் தன்னைப்பற்றிச் சொல்வதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உலகம் என்கிற, உலையின் அனுபவங்கள் முழுதையும் பதம் பார்க்கிறவன்” – பிரமிள்

பிரமிள் ஒரு தனிமனிதவாதி. உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு தனிமனித அகத்தில் உள்ளது என்பவர். இது அவருக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கிடைத்திருக்கக் கூடும். ஒவ்வொரு தனிமனிதரும் உலகத்தில்தான் உள்ளனர். ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒரு துளியே. தன்னை உண்மையாய் பிரதிபலிப்பவன் ஒட்டுமொத்த உலகையே பிரதிபலிக்கிறான். இயல்பாகவே பொதுவுடமைவாதிகள் மீதான அவர் விமர்சனம் தொடர்ச்சியாக பல கட்டுரைகளில் வெளிப்படுவதைக் காணலாம். ஆன்மீகம்-அறிவியல்-மொழிபெயர்ப்பு பிரிவில் உள்ள 6வது தொகுப்பில் 150 பக்கங்களுக்குமேல் மார்க்சியம் குறித்த கறாரான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் மௌனி படைப்புகளை ஆய்வு செய்கிறார். சி.சு. செல்லப்பா மௌனியைப் பற்றிக் கூறுகையில், மௌனியின் கலைவாழ்வு தனி மனித ரீதியானது என்பதோடு காஃப்காவுடன் மௌனியை க.நா.சு. ஒப்பிட்டபோது, காஃப்காவின் குறியீடுகள் பொதுத்தன்மையானவை, ஆனால் மௌனியின் கலையுலகும் அவரது குறியீடுகளும் தனிமனித ரீதியானவை என்று சொல்கிறார். இதற்குமுன் குறிப்பிட்ட அகவுலகக் கலைஞர்கள் என்ற கட்டுரையில் பிரமிள் மௌனியை சிறப்பித்ததை வைத்து மனதின் தன்மையை ஆராய முற்பட்டவராகவும் சி.சு.செ. சொல்கிறார். இவ்விரண்டுக்கும் மறுத்து விளக்கம் கூறுவதாக இந்தக் கட்டுரை உள்ளது.

மௌனி கதையில் வெளிப்படையாகத் தோன்றும் காதல் என்பதைத் தாண்டி அதற்குள் இயங்கும் அகவெளியை வெவ்வேறு கதைகளை வைத்து விளக்குகிறார். மேலும் மௌனி சுயசரிதைக் கதைகள் எழுதினார் என்ற குற்றச்சாட்டையும் இங்கே மறுக்கிறார். மௌனி பெரும்பாலும் பாத்திரங்களின் பெயர்களுக்கோ, அவர்களை வர்ணிப்பதற்கோ மெனக்கிடுவதில்லை. அவருக்கு மௌனி என்று பெயர் வைத்தவர் பி.எஸ். ராமையா. மணிக்கொடி இதழுக்குக் கதை எழுதித் தந்த போது அவர் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. அப்படியே மௌனி என்று போட்டுவிட்டார்.

53839914_269725297243385_567559818270526

“மௌனியின் பாத்திரங்கள், தூலமாகச் சேர்ந்து விடுவதைக் காதலாகக் கொள்ளவில்லை. அதாவது அவர்கள் ‘காதலிக்க’வில்லை. அவர்கள் தங்கள் காதலையே ஓர் ஆரம்பமாகக் கொள்கிறார்கள். பிறகு எதையோ தேடுகிறார்கள். இப்படி உள்த்தொடர்புக்குக் காரணத்தையும் அதன் அகப்பீடத்தையும் தேடும் கலைஞனின் படைப்புகள் எப்படி தனிமனிதப் போக்கானவையாகும்? ஆத்ம தேட்டம், உலகின் பொதுவுடலிந்சமுத்திரத்தின் தனித்தன்மை என்ற திவலையின் வியக்தியை இழப்பது அல்லவா?”

பிரமிளின் ஆரம்ப காலக் கட்டுரைகளும் சரி, அதற்குப் பின் வந்தவற்றில், புதிதாய் எழுத வந்தவர்களின் படைப்புகள் மீது அவர் வைத்த கடும் விமர்சனத்துக்கும் அடிநாதம் அவர் முன்னோடிகளாய் வைத்திருந்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா போன்றோரின் நீட்சியாக, மேலும் அதன் அடுத்த கட்டத்துக்கு நகராது தரம் தாழ்ந்ததாக அவர் கருதியதுதான்.

(தொடரும்)

குறிப்பு : இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் அத்தனையும் பிரமிள் வரைந்தவை.

 

http://tamizhini.co.in/2019/03/18/பிரமிள்-தனியொருவன்-பகுத/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி

by Gokul PrasadApril 20, 2019

மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் என்பது ஒரு குணாதிசயமாகச் சுட்டப்பட்டு அக்குணம் எல்லா சாதிகளிலும் தொடர்வதாகத் தான் சொல்லியிருக்கிறார். இதற்கே அவர் மீது வருத்தப்பட்டவர்களைக் கண்டால் ஆச்சரியமாக உள்ளது. பிறகு எதற்கு இங்கே இத்தனை குழுக்கள் இயங்குகின்றனவாம்? நான் பார்த்த வரை இலக்கியம் என்பதைத் தாண்டி ஒருவர் தனது சாதி என்பதற்காகவே அவரைத் தூக்கிப் பிடிக்கும் போக்கு எங்கும் காணப்படுகிறது. இதில் எழுத்தாளர் வாசகர் என்ற வித்தியாசம் கூடத் தெரிவதில்லை. ஒரு வாசகர் தன் சாதியைச் சேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை தேடித் தேடி வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக பிராமணர்கள். ஒருவேளை பிற சாதியினருக்கு இன்னும் அந்தளவு ’விழிப்புணர்வு’ வரவில்லை போலும்.

பிரமிள் இலக்கியத்துக்காக அனைத்தையும் எதிர்த்தவர். சாதீய ரீதியான குழு மனப்பான்மையோடு இயங்குபவர்கள், அரசியல் நிலைப்பாடுகளோடு படைப்புகளை அணுகுபவர்கள், கோட்பாடுகளைக் கொண்டு வெறும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் என்று இலக்கியத்துக்கு எதிரான செயல்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். எந்தளவு வைதீகத்துக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தாரோ அதே தீவிரத்துடன் இடதுசாரிகளின் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்தார். எப்படி இப்படி ஒரு எழுத்தாளன் தனியாக வாழ்ந்து மறைந்தான் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பிரமிள் வேலை எதுவும் செய்யவில்லை. தன்னை கவிஞன், விமர்சகன் என்றே எங்கும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 1970-75 காலகட்டம் அவருக்குக் கொடுமையானது. அவரே நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி அது நினைவுகூற விரும்பாத காலகட்டம். நாள் முழுக்க பட்டினியாக பல நாட்கள். யாரிடமும் சென்று காசு கேட்டதுமில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான்.

53140431_2063285153964438_89453309852815

“சமூகம் என்பதே abstraction. சமூகத்தை அபிப்பிராயங்களால் அர்ச்சிப்பதோ சவுக்கடி கொடுப்பதோ, தற்காலிகமான சலசலப்புக்கு மேல் ஆழமாக உழுது செல்லும் இரசனையின் பலனைத் தராது. உண்மையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் இரசனை இராது. பரபரப்பான அபிப்பிராயங்களே ஆட்சி புரியும். இரசனை, பக்குவமுள்ள இதயத்துக்குத் தான். அது உலகைத் திருத்தி விடாது. ஒரு சமூகம் கலைஞன் ஒருவனை ஆதரிக்கிறதென்றால், பரவி விட்ட அபிப்பிராயத்திலேயே. பாரதியை அச்சிட்டுப் பிழைக்க முடிவது அதனால்தான் – பாரதி இரசனையால் அல்ல”

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டவுடன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் மட்டும் கூடுதலாக விற்பனையாகும். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்கு விருது கிடைத்தவுடன் திருநெல்வேலியில் அதுவரை ஒன்றோ இரண்டோ விற்றிருந்த ஒரு கடையில் 100 புத்தகங்களுக்கு மேல் விற்றன. கேரளாவில் எங்கு பார்த்தாலும் பஷீரைக் கொண்டாடுகிறார்கள். நிறைய இடங்களில் அவர் புகைப்படங்களை பெருமையாக மக்கள் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஒரு மலையாள இலக்கியவாதியிடம் கேட்டபோது அவர் சொன்னது, ‘அப்படியில்லை. குறிப்பிட்ட ஒருவரைக் குறித்த ஓர் அங்கீகாரத்தையும், மதிப்பீட்டையும் உருவாக்கினால் போதும். மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.’ பாரதிக்கு அதுதானே நடந்தது? எந்தக் கூட்டத்திலும் பாருங்கள். பொத்தாம்பொதுவான அவரது சில பாடல் வரிகளைச் சொல்லி ஒப்பேற்றி விடுவார்கள். சொல்பவருக்கும் தெரியாது. வாசிப்பவருக்கும் தெரியாது. ஏற்கெனவே மகாகவி என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறார் என்பதால் சும்மா நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்வதில் நிச்சயம் தவறே இருக்க முடியாது இல்லையா?

இங்கு ஒரு படைப்பைப் பற்றி பிரபலமான ஒருவர் சொன்னால் மட்டும்தான் அதற்கு மவுசு. இதனால் தான் கதை, கவிதைகளுக்கு முன்னுரை வாங்க மூத்த எழுத்தாளர்களைச் சார்ந்து முதுகு சொறிந்து கொண்டு பல கூட்டங்கள் திரிகின்றன. படைப்புக்கான மதிப்பு படைப்பிலேயே உள்ளது. அது வாசிப்பவரால் கண்டுணரப்பட்டு அம்மதிப்பு உருவாக வேண்டும். எல்லோரும் எல்லாவற்றுக்கும் இன்னொருவரையே சார்ந்திருக்கிறார்கள். ஒரு புத்தகத்தை முழுக்க வாசிப்பதற்கு பதில் அதை வாசித்த ஒருவர் சொல்லும் கருத்தைப் படித்தால் போதாதா, தனக்கு பதில்தான் அவர் யோசிக்கிறாரே, தொகுத்துத் தருகிறாரே அப்புறம் எதுக்குச் சிரமப்பட வேண்டும்? இதில் உள்ள அபாயம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. “என்னை convince செய். நீ சொல்வதை நம்புகிறேன்” என்ற அளவுக்குத் தான் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1964ல் எழுத்து இதழில் வந்த கட்டுரையில் தான் பிரமிள் முதன்முதலாக தனிநபர்வாதத்தை முன்வைக்கிறார். இன,மத, மொழிக்குரியவராக ஒருவர் தன்னை அடையாளம் கண்டு ஓர் இனத்துக்கான ஒட்டுமொத்த இரசனை மேம்பாடு என்று செல்லும்போது தனிநபர் வளர்ச்சி தடைப்பட்டு, சமூகத்தை சதா குறை சொல்லும் முற்போக்குவாதம் வருகிறது. இரசனை தனிநபரின் சொத்து. ஒரு சமூகத்துக்கான படைப்பை மட்டுமே ஏற்கும் இரசிக்கும் தன்மை போலித்தனமானது. வறட்டுத்தனமானது.

”சாமானிய வாழ்க்கையில் ஒருவன் பூரணமாக வாழ்கிறபோது அங்கேயே கவிதை நடைபெறுகிறது. பூரண மனித வாழ்வே கவிதை வாழ்வு. அவ்வாழ்வில் கவிதை எழுதப்படாவிட்டாலும் கவித்துவம் உண்டு. தேசிய, இன, மத வாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைமையுடன் மனம் விழிப்புப்பெறும் கணமே அது. கவிஞன் அறிந்தோ அறியாமலோ அவ்வப்போது இந்நிலையை அடைந்து விடுகிறான். சொற்களில் பழகிய, சொல்மயமான நினைவுத் தொடரில் அனுபவ மின்சாரம் பாயும் வேளையே கவிதை பிறக்கும் வேளை. கவிதை சொல்லில் இல்லை. கவிதையின் ஊற்று போனதும் வருவதும் அற்ற நிகழ்களத்தில் கிடக்கிறது.”

எழுத்து இதழ் 66ல் (செப்டம்பர் 1964) கவித்துவம் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அவரது முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. வெற்றுச் சொற்களை ஒட்டி வெட்டி அமைப்பதின் மூலம் அதன் அர்த்தகதியை மாற்றி ஒரு விளையாட்டை நிகழ்த்துவதே கவிதை என்று நம்பி ஒரு கோஷ்டி இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் இதற்கு மேலே போய் ”கவிதையை இயற்கையான ஒன்றாக கருதிக் கொண்டு காலம் கழிக்கும் சனக்கூட்டமொன்று இன்னும் இலக்கிய வெளியில் இருக்கிறது” என்று எழுதி வைக்கிறார்.

53832775_2349680398646205_66690568072661

எந்தப் படைப்பாக இருந்தாலும் அதனளவில் நேர்மையாக, உண்மையாக, அனுபவப் பூர்வமாக, உணர்வோட்டத்துடன் கலந்து வெளிப்படாவிடில் அந்தப் படைப்பானது அது இயங்கும் கலைத்துறைக்குத் தேவையற்ற ஒன்றே. எழுதப் படிக்கத் தெரியுமென்பதால், ஒரு கோணப்பார்வையைக் காட்டி அதன் இயல்புமீறிய தன்மையை கவிதை என்று நம்பிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் பெருகி விட்டனர். பொட்டுப்பொட்டாய்ச் சாரல், இலை நுனியில் திரண்டு குமிழ்ந்து உச்சகட்டத்தில் விடுபட்டு வீழும் நீர்த்துளி கணம். கவித்துவம் என்பது காலாதீதத்தில் கிடக்கிறது. அந்த கணம் கூட கைவரப்பெறாது மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அனைத்தையும் தெறிக்கச் செய்து மூச்சுவிட்டுக்கொள்ளும் அந்த ஒரு கணத்துக்கும் குறைவான இடைவெளி மனிதர்களுக்கு சித்திக்கத்தான் செய்கிறது. ஒரு மனித வாழ்வில் இப்படி மொத்தம் எத்தனை கணங்கள் வாழ்ந்திருப்போம். இத்தகு கணங்களை வாழ்வில் கூட்டிக் கொள்வதும், அந்தந்த கணங்களில் வாழ்வதை நோக்கமாக வைத்துக் கொள்வதுமல்லவா உண்மையான வாழ்வாக இருக்க முடியும்? அரசு, சமூகம், கலை, உறவுகள் அனைத்தும் இதன் மதிப்பை உணர்ந்ததாக அதன் பொருட்டு இயங்குவதாக அமைவதே நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

பிரச்சாரத்திற்காக, அரசியல் நிலைப்பாட்டிற்காக இலக்கியத்தைக் கைக்கொள்ளும்போது அதில் உயிர் இருப்பதில்லை. படைப்பு அந்தரங்கமானது. அது ஒரு தன்னிலை மலர்ச்சி, செடியில் பூக்கும் பூப்போல. இரண்டாம் நபரை உத்தேசித்து அது மலர்வதில்லை. இரண்டாம் நபருக்கு அங்கே இடமேயில்லை. இருந்தும், அது அனைவருக்குமான மலராக உள்ளது. அதுதான் படைப்பு. இன்னொருவரை, இனத்தை, சமூகத்தை உத்தேசித்து எழுதப்படும் போதே இந்த அந்தரங்க உறவு நிகழாமல் போய் விடுகிறது. வெறும் மொழியை வைத்துக் கொண்டு போலியாய்ச் செய்யப்படும் எழுத்து மட்டுமே எஞ்சுகிறது. கொஞ்சம் புத்திசாலித்தனமாக பூசி மெழுகி என்னதான் ஏமாற்றப் பார்த்தாலும், படைப்பு பல்லிளித்து விடும்.

காலாதீதத்தில் ஏது சொல்? மனிதன் உள்ளே முழுதும் சொற்களால் நிறைந்திருக்கிறான். சொல்லற்ற கணம், உறைந்த சொற்களின் மீது படரும் போது வாசனை போலொரு நினைவு, ஒரு காட்சி, ஒரு சொல் ஒட்டிக்கொள்கிறது. ஒருவித தன்மயக்க நிலை அதைத் தொடர்கிறது. (கணத்துக்கும் குறைவான நேரம்) அது ஒரு கரு. ஓர் உயிர். அக்கண முகிழ்ப்பில் அதன் சாரத்தின் மீது நிகழ்வது கவிதை. மனிதனிடம் எப்போதும் இருப்பது சொல். ஆனால் கவிதை சொல்லில் இல்லை.

மேலே விவரித்த கட்டுரைக்கு வலுசேர்க்கும் அடுத்த இரண்டு கட்டுரைகளைப் பார்க்கலாம்.

அ. படைப்பாளி மனநிலை (எழுத்து இதழ், டிசம்பர் 1965)

ஒரு படைப்பை கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுவது சரியாக இருக்குமா? கோட்பாடுகள் போன்ற கருவிகள் குறிப்பிட்ட கோணத்தை மட்டும் மையமாகக் கொண்டவை. தனித்தனியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் அளவிடுவது (குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதை) அதன் முழுமையை உணரச் செய்யாது. பொதுவான சமநிறுவை (objective value) சாத்தியமா என்ற கேள்வியை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள்.

ஓர் எழுத்தாளர் பிடித்துப் போவதற்கும் இன்னொருவர் பிடிக்காமல் போவதற்குமான காரணம் என்ன? இரண்டு இலக்கிய வாசகர்கள் ஒரே மாதிரி இரசனை கொண்டிருப்பதும் இல்லை. அப்படியே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகள், தாக்கங்கள் இருக்கும். இது வாசகரின் அனுபவ, இரசனை சார்ந்ததாக உள்ளது. இந்நிலையில் விமர்சகன் ஒரு படைப்பை மதிப்பிட சிருஷ்டிக்கும் மனநிலையை அடிப்படையாகக் கொள்வதை முன்வைக்கிறார். சிருஷ்டி எவ்வாறு நிகழ்கிறது? எழுத்தாளன்/கவிஞன் எதை சிருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவுடன் சிருஷ்டிக்கிறானா? எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் அவனது பிரக்ஞை உள்ளதா? கட்டுப்பாடும் நோக்கமும் உடையவன் தானா?

“மௌனி போன்றவர் கதைக்கு பிரக்ஞைபூர்வமான ஒரு தளம் இல்லை”

இந்தக் கட்டுரையில் படைப்பாளியின் படைப்பு மனநிலைக்கு வாசகன் அணுகி வரவேண்டும். அந்நிலையில் படைப்பை மதிப்பிடுவதே சரியானது என்கிறார். இதை அவர் இன்னும் சற்று விவரித்துச் சொல்லியிருக்கலாம். இந்த படைப்பு மனநிலை விவரிக்க முடியாத ஒன்று என்று சொல்கிறார். ஒரு கவிதையை உள்வாங்கிக் கொண்டதும் என்ன நடக்கிறது? சட்டென்று மழைபெய்து நனைந்தது போல, ஒரு விளக்கு உள்ளுக்குள் பளிச்சென்று எரிவதுபோல, ஒரு நண்பனைத் தோளோடு அணைத்துக் கொள்வது போல, பற்றவைத்தவுடன் குப்பென்று பற்றி சரசரவென்று பொசுக்கித் தள்ளும் தழல்போல இப்படி எத்தனையோ உணர்வு நிலைகளை அதனோடொரு உள்ளார்ந்த மௌனத்தையும் தருகிறது.

படைப்பு மனநிலையை உணர்வதும், படைப்பைப் புரிந்துகொள்வதும் ஒன்றா? புரிந்து கொள்வதில் ஒருவித விலகல் இருக்கிறது. கணித சூத்திரத்தை அணுகும் மனப்பாங்கு. படைப்பை உணர்ந்து அனுபவிப்பதில்? இது சற்று கடினமானது. கவிஞன் (உதாரணத்திற்கு), ஓர் மனோகதியை, உந்துதலை அடைந்து எழுதத் தொடங்குகிறான். எழுதி முடித்தவுடன் படைப்பு தனி உயிராகிவிடுகிறது. அச்சமயம் படைப்பாளியின் தான், தனது என்ற உணர்வை நீக்கிவிட்டால் அவரும் ஒரு வாசகரே. முதல்நிலை வாசகராகச் சொல்லலாம். ஆனால் வாசகருக்கு அப்படி இல்லை. அவர் இந்தத் தொடர்ச்சியை பின்னிருந்து தொடங்குகிறார். அதாவது, முதலில் சொல், வரி, அடுத்தடுத்த வரிகளுக்கிடையிலான தொடர்பு, அனுபவத்தோடு சரிபார்த்து கவிதை பேசும் பொருள், உணர்வு கதிக்கு நெருங்கி வந்து அதை முழுதுமாக உள்வாங்கிக் கொள்கிறார். இது சற்று சிரமப்பட வேண்டிய வேலைதான். இத்தகு சிரமத்திற்கு வாசகர் மனதில் வேறு சிந்தனையோட்டமின்றி, மனமொப்பி, முன்முடிவுகளின்றி வாசிக்க வேண்டியிருக்கிறது. படைப்புக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனாலும் படைப்பை உணர்ந்து அனுபவித்தல் என்பதும், படைப்பு மனநிலையும் ஒன்றா. இரண்டு நெடுநாள் நண்பர்கள் சந்திக்கையில் எதுவுமே பேசாமல் கூட மணிக்கணக்காய் ஒன்றாய் அமைதியாய் அமர்ந்திருப்பார்களே, அதுபோன்றதொரு இடம்தான் எழுத்தாளரோடு வாசகர் சந்திக்கும் இடம். அது படைப்பு மனநிலையைச் சந்தித்தல். மனதை வெறுமையாய் வைத்திருந்து, படைப்பு இழுக்கும் திக்கெல்லாம் போய்வரும் திராணியும், அமைதியும், வேறு சிந்தனைக் குறுக்கீடும் இன்றி இருப்பவர் நிச்சயம் படைப்பாளிக்கு அருகில் வந்துவிடுவார்.

53734549_815272692143778_202729738488250

ஆ. சிருஷ்டி இயக்கம் (எழுத்து இதழ், ஜூன் 1966)

”The Milky Way is like a silver river” – Vladimir Mayakovsky

“யாருடைய நடமாடும் நிழல்கள் நாம்?” – மௌனி

பிரமிள் தனது முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை  எழுதியிருக்கிறார். ஒரு வரியில் அதன் அர்த்தம் தரும் வெடிப்பில் அல்லது ஒரு பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது சட்டென்று முடிந்து அப்படியே கீழே தலைகுப்புற விழுவது போல. இந்தப் படைப்பு வரிகளின் மர்மம், படைப்பாளியின் சிருஷ்டி மனநிலையில் தொக்கி நிற்கிறது. எனவே அந்த வரிகளை அதன் அனுபவத்துக்குள் நாம் செல்லும்போது அந்த மனகதியைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். மேற்கண்ட கவிதை வரியை எழுதிய மாயகோவ்ஸ்கி அதை எழுதி முடித்ததும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். ‘She loves me…she loves me not’ எனத் தொடங்கும் அந்தக் கவிதை 28 வரிகளைக் கொண்டது. ஒட்டுமொத்தக் கவிதையிலும் இந்த ஒருவரி மட்டும் ஒரு மின்னல்வெட்டாக திகைக்கச் செய்து கவிதையை வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்தி விடுகிறது. இந்த வரியை அடுத்துத் தொடரும் “I’m in no hurry” என்ற வார்த்தை, எப்படியொரு சமாதானத்தை அவரது மரணத்திற்குத் தந்திருக்கும். தற்கொலைக்குக் காரணம் பார்த்தால் தினசரிச் செய்தி போல ஒன்றுதான். காதல் தோல்வி. அந்த இறுதிக் கவிதையைக் கூட இருள்நகையாக எழுதியிருக்கிறார். ஒரு தற்கொலைக்குத் துணிந்தவனைப் புரிந்துகொள்வது எப்படி? அந்த பிஸ்டலை நம் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தாவிடில் அதன் அழுத்தத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தான் இங்கே வாழ்வின் முடிவில் நின்றுகொண்டிருக்கும் இதே கணத்தில், அந்த இரவில் இதெதுவும் அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் காதலி, இருவருக்குமிடையேயான கடக்கமுடியாத அந்தப் பள்ளத்தாக்கு. இப்படி மேலும் மேலும் உள்ளே செல்லும் வாசகருக்கு கவிதை இன்னுமின்னும் திறந்துபடும்.

இந்தக் கட்டுரையை பிரமிள் இப்படி முடிக்கிறார். “கலைஞனால் பிரமிப்படைய முடிகிறது; அதிசயிக்க முடிகிறது; கேள்விபோட முடிகிறது. அதிசயிப்பு, கேள்விபோடல் – இவைதான் கலையின் உந்நதமான காரியம் என நினைக்கிறேன். இந்த பிரமிப்பு, அதிசயம், கேள்விகள் என்பவற்றின் இயக்கம்தான், படைப்பு மனநிலை.”

மேலே எழுதப்பட்டதின் உணர்வுகதிக்கு ஆளாதல் படைப்பு மனநிலையை உணர்வதாகுமா என்பது குறித்து பார்த்தோம். படைப்பில் தன்னையிழந்து அதன் உணர்வுத் தளத்தை சொற்களில் படைப்பாளி பிரதிபலித்திருக்கும் போது, அதை வாசகர் உள்வாங்கிக் கொள்ளும்போது அது படைப்பு மனநிலையை உணர்தல் என்று சொல்லலாம். அதே நேரம், எழுத்து வித்தகர்கள், குறிப்பிட்ட மனநிலைக்கு வாசகரை உட்படுத்தவேண்டி எழுதுகையில் அதை உணர்வதற்கான திராணியும் வாசகரிடத்தில் வேண்டியிருக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு உரையாடலின் தொடக்கத்திலும், நாம் இதற்கான விடையை சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என்று சொல்வார். தான் சொன்னதனால் கேட்பவர் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது, மாறாக அவராக உணர்ந்து அதற்கான விடையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பார். எந்தவிதத்திலும் இன்னொருவர் தன்னைச் சார்ந்திருக்க அவர் விடவில்லை. தான் குருவல்ல. ஒருவரைப் பின்பற்றுவது தன்னைத் தானே அவமதித்துக் கொள்ளுதல் என்கிறார். இங்கே எழுத்தாளர்களின் நோக்கமே சார்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்வதுதான். இதன்மூலம் ஓர் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள்.

தமிழ் இந்துவில் 7/4/19 அன்று வெளியான சி.மோகன் அவர்களின் கட்டுரையில் சி.சு.செல்லப்பா குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு காலத்தின் குரலாகவும் தன் காலத்தின் இலக்கியப் போக்குகளைக் கட்டமைக்கும் சக்தியின் உருவகமாகவும் வாழ்ந்த சி.சு.செல்லப்பா, தன் பிந்தைய காலத்தில் தன் செழுமையான அர்ப்பணிப்பு மிக்க கலை நினைவுகளில் உறைந்து விட்டிருந்தார். ‘எழுத்து’ எழுத்தாளர்கள் பலரும் செல்லப்பாவை விட்டு, அவரது சமகாலத் தன்மையற்ற பிடிவாதங்களால், ஒதுங்கிய நிலையில் சச்சிதானந்தம் மிகுந்த மதிப்புடன் உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தார். புதிய போக்குகளைப் பொருட்படுத்தாதவராகவும், புறக்கணிப்பவராகவும் கால மாற்றங்களில் சலிப்புற்ற அதேசமயம் வைராக்கியமிக்க முதியவராகவும் இருந்து கொண்டிருந்தார்.”

இங்கே இதைக் குறிப்பிடக் காரணம் பிரமிள் ‘புனித ஜெனே’ என்ற தலைப்பில் கசடதபற இதழில் (பிப். 1971) ஒரு கட்டுரை எழுதுகிறார். இதுவரை எழுத்து இதழில் தானே எழுதி வந்தார், என்னாயிற்று என்ற கேள்விக்கு விடை சி. மோகனின் கட்டுரையில் இருக்கிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சாட்டர்லீஸ் லவர்க்கு விமர்சகர் ரைடர் ஹொக்கார்ட் எழுதிய முன்னுரையை எழுத்து இதழுக்கு அனுப்பிய போது, சி.சு.செ. அதை பிரசுரிக்க மறுத்ததோடு நேர்ச்சந்திப்பில், “How dare you send it to me?” எனக் கேட்டிருக்கிறார். இது சி.சு.செ. குறித்த தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறது. கலையுணர்வை விட சமூகவுணர்வை அதன் மதிப்பீடுகளை போஷிப்பதே கலையின் நோக்கம் என்று கருதுவோர் இன்றும் இருக்கிறார்கள். இது கலைஞனை ஒரு சமூகப் பிராணியாக இருக்க நிர்ப்பந்திப்பது.

ஜெனே திருடனாகவும் ஒருபாலின உறவாளராகவும் இருந்தவர். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, இவர் திருத்த முடியாத திருடன் என்று ஆயுட்சிறை விதிக்கப்பட்டவர். இவரை சார்த்தர் புனித ஜெனே என்று அழைத்தார்.

53742539_316611245711425_814242871234055

“டி.எஸ். எலியட், எழுத்தாளனது எழுத்தை மட்டும்தான் நாம் அளக்க வேண்டும், அவனை அல்ல என்ற கொள்கையை, விமர்சனத் துறையில் நிலைநாட்டி விட்டார். இருந்தும் திருடன், சொந்தப் பாலுறவுத் தாசி – எழுத்தாளன் என்ற விஷயத்தில், அதுவும் தன் வாழ்வையே அப்பட்டமாக சுயசரிதையாக எழுதியவனிடத்தில், நாம் திடுக்கிடவே செய்கிறோம். இதன் காரணம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை தான் நன்மையானவை என்ற நமது பிரமையாக இருக்கலாம். இந்த வகையான சமூக அங்கீகாரம் பெற்ற தன்மைகளை, சமூக வரம்புகளுள் – குடும்பம், பள்ளி என்ற வரம்புகளுள் – வளர்ந்த காரணத்துக்காக மட்டும் தான் நாம் மதிக்கிறோம் எனலாம். இந்த நன்மைகளை மீறி, எவ்விதமான புனிதத் தன்மையுமில்லை என்றும் நினைக்கிறோம். இதனால் தான், ஜெனே புனிதமானவன் என்பது நாராசமாக ஒலிக்கிறது. ஜெனே பணத்துக்காக எழுதக்கூடிய ஆற்றல் இருந்தும் திருடினான்.”

ஜெனே தனது ஆயுட்சிறை வாசத்தில்தான் எழுதியிருக்கிறார். சிறையில், காகித உறை செய்வதற்காகப் பணிக்கப்பட்டு, சமயம் கிடைக்கும்போது அந்த உறைகளின் மீது பென்சிலால் எழுதியிருக்கிறார். காவலர்கள் கண்களில் படாமல்தான் எழுத வேண்டும். எழுதியவை அனைத்தும் தன் வாழ்வில் நடந்த இழிவானதும் ஆபாசமானதும், தனது ‘காதலர்கள்’ குறித்துமானவை தான். இருந்தும் ஒருமுறை இவரது எழுத்துக்களை சிறையதிகாரி கண்டு வாசித்து விட்டு எறிந்து விட்டார். ஜெனே மீண்டும் எழுதினார். ஏன்? எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். ஒருவேளை சிறையை விட்டுப் போனாலும் பிரசுரத்துக்கு ஏற்கப்படாத உள்ளடக்கமும் எழுத்தும். பிரசுரமானாலும் தணிக்கையில் சிக்கிக் கொள்ளும். ஆனாலும் ஜெனே எழுதினார். ஏன்? இதற்கு ஜெனேவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. ஆபாசமெல்லாம் குழந்தையின் நிர்வாணமாய் பரிசுத்தமாய் இருந்தது.

எது நல்லது எது தீயது? மனித மனத்தின் ஆழ்ந்த ரகசியங்களை உதாசீனம் செய்துவிட்டு, கூட்டுவாழ்வுக்கு ஏற்ற சௌகரியங்களை, நல்லது – புண்ணியம் என்றுகூறி, அதோடு தேச பக்திக்காக நடக்கும் போரையும் புண்ணியம் என்கிறோம். ஜெனே இதே தர்க்கத்தில் தான், தனது கூட்டமான குற்ற உலகில் கொலையும் கொள்ளையும் தான் புண்ணியம் என்கிறான். இது, உலகு முழுவதுமே உள்ள கலாசாரங்கள் யாவற்றுக்கும் விடப்பட்ட சவால்!”

முன்னர் சொன்ன சி.சு.செ. சித்திரத்துடன் மேற்கண்ட கட்டுரையின் சாரத்தைப் பொருத்திப் பார்த்தால் அவர் ஏன் எழுத்து இதழில் பிரசுரிக்க மறுத்தார் என்பது புரியும். சி.சு.செ. மணிக்கொடி எழுத்தாளர்களையும், தனது எழுத்துக்களையும் அதன் போக்கிலான நகர்வுகளையும் மட்டுமே கவனம் கொண்டார். இத்துடன் எழுத்து இதழுடனான பிரமிளின் அத்தியாயம் முடிவடைகிறது.

(தொடரும்)

பின்குறிப்பு : இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து  ஓவியங்களும் பிரமிளால் வரையப்பட்டவை.

 

http://tamizhini.co.in/2019/04/20/பிரமிள்-தனியொருவன்-பகுத-2/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி

May 22, 2019

இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் பார்த்தோம். அது பிப்ரவரி 1971ல். அதேயாண்டு ஜூன் மாதம் ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் அதேயிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை புனித ஜெனேவுக்கு எதிரான ஒரு கேள்வியாகச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை ஒரு கேள்வியை எழுப்புகிறது.

கலை உணர்வோ, கலாச்சார உணர்வோ, மனிதனின் உன்னதத் தன்மையுடன்சம்பந்தமுள்ளதா?’

இப்போதும் எழுத்தாளர்களிடம் பேட்டி எடுக்கும் போது ‘படைப்பு வாசிப்பவனை மேம்படுத்துமா?’ என்று கேட்டு வைக்கிறார்கள். இது ஒரு பொத்தாம்பொதுவான கேள்வியானாலும் பொது ஜனங்களுக்கு தாங்கள் செய்வது தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்ற நம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேலும் எழுத்தாளரும் சிந்தனையாளரும் சமூக மேம்பாட்டுக்கு உதவுபவர்கள் என்ற போதனையம்சமும் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் கவிஞர் பிரான்சிஸ் கிருபா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலையான நிலையில் ஒரே நாளில் வெளியான கருத்து நிலைகள் தான் எத்தனை! சித்தர்கள் தங்களை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்ளாது அடையாளத்தை மறைத்து சாமானியரைப் போல வாழ்வார்களாம். இன்னார் என்பது தெரிந்தால் பொதுஜனம் என்ன செய்யும் என்பது கண்கூடு.

53832743_956612997881101_396121355645563

இங்கே பெருவாரியானோர், படைப்பு மனநிலையை எவ்விதத்திலும் புரிந்துகொண்டவர்களாக இல்லை. மிக அணுக்கமான எழுத்தைக் கூட எழுத்தாளரின் சிந்தனைத் திறன், மொழிவன்மை என்ற மேலோட்ட ரீதியாகவே எண்ணுகின்றனர். ஓர் அனுபவத்தைப் பெறாமல் அந்த அனுபவம் குறித்து எப்படி படைப்பாளி தன் படைப்பில் சித்தரிக்கிறான், அது எப்படி தத்ரூபமாக தன் வாழ்வோடு பொருந்துகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. Sensitivity. அதேபோல் ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்றொரு கேள்வியைக் கேட்டும் பக்கத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்படி எளிமையான சமூக எதிர்பார்ப்பின் அழுத்தம் ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம், நவீன இலக்கியத்தின் முன் ஒரு வாசகன் உள்ளே நுழையவே முடியாதபடி சமகால எழுத்துக்கள் பல முடிச்சுகளோடு மூடிக்கொண்டு இருக்கின்றன. இது வெகுவாக வாசகப் பரப்பைக் குறைத்து விட்டிருக்கிறது.

கலாரசனையுள்ள மனிதன் மேம்பட்ட மனிதன் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமுண்டா? இல்லை என்பதற்கு ஆதாரங்களை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள். படைப்பு வேறு படைப்பாளி வேறு என்பதற்கு ஒரு நிரூபணமாகவும் இதைச் சொல்லலாம். ஒரு சமூகம் யாரை ஆதர்சமாகக் கொள்கிறதோ அவர் மிருக இயல்பற்ற உன்னதமானவராக இருக்க வேண்டும். ஒரு துறையில் சாதித்தவர் முன்னிறுத்தப்படும் போது எல்லா வகைகளிலும் அவரை முன்னுதாரணமாக, கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு நம்மிடையே உண்டு. ஊடகங்கள் பிம்பங்களை வளர்த்தெடுக்கின்றன. பிம்பங்கள் நம்மை ஆள்கின்றன. இங்கு ஓஷோ அளவுக்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி பிரபல்யமடையாமல் (வாசிக்கப்படாமல்) போனதற்கு காரணம் ஜி.கி. பந்தை கேள்வியெழுப்பியவரிடமே தள்ளிவிட்டார். ஓஷோ சாய்வதற்கு இடம் கொடுத்தார். பின்பற்ற சரணாகதி அடைய ஒரு பாதையை உருவாக்கினார். ஜி.கி. எதுவும் செய்யவில்லை. தானே சிந்தித்து தானே விடை கண்டறிய வலியுறுத்தினார். சுய சிந்தனையைப் போல பயமுறுத்துவது வேறில்லை. இங்கு பெரும்பாலானோர் அவரவர் சிந்தனா சக்திக்கேற்ப ஏதாவது ஒன்றைப் பின்பற்றுபவராகத் தானே உள்ளனர்.

எவ்வித மறுமலர்ச்சியும், சமூகக் கட்டுக்குள்ளிருந்து பிறப்பதில்லை. சமூகத்தின்க்ஷீணதசையை உணர்ந்து, அதிலிருந்து  அதன் பிரதிபிம்பமான தன்னிலும் இருந்து  விடுதலை அடையும் தனி மனிதர்கள் மூலமே உண்டாகிறது. சமூகம், மனிதன் என்றஇரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து, ஒன்றைச் சார்ந்து ஒன்று நிற்கிறது என்றஉண்மையை இது மறுப்பதாகாது. ஆனால் சமூகம், பூரண மனிதனிடமிருந்து சுவீகரித்தமதிப்புகளை வற்புறுத்தலாக்குகிறது; எனவே, அம்மதிப்புகளை வெளிப்படையாகமட்டுமே திருப்திப்படுத்தி, உள்ளூர அழுகிக் கொண்டு போகும் நிலைமைக்குஆளாகிறது. அதோடு இனி வரும் தனிமனிதனைஅவனது உன்னத இயல்புகளைஇதே தன் அபத்தத்தைக் கொண்டு நசுக்குகிறது.”

 கோணல்கள்  அஃக், அக்டோபர், 1972

இந்த ஒன்றரையாண்டுகளோடு கசடதபற-வுடனான உறவையும் முறித்துக் கொண்டார் பிரமிள். கோணல்கள் ஒரு நீள் கட்டுரை. தமிழ் நவீன இலக்கியத்தில் நேர்ந்திருக்க வேண்டிய தான் எதிர்பார்த்திருந்த மாற்றங்களோ வளர்ச்சியோ நிகழாமல் கீழிறங்கிய தளத்தில் பரவலாக அடுத்த தலைமுறையினர் செயல்படுவதை இதில் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார். இவை இலக்கியப் படைப்புகளாக அல்லாது இலக்கியத் தயாரிப்புகளாக உள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

கல்லூரிக் காலத்திலேயே எனக்கு ஜெயகாந்தன் படைப்புகள் மீது ஒவ்வாமை உண்டு. அப்போது அதற்கான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. நடைமுறை வாழ்க்கையோ, மனிதர்களோ ஜெயகாந்தன் பாத்திரங்களில் பிரதிபலிப்பதில்லை. அவை ஆதர்சமான உருவாக்கங்கள். இலட்சியவாத பிம்பங்கள். இயல்பாக முற்போக்குவாதமுடையவை. எனவே சமூகத்தின் மாதிரிக் குறியீடாக பெருவாரிகளுடன் உரையாடல் நிகழ்த்துபவராக ஆனார். ஜெயகாந்தனை ஒப்பிட தி.ஜானகிராமன் எவ்வளவோ மனதுக்கு நெருக்கமாக இருந்தார். ஒருநாளின் ஒரு கணம் இன்னொன்றாக இருப்பதில்லை. ஒரு புள்ளியில் கணமும் நில்லாது தட்டழியும் மனம். எத்தனை வித மனோ நிலைகள். எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன? தேன் தடவப்பட்ட சாத்தியமில்லா ஓர் உயர்குணத்தை பாத்திரத்தின் மீது ஏற்றிவைத்து, வாழ்வின் போக்குகளால் சிறிதும் பிசகின்றி அக்குணாம்சத்தின்படி நடப்பவர் எந்த இலோகத்தில் இருக்கிறார். எதிர்கொள்ள வேண்டியவை அனைத்தும் உள்ளே தான் உள்ளன. அகச் சிக்கல்கள் சிறிதும் அணுகாத பாத்திரங்கள் போலியானவை. ஜெயகாந்தனின் கதைகள் ஒரு முன்மாதிரி இலட்சிய வடிவத்தை மனதில் கொண்டு குறிப்பிட்ட வாழ்வியல் சம்பவங்களை அப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதங்களை வலிந்து படைப்புகளாக உருவாக்கி ஒரு வாழ்வியல் நெறியை போதிக்கின்றன.

53649985_300069797326644_879524128294856

புதுமைப்பித்தனது உக்கிரப்பார்வை, ஒரு பாஷனாக ஜெயகாந்தன் கையில்உருப்பெற்றது. ஜெயகாந்தனின் எழுத்தில் பத்திரிகைத் தேவைக்காகஎழுதுபவர்களிடமுள்ள போலித்தனம் ஒன்று தலைகாட்டுகிறது; கலையுருப்பெறமுடியாத அரை வேக்காட்டுத் தத்துவங்கள் தென்படுகின்றன. சாமான்யஇரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் களேபரமாக வெளியிடுவது கலையல்ல; ஆசிரியரது மேற்படி தத்துவங்களின் நூலிழுப்பில் ஆடும் பொம்மைகளாக, ஏற்கெனவேவரையறுக்கப்பட்ட இயல்புகளுடன் இயங்கும் பாத்திரங்கள், உயிருள்ளபாத்திரங்களுமல்ல. கதாபாத்திரங்களின் செய்கைகளும் கூற்றுக்களும், ஒருகொள்கையையோ தத்துவத்தையோ பறைசாற்றவென்றே தொழிற்படுவதன் மூலம், மனித வாழ்க்கையானது பிரதிபலிக்காது; குறிப்பிட்ட கொள்கையும் தத்துவமுமேபிரதிபலிக்கும். இப்படி, உயிர்ப்பொருளின் பலியில் பிறப்பது பிரசாரமே. ஜெயகாந்தன்எந்த வகையான கருத்துக்களுக்குக் கூடாகக் கதாபாத்திரப் பொம்மைகளைத்தயாரிக்கிறரோ, அவ்வகைக் கருத்துகள், மனிதனின் அடிப்படைப் பலவீனங்களின்முன்னால் தவிடுபொடியாகின்றன என்று காணத்தக்க தீட்சண்யம் புதுமைப்பித்தனுக்குஇருந்தது.”

இந்தக் கோணல் எழுத்துவிலேயே தொடங்கி விட்டதாக பிரமிள் சந்தேகிக்கிறார். சி.சு.செ. புதிய வகை எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் பழைமையில் ஊறிப் போயிருந்தது, ஓர் அறிவு எதிர்ப்பு வாதத்தின் இழை என்கிறார். உதாரணத்திற்கு வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் எழுத்து இதழில் தத்துவம், ஓவியம் ஆகிய துறைகளுக்கும் விரித்து அடிப்படைகளை ஆராய வசதி கேட்டதற்கு சி.சு.செ. மறுத்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஜெயகாந்தனை மட்டுமின்றி அசோகமித்திரனையும் சாடுகிறார். இவர்கள் இருவருமே யந்திர எழுத்தாளர்கள். தேவையற்ற வெற்று விவரணைகள், கதையில் உருவாக்கப்படும் தெளிவின்மை (மௌனி கதைகளில் காணப்படும் தெளிவின்மைக்கும் இதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு) கலைத்தன்மையைச் சிதைப்பதாக உள்ளது என்கிறார். இதற்கு அடுத்ததாக உள்ள கட்டுரையில் அ.மி.யின் ‘பிரயாணம்’ என்ற சிறுகதை ஜாக் லண்டனின் கதையைத் திருடி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இரண்டு கதைகளையும் வாசித்தவன் என்ற முறையில் எனக்கு இது ஏற்கும்படியாகத் தோன்றவில்லை. அந்தக் கதையின் தூண்டுதலால் எழுதியது என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது மற்ற கதைகளில் இருந்து இந்தக் கதை தனித்து நிற்பது என்னவோ உண்மை.

இந்தக் கோணல்களுடன் உள்ள எழுத்துக்களை இலக்கியத் தயாரிப்புகள் என்கிறார் பிரமிள். இது ஒரு பிரமாதமான சொற்பிரயோகம். இலக்கியத் தயாரிப்பு என்றால் என்ன? தன்னெழுச்சியோடு படைப்போடு ஒன்றி படைப்பு மனநிலையில் எழுதப்படாது, எழுத்து வன்மையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கதையைத் தானே தோதுக்குத் தகுந்தபடி உற்பத்தி செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலை இலக்கியத் தயாரிப்பு என்று சொல்லலாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கியத் தயாரிப்புக்கும் வித்தியாசம் காண்பது எளிதென்றாலும் எழுத்தாளர் மீதான அபிமானத்தால், ஏற்கெனவே இரசனை ரீதியாக ப்ரீதியை எழுத்தாளர் மேல் வாசகர் ஏற்படுத்திக் கொள்வதால் இதை உணர்வது சிரமமாகி விடுகிறது. இது மட்டுமின்றி வாசகரின் தகுதி நிலையையும் பொருட்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் தன் கைக்கெட்டும்படி பறிக்கக் கிடைக்கும் பழமே சுவையானது என்று சாதிப்பவர்கள். மேலும் உலக மயமாக்கல் படைப்பை ஒரு நுகர்பொருளாக ஆக்கிவிட்டது. அதிக விற்பனை, பெருவாரியானோர் ஆதரவு, சந்தை இவையே தர நிர்ணயக் காரணிகளாகிப் போயின. இதில் யாரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி திகிலூட்டுவதாயும் அயற்சியளிப்பதாகவுமே உள்ளது.

ஓர் எழுத்தாளர் அல்லது வாசகர் ஒருவரின் படைப்பைக் கொண்டாடுவதன் காரணங்கள்: 1) அவரால் அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது 2) அவரது வாழ்வனுபவத்தோடு நெருக்கமாய் இருக்கிறது 3) படைப்பாளியின் உணர்வுத் தளத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது 4) குறிப்பிட்ட எழுத்தாளரோடு தனிப்பட்ட முறையில் உள்ள பழக்கம் 5) அரசியல் நிலைப்பாடு. இன்னும் பல காரணிகளை அடுக்கலாம். ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் புகழ்வதைக் கொண்டு பாராட்டும் எழுத்தாளரின் வாசகர்களும் அதையே பின்பற்றுகின்றனர். எழுத்தாளர் தனது உள்வாங்கும் திராணிக்கேற்பவோ அல்லது தனது அரசியலுக்கு ஏற்பவோ தான் ஒரு படைப்பைப் பற்றிப் பேசுகிறார். இது ஒரு போதாமை இன்னொரு போதாமையை முன்னிறுத்தி, அப்படி முன்னிறுத்தப்பட்டவர் அதனினும் கீழான ஒரு படைப்பை/படைப்பாளியை முன்னிறுத்தி ஒரு தொடர் சங்கிலியை உருவாக்குகிறது. இது இலக்கியச் சூழலை மேலும் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் செயல் தொடர்.

இந்தத் தொடர் கட்டுரைகளில் சிலநேரம் இதில் தனியே சொல்ல என்ன இருக்கிறது, இந்தக் கட்டுரையை அப்படியே தான் எடுத்து எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதே போல் ஏற்கெனவே வாசித்ததைத் திரும்ப வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போலும் தோன்றியிருக்கிறது. பிரமிள் விமர்சனங்கள் இலக்கிய பாராயணத்துக்கு உரியவை. எழுத்தாளர்கள், எழுத முனைபவர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள் அவசியம் பிரமிள் தொகுப்புகளை வாசிக்க வேண்டும். இப்படியான ஒரு கட்டுரைதான் ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்’ (ஞானரதம், மார்ச் 1973).

இந்தக் கட்டுரையில் செல்லப்பாவின் இலக்கியப் பங்களிப்பை குறிப்பாக ஒரு பதிப்பாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் எழுத்து இதழ் வழி அவரது சாதனைகளை விரிவாக விளக்குகிறார். க.நா.சு. ஆரம்பம் முதலே அபிப்பிராயங்களும், பட்டியல் போடுவதையுமே விமர்சனமாகக் கொண்டிருந்தபோது சி.சு.செ. ஆதாரப்பூர்வமான விமர்சனத்தைக் கைக்கொண்டார். தமிழில் விமர்சனம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் க.நா.சு. என்றாலும் அவர் செல்லப்பாவின் ஆய்வுமுறையை அநுசரிக்கவில்லை.

எழுத்துவில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர், விமர்சனம் என்பது கலைப் படைப்பைத் தொட்டும் தொடாமலும் பூனைக்குட்டி ஒரு பொருளைத் தொடுவது போல தொட்டுப் பார்ப்பது தான் என்று எழுதினார். ஆனால், இந்தத் தொட்டும்தொடாத நிலை என்பது அபிப்ராயம் சொல்வதோ, பட்டியல் போடுவதோ அல்ல; கலைப்படைப்பையே தீண்டி ஆராய்வது தான். எவ்வளவு தான் ஆழ்ந்து அலசிஆராய்ந்தாலும், அது இந்தத் தொட்டும் தொடாமலும் சென்ற அளவுதான். ஏனெனில், எத்தகைய விமர்சனமும் கலைப்படைப்பை அப்பிப்பிடித்து ஒட்டி இழுத்து விடமுடியாது. தொட்டுக்காட்டிவிட்டு, விலகி நிற்பது தான் விமர்சனம். .நா.சு.வின்அடிப்படையற்ற அபிப்ராயங்கள் அவரது செல்வாக்கின் தளத்தில் பிறந்தவையானாலும், இன்று, .நா.சு.வை மறந்து விட்டு அவரது கட்டுரைகளை மட்டும் படிப்பவனுக்கு, ‘நான் சொல்கிறேன் கேள், இவர்கள் தான் இலக்கியாசிரியர்கள் என்றதொனியாகவே அவை சப்திக்கும்.”

53602123_2068481359866607_30396371237632

இப்படி ஆய்வுப்பூர்வமாக செல்லப்பா விமர்சித்ததினால் தான் உண்மையான இலக்கியத்தின் ஆழமும் அகலமும் இனம் காணப்பட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்களை அவர்கள் இடத்தில் வைக்க முடிந்தது. மேலும், இலக்கிய உலகில் ஒருவருடன் நட்பை வளர்த்துக் கொள்வது, அன்னாரிடமிருந்து முன்னுரை, பின்னட்டை வரிகள், தன்னைப் பற்றி சில வரிகள் எழுத வைப்பது, குறைந்தபட்சம் எதிர்மறைக் கருத்துகள் வரவிடாமல் செய்வது என்ற அளவில் தான் உள்ளது. படைப்புக்காக எழுத்தாளருடன் நேர்மையாய்ப் பழக வாசகராலேயே சாத்தியப்படுகிறது.

கருத்துலகில், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ, செஞ்சோற்றுக் கடனுக்கோஇடமில்லை. அதெல்லாம், கருத்துலகிற்குப் புறம்பான பிதிர் வழிபாட்டுமனப்பான்மைகள். இது கருத்துலக தர்மம். விமர்சனத் துறையில் மனிதர்களல்லமுக்கியம்  மதிப்பீடுகள் தான்.”

ரசனை என்று எதைச் சொல்கிறோம்? ஒரு புதினம் பிரமாதமாய் இருக்கிறது என்ற அபிப்பிராயத்தில், அந்தக் கதை ஒரு துன்பியலாக இருக்கையிலும் இதையே சொல்கிறோம். இது வார்த்தைச் சிக்கலா இல்லை படைப்பாளியின் நடை இலாவகத்தை மட்டும் பார்த்து அது தரும் வாழ்வனுபவத்தைத் தவற விடுவதால் வரும் வார்த்தையா? ரசனை என்பது ஒருவித மேட்டுக்குடித்தனத்தோடும், கலையை நுகர்வுபொருளாகவும் கொள்ளும் அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. காஃப்கா, தஸ்தயோவ்ஸ்கியின் படைப்புகளைக் கடப்பது எத்தனை படபடப்பானது. மனதை உலுக்கியெடுக்கும் படைப்பை ஒருவர் அருமையாக இருக்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?

கலைத்துறை எதுவாயினும், இலக்கியம் உட்பட, உண்மைக்கு வசப்பட்டது. நிதர்சனஇயல்புகளையே அடிப்படையாகக் கொண்டது. வாழ்வின் கதியும் மனித இயல்பும், மனிதன் இவற்றை எதிர்த்து, இவற்றுக்கு அடிமைப்பட்டு, ஈடுகட்டி, வென்று, தோற்று, வாழ்ந்து சமைக்கும் நிதர்சனமும் கலையுருப் பெறும்போது அது மனதைக் கவராது; படிப்பவனின் மனதைத் தாக்கும். விழிப்பூட்டும். அவனைத் தன்னுள் ஆழ்த்தி எடுத்துஉலுக்கி விடும். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், ‘பாதிப்பு என்ற ஓர்அதிர்ச்சியே நேர்ந்திராது. இந்தப் பாதிப்பின் விளைவு தான் பாரம்பரியம். இந்தஇயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், மனித அறிவின் வரலாறே இன்று நாம்அறிந்துள்ள வகைக்கு வந்திராது. தஸ்தயேவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களையும்குற்றமும் தண்டனையுமையும் கதைக்காகப் படித்து ரசிப்பவர்களை எனக்குத்தெரியும். தஸ்தயேவ்ஸ்கி எழுப்பும் நிதர்சனம் இவர்கள் மீது இறங்கும் போது, எருமைமாட்டின் முதுகில் பெய்த மழையாகத்தான் முடியும்.”

கோணல்கள், இலக்கியத் தயாரிப்பு குறித்து பார்க்கையில் ஜெயகாந்தன் மீதான பிரமிளின் விமர்சனத்தைப் பார்த்தோம். இது ஒருவகையில் அவர் அடிப்படையில் கம்யூனிஸ்டாக இருந்ததின் காரணமாக இருக்கலாம் என்கிறார் பிரமிள். வெளிப்படையான, சட்ட திட்டங்களுக்குட்பட்ட விஷயங்களில் பிய்த்து உதறும் இந்த மெட்டீரியலிஸ்ட்கள் அகவயமாய்ப் போவதாய் இருந்தால் தட்டுத் தடுமாறி பாவ்லா காட்டி ஏமாற்றி விடுவார்கள். ஸ்தூலங்கள் எளிமையானவை. 1+1=2 என்ற கணக்கைப் போல குழந்தைகூட எளிதில் கற்றுக்கொள்ளும். மனதையும் ஆழ்மனதையும் கற்றுத்தரப் போவது யார்? இதனோடல்லவா ஒவ்வொரு மனித ஜீவனும் போராடிக் கொண்டிருக்கிறது. மனதுக்கு எதிரான, சமூகத்தால் அடக்கப்பட்ட ஆழ்மனம் இவற்றுக்கு எதிராகவல்லவா இருக்கிறது. உலோகாயதத் தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டால் மனிதன் சமாதானம் பெற்று தன்னிறைவை அடைந்துவிடுவானா? புறத்தை மட்டுமே அணுகுவதில் ஒரு மழுங்கல் இருக்கிறது. ஒருவித உணர்திறன் (sensitivity) குறைபாடு.

தீயும் பிரச்சாரமும் (சதங்கை, ஆகஸ்ட் 1973) இதழில் இதை மார்க்ஸியத்தின் மீதான குறையாக முன் வைக்கிறார் பிரமிள்.

உளவியல் என்பதே உள்மனம் பற்றிய கொள்கையின் பெருக்கமாகும். அது விழிப்பின் போது செயல்படும் மனத்துடன் முரண்படுகிறது. ஆனால் விழிப்பு நிலையின்தேவையான பொருளாதாரத் தேவை தான் மனிதனின் பூரணமான நோக்கு என்றுஅறுதியிட்டுக் கூறும் மார்க்ஸியம், இதை ஒப்புக்கொள்ளாது. ஒப்புக்கொண்டால், மார்க்ஸியம் பொருள்முதல்வாதத் தத்துவமில்லை. ஃப்ராய்டுக்கும்மார்க்ஸுக்குமிடையில் உள்ள அடிப்படை முரண்பாடு இது. மார்க்ஸ் மனித மனத்தின்பேராழத்தை, அதன் எதிர்பாராத தன்மைகளை, இருட்குகைத் தேவைகளைநிராகரித்த அல்லது அறியாத தத்துவவாதி என்பது பிரசித்தமானது. அவர் ஒரு பெரியதார்மீகவாதி. உலக அரசியலில் ஒரு பெரிய வியாதியைத் தீர்ப்பதற்காக அவர் செய்தரணசிகிட்சை, வேறொரு பெரிய வியாதிக்குக் காரணமாகி விட்டது. அதுதான்ஆன்மீக வறட்சி.”

காந்தி கூட இதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேவைக்கதிகமான உற்பத்தி, தேவைக்கதிக நுகர்வைக் கொண்டு வரும். இது மனிதனிடம் ஆன்மா என்ற ஒன்றை மறைத்து விடும் என்றார். நாத்திகவாதிகளும் மார்க்ஸியவாதிகளும் ஒட்டிக்கொள்வது இதுமாதிரியான சில புள்ளிகளில் தான். ஆன்மீக வறட்சி, ஒருவித மேம்போக்கான ஆழமற்ற, சென்சிடிவிடி இல்லாத குணாம்சம் இத்யாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து ஓரினமாகி விடுகின்றனர்.

சமையலின் போது கத்தி வெட்டும், நெருப்பு சுடும்; கத்தி சுடாது, தீ வெட்டாது. முயன்றால், சமையலே நடக்காது. இது போலத்தான், அரசியல் வாழ்வுத் துறையில்பிரச்சாரத்தின் வேலையும் கலையின் வேலையும். பிரச்சாரம் பிரச்சாரமாகவும், கலைகலையாகவும் இருப்பதுதான், அரசியலுக்கும் வாழ்வுக்கும் செம்மை தரும்.

இங்கு கம்யூனிஸம் கலைஞனிடமிருந்து கௌரவத்தைப் பெற வேண்டுமானால், இந்தியாவில் அது காட்டிவரும் குருட்டுத் தன்மைகளிலிருந்து விழிப்படைய வேண்டும். இல்லாவிட்டால், சிந்தனா சக்தியோ எழுத்தாற்றலோ இல்லாத சந்தர்ப்பவாதிகளின்தற்காப்புக்காகவே கம்யூனிஸ இலக்கிய சித்தாந்தம் பயன்படும்  தற்போதுதமிழ்நாட்டில் நடப்பதுபோல.” (சதங்கை, செப்டம்பர் 1973)

சதங்கை இதழில் (பிப். 1974) பிரமிளின் உளவியல் குறித்த கட்டுரைக்கு வந்த திரு. தமிழவனின் எதிர்வினைக்குப் பதில் சொல்கிறார் பிரமிள். தமிழவனின் கேள்விகள்:

உள்மனம் பற்றிய கொள்கை கண்டுபிடிக்கப்பட்ட 1885ஆம் ஆண்டுக்கு முந்தி, உளவியலே இல்லையா?’

பிராய்டு தன்னை பொருள்முதல்வாதி என்றுதானே சொல்லிக் கொண்டார்?’

உள்மனம் ஆன்மீகமானது அல்ல; விஞ்ஞானப்பூர்வமாய் நிரூபிக்கப்படக்கூடியஉண்மை

உள்மனம் (ஆழ்மனம்/அடிமனம்) வெளிமனத்துக்கு நேரெதிரானது. விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒருவருக்குள் இருவேறு எதிரெதிர் மனங்கள்? ஏனெனில், புற உலகத்தோடு ஒத்த மனத்தோடு நம்மால் இயங்க முடிவதில்லை. பிளவு இயல்பாகவே உருவாகிறது. குழந்தை சாக்லேட் கேட்டால் அது மறுக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தையின் ஆசை உள்ளுக்குள் அழுத்தப்படுகிறது. அது கனவு நிலையில் வெளிப்படுகிறது. இவ்வாறே சொல்லிய சொல்லாத, ஆசைகள், கோபங்கள், இயலாமைகள் இன்னும் என்னென்னவோ உள்ளே இருளுக்குள் திரிகின்றன. தியான நிலையில் ஏற்படும் ஒருமித்த மனநிலையில் இரு மனங்களும் ஒன்றாகின்றன. வெளிமனம் மௌனிக்கும் போது அடிமனம் மேலேறி வருகிறது. அந்நேரம் அதைக் கட்டுப்படுத்தாமல் அப்படியே அனுமதிக்கும் போது இரு மனங்களும் ஒரேகதிக்கு இயங்க ஆரம்பித்து தன் விழிப்பு சாத்தியமாகிறது. இது ஆன்மீகம்.

உள்மனம் ஆன்மீகமானது என்று நான் கூறவில்லை என்பதும், உள்மனம்  வெளிமனம்என்ற பாகுபாடு இல்லாநிலையில் கிடைக்கும் தரிசனமே ஆன்மீகமானது என்பது தான்என் நோக்கு என்பதை, திரு. தமிழவனுக்கு எனது பதில் புலப்படுத்தியிருக்கும். உள்மனத்தை நிரூபிக்கத்தான் விஞ்ஞானத்தால் முடிகிறது. ஆனால் உள்மனம்  வெளிமனம் என்ற பாகுபாட்டை, விஞ்ஞானம் மனித மனத்திலிருந்து களைந்து விடவில்லை என்பதையும் அப்படிக் களைய integration என்ற ஒன்றிப்பு வேண்டும்என்பதையும், சில நவீன மனவியல்வாதிகள் Alan W. Watts, Eyesenk போன்றோர்வலியுறுத்துகின்றனர் என்பதையும், திரு. தமிழவனுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இந்த integration-க்கு விஞ்ஞானம் துணை செய்ய முடியாது என்பதும், தனிமனிதனேதன்னையறிய முயல வேண்டும் என்பதும்தான், பிராய்டிலிருந்து இன்றுவரைதெரியவந்துள்ள உண்மை.”

கனவில் செயல்படும் உள்மனம், விழிப்பு நிலையிலுள்ள மனத்தோடு முரண்படுவதாகக் கூறுவதை மறுப்பதாகவும் தமிழவன் கூறுகிறார். அதாவது ‘புற உலகோடு ஏற்படும் தொடர்பால்’ Idக்கு (அடிப்படைத் தேவையும் நினைவும்) Ego உண்டாகிறது என்கிறார் தமிழவன். இங்கே தொடர்பு என்ற வார்த்தை சரியானதல்ல. தொடர்பு என்பது ஒப்பந்தம் போன்ற நேர்மறையான அர்த்தம் கொடுப்பது. குழந்தையின் ஐடி நிலையின் தேவையும் வேளியுலகு அதற்கு விதிக்கும் தடைகளும் ‘தொடர்பு’ என்ற வார்த்தைக்குள் வராது. முரண்நிலையே உருவாகும் என்கிறார் பிரமிள்.

 

http://tamizhini.co.in/2019/05/22/பிரமிள்-தனியொருவன்-பகுத-3/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரமிள்: தனியொருவன் (பகுதி 5) – பாலா கருப்பசாமி

25.5.2019 அன்று திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுகவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரமிளின் எழுத்துகளை வெளியிடும் உரிமை பெற்று தொகுப்புகளைக் கொண்டு வந்த பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். நான்-பிரமிள் விமர்சனங்கள், எழுத்தாளர் போகன் சங்கர்-பிரமிளின் ஆன்மீகம், எழுத்தாளர் சுந்தர்காளி-பிரமிள் உரையாடல், காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன்-பிரமிளின் கதைகள் குறித்து உரையாற்றினோம். இந்நிகழ்வில் நான் வாசித்த கட்டுரையை கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

பிரமிள் எல்லா வகையான குழுக்களுக்கும் எதிரானவர். ஜே.கிருஷ்ணமூர்த்தியை ஆதர்ஷமாகக் கொண்ட தனிநபர்வாதி அவர். பிரமிளின் எழுத்துகளில் சமூகக் குரலும் ஓங்கி ஒலித்தது. ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒரு துளியே. தன்னை உண்மையாய் பிரதிபலிப்பவன் ஒட்டுமொத்த உலகையே பிரதிபலிக்கிறான். கலை கலைக்காகவே என்று இலக்கியத்தின் எல்லையை குறுக்கிக் கொண்டவரில்லை அவர். திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான். பிராமணியத்துக்கு எதிராக நிறுத்த வேண்டியது திராவிட அரசியல் தான் என்பது அப்போதைய அவரது எதிர்வினையாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே அண்ணா, பெரியார் போன்றோரை அவர் ஆதரித்தார். அதை எதிர்வினையாக மட்டுமே கருதலாம். இடதுசாரிகளிடமும் திராவிடக் கட்சியிலும் அவர் வைத்த முக்கியமான விமர்சனம் அவர்களது ஆன்மீக வறட்சி. இன்று பிரமிளின் பிராமிணியத்துக்கு எதிரான கலகக்குரலை முன்னிறுத்தி சில குரல்கள் எழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அவரது இலக்கிய மதிப்பீடுகளை மீட்டெடுக்க வேண்டியதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளது. பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களாக அல்லாமல் விரிவான விமர்சனங்கள் அவரது கவிதைகள் மீது வைக்கப்பட வேண்டும். அவரது விமர்சனக் கோட்பாடுகளைப் பின்பற்றி சமகால இலக்கியத்தின் மீதான விமர்சனப் பார்வை விழ வேண்டும். அதுவே பிரமிளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வழி.”

அண்ணா, பெரியாரை ஆதரித்தது அப்போதைய எதிர்வினை மட்டுமே என்று நான் எழுதியிருந்ததை வைத்து ஒரு சிறு விவாதம் எழுந்தது. நான் கூறியிருப்பதை தர்க்கப்பூர்வமாக மட்டுமே நிரூபிக்க இயலும். அதேயளவுக்கான தர்க்க நியாயம் எதிர்த்தரப்பிலும் நிச்சயம் உண்டு. என் வாசிப்பு முறை வார்த்தைகள் அர்த்தங்கள் தாண்டி ஒட்டுமொத்தமாக ஆசிரியரின் பார்வையைத் தொட முயற்சிப்பது. ஓஷோவின் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘look where I’m pointing to, don’t bite my finger’. வார்த்தைகளை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் பிழையாகவே புரிந்து கொள்ள நேரிடும். அடிப்படைவாதிகளிடம் உள்ள சிக்கலே அதுதான். என்னுடைய வாதம் இது தான். பிரமிள் ஆரம்பகட்டத்தில் திராவிட இயக்கம் பற்றி எதுவும் குறிப்பிடும்படி பேசவில்லை. இங்கே வந்தபின் இலக்கியத்தில் பிராமணியத்துவ குழு மனப்பான்மைக்கு எதிராகத் தொடர்ந்து எழுத்தின் வழி எதிர்வினை புரிந்த போது, திராவிட இயக்கத்தின் எழுச்சியை அதன் விளைவுகளைப் பார்த்து அதனை ஆதரித்தார். ஈ.வெ.ரா.வையும் அண்ணாவையும் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிட்டு (லயம் இதழ் 11, ஜனவரி 1995) அவர் விவாதித்திருக்கும் கட்டுரை நேர்த்தியான ஒன்று. இது வெளியான வருடம் 1995 என்பதை, அதாவது அவர் எழுதத் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பிறகே இப்படியொரு கட்டுரை வருகிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். பிரமிள் தனது கருத்துக்களை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளத் தயங்கியதில்லை. அதே நேரம் அதற்கான காரணங்களை விரிவாகவும் சொல்லிச் செல்கிறார். எனவே, பிரமிள் சொன்னார் என்று மேற்கோள்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

அதே போல் பிரமிளுக்கு இலக்கியத்தை விட ஆன்மீகமே பிரதானம். சத்தியத்தின் வழி பாதையற்ற பாதை எனச் சொன்ன ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை ஏற்றுக் கொண்டவர். அவரே தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி, திராவிட இயக்கத்தின் பெருங்குறையே அதன் ஆன்மீக வறட்சி தான். சுயமரியாதைக்கும் சமூக நீதிக்கும் போராடிய இயக்கத்தில் வள்ளலார் போன்ற சாதியத்துக்கு எதிரான சமத்துவத்தை வலியுறுத்திய ஆன்மீகவாதிகளையும் ஆன்மீகக் கூறுகளையும் இணைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பியிருந்தால் அது ஒரு முழுமையான இயக்கமாக அமைந்திருக்கும். பிராமணியத்தை தனிமைப்படுத்தியிருக்கலாம் என்று பிரமிளே சொல்லியிருக்கிறார். அடிப்படையில் பிரமிள் ஒரு நடுநிலைவாதி. ஒரு நடுநிலைவாதி ஆன்மீகத் தளத்தில் வலதுசாரியாகவும், சமூகத் தளத்தில் இடதுசாரியாகவும் இருப்பது இயல்பு.

ஜூலை 1975ல் ‘இளவேனில் ஒரு எதிரொலி’ என்ற கட்டுரையை எழுதுகிறார் பிரமிள். இதில்தான் முதன்முதலாக வெங்கட் சுவாமிநாதனுடன் முரண்பாடு ஆரம்பிக்கிறது. இதன்பிறகு ஒருவருக்கொருவர் கடுமையாய்த் தாக்கிக் கொண்டார்கள். வெங்கட் சுவாமிநாதன் பிரமிளைத் தாக்கி எழுதத் தோதாய் யாத்ரா இதழை உபயோகித்துக் கொண்டார். இந்தக் கட்டுரை ஆச்சரியமூட்டும் ஒன்று. முரண்பாட்டுக்கான காரணம் வெகு சாதாரணமானதொரு குற்றச்சாட்டு. எனக்கென்னவோ இதற்குப்பின் எழுத்தில் வராத வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. பிரமிள் 1970 வாக்கில் இலங்கையிலிருந்து தனது சொத்துகளை விற்றுவிட்டு (கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாயுடன் வந்தார் என்று வைகை குமாரசாமி குறிப்பிடுகிறார். 70களில் ஒரு இலட்சம் என்பது இன்றைய தேதிக்கு பலமடங்கு மதிப்புள்ள பணம்) இங்கே வந்தபின்பு சுந்தர ராமசாமியுடனும், வெங்கட் சுவாமிநாதனுடனும் தான் சில வருடங்கள் இருந்தார். தனது நண்பருக்கு எழுதும் ஓர் கடிதத்தில் 70-75 காலகட்டத்தையே தான் நினைவுகூற விரும்பவில்லை, அந்தக் காலத்தில் பல நாட்கள் முழுப் பட்டினியாக இருக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 1970ல் அவரிடமிருந்த பணம் என்னாயிற்று? அதே சமயம், அவரது பதிப்பாசிரியர் கால.சுப்ரமணியம் பிரமிளிடம் காசே தங்காது, எப்படியாவது செலவழித்துவிடுவார் என்று குறிப்பிடுகிறார்.

சரி, இந்த ‘இளவேனில் ஒரு எதிரொலி’ கட்டுரையைப் பார்ப்போம். இளவேனில் என்ற இதழில் வெ.சா. ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் ‘இன்றைய வர்த்தகச் சூழலின் மனோபாவங்களை உணர்ந்துள்ள சுரணையும் தீக்ஷண்ய நோக்கும் கலையுணர்வும் கொண்ட ஒருவனின் கவனம், இன்று இச்சூழலின் பேரில்தான் விழும். இச்சூழலை மாற்றி, திரும்பவும் ஒரு கலாபூர்வமான மரபை ஸ்தாபிக்கும் முயற்சியில் அக்கறை,’ என்ற வரிகளைப் பயன்படுத்துகிறார். இதை பிரமிள் ஆட்சேபிக்கிறார். பிரமிளின் வாதம் என்னவென்றால், மாற்றம் என்பது தானாகவே நிகழ்வது. போலி செய்யாத தன்னளவில் படைப்பூக்கத்துடன் வெளிப்படும் கலைஞர்களின் வருகை தானாகவே மாற்றத்தைக் கொண்டு வருமே ஒழிய, இது உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. இதனால் என்னாகிறதென்றால் இலட்சியவாதம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையும் நோக்கமும் கொண்டவர்களை அவர்களின் தகுதி/திறனை மீறி ஆதரிக்க வேண்டி வருகிறது. இது தட்டையான படைப்புகளை உருவாக்குகிறது என்பது பிரமிளின் வாதம். இங்கே இன்னொரு குற்றச்சாட்டையும் வெ.சா. மீது பிரமிள் வைக்கிறார்.

‘அவரது கலையுணர்வு சிருஷ்டிபூர்வமானதல்ல, ரசனாபூர்வமான ஒன்று’

கலையுணர்வில் அதென்ன சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்?

முந்தைய கட்டுரையில் ஓர் இடத்தில் படைப்பு மனநிலை குறித்துப் பார்த்தோம். வாசகர், படைப்பு மனநிலையை அடைவதே சரியான வாசிப்பு. அந்நிலையில் படைக்காவிடினும் வாசகரும் எழுத்தாளரோடு அம்மனநிலையில் பங்கு கொள்கிறார். இத்தகைய கலையுணர்வே சிருஷ்டிபூர்வமானது. மாறாக ரசனாபூர்வமானது என்பது ஒருவித மேட்டுக்குடித்தனமான, அனைத்தையும் இரசனை என்ற அளவீட்டின்படி விலகி நின்று பார்ப்பது. இதில் படைப்பாளியின் உணர்வுத்தளத்தின் ஆழத்துக்குள், படைப்பு மனநிலையை வாசிப்பவர் தொடுவதில்லை. எளிமையாகச் சொல்வதென்றால், முதலில் சொன்ன வாசகர் வாசிப்பது படைப்பை, இரண்டாவதுள்ளவர் வாசிப்பது பிரதியை.

1976ல் பிரமிளின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ’கைப்பிடியளவு கடல்’ வெளிவந்தது. அவர் ஆரம்பத்தில் கொண்ட கருத்தியலுக்கும் இந்தக் காலகட்டத்துப் புரிதலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அதை விவரிக்கிறார். அது அவர் எந்தளவு மேலும் கூர்மையான பார்வையைக் கொண்டவராக மாறியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இந்தப் பார்வையை அவர் அடைந்ததற்குப் பின்புலமாக அவரது அகமுக அவதானமும் ஆன்மீக நாட்டமுமே காரணம் என்று சொல்லலாம்.

மனம் விட்டுச் சொல்வதானால், கவிதைகளை எழுதுகிற மனிதனிடத்தே உள்ள ஒன்றுதான் கவிதை உள்ளம் என்ற பரவலான முடிபு, 1963லேயே என்னுள் விரிசலடைய ஆரம்பித்துவிட்டது. இருந்தும் எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக இந்த இருநிலைகளையும் இணைக்கிற மோப்பங்களைப் பிடிக்க அலைந்திருக்கின்றன. இணைப்புக்கு முரணான முடிபு நிச்சயம் பெற்றமைதான் இன்றைய விளைவு. ஏனெனில், உன்னதமான கணங்களில் கவிதை எழுதுகிற தன்மை செயல்படுவதே இல்லை, கவித்துவமான ஒரு தன்னிருப்பு மட்டுமே நிகழ்கிறது.

இது ஆழமாக தன்னைத்தானே அவதானித்ததினால், காலாதீதத்தின் சொற்களற்ற தன்மையோடு கவிதை வரிகள் உருவாவதைப் புரிந்துகொள்ள முயன்றதின் அதிதீவிர முயற்சியை மேற்கண்ட பத்தி காட்டுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கவிதை ஏன் உன்னதமான கணங்களில் மட்டும் உருக்கொள்ளும் ஒன்றாக நாம் கருத வேண்டும்? உதாரணத்திற்கு பகடிக்கவிதை கூட எழுதலாம். இதற்கு கீழே பிரமிள் தரும் விடை இருக்கிறது. உன்னதமான கணங்களில் கவித்துவம் நிறைந்திருக்கிறது ஆனால் அங்கே சொற்கள் இல்லை. கவித்துவ மனநிலை தன்னளவில் நிறைவானது. அது சொற்களின் வழி வெளிப்படுத்தும் உந்துதலைக் கூட துறந்துவிடும். அப்படியானால், கவிதை எங்குதான் அல்லது ஏன் உருக்கொள்கிறது? அந்த படைப்பு மனநிலை என்ன?

எங்குமே, கவித்துவமயமான அகநிலையின் சிகரத்தையடைந்த மகா புருஷர்களுள், அபூர்வமான ஒரு சிலரன்றி பெரும்பாலோர் எழுதிய எதுவும் கவிதையானதில்லை. ஏனெனில், வெளியீட்டை நாடுகிற மனோரூபம் சலனமயமானது. நிச்சலனமே லட்சியமானோர்க்கும் மௌனத்தின் வசமானோர்க்கும் வெளியீடு அநாவசியம், அல்லது இரண்டாம் பட்சம்.

இந்த நிலைகளை நாடாத – அடையாத – சலனமயமான உள்ளம், வெளியீட்டினூடே, அதுவும் ஒரு குறிப்பிட்ட உக்ரத்தை வெளியீட்டில் சாதிப்பதினூடேயே ஒருவகை நிம்மதி கொள்ளும். சோகத்தின், அவசத்தின் வயப்படுகிற நுண்ணுணர்வின் தேவை இது என முடிவுகட்டி, வெளியீட்டை நாடுகிற இயல்பு, மனித மனத்தின் முரண்பாடுகளிடையேற்பட்ட நுண்ணுணர்விலே தோன்றும் அதிசூஷ்மமான மூர்க்கமெனலாம். இந்த மூர்க்கத்தின் அகம்பாவ நிலைக்களனையும் நுண்ணுணர்வை அவச வயப்படுத்துகிற முரண்பாடுகளையும், விவேகபூர்வமான விழிப்பின் மூலம் சந்திப்பவனோ, மனசின் நிச்சலன ஸ்திதியை நிறைவேற்றி விடுகிறான். இவன் கவித்துவத்தினின்றும் பிரிக்கப்படாமல் அதனோடு ஒன்றி விடுபவன். தனது அவசங்களை வெளியிடுவதன் மூலம் ஒரு தற்காலிக நிம்மதியை-மனோலயத்தையல்ல, நிம்மதியை – அடைகிற கவிஞனோ, கவித்துவத்தின் சாகரத்திலிருந்து ஒரு கைப்பிடியளவு நீரை அள்ளி உலகிற்குச் சொற்கள் மூலம் அளிக்கிறான்.”

கவிதை உன்னதமான கவித்துவ மனநிலையில் பிறக்கிறது என்ற கருத்திலிருந்து அவர் இந்த முடிவுக்கு தனிநபராக தன்னையே விளக்காக்கி நகர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சொற்கள் இருக்குமிடம் பிளவுபட்ட நிலையில் நிகழ்வது. அப்படியானால் கவித்துவ உணர்வு கவிதையில் எப்படி கடத்தப்படுகிறது? நிச்சலன உள்ளத்தை அடையாதோர் அல்லது அதில் விருப்பமற்ற உள்ளம் உக்ரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் நிம்மதி அடைகிறது, அதுவே கவிதை. நுண்ணுணர்வு (இது கவித்துவ நிலையுடனும் ‘நான்’ என்பதனுடனும் இடையில் ஊசலாடுவது) தன் மேல் விழுந்த ஏதோ ஓர் அழுத்தமான உணர்வை, தாங்க முடியாத ஓர் கதியை வார்த்தைகளில் தீர்த்து நிம்மதி அடைகிறது என்று படைப்பின் நோக்கத்தைச் சொல்கிறார்.

பிரமிள் 1966 முதல் 1972 வரை எதுவும் எழுதவில்லை. இதற்குக் காரணம் வெளிப்படுத்தும் தன்மையானது சலனத்தைக் குறிப்பது. பிரமிளுக்கு இந்த இடம் சிக்கலாகிறது. வெளிப்படுத்தாமல் கவித்துவ மனநிலையில் இருப்பது கவிதை எழுதுவதை விட பேரனுபவமாகத் தோன்றுகிறது. சொல்லப்போனால் மௌனமே சிறந்த கவிதை என்று சொல்லி விடலாம். கவிதை எழுதும் மனதுக்கு நுண்ணுணர்வே அடிப்படை. Being sensitive. (Being sensitive is sick என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி). நுட்பமான மனம் எளிதில் பாதிக்கப்படுகிறது. அது தூண்டப்படவும், பாதிப்படையவும் எதிர்மறையாக எதுவும் நடக்கவேண்டியது கூட இல்லை. அது தானே தன்னொழுங்கில் ஒரு தூண்டுதலை நிகழ்த்துகிறது. இது ஆன்மீக நிலையை நோக்கி நகரும் வழி. ஆனால், அதை நாடாத சலனமுற்ற உள்ளம், அதை வார்த்தைகளில் கடத்திச் செல்கிறது. இதை பிரமிள்,

“நுண்ணுணர்வை அவச வயப்படுத்துகிற முரண்பாடுகளை விவேகபூர்வமான விழிப்பின் மூலம் சந்திப்பவனோ, மனசின் நிச்சலன ஸ்திதியை நிறைவேற்றி விடுகிறான்.” என்கிறார். கவிதானுபவம், படைப்பனுபவம் குறித்து நிறைய கவிஞர்கள் பேசியிருந்தாலும் அவர்கள் அதை ஒருவித புனிதப்படுத்தி மர்மமாக்கும் முயற்சியாகவே செய்திருக்கின்றனர். பிரமிள் மட்டுமே தெளிவாக வார்த்தைப்படுத்தியுள்ளார்.

‘நுண்ணுணர்வின் அவசம்’ என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்து தான். ஆனால் அந்த அவசம் மூல காரணம் மட்டுமே. இந்த மூல காரணத்தினால் படைப்பூக்கம் தூண்டப்பட்டு எடுக்கப்படும் கச்சிதமான வரிகள் எங்கிருந்து வருகின்றன? இங்கே பிரமிள் சொல்லும் ‘கவித்துவத்தின் சாகரத்திலிருந்து ஒரு கைப்பிடியளவு நீர்’ எப்படி கிடைக்கிறது? கவித்துவத்துள் நுழைந்த சலனமற்ற மனதினால் தானே நீரைக் கொண்டுவரவும் முடியும்? எனவே நுண்ணுணர்வு என்பது கவித்துவமான அகநிலைக்கு அருகில் இருப்பது. ஓர் அருவியில் குளிக்காமல் அதன் சாரலில் நனைந்து கொண்டிருப்பது போல. எனவே உள்ளும் வெளியுமாக அது உறவாடியபடியே இருக்கிறது. உள்ளே நுழைந்தால் வெளிவர முடியாது. வெளியில் இருந்தால் உள்ளே நுழைய பயமாய் இருக்கும். இந்த இருநிலைகளுக்கும் இடையில் இருக்கிறது நுண்ணுணர்வு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூட ஓரிடத்தில், ‘கலைஞர்களுக்கு அனைத்திலிருந்தும் விடுபடும் வாய்ப்பு அதிகம் உண்டு’ என்று சொன்னது கவனிக்கத்தக்கது.

இங்கே பிரமிள் சொல்லும் நுண்ணுணர்வின் அவசம் என்ற பதத்துக்கு எதிராக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வரிகளையே வைத்துப் பார்க்கலாம்.

“The freedom to create comes with self-knowledge; but self-knowledge is not a gift. One can be creative without having any particular talent. Creativeness is a state of being in which the conflicts and sorrows of the self are absent, a state in which the mind is not caught up in the demands and pursuits of desire. To be creative is not merely to produce poems, or statues, or children; it is to be in that state in which truth can come into being. Truth comes into being when there is a complete cessation of thought; and thought ceases only when the self is absent, when the mind has ceased to create, that is, when it is no longer caught in its own pursuits. When the mind is utterly still without being forced or trained into quiescence, when it is silent because the self is inactive, then there is creation.”

நுண்ணுணர்வின் அவசம் என்பது நான் என்பதின் அவசம். புறவுலகோடு தனிமனிதன் கொள்ளும் பிணக்கு, தனிமனித அக நுண்மைக்கு ஏற்பப் பொருந்தாத மந்தமான புரிதலற்ற புறவுலகு தரும் ஏமாற்றம் என்று கொண்டால், கவிதை ஓர் ஈகோவின் வெளிப்பாடு என்று ஆகிறது. கவிதையை படைப்பு என்று சொல்வதாய் இருந்தால், படைப்பாற்றல் குறித்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பிரமிளின் கருத்து முரண்படுகிறது. இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது நாம் ஒரு வரியைப் படிக்கும்போது அது வெறுமனே எழுத்தும் அர்த்தமுமாகவே கிரகித்துக் கொள்கிறோம். ஆனால் அதற்குப் பின் மிக நீண்டதொரு வாழ்க்கை அனுபவம் இருக்கிறது என்பது நமக்கு உறைப்பதில்லை. எத்தனை தூரம் தொடர்ந்து தன்னுள் அவதானம் கொண்டிருந்தால் ஒருவரால் இத்தனை தெளிவாக கவிதானுபவத்தை வார்த்தையில் விவரித்துச் சொல்லமுடியும் என்பதை யோசிக்க வேண்டும்.

தனது நண்பர் நாரணோ ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் பிரமிள். பிறிதொரு சமயம் ஒரு பேட்டியில் (என்று நினைக்கிறேன்), என் மீது காழ்ப்புணர்வைக் கொட்டுபவர்கள், நான் முன்வைக்கும் கருத்துகளை எதிர்த்து, அதை விமர்சித்து ஏதாவது சொல்லட்டுமே. ஏன், நாரணோ ஜெயராமன் தொகுப்பை நான் ஆதரித்து முன்னுரை எழுதியிருக்கிறேன். அதில் நான் சொல்லியிருப்பதை விமர்சிக்க எவ்வளவோ இருக்கிறது. கருத்தியல் ரீதியாக எதிர்க்கத் திராணியில்லாதவர்கள் தனிநபர் விமர்சனத்தில் இறங்குகிறார்கள்’ என்று கேட்டு வைக்கிறார். உண்மையில் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் நாரணோ ஜெயராமனின் கவிதைகள் ஒன்றும் சிலாக்கியமாக இல்லை. பிரமிளை வரிந்துகட்டி அடித்தவர்கள் இதை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் கல்லைக் கூட பிரமிளே எடுத்துத் தருகிறார் என்பதுதான் விசேசம். தமிழ் இலக்கியச் சூழலில் அப்படி ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடக்க வேண்டும் என்பதுதான் அவர் அவா.

இளவேனில் ஒரு எதிரொலி என்ற கட்டுரையில் வெ.சா.வை விமர்சித்து பிரமிள் எழுதியிருந்ததற்குப் பதிலாக, சூழலே ஒரு நபரை உருவாக்குகிறது என வாதித்து வெ.சா. ’கசடதபற’வில் எழுதுகிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக கலைஞனும் கோட்பாடும் என்ற 17 பக்கக் கட்டுரையை பிரமிள் எழுதுகிறார். இதன் விஷய சாரத்தைப் பேசுவதாய் இருந்தால் அதைத் தனிக்கட்டுரையாகத் தான் எழுத வேண்டும். இங்கே ஆச்சரியம் என்னவென்றால், அக்டோபர் 1976ல் இந்தக் கட்டுரையை பிரமிள் எழுதியிருக்கிறார். 1977ல் வெ.சா.வின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ புத்தகமாக வெளிவருகிறது. அதற்கு முன்னுரை பிரமிள் எழுதித் தருகிறார்!

1975ல் வெ.சா.வின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதில் தொடங்கி பின் அவர் எழுதிய பெருவாரியான கட்டுரைகள் எதிர்வினைகள் தாம். ஆனால் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரது படைப்புகளையும் விமர்சிக்கும் போது அதை விரிவாக தர்க்கப்பூர்வமாக அதன் நியாயங்களைச் சொல்லி விடுகிறார். அக்டோபர் 1978ல் யாத்ரா இதழில் வந்த கட்டுரையில் அ.மி.யின் பயணம் என்ற சிறுகதை எவ்வாறு இலக்கியத் திருட்டு என்றும் எவ்வாறு உண்மைக்குப் பொருந்தாமல் இருக்கிறது என்பதையும் விவரிக்கிறார். இந்தக் கதையை முதலில் பாராட்டியும் பிறகு அதைத் திருட்டு என்றும் குற்றம்சாட்டிய வெ.சா. எதன் அடிப்படையில் அதைத் திருட்டு என்கிறார் என்று விளக்கவில்லை. அந்தக் கதையில் உடல்நிலை குன்றிய குருவும் சீடனும் மலைப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது ஓநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். கதையின் முடிவில் ஓநாயுடன் போராடி குரு இறந்துவிட அவர் கையில் ஓநாயின் பின்னங்கால் ஒன்று மட்டும் இருக்கும். அப்படித் தனியாக ஒரு கால் வரச் சாத்தியமே இல்லை. ஜாக் லண்டனின் ‘The Love of Life’, ‘The law of life’ என்ற இரண்டு கதைகளில் பயணம் சிறுகதைக்கான மூலகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு அந்தக் கதைகளையும் விவரிக்கிறார். இது திருட்டாக இல்லாமல் சுய எழுத்தாக இருந்தாலும் அவர் விமர்சனப்படி இலக்கியத் தரமான படைப்பல்ல என்று நிறுவுகிறார். ஓர் இலக்கியத் திருட்டு எப்போது ஏற்கக்கூடிய ஒன்றாக மாறுமென்றால், மூலத்தை விட சிறப்பாக அமைந்திருந்தால் அது அதற்கான நியாயத்தைப் பெற்றுவிட்டதாக அர்த்தம் என்று சுட்டிக்காட்டுகிறார்.

இன்று கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் எல்லாம் முன்பு இலக்கணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவர்களின் மாற்றுருவே. வீட்டில் வெள்ளை கரப்பான்பூச்சி இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். எனக்கு அதைக் கண்டாலே அருவருப்பு. நசுக்கிப்போட்டால் வெள்ளையாய் ஜலம் மாதிரி வெளிவரும். இரத்தச் சிவப்பணுக்களே மருந்துக்கும் இல்லாத அந்த உயிரிகள் போலத்தான் இந்தக் கல்விப்புலத்தில் கோட்பாடுகளை வைத்து ஆய்வு செய்பவர்களும். சமீபத்தில் அப்படி என்னதான் இந்த கோட்பாட்டை வைத்து நாவலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று ஓர் ஆய்வுக்கட்டுரையை பல்லைக் கடித்துக்கொண்டு படித்தேன். அவர் என்ன செய்கிறார் என்றால், கண்முன்னே ஒரு யானை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கண்ணால் பார்த்தாலே அதன் முழு உருவும் அடைபட்டுவிடும். கொஞ்சம் வரையும் திறன் இருந்தால் வரையக்கூட செய்யலாம். அதன் நிறம், அது என்ன சாப்பிடுகிறது, அதன் விளையாட்டுகள், அதன் வாழ்க்கை எல்லாமே புரியும். இவர்கள் அதைப் பார்ப்பதற்கு முன்பே கோட்பாட்டுத் துணியை எடுத்துக் கண்ணை இறுகக் கட்டிக்கொள்கிறார்கள். பின் மெதுவாகத் தடவித் தடவிக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் யானையின் சில ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கின்றன. இதையெல்லாம் வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வாசகன் முதலில் பைத்தியமாக மாற வேண்டும்.

சுயமாக ஒரு கருத்தை வெளியிடும் லட்சணம்தான், கருத்துலகக்காரனுக்கு முக்கியமாகும். நமது சூழல் இத்தகையதல்ல. ஆங்கிலத்தின் மூலம் ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை ஒரு பிரக்ஞை அறிகிறது. அதற்கு புரிகிறதா அது என்பது வேறு விஷயம். உடனே, ‘இந்த இவனுகள்ளாம் தமிழிலே எளுதறானே, இம்மாம் பெரிசா எளுதிப்புடுவானா?’ என்று அதன் மண்டை யோசிக்கிறது. உடனே, தானே ஆங்கிலத்தில் அந்த பிரம்மாண்ட விஷயத்தை எழுதியது போன்ற ஒரு வீக்கம், இந்த மண்டைக்கு உண்டாகிறது. இந்த அளவுகோல்களின் குணமும் கம்யூனிஸ்டுகளுக்கே வரக்கூடிய அலாதியான இலக்கிய விரோதமும் சேர்ந்து, இன்று பிரக்ஞையின் பிரகடனங்களில் இடியொலி எழுப்புகின்றன: ‘எங்களுக்கு எக்கனாமிக்ஸ் வரும்; கலைஞர்களுக்கு வருமா?’ இதைவிட அபத்தமாக, மடமையும் மனோவியாதியின் குணங்களும் மலிந்ததாக, தமிழ் கலாச்சார சூழல் கீழிறங்க இனிமுடியுமா?”

– தொடரும்.

http://tamizhini.co.in/2019/07/12/பிரமிள்-தனியொருவன்-பகுத-4/

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்


 

பிரமிள்: தனியொருவன் ( பகுதி 6 ) – பாலா கருப்பசாமி

சென்ற கட்டுரையில் வெ.சா. மீதான பிரமிளின் முதலாவதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டினைப் பார்த்தோம் (சிருஷ்டிபூர்வம், ரசனாபூர்வம்). வெளிப்படையாக அவர் சொல்லவில்லையே தவிர பிராமணீயக் குண இயல்பை அவர் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்குகிறார். அதில் ஒன்றுதான் இந்த இரசனாபூர்வம்.

யோசித்துப் பார்த்தால் ஒட்டுமொத்த மக்களையே இரண்டாகப் பிரித்து விடலாம் என்று தோன்றுகிறது. வைஷ்ணவம்-சைவம். இம்மை-மறுமை. அறிவு-உணர்வு. Insensitive-sensitive. இகவாழ்வுத் தேடல் எனும் போது இதிலுள்ள இன்பங்களை நுகர, அனுபவிக்க, இரசனாப்பூர்வமாக அணுக இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மறுமை பரம்பொருளை தியானித்து மாயாவான இகவுலகை மறுக்கிறது. உள்ளொளியை நோக்கி மனிதனை நகர்த்துகிறது. பிராமணீயத்தின் ஒரு கூறாக இகவாழ்வுத் தேடலைச் சொல்லலாம். சுக வாழ்வினை, அதிகாரத்தினை நோக்கிச் செல்பவர்களாக, சடங்குகளுக்கும் மந்திரங்களுக்கும் கடவுளை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். மறுமைத் தேடல் உள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல், மனசாட்சி, அறம், ஞான விழிப்பு என்ற தேடலுடன் பெரும்பாலும் வசதி குன்றியவர்களாக உள்ளனர். இந்தப் பிரிவினை பிராமணர்களை மட்டும் குறிப்பிடவில்லை. பிராமணீயம் என்பது பல குணாம்சங்களின் தொகுப்பு. அதில் இது ஒரு கருத்தியல் ரீதியான பார்வை மட்டுமே. இதைப் புரிந்துகொண்டால் இலக்கியத்தில் பிராமணியத் தாக்கத்தை அதன் கூறுகளை கடுமையாக பிரமிள் எதிர்ப்பதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம்.

”கோவில்களால் போஷிக்கப்பட்டவை சிந்தனை சாராத நுண்கலைகளான சங்கீதம் போன்றவை மட்டுமே. உண்மையில், இதுதான் பிரச்சினையின் மையம் என்று எனக்குத் தோன்றுகிறது. கோவில் கலாச்சாரத்துக்குச் சிந்தனையொழுக்கம் சார்ந்த இலக்கியம் அந்நியமானது.”

இங்கே கலை என்பது சிந்தனைவடிவ ஒழுக்கத்திலிருந்து வேறானதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பிரமிள். நான் விமர்சனக் கட்டுரைகள் எழுதத் தொடங்கியதும் இதற்குள் இயங்க ஆரம்பித்தால் அதன் தர்க்க ஒழுங்கு படைப்பு மனநிலைக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று சக கவிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். இதில் உள்ள இன்னொரு அபாயம் எழுத ஆரம்பித்தால் அதுதான் நம் அடையாளம் என்ற முத்திரை குத்தித் தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளாகக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தர்க்கம் அல்லது சிந்தனை வடிவ ஒழுக்கம் படைப்பு மனநிலைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக உள்ளது. பொதுவாக பிற கலைகள் அனைத்திலிருந்தும் இலக்கியம் வேறானதாக உள்ளது. எழுத்தறிவு, சிந்தனை, அனுபவம், நுண்ணுணர்வு போன்றவை இலக்கியத்தின் முக்கியக் கூறுகள். இசை, நாட்டியம் போன்ற இன்னபிற கலைகளுக்கு எழுத்தறிவோ சிந்தனையோ தேவையில்லை. பிரமிள் மட்டுமே தமிழில் தனிச்சிந்தனை மரபை தனது ஸ்பஷ்டமான பார்வையில் முன்வைத்துள்ள அதேவேளையில் கவிதை, கதை, நாடகம் போன்றவற்றைப் படைப்பவராகவும் இருந்துள்ளார். நம் சூழலில் இது நிகழாமைக்கு அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு ஒரு முக்கியக் காரணம்.

சமகாலப் புனைவுகளை வாசிக்கையில் அவை ஜீவனற்று வறட்சியாக இருப்பதாய்த் தோன்றுகிறது. மிக நன்றாக எழுத்துக்கலை கைவரப் பெற்ற எழுத்தாளர்கள் கூட வெட்டியாய் ஆளற்ற இடத்தில் தனியே கம்பு சுற்றுவது போல எழுதி வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இன்னொரு பக்கம் புதுமாதிரியாய் என்ன எழுதலாம் என்று யுக்தியில் மட்டும் கவனம் செலுத்துகிறது ஒரு கோஷ்டி. இந்த மாதிரிக் கதைகள் ஏதாவது வராதா என்று தேடி, தான் வாசித்த கோட்பாடுகளை, அதில் அடையாளம் கண்டு புளகாங்கிதம் அடைந்து தமிழின் முன்னோடி முயற்சி என்று கொண்டாடி கவனப்படுத்துவதை வாழ்நாள் கடனாக வைத்திருக்கிறது இன்னொரு அகாடெமிக் கோஷ்டி.

“படைப்பு, இயற்கையின் உயிர்த்தன்மை போன்ற ஒரு வீர்யத்தைக் கொண்டிருக்க வேண்டும். சமீபகாலங்களில், சுமார் பத்து வருடங்களாக, தமிழ் இலக்கியப் படைப்புகளில் இந்த உயிர்த்தன்மையைக் காணமுடிவதில்லை. இதற்கான காரணங்களுள் ஒன்றென, இலக்கியப் பிடிவாதம் என்ற வியாதியைக் காணமுடிகிறது. மேற்குறிப்பிட்ட இலக்கியப் பிடிவாதத்திலிருந்து விளைந்த மிக முக்கியமான குறைபாடு ஆழமானது; ஜனரஞ்சகமான எழுத்தின் சாயல்கள் யாவற்றையும் அஞ்சி ஒதுக்கும் குணமே இது. இலக்கியப்படைப்பு சிரமம் தரவேண்டும் – கரடுமுரடாக இருக்க வேண்டும் – வறட்சியாக இருக்கவேண்டும் என்பது போன்று உள்ளூர தீர்மானித்துக் கொண்டவர்கள்தான் இன்றைய தலைமுறையினரோ என்று, 1960களின் முடிவுக்குப் பிறகு பிறந்துள்ளவர்களின் படைப்புகள் எண்ண வைக்கின்றன. ஆர்வமோ, உத்வேகமோ, உயிரோ அற்ற எழுத்து இவர்களுடையது. கூடவே மௌனியின் எழுத்தை, அதன் பரிமாணம் புரியாமல், ஒரு கீழ்த்தளத்தில் போலிபண்ணிய தலைமுறையாக, இவர்களை ஒட்டுமொத்தமாகக் குரிப்பிடலாம். கூடவே, சமகால மேல்நாட்டு இஸம்கள்; அவற்றின் விளைநிலங்களை உணராமல் போலிபண்ணப்பட்ட மேல்நாட்டு இயக்கங்கள், ஆசிரியர்கள், சுயாதீனமான ஆர்வத்துக்கும் இயல்புக்கும் எட்டாத ஆதர்சங்கள், ஆபத்தானவை. ஆர்வத்தின் – உத்வேகத்தின் – மூலநிலையமான தன்னியல்பை, தன்னம்பிக்கையை சிதைப்பவை”

மேற்கண்ட கூற்று 1979ல் (கொல்லிப்பாவை: கட்டுரை- ருசிகரம்) பிரமிளால் சொல்லப்பட்டது. 1960க்குப் பிறகு பிடிவாதமாய் இலக்கியம் பண்ணுகிறேன் என்று முன்முடிவோடு எழுத முற்பட்டதன் விளைவாக இதைக் குறிப்பிடுகிறார். காலம் செல்லச்செல்ல அனைத்துமே தரமிறங்கியபடியே செல்வதாக உள்ளன. முப்பது வருடங்களுக்கு முன்பு பொருட்கள் தரமுள்ளதாக இருந்தன. காற்றும் நீரும் இந்தளவு மாசுபடாமல் இருந்தன. தமிழ் இன்னும் செழுமையாய் இருந்தது. இன்று, உலகமயமாக்கல் எல்லோரையும் விரட்டுகிறது. கிட்டத்தட்ட எல்லோரும் இயந்திரமாகி விட்டோம். ஆன்மாவை எதிர்த்து இடதுசாரிகள் இந்தளவு குரல் கொடுத்திருக்க வேண்டியதில்லை. உலகமயமாக்கல் எல்லா ஆன்மாக்களையும் சாகடித்து விட்டது. நுகர்வுப்பசி அத்தனை கொடூரமாய் மனிதர்களை வேட்டையாடுகிறது. இலக்கியமும் ஜீவனற்றுப் போய்விட்டது. மகாகவிக்குப் பிறகு பிறந்த ஒரே மெகாகவி மனுஷ்யபுத்திரன் என்று சாதிக்கும் அறிவுஜீவிகள் இங்கே நிறைய பேர் உண்டு. தான், தன் அனுபவம், வெளியே இருக்கும் காற்றுக் குழலுக்குள் சென்று இசையாய் எழும்புவதைப் போல தன்னுணர்வு எதுவுமற்று, இங்கே எல்லாமே செய்யப்படுபவையாக மாறிவிட்டன.

ருசிகரம் கட்டுரையில் இப்படி இலக்கியப் பிடிவாதத்துடன் எழுதும் போக்கும், வறட்சியான நடையும் எங்கிருந்து துவங்குகிறது என்று ஆய்வு செய்கிறார். சி.சு.செ.-விடம் சற்று வறண்ட நடை உண்டு. இன்னொருபுறம் மௌனி எழுத்துகளில் ஈர்ப்பு கொண்ட ந.முத்துசாமியும், அசோகமித்திரனும் செய்த அரைகுறை முயற்சியால் ஒருபுறம் வறட்சியான எழுத்தே கிடைத்தது. எதற்கென்றே தெரியாமல் அ.மி. சூழலை விவரித்துக் கொண்டிருப்பார். அ.மி. ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு நகர்ந்தாலும், அங்கும் பெரிய வரவேற்பில்லை. சமகாலத்தில் அ.மி.யை ஒருசேர தூக்கி நிறுத்தியிருப்பதில் பெரும்பங்கு ஸ்டார் எழுத்தாளர்களான ஜெயமோகனுக்கும் சாரு நிவேதிதாவிற்கும் சேரும். பிரமிள் அ.மி.யின் மஞ்சள் கயிறு என்ற கதையைத் தவிர ஏனையவற்றை ஏற்கவில்லை.

கொல்லிப்பாவை இதழ் 7ல் (1979) பிரமிள் ‘தடுக்கி விழுந்த நெடும்பயணம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மார்க்ஸியரான ஞானி ‘தருமு சிவராமின் கவிதைகளில் நெடும்பயணம்’ (1978) என்ற கட்டுரையை யாத்ரா இதழில் எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை இது. இப்படி காலவரிசைப்படி பிரமிளின் எழுத்துகளைப் படிக்கையில் அதில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி இருப்பதை உணர முடிகிறது. படைப்பின் நிழலுருவம் தான் விமர்சனம். ஆரம்பத்தில் படைப்புக்கான அனுபவ முதிர்ச்சியின்மையால் பிறரது படைப்புகளுக்கு விமர்சனம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். விமர்சனம் என்பது கலையுருப் பெறுகிற Admiration என்கிறார். பொதுவாக தூக்கி வைத்துக் கொண்டாடுவது இல்லை போட்டு உடைப்பது என்பது தான் இங்கே விமர்சனப் போக்காக உள்ளது. போட்டு உடைப்பது வெகு அரிது. ஆனால் இந்த அட்மிரேஷன் என்பது அப்படியல்ல. ஆகச்சிறந்த வாசகன் / இரசிகனின் செயல் அது. இது வெறுமனே இரசனை சார்ந்த விஷயம் அல்ல. படைக்கப்பட்டதின் சாரத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்வதால் தோன்றும் உணர்வும் எதிர்வினையுமே அட்மிரேஷன்.

பிரமிள் தன்னிடம் பேராசிரியர் ஜேசுதாஸன் சொன்னதாகச் சொன்ன வார்த்தைகள் மிகவும் அர்த்தமுள்ளவை: ‘விமர்சகன் என்பவன் வெறுமனே கதை கவிதைகளுக்கு விமர்சனங்கள் எழுதுகிறவனல்லன், தனது நோக்கிற்கென சுயமான விமர்சன சித்தாந்தங்களை – Principles – உருவாக்குகிறவனைத் தான் விமர்சகன் –  Critic – என்று மேலைநாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள். இப்படிப் பார்த்தால் தமிழில் உங்களை மட்டும் தான் விமர்சகன் என்று கூறலாகும்.’ சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதையொன்று ஞாபகம் வருகிறது.

எடைக்கல் அழுத்த வெகுநேரம் காத்திருக்கிறது தராசு

கட்டி இரும்புத்தட்டு அந்தரத்தில் தொங்குகிறது 

எடைக்கல்லை எடுத்துவிடும்படி மன்றாடுகிறது 

அந்தரத்தில் தொங்கும் இரண்டு தட்டுகள் 

வேடிக்கையாய் இருக்கிறது 

கால்பாவ முடியாது தத்தளிக்கின்றன

சுத்த பைத்தியக்காரத்தனம் 

நீ எடைக்கல்லை வைத்து அழுத்து 

இப்போது எடை போடு

***

எப்போதும் தராசுக்கு எடைக்கல் தேவைப்படுகிறது. எடைக்கல் இல்லாமல் அளவிட முடியாது. ஒருதட்டு முழுக்க தன் எடையால் அது நிறைந்திருக்க, எதிர்த்தட்டை அளக்கிறது அது. ஒரு பொருளை மதித்தலும், மதிப்பிடலும் இருவேறு அம்சங்கள். இரண்டையும் படிக்கல் செய்கிறது. இதற்கு சுயமான பார்வை தேவை. துலாக்கோலின் முள்ளைப் போன்றது அது. கடன் வாங்கிய பார்வையில் பொருளின் உண்மையான மதிப்பும் தெரியாது. மதிப்பீடும் தவறாகிப் போகும். கோவை ஞானி எழுதிய தமிழ்க்கவிதை என்ற கட்டுரைத் தொகுப்பை பாதிவரை வாசித்திருக்கிறேன். மார்க்ஸிய நோக்கில் தமிழ்க் கவிதைகளை விமர்சித்து எழுதியிருக்கிறார். 700 பக்கங்களுக்கு மேல் இருக்கும். கடுமையான உழைப்பு. ஆனால் கவிதையின் உள்ளார்ந்த உயிர்ப்பை மருந்துக்குக் கூட தொட்டிருக்க மாட்டார். ஈரோடு தமிழன்பன் கவிதைகள் உட்பட இதில் விவாதிக்கிறார். நான் வாசித்தவரையில் அவரது கவிதைகளைத் தான் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். காரணம் அந்தக் கவிதைகள் பேசும் விசயங்கள் அவருக்கு (மார்க்ஸியத்துக்கு) உவப்பான ஒன்று. எவ்வளவு நேர / பொருள் விரயம்.

ஒரு மலைச்சிகரம், இரண்டு நாடுகளுக்கு நடுவே நிற்கிறது. ஒரு நாட்டில் பழைய அங்குலம், அடி, கெஜம் என்ற அளவையும் இன்னொரு நாட்டில் புதிய மீட்டர் அளவையும் புழங்குகின்றன. இந்தஅளவைகளின் வித்தியாசத்தால், ஒரு நாட்டுக்காரர் மலையை மலை என்றும் மற்ற நாட்டுக்காரர்கள்மலையை மடு என்றும் அளவுகாட்ட இயலாது. தங்களை மார்க்ஸிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்வதைத் தவிர விமர்சனங்களிலோ வாழ்விலோ அந்த மார்க்ஸியத்தைச் செயல்படுத்தத் தெரியாதநம்மூர் கேஸ்களுக்கு இதுதான் புரியவில்லை. பொதுவாகத் தமிழில் இன்னும் வியாக்யானங்களை, வியாக்யானங்களுக்கு அகப்படும் பொருளம்சங்களுடன் கொள்ளும் ஒப்புதல்களைத் தான், ரஸனைஎன்றும் விமர்சனம் என்றும் கொண்டு வருகிறோம் என்பதையே இது காட்டுகிறது. கவிதையின்உயிர்க்குணம், அந்தக் குணத்தின் மூலம் படிப்பவன் பெறும் அனுபவ நிலை ஆகியன இந்தவிமர்சகர்களுக்கு எட்டுவதில்லை. மொத்தத்தில் ஒன்று: படைப்பாளி தானே அறியாத சக்திகளின்வசதிகளைப் பெற்றுள்ளவன். அவன் இயக்கத்தில் கடினம், எளிது என்பவற்றுக்கு இடமில்லை. விமர்சனமோ இத்தகையதன்று. விமர்சனம் கலையாகக் கருதப்படுகிற போதே கடினமான ஒன்று  அதிலும் கவிதைகளை விமர்சிக்கும் கலை மிகக் கடினமானது

திருநெல்வேலியில் பிரமிள் படைப்புகள் அறிமுக விழாக் கூட்டத்தில் வைகை குமாரசாமி அவர்களும் பேச அழைக்கப்பட்டிருந்தார். பிரமிள் கவிதைகளைப் பற்றித் தனக்குத் தெரியாது. அதுகுறித்து எந்த அபிப்ராயமும் இல்லை என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார். அவர் வெள்ளந்தியான மனிதராகத் தான் தோன்றியது. வைகை என்ற இதழை நடத்தியதால் அவருக்கு வைகை குமாரசாமி என்று பெயர் வந்தது. இவரது இதழில் பிரமிளின் ‘ஊர்த்துவ யாத்ரா’ தொகுப்பை வெளியிடக் கேட்ட போது முதலில் பிரமிள் ஒத்துக்கொண்டாலும் பின்னர் தனது கவிதைகளைப் பற்றி ஏதும் அறியாத ஒருவரிடம் ஏன் கொடுக்க வேண்டும் என்று மறுத்து விடுகிறார். நண்பர்களுடன் உரையாடும் போது பிரமிளை கிறுக்கு என்று அவர் சொல்லி வைக்க அவர் குழந்தையும் அதைச் சொல்லி விடுகிறது. யாத்ரா இதழாளர்களிடம் ஏன் பிரமிள் தொகுப்பு வைகை இதழில் வரவில்லை என்று குமாரசாமியிடம் கேட்கப்பட்ட போது, ‘அவரை என் குழந்தை கிறுக்கு என்று சொல்லிவிட்டது, அதனால் மறுத்துவிட்டார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைப் பிடித்துக்கொண்டு வெ.சா. குழந்தை வாக்கு வேதவாக்கு என்று சொல்லி தனிநபர் தாக்குதலில் இறங்குகிறார். இதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை ’மேலும் வசவுகள்’ (கொல்லிப்பாவை, இதழ் 10, 1980).

இந்தக் கட்டுரையில் 1977ல் நடந்ததாக பிரமிள் குறிப்பிடும் சம்பவம் முக்கியமான ஒன்று. மதுரையில் என்.பி.ராமானுஜத்தைச் சந்திக்க பிரமிள் சென்றிருந்த போது அங்கே வெ.சா.வும் இருக்கிறார். என்.பி.ஆர். மார்க்ஸியர். பிராமணர். பிரமிளுடன் என்.பி.ஆர். மதிப்புடனும் அக்கறையுடனும் பேசுவதைக் கவனித்த வெ.சா., பிரமிள் சென்ற பிறகு ஏன் அவருக்கு அவ்வளவு ரெஸ்பெக்ட் கொடுத்துப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். என்.பி.ஆர்., அவர் என் நண்பர். மேலும் அவரது கட்டுரைகள் எனக்குப் பல விஷயங்களை விளக்குகின்றன என்று சொல்லியிருக்கிறார். வெ.சா., ‘அது சரிதான். ஆனால் நீங்கள் பிராமணர். நானும் பிராமணன். அவர் பிராமணரில்லையே’ என்று சொல்லியிருக்கிறார். இந்த பிராமணீய மனோபாவ வலைப்பின்னலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் பிரமிள். அவர் அளவுக்கு வேறு யாருக்கும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் துணிச்சல் இருக்கவில்லை. தன்னை பாதுகாத்துக் கொண்டபடி, அந்தப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போது தான் எதிர்ப்பு வருகிறதே தவிர, தாஜா பண்ணிக் கொண்டு போகும் மனப்பாங்கு எப்போதைக்குமான ஒன்றாகத்தான் இருக்கும் போலும்.

உண்மையில் இதையெல்லாம் தொடாமலேயே பிரமிளின் கருத்தாழம் மிக்க, முகநூலில் ஒரு கோட்பாட்டாளர் சொன்னபடி சுயம்புலிங்கமாய் அவர் பரிணமித்ததை மட்டுமே சுட்டிக்காட்டிவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் பிரமிள் குறித்து எழுத நினைத்ததே பதினைந்து ஆண்டுகளாக அவர் எழுதிய இதுபோன்ற எதிர்வினைகளை வாசித்துத் தான். ஒரு மனிதன் தனியாளாய் எத்தனை தூரம் போராடியிருக்கிறான். பிரமிள் குறித்து 60 பக்கங்களுக்கு எழுதி வைத்தது கைப்பிரதியாக இருக்கிறது அதைத் தட்டச்சிட நேரம் அமையவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் என்று அவர் எழுதியிருக்கும் இலக்கிய ஆளுமைகளில் பிரமிள் பெயர் இல்லை. ஜெ.மோ. எழுத வந்த புதிதிலேயே அவரைப் பூசாரி என்றும் அறுவை இலக்கியம் எழுதுபவர் என்றும் விமர்சித்திருக்கிறார் பிரமிள். பிறகு எப்படி எழுதுவார்? ஆனால் நமது விருப்பு வெறுப்பா இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்துவது? அவர் பிரமிள் குறித்து எழுதாதது தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் நேர்ந்த இழப்பு கூடத்தான்.

போன கட்டுரையில் ஒரு நடுநிலைவாதி ஆன்மீகத் தளத்தில் வலதுசாரியாகவும், சமூகத் தளத்தில் இடதுசாரியாகவும் இருப்பது இயல்பு என்று சொல்லியிருந்தது குறித்து சிலர் கேள்வியெழுப்பி இருந்தனர். படிமம் என்ற காலாண்டிதழ் கால.சுப்ரமணியம் அவர்களால் தொடங்கப்பட்ட போது அதன் முகப்பில் பிரமிள் எழுதியிருக்கும் முதல் பத்தியை இங்கே தருகிறேன்:

“சமகால தமிழ்ச் சிந்தனையும் சிருஷ்டித் துறையும், இருவேறு விஷமுகில்களினால் இருண்டிருக்கின்றன. ஒன்று, தனக்குப் பாதகமானவற்றுக்கு எதிராக மட்டும் நவீனத்துவம் பேசிப் பதுங்கியபடி, எல்லாவித செயல்முறைகளிலும் தனது மனோபாவத்தை விட்டுக் கொடுக்காத இந்திய வைதிகம். மற்றது, மனித நுட்பங்களைக் கருவறுப்பதற்குச் சமாதானமாக மனிதாபிமானம் பேசுகிற கம்யூனிஸ வைதிகம்.”

வலதுசாரிகளையும் இடதுசாரிகளையும் ஒரே அளவிலேயே பார்க்கிறார். இரண்டுமே தனிமனித அகவிழிப்புக்கு எதிரானவை. ஒருபக்கம் இடதுசாரிகள் ஜடத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். எந்தவொன்றையும் உயிரிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து விடுவார்கள். மனோதத்துவம் மட்டும் கொஞ்சம் சந்தேகத்துக்குரியதாய் நிரூபிக்கப்பட்டிருந்தால், களவாணிப் பயல்கள் என்று அவர்களையும் விரட்டியிருப்பார்கள். வைதிகம் சடங்குகளில் கடவுள்களைக் கட்டிவைக்கின்றன. இரண்டுமே மனிதார்த்தத்திற்கு எதிரானவை. ஜாதீய மனோபாவம் இங்கே சிந்தனையாளர்களாக தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்களிடமும் வலுவாக வேரூன்றியுள்ளது. சொல்லப்போனால் தனது சுய ஜாதியை தற்காத்துக் கொள்ளவே தனது அறிவுத்திறமையை எல்லாம் காட்டுகிறார்கள்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தன்நோய்போல் போற்றாக் கடை.

***

இத்துடன் பிரமிள் விமர்சனங்களின் முதல்தொகுப்பு நிறைவுறுகிறது (1960-80). இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பிரமிளின் விமர்சன அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் வருகிறது. எப்படி இடதுசாரிய நோக்கர்கள் ஒவ்வொரு வரிக்கும் அதற்கான நோக்கமும் அரசியலும் உண்டு என்று வாதிடுவார்களோ, கலை கலைக்காகவே என்பதை நிராகரிக்கிறார்களோ, பிரமிள் இலக்கியத்தை வேறு எதனோடும் தொடர்புபடுத்தாமல் தனித்த பிராந்தியமாகப் பார்த்து வந்ததில் இருந்து மாறுபடுகிறார். ஞானக்கூத்தனின் கவிதைகளில் வெளிப்படும் ஜாதீயம், சு.ரா.வின் ஜே.ஜே. பாத்திரத்தின் fake intellectuality, லா.ச.ரா., மௌனியின் வைதீக ஜாதீயப் பற்று போன்றவற்றை கடுமையாகத் தாக்கத் தொடங்குகிறார். ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அவர் எழுதிய ‘புதிய புட்டியில் பழைய புளுகு’ கட்டுரையிலிருந்து ஒரு பத்தி:

“ஒரு நாவலின் இயல்பான மதிப்பீட்டுப் பரப்பு என்ற அளவில், ஜே.ஜே. எதை நிறைவேற்றுகிறது என அளவிடுவதே சுந்தர ராமசாமியைப் புரிந்துகொள்ள உதவும். இந்தப் பரப்பு, கதாநாயகனான ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதாவாகக் காட்டப்படுகிற அவனுடைய தீர்க்க தரிசனமான ‘தியரி ஆப் அப்ஹீவல்’ அல்ல. ஏனெனில், அந்தத் தியரியை வெறும் புஸ்வாண வெருட்டலாக, பெயரளவில் மட்டுமே நாவலில் ஓரிருவரிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாழ்வையும் விஷேச இந்தியப் பிரச்சினைத் தளங்களையும் தீண்டி விடாமல், சோடா குடிப்பதைவிட இளநீர் குடிக்கலாம், பஸ்ஸில் இடம்பிடிக்க முண்டியடிக்கிறார்கள், பசுமாட்டின் மீது யாரோ காறித் துப்புகிறான் எனப் பாமரமான தர்மாவேசங்களை மட்டுமே, ஜே.ஜே.யின் அறிவார்த்தக் கிருதா மயிர்களென நாம் சந்திக்கிறோம்.”

– தொடரும்.

 

https://tamizhini.in/2019/08/17/பிரமிள்-தனியொருவன்-பகுத-5/

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரமிள்: தனியொருவன் (பகுதி 7) – பாலா கருப்பசாமி

written by பாலா கருப்பசாமிSeptember 20, 2019

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை என்ற தலைப்பில் 1984ல் பிரமிளின் கட்டுரைப் புத்தகம் ஒன்று வெளியானது. (அமேசான் தளத்தில் கிடைக்கிறது) ஈழத் தமிழர் பிரச்சினைகளைத் தொடக்கத்திலிருந்து புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் இது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ‘புது யுகம்’ என்ற இதழில் வெளிவந்துள்ளது. அதன் முதல்வரியே இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனிநாடு கேட்கிறார்கள்  இது, இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம்.

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், பெருங்கற்படைக் காலத்தைச் (கி.மு.1000 முதல் கி.பி. 100) சேர்ந்த ’கோவேத’ என்ற தமிழ் வரிவடிவம் கொண்ட முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. யாழ் பகுதியில் தமிழ்மொழி கொண்ட எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. 7000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பு இருந்ததை ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தில் அமைந்த நுண்கற் கருவிகள் தமிழகத்தின் தேரிப்பகுதியிலும் இலங்கையிலும் கிடைப்பதிலிருந்து உறுதி செய்யப்படுகிறது. தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற புத்தகத்தில் தொல்லியல் ஆய்வாளர் கா.ராஜன் இந்தத் தரவுகளைத் தருகிறார்.

கீழடியில் முதற்கட்டமாக அகழாய்வு செய்யப்பட்டு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதில் அவை 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் செய்யப்பட்ட அகழாய்வில் 5000-த்திற்க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் வேந்தன், திசன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், “வணிக பெருமூவர் உண்…” என்ற முழுமை அடையாத வாக்கியமும் தமிழ் பிராமியில் காணப்படுகின்றன. திசன் என்பது கி.மு. 250 முதல் கி.மு. 210 வரை இலங்கையை ஆண்டு வந்த மன்னனின் பெயர். முழுப்பெயர் தேவநம்பிய திசன். இதன் அர்த்தம் ’தெய்வங்களுக்கு மகிழ்வூட்டுபவன்’. வணிகத்தில் சிறந்த மன்னன் என்பதைக் குறிக்க இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்திருக்கலாம். இவரது ஆட்சிக்காலத்தில் தான் அசோகர் புத்த மதத்தைப் பரப்பும் பொருட்டு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பினார்.

கி.பி. 400 வாக்கில் இலங்கைக்கு வந்த சீனப்பயணி பாஹியான் எழுதியுள்ள குறிப்பின்படி, முதலில் சிங்களத்தில் (சிங்களம் என்ற பெயர் சிங்கத்தின் மகனுடைய தீவு என்பதைக் குறிக்கிறது. வெளிநாட்டவர்களின் குறிப்புகளில் முதலில் தப்ரபானே என்றும் ஓரிடத்தில் அதற்கும் முன்புள்ள பெயராக பலீசிமுண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் என்ற பெயர் தோராயமாக கி.பி. 200க்குப் பிறகே வருகிறது) முதலில் இலங்கையில் மனிதர்கள் யாரும் குடியேறியிருக்கவில்லை. தேவர்களும் நாகர்களுமே இருந்தனர். பொருட்களை விற்க வரும் வணிகர்கள் கண்ணுக்கு அவர்கள் தெரிய மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த பொருட்களுக்கு அவர்கள் தர விரும்பும் இணையான மதிப்புள்ள பொருளின் அடையாளத்தை வைத்து விடுவார்கள். வணிகர்கள் விலைக்குரிய பொருளை வைத்து விட்டு, இணையான பொருளை எடுத்துச் செல்வார்கள். பின்னர் பலநாட்டு மக்களும் அங்கே குடியேறத் தொடங்கினர். இதில் தேவர்கள், நாகர்கள் கட்டுக்கதை போலத் தோன்றினாலும், அவர்களைப் பூர்வ பழங்குடி இனமாகக் கருத வேண்டியிருக்கிறது, அதாவது சிங்களர்கள் முதல்முதலாக இங்கு வருவதற்கு முன்பு இருந்த பூர்வ குடிகள். மார்க்கபோலோ (கி.பி. 13ம் நூற்றாண்டு) தனது பயணக் குறிப்பில முன்பு மாலுமிகள் வரைந்திருந்த வரைபடங்கள் மற்றும் குறிப்புகளை ஒப்பிட்டும் வடக்கிலிருந்து வீசும் காற்று மிக வேகமாய் வீசுவதனால் இலங்கையின் ஒருபகுதி கடலில் மூழ்கி விட்டது என்று சொல்கிறார்.

எத்தனை தரவுகள் நமக்குக் கிடைத்தாலும், தொன்றுதொட்டு இலங்கையோடு தமிழினத்துக்கு உறவுண்டு. நம் பூர்வகுடிகள் வாழ்ந்த நிலம் என்று சொன்னாலும் தமிழகத்தில் பெருகிப் போன நடுத்தர வர்க்கத்திடம் அது எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது. இங்குள்ள தமிழ் மக்கள் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்கள் என்றால் பாலச்சந்திரன் பிரபாகரனின் படுகொலையை ஒட்டி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைப் பார்த்த போது தான்.

சிங்களர்கள் இந்தியாவின் வங்கப் பகுதியிலிருந்து அல்லது வடபுறப் பகுதியிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள். சிங்களர்களின் புராணக் கதையான மகா வம்சத்தில் வங்கத்தில் ஓர் இளவரசிக்கு சிம்மம் ஒன்றின் மூலம் பிறந்த விஜயன் சிங்களவரின் மூதாதையாகக் காட்டப்படுகிறார். இங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருவேறு பிராமி எழுத்துக்கள் (தமிழ் பிராமி, இலங்கை பிராமி) இலங்கையில் காணப்பட்டன என்பதற்கு இது விளக்கம் அளிக்கிறது. இந்தியாவில் அசோகர் காலத்தில் எழுதப்பட்ட பிராகிருதம் மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுகள், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு என்னும் இடத்தில் புத்த பிரானின் புனித எலும்பு வைக்கப்பட்டுள்ள கற்பேழை மீது உள்ள கல்வெட்டு, அண்டை நாடான இலங்கையில் உள்ள சிங்களக் கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் ஏறத்தாழ ஒரே எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன. சிங்களர்களின் வரலாறு விஜயனிலிருந்து துவங்குகிறது எனக் கொண்டால் அது கி.மு. 500+.

மகா வம்சத்தில் விஜயன் கடலில் அலைக்கழிக்கப்பட்டு கப்பல் இலங்கைக் கரையில் ஒதுங்க அங்கே கப்பலில் தனது நண்பர்கள் 201 பேருடன் (சிலர் 700 என்கிறார்கள்) அங்கே குடியேறுகிறார்கள். அனைவருமே ஆண்கள் என்பதிலிருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் என்ற கருத்தை பிரமிள் முன்வைக்கிறார். அங்கே பூர்வகுடிப் பெண்ணான குவேனியை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆள்கிறான். பின்பு பாண்டிய அரச பரம்பரையிலிருந்து பெண்ணெடுத்து அவளைப் பட்டத்தரசியாக்கிக் கொண்டான். இங்கே குவேனியை மணந்த விஜயன், அவளை விலக்கி விட்டே தன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்கிறான். அதாவது பூர்வகுடி மக்களின் உரிமையான இலங்கையை தந்திரமாக ஒரு கூட்டம் அபகரித்துள்ளது என்கிறார் பிரமிள். அவ்வாறே தங்களை ஆரியர்களாக சொல்லிக் கொள்ளும் சிங்களர்கள், ஒரு பூர்வகுடியிலும் திராவிட இனத்திலும் கலந்தபின் எங்ஙனம் அது உண்மையாகும்? புத்த பிக்குகள் ஏன் இப்படி கிறித்துவ போதகர்கள் போல நாடு நாடாய்ச் சென்று மதத்தைப் பரப்பினார்கள் என்றால், அக்காலத்தில் இங்கே இந்து மதத்தில் அவர்களுக்கு இருந்த கஷ்ட நஷ்டங்களையே காரணமாகச் சொல்லலாம். ஒருவேளை அவர்கள் அப்படி பிரயாணப்பட்டிருக்காவிட்டால் பௌத்தம் அதன் கிளைகளுடன் இந்தளவு தளிர்த்திருக்காது.

அசோகரின் மகன் மகிந்தனும் மகள் சங்கமித்ராவுமே பவுத்தத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தனர் என்கிறது மகாவம்சம். இவர்கள் இலங்கையில் சந்தித்த அரசனின் பெயர் தேவநம்பியதிஸ்ஸ. இது அப்பட்டமான ஒரு ஹிந்துப் பெயர். இவனது தலை நகரின் பெயர் பொல்லன் நறுவை. திஸ்ஸ என்பது தீர்த்த என்பதன் மரூஉ. தேவ நம்பிய திஸ்ஸவில் உள்ள நம்பி பாண்டிய நாட்டுபிராமணனைக் குறிக்கிறது. கேரளாவில் இன்றும் இப்பெயர் நம்பூதிரி, நம்பியார் என்ற பெயர்களில்வழங்கப்படுகிறது. பொல்லன் என்றால் கோல் கொண்டவன். நறுவை  நறு+அவை என்பது நல்லசபை. ஒரு கொள்ளைக்காரன் சொன்னதையும் கிரேக்க யாத்ரீகர்களிடமிருந்து திருடியதையும்சேர்த்துப் பிசைந்து பண்ணப்பட்ட மகாவம்சத்தின் கதையை விட, குமரிக் கண்டத்தைப் பற்றியவிபரங்களுக்கு உள்ள தமிழ்க் கவித்துவ ஆதாரங்கள் ஆழமானவை. இந்த குமரிக் கண்டம், கன்யாகுமரியின் நிலத்தொடராகவே இருந்திருக்கிறது. அவ்விதமானால், அது இலங்கையைஇந்தியாவுடன் இணைத்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்திருக்கலாகும். இதனூடே, பஃறுளி என்றஆறு ஓடிய குறிப்புகளும் உள்ளன. குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு மறைந்த போது நடந்திருக்கக்கூடிய இயற்கையான விஷயம், இலங்கைப் பகுதியில் முதற்சங்க காலத்துத் தமிழர்தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதே. இவர்களுள் தேய்வடைந்தவர்கள் வேடர்களாகவும், மற்றையவர்கள் தமிழ்ப் பகுதியின் பூர்வகர்த்தாக்களாகவும் இருக்கலாம். இத்தொடர்பு சிங்களத்தொடர்பினை விட மிக மிகத் தொன்மையானது.

மெகஸ்தனிஸ் (கி.மு.350 – கி.மு.290) தனது குறிப்பில் தப்ரபானேவுக்கும் தலைநிலத்துக்கும் இடையில் ஓர் ஆறு ஓடுவதால் தப்ரபானே தலை நிலத்திலிருந்து பிரிந்து நிற்கிறது என்றும் அங்கு வாழும் மக்கள் பலையோகோனாய் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார். அதாவது தமிழகமும் இலங்கையும் பஃறுளி ஆறால் மட்டுமே தனியாக இருந்தன. “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற சிலப்பதிகாரச் செய்யுள் வரி இங்கே கவனிக்கத்தக்கது. இன்னொன்று கோடியக் கரையிலிருந்தும் இலங்கைக்கு அக்காலத்தில் நிறைய பயணிகள் போக வர இருந்துள்ளனர். கோடியக் கரையிலிருந்து ஜாஃப்னா தோராயமாக 70 கி.மீ. இருக்கும்.

இந்தியாவிலிருந்து முதலில் இலங்கைக்குப் போனவர்களின் பரம்பரையே சிங்கள இனம் என்பது சிங்களவர் வாதம். ஆனால் அங்கே ஏற்கெனவே இருந்த பூர்வகுடிகளைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. இலங்கையின் தெற்குப் பிராந்தியத்தில் வேடர்கள் பூஜிக்கிற புராதனமான முருகன் கோவில் ஒன்று உள்ளது. ‘கதிர்காமம்’ என்ற இதன் பெயர், சிங்களத்தில் மருவி ‘கதிரகம’ என்று வழங்கப்படுகிறது. சிங்களவருடையது என்று சொல்லப்படுகிற, தெற்கில் உள்ள இந்தக் கதிர்காமத்துக்கு சிங்களப் பெயர் என்று ஏதுமில்லை. மேலும், வேடர்களால் வழிபடப்படுகிற முருகன் அசல் பூர்வ திராவிடக் கடவுள். மேலும் இங்கே பூஜை செய்கிற பூசாரி வாயைத் துணியால் கட்டிக் கொள்வார். தீபாராதனை கிடையாது. மூலக்ரகம் எப்போதும் திரையிடப்பட்டே இருக்கும். காட்டுமிராண்டிகளின் பூஜை முறை சப்தங்களையே அனுசரிக்கும். ஆழ்ந்த விவேகிகளே மௌனத்தை அனுசரிப்பர் என்கிறார் பிரமிள்.

பிரமிளின் ஆய்வுமுறைகள் ஆச்சரியமூட்டுபவை. மிக உன்னிப்பாய் ஒரு விசயத்தை அணுகுகையில் வெறுமனே பௌதீகமாக அவர் ஆராய்வதில்லை. அதன் குணாம்சத்தையும் நுட்பமான உள்ளுணர்வுடன் உள்வாங்கி, மறுக்க முடியாதபடி தனது வாதத்தை வைப்பவர். இங்கே அந்த வேடர்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களது இந்த வழிபாட்டுமுறையை எடுத்துக் கொள்கிறார். தமிழின் மொழிக் கூற்றியல் மூலம் கீழ்க்கண்டபடி தனது வாதத்தை வைக்கிறார்.

தமிழ் என்ற பெயர்ச்சொல்லை எடுத்தால், இதை =தம்முடைய, மிழ்=பேச்சு என்று பிரித்துப்பொருள்படுத்தலாம். மௌனம் அல்லது பேசாமை என்பது, இதே வழியில், ‘அமிழ் என்றபதமாகிறது. =அல்ல, மிழ்=பேச்சு. நீரினுள் முங்குவதற்கே அமிழ் என்பதனை இன்றுஉபயோகிக்கிறோம். நீரினுள் பேச்சு எழாது என்பதே, இந்தப் பொருள் இருமைக்குக் காரணம். ‘அமிழ்து என்பது, நீர் என்ற பொருளை இதே வழியில் பெறுகிறது. பேசாமை என்பது ஒருநெறியாகும் போது கிடைப்பது மரணமிலாப் பெருவாழ்வு; எனவேதான், மரணமின்மைக்கு மருந்தாகஅமிர்தம் குறியீடாகிறது. உண்மையில் இது வெறும் உணவு அல்ல. கடைப்பிடிக்க வேண்டியபேசாமை என்ற நெறி; ‘சும்மா இருக்கும் திறன்‘. ‘வாழ்வு என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுவதுமரணமின்மையே ஆகும். இதனைப் பிரித்தால்,  = வலிமையுடன், ஆழ்வு = உட்செல்லல்என்றாகும். இது, தியான நிலையில் ஒரு தர்சி தன்னுள் ஆழ்ந்து நிலைத்த பெருநிலையைக்குறிக்கிறது. சமஸ்கிருதத்திலுள்ள அம்ருதவின் பொருள், =அல்ல, மிருத்=மரணம் என்றஅளவுடன் நின்றுவிடும். அமிழ்தம் என்ற பதத்திலோ, மரணமின்மைக்கு உபாயம் மௌனம் என்றவிரிவு உண்டு.” –என்று சொல்லி கடவுள் முன் மௌனித்து நிற்பதே உண்மையான வழிபாடு என்பதை கோட்பாட்டு ரீதியாகப் பொருத்துகிறார்.

அதேபோல கி.பி. 433ல் இலங்கையை ஆண்ட தாதுசேனன் என்ற சிங்கள பௌத்த அரசன், சிங்கள-தமிழ் கலப்புமணங்களைத் தடுக்க வேண்டி மலையாளத்திலிருந்து வருபவர்களை ஊக்குவித்தான். இதன் தாக்கத்தை கேரளா மற்றும் சிங்களர்களின் உடைகளில் பார்க்கலாம். மலையாளப் பதங்களும் சிங்கள மொழியில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இது திராவிட இரத்தம். இங்கே இனப்பிரிவினை என்பதே அபத்தமான ஒன்று என்பதை பிரமிள் சுட்டிக்காட்டுகிறார்.

அதே போல, பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீஸியரின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த போது அங்கே வடகீழ்ப் பகுதிகள் தமிழரது அரசாகவும், மத்திய தென்மேற்குப் பகுதிகள் சிங்கள அரசாகவும் தனித்து இருந்திருக்கின்றன. கி.பி. 600க்குப் பிறகு இலங்கைக்கு வந்த வெவ்வேறு வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிலும் இலங்கையில் இரண்டு அரசர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 1619ல் போர்ச்சுக்கீசியர்கள் தமிழ்ப் பகுதியைக் கைப்பற்றி அரசாண்டு வந்த சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டனர். அவர்களுக்குப் பின் வந்த டச்சுக்காரர்களும் இரண்டு பகுதிகளையும் இணைக்காமல் தனித்தனியாகவே ஆண்டிருக்கின்றனர். 1833ல் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் ஒரே ராஜீய அமைப்பாக மாறியது. 1840க்கும் 1950க்கும் இடையில் மலையகக் காஃபித் தோட்டங்களில் உழைக்க, தமிழர்கள் இலட்சக்கணக்கில் வற்புறுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வி இந்த மலையகத் தமிழருக்குக் கிடைக்கவில்லை. மேலும் இலங்கைத் தமிழரே இவர்களை கீழ் ஜாதியினர் போல பார்த்தனர். இலங்கை சுதந்திரமடைந்த போதும் இவர்களுக்காக எதுவும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட நூறாண்டுகள் இலங்கையில் வாழ்ந்து, இலங்கைக்காகவே உழைத்த இவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி பிரிட்டிஷ் அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும் என்கிறார் பிரமிள்.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடந்த போது மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் ஏழு பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பினர். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதற்கு ரொம்பவும் பின்னர், இந்த பத்து இலட்சம் மக்களில் ஒரு இலட்சம் பேருக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இவ்விசயத்தில் மலையகத் தமிழர் தவிர்த்த இலங்கைத் தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. இத்தகைய எளிய மக்களுக்காக காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய அறவழிப் போராட்டத்தை இங்கே பிரமிள் பொருத்திப் பார்க்கிறார். இலங்கைத் தமிழரிடமிருந்த இந்த பூர்ஷ்வா குணாம்சம் அடிமட்ட நிலையில் உள்ளவர்கள் குரல் எழும்புவதை விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

இங்கே நுட்பமான இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். கி.மு. இருபத்தியொன்றில் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸின் அவைக்கு பாண்டியர் அரசவையிலிருந்து ஒரு தூதுக் குழு செல்கிறது. அதில் பாண்டிய மன்னன் அவர் நட்புறவை பெரிதும் விரும்புவதாகவும், தன் நாட்டின் வழி அவர் செல்வதாக இருந்தால் அதற்கு ஆதரவளிப்பதாகவும், வேறு ஏதேனும் பெரும்பணி இருந்தால் அதற்குத் தாம் உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குழுவில் இருந்த ஒருவன் தீக்குளித்து அங்கே உயிரை விட்டிருக்கிறான். காரணம், வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் பார்த்தாயிற்று. இனி இருந்தால் துன்பம் வந்துவிடக் கூடும். அதை அனுபவிப்பதற்குப் பதில் இதோடு முடித்துக் கொள்ளப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான். தீயில் புன்னகையோடு இறங்கியதாக இக்குறிப்புகளை எழுதிய ஸ்ட்ராபோ சொல்கிறார். அதே போல, அந்தக் குழுவில் இருந்த இன்னொருவன் ஏதென்ஸ் மக்களுக்கும் அகஸ்டசுக்கும் தன் தைரியத்தைக் காட்டவோ என்னவோ அவனும் தீயில் குதித்து இறந்திருக்கிறான். எதற்காக அவன் அப்படிச் சாக வேண்டும்? இந்த அதீத உணர்வுமயமான, விபரீத தைரியம் இந்த இனத்துக்கே உரிய குணமாக உள்ளது. தலைவனுக்காக தீக்குளிப்பது, ஏதாவது பிரச்னைக்காகத் தீக்குளிப்பது, துன்பம் தாங்காமல் தீக்குளிப்பது என்று இப்போதும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். பலரது கவனம் தன் மீது குவிகையில், அதற்குத் தகுதியானவனாகக் காட்டிக் கொள்ளச் செய்யும் முயற்சியாகவும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையாகவும் மட்டுமின்றி வேறு யாராலும் துணிய இயலாத ஒன்றாகக் கூட இது வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

1958-வாக்கில் தமிழ்த் தலைமையின் உணர்ச்சிகரமான ‘வீரப் பேச்சு’ சிங்களர்களிடையே பீதியைக் கிளப்பிற்று. இலங்கைத் தமிழர்கள் தமிழக திராவிட இயக்கத் தலைவர்களின் பிரச்சார மேடைப் பேச்சு மாதிரிகளை அப்படியே இறக்குமதி செய்தது எதிர்விளைவை ஏற்படுத்தியது. இத்தகு தமிழரின் ரொமாண்டிக்கான தற்பெருமை சிங்களரிடையே வக்ரபீதியைக் கிளப்பி விட்டது என்கிறார் பிரமிள். தமிழருக்கு பெருமைப்பட்டுக் கொள்ள ஆயிரம் உண்டு. ஆனால் தமிழகத்திலும் சரி, ஈழத் தமிழரிடையேயும் சரி, இந்த வீராவேசம் அலுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகி விட்டது. இன்று ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்ற வாக்கியம் கேலிக்குரியது. இன்று தமிழகத்தில் மேல்தட்டு மக்களில் இருந்து அவர்களை பிரதி செய்யும் நடுத்தர மக்களின் குடும்ப மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. நம் கண்முன்னே மொழி இறந்து கொண்டிருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட இலட்சக்கணக்கான நூல்கள் இன்று சீந்த நாதியில்லாமல் கிடக்கின்றன. இங்கே இதற்கு மேலும் போனால் பல பக்கங்கள் தாண்டி விடும். இந்தக் கட்டுரை பிரமிள் படைப்புகள் வரிசையில் தொகுப்பு 4ல் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்தத் தொகுப்பையோ அல்லது அமேசானில் தனிப் புத்தகமாகக் கிடைக்கும் ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை நூலையோ வாங்கலாம். இணையத்தில் தேடிய போது இந்தப் புத்தகம் குறித்து எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் ஒரு பதிவு மட்டும் வாசிக்கக் கிடைத்தது. மேலும் பிரமிளும் தனது கட்டுரையொன்றில் “மாமல்லனின் தீவிர முயற்சி மூலமே, ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை நூல்வடிவம் பெற்றுள்ளது.” (க்ரியா பதிப்பகம் பதிப்பிக்க மறுத்து விட்டது) எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடர மூன்றாவது முறையாக வாசிக்க எடுத்து, எழுதும் நோக்கமே மறந்து போய் 200 பக்கங்கள் கடந்து விட்டேன். இதில் 1985ல் லயம் இதழில் வெளியான மௌனி நினைவுகள் என்ற கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று. ஓர் அஞ்சலிக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் இது. முதலில் வைதீகத்துக்கு எதிராக இருந்த மௌனி, பிரமிள் இரண்டாம் முறை சந்திக்கையில் தீவிர வைதிகத்துக்கு மாறி விட்டிருக்கிறார். அவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும். ஒருவருக்கு மனச்சிக்கல் உண்டு. இரண்டு மகன்களும் இறந்தது அவருள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்கிறார். மௌனியைத் தமிழிலக்கிய உலகில் பிரமிளைத் தவிர யாரும் அத்தனை அணுக்கமாக உணர்ந்தவர் இல்லை. ஒருமுறை வ.ராமசாமி மௌனியிடம் எதற்கு பூணூலைப் போட்டுக் கொண்டு திரிகிறார். எடுத்து ஆணியில் மாட்டு என்றதற்கு, மௌனி ‘I will rather cut my cock and put it there’ என்று சொல்லியிருக்கிறார். இது இன்று வரை இங்கே மௌனியின் ஜாதீய வெறிக்கு உதாரணமாகச் சொல்லப்பட்டு வருவது. ஆனால் பிரமிள் இங்கே கூட இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். பூணூலைத் துறப்பதில் அர்த்தமில்லை. உடலின் இச்சைகளுக்குக் கேந்திரமான காமத்தைத் துறப்பதே அர்த்தபூர்வமானது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறார். பிரமிள் மௌனியின் வைதிகத்தைக் கூட அதற்கான காரணங்கள், அர்த்தங்களுடன் புரிந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மௌனி தனது சிந்தனைகளை வெளிப்படுத்துமளவுக்கு தமிழ் வளர்ச்சியடையவில்லை என்று சொன்னதைத் தான் பிரமிளால் ஏற்க முடியவில்லை. இந்தக் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்:

“’எதற்காக நான் எழுத வேண்டும். அதனால் புண்ணியமா புருஷார்த்தமா? என்று கேட்ட மௌனிக்குமிஞ்சியுள்ளது, அவரது கதைகள் தந்த புருஷார்த்தம் மட்டும் தான். அவரது எழுத்து, நான்ஏற்கெனவே அடிக்கடி கூறியுள்ளது போல், அவரது தனிமனிதக் குறைபாடுகளை முறியடித்தஉன்னதங்களை மட்டுமே சமைத்துள்ளன. படிப்பவருக்கு இத்தகைய மனவெழுச்சியை ஏற்படுத்தும்அளவில், அது ஒரு புண்ணிய கைங்கர்யம் தான். இதுவே அவரது ஆத்மாவின் பயணத்தை உன்னதமார்க்கத்தில் சேர்க்கும் என நாம் நிச்சயிக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி 1980-லிருந்து பிராமணியத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுக்கிறார் பிரமிள். தமிழிசை எவ்வாறு பிராமணர்களால் கைக்கொள்ளப்பட்டு கர்நாடக இசையாக பரிணமித்தது, நாதசுரத்தையும் தவிலையும் மட்டும் இவர்கள் விலக்கி வைத்திருப்பது, இலக்கியத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட மிக நுட்பமாய் இவர்கள் இயங்கும் விதம், படைப்பின் தரம் குறித்தன்றி இனம் பார்த்து அவர்களை உயர்த்திப் பிடிப்பது இதையெல்லாம் விரிவாய் ஒருபக்கம் சொல்லிச் செல்லும் அதே வேளையில், இடதுசாரிகளை மந்தைக் கூட்டம் என்று விமர்சிக்கிறார். ஆரம்பத்திலிருந்து பிரமிளின் எழுத்துகளை வாசித்தோமென்றால், அவருடைய நிலைப்பாடுகளில் எந்த மாறுதலையும் காண முடியாது. அறிதலின் நிலை நகர்வுகள் மட்டுமே நம் பார்வையில் தெரியும். வைதீகம், இடதுசாரியம் இரண்டுமே உயிர்ப்பான மனிதர்களைச் சமூகத்திலிருந்து திட்டமிட்டு அகற்றும் என்று எச்சரிக்கிறார்.

உதாரணத்திற்கு இந்திய மத மரபு என்ற கட்டுரையில் சமஸ்கிருதம் என்பது பிராமணரல்லாதோர் பலராலும் பயிலப்பட்டு வந்த மொழி என்பதற்கான வாதங்களை முன்வைக்கிறார். உபநிஷத்துகளைத் தந்தவர்கள் ‘ரிஷிகள்’ என்றும் ஒரு மரபை உருவாக்கி, இந்த ரிஷிகள் பிராமணர்கள் என்ற புளுகையும் ஸ்தாபித்துள்ளார்கள். சமஸ்கிருதத்தில் இதிகாசம் படைத்த வால்மீகி ஒரு திருடனும் கீழ்க்குலத்தவனுமாவான். இதேபோல கீழ்க்குலத்தில் பிறந்தவர் தான் காளிதாஸனும்.

சங்கரரின் அத்வைதம், உபநிஷத்துக்களின் பிரம்மம் ஆகியவற்றை வேதங்களின் இனவாதப்பௌராணிகச் சரித்திரத்துக்கு முடிச்சுப் போடும் இயக்கமே பிராமணீயமாகும். இந்த முடிச்சைவெகு சமத்காரமாக நிறைவேற்றியவர் சங்கரர். சாண்டோக்யத்தில், தனது ஜாதி என்னவென்றுதெரியவில்லை என்று கூறியவனிடம் நீ உண்மை பேசினாய், ஆகவே நீ பிராமணன் என்று கூறும்சாண்டோக்யம், பொய் பேசுவோன் பிராமணனில்லை என்ற கருத்தைத் தர்க்கப்பூர்வமாகமுன்வைக்கிறது. ஆனால் பிராமணீய மரபு, உபநிஷத்துக்களில் தனக்குப் பாதகமாகப் பொதிந்துள்ளமேற்கூறிய வகையான சகல உள்விபரங்களையும் மழுப்பி விடுகிறது

எவ்வித அடிப்படையும் இன்றி ‘நாஸ்திகர்’ என்று புத்தரை நிராகரித்த இந்துத்துவத்துக்கு சற்றும் குறையாதது ஐரோப்பாவின் இருண்ட காலங்களில் ஒருவரை ஒழித்துக் கட்டுவதற்காக அவரை சூனியக்காரர் (Witch) என்ற பட்டம் கட்டுவதும். ஹிட்லரின் ஆதிக்கத்தில் ஒருவரை ஒழிக்க வேண்டுமானால் அவரை யூதர் என்று அடையாளப்படுத்தினால் போதும். இன்று இடதுசாரிகள் செய்வதும் இதைத் தான். இடதுசாரியாக இரு. அப்படியில்லையெனில் நீ செய்யும் எதுவும் பாசிசத்துக்குத் தான் அவியளிக்கும். நீ ஒரு மனித விரோதி, மக்கள் விரோதி என்று தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். பிரமிளுக்கு நிகழ்ந்ததும் அது தான்.

– தொடரும்.

https://tamizhini.in/2019/09/20/பிரமிள்-தனியொருவன்-பகுத-6/

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரமிள்: தனியொருவன் (பகுதி 08 – பாலா கருப்பசாமி

written by பாலா கருப்பசாமிOctober 26, 2019

வாசித்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் இப்படியொரு வாக்கியம்:

எனது விமர்சனங்களை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களின் தொடர்போ உதவியோ எனக்குவேண்டாம்.”

என்ன மனிதன் இவன்? இங்கே வாழ்வதற்காக, தாம் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களைத் தக்க வைக்கவும், மெருகேற்றவும் திட்டமிட்டு ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிக்கும் நபர்கள் சூழ்ந்த உலகில் இது என்ன பேத்தல். பிரமிள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. பிறர் தயவில் தான் வாழ வேண்டி இருந்தது. ஆனால் அந்த ஆதரவு வெறும் அனுசரணையாக இல்லாமல் தனது எழுத்தின் மீது கொண்ட மதிப்பிலிருந்து வர வேண்டும் என்று நினைக்கிறார். மதிக்கப்பட வேண்டியது எழுத்தே. அதன் பொருட்டே படைப்பாளி.

இந்தக் கட்டுரைத் தொடரில் ஓரிடத்தில் திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான் என்று சொல்லியிருக்கிறேன். இதற்கு அர்த்தம் ஆரியம் – திராவிடம் என்ற பாகுபாட்டினால் ஆனதல்ல. திராவிட மனோபாவம் என்பது குறிப்பிட்ட இனப்பற்றைக் குறிப்பது அல்ல. மாறாக திராவிட குறிப்பாக தமிழர்களின் மரபார்ந்த பண்பான அனைவரையும் சமமாகப் பார்க்கும் குணாம்சத்திலிருந்து சொல்லப்படுவது. இதற்கு பிரமிளின் வரிகளில் இருந்தே உதாரணம் தரலாம். லயம் இதழ் 9ல் (1987, ஏப்ரல்) டேவிட் சந்திரசேகர் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் பிரமிள். அதில்,

என் எழுத்தியக்கம் அடிப்படையில் இந்தியப் புரட்சியைச் சார்ந்தது. இந்தியாவுக்கே விஷேசமாகஉரிய ஜாதியத்தின் மூர்க்கங்களை, அறிவார்த்தத் தளத்திலிருந்தேனும் களையும் வேலையை1976க்கும் பிந்திய எனது கட்டுரைகளிலும்  படைப்புகளிலும்கூட  காணலாம். இந்த இயக்கம், ஏதோ ஒரு ஜாதிய வர்க்கத்துக்கு மட்டும் எதிரான ஒன்றல்ல. 1979ல் நான் டேவிட்டின் ரூமில்அவருடன் இருந்த போது, என்னைச் சந்திக்க வந்தனர் வண்ணநிலவனும் விக்கிரமாதித்யனும். வண்ணநிலவன் என்னிடம், ‘பிராமண எழுத்தாளர்களுக்குப் பத்திரிகை இருப்பது போல், பிராமணரல்லாத நமக்கும் வேண்டும். வாருங்கள் ஆரம்பிக்கலாம் என்றார். நான் இதற்குப்பதிலாகச் சொன்னதை இங்கே விவரிப்பது அவசியம்.

என்னுடைய இயக்கம் அறிவியக்கம். அறிவியக்கம், ஜாதிய வர்க்க இயக்கமாக முடியாது. எழுத்தாளன், அறிவியக்கவாதியாகவே இருக்க முடியும். எனவே, பிராமண எழுத்தாளன்  அல்லாதஎழுத்தாளன் என்பது, எந்தப் படித்தரத்திலும் உள்முரணானது. இந்த நிலைப்பாட்டிலிருந்து நான்எந்தக் காரணத்துக்காகவும் நகர மாட்டேன். என் விமர்சனங்களில், பிராமண எழுத்தாளர்கள்  அல்லாத எழுத்தாளர்கள் என்ற பாகுபாடு கிடையாது. நான் எழுத்தாளன், அறிவுவாதி; எந்த ஒருஜாதிக்குமோ வர்க்கத்துக்குமோ உரியவனல்ல.”

இந்தக் காலகட்டத்தில் ஜாதீயத்துக்கு எதிராக பிரமிள் எழுதிய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ’வரலாற்றுச் சலனங்கள்’. மிக நீண்ட கட்டுரை இது. உலகளாவிய அளவில் உள்ள அடிமை முறையையும் தீண்டாமையையும் ஒப்பிடுகிறார். உலகின் மத, தத்துவ வளர்ச்சிப் போக்கில் ஆரியத்தின் மாற்றங்கள் என விவரித்து ஆரியர்களின் குணப் பண்புகளுக்கான காரணங்களை அலசுகிறார். இந்தியாவில் மட்டும் ஜனித்திருக்கும் ஜாதியத்திற்கு முழுக்காரணமும் ஆரியர்களாய் இருக்க முடியாது என்றும் ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கிருந்த விசேஷ குணங்கள் ஆரிய நோக்கங்களோடு கலந்ததின் விளைவே ஜாதியம் என்கிறார். முன்பு கம்யூனிசத்தை வைதீகத்துக்கு நிகராக எதிர்த்து வந்த பிரமிள் இந்தக் காலகட்டத்து எழுத்துகளில் கம்யூனிசத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது போலத் தோன்றும். இந்தியக் கலைமரபும் ஹிட்லரிசமும் என்ற கட்டுரையில், ‘எழுத்தியல் கலை வடிவம், சமுகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கக் கூடிய கருவி’ என்று குறிப்பிடுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். முன்பே சொன்னபடி சமூகத்தளத்தில் ஒரு நடுநிலைவாதி இடதுசாரியாகவே இருக்க முடியும். இதே கட்டுரையில் கம்யூனிசத்தின் பலவீனமாக மனித உன்னதத்தை மறுக்கும் வகையான ஆதிக்கத்தை போஷிப்பது என்பதையும் குறிப்பிடுகிறார்.

1970க்குப் பின்பு அதாவது பிரமிள் இந்தியா வந்த பின்பு அவரது விமர்சனத் தொனியில் பெரியதொரு மாற்றத்தைப் பார்க்கலாம். கலை கலைக்காகவே என்றும், இலக்கியத்தை ஒரு மோஸ்தராக மட்டும் பார்க்கும் கூட்டத்தின் பின்புலத்தில் பிராமணியம் இருப்பதைப் புரிந்து கொண்டதால் அவரது விமர்சனங்களில் சமூகவியல் பார்வை தூக்கலாய் நிற்கிறது. இன்னொன்று இங்கே ஆன்மீகம் என்பதே பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பிரமிளின் ஆன்மீகம் எது? பிரக்ஞையுணர்வுடன் எப்போதும் இருக்கும் நிலையை அடைவதே மனிதனின் உச்சபட்ச சாதனை என்று சொன்ன ஜே.கிருஷ்ணமூர்த்தியை தனது ஆதர்ஷமாகக் கொண்டவர் பிரமிள். பிரக்ஞையுணர்வு என்பது என்ன? உயிர்ப்புணர்வு நிலை.

நீரை எடுத்துக் கொள்வோம். அருவியாய்க் கொட்டி ஆர்ப்பரிக்கும் நீர், நதியாய்ப் பூர்ண அமைதியடைகிறது. கிணற்றில் ஒரு முகம்; குளத்தில் ஒரு முகம்; மழையொரு முகம். ஆனால் அமைதி பூத்த நதி தான் உயிர்களிடம் இரக்கமின்றியும் இருக்கிறது. எத்தனை கடற்கோள்களைக் கண்டிருக்கிறது இவ்வுலகம். நீரின்றியமையாது உலகு. ஒருபுறம் அதீதக் கருணையும், மறுபுறம் அதன் சுவடேயின்றியும் நீர் நீராகவே இருக்கிறது. தான், தனது தன்மையாகவே இருக்கும் நீரிடம் கருணையும் தர்மமும் வேண்டி மண்டியிட்டு ஆதிமனிதன் எழுப்பிய குரலே முதல் வேண்டுதலாய் இருந்திருக்கும். இத்தனை சொல்லியும் நீரை அதன் தன்மையாய் அப்படியே உள்வாங்க முடிவதில்லை. நம் மனநிலைக்கு ஏற்ப உருக்கொடுக்கிறோம். இந்தப் பூவுலகில் ஆறு அறிவு படைத்த மனிதனாய் நாம் இருப்பதை, அதில் என்னவாக இருக்கிறோம் என்பதையாவது தன்னுணர்வோடு புரிந்துள்ளோமா என்றால் இல்லை. நாம் ஏதோ செய்கிறோம். எதற்கோ ஆசைப்படுகிறோம். என்னவோ திட்டங்கள் வைத்திருக்கிறோம். பிரக்ஞையை மறைத்தபடி மனம் இழுத்துச் செல்கிறது. புலன்கள் கூருணர்வடைந்து மேகத்திலிருந்து வெளிவரும் நிலவைப் போலத் தெரிகிறது பிரக்ஞை. இங்கே கடவுள் இல்லை. உயிர்ப்பு மட்டுமே இருக்கிறது. உயிர்ப்பைச் சுவைக்கும் தன்னுணர்வு. தன் வாலை விழுங்கும் பாம்பு.

உறங்கும் முன்பு ஏதேதோ காட்சிகள் கட்டுப்பாடின்றி வந்து கொண்டிருந்தாலும் மனம் ஆழ்ந்த அமைதிக்குச் சென்று கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருக்கலாம். வழக்கமாய் மேல்மனம் முரண்பட்டவாறே இருக்கும். ஆழ்மனத்தில் அத்தகைய தொந்தரவு இல்லை. முரண்படாத காட்சியோட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒருமுறை தொட்டால் மீட்டெடுத்து விடலாமென்று தோன்றும் இந்தக் காட்சிகள் நினைவுக்கு வருவதே இல்லை. ஆனால் நமக்குள்ளே தான் கிடக்கின்றன. தன்னுணர்வு அதிகரிக்க அதிகரிக்க மேல்மனத்துக்கும் ஆழ்மனத்துக்குமான வேறுபாடு குறைகிறது அல்லது மேல்மனத்தின் முரண் விலக ஆரம்பிக்கிறது.

இந்தப் பயணமே பிரமிளின் ஆன்மீகம். இந்தத் தன்மை அவரது எழுத்துக்களுக்கு அடிநாதமாய் இருப்பதால் தான் அவர் விமர்சனங்கள் பூசிமெழுகுவதோ, சுய ஏமாற்றோ இன்றி மிகக் கூர்மையாய் இருக்கின்றன. இதன் நீட்சியாகத் தான் அவரது சமூகப் பார்வையை வைக்க முடியும். திசைநான்கு என்ற சிற்றிதழில் பிரமிள் எழுதியிருக்கும் தலையங்கத்தில் கீழ்க்கண்ட பத்தி வருகிறது:

தனிமனிதனுக்குள்ள மூளைக்குச் சமமாகச் சமூகம் என்ற தொகையுடலை ஆள்வது, அதன்சிந்தனையுலகத்தினர் தாம். இவர்களுள் சிந்தனைக்கு உரிய பண்புகளை இழப்பவர்களை, அதேஉலகத்தில் ஆரோக்யமாக இயங்குவோர் களைவது, சமூகத்தின் ஒரு மொத்தமானஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகும். இந்த வேலையைச் செய்யாமல் வாளாவிருப்பவர்கள், வெகு சீக்கிரமே தங்களுடைய ஆரோக்கியத்தையும் இழக்கத் துவங்குகின்றனர். இதன் விளைவாக, சமூகத் தொகையுடலின் மூளை தனது பகுத்தறிவுச் சக்தியினை இழக்கும்

இந்தப் பத்தியினை மேற்சொன்ன பார்வையுடன் ஒப்பிட்டு நோக்கலாம். தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தினை தனக்குச் சமமான பார்வையிலிருந்து நோக்குவதும் அதன் சிந்தனைத் தளத்தை மீட்டெடுப்பதும் முன்னோக்கி நகர்வதுமே சமூக மனிதனின் கடமை. இது தனிமனிதன் ஒருவகையில் தனக்காகச் செய்து கொள்வதும் கூட. இது சமூக நோக்கிலான பிரமிளின் பார்வையென்றால், இதன் இன்னொரு கோணத்தில் அகமுக நோக்கோடு சமூகத் தளத்தை இணைக்கும் மற்றொரு கோணத்தையும் பார்க்கலாம்.

ஒருமுறை கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிச் சொல்லும் போது அவர் அக்காலத்திய கூரிய மனங்களை தன்பக்கம் ஈர்த்து விட்டது புரட்சி மனோநிலையை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஒரு காரணமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். ஒருவகையில் இது உண்மையும் கூட. லட்சியத்தின் பரிமாணங்கள் (’திசைநான்கு’ – ஜூலை 1989) என்ற கட்டுரையில்:

இலட்சியத்தைப் பற்றிய பேச்சை விட, உடனடியாக இப்போது நாம் வாழும் விதத்தினைச்செம்மைப்படுத்துவதே செய்யப்பட வேண்டிய காரியம் என்ற பார்வை, இந்தச் சரித்திரக்கட்டத்திலேயே பிறக்கிறது. உடனடியாக நாம் வாழும் விதத்தை ஒரு இலட்சியத்துடன் ஒப்பிட்டு, இலட்சியத்துக்கு ஏற்ப உடனடி வாழ்வைத் திருத்த முயற்சிப்பது, இலட்சியத்தின் கொடுங்கோல்என்றாகும். இது ஆழ்ந்த மனிதர்களின் அகமுகப் பிரச்சினை. இந்த எல்லைக்குவரக்கூடியவர்களுக்கு, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரவசனங்களைப் போல மதிப்புக்கு உரியவைவேறு எதுவாகவும் இருக்க முடியாது. இந்த எல்லையை உணரத் திராணியற்ற மரத்தவர்களின்பார்வையில் உபயோகமற்ற விஷயமாகவும் அதே ஜே.கி.யின் பிரவசனங்கள் தொனிக்கும். காரணம், இலட்சியத்துக்கு ஏற்ப வாழ்வை அமைக்கிற கடினமான காரியங்களில் இவர்கள் இறங்கியதில்லை. எனவே இலட்சியம் என்பது உடனடிக் கணத்தின் ஆழமான ஊற்றை அடைக்கும் இறுதிக்கல் என்றபிரச்சினையினைச் சந்திக்கிற ஜே.கி.யின் அபூர்வமான தர்சனப் பிரவசனத்தின் தலையும் புரியாதுகாலும் புரியாது, தங்கள் ஆச்சாரிய பீடங்களிலிருந்து பிதற்றுவார்கள்.

ஆன்மீக கேந்திரம் தான் எனது தார்மீகத்தின் ஊற்றுக்கண். நான் சநாதனத்தை எதிர்த்தாலும், ராமகிருஷ்ணரிலிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தி ஈறான எனது பிராந்தியம் கூடச் சநாதனமானது தான்என்கிற .மார்க்ஸும், வேலுமித்திரன் என்ற கோ.ராஜாராமும் ஒன்றை உணர வேண்டும். சநாதனம்என்பது இனவர்க்கஜாதிரீதியானது. ராமகிருஷ்ணரும் சரி ஜே.கியும் சரி, ஜாதிய இனரீதியானஎல்லாவித வர்க்க உணர்வுகளையும் தங்களது மனோ நிலத்தினது அடி அத்திவாரத்திலேயேகளைந்தெறிந்தவர்கள்; உண்மையான புரட்சிக்காரர்கள்; இருவருமே தோட்டிகளாகக் கூடசெயல்பட்டவர்கள். முதலாளித்துவத்தை எதிர்க்கும் சாக்கில், தங்கள் வாழ்க்கை வசதிகளைக்காப்பாற்றிப் பெருக்கிக் கொண்டு, அந்த வசதிகள் பறிமுதலாகாமல் இருப்பதற்காக மார்க்ஸியஊளையிட்டவர்களல்லர்  ராமகிருஷ்ணரும் கிருஷ்ணமூர்த்தியும்.”

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆடிட்டர் குருமூர்த்தி, “தமிழகத்தில் ஆன்மீகம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் அதைப் பிரதிபலிக்கும் அரசியல் மாற்றம் இன்னும் வரவில்லை” என்று குறிப்பிட்டார். ஒரு கட்சி சார்ந்த நபரின் கருத்தாக இதைச் சாதாரணமாகக் கடந்துவிடலாம். ஆனால் பொதுஜனமாக இருந்து பார்க்கையில், இந்த மக்களுக்கெல்லாம் இந்தப் பதிலின் அர்த்தம் தெரிந்தால், தங்கள் கடவுள் பக்தி மிகப்பெரிய அரசியல் வலைக்குள் கிடக்கிறது என்பது புரிந்தால் எப்படியிருக்கும்? இதுவொன்றும் புதிதில்லை. ஆரம்பத்தில் கிறித்துவத்தைப் பரப்புவதற்காக பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்த சீடர்களின் முயற்சியால் கிறித்துவம் தழைத்து மதபோதகர்கள் அதிகார பீடத்தைக் கைப்பற்றவும் செய்தார்கள். மதத்தைப் பரப்புவதோடு இணைந்த செயல்பாடாக அரசியல் அதிகார ஈடுபாடும் அமைந்து விடுகிறது. எந்தத் தத்துவமும் ஒருகட்டத்துக்குப் பின் அமைப்புமயமாகி விடுகிறது. அது அதை உருவாக்கியவரின் கட்டுப்பாட்டையும் மீறிய அரசியல் செயல்பாடாக வளர்கிறது.

சாக்ரடீஸ் ஒரு நாடானது தத்துவவாதியினால் ஆளப்பட வேண்டும் என்று சொன்னார். ஆனால் அதை அரசன் டயனோசியஸ் செயல்படுத்திய போது பொருளாதாரம் சிதறுண்டது. எனினும் பிளேட்டோவுக்குப் பிந்திய காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் போது மார்க்கஸ் அரேலியஸ் என்ற தத்துவத்தில் ஈடுபாடுள்ள அரசன் சிறப்பாக அரசாண்டமைக்குக் காரணம் அவனது தத்துவார்த்தமான ராஜ்ய பரிபாலனமே. வர்ணங்களை மறுத்த பௌத்தத்தைத் தழுவிய அசோகரின் காலம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

சிந்தனைவாதிகளுக்கு இருந்த செல்வாக்கினை இரண்டு உலகப் போர்களும் நசுக்கிக் கொன்று விட்டன. மிகக்குறுகிய வட்டமாக தங்களுக்குள் பேசிக் கொள்ளும் இனமாக பொதுஜனங்களுடன் எவ்விதத்திலும் ஒட்டாத ஒன்றாகவே அறிவுஜீவி வர்க்கம் ஆகிவிட்டது. யூத இனத்தைக் கொன்று குவித்த ஹிட்லருக்குக் கூட பிற ஐரோப்பிய தேசங்களிலும் எதிர்ப்பு இன்றித்தான் இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவியேற்ற பின்பு தான் எதிர் நிலைப்பாடு வலுவாக வேரூன்றியது. யுத்த காலத்தில் சர்ச்சிலின் பேச்சு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவை தொகுக்கப்பட்டு நூலாகக் கொண்டு வரப்பட்டு அதற்கு நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் சர்ச்சில் அறிவு / கலாச்சாரம் / மரபுகள் / மதங்கள் / தத்துவங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்க பின்புலம் கொண்டவரில்லை.

ஜனவரி 1995ல் வந்த லயம் இதழ் 11ல் ’வின்ஸ்டன் சர்ச்சில், ஈ.வெ.ரா., சி.என்.ஏ’ என்ற கட்டுரையில் சர்ச்சிலையும் ஈ.வெ.ரா.வையும் ஒப்பிடுகிறார் பிரமிள். முறையான படிப்பறிவு இல்லாவிட்டாலும், ஜாதியம், அதன் ஆதாரமான பார்ப்பனீயம் மற்றும் அதன் விளைவான மூட நம்பிக்கைகள், மனித விரோதங்கள் எல்லாவற்றையும் ஈ.வெ.ரா. தாக்கினார். இடதுசாரிகள் இலக்கியத்தில் அரசியலைக் காண்பது போல ஈ.வெ.ரா.வும் இலக்கியங்களில் இருந்த பெண்ணடிமைத்தனத்தையும், ஆரிய மேட்டிமைவாதத்தையும் எதிர்த்தார். திராவிட கட்சிக்கும் கம்யூனிசத்துக்கும் பெரிய வேறுபாடுகள் பார்க்க முடியாது. அதனால் தான் அவை ஒன்றையொன்று ஆதரிக்கும் கட்சிகளாகவே தமிழகத்தில் தொடர்ந்து வந்துள்ளன. நமது இலக்கியங்கள் மீது இவ்வாறான பாகுபாடுகளை இனங்காட்டும் விமர்சனங்களை முன்வைத்தவர் ஈ.வெ.ரா. இதற்காக அவரது குரல் இலக்கியார்த்தமாகக் கவனம் பெறவேண்டும்; அவரது இலக்கியக் கணிப்பை மீறிய பரிமாணமாக இதைப் பார்க்க வேண்டும் என்கிறார் பிரமிள்.

ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தாலும் சி. என். அண்ணாதுரையும் தனது தீர்க்கமான கருத்து நிலைகளில் சர்ச்சிலுடன் ஒப்பிடத்தக்கவர் என்ற வாதத்தை முன்வைக்கிறார். இந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் காரணம், சாகித்ய அகாடமியின் பிரசுரத்துக்கு ஈ.வெ.ரா. மற்றும் சி.என்.அண்ணாதுரையின் எழுத்துகள் இலாயக்கற்றவை என்று தமிழவன், சா.கந்தசாமி, ஜெயகாந்தன் போன்றோர் ஒரு கூட்டத்தில் பேசியவையே. தேவதாசி முறையினால் தமிழகத்தில் இசையும் பரதமும் பேணப்பட்டது; இந்த முறை மறைந்ததினால் இந்தக் கலைகள் பாதிப்படைந்தன என்று இந்தியா டுடே இதழ் எழுதியது. சமூகத்தை முழுக்க விலக்கி விட்டு இலக்கியம் என்பது இசைக் கச்சேரி போல ஒன்று என்று பவுசுகாட்டும் தனத்தை இந்தக் கட்டுரையில் உரித்துக்காட்டுகிறார்.

சர்ச்சில், சரித்திர உணர்வை வெகுஜனத்தினருக்கு உணர்த்த ருசிகரப் பாணியைக்கடைப்பிடித்தமை கூட, பாமரர்களுக்கும் புரியக் கூடிய வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த.வெ.ரா.விடம் எதிரொலிக்கிறது. .வெ.ரா.வின் பிரசாரத்திலிருந்து விளைந்த கடுமையானபோராட்டத்தின் விளைவாகவே, பெண்களுக்குப் பொட்டுக்கட்டித் தேவதாஸிகளாக்கி, கோவில்கலாச்சார சாக்கில் தர்மவான்கள் காம வேட்டைக்குப் பயன்படுத்திய முறை, இத்தகைய பகுத்தறிவுஇயக்கத்தை அறியாத கேரளத்தின் கம்யூனிஸ ஆட்சியினாலேயே, அங்கே இன்னும்அழிக்கப்படவில்லை, கர்நாடகம், ஆந்திரா முதலியவையும் இத்தகைய இயக்கத்தைஅறியாமையால், அங்கும் தேவதாஸி முறை அழிக்கப்படவில்லை. கோவில் சார்ந்த மடமைகள்பாமரர்களுக்கு புலனாகாதபட்சத்தில், இத்தகைய சீரழிவுகளை அழிப்பது அசாத்தியம். இதுபோன்றகாரணங்களுக்காகத்தான், முக்கியமாக .வெ.ரா.வின் கருத்துகள்  அகில இந்தியத் தளத்துக்குப்போக வேண்டும்.

தமிழகத்தில், கோவில் கலாச்சாரம் என்ற பெயரில், பலாத்காரமாக மூளைச்சலவை மூலம்பெண்களுக்குப் பொட்டுக்கட்டுகிற இந்தக் கேவலத்துக்கும், கலையியலுக்கும் சம்பந்தமில்லை. இருப்பதாகக் கூறுகிறவர்களின் ஒரே நோக்கம், கலாச்சாரப் போர்வையில் விபச்சாரத்தைப்புணருத்தாரணம் செய்கிற தர்ம கைங்கர்யமாகத் தான் இருக்க வேண்டும். இவர்கள், பிறருக்குப்பொட்டுக்கட்டுவதை விடுத்துத் தங்களுக்குத் தாங்களே பொட்டுக் கட்டிக்கொண்டு, ‘கோயிற்கலாச்சாரம் பண்ணுவது தான் நேர்மை. பிறருக்குப் பொட்டுக்கட்டி விடும் முறை, .வெ.ரா.வின்கடுமையான இயக்கத்தின் விளைவாகவே, தமிழகத்திலிருந்து களையப்பட்டது.”

1975க்குப் பிறகான அவர் எழுத்துகளில் சமூக நோக்கே ஓங்கியிருந்தது. பிரமிளுடையது அறிவியக்கம். 1995ல் சி.சு.செல்லப்பா பிரமிளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எழுபதுகளின் காலகட்டத்தில் இயங்கியவர்களின் இயக்கம் என்று அதில் பங்கெடுத்தவர்களை மொத்தமாகக் குறிப்பிடுவதே சரியென்றும், அந்தச் சூழலும், இயக்கமுமே பிரதானமென்றும், அதில் ஒருவர் என்று பிரமிள் தன்னைச் சொல்லிக் கொள்ளலாமே தவிர தன் இயக்கம் என்று தனியே சொல்ல முடியாது என்று சற்று வேகத்துடனேயே சி.சு.செ. குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு நேரடியாக பிரமிள் பதிலளிக்காவிட்டாலும், தனது விமர்சன முறையினால் தனக்கு நேர்ந்த பாதிப்புகளைச் சொல்லியிருப்பதோடு, தமிழ் இலக்கியச் சூழலில் அவரது விமர்சன மரபு எத்தகையது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தீவிர இலக்கியத்தை மலினப்படுத்தும் அனைத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஞானக்கூத்தன் தனது கவிதைகளில் ஜாதியத்தை உள்ளூடாகப் புகுத்தி வெளிக்காட்டிக் கொண்டது, பிரம்மராஜன், சாரு நிவேதிதா, இடதுசாரிய எழுத்தாளர்கள் மற்றும் இன்னபிற இஸம்சார் எழுத்தாளர்களை அத்தகைய எழுத்துகளின் மலட்டுத்தன்மைக்கு எதிராக மீண்டும் மீண்டும் குரல் கொடுத்திருக்கிறார். சுருக்கமாகப் பார்த்தோமென்றால் பிரமிளின் பார்வையில் படைப்பாம்ச குணங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் சில:

  1. உயிர்ப்பு: வெறுமனே செய்து பார்க்கும் முயற்சியாகவோ, தொழில்முறை உத்தியாகவோ அல்லாமல் படைப்பு மனோகதியில் இருந்து எழுதப்படும் தன்மை, பிரக்ஞை, உணர்வுத்தளத் தீவிரம், வாழ்க்கை அனுபவம் கொண்டிருப்பது. சமூக விஞ்ஞானபூர்வமான நிர்தாட்சண்யத்தை அடிப்படையாக்கி, தனிமனிதனில் அகண்டமான மனித வர்க்கத்தை அல்லது பிரபஞ்சத்தின் உயிர் சொரூபத்தைக் காண வேண்டும்; காட்ட வேண்டும். இதனை அவன் ஆழமாக்காமல், உள்பொருள் அளவில் விரிவு பெறாமல் ஒரு வெளிப்படைத் தளத்திலேனும் மனிதாயம் பேணப்பட்டு வராவிட்டால், சமூகத்தின் அறிவார்த்தத்தளம் சீர்குலையும்.
  2. வெளிப்படுத்தும் பொருள்: கொள்ளைக்காரனாய் இருந்த ஜான் ஜெனேயின் எழுத்துகளை உயர்வாகப் பேசிய பிரமிள் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகளை விமர்சித்திருப்பது ஏன் என்று கேட்டுக் கொண்டால் இதற்கு விடை கிடைத்துவிடும்.
  3. பார்வையின் புத்துணர்வு (Fresh Outlook): எழுதுபவரின் தீட்சண்ய விசேஷத்தைச் சார்ந்தது இது. இந்தப் பார்வை இருந்தால் அதன் வழியாகச் சென்று தேர்ந்து கொள்கிற விஷயமும் புதுமைப் பொலிவு கொள்ளும்.
  4. சிந்தனை சார்ந்த மனம்: பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒருசில பக்கங்களுக்குள் பிசுபிசுத்து விடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம், இயற்கையாக வளரவும் வேண்டும் என்கிறார்.
  5. பின்னல்: சிருஷ்டி பின்னலானது. இயற்கையின் இயக்க சக்திகள் ஒன்றுடன் ஒன்று பிணையும் அனந்தகோடித் தாதுபூர்வமான நிகழ்ச்சிகள், இந்தப் பின்னல் நிலையை ஒரு சாதனையாக்குகின்றன. கலா சிருஷ்டியின் அடிப்படையும் இந்தப் பின்னலே. போதனையை உத்தேசிப்பவன் கலையியலின் தர்க்கத்தை இழந்தே தன்னுடைய தெளிவைச் சாதிக்கிறானாதலால், அவனது ‘தெளிவு’ பின்னல் குணத்தை நிராகரிக்கிறது. இதனால், அதன் விஷய தாதுக்களினிடையே உயிரின் ஊடாட்டம் நிகழ்வதில்லை. அதாவது, ஒரு வெற்றுப் பார்வையில் மட்டுமே அது ‘தெளிவு’ கொண்டு நிற்கும். ஊடுருவும் பார்வையில் அது தெளிவற்று, உள்தொடர்பற்று நிற்கும்.
  6. கலைஞனின் சமூகவுணர்வு: ‘சமூக உணர்வு’ என்ற பிரயோகத்தின் உண்மையான பொருள், மனிதனை – அவனது விளை நிலமான சமூகத்தை – இயற்கைக் களனை- உள்ளது உள்ளபடி காணல் என்று கொள்வதுதான் சரி. இதுதான் இலக்கியக் கலைப் பிராந்தியத்தில் சரியான அளவுகோல்களைப் போஷிக்கும். கலையுலகின் கேள்விமயமான உட்கிடைக்குத் தத்துவம் தீர்வுகளைத் தரலாம்; அரசியல்வாதி சீர்திருத்தங்களைச் செய்யலாம். ஆனால், அந்த வேலைகளையே கலைஞனும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.

*

இப்படியான கலைக் கோட்பாடுகள் குறித்து பிரமிள் இன்னும் நிறையவே சொல்லியிருக்கிறார். இவ்விடத்து பிரமிளின் விமர்சனங்கள் குறித்து எழுதப்பட்டவை போதுமென்று நினைக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தில் பிரமிளின் பார்வை வாசகருக்கு விளக்கு போன்றது.

முற்றும்.

 

https://tamizhini.in/2019/10/26/பிரமிள்-தனியொருவன்-பகுத-7/

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.