• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஆண்மையும் இறையாண்மையும்!

Recommended Posts

சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்!

15.jpg

ராஜன் குறை

ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை உருவாக்குகிறது எனலாம்.

ஆண்மை என்ற கற்பிதம் ஓர் ஆணின் வீரம், செயல்படும் திறன், துணிவு, பாலுறவில் வல்லமை, சூலுற வைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பெண்ணிடம் கருப்பையும், சூல்கொள்ளத் தேவையான முட்டையை உருவாக்கும் ஆற்றலும் இருந்தாலும் ஆணிடமே விந்து இருப்பதால் ஆணே முக்கியமானவன் என்ற கலாச்சார கட்டுமானம் உருவாகிறது. அதனால்தான் அதிகாரத் தரகரான ஆடிட்டர் குருமூர்த்தி, பெண் தலைவரிடம் பணிந்துபோகும் அரசியல்வாதி ஓ.பன்னீர்செல்வத்திடம் நீரெல்லாம் ஆணா, அதாவது ஆண்மை உள்ளவரா என்று கேட்க முடிகிறது.

 

இறையாண்மை என்பது ஒரு நாட்டின் அரசதிகாரத்தை குறிக்கும் சொல். ஆளும் திறன், நாட்டின் ஒற்றுமை, வலிமை, சுயேச்சை, சுதந்திரம், தன் தேர்வுகளைத் தானே மேற்கொள்ளும் வரலாற்று ஆற்றல் என்பவற்றை இறையாண்மை என்ற வார்த்தையால் குறிக்கிறோம். ஒருவரது ஆண்மையைக் கேள்வி கேட்பது எப்படி அவருக்கு பெருத்த அவமானமோ அதேபோல ஒரு தேசத்தின் எல்லை, அதன் சின்னங்களான கொடி, தேசிய கீதம், அதன் சட்டரீதியான தலைவர்கள், தூதுவர்கள், அந்த நாட்டின் சட்டத் திட்டங்கள் ஆகியவற்றை இகழ்வதோ, மீறுவதோ அவமானமாகக் கருதப்படும். அவ்விதமான மீறல்களை, குற்றங்களை தண்டிப்பதன் மூலமே இறையாண்மை என்ற கற்பிதம் நீடிக்க முடியும்.

 

இந்த இரண்டு கருதுகோள்களிலும் பிரச்சினை என்னவென்றால் அவை வலிந்து உருவாக்கப்பட்ட கருதுகோள்கள் என்பதால் எப்போதுமே பதற்றமாக இருக்கக் கூடியவை. யாராவது நம்மை அவமதிப்பார்களோ என்ற தாழ்வுணர்ச்சியில் அடாவடி செய்ய வேண்டிய தேவை கொண்டவை. வன்முறையைக் கையாள்வது அவசியமான வெளிப்பாடு என்று எண்ணக்கூடியவை. இந்த அடிப்படை பிரச்சினையைப் புரிந்துகொள்வது வல்லுறவு, என்கவுன்டர் ஆகிய இரண்டையும் சரியாக விமர்சிக்க உதவும் என நம்புகிறேன்.

ஆண்மை என்ற கற்பிதம்

இயற்கை இனப்பெருக்கத்துக்கான மூலப்பொருட்களை இருவேறு விதமான உடல்களாக உருவாக்கியது, குறிப்பாக பாலூட்டி இனங்களில். அவ்விதமான பிரிவினை, ஒரு நுட்பமான சமநிலை பேணுவதற்காக உருவானது என்று கருதலாம். ஒற்றை செல் உயிரிகளைப் போல தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும் ஆற்றல் வளர்ச்சியுற்ற உயிரினங்களுக்கு இருந்தால் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதுதானே!

இந்த உயிரியல் ஏற்பாடு மானுடத்தை பொறுத்தவரை பல சமிக்ஞைகள், குறிகள், மொழி ஆகியவற்றின் மூலம் ஆண், பெண் என்ற பால்நிலை கட்டுமானங்களாக மாறியது; கலாச்சாரத்தின், அரசியலின் மூலவிசையாக உள்ளது. ஆண்மை, பெண்மை என்பது உயிரியல் சார்ந்த அடையாளங்கள் அல்ல. பாலியல் அடையாளங்கள். ஆங்கிலத்தில் செக்ஸ் என்பதற்கும், ஜெண்டர் என்பதற்கும் உள்ள வேறுபாடு இதுதான். தமிழில் அதை பால் என்றும் பாலியல் என்றும் பிரித்துக்கூறுகிறோம். ஒரு விண்ணப்பப் படிவத்தில் ஆங்கிலத்தில் செக்ஸ் என்றும் தமிழில் பால் என்றும்தான் அடையாளம் கேட்கப்பட்டிருக்கும். ஜெண்டர் என்றோ பாலியல் என்றோ கேட்கப்பட்டிருக்காது. ஏனெனில் செக்ஸ், பால் என்பது உயிரியில் அடையாளம்; தூலமானது. ஜெண்டர், பாலியல் அடையாளம் என்பது அருவமானது; கற்பிதமானது. ஆண் என்பதும் பெண் என்பதும் உயிரியில். ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் கற்பிதங்கள்; சமூகக் கட்டுமானங்கள்.

 

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் விழைவு என்பது இன்றியமையாதது. இனப்பெருக்கத்தின் ஆதாரம். விலங்கினங்களில்கூட ஆண் ஏதாவது செய்து பெண் விலங்கை கவர்வது என்பது விளையாட்டாக இருக்கிறது. கலாச்சார வயப்பட்ட மனித இனத்திலும் பெண்களின் கடைக்கண் பார்வைக்காக ஆண்கள் ஏங்குவதும், சாகசங்கள் செய்வதும்தான் அழகும், மேன்மையுமாக இருந்தது. உள்ளத்தை வெல்லாமல் உடலைக் கொள்வது என்பது மிருகத்தினும் கீழானது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என்ற சங்கப்பாடல் குறிப்பது போல அன்புடை நெஞ்சங்கள் கலந்தபின்னர்தான் உடல்கள் கலக்க வேண்டும் என்பதே பண்பு. அதன் மிகக் குறைந்தபட்ச வடிவம் பெண்ணின் உளப்பூர்வமான சம்மதம். பாலியல் தொழிலாளிகள் கூட மகிழ்வளிப்பதை உளப்பூர்வமாக செய்ய வகைசெய்வதாக கலாச்சாரங்கள் இருந்தன. அங்கும் வற்புறுத்தலும், வல்லுறவும் தவிர்க்கப்படுவதே மாண்பு. இதையெல்லாம் விட முக்கியமாக இன்பமென்பதே பெண்கள் விரும்பி அன்பு செய்வதுதான். வல்லுறவில் என்ன இன்பம் இருக்க முடியும் என்பதே புதிர்தான்.

பாலியல் வல்லுறவு காமத்தினால் நிகழ்கிறது என்பதைவிட, ஆண்மையின் பதற்றத்தால், போதாமையால் நிகழ்கிறது என்பதே சரியாக இருக்கும். பெண்ணின் சுயேச்சையான செயல்பாடு ஆணுக்கு எப்போதும் பதற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கலாச்சார மேலாதிக்கம் உயிரியல் சமத்துவத்தால் வீழ்த்தப்படுமோ என்ற ஆணின் அச்சம் ஆதிநிலையிலானது. இது பெண் வெறுப்பாக மாறி, ஓயாமல் பெண்களை இழிவு செய்யும், அடிமைப்படுத்தும் பேச்சாக மாறுகிறது. அதுவும் போதாமல் ஆகும்போது தனியாகவோ, கூட்டாகவோ பெண்ணுடலை கட்டுப்படுத்தி வல்லுறவை மேற்கொள்ள வைக்கிறது. தன்னை நிரூபிப்பதாகக் கருதும் ஆண்மை உண்மையில் கேவலப்பட்டுப் போகிறது. ஆனாலும் சமூக வெளியில் பெண்களை அச்சுறத்தவல்ல பயங்கரவாதமாக விளங்குகிறது. ஆணாதிக்க சமூகத்தின் அடிப்படை விசையாக பாலியல் வல்லுறவு விளங்குகிறது என்றால் மிகையாகாது. அவ்விதமான மீறல்களை குற்றங்களை தண்டிப்பதன் மூலமே அவ அருவமான இறையாண்மை நீடிக்க முடியும்.

இறையாண்மை என்ற கற்பிதம்

தனி மனித அடையாளம் சார்ந்த ஆண்மைக்கே இவ்வளவு பதற்றம் என்றால் ஒரு பெரிய மக்கள் தொகுதியின் கூட்டு அடையாளமான இறையாண்மை மிகப்பெரிய பதற்றம் நிறைந்தது. அதற்கு வெளியிலிருந்து பகைவர்களால் சவால், உள்ளேயிருந்து சட்டங்களை மீறுபவர்களாலும் சவால். எனவே உள்நாட்டை கட்டுப்படுத்தி வைக்க அயல்நாடுகளை காட்டி அச்சுறுத்துவதும் அதற்குத் தேவை.

இறையாண்மையின் பெரிய பலவீனம் குற்றச்செயல்களை தடுக்க இயலாமை. தன் சட்டங்களுக்கு பலரும் கட்டுப்படுவதில்லை என்பது அதை மிகவும் பலவீனமாக்குகிறது. அதை ஈடு செய்ய அது தண்டனைகளையே நம்பி இருக்கிறது. இந்த தண்டனைக்கான ஆசை என்பது சமூகத்தினுள் ஆதிக்க சக்திகள் பிறரை அடக்கி வைக்க விரும்பவதுடன் பெரும்பாலும் இணைகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிய மக்களாக இருந்தால் சிறிய குற்றத்துக்கும் கடும் தண்டனையும், அதுவே ஆதிக்கமுள்ள ஒருவராக இருந்தால் பெரிய குற்றத்துக்கும் சிறிய தண்டனையாகவும் மாறுகிறது. அதாவது இறையாண்மை என்பது பல்வேறு ஆதிக்க சக்திகளின், குழுக்களின் தொகுப்பு என்றால் மிகையாகாது. ஆசாரம் பாபு போன்ற சக்திவாய்ந்த சாமியார்கள் தண்டிக்கப்படுவதே அதிசயம்தான் என்ற நிலையையே பார்க்கிறோம்.

 

ஆனால் தன்னுடைய தண்டிக்கும் ஆற்றலை அரசு அவ்வப்போது வெளிப்படுத்தாவிட்டால் சிவில் சமூகமும் பதற்றமடைகிறது. வீட்டுக்கு வெளியே தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தாமல், டார்டாய்ஸ் சுருளை உபயோகித்து கொசுவை விரட்டுவதுபோல குற்றங்களின் மூல காரணங்களான சமூக ஏற்றத்தாழ்வு, கல்வியமைப்பின் நலிவு, முதலீட்டிய நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கும் மன அவலங்கள் ஆகியவற்றையெல்லாம் குறித்து கவலைப்படாமல் போர் விமானங்களையும், பீரங்கிகளையும் வாங்கிக் குவிக்கும் அரசின் இறையாண்மை பதற்றம் மூர்க்கமான தண்டனைகள் மூலம் தன்னை காப்பாற்றிக்கொள்ள விழைகிறது.

ஆண்மையின் பதற்றத்துக்கும், இறையாண்மையின் பதற்றத்துக்கும் உள்ள தொடர்பை உணராத சிவில் சமூகம் பாலியில் வல்லுறவு குற்றவாளிகளை என்கவுன்டர் என்ற பெயரில் விசாரணையின்றி கொல்வதைக் கொண்டாடுகிறது. வீட்டில் எலித்தொல்லை அதிகமானால் நச்சுப் பாம்பை வளர்க்க முடியுமா? தண்டனைகளால் குற்றங்கள் குறைந்ததாக எந்தக் காலத்திலும் ஆதாரங்கள் கிடையாது. அதற்காக தண்டனைகளே கூடாது என்பதல்ல; முறையான விசாரணைக்குப் பிறகு கிடைக்கும் தண்டனைக்கே சிறிதாவது பொருள் இருக்கும். இன்ஸ்டன்ட் காபி போல உடனடி தண்டனையை காவல்துறையே வழங்குவது பாதுகாப்பல்ல; பேராபத்து. இவற்றால் அதிகபட்சம் குற்றத்தின் தன்மை வேண்டுமானால் மாறலாம்.

 

ஆணாதிக்க சமூகத்தின் உளவியல் கட்டுமானத்தை தகர்க்காமல் பாலியல் வல்லுறவை தூக்குத் தண்டனையாலோ, சுட்டுக்கொல்வதாலோ தடுத்துவிட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் நீதியின் நடைமுறைகளை பலிகொடுத்தால், இறையாண்மை நஞ்சுக்கு அனைவருமே பலியாக வேண்டியதுதான்.

என்கவுன்டர் கொலைகளை பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கான தண்டனையாகப் பார்த்து கொண்டாடி மகிழும் சமூகம் ஆண்மையின் பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை; இறையாண்மையின் பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை. பெண்கள் வாழ்வு என்றுமே சதந்திரமும், சமத்துவமும், சகோரித்துவமும் பெறப் போவதுமில்லை. முறையான விசாரணையற்ற தண்டனைகளை தீர்வாக வரவேற்கும் பெண்களும், சிவில் சமூகமும் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். பெட்ரோலை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது என்றும் சொல்லலாம். இறையாண்மைக்கும், ஆண்மைக்கும் உள்ள உறவு அப்படிப்பட்டது.

(கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி)

 

https://minnambalam.com/k/2019/12/09/15

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அந்த நால்வரும் ஆண்மையை கேவல படுத்தினார்கள் என்றால் 
போலீசு இறையாண்மையை கேவல படுத்தினார்கள் 

Share this post


Link to post
Share on other sites

கட்டுரையில், இப்போதைய நிலையில் இறையாண்மை எதை குறிக்கிறது என்பதை அடித்தளமான கருத்தாக கொண்டே வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் , இறையாண்மை, இறை ஆணையில் இருந்து பிறந்தது. லத்தீன் இல் இருந்து நேரடி கருத்தும் divine mandate. 

மன்னர் ஆட்சி காலத்தில், இறையாண்மை என்பது, அதாவது இறைவனால் மட்டுமே மன்னர் ஆணையிடப்படக்கூடியவர், அந்த ஆணை மூலம் மன்னரே இறையாண்மை உள்ளவர் என்பது.   

இதனால் தான் இறையாண்மையை மீறி, எதுவும் இருக்க முடியாது எனும் வாதமும் காண்கிறோம் .

தேச-அரசு எனும் கருப்பொருளின் தோற்றத்துடன், இறையாண்மை மக்கள் கைக்கு மாறியது .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this