• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
சுப.சோமசுந்தரம்

தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் - சுப.சோமசுந்தரம்

Recommended Posts

                     தமிழர்தம்  உடம்பொடு  உயிரிடையென்ன  வள்ளுவம்

                                                                                                   -சுப.சோமசுந்தரம்     

                                                இப்போதெல்லாம்  முன்  எப்போதும்  இல்லாத அளவிற்கு  வள்ளுவம்  தமிழர்தம்  வாசிப்பில்  கலந்ததோ  என்னவோ, சுவாசிப்பில்  கலந்தாற்  போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு  நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள்  எக்காலத்தும்  வாழ்ந்தவர்தாமே! நேற்று  பெய்த மழையில்  முளைத்த  காளான்களாய், திடீரென  உறவாடிக்  கெடுக்க  நினைக்கும்  உன்மத்தர்க்கே  நம்  நன்றி  உறித்தாகுக!

                   ‘ மழித்தலும்  நீட்டலும்  வேண்டா  உலகம்

                      பழித்தது  ஒழித்து  விடின் ’             (குறள்-280)    

என்ற  வள்ளுவனுக்கே  காவியுடுத்திப்  பட்டை  தீட்டினர்  நயவஞ்சகத்தையே  தொழிலாய்க்  கொண்ட  கூட்டத்தினர். குறுக்கு  சால்  ஓட்டித்  தமிழ்  நிலத்தில்  காலூன்ற  இவர்களுக்கு  உலகப்  பொதுமறையா  கிடைத்தது? பொய்யே  மொழியாய்க்  கொண்டோர்க்குப்  பொய்யா  மொழியா? நிற்க. இவர்களின்  எதிர்மறையை  நேர்மறையாய்க்  கொள்வோமே! கற்றார்  எனக்  காட்டிக்  கொள்ளும்  இவர்களையும்  கல்வி அற்றாரையும்  விடுத்து, ஏனைய  நம்மிடம்  வள்ளுவன்  கொண்ட  உறவும்  பரிவும்தான்  என்ன  என்பதை  இவர்கள்  முன்  அலசுவோமே! என்னைப்  போல்  உங்கள்  அனைவர்க்கும்  வாழ்வில்  குறளனுபவம்  வாய்க்கப்  பெற்றிருக்கும்  என்பதில்  ஐயமில்லை. இப்போது  இம்முனையில்  எழுத்தாணி  என்  கையில். சற்று  நேரத்திற்கு  நான்  மட்டும்தான்  உங்களிடம்  பேச  முடியும்!

                                  இலக்கிய  உலகில்  உங்களில்  பெரும்பான்மையினரைப்  போல்  நானும்  எந்தப்  பகுதியிலும்  துறை  போகியவன்  இல்லை. அஃதாவது  இலக்கியமே  வாழ்வாகக்  கொண்ட  பேறு  பெறவில்லை. ஆனால்  அன்றாட நிகழ்வுகளில்  போகிற  போக்கில் வள்ளுவனை  நினைத்தால், அது  வாழ்வே  இலக்கியமாகக்  கொள்ளும்  பேறுதானே!

                                 மதியம்  ஒரு  மணிவரை  வகுப்பென்றால், சிலசமயம்  சுமார்  ஐந்து  நிமிடங்கள்  அதிகம்  வகுப்பெடுக்கும்  சூழ்நிலை  வரலாம். அப்போது  ஆசிரியனாகிய  நான்  வேடிக்கையாய் 

                ‘ செவிக்குண  வில்லாத  போழ்து  சிறிது

                  வயிற்றுக்கும்  ஈயப்  படும் ’             (குறள்-412)

 என்று  ஆரம்பகாலத்தில்  சொல்லியிருக்கிறேன். இப்போதெல்லாம்  அம்மாதிரி  சூழ்நிலையில், “குறள்  சொல்வோமா?”  என நான்  கேட்க  மாணவர்களே  ஒருமித்த  குறலில்  அக்குறளைச்  சொல்லி  முடிப்பது  என்  செவிக்கின்பம். பசி  வயிற்றைக்  கிள்ள  அவர்கள்  உள்ளுக்குள்  என்னை  வசை  பாடுவது  இதுவரை  என்  காதில்  கேட்கவில்லை.           

                                  மேற்கூறிய  குறள்  தொடர்பாக  இன்னொரு  நிகழ்வும்  உண்டு. நிகழ்ச்சியொன்று  கால தாமதமாகி  மதியம்  இரண்டு  மணிக்கு  நன்றியுரை  சொல்ல  நான்  அழைக்கப்பட்டேன். “சிறிது  வயிற்றுக்கும்  ஈயப்படும்  எனும்  தருணத்தில்  நன்றி  சொல்ல  வந்துள்ள  பரிதாப  நிலை  எனது”  என்ற  பீடிகையோடு  ஆரம்பித்தேன். அந்நிகழ்ச்சி  கீழடி  ஆய்வும்  அரசியலும்  பற்றியது. அருமையானதொரு  சொற்பொழிவு  நிகழ்த்தி  அமர்ந்திருந்தார்  பேரா.கருணானந்தம். அவரது  பொழிவுகளை  ஏற்கெனவே  இணையத்தில்  பார்த்தும்  கேட்டும்  இருக்கிறேன். ஒவ்வொரு  பொழிவும்,  நாம்  எவ்வளவு  அறியாமையிலிருக்கிறோம்  என்பதை  அவர்  சொல்லாமலே  நமக்கு  உணர்த்தவல்லது. எனவே  எனது  நன்றியுரையில்  ‘அறிதொறும்  அறியாமை  காண  வைக்கும்  சான்றாண்மை’  என  அவரைப்  பாராட்டினேன். நிகழ்ச்சி  முடிந்ததும்  தமிழுணர்வாளரான  என்  நண்பரொருவர்  என்னைக்  கிண்டலாகப்  பாராட்டினார், “பலே  ஆளுய்யா  நீர்! காமத்துப்பாலில்  வேறு  எதற்கோ  உவமையாகச்  சொல்லப்பட்டதை  இங்கு  எடுத்து  விட்டீரே!”  காவிக்  கூட்டம்  மனம்  போனவாக்கில்  வள்ளுவனை  இழுக்கும்  போது, நானும்  என்  பங்கிற்கு  இழுக்கக்  கூடாதா, என்ன! ‘அறிதொறும்  அறியாமை’  சொல்லும்  குறள்

            ‘ அறிதோறு  அறியாமை  கண்டற்றால்  காமம்

               செறிதோறும்  சேயிழை  மாட்டு ’.          (குறள்-1110)     

                                வேறொரு  சமயம்  மேடையில்  வீற்றிருந்த  சிறப்பு  விருந்தினரை  அறிமுகம்  செய்த  நான், “அவர்  நிரம்பிய  நூலுடையார்”  என  அவர்தம்  சான்றாண்மை  பற்றிக்  கூறினேன். நிகழ்ச்சி  நிறைவில், அங்கு  வந்திருந்த  தமிழறிஞர்  ஒருவர்  என்னை  மனந்திறந்து  பாரட்டினார், “எனக்குத்  தெரிந்து  ‘நிரம்பிய  நூலறிவுடைமை’  என்பதற்கு  ‘நிரம்பிய  நூலுடைமை’  என்னும்  சொல்லாடல்  வள்ளுவத்திலேயே  அமைந்துள்ளது. குறள்  தெரியாமல்  நீங்கள்  பயன்படுத்தியிருக்க  வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள்”.  அப்பாராட்டு  இன்றும்  என்  உள்ளம்  வருடும்  தென்றல்.

            ‘அரங்கின்றி  வட்டாடி  யற்றே  நிரம்பிய

             நூலின்றிக்  கோட்டி  கொளல்’         (குறள்-401)

என்று  கல்லாமை  பற்றிய  குறளின்  தாக்கமே  என்  சொற்  பிரயோகம்  என்பது  நான்  அறிந்தது. எப்போதோ  படித்ததெல்லாம்  வடிகட்டப்பட்டு  நம்  மனதில்  தங்கி  நிற்கும்  என்பதும்  நான்  அறிந்தது. நூலறிவிற்கு  நூல்  ஆகுபெயராய்  அமைந்த  அக்குறிப்பிட்ட  சொல்லுருவாக்கம்  வள்ளுவனுக்கே  உரியது  என்பது  நான்  அறியாதது.  

                                   கணித  ஆசிரியன்  என்ற  முறையில்  கல்லூரி  மாணவர்களுக்கு  வினாடி  வினா (Quiz)  நிகழ்ச்சிகள்  நான்  நடத்துவதுண்டு. பொது  அறிவு  வினாடி  வினா  நிகழ்ச்சி  போல  வினாவுக்கு  வெறும்  விடை  மட்டும்  சொல்லிச்  செல்லும்  வழக்கமில்லை. கரும்பலகையில்  விடைக்கான  விளக்கமும்  தரப்படும். விடையைச்  சொல்வதற்கு  மட்டும்  தான்  ‘வினாடி’. ஒரு  முறை  முதற்சுற்று  முடிந்ததும்  அறிவித்தேன், “ஒரு  சுற்றில்  தோற்றவர்கள்  அரங்கத்தை  விட்டு  வெளியேற  வேண்டியதில்லை. இறுதி  வரை  பார்வையாளர்  மாடத்தில்  அமர்ந்திருந்து  கற்றுக்  கொள்ளலாம். இந்த  Quizன்  நோக்கம்  வெற்றி-தோல்வி  அல்ல; கற்றுக்  கொள்வது  மட்டுமே. எனவே  இந்த  Quiz லும்  தோற்றவர்  வென்றார்”. இந்த  Quizல்  தோற்றவரும்  வென்றார்  என்பதற்குப்  பதிலாக  உம்மையை  ஏன்  மாற்றிப்  போட்டேன்  எனச்  சற்று  யோசித்தேன். என்  நினைவில்  ‘ஊடலில்  தோற்றவர்  வென்றார்’  என்று  ஆரம்பிக்கும்  குறளின் (1327)  படிம  நிலை   என  உணர்ந்தேன். இதனை  அங்கு  விளக்கவில்லை. ஏனெனில்  பங்கேற்பாளர்  மாணாக்கர்; குறள்  காமத்துபாலில்.

                                      அறிஞர்  பெருமகனார்  தொ. பரமசிவன்  அவர்கள்  பணியாற்றிய  பல்கலைக்கழகத்திலேயே  பணியாற்றும்  பேறு  பெற்றவன்  நான். அவரது  துறை  தமிழியல்; எனது  துறை  கணிதம். எண்ணும்  எழுத்தும்  என  அவருடன்  நட்பு  பாராட்டியது  எனக்கு  வாய்த்த  சான்றோர்  கேண்மை. அவர்  உடல்  நிலை  காரணமாக  விருப்ப  ஓய்வு  பெற்றார். “விருப்ப  ஓய்வெல்லாம்  வேண்டாம். ஓய்வு  பெறும்  வரை  வந்து  செல்லுங்கள். உங்கள்  வகுப்புகளை  மற்றவர்கள்  கவனிப்பார்கள். உங்களிடம்  தினம்  பேசக்  கிடைப்பதே  எங்களுக்கான  அரும்பெறல்”  என்று  பேராசிரியர்களும்  ஏனைய  பணியாளர்களும்  வற்புறுத்தினர். அவர்  ஏற்கவில்லை. அவரது  பணிநிறைவு  வாழ்த்துக்கான  விழாவில்  அவரது  நண்பரான  ஆங்கிலப்  பேராசிரியர்  இரவீந்திநாதன்  சொன்னார், “இப்போது  கூட  தொ.ப.  விருப்ப  ஓய்வு  பெறும்  தம்  முடிவை  மாற்றிக்  கொள்ள  மாட்டாரா  எனும்  ஏக்கம்  என்னிடம்  உண்டு.”  நான்  பேசும்  போது  இதனைச்  சுட்டி ‘செல்லாமை  உண்டேல்  எனக்குரை’  என  ஆரம்பிக்கும்  குறளை (1151)  ஞாபகப்படுத்துவதாகக்  கூறினேன். தலைவன்  தலைவியை  சிறிது  காலம்  பிரிய  வேண்டிய  சூழ்நிலை  வருகிறது. உற்றார்  உறவினரிடம்  விடைபெற்று,  தலைவியிடம்  வருகிறான். அப்போது  அவள், “நீ  மனம்  மாறி  செல்லவில்லை  என்றால்  மட்டும்  என்னிடம்  சொல்”  என்கிறாள். தொ.ப.  தம்  ஏற்புரையில், குறளிலேயே  இக்குறளுக்கான  பதிலையிறுத்தார்

                        ‘வேண்டாமை  அன்ன  விழுச்செல்வம்  ஈண்டில்லை

                          யாண்டும்  அஃதொப்பது  இல்’             (குறள்-363)

                                நான்  பணி  செய்யும்  பல்கலைக்கழகத்தில்  என்  துறையல்லாத  வேறு  ஒரு  துறையில்  சில  காரணங்களுக்காக  சிலகாலம்  துறைத்தலைவர்  பொறுப்பு  எனக்கு  வழங்கப்பட்டது. அங்கிருந்த  பிரச்சனைகளுக்கு  யாரையாவது  பலிகடா  ஆக்குவதில்  நேரத்தை  வீணாக்காமல், மாணவர்களுக்கு  சுமூகமான  தீர்வை  ஏற்படுத்த  முயற்சி  மேற்கொண்டேன். என்  மீது  நிர்வாகமும்  ஆசிரியர்  சங்கமும்  வைத்த  எதிர்பார்ப்பும்  அதுவே. இப்பணியில்  சில  அதிகாரிகள்  யார்  மீதோ (என் மீதும்)  கொண்ட  வஞ்சினத்தால்  எனக்கு  இடைஞ்சல்களை  அள்ளித்தந்தனர். அதில்  ஒருவர்  ஒருநாள்  மாணவர்  சார்ந்த  கோப்புகளை  நான்  எடுத்துச்  சென்றபோது  என்னிடம், “அந்தத்  துறை  சார்ந்த  விடயங்களை  எடுத்துக்  கொண்டு  என்னிடம்  வர  வேண்டாம். கோப்புகளை  எடுத்துச்  செல்லுங்கள்” என்று  கடுமையாகப்  பேசினார். என்னிடம்  பொதுவாக  இல்லாத  அளவு  பொறுமையுடன், “நீங்கள்  பேசியது  என்  காதில்  ‘Get out’  என்று  விழுகிறது. இப்போது  போகிறேன். மீண்டும்  வருவேன். என்  தனிப்பட்ட  விஷயங்களில்  மட்டும்  தான்  என்  தன்மானம்  வேலை  செய்யும். பொதுக்  காரியங்களில்  நான்  மானம்  பார்ப்பதில்லை”  என்று  சொல்லி  வந்துவிட்டேன். நான்  பேசியது  அனைத்தும்  பெரியாரை  வாசித்ததில்  எனக்குக்  கிடைத்த  பாடம். இந்நிகழ்வை  அன்றே  என்  நண்பரும்  ஆசானுமான  தொ.ப. விடம்  கூறினேன். அவர்  பதிலாகக்  குறள்  மட்டுமே  கூறினார்

                   ‘குடிசெய்வார்க்  கில்லை  பருவம்  மடிசெய்து

                     மானங்  கருதக்  கெடும்’.                 (குறள்-1028)        

பொருள்: சமூக  வாழ்க்கையில்  ஈடுபடுவோர்  காலம், சோம்பல், மானம்  பார்த்தால்  அவர்  எடுத்த  காரியம்  கெடும்.

                                  இப்போது  நீங்களே  சொல்லலாம். வள்ளுவத்தோடு  நாம்  கொண்ட  உறவு  உடம்பொடு  உயிரிடையென்ன அன்றி வேறென்ன? அதற்கும்  வள்ளுவத்திலிருந்தே  உவமை! மீண்டும்  வேற்றுச்  சூழலில்  அமைந்த  உவமை!

                   ‘உடம்பொடு  உயிரிடை  என்னமற்  றன்ன

                    மடந்தையொடு  எம்மிடை  நட்பு’         (குறள்-1122)                                           

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 3
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்வில் கலந்த வள்ளுவம் நம்முடன் வாழ்கிறது என்பதை உணர்ந்து துய்ப்பவர் பேறு பெற்றோர். 

வள்ளுவமே மழை போன்று

'துப்பார்க்குத் துப்பாய துப்பார்க்குத் துப்பாக்கித் துப்பாயத் தூவும் வள்ளுவம்' என வள்ளுவத்தை வாழ்ந்து, வழங்கி, உண்டு, உயிர்த்து, பகிர்ந்து . . .

அருமை!

வாழ்க்கைப் பயணத்தின் இறுதி இலக்கு இறைவன் திருவடிகள் என்பதை முன்னிறுத்தி, வாழ்வே மாயம் என்று பயணத்தை நரகமாக்கும் பயனிலிகளின்  அறியாமையை  எண்ணி , அவர்களுடன் பயணிக்கும் இறைவன் நகுவான்.

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, சுப.சோமசுந்தரம் said:

என்ற  வள்ளுவனுக்கே  காவியுடுத்திப்  பட்டை  தீட்டினர்  நயவஞ்சகத்தையே  தொழிலாய்க்  கொண்ட  கூட்டத்தினர். குறுக்கு  சால்  ஓட்டித்  தமிழ்  நிலத்தில்  காலூன்ற  இவர்களுக்கு  உலகப்  பொதுமறையா  கிடைத்தது? பொய்யே  மொழியாய்க்  கொண்டோர்க்குப்  பொய்யா  மொழியா?

எனக்கு மிகவும் பிடித்துப் போன வரிகள் ...இவை தான்!

அது மட்டுமல்ல.....!

பொதிய மலையில்...கமண்டலத்துடன்....அகத்தியன் மட்டும் ஏறாமல் இருந்திருந்தால்....எனது தமிழ்....இவ்வளவு கீழ் நிலையை அடைந்திருக்காது...எனது கருத்து!

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.