ராசவன்னியன்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்..

Recommended Posts

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

201912031506159548_kulasekarapattinam-ro
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
 
விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

உலக அளவில் மிக மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்பட வளர்ந்து விட்ட அனைத்து நாடுகளும் தங்களது செயற்கைகோள்களை மிக சுலபமாக விண்ணுக்கு அனுப்ப இந்தியாவின் உதவியை நாடி வருகின்றன.

இஸ்ரோவின் இந்த வளர்ச்சி நமது எதிரி நாடான சீனாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு போட்டியாக சீனா சில புதுமையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இஸ்ரோவுக்கு போட்டியாக புதிய ஏவுதளங்களை உருவாக்கி வருகிறது.

இதையடுத்து இந்தியாவும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.

எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில மாநிலங்கள் அந்த வாய்ப்பை தட்டி பறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் அது எதிர்கால தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்ற கருத்து அதிகரித்தது.

தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் அமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்கள் வெவ்வேறு 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில் 2 இடங்களில் ராக்கெட் ஏவு தளம் இருப்பதுதான் சிறப்பானது, பாதுகாப்பானது என்ற அடிப்படையில் வளர்ந்த நாடுகள் அதை செய்துள்ளன.

எனவே குலசேகரப்பட்டினத்தில் 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இதை உறுதிப்படுத்தினார். குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

குலசேகரப்பட்டினம் இயற்கையாகவே விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழலில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும்போது தெற்கு நோக்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவும் போது அப்படி ஏவு முடிவது இல்லை.

அதற்கு காரணம் இலங்கை குறுக்கிடுவது தான். சர்வதேச அளவில் ஒரு நாடு தனது விண்கலத்தை விண்ணுக்கும் செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்று விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் நிலைகள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்த வேண்டியது உள்ளது. இலங்கை மீது பறப்பதற்கு முன்பாகவே ராக்கெட்டின் முதலாம், இரண்டாம் நிலைகள் எரிந்து கடலில் விழும் வகையில் செலுத்தப்பட வேண்டியது உள்ளது.

அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதோடு செலவும் அதிகமாகிறது.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக சீக்கிரத்தில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 13 டிகிரிக்கு ராக்கெட் செலுத்தப்படும்போது அது இலங்கையை சுற்றி 4 கட்டங்களாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டால் 3 கட்டங்களில் ராக்கெட்டை செலுத்தி விடலாம். இதனால் செலவும் மிக மிக குறைவு. அதாவது ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை செலுத்தும்போதும் 120 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

அதுமட்டுமல்ல ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருளும் மிக மிக குறைவாகவே தேவைப்படும். மேலும் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையம் குலசேகரப்பட்டினத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. எனவே ராக்கெட்டுக்கு தேவையான திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக கொண்டு வந்து விட முடியும்.
 
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்


இவை மட்டுமின்றி ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தட்பவெட்ப சூழ்நிலையும் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக சாதகமாக உள்ளது. இதனால்தான் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இது தவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த முடியும். மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1,350 கிலோ எடையுடன் ஏவப்பட்டது. அது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டு இருந்தால் 1,800 கிலோ எடை வரை சுமந்து சென்று இருக்கும். எனவே எதிர்காலத்தில் அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம்தான் மிக மிக ஏற்றது என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும், மத்திய அரசும் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் கட்டமாக ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவயான 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் 3 கிராமங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்களில் குறிப்பிட்ட பகுதிகள் ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவைப்படுவதாக கருதப்படுகிறது. இந்த ஊர்களில் நிலம் கையக்கப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 8 பிரிவுகளை கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்காணிக்க டி.ஆர்.ஓ. பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது முதல் கட்ட பணிகளை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அடிக்கடி பார்வையிட்டு வருகிறார்.

கலெக்டர் சந்தீப் நந்தூரி இது தொடர்பாக கூறுகையில், “ராக்கெட் ஏவு தளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் கையகப்படுத்தும்போது அதற்குரிய இழப்பீடுகள் சட்டப்படி வழங்கப்படும். ராக்கெட் ஏவு தளத்துக்கான 2,300 ஏக்கரில் 80 சதவீதம் இடம் பட்டா நிலங்களாக உள்ளது. 20 சதவீதம் நிலம் அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.

மாதவன்குறிச்சி அருகில் உள்ள கூடல்நகர் என்ற கிராமத்தில் 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ராக்கெட் ஏவுதளத்துக்காக கையகப்படுத்தும் 2,300 ஏக்கரில் 1,781 ஏக்கர் இடம் மாதவன்குறிச்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டு இருக்கும். அங்கு 131 ஏக்கர் இடம் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சியில் 491 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.

திருச்செந்தூர், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கர் நிலம் ராக்கெட் ஏவு தளம் பகுதிக்காக கையகப்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம், அழகப்பப்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் புராதான சின்னங்கள், கோவில்கள், மரங்களை கணக்கெடுத்து வருகிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவு பெற்று விடும். அதன் பிறகு ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். 2 ஆண்டுகளில் ராக்கெட் தளத்தை அமைத்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டை ஏவி விடவேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரமாக உள்ளனர். குலசேகரப்பட்டினத்தை விரைவாக தயார் படுத்தினால்தான் சீனாவுக்கு பதிலடி கொடுத்து சர்வதேச அளவில் விண்வெளி வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இந்த திட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு தென் மாவட்ட மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் பற்றி பேசப்பட்டபோது தென் மாவட்ட மக்களிடம் எதிர்பார்ப்பு உருவானது. 2013-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கனிமொழி எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதோடு தென் மாவட்ட மக்கள் சார்பிலும் மனுக்கள் வழங்கப்பட்டன. அவை அனைத்துக்கும் வெற்றி கிடைக்கும் வகையில் தற்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்துக்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன. இது தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தியாக மாறி உள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவற்றுக்கு இடையே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளமும் சேர்ந்து கொள்ளும்போது தென் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும். இது தென் தமிழக மக்களின் வாழ்வையே நிச்சயமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாலை மலர்

Share this post


Link to post
Share on other sites