இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு

Gotabaya-Rajapaksa-300x201.jpgசிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் பிபி ஜயசுந்தர, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, அதிபரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, அதிபரின் தனிப்பட்ட செயலர் சுஜீஸ்வர பண்டார ஆகியோர் புதுடெல்லி செல்லவுள்ளனர் என்று அதிபரின் ஊடகப் பிரிவு இந்த தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக கோத்தாபய ராஜபக்ச இன்று மாலை புதுடெல்லி வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை காலை சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறிலங்கா அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்துவார்.

இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார். இதையடுத்து இரு நாடுகளின் தலைவர்களும் ஊடகங்களுக்கும் அறிக்கைகள் வெளியிடுவர்.

நாளை மாலை இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சிறிலங்கா அதிபர் சந்தித்து பேச்சு நடத்துவார்.

நாளை மறுநாள் புதுடெல்லியில் நடக்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்கும் கோத்தாபய ராஜபக்ச மாலையில் கொழும்புக்கு திரும்பவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/11/28/news/41410