5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த? – சம்பிக்க சவால்

 

Champika-ranawakka-300x200.jpg

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பணத்தைக் கொண்டு நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர் என்றும், அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு கையூட்டப் பெறவில்லை என்று வரும் 16ஆம் நாளுக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவினால் பிரகடனம் செய்ய முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2010இல் காலிமுகத்திடலில் இருந்த ஆறு ஏக்கர் காணி  75 மில்லியன் டொலருக்கு, – மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.

சிறிலங்காவின் ஒரு அங்குல நிலத்தையேனும் வெளிநாட்டவருக்கு தான் விற்பனை செய்ததை யாராவது நிரூபித்தால், தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிரை மாய்ப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

காலிமுகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை அவர் ஹொங்கொங்கில் உள்ள ஷங்ரி-லா நிறுவனத்துக்கு 75 மில்லியன் டொலருக்கு விற்றார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும், ஆவண மற்றும் நீதித்துறை சான்றுகள் இங்கே உள்ளன.

தாம் இதைச் செய்யவில்லை என்று வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கூற வேண்டும், உயிரை மாய்க்க வேண்டாம்.

ஐந்து நட்சத்திர விடுதியைக் கட்டுவதற்காக காலிமுகத்திடலில்  ஆறு ஏக்கர் காணியை 75 மில்லியன் டொலருக்கு ஷங்ரி-லாவுக்கு விற்கும் உடன்பாடு  2010 ஏப்ரல் 29இல் கையெழுத்திடப்பட்டது.

பின்னர், ஷங்ரி-லா (கொழும்பு திட்டம்) க்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக, ரிபிஎல் இன்டர் மற்றும் ஹெலியார்ட் நிறுவனங்கள் பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளில் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டுப் பணம், இந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த ஐந்து மில்லியன் டொலரில், ஒரு பகுதி  பணம், கம்பகா, மாத்தறை ஆகிய இடங்களில் சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/11/12/news/41070