Jump to content

கோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் புரிந்துகொள்தல்


Recommended Posts

பி.கே.பாலச்சந்திரன்

கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று  நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும்  அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 

ஞாயிறன்று  தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச்சொற்பமாகவே இருக்கும் என்றும் தேர்தல் பிரசார காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருவரில் எவராவது 50 % + 1 வாக்குகளைப் பெறமுடியாமல்போகுமேயானால், இரண்டாவது சுற்றுவாக்கு எண்ணிக்கையை செய்யவேண்டியிருக்கும் என்று கூட முதற்தடவையாக ஊகிக்கப்பட்டது.இருவருமே முதன்மைநிலையான அரசியல்வாதிகள் இல்லை என்பதால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியப்பாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கோதாபய ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து பிறகு பாதுகாப்புச் செயலாளராக உயர்மட்ட அதிகாரி பதவிக்கு வந்து இறுதியில் அரசியல்வாதியாக வந்தவர்.ஆனால், அவர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர்தான் அரசியல்வாதியானர்.அதனால், அவரின் அரசியல் அனுபவம் பூச்சியமே.

மறுபுறத்தில், சஜித் பிரேமதாச அரசியலை தொழிலாகக் கொண்டவர் என்றபோதிலும், பரபரப்பானவரோ  சிறப்பாகக்குறிப்பிடத்தக்கவரோ அல்ல.பெயரளவில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர், ஆனால் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவருக்கு எந்த பாத்திரமும் இல்லை. கொள்கைகளை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருமே தீர்மானிக்கிறார்கள். சஜித் தேசிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவது அரிது. விரும்பித் தெரிந்தெடுத்துக்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தனது பணிகளுடன் அவர் திருப்திப்பட்டுக்கொண்டார் போலத் தெரிகிறது.

தேர்தல் முடிவுகளை எதிர்வுகூறமுடியாமல் இருந்ததால், நெருக்கமான போட்டி, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை பற்றியெல்லாம் பேசப்பட்டது.

 

பிரச்சினைகளின் முக்கிய பங்கு 

யாழ்ப்பாண மாவட்டத்தையும்  வடக்கு , கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களையும் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் மிகவும் உயர்ந்தளவு சதவீதமான வாக்குகள் பதிவாகியிருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இரு பிரதான வேட்பாளர்களுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.அவசரமாக தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தங்களுக்கு இருந்ததால் வாக்களிப்பில் தீவிரமாக பங்கேற்கவேண்டிய தேவையை வாக்காளர்கள் உணர்ந்தார்கள் என்பது தெளிவானது.ஆனால், வாக்காளர்களின் அக்கறைகள் வர்க்கத்துக்கு வர்க்கம், பிராந்தியத்துக்கு பிராந்தியம், இனக்குழுக்களுக்கு குழுக்கள் வேறுபட்டவையாக இருந்தன.அரசாங்கத்திடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் தங்களுக்கு தேவையானவை எவை, தேவையில்லாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான சிந்தனையை வாக்காளர்கள் கொண்டிருந்தார்கள்.வேட்பாளர்கள் எவற்றைச் செய்யக்கூடிய ஆற்றல்களைக் கொண்டவர்கள் என்பதைப் பற்றிய தெளிவும் வாக்காளர்களுக்கு இருந்தது.

அவசரமாக தீர்வுகாணவேண்டிய குறிப்பிட்ட சில  குறைபாடுகளும் அக்கறைகளும் இருந்த காரணத்தினால்தான், ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமற்ற பகிஷ்கரிப்பு ஒன்று குறித்து மக்கள் சிந்தித்த ( தமிழர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட) வடமாகாணத்தில் மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றார்கள். வடமாகாணத்தில் வாக்களிப்பு வீதம் இலங்கையின் தெற்கையும் மேற்கையும் மத்தியையும் போன்று உயர்வானதாக இல்லாவிட்டாலும் கூட, கணிசமான வீதத்தில் அவர்கள் வாக்களித்தார்கள்.

 

கோதாபய  கவனம் செலுத்திய பிரச்சினைகள்

இலங்கையின் சனத்தொகையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களினதும் (70%) கிறிஸ்தவர்களினதும் அக்கறைகள் மீது கவனம் செலுத்திய காரணத்தினால்,கோதாபய பெரியளவிலான வெற்றியைப் பெற்றார். அவர்களின் ஆதரவை வலுப்படுத்திக்கொள்ளும் கரிசனையில் கோதாபய சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களும் முஸ்லிம்களும் கிளப்பிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆபத்தானதாக இருந்தாலும் கூட சிங்களப் பெரும்பான்மையினத்தவர்களின் மீது மாத்திரம்  கவனத்தைக் குவிக்கும் இந்த தந்திரோபாயம் அவருக்கு பெரும் பயனைத் தந்தது.

கொழும்பு, கண்டி, நுவரேலியா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்குப் பகுதிகளில்கூட கேதாபயவுக்கு உயர்வான வாக்குகள் கிடைத்தமை இந்த தந்திரோபாயத்தின் வெற்றியை வெளிக்காட்டியது.தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கூட சஜித் பிரேமதாசவினால் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாமல் போய்விட்டது.அந்த அளவுக்கு அவர் பொருத்தமற்றவராகப்போய்விட்டார்.

   சிங்களப் பெரும்பான்மையினத்தவர்களின் இரு பிரதான அக்கறைகள் மீது கோதாபய கவனத்தைச் செலுத்தினார். முதலாவதாக,  சோம்பலான அரசாங்கம் ஒன்றுக்கு பதிலாக செய்நோக்கமும் ஆற்றலும் கொண்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவை.இரண்டாவது, பயங்கரவாதம் மீண்டும் தலைகாட்டும் போக்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய தேவை.உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ( ஏப்ரில் 21) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் பயங்கரவாதம் மீண்டும் தீவிரமடையக்கூடிய சாத்தியம் குறித்த பீதியை மக்களுக்கு ஏற்படுத்தியது.

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் விடயத்தில்,சஜித் பிரேமதாசவும் முக்கிய உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பரிதாபகரமான முறையில் தவறியதனால், சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டனர்.

     மறுபுறத்தில், கோதாபய பிரிவினைவாத விடுதலை புலிகளுக்கு எதிராக பாரம்பரியமான போரையும் பாரம்பரியமுறையில் அல்லாத போரையும் வழிநடத்திய அனுபவம் காரணமாக தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆற்றலைக்கொண்டவராக விளங்குகிறார்.எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் வாக்குறுதி அளிக்கும்போது அவரின் கூற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்தது.

    ஆனால், சிவில் சமூகம் மற்றும் ஊடகத்துறை உட்பட இலங்கைச் சமூகத்தின் உயர்குழாம் கோதாபய வெற்றி பெற்றால் போர்க்காலத்தின்போது எடுக்கப்பட்டதைப் போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு மீண்டும் முகங்கொடுக்கவேண்டிவரும் என்று அஞ்சியது.இந்த வர்க்கத்தினர் வெள்ளை வான்களில் ஆட்கள்  கடத்திச்செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட யுகம் திரும்பிவரும் என்று பீதியைக் கிளப்புவதற்கு சமூக ஊகங்களைப் பயன்படுத்தியது.ஆனால், இந்த பிரசாரம் கைது செய்யப்படுதல் அல்லது கடத்தப்படுதலுக்கான வாய்ப்புகளுக்கு மேலாக பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்ற மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

     எடுக்கின்ற சொந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயங்குகின்ற  அல்லது தடுமாறுகின்ற ஒரு அரசாங்கத்தை அல்ல உறுதியான- பலம்பொருந்திய  ஒரு அரசாங்கத்தை விரும்பினார்கள்.சிறிசேன -- விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் பதவிக்காலம் முழுவதும் தடுமாறிக்கொண்டிருந்ததனால் மக்கள் பெரும் விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகியிருந்தனர். கோதாபய விடுதலை புலிகளை தோற்கடித்து  அவர்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றொழித்தது மாத்திரமல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் என்ற வகையில் கொழும்பு நகரை மீளக்கட்டியெழுப்பியதையும் கண்ட மக்கள் அவரை ஒரு செயல்வீரராக நோக்கினார்கள்.

    உள்நாட்டுப்போரின் காரணமாக 30 வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப்்பணிகள் ராஜபக்சாக்களின் வருகையுடன்தான் மீண்டும் தொடங்கப்பட்டன. போரின் முடிவுக்குப் பின்னரான ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தின்போது இந்தியாவும் சீனாவும் ரயில்வே பாதைகளையும் நெடுஞ்சாலைகளையும் துறைமுகங்களையும் இலங்கையில் நிர்மாணிக்கத்தொடங்கின.

    இதற்கு மாறாக, இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைத் தவிர, தனது சாதனைகள் என்று காண்பிப்பதற்கு சஜித் பிரேமதாசவிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. சமூகத்தின் அடிமட்ட மக்களின் தலைவன் என்று தன்னை அவர் வர்ணித்தார்.ஆனால்,அந்த  அடிமட்டத்தில் தன்னால் செய்யப்பட்ட பணிகள் என்று எதையும் காண்பிக்கமுடியவில்லை. பிரேமதாசவின் மரபைப் பற்றி சஜித் பேசினார்.ஆனால், அத்தகைய மரபு எதுவும் இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவும் இருக்கவில்லை.

    வளர்ச்சியடைந்துவரும் ஒரு  இலங்கைச் சமூகத்துக்கு, குறிப்பாக தென்னிலங்கை சிங்கள சமூகத்துக்கு  பொருத்தமில்லாத வாக்குறுதிகளை சஜித் பிரேமதாச பிரசாரங்களின்போது அள்ளிவீசினார். சிங்கள தென்னிலங்கையில் உள்ள மக்கள் தொழில் வாய்ப்பொன்றைப் பெறுவதற்கோ அல்லது வர்த்தகத்தைச் செய்வதற்கோ அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.ஆனால், இலவசங்களை வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அவர்களைக் கவரவில்லை.பெருந்தோட்டங்களில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளினால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்த பெருமைக்குரிய மக்கள் அவர்கள்.அதன் காரணத்தினால்தான் பிரிட்டிஷ் தேயிலை, ரப்பர் மற்றும் கோப்பி கம்பனிகள் வறுமையினால் பீடிக்கப்பட்டிருந்த இந்தியாவில் இருந்து சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன.

    பெண்களுக்கு சுகாதார உறைகளை இலவசமாக வழங்குவதாக தேர்தல் பிரசாரங்களின்போது வாக்குறுதியளித்த சஜித் நகைப்புக்கிடமானார்.இலங்கைப் பெண்கள் அந்த உறைகளை பணம் கொடுத்து வாங்கமுடியாத அளவுக்கு வறியவர்கள் அல்ல என்பதை தெரியாதவராக அவர் நடந்துகொண்டார்.

    சிங்கள தென்னிலங்கையில் சஜித் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான ஆதரவாளர்களின் வாக்குகளும் சர்வாதிகாரம் மீண்டும் வரக்கூடாது என்று அஞ்சிய அல்லது ராஜபக்சாக்களின் குடும்ப ஆட்சியை விரும்பாத சக்திகளின் வாக்குகளுமேயாகும்.

 

தமிழ், முஸ்லிம் பகுதிகளின் பிரச்சினைகள் 

    வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் வேறுபட்டவையாகும்.இவ்விரு மாகாணங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள். கோதாபய ஆட்சிக்கு வந்தால் போர்க்காலத்தில் அவரைச் சூழ்ந்திருந்த ( தற்போது ஓய்வுபெற்ற) இராணுவ உயரதிகாரிகளின் உதவியுடன் கடுமையான நிர்வாகத்தை நடத்துவார் என்று தமிழர்கள் பயந்தார்கள். அந்த இராணுவ அதிகாரிகள் போர்க்காலச் சேவைக்காக பாராட்டப்பட்டவர்கள் என்பது மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குடிமக்கள் படுகொலைகளுடனும் சம்பந்தப்பட்டவர்கள்.

     தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இறுதி நேரத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளினால் ஊக்கம்பெற்ற தமிழர்கள் கோதாபயவை தோற்கடிக்க உறுதிபூண்டார்கள்.சஜித்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழர்கள் நம்பவில்லை, ஆனால் அவருக்கு அளிக்கும் வாக்குகள் கோதாபயவுக்கு எதிரானவை என்று அவர்கள் கருதினார்கள்.

    தங்கள் வாக்குகள் வீணாக்கப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை.அதன் காரணத்தினால்தான் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் அவரின் இரத்த உறவுக்காரருமான முன்னாள் தீவிரவாதி எம்.கே.சிவிஜிலிங்கத்தை அவர்கள் அலட்சியம் செய்தார்கள்.

     கிழக்கு மாகாணத்திலும் கூட தமிழர்கள் சஜித்தையே ஆதரித்தார்கள்.ஏனென்றால் அவர்கள் கோதாபயவை விரும்பவில்லை. முஸ்லிம்களுடனான குரோதத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து சஜித்தை  ஆதரித்தார்கள் தமிழர்கள்.

    முஸ்லிம்கள் நெருக்கடிக்குள்ளான வேளைகளில் அவர்களுக்காக சஜித் குரல்கொடுக்கவில்லை என்றபோதிலும், தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுடன்  சஜித்தை அவர்கள் தொடர்புபடுத்தியது கிடையாது. மறுபுறத்தில் கோதாபய அளுத்கமவிலும் கண்டியிலும் கலவரங்களைத் தூண்டிய பொதுபல சேனா மற்றும் அதைப்போன்ற தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

     ஜனாதிபதி தேர்தலில்  நெருக்கமான போட்டி இருக்கும் என்றும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியம் எழலாம் என்றும் எல்லோரும் பேசத்தொடங்கியதை அடுத்து இறுதிக்கட்ட பிரசாரங்களில் சற்று பதற்றமடைந்த கோதாபய தனது சட்டத்தரணியான அலி சப்ரியின் உதவியுடன் முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகளை அவசரஅவசரமாக சந்திக்கத் தொடங்கினார்.ஆனால், அதனால் எந்த தாக்கமும் ஏற்பட்டதாக இல்லை.

    முடிவாக, பெரும்பான்மை சிங்களவர்களின் அக்கறைகள் மீது கவனம் செலுத்திய கோதாபயவிடம் அவற்றுக்கான தீர்வொன்றும் இருந்தது. அதனால்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று கூறமுடியும்.சஜித்திடம் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை.தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தேவைகள் குறித்து கோதாபய பேசவில்லை. ஆனால்,  சஜித் பேசினார்.சிங்களவர்கள் நாட்டின் சனத்தொகையி்ல் 70 சதவீதத்தினர்.அதை ஒரு தந்திரோபாய ரீதியில் நோக்குகையில், சிங்கள பெரும்பான்மையினர் மீது அக்கறை காட்டியதன் மூலமாக கோதாபய விவேகமான காரியத்தைச் செய்தார்.மேலும் சிங்கள பகுதிகளின் வாக்களிப்பு வீதம் தமிழ், முஸ்லிம் பகுதிகளின் வாக்களிப்பு வீதத்தை விடவும் மிகவும் அதிகமாகும்.இது தேர்தல் முடிவுகள் கோதாபயவுக்கு சார்பான முறையில் அமைவதற்கு உதவியது.

https://www.virakesari.lk/article/69158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.