Jump to content

சர்வதேசத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கும் கோட்டாபயவின் நகர்வுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் அதிக முக்கியத்துவத்தை பிடித்திருந்தது.

இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஒன்றுக்கான பணிப்பாளர் நியமனம் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது கிடையாது.

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. அது மாத்திரமே இந்த அளவுக்கு சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டமைக்கு காரணமல்ல.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான படை அதிகாரிகளுக்கு அளித்து வரும் உயர் பதவிகள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னரான சூழல், பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலேயின் பின்னணி ஆகியனவும் கூட இந்தளவு கவனயீர்ப்புக்கு காரணம் தான்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அரச பாதுகாப்பு துறைகளில் புதிய அரசாங்கத்துக்கு நம்பிக்கையானவர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இது ஒவ்வொரு அரசாங்கம் பதவிக்கு வரும் போதும் நிகழுகின்ற மாற்றம் தான். கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவருக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக சேவையில் இருந்து விலகிய அதிகாரிகள் பலரும் கூட மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து தற்போது அவருக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக முன்னாள் இராணுவ அதிகாரியான கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதையடுத்து பிரிகேடியர் சுரேஷ் சாலே, எஸ் ஐ எஸ் எனப்படும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரச நிர்வாக கட்டமைப்பில் இராணுவ அதிகாரிகள், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதையே இந்த நியமனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், அவர் இராணுவ பாணியிலான ஆட்சியை நடத்த விரும்புவதாலும், தனக்கு நம்பிக்கையானவர்களையே வைத்துக் கொள்ள முனைவதாலும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது அவர் அதிகம் நம்பிக்கை கொண்டிருக்காததாலும்தான் அவர் சீருடை அதிகாரிகளை அதிகளவில் நியமித்து வருகிறார். இது இராணுவ ஆட்சியின் சாயலை அரசாங்கத்துக்க ஏற்படுத்தி வருகிறது.

கோட்டாபய ராஜபக்ஷவினால் புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பிரிகேடியர் சுரேஷ் சாலே ஆகிய இருவரும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயர்மட்டப் பதவிகளில் இருந்தவர்கள்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் படைப் பிரிவின் பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் உம், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஷ் சாலேவும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை பொலிசாருக்கு கொடுத்து ஒத்துழைப்பு வழங்கத் தவறியதால் இவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன .

அத்துடன் அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் அட்டகாசங்களும் அதிகரித்திருந்தன. ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகவும் அப்போது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த இரண்டு காரணிகளின் பின்னணிகள் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பிரிகேடியர் சுரேஷ் சாலே ஆகிய இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஓய்வு பெற்றிருந்தார். பிரிகேடியர் சாலே மியன்மாரில் இலங்கை தூதரகத்திலும் இராணுவ தலைமையகத்திலும் பணியாற்றினார். அத்துடன் வெளிநாட்டு கற்கை நெறியிலும் பங்கேற்றிருந்தார்.

பிரிகேடியர் சுரேஷ் சாலே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர். அவரது நம்பிக்கையை பெற்றவர் அதனால்தான் அவர் 2016இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டார். இப்போது அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை புலனாய்வு சேவைகளில் அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுப் பணியகம், இஇராணுவப் புலனாய்வுப் பணியகம் ஆகியன முக்கியமானவை.

இதில் அரச புலனாய்வு சேவை பெரும்பாலும் பொலிஸ் சேவையில் உள்ள அதிகாரிகளை கொண்டது. இராணுவ புலனாய்வுப் பணியகம் முற்றிலும் இராணுவ அதிகாரிகளை கொண்டது. தேசிய புலனாய்வுப் பணியகம் பொலிஸ், முப்படைகள் என்பனவற்றின் அதிகாரிகளை கலவையாக கொண்டது.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தேசிய புலனாய்வுப் பணியகமும் இராணுவப் புலனாய்வு பணியகமுமே முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாக செயற்பட்டிருந்தன.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த இரண்டு அமைப்புகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண, தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவராகவும் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஷ் சாலேவும் அப்போது பதவி வகித்தனர்.

ஆனால் 2011ஆம் ஆண்டில் இருந்து இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஷ் சாலே அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அவருக்கு கீழ் இருந்த இரண்டு படைப்பிரிவுகளும் கலைக்கப்பட்டன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு புலனாய்வுப் பிரிவை சாராத அதிகாரிகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டனர். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக சேவை நீடிப்பு வழங்கப்பட்ட பொலிஸ் புலனாய்வு அதிகாரியான சிசிர மெண்டிஸ் நியமிக்கப்பட்டார்.

அரச புலனாய்வு சேவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதன்மையான புலனாய்வு அமைப்பாக மாற்றப்பட்டது. இது பொலிஸ் மற்றும் சிவில் புலனாய்வாளர்கள் கொண்டது.

மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கம் இராணுவப் பின்னணி அல்லாத சிவில் ஆட்சி நடப்பதாக காட்டுவதற்கு விரும்பியது. அதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள் நடக்கும் வரை இந்த நிலைதான் காணப்பட்டது. ஈஸ்டர் தின தாக்குதல் அரசாங்க புலனாய்வு அமைப்புகளின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது.

அரச புலனாய்வு சேவைக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டு இருந்தபோதும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதன் விளைவாகவே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த தாக்குதலை அடுத்து ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமஸ்ரீ பெர்னாண்டோவை பதவி விலகச் செய்தார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர பதவி விலக மறுத்ததால் அவரை இடை நிறுத்தினார்.

தேசிய புலனாய்வு பணிப்பாளராக இருந்த சிசிர மெண்டிசுக்கு சேவை நீடிப்பு வழங்காமல் அந்த பதவியில் இருந்து நீக்கினார். ஆனாலும் அரச புலனாய்வு பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தாக்குதல் குறித்து விசாரித்த ஆணைக்குழுக்கள், முதன்மையாக குற்றம் சாட்டியிருந்தது அரச புலனாய்வு சேவையின் மீது தான்.

அரச புலனாய்வு சேவைக்கு தான் இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதனை அரச புலனாய்வு சேவை பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்தன உரிய முறையில் கையாண்டு இருந்தால் தாக்குதல்களை தடுத்து இருக்கலாம்.

அவர் தனக்கு கிடைத்த தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தினாரா என்ற சந்தேகம் உள்ளது. தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தான் மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார்.

ஆனாலும் தனக்கு தகவல் அளிக்கத் தவறிய ஏனைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மைத்திரிபால சிறிசேன அரச புலனாய்வு சேவை பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்த்தனவை காப்பாற்ற முற்பட்டது ஏன் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்த அரச புலனாய்வுச் சேவையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் தான் அதன் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

பிரிகேடியர் சுரேஷ் சாலே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து சிவில் புலனாய்வு அமைப்பில் இராணுவ ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கே முக்கியத்துவம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் மாற்றமடைந்துள்ளது. பிரிகேடியர் சுரேஷ் சாலே அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்தவே அவர் முனைகிறார் என்பது உறுதியாகியிருக்கின்றது.

ஆக அரச புலனாய்வுச் சேவை தொடர்ந்தும் முதன்நிலை புலனாய்வு அமைப்பாக செயற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பிரிகேடியர் சுரேஷ் சாலே புலனாய்வுப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய போது புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் இவர் முக்கிய பங்காற்றியவர்.

மலேசியாவில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீளுயிர் கொடுக்க முனைந்த கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதனை கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்ததிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவர் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதானது சாதகமாகவும், பாதகமாகவும் பார்க்கப்படுகின்ற நிலையே உள்ளது.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவது சர்வதேசத்தின் கண்களை அதிகம் உறுத்தத் தொடங்கியிருக்கின்றது. பிரிகேடியர் சாலேயின் நியமனத்துக்குக் கிடைத்திருக்கின்ற கூடுதல் வெளிச்சம் அதனைத் தான் உணர்த்தியிருக்கின்றது.

https://www.tamilwin.com/articles/01/233828?ref=home-top-trending

 

Link to comment
Share on other sites

 "கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவது சர்வதேசத்தின் கண்களை அதிகம் உறுத்தத் தொடங்கியிருக்கின்றது."

கோத்தாவின் ஆட்சியில் மகிந்தாவின் தாக்கம் இருக்கும், இராணுவம் / புலநாய்வை தவிர ( காரணம் தானே அதை சிறப்பாக செய்ய முடியும் என எண்ணுகிறார்). 

அடுத்த ஐந்தாண்டுகள் மட்டும்தானா இல்லை அதையும் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரியணையில் இவர்கள் இருந்தால் அது சீனா சார்பாக மாறிவிடும் என்ற பயமே அதிகமாக இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் இருக்கும்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.