(செ.தேன்மொழி)

நாட்டு மக்கள் சமஷ்டி கோரிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஒருமித்த நாட்டையே தாம் விரும்புவதாக மக்கள் தமது வாக்குகளின் மூலம் நிரூபித்துள்ளனர் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

sarath.jpg

அத்தோடு  தாய்நாட்டை இழக்க வேண்டி ஏற்பட்ட தருணத்திலேயே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதனை காப்பாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேல்மாகாண அழகியல் நிலையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தாய்நாட்டை பாதுகாப்பதற்காகவே கோத்தாபய களமிறங்கினார். தேர்தல் வெற்றிகளை அடுத்து அந்த பாரிய பொறுப்பை அவர் தற்போது ஏற்றுள்ளார்.

இவரது வெற்றிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த 4 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்கள் இங்கு வந்து வாக்களித்தனர்.

இவர்களிடம் காணப்பட்ட தேசப்பற்றின் காரணமாகவே இவ்வாறு தமது சொந்த செலவில் இங்கு வந்து வாக்களித்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின்  ஊழல்கள் மோசடிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக மக்கள் அவர்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து பல திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். 

கடந்த அரசாங்கம் ஜெனீவாவுக்கு சென்று எம்மக்கள் மீதும், இராணுவத்தினர் மீதும் பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் அவர்கள் எம்மீது கொண்டுள்ள தீய எண்ணத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளவேண்டும். அதேவேளை இவர்கள் எம் நாட்டு தேரர்களுக்கும் மதிப்பளிக்காமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டனர். 

வடக்கு கிழக்கு வாக்குகளை பெறுவதற்காக சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்தார். ஆனால் மக்கள் தற்போது அவரை நிராகரித்துள்ளனர். 

மக்கள் ஒருமித்த நாட்டையே விரும்புகின்றனர். சமஷ்டி தொடர்பில் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்தாலும் மக்கள் அவர்களின் எதிர்ப்பை தற்போது தெரிவித்துள்ளனர்.

வருங்காலத்தை சிறப்பானதாக மாற்றக் கூடிய அபிவிருத்தியை நோக்கிய பாதையிலேயே இனிமேல் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை எமது ஜனாதிபதி கோத்தாபய சிறப்புற மேற்கொள்வார் என்று எமக்கு நம்பிக்கையுண்டு என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/69439