Jump to content

ஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி?

woman_veterinarian_encounter_15.jpg

ஹைதராபாத் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளும் இன்று அதிகாலையில் தெலங்கானா காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுண்டர் அல்ல எனக் கருதப்படுகிறது. ஆயினும், நீதி கிடைப்பதற்கு வருடக் கணக்கில் தாமதம் நீடித்து வரும் பாலியல் குற்ற வழக்குகளில் ஒன்றான இதில் மக்களின் மனக்கொதிப்பு அடங்குவதற்குள்ளாக காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள இந்த எதேட்சாதிகாரமான நீதியானது பெருவாரியான பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. 

காரணம், இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களும். அவற்றில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளில் நிலவும் கால தாமதங்களும் தான். 

உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளை அரசு செலவில் சிறைச்சாலையில் வைத்துப் பராமரித்துக் கொண்டும் அவர்கள் தரப்பு நியாயமென வாதிடும் ஒரு கூட்டம் உருவாக வாய்ப்பளித்துக் கொண்டும் இருப்பதை  மக்கள் எந்நாளும் பொறுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை.

ஆயினும், இந்தியாவில் கடந்தாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை வழக்குகளைக் கணக்கிலெடுத்து ஆராய்ந்தால் அவற்றில் முறையான தண்டனை வழக்கப்பட்ட வழக்குகள் வெகு சொற்பமே என்பது புரியும்!

போரூர் சிறுமி கொலை வழக்கு

போரூர், மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்த போதும் அவருக்கான தண்டனை நிறைவேற்றத்தில் இன்று வரை காலதாமதமே நிலவி வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் நிகழ்ந்தது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி.

அப்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கைதாகி சிறை சென்றவர் பின்னர் ஜாமீனில்  வெளியில் வந்து பெற்ற தாயையும் கொன்று விட்டு மும்பைக்குத் தலைமறைவானார். தப்பிச் சென்றவரை டிசம்பர் 2018 ல் மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நிகழ்த்தப்பட்ட விசாரணையில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆயினும் அவ்வழக்கில் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில், தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 2019 ஜூலை மாதம் 10 ஆம் தேதி தஷ்வந்துக்கான தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆயினும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்ததால் அதையும் பயன்படுத்திக் கொள்ள தஷ்வந்த் தரப்பு தயங்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசியல் சாசன பிரிவு 302 ன் படி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரி தானா? என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து விட்டனர்.

போரூர் சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் அந்த அப்பாவிச் சிறுமிக்கான நீதி இப்படிப் பல வகையில் இன்று வரையிலும் தாமதப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் கடந்தாண்டு காஷ்மீரின் கதுவா பகுதியில் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடூரமான பலாத்காரம் கொலைவழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதியும் கூட இதே விதமாக மந்தகதியில் தான் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

தேசிய அளவில் கவனம் கிடைத்த வழக்குகள் தவிர்த்து சென்னை, திருமுல்லை வாயலில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகள் இருவருக்கும், வயது வரம்பை முன்னிட்டு , சீனியர் சிட்டிஸன் என்ற பெயரில் சிறைவாசத்தில்  இருந்து விடுபட்டு வாழ ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

கொலை வழக்குகளுக்கே இந்தக் கதி என்றால் பாலியல் பலாத்காரம் மட்டுமே என்ற நிலையில் பதிவாகி உள்ள வழக்குகளின் குற்றவாளிகளில் பலரும் இன்றளவும் ஒன்று சிறையில் காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள், அல்லது ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும், மீண்டும் குற்றங்களை நிகழ்த்தக்கூடிய அளவுக்கு அச்சமின்றி குளிர் விட்டுப் போயிருப்பார்கள். இதற்கொரு முன்னுதாரணம் தான் பரோலில் வெளிவந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் என நேற்று முழுவதும் இணைய ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த செய்து ஒன்று.

கதுவா சிறுமி கொலை வழக்கு

காஷ்மீர், கதுவா மாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான நீதி விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அங்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஊர் தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் காவல்துறை அதிகாரி தீபக் ஹஜூரியா உள்ளிட்ட 6 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கினர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் சிறுவன் என்பதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக, கதுவா சிறுமி கொலை வழக்கிலும் உரிய நீதியை உடனுக்குடன் பெற முடியாத நிலையே இன்று வரையிலும் நீடிக்கிறது.

இந்த இரு சிறுமிகளின் கொலை வழக்குகளைப் போலவே 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி மேலுமொரு பாலியல் பலாத்கார வழக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பலத்த கண்டனங்களை எழுப்பி ஓய்ந்தது.  நிர்பயா கொலை வழக்கு என்ற பெயரில் உலகை உலுக்கிய அந்த கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்றும் வெளிவந்தார்களில்லை. 

நிர்பயா கொலை வழக்கு

புது தில்லியில், ஓடும் பேருந்தில் நிர்பயா ஓரிரவு முழுவதும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டிருந்தார். அந்தப் பெண் குற்றுயிரும், குலையுயிருமாக மீட்கப்பட்டு அரசு செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுப்பப்பட்டும் கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவரை மைனர் எனக் காரணம் காட்டி தூக்குத் தண்டனையில் இருந்து விடுவித்தது நீதிமன்றம். அவருக்கு திருந்தி வாழவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். எஞ்சிய குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கான தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கத் தயங்கிய காலங்களும் நம் நாட்டில் இருந்திருக்கின்றன என்பதே!

அருணா செண்பக் பலாத்கார வழக்கு...

1973 ஆம் வருடம் நவம்பர் 27 ம் தேதி மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியாக வேலை பார்த்து வந்த அருணா செண்பக்கை, அதே மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மிகக்கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்து, தன் தவறை மறைக்க அருணாவை நாய்ச்சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றிருக்கிறார். இறந்து விட்டார் என விட்டுச் சென்ற நிலையில் அருணா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு விட்டார் என்ற போதிலும், அவருக்கான மிகப்பெரும் துன்பமே அதற்குப் பிறகு தான் ஆரம்பமானது. ஆம், கிட்டத்தட்ட தினம் தினம் செத்துப் பிழைக்கும் விதமாக சுமார் 42 ஆண்டுகளாக அதே மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சைக்கு உட்பட வேண்டியவரானார் அருணா. இன்று அருணா இறந்து விட்டார். ஆயினும் அவர் அன்று அனுபவித்த துன்பங்கள் இல்லையென்று ஆகி விடுமா?! அருணாவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சோஹன்லாலுக்கு தூக்குத் தண்டனையெல்லாம் அப்போது விதிக்கப்படவில்லை. அவருக்கு இரண்டு 7 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்தும் 1980 களில் அவர் விடுவிக்கப்பட்டு தனக்கென ஒரு வாழ்வைத் தனது சொந்த ஊரில் மேற்கொண்டதாகத் தகவல். 

சோஹன்லால் தனது தண்டனைக் காலத்துக்குப்  பிறகு திருந்தி விட்டதாகக் கூட மீடியாக்களில் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு செய்திகள் வெளியாகின. ஆயினும் அன்று அருணா செண்பக்குக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு நீதி கிடைத்தது என்று சொல்ல முடியாத நிலை தானே இன்றும் நீடிக்கிறது.

இப்படி பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதும் அவர்களுக்கான உரிய நீதி கிடைக்காமல் வழக்கு நடைமுறைகள் தாமதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் நம் நாட்டில் தொடர்கதையாகி வருகின்றன.

இவ்வேளையில்... நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கொன்றில் குற்றவாளிகள் மீதான மக்களின் கொந்தளிப்பு அடங்குவதற்குள் அவ்வழக்கில் தெய்வமே கொடுத்த தீர்ப்பைப் போல குற்றவாளிகள் என் கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பெருவாரியான மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

இப்படிப்பட்ட திடீர் திருப்பங்கள் தமிழகத்திலும் முன்பொரு பாலியல் பலாத்கார இரட்டைக் கொலை வழக்கில் நிகழ்ந்ததுண்டு.

கோவை சிறுமி கொலையில் உடனடி என்கவுன்டர் நீதி

2010 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மொத்த இந்தியாவையும் உலுக்கிய மற்றொரு பாலியல் பலாத்காரம் மற்றும் இரட்டைக் கொலை வழக்காக கோவை சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு அமைந்தது. 

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 11 வயதுச் சிறுமி ஒருத்தி, அவளது 8 வயதுச் சகோதரனுடன் சேர்த்து அவர்களுக்கு நன்கு பழக்கமான பள்ளி வேன் டிரைவரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பு பலாத்காரத்துக்கு உள்ளானது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை அறிந்ததும் மொத்த தமிழ்நாடும் கொதிப்புக்கு உள்ளானது. மக்கள் ஒருமித்த குரலில் குற்றவாளிகளைத் தூக்கிலிடுமாறு குரல் எழுப்பினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான மனோகரன் மற்றும் மோகன்ராஜ் இருவரில் மோகன்ராஜ் காவல்துறை விசாரணையில் இருக்கும் போதே காவலில் இருந்து தப்ப முயன்று என்கவுன்டருக்கு உள்ளானார். அந்த என்கவுன்டரையும் மக்கள் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏன், கோவை மக்கள், மோகன் ராஜின் என்கவுன்டர் மரணத்தை நரகாசுர வதம் போல எண்ணி  வெடி வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதாக் கூட கேள்வி!  இவ்வழக்கில் எஞ்சியிருந்த மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு பல கட்ட நீதி விசாரணைகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்தாண்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையும் நீதிக்கு கிடைத்த தாமதமான வெற்றி என மக்கள் வரவேற்றனர். 

என்கவுண்டருக்கு பெருகும் வரவேற்பு

இப்படி சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொலை வழக்குகளைப் பொருத்தவரை, இந்தியாவில் நீதி கிடைப்பதென்பது தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரும் மன உளைச்சல்களைப் பற்றியும் தொடர்ந்து விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்பொதெல்லாம் மக்கள் ஒருமித்த குரலில் தங்களது கருத்தாகப் பதிவு செய்ய நினைப்பது 'தூக்கில் போடுங்க!' என்பதையும் தாண்டி ‘என்கவுண்டர் செய்யுங்க!’என்பதாகத்தான் இருக்கிறது.

அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட ஹைதராபாத் என்கவுண்டரையும் மக்கள் ஏகோபித்த குரலில் வரவேற்றிருக்கிறார்கள் என்பது நிஜம்.

என்கவுண்டர்கள் நிரந்தரத் தீர்வுகள் அல்ல, எனினும் சுடச்சுட கிடைத்துவிட்ட இந்த தீர்ப்பில், குற்றவாளிகள் நால்வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதே மக்களை ஒருவகையில் தற்காலிகமான நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. 

மக்கள் என்கவுண்டர்களை வரவேற்கிறார்களா, ஆட்சேபிக்கிறார்களா? என்பதைத் தாண்டி, இதில் யோசிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இதே விதமான நீதி கிடைக்க முடியாதே என்பதுதான்!

தினமணி

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.