Jump to content

தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது

தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது

லோ. விஜயநாதன் 
கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழையான முடிவாக காட்டுவதற்கு சிலர் முனைகின்றனர். இந்த தேர்தல் முடிவை சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது போலவும் சிலர் காட்ட முற்பட்டுள்ளனர். ஆனால் இவை தவறான அர்த்தப்படுத்தல்கள். சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சி நிலையை மையப்படுத்தி தேர்தல் முடிவுகளை ஆராயாமல் தமிழ் தேசிய நிலையிலிருந்து தேர்தல் முடிவுகளை நோக்கும்போது தமிழ் மக்கள் மிகவும் சரியான முடிவையே எடுத்திருந்தனர் என்பதை உணர முடியும்.

நடந்து முடிந்த தேர்தல் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்தலாகும். இது தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் நாம் மூலோபாயகங்களை வகுத்து எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவோமானால் அந்த மூலோபாயங்களை பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பங்களை இத்தகைய தேர்தல்கள் ஏற்படுத்தி கொடுக்கும். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் எமக்கு சிறந்த பல வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளின் மூலோபாயமற்ற செயற்பாடுகள் ஒரு சிலரின் சுயநலவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கொண்டுசெல்ல வழிவகுத்தது. இதன் காரணமாக சுமார் 75வருட தமிழ் தேசிய போராட்டம் பூச்சிய நிலைக்கு வந்துள்ளது. தற்போது இலங்கையில் தமிழ் மக்களின் அடையாளம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருப்பதுடன் அவர்களின் இருப்பு கேள்விக்குறியாக ஆகியிருக்கும் நிலையில் ‘ இருப்பதையேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற அரசியலை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

இரண்டு சிங்கள பெளத்த கடும் தேசியவாதிகளுக்கு இடையிலான போட்டியில் சஜித் பிரேமதாச வேறு வழியின்றி இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கான தீர்வு கொடுக்கப்படவேண்டும் என்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். கோட்டபாய ராஜபக்ஸ இதனை ஒரு சந்தர்ப்பமாக பாவித்து இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்றும் என்றும் தனது விஞ்ஞாபனத்தை முன்வைத்தார். இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சியை சரியாக மதிப்பீடு செய்து காய்களை நகர்த்திய கோட்டபாய ராஜபக்ஸ பெருவெற்றி பெற்று ஜனாதிபதி ஆகியுள்ளார். இந்த சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சியானது 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் நிறுவன ரீதியாக நன்கு திட்டமிடப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. இடையில் ஊழல், குடும்ப அரசியல் போன்ற காரணங்களினால் இந்த சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சி சற்று தொய்வு நிலையை அடைந்திருந்தது. ஆகவே இந்த சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சி என்பது அது தீடிரென இம்முறை தேர்தலில் ஏற்பட்ட ஒன்று அல்ல.

Tamil Leaders

அதேவேளை, தமிழ் தேசத்தை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் எழுச்சியானது “இருப்பதை தக்கவைத்தல்” எனும் விழிப்பு நிலையில் ஏற்பட்ட ஒன்றாகும். இது இலங்கைத் தீவு இன அடிப்படையில் பிளவுபட்டிருப்பதையும் இன முரண்பாடு உச்ச முரண் நிலையை அடைந்திருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

இன ரீதியான இந்த பிளவின் ஆபத்தை நன்கு உணர்ந்துகொண்டவராகவே ஜனாதிபதி கோத்தபாய தனது பதவி ஏற்பு நிகழ்வில் தமிழ்மக்கள் தன்னை நிராகரித்தமையை ஏற்றுக் கொண்டு தன்னுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா, அமெரிக்காபோன்ற நாடுகளும் இந்த இன ரீதியான பிளவை கோடிட்டு காட்டி இன முரண்பாட்டுக்கான தீர்வை தமது வாழ்த்து செய்தியில் வலியுறுத்தி இருந்தன.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் சிவப்பு வென்ற இடங்களை இலங்கைத் தீவின் படத்தில் நிறப்படுத்தி காட்டிய மகிந்த ராஜபக்ச, தமிழர் தாயக கோட்பாட்டை தமிழர்கள் கைவிட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை தீவில் தமிழர் தாயகத்தையும் இன முரண்நிலையையும் கூர்மைப்படுத்தி காட்டியுள்ளது. பல சர்வதேச ஊடகங்களில் புதிய ஜனாதிபதி வென்றதைவிடவும் இன முரண்நிலை கூர்மை அடைந்துள்ள விடயத்துக்கே முதன்மை கொடுத்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டிருந்தன. அத்துடன் பெரும்பாலான மேற்கத்தைய நாடுகள் எதுவும் புதிய ஜனாதிபதிக்கான வாழ்த்துக்களை தெரிவித்திருக்கவில்லை.

இதன் தாக்கம் நிச்சயமாக எதிர்வரும் ஐ.நா.மனிதவுரிமை சபையிலும் எதிரொலிக்கும் நிலைமை இருக்கிறது. ஆனால், இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றனவா என்பது சந்தேகமே.

ஒரு கண்துடைப்புக்காக ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானத்தை உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து கடந்த அரசாங்கம் முன்மொழிந்து பல்வேறு அனுகூலங்களை பெற்றிருந்த நிலையில் மிக விரைவாக தன்னை சகல கடப்பாடுகளில் இருந்தும் தற்போதைய அரசாங்கம் விடுவித்துக்கொள்ளும். அத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்தி தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையையும் நிச்சயம் மேற்கொள்ளும். தன்னுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளை வெல்ல வைப்பதற்கும் அவர்களை பயன்படுத்தி ஐ. நா மனித உரிமைகள் சபை கட்டுப்பாடுகளில் இருந்து விலகுவதை நியாயபப்டுத்துவதற்கும் கடும் பிரயத்தனங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஏனைய தேர்தல்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு சில வேட்பாளர்களுக்கு இடையில் தான் பிரிபடுகிறது. ஆனால், ஏனைய தேர்தல்களில் வாக்குகள் பலருக்கிடையே பிரிபடுகின்றது. இதனை பயன்படுத்தி எதிர்வரும் நாட்களில் சலுகை அரசியலை முடுக்கிவிடுவதன் மூலம் தனது கட்சி சார்ந்து கணிசமான வாக்குகளை எடுப்பதற்கான உத்திகளை பேரினவாதம் கையாளும்.

இந்த ஆபத்துக்களை உணர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தமிழ் தேசியத்தில் ஒத்த கருத்துள்ள தமிழ் கட்சிகள் ஒரு குடையின்கீழ் ஒன்றினைந்து கடந்த காலங்களில் விட்ட தவறுகளிலிருந்து பாடங்களை கற்று தமிழ் அரசியலை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும். பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் தமிழ் மக்களின் இக்கட்டான இந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்களை ஒன்றிணைக்கும் முயற்சியை விரைவாக மேற்கொள்ளவதுடன் அவற்றை நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்கொண்டு செல்லும் அமைப்பாக கட்டியெழுப்ப முன்வரவேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றாக்கி 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தமை அப்போதைய சமயத்தில் பொருத்தமற்றதாகவும் பல பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அமைந்தது. ஆனால், தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று கூறி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையிலும் எதுவுமே அற்ற 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டிருக்கின்ற நிலையிலும் எல்லா தமிழ் தேசிய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து 13 ஆவது திருத்தம் ஒரு அரசியல் தீர்வு அல்ல என்றும் இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் அதிகாரம் பகிரப்பப்ட்டு தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்றும் இதற்காக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் உதவவேண்டும் என்றும் பொதுவான கோரிக்கையை முன்வைப்பது அவசியமானது. இதற்கான முயற்சியை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவேண்டும்.

அதேவேளை சிங்கள பெளத்த தேசியத்தின் எழுச்சியை கண்டு அஞ்சாது அதை ஒரு சாதகமாக எடுத்து தமிழ் தேசியத்தின் எழுச்சியை முடிந்தவரை அரசியல் கட்சிகள் கட்டியெழுப்ப வேண்டும். இனவழிப்பு, போர்க்குற்ற விசாரணை, நிலைமாறுகால பரிகார நீதி என்பவற்றை எதிர்வரும் தேர்தலில் முதன்மைபடுத்தி அவற்றுக்காக தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டி கோரிக்கை விடவேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இவ்விடயத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்து தாம் வாழுகின்ற நாடுகளில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக் கூடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை உறுப்பு நாடுகள் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக சிறிலங்காவின் பொரளாதாரத்தை இலக்குவைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக GSP பிளஸ் சலுகையை மீண்டும் இல்லாமல் செய்தல், சுற்றுலாத்துறையை முடக்கும் நடவடிக்கை, வர்தகக் கடன்களை வழங்குவதை தடைசெய்தல், ஐ.நா.அமைதிகாப்புபடையில் இருந்து ஸ்ரீலங்காவை ஓரம்கட்டுதல், போர்குற்றவாளிகளுக்கான பயணத்தடை போன்றவற்றை குறிப்பிட முடியும்.

அதேநேரம் அரசியல் தீர்வை அடையும் வரை காத்திருக்காமல் தமிழர் தாயகப் பகுதிகளை பாதுகாக்கும் வழிமுறைகளை தற்போது இருக்கின்ற அதிகாரங்களை முலோபாய ரீதியில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குறிப்பாக எல்லைக் கிராமங்களை நோக்கிய தமிழ் குடியேற்றங்கள், இருக்கின்ற எல்லைக்கிராமங்களை பொருளாதார, கல்வி, சுகாதார ரீதியாக பலப்படுத்துதல், தமிழர் தாயகங்களை இணைக்கும் வகையில் வீதிகள் ,பெருந்தெருக்களை அமைத்தல் (குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்துக்கான அதி வேக நெடுஞ்சாலை) போன்றவற்றை கூறமுடியும்.

மறுபுறத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள, முஸ்லிம் குடியேற்றங்களை தடுப்பதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இதுவிடயத்தில் எமது தலைவர்கள் கடந்த 70 வருடகால போராட்டத்தில் காத்திரமான எந்த விடயத்தையும் செய்திருக்கவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஒரு முன் நிபந்தனையாக தமிழர் தாயகத்தில் (குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட) சகல திட்டமிட்ட குடியேற்றங்களும் விலக்கி கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருந்திருக்கவேண்டும். இது ஒரு உளவியாகில் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருக்கும். குடியேற்றங்கள் விலக்கப்படுகின்றனவோ இல்லையோ ஆனால் அவ்வாறு ஏற்படுத்தப்படும் குடியேற்றங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை கொண்டிருக்கின்றன என்ற உளவியல் பீதியை நாம் ஏற்படுத்தி இருந்திருக்கலாம். கடந்த பல தசாப்த காலங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் முல்லைத்தீவு, வவுனியாவில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் அகற்றப்படுவது நடைபெறமுடியாத ஒரு விடயமாக இருந்தாலும், ஆகக்குறைந்தது தற்போது புதிதாக ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களும் விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்ற நிபந்தனையை தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக முன்வைக்கவேண்டும். தமிழர் தாயகங்களில் புதிதாக அமைக்கப்படும் குடியேற்றங்கள் தொடர்பில் சற்று காட்டமான ஒரு கருத்தை இந்தியாவை கூற வைப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் முயற்சிக்கவேண்டும். அதேவேளை, புதிய திட்டமிட்ட குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஐ. நா மனித உரிமைகள் சபை, மேற்கு நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சபை ஆகியவற்றுடன் தமிழர் தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் அவர்களின் ஊடாக கண்டன அறிக்கைகள் கண்காணிப்பு அறிக்கைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-அரசியல்-கட்சிகளை-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.