(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். 

தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

75242295_1371653369655773_32591812146862

தமிழ் மக்களுக்கு நாட்டில் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மனதளவிலும் வாழ்வாதார ரீதியிலும் உயர்த்தும் பொறுப்பும் எம்முடையது எனவும் அவர் கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக நேற்று கிளிநொச்சியில் முன்னெடுத்த தேர்தல் பிரசாரத்தில் இக் கருத்துக்களை முன்வைத்தார். 

சகல துறைகளிலும் எமது நாடு வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று வடக்கில் மாணவர்களுக்கு பாடசாலைகள் இல்லை, இருக்கும் பாடசாலைகளுக்கான முழுமையான ஆசிரியர்கள் இல்லை, கல்விகற்கும் சூழல் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களின் பிள்ளைகளை பாருங்கள் அவர்கள் அனைவரும் அதிக வசதிகள் கொண்ட பாடசாலைகளில் படிக்கின்றனர். 

எமக்கும் அவ்வாறான வசதிகள் வேண்டாமா? அதேபோல்தான் வைத்தியசாலைகளை எடுத்துக்கொண்டாலும் அவ்வாறேயாகும். எமக்கு நோய்களுக்கு ஏற்ற மருந்துகள் இல்லை. ஆனால் அமைச்சர்களை எடுத்துப்பாருங்கள். அவர்களுக்கு சாதாரண நோய் என்றால் கூட வெளிநாடுகளில் தான் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர். 

வீடுகளை எடுத்துக்கொண்டாலும் மக்களுக்கு உள்ள அடிப்படை தேவை வீட்டுத் தேவையாகும். ஆனால் மக்கள் மாட்டுத் தொழுவம் போன்ற வீடுகளில் வாழ்கின்றனர், ஆட்சியாளர்கள் மாளிகைகளில் வாழ்கின்றனர். கொழும்பில் மட்டும் அல்ல நாட்டில் சகல பகுதிகளிலும் வீடுகள் வைத்துள்ளனர். அதையும் தாண்டி சர்வதேச நாடுகளில் கூட வேண்டுகளை வாங்கி வைத்துள்ளனர். 

கடந்த 71 ஆண்டுகளாக ஆட்சியை மாற்றி மாற்றி மக்களுக்கு என்ன நலன்கள் கிடைத்தது. எமக்கு ஒரு வீடு இல்லை என்றால், மருத்துவ வசதிகள் இல்லையென்றால், கல்வி இல்லையென்றால், வருமானமில்லை என்றால், சுத்தமாக குடிநீர் இல்லையென்றால் நாம் இந்த இரண்டு ஆட்சியாளர்களை மாற்றி மாற்றி அதிகாரத்தை கொடுப்பதில் என்ன நலன்கள் உள்ளது. 

சாதாராண கீழ்மட்ட மக்கள் ஒரு வருடத்தில் உணவுக்காக செலவழிக்கும் பணத்தை ஆட்சியாளர்கள் ஒரு நாளில் செலவளிக்கின்றனர். இன்று மக்களின் நிலைமைகளை பாருங்கள். அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்ட உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் முரண்பாடுகளும், கோவம் குரோதங்களை வளர்த்து விட்டுள்ளனர். இதனை மாற்ற வேண்டாமா? இதற்காகவே நாம் மாற்றம் ஒன்றினை உருவாக்க கோருகின்றோம். மக்கள் அமைதியாக மன சந்தோசத்துடன் ஆரோக்கியமாக வாழக்கூடிய வாழ்க்கை ஒன்றினை மக்களுக்கு வழங்க வேண்டும். அதனால் தான் நாம் அனைவரும் இணைந்து மாற்றம் ஒன்றினை செய்வோம் என அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அவர் இதன்போது கூறினார். 

https://www.virakesari.lk/article/68896