Jump to content

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல்


Recommended Posts

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல்

 
35th-athletics-696x464.jpg
 dimo.gif

எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார்.

இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்களைப் பதிவு செய்த ரவிந்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இவ்வருட முற்பகுதியில் ஹொங்கொங்கில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரியின் நவிஷ்க சந்தேஷை இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து டில்ஷான் தோற்கடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

அத்துடன், இம்முறை அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான அதிசிறந்த ஓட்ட வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், வருடத்தின் அதி சிறந்த பெண் மெய்வல்லுனராக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.48 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷெலிண்டா ஜென்சன் தெரிவானார்.

கடந்த வருடம் ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிட்டு 200 மீற்றர் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஷெலிண்டா, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 4×100 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

116 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளுக்காக 12, 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 5 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், ஆண்கள் பிரிவில் 27 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. 

35 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் நிலைநாட்டப்பட்ட அதிக போட்டிச் சாதனையாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்தது. 

தனிநபர் விருதுகள்

எறிதல் நிகழ்ச்சிகளில் அதிசிறந்த வீரருக்கான விருதை தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க பெற்றுக்கொண்டார். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 66.63 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 52.50 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற காலி மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த நவோத்ய சங்கல்ப, சட்டவேலி ஓட்டப் போட்டிகளுக்கான அதி சிறந்த வீரராக தெரிவானார்.

அத்துடன், பாய்தல் நிகழ்ச்சிகளில் அதி சிறந்த வீரருக்கான விருதை இராஜாங்கன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். சந்தனுவ பெற்றுக்கொண்டார். இவர் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.32 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார். 

இதேநேரம், ஆண்களுக்கான அஞ்சலோட்ட போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

ஒட்டுமொத்த சம்பியனாகியது மேல்மாகாணம்

35 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1228 புள்ளிகளைக் குவித்த மேல்மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 

501 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 437 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த வருடத்தைப் போல இம்முறையும் கிழக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டாலும், கடந்த வருடம் 28 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அந்த மாகாணம், இம்முறை 78 புள்ளிகளைக் குவித்தது. 

இதேவேளை, 156 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வட மாகாண அணி, தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் 6ஆவது இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இடம் மாகாணம் புள்ளிகள்
1 மேல் மாகாணம் 1280
2 மத்திய மாகாணம் 501
3 வடமேல் மாகாணம் 437
4 தென் மாகாணம் 327
5 சப்ரகமுவ மாகாணம் 278
6 வட மாகாணம் 156
7 வட மத்திய மாகாணம் 107
8 ஊவா மாகாணம் 98
9 கிழக்கு மாகாணம் 78

ஒட்டுமொத்த சம்பியன்கள் 

இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2018 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 12 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக நுகேகொட லைசியம் சர்வதேப் பாடசாலையும், பெண்கள் பிரிவில் சம்பியனாக தனமல்வில விஜயபுர கனிஷ்ட வித்தியாலயமும் தெரிவாகின.

14 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக கொழும்பு ஆனந்த கல்லூரியும், பெண்கள் பிரிவில் நாவலப்பிட்டிய புனித அண்ட்ரூஸ் மகளிர் கல்லூரியும் சம்பியனாகத் தெரிவாகின.

அத்துடன், 16 வயதுப் பிரிவின் ஆண்கள் சம்பியனாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவ கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயமும் தெரிவாகின.

இதேவேளை, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் ஆண்கள் சம்பியன்களாக தொடர்ந்து 2ஆவது வருடமாகவும் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயமும் சம்பியன்களாகத் தெரிவாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 35ஆவது அகில இலங்கை பாடசாகைள் விளையாட்டு விழாவில் ஆண்கள் சிரேஷ்ட பிரிவில் 133 புள்ளிகளைப் பெற்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி தொடர்ந்து இரண்டாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனானது. 

அதேபோல, பெண்கள் பிரிவில் 235 புள்ளிகளைப் பெற்ற வலல்ல ஏ. ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயம், தொடர்ச்சியாக 16ஆவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

இதேநேரம், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அதி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலைகளில் 127.5 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி சம்பியனாகத் தெரிவாகியதுடன், பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி (80 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், கொழும்பு விசாகா கல்லூரி (60 புள்ளிகள்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன. 

இறுதி நாளில் 11 போட்டிச் சாதனைகள்

போட்டியின் ஐந்தாவதும், இறுதியும் நாளான நேற்று (03) 31 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் நடைபெற்ற அஞ்சலோட்டப் போட்டிகளில் 6 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

காலை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மாவனல்ல ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.என்.எம் ரபீக் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 9.75 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 

கடந்த வருடமும் இதே போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற ரஹீப், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

வலல்ல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். லக்ஷானி, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையொன்றை நிலைநாட்டினார். இவர் போட்டித் தூரத்தை 44.20 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடமும் 02.15 செக்கன்களில் நிறைவுசெய்த இரத்தினபுரி சுமனா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.சி பந்துகா புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டினார்.

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 52.50 செக்கன்களில் நிறைவுசெய்த காலி மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த நவோத்ய சங்கல்ப புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்;.

இதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 4×50 அஞ்சலோட்டத்தில் தனமல்வில போதகம மகா வித்தியாலயம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான 4×50 அஞ்சலோட்டத்தில் மொறட்டுவை வெற்றிக்கான எமது மகளிர் கன்னியாஸ்திரிகள் மடமும் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தின.

14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் மாத்தறை ராகுல கல்லூரி, 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் வலல்ல ஏ ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயமும் புதிய போட்டிச் சாதனைகள் படைத்தன.

இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இதில் 2005ஆம் ஆண்டு மாதம்பே டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் நிலைநாட்டிய சாதனையை 13 வருடங்களுக்குப் பிறகு வலள ஏ ரத்னாயக்க கல்லூரி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்துக்கு 18 பதக்கங்கள்

கடந்த காலங்களைப் காட்டிலும் இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 18 பதக்கங்களை வென்றனர். 

எனினும், 2018 அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் வட மாகாணம், 14 பதக்கங்களையும், கடந்த வருடம் 13 பதக்கங்களையும் வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட இருபாலாருக்குமான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் மற்றும் என். டக்சிதா ஆகிய இருவரும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திசாந்த் மற்றும் அதே வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீபிகா ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த வி. சானுஜன் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்ததனர். 

கிழக்குக்கு நான்கு பதக்கங்கள்

இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது பதக்கத்தினை 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான் பெற்றுக்கொடுத்தார். குறித்த போட்டியில் அவர் 58.86 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றார். 

இதேநேரம், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் பங்குகொண்ட மட்டக்களப்பு அந்-நூர் மகா வித்தியாலயத்தின் ஏ.ஆர்.ஏ அய்மன், 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இது இவ்வாறிருக்க, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் என். அப்துல்லாஹ் 1.47 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், 1.38 மீற்றர் உயரத்தைத் தாவிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியைச் சேர்ந்த எம்.ஆர்.எம் சய்ப் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..

http://www.thepapare.com/35th-all-island-school-meet-2019-day-05-final-results-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.