Jump to content

சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது...

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 நவம்பர் 07

மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.   

மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள்.  

இத்தகைய போராட்டங்கள், உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு, மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கின்றன. 

கடந்த சில வாரங்களில், உலகின் பல பகுதிகளில், மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இவை வெறுமனே, கோரிக்கைகளாக அல்லாமல், உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் போராட்டங்களாக வலுப்பெற்றுள்ளன.   

குறிப்பாக, சிலியிலும் லெபனானிலும் ஹெயிட்டியிலும் வீறுகொண்ட மக்கள் போராட்டங்கள், அந்நாடுகளைப் புதிய திசைவழியில் நகர்த்துகின்றன. இப்போராட்டங்களின் நீட்சியும் வளர்ச்சியும் இன்றைய உலக ஒழுங்கின் கவனத்தைக் கோரி நிற்கின்றன. இதிலும் குறிப்பாக, சிலியில் நடப்பவை கவனிப்புக்குரியவை.   

சிலி: அடக்குமுறையால் அசைக்க முடியாத போராட்டம்   

தென்அமெரிக்க நாடான சிலியில், ஜனாதிபதி செபஸ்தியன் பினேரா, கடந்த மாதம் ஆறாம் திகதி, பொதுப் போக்குவரத்தில் நான்கு சதவீதக் கட்டண அதிகரிப்பை அறிவித்தார். இது, அவரது வலதுசாரி அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைந்தது.   

இதையடுத்து, தலைநகர் சான்டியேகோவில், பாடசாலை மாணவர்கள், உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணங்களை எதிர்த்ததோடு, கட்டணங்களைச் செலுத்தாமல், ரயில் நிலையத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு, மாணவர்களின் எதிர்ப்போடு தொடங்கிய போராட்டம், இன்று நாடெங்கும் பரவிச் சிலியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.   

மாணவர்களின் முன்னுதாரணத்தை மய்யப்படுத்தி, தொழிற்சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கின. இதன் தீவிரத்தை உணர்ந்த ஜனாதிபதி பினேரா, இராணுவத்தை வீதியில் இறக்கினார். இராணுவத்தின் உதவியுடன், இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தார்.   

இதன் ஒரு பகுதியாக, ஒக்டோபர் மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் 78 ரயில் நிலையங்கள், சில வங்கிகள், 16 பஸ்கள், சில பொதுக் கட்டடங்கள் ஆகியவை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டன. இதைக் காரணம்காட்டி, அவசரகால நிலையை, ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.   

1987ஆம் ஆண்டு, இராணுவ ஆட்சிக்காலத்துக்குப் பின், இப்போது முதன்முறையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இராணுவமும் பொலிஸாரும் கடமையில் இருக்கும் போதே, இந்தத் தீவைப்புகள் நிகழ்ந்தன. அரசாங்கம் போராட்டக்காரர்களைப் பழிசொன்னது; “வன்முறையில் இறங்குகிறார்கள்” என்று, பொய்ப்பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.   

அரசாங்கம் எதிர்பார்த்ததுக்கு மாறாக, போராட்டக்காரர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. இந்த வன்செயல்களை, அரசாங்கம் திட்டமிட்டுச் செய்து, அடக்குமுறையைத் தம்மீது ஏவுகிறது என்பதை, சிலி மக்கள் தௌிவாக  அறிந்திருந்தார்கள்.  

இதற்கிடையில், அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் (Organization of American States) செயலாளர் நாயகம், “அமைதியான சிலி நாட்டில், கியூபாவும் வெனிசுவேலாவும் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன; இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று சொல்லியிருந்தார். இயல்பான மக்கள் போராட்டங்களுக்கு, சேறுபூசும் இன்னொரு செயலாக, சிலி மக்கள் இக்கூற்றை நோக்கினார்கள்.   

இராணுவ அடக்குமுறை, நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதை எதிர்த்து, மக்கள் போராடத் தொடங்கினார்கள். இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் சுடப்பட்டுள்ளார்கள்; போராட்டக்காரர்களுக்கு எதிராக, வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை, 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்; 3,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர், 5,000க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.   

இவையனைத்தையும் தாண்டி, கடந்த மாதம் 23ஆம் திகதி, பொது வேலைநிறுத்தத்துக்கும் போராட்டத்துக்கும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதன் விளைவால், கடந்த 25ஆம் திகதி, நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.   

image_23285fce78.jpg

இதிலும் குறிப்பாக, தலைநகரில் 1.2 மில்லியன் சிலியர்கள் குவிந்தார்கள். இது சிலியின் வரலாற்றில் முதன் நிகழ்வு. வீதிகளில் இறங்கியோர், தங்களது அடிப்படை உரிமைகளைக் கேட்டுப் போராடினார்கள்.   

சிலியில், செல்வந்தர்களுக்கும் வறியோருக்கும் இடையிலான இடைவெளி 75 சதவீதம் ஆகும்; இது, வெறும் 10 சதவீதமானவர்களின் கைகளில் தேங்கி நிற்கிறது. மிகுதி 25 சதவீதம் மட்டுமே, 90 சதவீதமான சிலியர்களுக்கு உரியதாகிறது.   

கடந்த சில தசாப்தங்களாக, ஓய்வூதியத் தொகை குறைக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது வழங்கப்படும் ஓய்வூதியமானது, சிலியின் மிகக்குறைந்த அடிப்படைச் சம்பளத்தின் 80 சதவீதம் மட்டுமே! 

மருத்துவம், தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவால், சில மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களின் ஏகபோகமே நிகழ்கிறது. இதனால், பொது மருத்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. சமூக நலவெட்டுகள், ‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரால்த் தொடர்கின்றன. மக்களுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.   

ஓக்டோபர் 25ஆம் திகதி போராட்டத்தைக் கண்டு அரண்டுபோன ஜனாதிபதி பினேரா, “நான் மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டுள்ளேன். எனது அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக்குவார்கள்; புதிய அமைச்சரவை, மக்கள் நலன்களைக் கருத்தில் கொள்ளும்” என்று அறிவித்தார். 

ஆனால், இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் ஏமாற்றும் போக்கின், இன்னொரு கட்டமாகவே இதைப் பார்க்கிறார்கள்; மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன.   

இந்த மக்கள் போராட்டங்களில், இரண்டு மானிடர்கள் மீண்டு வந்தார்கள். அவர்கள், சிலியின் மனச்சாட்சியாய்த் திகழ்ந்தவர்கள். அதில் முதன்மையானவர், முன்னாள் சிலியின் ஜனாதிபதி சால்வடோர் அலெண்டே. அவரது உருவப்படங்களைப் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள். அவர் கொல்லப்பட்டு 46 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் வந்திருக்கிறார்.   

அலெண்டேயின் கதை முக்கியமானது. அது, இன்னொரு 9/11 போன்றதாகும். உலகம் நன்கறிந்த அமெரிக்காவின் 9/11யை விட, முக்கியமான நிகழ்வு இதுவாகும். அதை இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகும்.  

சிலியின் 9/11: மறக்கப்பட்ட கதை  

ஏனைய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் போலவே, சிலியிலும் நீண்ட காலமாக, அமெரிக்கச் சார்புள்ள அரசாங்கமே இயங்கி வந்தது. இன்னும் சரியாகச் சொல்வதாயின், அமெரிக்கச் சுரங்கக் கம்பெனிகளின் மறைமுக ஆட்சியே நிகழ்ந்து வந்தது. 

1971ஆம் ஆண்டு, பெரும்பான்மை ஆதரவுடன், இடதுசாரி வேட்பாளரான சல்வடோர் அலெண்டே, ஆட்சிக்கு வந்தார். சமூக நல நடவடிக்கைளை முன்னெடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, நாட்டின் கனிம வளங்களைத் தேசியமயமாக்கினார். இதன் விளைவால் சுரங்கங்கள் தேசியமயமாகின.  

இவ்வளவு காலமும், சிலி நாட்டின் செப்புச் சுரங்கங்களைத் தம்வசம் வைத்திருந்த அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற்றப்பட்டன. இது, அமெரிக்காவுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை.   

சிலியின் ஆட்சிமாற்றத்துக்கான சதி, அரங்கேறத் தொடங்கியது. அச்சதி உள்ளிருந்தே அரங்கேறியது. ஜனாதிபதி அலென்டேக்குச் சார்பான இராணுவத் தளபதி கொல்லப்பட, புதிதாகப் பதவியேற்ற இராணுவத் தளபதி அகஸ்டோ பினோஷே, இராணுவச் சதியை அரங்கேற்றினார். ஜனாதிபதி அயெண்டே கொல்லப்பட்டார். அவருக்கு ஆதரவான மக்கள் கொல்லப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.   

அதைத் தொடர்ந்து, 27 ஆண்டுகள் இராணுவச் சர்வாதிகார ஆட்சி, சிலியில் அமையப்பெற்றது. அக்காலப்பகுதியில், சிலியின் வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. அவ்வகையில், நவதாராளவாதம் தனது கைவரிசையைக் காட்டிய முதற்தேசங்களில் ஒன்றாகச் சிலியைக் கொள்ளவியலும்.   

இராணுவச் சதியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அலெண்டேக்கு ஆதரவானவர்கள், தலைநகரிலுள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அதில் ஒருவர், பாடகரும் கிட்டார் வாத்தியக் கலைஞருமாக விக்டர் ஹாரா. தனது பாடல்களால் அலெண்டேயைப் பதவிக்குக் கொண்டு வர உதவியவர்; தனது பாடல்களால் அயெண்டேயின் சமூக நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர், இராணுவத்தால் மோசமான சித்திரவதைக்கு ஆளானார். அவரது கைகள் வெட்டப்பட்டன; அவர், கிட்டார் வாசிக்கும்படி பணிக்கப்பட்டார்; அவர், பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.  

image_926e064968.jpg

ஓக்டோபர் 25ஆம் திகதி, போராட்டங்களில் ஹாரா, மீண்டு வந்தார். சிலி நாட்டைச் சேர்ந்த கிட்டார் வாத்தியக் கலைஞர்கள் இணைந்து, போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஹாராவின் பாடலை இசைத்தார்கள். ‘மக்களுக்காகப் போராடியோர் என்றும் மரிப்பதில்லை’ என்பதை, சிலி இன்னுமொருமுறை காட்டுகிறது. ஹாரா, பாடியபடியே உயிர்துறந்த பாடல் இதுதான்...  
 
நகரின் இச்சிறுபகுதியில் உறையும் ஐயாயிரம் பேர் நாங்கள்,  
நாங்கள் ஐயாயிரம் பேர்; நாடு முழுவதும் எம்போல் எத்தனை பேர்?  
பசி, குளிர், கொடூரம் வேதனைகளுடன்  
மனித குலத்தின் பெரும் பகுதியினர்.  
எம்மிலும் அறுவர் ஏற்கெனவே தொலைந்து, விண்மீன்களுடன் சேர்ந்தனர்.  
ஒருவர் கொல்லப்பட்டார்.  
ஒரு மனிதர் எவ்வாறு புதைக்கப்படலாம்?   
நான் கற்பனையிலும் காணாதவாறு, மற்றொருவர் புதைக்கப்பட்டார்.  
மற்ற நால்வரும் வெறுமனே,  
தமது அச்சங்களுக்கு முடிவுகட்ட விரும்பினர்.  
கீழே குதித்துச் சாவை அணைத்து க்கொண்டார் ஒருவர்;  
சுவரில் தலையை மோதிச் சாய்ந்தார் இன்னொருவர்;  
ஆனால், அவர்கள் எல்லோருமே  
சாவின் விழிகளை, நேராக நோக்கியவாறே இறந்தனர்.  
பத்தாயிரம் கரங்கள் நாங்கள்,  
இனியும் பணியாற்ற இயலாத எம்போல், நாடு முழுவதும் எத்தனை பேர்?  
பாடலே, நீ எவ்வளவு முழுமையில்லாதனை,  
நான் பாடுவது மிகத் தேவையானபோது, என்னால் பாட முடியவில்லை.  
என்னால் பாடமுடியாது; ஏனெனில், நான் உயிரோடிருக்கிறேன்.  
என்னால் பாடமுடியாது; ஏனெனில், நான் செத்துக்கொண்டிருக்கிறேன்.  
முடிவில்லாத தருணங்களில், நான் தொலைந்து போகக் காணுவது,  
எனக்கு அச்சமூட்டுகிறது;  
எனது பாட்டின் நோக்கங்கள்,  
எந்த மௌனத்தின் மீதான கத்தல்களாக உள்ளனவா?  
நான் இப்போது காண்பது, நான் இதுவரை காணாதவை;  
நான் உணர்வதும், நான் இதுவரை உணர்ந்தவை;  
எங்கள் ஜனாதிபதித் தோழர் சிந்திய குருதி, 
இக்காலப் பொழுதை வசந்தமாக்கும்; 
குண்டுகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் விட வலியது.  
அதே வலிமையோடு, எங்கள் ஒருங்கிணைந்த கைகள்,  
என்றோ ஒருநாள் ஓங்கி அறையும். 

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிலியை-உலுக்கும்-போராட்டங்கள்-மக்கள்-வீதிக்கு-இறங்கும்-போது/91-240768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.