Jump to content

ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா?

GettyImages-1174220006-copy.jpg?zoom=3&r

பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter

“என்னைப் பொறுத்தவரை இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றனர். பயங்கரவாதத்துக்கெதிராக போராட விரும்புபவர்கள் ஒரு பக்கம். பயங்கரவாதிகள் மறுபக்கம். இரண்டே குழுக்கள். நீங்கள் ஒன்றில் பயங்கரவாதியாக இருக்கலாம் (சிரிக்கிறார்) அல்லது பயங்கரவாதிகளுடன் போராடும் ஒரு நபராக இருக்கலாம்.”

கோட்டபாய ராஜபக்ச (பிபிசியின் கிறிஸ் மொரிஸுக்கு வழங்கிய பேட்டி)

2015ஆம் ஆண்டில் பெரும்பான்மையான இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். திறந்த அந்த ஜனநாயக வெளியைத் தக்கவைத்திருக்க நாங்கள் வாக்களிக்கப் போகின்றோமா? அல்லது அதன் படுகொலையில், அறிந்தோ அறியாமலோ, பங்கெடுக்கப் போகின்றோமா?

2018ஆம் ஆண்டின் சிறிசேன – ராஜபக்‌ஷ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின்போது, தமக்கு எதிராக வந்திருந்த நீதிமன்ற தீர்ப்புகளைப் புறக்கணித்து, சட்டவிரோத தேர்தலுக்கு செல்லுமாறு மஹிந்த ராஜபக்‌ஷ மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவுறுத்தியதாக 2018 டிசம்பர் 2ஆம் திகதி இரிதா திவயின வார இதழில் செய்தி வெளிவந்தது. சிறிசேன அந்த ஆலோசனைக்கு மட்டும் ஏதோ நல்லகாலம் செவிமடுக்கவில்லை.

கோட்டாவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற நாம் அனுமதித்தால், இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை எடுத்துக்காட்ட மேற்குறிப்பிட்ட சம்பவமே போதும்.

ராஜபக்‌ஷாக்களுக்கு ஜனநாயகம் அல்லது சட்டத்தின் மீது கிஞ்சித்தேனும் மரியாதை கிடையாது. இந்த கொடுங்கோல் குடும்பத்திலுள்ள மற்றோர் எல்லோரை விடவும் கோட்டபாய வன்மம் மிக்க கொடுங்கோலன். அவர் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியானால், அவரும் அவரது குடும்பத்தினரும், அவர்களது கட்சியும் 2015 ஜனவரியில் நாம் பெற்ற ஜனநாயக வெளியை படுவேகமாக நசுக்கி, இலங்கையின் கொடுங்கோன்மையின் கைகளுக்குள் ஒரு சில நாட்களிலேயே மூர்ச்சையாக்கி முடங்கவைப்பர்.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குடும்பத்தின் அரசியல் திட்டத்திற்கான வாகனமாகப் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி பொதுஜன பெரமுன மட்டுமே. சகோதரர்கள், மகன்கள், மருமகன்கள், மாமாக்கள், மச்சான்கள் என குடும்பமாக கும்மியடிக்கும் ராஜபக்‌ஷாக்களின் கட்சி இது. கட்சியின் நிறம் கூட மஹிந்தவின் சால்வையின் குரக்கன் சிவப்பு. கட்சி தொடங்கியதற்கான காரணம், அதன் இருப்புக்கான காரணம் யாவையும் மீண்டும் ராஜபக்‌ஷாக்களை இலங்கையின் உரிமையாளர்களாக மாற்றுவது மட்டுமே. இந்த அதர்மவான்கள் திட்டமிடும் அநீதிச் சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாணச் சக்கரவர்த்தி வேறு யாருமல்ல கோட்டாவேதான்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் இதுவரைகால ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார வரலாற்றில் மிகவும் அமைதியானது. வன்முறை மற்றும் மீறல்கள் மிகக் குறைவு. இந்நிலைமை 2015 ஜனவரியில் மக்கள் ஏற்படுத்திய ஜனநாயக மாற்றத்தின் காரணமாகவும், ஆகஸ்ட் 2015இல் (மஹிந்த பிரதமராவது) மற்றும் ஒக்டோபர் – டிசம்பர் 2018 இல் (சிறிசேன – ராஜபக்‌ஷ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியிலிருந்தும்) ஜனநாயகத்திற்கான போராட்டங்களால் பாதுகாக்கப்பட்டது.

கோட்டபாய ராஜபக்‌ஷ இம்முறை ஜனாதிபதியானால், இனி வரப்போகும் கணிசமான காலங்களுக்கு இத்தேர்தலே கடைசி இரத்தம் சிந்தாத தேர்தலாக அமையும்.

இன்றைய தெரிவும் ஜனவரி 2015இல் இருந்த அதே தெரிவே. அது குறைபாடுள்ள ஜனநாயகத்துக்கும் எதிர் ஒழுங்கமைக்கப்பட்ட கொடுங்கோன்மைக்கும் இடையிலான தெரிவு. அது பிரஜாவுரிமைக்கும், அடிமைத்தனத்துக்கும் இடையிலான தெரிவு. UNP வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் முடிவடைந்து விட்டது. முதல் சுற்றில் கோட்டபாய ராஜபக்‌ஷவின் தோல்வியை நாம் உறுதிசெய்ய ஒரே வழி சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதுதான். எங்கள் ஜனநாயகம் குறித்து நாங்கள் தீவிரமாக இருந்தால் வேறு வழியேதும் இல்லை.

தீவிர அரசியல் தூய்மை கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கப் போகிறதா?

பிரதான எதிர்க்கட்சி, அதாவது அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போகும் கட்சி, அடிப்படையில் ஜனநாயக விரோதமானதாய் இருக்கும் போது, அது பாரிய அனர்த்தத்தைத் தர வல்லது. இதுதான் இன்று இலங்கையின் அவலநிலை.

ஒரு ஜனநாயக அரசாங்கத்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்றி விட முடியாது. ஒரு ஜனநாயகம் முழுமையானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஜனநாயக வழியில் செயற்படும் எதிர்க்கட்சியும் தேவை. அப்போதுதான் ஜனநாயகத் தேர்தல்கள் ஜனநாயகத்தைத் தகர்ப்பதற்குப் பதிலாக பலப்படுத்தும் முடிவுகளை உறுதிப்படுத்த முடியும்.

2015 ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனநாயக அரசாங்கத்தை எமக்கு வழங்கியது. ஆனால், அத்தேர்தலால் ஒரு ஜனநாயக எதிர்க்கட்சியை வழங்க முடியவில்லை.

2019ஆம் ஆண்டில், எதிர்க்கட்சிக்கான இடைவெளியை ஜனநாயகமயமாக்குவதற்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வருகின்றது.

கோட்டா தோற்கடிக்கப்பட்டால், அது ராஜபக்‌ஷாக்களின் ஆட்சிப் பிடிப்புத் திட்டத்தை பாரிய நெருக்கடிக்குள் தள்ளும். ராஜபக்‌ஷ சகோதரர்களிற்கிடையேயான போரில் முதல் மங்கலான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளன. அலவ்வ மற்றும் ஹசலகவில் நடந்த பொதுஜன பெரமுன பேரணிகளில், சில பங்கேற்பாளர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் பேச்சுக்கு இடையூறு விளைவிப்பதற்காக கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. பொதுஜன பெரமுன பேரணியில் மஹிந்தவிற்கு இப்படி நடக்குமென்று ஒரு மாதத்திற்கு முன்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. இன்று அது நடக்கிறது. கோட்டபாய ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டால், பொதுஜன பெரமுன உட்பிரச்சினைகள் பலதைக் கொண்ட பிரிவுகளாக உடைய வாய்ப்புள்ளது.

ராஜபக்‌ஷ காரணி பலவீனமடைவது எதிர்க்கட்சிகளுக்கான இடைவெளியை ஓரளவிற்கு விடுவிக்கும். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் மகேஷ் சேனநாயக்க போன்ற சுயாதீன நபர்களுக்கு தெற்கு தேர்தல் தொகையில் பெரும் பகுதியைக் கோருவதற்கான வாய்ப்பை வழங்கும். பின்னர் அவர்கள் அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான ஜனநாயக எதிர்ப்பணியாக மாறலாம்.

ஒரு ஜனநாயக அரசாங்கத்துடன், அதே சமயம் ஒரு ஜனநாயக எதிர்க்கட்சியுடன், இலங்கையின் ஜனநாயகம் ஒரு நல்ல நிலைக்கு மேற்செல்ல வாய்ப்புள்ளது.

ஆனால், இவையெல்லாம் ஒரு நிபந்தனையைப் பொறுத்தது. அது கோட்டபாய ராஜபக்‌ஷ இத்தேர்தலில் தோற்கடிக்கப்படுவதேயாகும்.

கோட்டபாய வாக்கு நிலவரத்தில் முன்னிலையுடன் போட்டியில் நுழைந்தார். அந்த முன்னிலை கடந்த சில வாரங்களில் குறுகிவிட்டது. பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் சஜித்திற்கான ஆதரவு மற்றும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ராஜபக்‌ஷாக்களுக்கு எதிரான பிரிவை வழிநடத்த சந்திரிகா எடுத்துள்ள முடிவு காரணமாக, வெற்றிகரமான 2015 கூட்டணி போன்று ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் அதில் ஒரு பெரிய குறைபாடு உள்ளது. ஜே.வி.பி. இம் முறை தனியாகப் போட்டியிடுகிறது. முந்தைய பல ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஜே.வி.பி.யின் இருப்பு அல்லது இல்லாமை முக்கிய பங்கை வகித்திருந்தது. உதாரணமாக, 2015ஆம் ஆண்டில், ஜே.வி.பி. தனியாக போட்டியிட்டிருந்தால், மைத்திரிபால சிறிசேன ஒரு முழுமையான வெற்றியைப் பெற்றிருக்க மாட்டார். 2005ஆம் ஆண்டில், புலிகளால் உத்தரவிட்ட வடக்கு – கிழக்கு தேர்தல் புறக்கணிப்புடன் கூட, ஜே.வி.பி. தனியாகப் போட்டியிட்டிருந்தால்  நிச்சயம் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்திருப்பார்.

இந்த முறை தேர்தல் முடிவு, ஜே.வி.பி. தனது வாக்காளர்களை சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கு அளிக்குமாறு பகிரங்கமாக கேட்குமா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஜே.வி.பி. ஏற்கனவே ஒரு சமிக்ஞையை அனுப்பியுள்ளது. ஆனால், அது போதுமானதாக இருக்காது. ஜே.வி.பி. இந்தக் கோரிக்கையை வெளிப்படையாகச் செய்ய வேண்டும், நிலைமையின் அதிதீவிரத்தை சுட்டிக்காட்டி. தனது திசைகாட்டிக்கு மட்டுமல்ல, அன்னப்பறவைக்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று அது தனது வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கைக் கொடுப்பது ஜே.வி.பியின் சொந்த உயிர்வாழ்வையும், ஜனநாயகக் கட்சியாக அதன் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான ஒரே வழியாகும்.

2014ஆம் ஆண்டில், அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இணைந்த சிக்கலான செயற்பாடுகளுக்கான மையத்தின் (சி.சி.ஓ.) பிரிஸ்ம் சஞ்சிகையில் கோட்டபாய ராஜபக்‌ஷவின் பெயரில் கருத்துக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக்கு எதிரான புதிய அச்சுறுத்தல்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அப்பட்டியலின் 2ஆம் இடத்தில் புதிய பிற தீவிரவாதக்குழுக்களின் தோற்றம் என்றிருந்தது. அதைத் தொடர்ந்து வந்த விளக்கம் பிற தீவிரவாதக் குழு ஜே.வி.பி. என்பதைக் காட்டுகின்றது:

“முந்தைய கிளர்ச்சிகளில் ஈடுபட்ட தீவிரவாத குழுக்களின் எச்சங்கள் இவை. சிலர் … தங்கள் தீவிர இடதுசாரித் திட்டங்களை மீண்டும் முன்னெடுக்க மக்களை அணிதிரட்ட முயற்சிக்கின்றனர். இந்தக் குழுக்களில் சிலர் விடுதலைப் புலிகளின் முகவர்களுடன் உறவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இக்குழுக்களின் செயல்பாடுகளில் மாணவர்களை தீவிரமயமாக்குதல் மற்றும் பல்வேறு போராட்டங்களில் வீதிகளில் இறங்க ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.”

ஜே.வி.பி. தனது வாக்காளர்களை சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது முன்னுரிமை வாக்கை கொடுக்கும்படி கேட்கத் தவறி, அதன் மூலம் கோட்டாவின் வெற்றிக்கு ஒரு கதவைத் திறந்தால், அதே ஜே.வி.பி. வேட்டையாடப்பட்டு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டி வரும். கோட்டபாய ராஜபக்‌ஷ, ஜே.வி.பியின் தவறான அரசியல் தூய்மை உணர்வின் பயனாக ஆட்சியேறி, வந்த வரத்திலேயே ஜே.வி.பியைக் குறிவைப்பார். ஒரு பணிப்பகிஷ்கரிப்பு, ஒரு போராட்டம், அனுரகுமார திசாநாயக்கவின் எழுச்சிப் பேச்சு. இவற்றில் ஒன்று வேட்டையைத் தொடங்க கோட்டாவிற்குப் போதுமான சாட்டுப் போக்காக இருக்கும். நாம் எல்லோரும் விரும்பும் மூன்றாவது அணியின் பிரசன்னமும் உடனடியாகவே மங்கி மறையும்.

ரத்துபஸ்வலவில் 2013இல் கோட்டா அரங்கேற்றிய மாபாதகம் ஆனது நவம்பர் 16 இன் பின்னான நமது எதிர்காலத்தின் முன்னோட்டமாகும். ஒரு தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் சட்டங்களை புறக்கணித்து நிலத்தடி நீரை விஷமாக்கியது. மக்கள் சுத்தமான குடிநீரைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தண்ணீரே அவர்களின் கவலை; அரசியல் அல்ல. ஆனால், இந்தத் தொழிற்சாலை ராஜபக்‌ஷ அடிவருடிகளுக்குச் சொந்தமானது. இதனால், ராஜபக்‌ஷ சகோதரர்கள் போராட்டத்தை ஒரு அரசியல் அச்சுறுத்தலாகக் கருதினர். பிரிகேடியர் தலைமையில் பேராயுதங்களை ஏந்திய இராணுவம் அனுப்பப்பட்டது. குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மூன்று பேர் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். இன்னும் பலர் காயப்படுத்தப்பட்டனர்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், 2015இல் நடைமுறைக்கு வந்த ஜனநாயக வெளியை அழிப்பதே கோட்டாவின் முதற் பணிகளில் முதன்மையானதாகவிருக்கும். 2020 நாடாளுமன்றத் தேர்தல் அராஜகமான ஜனநாயகமற்ற சூழ்நிலையில் நிகழ்வதை உறுதிசெய்ய அவரும், அவரது குடும்பத்தினரும், SLPP யும் அயராது உழைப்பார்கள். UNP, JVP மற்றும் ராஜபக்‌ஷாக்களுக்கு மரியாதை கொடுக்க மறுக்கும் SLFP உறுப்பினர்கள் என்போர் குறிப்பாகக் குறிவைக்கப்படுவார்கள். அரசியலமைப்பு புறக்கணிக்கப்படும். சட்டங்கள் மீறப்படும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், வாக்குச்சீட்டில் எத்தனை கட்சிச்சின்னங்கள் இருந்தாலும், வாக்காளர்களுக்கு ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும்.

தானே இலங்கையென கோட்டபாய நம்புகிறார். “நீங்கள் எனக்கு இழைக்கும் தீங்கு, முழு நாட்டுக்கே இழைக்கும் தீங்காகும்” என்று முன்பு அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது கூறியிருந்தார். நாடு தன் கடும்பிடிக்குள் வர ஏங்குகிறது என்றும் அவர் நினைக்கிறார். பல குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற ஜெனரல்களும், அட்மிரல்களும் மற்றும் காவாலித் தொழிலதிபர்களும் அவரைச் சூழ்ந்துள்ளனர். இவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களை கீழ்ப்படியவிக்கவும், ஊழியர்களை அடிமைச் சம்பளத்தில் வேலை வாங்கவும் கனவு காண்கிறார்கள். இப்படியான மனநோய் பிடித்த அடக்குமுறைக்காரருக்கெல்லாம் ஒரு அதியுன்னத சேஷ்டைக் குருவாக இன்று கோட்டா விளங்குகிறார்.

கோட்டாவிற்கு வரம்புகள் கிடையாது. அவரது பார்வையில் எல்லா முரண்பாடுகளும் தனக்கு விரோதமானவையே. அவர் கேள்விகள் அல்லது எதிர்ப்புகளை விரும்புவதில்லை. எந்தவொரு அதிருப்தியின் அறிகுறிகளுக்கும் அவர் அளித்த முதல் பதில் வன்முறையே. அவரது தீவிரவாதமானது ஒரு வன்முறைச் சூழலுக்குள் நாட்டைச் செலுத்தி அதன் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பொருளாதார அபிவிருத்தியையும் நிலைகுலையச் செய்யும். தங்களது பாதுகாப்புக்காகவும் அற்ப பணலாபத்திற்காகவும் தங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பவர்கள் திரிசங்கு சொர்க்க நிலையை அடைவர்.

உயிர்வாழ விரும்பும் ஒரு ஜனநாயகமானது இவ்வாறான புற்றுநோய்களை ஜனநாயக ரீதியாகத் தோற்கடித்து, கத்தியின்றி ரத்தமின்றி ஓரங்கட்ட வேண்டும். இத்தகைய புண்களை அமைதியாக ஓரங்கட்ட வேண்டும். வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது.

கோட்டபாய: புனைவும் மெய்யும்

கோட்டபாய ராஜபக்‌ஷவிற்கு இராணுவ உத்திகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். பலரும் பீத்திக்கொள்ளும் கொழும்பை அழகுபடுத்திய அவரது அனுபவத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு வீட்டுத்தோட்ட வடிவமைப்பும் வீட்டு உள்அலங்காரமும் செய்யக்கூடிய கட்டடக் கம்பனியொன்றைத் தொடங்கலாம்; ஒருவேளை அவர் ஃபேசியலிலும் கொடிகட்டிப் பறக்கக்கூடும்.

ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கோ வேறு திறமைகள் தேவை.

ஒரு அரசாங்கத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய அவரது அறிவின்மையால் தான் அவர் பொது விவாதங்களை தவிர்க்கிறார். இது இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. அவரது ஒரெயொரு ஊடக மாநாட்டில், கடன் நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அந்தப் பந்துக்கு பதிலொன்றும் சொல்லாமல் குனிந்து கொண்டார். கடன் நெருக்கடி பற்றி அவருக்கு எதுவும் தெளிவாகத் தெரியாது; ஓர் அக்கறை இருப்பதைபோலும் அம் மாநாட்டில் காட்டிக்கொள்ளவில்லை. தனது வாக்குறுதிகளுக்கு நிதியளிப்பதற்காக பணத்தை அவர் எவ்வாறு கண்டுபிடிக்கப் போகிறார் என்பது குறித்து ஒரு மண்ணும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தண்டனையின்றி சட்டத்தையும் அரசியலமைப்பையும் மீற முடியும் என்று அவர் நம்புவதைப் போலவே, தன்னிடம் இல்லாத பணத்தை தங்குதடையின்றிச் செலவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

அந்த அணுகுமுறை அவரது கடந்தகால நடவடிக்கைகளுடன் அச்சொற்றிப் பொருந்துகிறது. லாபமீட்டும் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தி, அதை நஷ்டத்தில் இயங்க செய்யும் ஒரு மனிதர் ஒரு நிர்வாகியே இல்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையை கோட்டா கையிலெடுக்கும் வரை அது ஒருகாலமும் நஷ்டத்தில் இயங்கியிருக்கவில்லை. இந்நிறுவனம் திரு. கோட்டாவின் ‘திறமையான’ மற்றும் இரும்புக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு, ஒருபோதும் லாபம் ஈட்டவில்லை. கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 2006-2011 காலகட்டத்தில் இந்நிறுவனம் சந்தித்த இழப்புகளின் பெறுமதி ரூ.1,230 மில்லியன் (பன்னிராயிரத்தி முந்நூறு லட்சம் ரூபா).

சிறிசேனா – விக்ரமசிங்க நிர்வாகம் கடன் நெருக்கடியை தவறாகக் கையாண்டது, இதனால் அந்நெருக்கடி மோசமடைந்தது. ஆனால், அப்பிரச்சினையின் காரணகர்த்தாக்கள் சிறிசேனா-விக்ரமசிங்க அல்ல. இந்தக் கடன் ராஜபக்‌ஷாக்கள் நாட்டுக்குத் தந்த அருங்கொடையாகும். 2009 முதல் 2014 வரையில் அரங்கேற்றப்பட்ட, அரைச் சதத்திற்கும் பெறுமதி இல்லாத, ‘வெள்ளை யானைத்’ திட்டங்களுக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கள். இதன் விளைவோ அரசாங்கக் கடனில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் இரட்டிப்பாகிய வெளிநாட்டு கடன். ராஜபக்‌ஷாக்களும் “அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை அவர்களின் சார்பாகக் கூடுதல் கடன்களைப் பெறவெனப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த வரைமுறைகளுக்கு அப்பாற்பட்ட கடனெடுப்பின் முழு அளவும் தெரியவில்லை என்றாலும், தற்போதைய மதிப்பீடுகள் அதை குறைந்தபட்சம் 9.5 பில்லியன் டொலர்களாகக் கொண்டுள்ளன (ஃபோர்ப்ஸ் சஞ்சிகை – 30.9.2016). உலகளாவிய அளவுகோல் விகிதம் 1.3% ஆக இருந்தபோது, சர்வதேச சந்தைகளில் இருந்து 750 மில்லியன் டாலர் கடனை 8.9% வட்டி விகிதத்தில் பெற்று, இந்த களவாணி பிரதர்ஸ் கம்பனி 2013 இல் ஒரு வரலாற்று சாதனையையே நிகழ்த்தியது. ஜனாதிபதி கோட்டா இந்த அணுகுமுறையை அதன் தர்க்கபூர்வ முடிவுக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. நாங்கள் வங்குரோத்தின் விளிம்பிற்கு வந்தவுடன், பெய்ஜிங் பெரியண்ணா சரியாக எமை நோக்கி காலடி எடுத்துவைக்க தயாராய் இருப்பார்.

அரசியல் எதிர்ப்பையும் மக்கள் அதிருப்தியையும் சமாளிக்க, புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்; இவற்றில் பலவற்றை ராஜபக்‌ஷாக்கள் தங்கள் கடைசி ஆட்சிக் காலத்தில் இயற்ற முயற்சித்து தோல்வி கண்டிருந்தனர்.

எந்த மாநகராட்சிப் பகுதி, நகர்ப்புற அபிவிருத்தி பகுதி அல்லது எந்தவொரு பிரதான சாலை மேம்பாட்டுப் பகுதியிலும் அல்லது ‘பாதுகாப்புப் பகுதி’ என்று வரையறுக்கப்பட்ட எந்தவொரு நிலத்திலும் எந்தவொரு நிலப்பரப்பையும் கையகப்படுத்த புத்த சாசன அமைச்சருக்கு அதிகாரம் அளித்த புனிதப் பகுதிகள் சட்டத்தை நினைவில் கொள்வோம். 2013ஆம் ஆண்டில் ராஜபக்‌ஷாக்கள் இயற்ற முயன்ற ஊடகங்களுக்கான நெறிமுறைகளையும் நினைவில் கொள்வோம். இது குற்றமயமாக்க முயன்ற 13 விடயங்களில் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும், தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது நிர்வாக, நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒருமைப்பாட்டை ‘சேதப்படுத்தும்’ வெளியீடுகளும் அடங்கும்.

மக்களின் அடிப்படை உரிமைகளானவை பறிக்கப்பட்டு, மக்களுக்கு எதையும் செய்யும் அதிகாரம் அரசாங்கத்தின் அடிப்படை உரிமையாக மாற்றப்படும்.

2015ஆம் ஆண்டில், பெரும்பான்மையான வாக்காளர்கள் தாம் ஆபத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டனர். அந்தத் தெளிவு இன்று இல்லை. மக்களின் இந்தக் குழப்பத்திற்குக் காரணமான ரணில் அரசாங்கத்தின் முட்டாள்தனங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 2015ஆம் ஆண்டில் வெளிப்படையாக இருந்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தின் உணர்வு ஏமாற்றம் மற்றும் மனச் சோர்வாக மாறிவிட்டிருக்கிறது.

மக்களின் அலட்சியம் மற்றும் விரக்தியின் மனநிலை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், இது விழித்திருக்க வேண்டிய தருணம். கவனத்தைச் சிதறவிட்டு நாம் செயற்படுவோமாயின், கடினமான தற்காலச் சட்டிக்குள் இருந்து வெகு மோசமான எதிர்கால அடுப்பிற்குள் விழுவோம்.

பத்திரிக்கையாளரும், நாவலாசிரியருமான ஜோசப் ரொத் தனது கட்டுரையொன்றில், “அழகான மே மாத காலையொன்றில் நான் உலாவிக்கொண்டிருக்கும் போது, செய்தித்தாள் தலையங்கங்களில் வந்துள்ள உலக வரலாற்றின் பரந்த பிரச்சினைகள் குறித்து நான் ஏன் கவலைப்படப் போகிறேன்?” என்றார். அது 1921இல் எழுதப்பட்டது. வெகு விரைவிலேயே ரொத் தனது ஆரம்பக் கட்டுரைகளில் கொண்டாடியிருந்த ‘சிற்சிறு இன்பங்கள் கூட’ தான் தன் ஆரம்ப நாட்களில் புறக்கணிக்க விரும்பிய பரந்த பிரச்சினைகளால், குறிப்பாக, வளர்ந்து வரும் நாசிசத்தின் அச்சுறுத்தலால், செத்துத் தொலைவதை பதிவு செய்திருக்கிறார்.

அரசியலை (அரசியல்வாதிகளை) நாம் எவ்வளவுதான் வெறுத்தாலும், அதன் விளைவுகளிலிருந்து நாம் ஒருபோதும் தப்ப முடியாது. நவம்பர் 16ஆம் திகதி நாம் தவறாக தேர்வு செய்தால், அது நம் வாழ்வின் நுண்ணிய மற்றும் சிறிய பகுதிகளை, எம் சிற்சிறு இன்பங்களைக் கூட பல நெடுங்காலத்திற்குப் பாதிக்கும். ஆகவே, கோட்டபாய ராஜபக்‌ஷவிற்கு வாக்களிக்காமல் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நவம்பர் 16 அன்று நாம் அவருக்கு எதிராக, அவரைத் தோற்கடிக்கவென – அர்த்தபூர்வமாக – வாக்களிக்க வேண்டும்.

திஸரணி குணசேகர

Helping Gotabaya to murder democracy? என்ற தலைப்பில் எமது சகோதர தளமான கிரவுண்விவ்ஸில்  வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இது.

 

https://maatram.org/?p=8191

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.