Jump to content

தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 16 

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும்.   

1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும்  அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது.   

முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காது, புதிய அரசமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமையானது, பேரினவாத எதேச்சாதிகார அடக்குமுறையின் வௌிப்பாடாகவே பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக்கான தேவை, தமிழ் அரசியல் தலைமைகளால் தீவிரமாக உணரப்பட்டது. தாம் பிரிந்து நிற்பது, தமது நலன்களுக்கே கேடாக அமைகிறது என்பதைத் தமிழ்த் தலைமைகள் காலங்கடந்தேனும் உணர்ந்து கொண்டன.  

 அதன் விளைவாக, தமக்கிடையேயான ஐக்கிய மேடையொன்றை உருவாக்கத் துணிந்தன. 1972 மே 14ஆம் திகதி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ‘அடங்காத் தமிழன்’ சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி உட்பட சில தமிழ் அமைப்புகள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக்கின.   

வடக்கு, கிழக்கு, மலையக மக்கள், இதுவரை காலமும் முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். இந்தத் தலைவர்களிடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவர்களது சித்தாந்தம், இலட்சியம், அணுகுமுறை என்பவை, நிறையவே வேறுபட்டிருந்தன. 

ஆனால், அரசாங்கத்தால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டபோது, இந்த ஒற்றுமை அவசியமானதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே இந்தக் கூட்டணி உருவாகியது. 

1976இல், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (தமிழர் விடுதலைக் கூட்டணி) தனித் தமிழீழக் கொள்கையை முன்னெடுத்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.   

தமிழீழமானது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என்று அவர் கருதினார். வடக்கு,  கிழக்கு, மலையக மக்கள் இதுவரைகாலமும், முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். அது, சௌமியமூர்த்தி தொண்டமானின் வௌியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது.  

அதன் பின்னர், இலங்கைத் தமிழ் மக்களின் குரலாக, தமிழ்த் தேசியத்தின் குரலாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி செயற்பட்டது. ஆனால், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடமும் எம்.சிவசிதம்பரத்திடமும் வந்தது.   

இவர்களுக்கும், ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாரிசான குமார் பொன்னம்பலத்துக்கும்  இடையிலான பனிப்போர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அஸ்தமனத்துக்கு வழிசமைத்தது. 

1977 தேர்தலில், குமார் பொன்னம்பலத்தை, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் ஓரங்கட்டினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின், வெற்றிடமாக இருந்த யாழ்ப்பாணத் தொகுதியை, குமார் பொன்னம்பலத்துக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருந்திருக்க முடியாது.  

 புதியதாக ஒருவரை அங்கு களமிறக்குவதைவிட, குமார் பொன்னம்பலத்தை அங்கே களமிறக்குவது எந்த வகையிலும் குறைபாடான ஒன்றல்ல; ஆனால், அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. 

“வேறெந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னதை, ஏற்றுக்கொள்ளக் குமார் பொன்னம்பலம் தயாராக இருக்கவில்லை. நியாயமான காரணங்களின்றி, யாழ்ப்பாணத் தொகுதியில் தான், போட்டியிடுவது மறுக்கப்பட்டதை, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் குமார் பொன்னம்பலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து வௌியேறி, மீண்டும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுக்கு உயிரூட்டினார். மீண்டும் தமிழ் அரசியல், இரண்டு பாசறைகளாகப் பிரிந்தது.   

இம்முறை தமிழ்க் காங்கிரஸ், விடுதலைக் கூட்டணி என்ற இரண்டு பாசறைகள் தோன்றின. தமிழ் மக்களின், தமிழ்த் தேசியத்தின் நலன் நோக்கில், இணைந்த தலைமைகள், அதிகாரப் போட்டியாலும், உள்ளார்ந்த பனிப்போராலும், சுயநல விருப்பு வெறுப்புகளாலும் மீண்டும் பிரிந்தன.   

இது, தமிழ் அரசியல் வரலாற்றின் சாபக்கேடு என்று சொன்னால் மிகையல்ல. சுதந்திர இலங்கையின், முதலாவது தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்கு நேர்ந்த கதி இது.  

இதன் பின்னர், பல்வேறு ஆயுதக் குழுக்களும் தமக்கான ஜனநாயக அரசியல் கட்சிகளைக் கொண்டு, செயற்படத் தொடங்கிய தனித்த வரலாறும் உண்டு;  அது வேறாகத் தனித்து ஆராயப்பட வேண்டிய பரப்பு.  

 இதன் விளைவாக, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் பல, சமகாலத்தில் செயற்படத் தொடங்கின. அவற்றை மேலோட்டமாக, முழுமையான ஜனநாயக வழி நிற்கும் கட்சிகள், ஆயுதக் குழுக்களின் அரசியல் கட்சிகள் என்றும் பிரிக்கக்கூடியதாக இருந்தது.   

இந்தக் கட்சிகளிடையே, தமிழ் மக்களின் வாக்குகள் சிதறுண்டு போய்க்கொண்டிருந்தன. இதன் விளைவாக, தமிழ் மக்களுக்கான, ஒன்றுபட்ட பலமானதொரு ஜனநாயகக் குரல் இருக்கவில்லை. 

ஆயுதப் போராட்டப் பரப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஏனைய ஆயுதக் குழுக்களை ஏறத்தாழ முழுமையாகவே ஓரங்கட்டி, ‘ஏகபோக’ நிலையை அடைந்திருந்தார்கள்.   

ஆனால், பலமானதோர் அரசியல் அங்கத்தை, அவர்கள் ஸ்தாபிக்கவில்லை. உலக ரீதியில், விடுதலை அமைப்புகளை எடுத்துப்பார்த்தால், அவற்றில் பலவற்றுக்கு மிகப்பலமான அரசியல் அங்கம் இருந்தது.

புத்திஜீவிகளைப் கொண்ட அந்த அரசியல் அங்கம், விடுதலைக்கான அவர்களது வேட்கையில், அந்த இலக்கை அடைந்துகொள்வதில், போராட்டத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான சமநிலை அணுகுமுறையைச் சாத்தியமாக்கின.   

ஒற்றைப்போக்கு நிலையிலான போராட்டமாக, அவை இருக்கவில்லை. அந்த விடுதலைப் போராட்ட அமைப்புகளின் அரசியல் அங்கமானது, உள்ளூரிலும் சர்வதேசத்திலும் தமது இலக்குகளை, அரசியல் ரீதியில் அணுகுவதற்காக வாய்ப்பையும் வழங்கியது. 

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலை, அவ்வாறு இருக்கவில்லை. ஆயுதப் போராட்டமளவுக்கு அரசியல் ரீதியிலான அணுகுமுறைக்கு, முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.   

ஆகவே, அரசியல் பரப்பில், தமிழர்களின் பிரதிநிதித்துவம் சிதறுண்டு கிடந்தது. அடிப்படையில், ஒரே நோக்கத்தைக் கொண்ட பல கட்சிகள் செயற்பட்டாலும், அவை பிளவுண்டு, சிதறுற்று இருந்ததால், ஒன்றுபட்ட பலமான குரலாக, அவை ஒலிக்கவில்லை.  

 இந்தச் சூழலில்தான், புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில், தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் தமிழ்க் கட்சிகள், ஒன்றுபட வேண்டும் என்ற குரல், தமிழ் சிவில் தரப்பிலிருந்து எழுகிறது. இந்தக் குரல்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறப்புக்கு அத்திபாரமாகிறது.  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்’ உருவாக்கம் பற்றி, நிறைய மாயைகள், நம்பிக்கைகள் இங்கு உலவிக்கொண்டிருக்கின்றன. அதில் பிரதானமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதாகும்.   

இது, மிகத் தவறான நம்பிக்கை என்று சுட்டிக்காட்டுவது, தமிழ் அரசியல் வரலாறு தெரிந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிச் சில ஆண்டுகளில், தமது அரசியல் அங்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.   

இந்தப் பத்தியின் நோக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றை ஆராய்வது அல்ல; அது, தனித்து ஆராயப்பட்டு எழுதப்பட வேண்டியதொன்று. அதைச் செய்வதற்கு, அதன் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களே மிகப் பொருத்தமானவர்கள்.   

ஆகவே, அந்த வரலாற்றாய்வுக்குச் செல்லாது, மீண்டும் தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்ததற்கான காரணத்தை, நாம் சிந்தித்தலே, இந்தப் பத்திக்கு அவசியமானதாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கான வித்து, பலமான ஜனநாயக அரசாங்கத்தில், தமிழ்த் தேசியத்துக்கு முகம் அவசியம் என்ற காலத்தின் தேவைதான்.   

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், ஐரிஷ் விடுதலை இராணுவம் (IRA) ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை, ஷின் பெய்ன் கட்சி, ஐரிஷ் விடுதலையின் அரசியல் முகமாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கு இருக்கவில்லை.   

இது, தமிழ்த் தேசியப் போராட்டப் பரப்பின் மிகப் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆகவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் பலமானதோர் அரசியல் சக்தியை உருவாக்குதற்கான, காலத்தின் தேவையின் குரல்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடக்கம் ஆகும்.  

‘தமிழ்த் தேசியம்’ வெறும், ஆயுதம் தூக்கியவர்களின் கோரிக்கை என்ற வட்டத்துக்குள் முடங்கிவிடாது, மக்களால் ‘ஜனநாயக’ ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் குரலாகவும் இருக்கும் போது, அது சர்வதேச அளவில் தமிழ்த் தேசியத்துக்கான பலமானதோர் அரசியல் குரலாக அமையும் என்ற, காலத்தின் தேவையை உணர்த்துவதாக இருந்தது.   

ஏனெனில், 1994இல் பொதுத் தேர்தலில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தியதன் விளைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் வைரிகளான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)வெறும் 10,748 வாக்குகளை யாழ். மாவட்டத்தில் பெற்று, ஒன்பது நாடாளுமன்ற ஆசனங்களை, வெற்றி கொண்டிருந்தது.   

இதன் விளைவாக, தமிழ் மக்களின் ‘ஆயுதக் குரலும்’, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளின் ‘ஜனநாயகக் குரலும்’ ஒன்றுபட்டதாக இருக்கவில்லை.  

மறுபுறத்தில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களையே, ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொல்லும் கொடுமையான கலாசாரம் வடக்கு, கிழக்கில் நிகழ்ந்துகொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட மக்களில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் பட்டியல் நீளமானது.   

இது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், ஆயுதக் குழுக்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் அச்சத்தையும் சந்தேகத்தையும் முரண்பாட்டையும் தோற்றுவித்திருந்தது. ஒரு தரப்பு மறுதரப்பை நம்பவுமில்லை; ஏற்கவுமில்லை.   

அரசியல் பரப்பில், விடுதலைப் புலிகளை ஆதரித்த தலைவர்கள் கூட, அவர்கள் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், விடுதலைப் புலிகள் பற்றிய அச்சத்தைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள்.   

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கத்துடனான அரசியல் ஊடாட்டங்களின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தலைமைகள், விடுதலைப் புலிகளால் ‘துரோகிகளாகப்’ பார்க்கப்பட்டார்கள். அவர்களின் கொலைகள், விடுதலைப் புலிகளால், ‘துரோகி’ முத்திரை குத்தி, நியாயப்படுத்தப்பட்டது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியக்-கட்சிகள்-மீண்டும்-ஒன்றிணைய-வேண்டும்/91-242498

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள துரோகிகளாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 23 ,

 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது, காலத்தின் கட்டாயமாகத் தான் அமைந்திருந்தது என்றால், அது மிகையல்ல.   

அன்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டிருந்த கடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆனால், தமிழர்களின் ஜனநாயக அரசியல் சக்திகளுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும், குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில், முழுமையான சுமுகநிலை நிலவவில்லை என்ற யதார்த்தத்தை, நாம் மூடிமறைத்துவிட முடியாது.  

 குறிப்பாக, தமிழர் ஐக்கிய விடுலைக் கூட்டணியின் தலைமைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் சுமுக நிலை இருக்கவேயில்லை. இது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலத்திலிருந்து ஏற்பட்டிருந்த முறுகல் நிலை. இதன் விளைவாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் படுகொலையுட்பட, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.   

இந்தப் படுகொலைகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அன்று இலங்கை அரசாங்கத்தால், தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அடக்குமுறைச் சூழலில், தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.   

இவ்விடத்தில், நாம் முடிந்த முடிவுகளுக்கு அவ்வளவு இலகுவில் வந்துவிட முடியாது. இதில் யார் செய்தது சரி, யார் செய்தது பிழை என்ற அந்த முடிந்த முடிவுகளுக்கு வருவதில் மெத்தப் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன.   

ஏனென்றால், போராட்டம் என்பது இராணுவ ரீதியிலான அணுகுமுறையைக் கொண்டது. அரசியல் என்பது ஜனநாயக ரீதியிலான அடிப்படைகளைக் கொண்டது. தமிழர்கள் சார்பில் ஒரே அமைப்பு, ஒன்றோடொன்று இயைபுற்ற அமைப்புகள் இவ்விரண்டு அம்சங்களையும் கொண்டு நகர்த்தியிருந்தால் இந்தச் சிக்கல்கள் இங்கு குறைவாக இருந்திருக்கும்.   

ஆனால், இங்கு தமிழ் மக்களின் போராட்டமும் ஜனநாயக அரசியலும் ஒன்றுடனொன்று சில முரண்பாடுகளையும் பனிப்போரையும் கொண்ட முகாம்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தமிழ்க் கட்சிகளிடையேயும் இதன் தாக்கம் தெரிந்தது.   

தமிழர்கள் மத்தியில் செல்வாக்கோடு அன்று இயங்கிக் கொண்டிருந்த கட்சிகளை, விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சி (1990களின் பின்னரான குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்) அவர்களை ஆதரிக்க விரும்பாத, அதேவேளை எதிர்க்க முடியாத நிலையிலுள்ள கட்சி (தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, முன்னாள் ஆயுதக் குழுக்களாக இருந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த கட்சிகள்), விடுதலைப் புலிகளை முற்றாக எதிர்க்கும் கட்சி (டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி) எனப் பிரித்து நோக்கலாம்! நிற்க.  

தமிழ்க் கட்சிகளிடையையேயான ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில், அவ்வப்போது ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தவர், வௌிநாட்டு இராஜதந்திரிகள் முயற்சியெடுத்தாலும் மிகப் பல காலமாக அது சாத்தியப்படவில்லை.   

குமார் பொன்னம்பலத்தின் வௌியேற்றத்தின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்காரரைப் பிரதானமாகவும், மிகச் சொற்பளவிலான முன்னாள் காங்கிரஸ்காரர்களையும் (ஆனந்த சங்கரி, எம்.சிவசிதம்பரம் உள்ளிட்டோர்) கொண்டமைந்த கட்சியாகவே தொடர்ந்தது. அதைக் ‘கூட்டணி’ என்று நாம் தொடர்ந்தும் விளிக்க முடியாது.   

மீண்டும், குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இணைவது என்பது, சாத்தியமாகாத கனவாகவே தொடர்ந்தது. இதில், தனிமனித முரண்பாடுகள் மிக முக்கிய காரணம் என்றாலும், கொள்கை நிலைப்பாடு சார்ந்த முரண்பாடுகளும் பிரதான தடையாக இருந்தன.  

 ‘திம்புக் கோட்பாடு’களைத் தமிழர்களின் மிக அடிப்படையான அபிலாசையாக முன்னிறுத்திய குமார் பொன்னம்பலத்துக்குத் தமிழர்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை அங்கிகரிக்காத எந்தவொரு தீர்வும் ஏற்புடையதாக இருக்கவில்லை.   

மறுபுறத்தில் நீலன் திருச்செல்வம் உள்ளிட்டவர்கள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தத்துவார்த்தங்களுக்குப் பெரிதும் அழுத்தம் கொடுக்காது, பிராந்திய ரீதியான, பலமான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.   

இந்த இரண்டு முகாம்களும் இணைவது சாத்தியமில்லை என்பதே, வௌிப்படையாகத் தெரிந்தது. மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலிருந்த முறுகல் நிலை, தேர்தல் அரசியலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பிக்கு சாதகமாக அமைந்திருந்தது.  

 விடுதலைப் புலிகளுக்கு இலங்கை ஜனநாயக அரசியலில் பங்கெடுப்பதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. அவர்கள் ‘இலங்கை’ என்ற எண்ணக்கருவுடனேயே முரண்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசியல் யதார்த்தம் வேறானதாக இருந்தது.   

விடுதலைப் புலிகள், தம்மைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக்கொண்டிருந்தாலும், அதற்கான மக்கள் அங்கிகாரத்தின் வௌிப்பாடு என்ற ஒருவிடயம் இருக்கவில்லை. அதன் அரசியல் அவசியத்தை, விடுதலைப் புலிகள் புரிந்துகொள்ள இன்னும் சில காலம் தேவைப்பட்டது.  

இந்தச் சூழல் பின்புலத்தில்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களால் முன்னடுக்கப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில், அதன் ஸ்தாபக ஆவணத்தில் கையொப்பமிட்ட ஸ்தாபகர்களில் ஒருவரான, அன்றைய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த நல்லையா குமரகுருபரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘2000ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி, தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமரர் குமார் பொன்னம்பலம், தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.   

‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளராக நானும் தலைவராக சட்டத்தரணி விநாயகமூர்த்தியும் மிகவும் காத்திரமாக, வீரியத்துடன் முன்னெடுத்துச் சென்றோம்...  

‘தமிழ்த் தலைமைகளின் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கும் எண்ணம், முதலில் கருக்கொண்ட து கிழக்கு மாகாணத்தில் என்பதும் ஆயுத போராட்டத்துக்கு இணையாகத் தமிழர் தம் அபிலாசைகளைத் திண்ணமாக எண்ணத்தில் கொண்டவர்கள், உச்சபீடமான நாடாமன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியதும் அல்லாது போனால் ஏற்றப்படக்கூடிய விளைவுகளும் தமிழர் தம் அபிலாசைகளை நேசித்தவர்களால் உணரப்பட்ட நேரம்...  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் கருக் கொண்டதில், ஆரம்ப கர்த்தாக்களாக கிழக்கு மாகாண புத்தி ஜீவிகளுடன் ஊடகவியலாளர் சிவராம் முக்கிய பங்காற்றினார். அங்கே தான் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய தேவையை உணர்த்தி, கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.   

‘கட்சிகளுடனான சந்திப்பை மேற்கொண்டவர்கள், சிவராம் உடன் காலத்துக்குக் காலம், அவருடன் இணைந்த நண்பர்களுமே ஆவார். இந்தவகையில், என்னையும் விநாயகமூர்த்தியையும் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தில் சந்தித்தவர்கள், சிவராமும் ஆங்கிலப் பத்திரிகையாளரான திஸ்ஸநாயகமும் ஆவர். 

‘நான் அவர்களுக்குக் கூறிய ஒரே ஒரு விடயம், ஏதெனும் ஒரு கொள்கை அடிப்படையில் அதற்கு மக்கள் ஆணை கேட்டு, ஒன்றுபட்டு தேர்தலில் நிற்பதுதான் ஒரு புத்திசாதுரியமான விடயம் எனத் தமிழ் காங்கிரஸ் நம்புகின்றது என்பதாகும்’.  

அந்தக் கட்டுரையில், நல்லையா குமரகுருபரன் குறிப்பிட்ட கொள்கை ரீதியிலான ஒற்றுமை என்பது, அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை என்பதை, அவர் மேலும் குறிப்பிடும் விடயங்களில் இருந்து தௌிவாகிறது.   

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் வகிபாகம் பற்றி, தமிழ் காங்கிரஸும் விடுதலைக் கூட்டணியும் இணங்குவதிலேயே நிறையச் சிக்கல்கள் இருந்தன. இது பற்றி நல்லையா குமரகுருபரன் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணம் கருக்கொண்ட போதும் சரி, முதல் தேர்தலில் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய போதும் சரி, வேட்பாளரைத் தெரிவு செய்தபோதும் சரி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், எந்தவகையிலும் பங்கு பெறவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய போது, நாம் வெறுமனே ஒன்றுபட முடியாது; விடுதலைப் புலிகளே, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதற்கு, மக்கள் ஆணையுடனான அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர் தான். 

‘நீண்ட சொல்லாடல்களுக்கு மத்தியில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன், ‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ எனும் சொற்பிரயோகத்துக்குப் பதிலாக, அவர்கள் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ என பாவிக்கலாம் என்று வலியுறுத்தினார்’... 

‘2001 ஒக்டோபர் 21ஆம் திகதி நள்ளிரவில் கூட்டமைப்பு உருவாகக் கைச்சாத்திடப்படும் வரை, என்னோடு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட முன்னாள் ஐ.நா ஆலோசகர் தில்லைக்கூத்தன் நடராஜாவும் திம்புக் கோட்பாடுகள், ஏக பிரதிநிதித்துவம் என்பவை, எதிர்கால அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது, காலத்தின் கட்டாய தேவை என்பதால், இவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.   

‘ஆயினும் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், ஓர் இணக்கப்பாட்டு அடிப்படையில், இறுதி வடிவம் கொடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்ட நிலையில், ஏக பிரதிநிதித்துவம் எனும் பதப்பிரயோகத்தை முக்கிய அரசியல் அமைப்பு எனும் வகையில் இரா.சம்பந்தன் அவர்களுடைய ஆலோசனையை ஏற்று மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம்.  

‘நிச்சயமாக, குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று சாத்தியமாகி இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற சொற்பதத்தைத் தவிர்க்க அவர் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். அதன் கொள்கை மேன்மைகள் எவ்வாறு இருந்தாலும், யதார்த்த அரசியலில் அதன் தாக்கமானது, ‘கூட்டமைப்பு’ என்ற பலமானதொரு சக்தி உருவாகாது போகும் நிலையை ஏற்படுத்தியிருக்கும்.   

‘ஆகவே காலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மை அரசியலுக்கு அவசியம். இது கொள்கைப் பிறழ்வு அல்ல. இந்தத் தௌிவையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், சமரசம் என்பது ஏற்படாவிட்டால், சமரசத்துக்கான விட்டுக்கொடுப்புகள் இல்லாது விட்டால், ஒற்றுமையென்பது ஒருபோதும் அடையப்பட்டுவிட முடியாததொன்றாகவே இருக்கும்.  

பலத்த சமரசங்களுக்கு மத்தியில், உருவாகிய கூட்டமைப்பு, தமிழர்களின் பலமானதோர் அரசியல் சக்தியாகவும் தவிர்க்க முடியாத ஜனநாயக அமைப்பாகவும் மாறியிருந்தது.   

ஆனால், மீண்டும் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒற்றுமையைச் சிதைத்து, இன்று அதன் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நிற்கிறது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியக்-கட்சிகள்-ஒன்றிணைய-வேண்டும்/91-242834

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும்

எடுப்பார் கைப்பிள்ளையாகத் தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும்

 தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்

பகுதி - 03

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது, அன்றைய காலத்தின் தேவையால் ஏற்பட்டதொன்று. அதை வெறும் ‘தேர்தல்க் கூட்டாக’ப் பார்ப்பது பொருத்தமானதொரு பார்வையாக அமையாது.  தேர்தலில் ஓர் அணியாக நிற்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான அம்சமாக இருந்தாலும், அதைத்தாண்டி, ‘திம்புக் கோட்பாடுகள்’ அடிப்படையிலான, தமிழ்த் தேசிய அரசியலின் ஒன்றுபட்ட ஜனநாயகக் குரலாக இருப்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை நோக்கம் ஆகும்.  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகிய சூழலும் காலகட்டமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய சூழலும் காலகட்டமும் அவற்றுக்கான காரணங்களும் வேறுபட்டவை. அரசியலில் அவற்றின் வகிபாகமும் வேறுபட்டதாகவே அமைந்திருந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகிய போது, தமிழர்களின் அரசியல் பலத்தின் ஏகபோக கூட்டணியாக, அது மாறியிருந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. அதற்குக் காரணம், அன்றைய சூழலில் தமிழ் அரசியலின் மிகப் பலமான, செல்வாக்கான சக்திகள் அதில் ஒன்றிணைந்திருந்தன என்பதே ஆகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களின் ஏகபோக குரலாக மாறியிருந்ததுடன், அவ்வாறே அடையாளம் காணப்பட்டது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாகிய போது, தமிழர் அரசியலின் ஏகபோகமாகவோ, அதைத் தீர்மானிக்கும், கொண்டு நடத்தும் பலமான சக்தியாகவோ அது இருக்கவில்லை.   

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரண்டாம் பட்சமான, விடுதலைப் புலிகள் பங்குபெறாத, பங்குபெறுவதைத் தவிர்த்த ஜனநாயக அரசியல் வௌியை நிரப்புவதற்கு, ‘தமிழ்த் தேசியத்தின்’ அடிப்படைகளை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.   

இதன் முக்கியத்துவம் கருதியே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, இதன் உருவாக்கத்தை எதிர்க்கவில்லை. சிலகாலங்களிலேயே அது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஜனநாயக அரசியல் முகமாக, முகவராக மாறியிருந்தது; மாற்றப்பட்டிருந்தது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில், சில மிக முக்கிய மைற்கற்கள் இருப்பதையும் இங்கு கருத்திற் கொள்வது அவசியமாகிறது. அது, எதிரெதிர் துருவங்களாக நின்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்த ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைத்த மிக முக்கிய சந்தர்ப்பமாகும்.   

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அரசியல் வைரிகள்; அவர்கள் முதன்முறையாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்ட ஒற்றுமைகூட, பலகாலம் நிலைக்கவில்லை.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியதும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தது. அதில் சில பலமான முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் அங்கம் வகித்தாலும், நடைமுறையில் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே கருதப்பட்டது.   

மறுபுறத்தில், அரசியலில் ஈடுபட்டுவந்த ஆயுதக் குழுக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), டெலோ, புளோட் என்பன விடுதலைப் புலிகளின் பரம வைரிகளாகவே செயற்பட்டு வந்தன. அத்தோடு, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்பனவற்றோடு, அவற்றுக்கு நல்ல உறவு இருக்கவில்லை. இதற்குக் குறித்த ஜனநாயகக் கட்சிகள், இந்த ஆயுதக் குழுக்களை விரும்பாமையும் மிக முக்கிய காரணமாகும்.   

image_c4fb337ee3.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்க முயற்சிகளின் போது, ஆயுதக் குழுக்களோடு ஒன்றிணைந்து செயற்படுவதைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகள் சில விரும்பியிருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்த ஆயுதக் குழுக்கள் செய்து வந்த படுகொலைகள். குறிப்பாக, தமிழ் மக்களிடையே இவை நடத்தி வந்த படுகொலைகளும் வன்முறைத் தாக்குதல்களும் தமிழ் மக்களிடம் கடுமையான கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.   
இந்தநிலையில், அத்தகைய ஆயுதக் குழுக்களுடன் கைகோர்ப்பது, தமிழ் மக்களால் வரவேற்கப்படுமா என்ற ஐயம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சில தலைமைகளுக்கு இருந்தது.   

இது மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றுபட்ட இந்தக் கட்சிகள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளில் ஒன்றுபட்டிருந்தாலும் விடுதலைப் புலிகள், தமிழர்களின் ‘ஏக பிரதிநிதிகள்’ என்பதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.   

இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வலியுறுத்திய வேளையில், “விடுதலைப் புலிகள் தான், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றால், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் யார், அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையா” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர் ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியதாகவும் இதேபோலவே, டெலோ அமைப்பின் முக்கியஸ்தர் என். ஸ்ரீகாந்தாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் சிலர் பதிவு செய்கிறார்கள்.  

இத்தனை சிக்கல்களையும் சவால்களையும் தாண்டித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. ஆரம்பத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) ஆகிய நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபித்திருந்தன.  

காலவோட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சவால்களையும் மாற்றங்களையும் சந்தித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு, முதன்முறையாகத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, தேசியப்பட்டியல் ஆசனம் உட்பட 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது.   

அடுத்த மூன்று வருடங்களில் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பால் தமது ஜனநாயக அரசியல் முகவராக உத்தியோகப்பற்றற்ற முறையில் சுவீகரிக்கப்பட்டிருந்தது என்றால் அது மிகையல்ல.  

இந்தக் காலகட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக, ஆனந்த சங்கரி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தன்பால் வைத்துக் கொண்டதுடன், அந்தக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் விலகியது.   

இதன் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, மீள உயிரூட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.   

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் உருவாக்கத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததாகப் பலரும் பதிவு செய்கிறார்கள். அந்தத் தேர்தலில், விடுதலைப் புலிகள் நேரடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.  2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்புத் தன்னுடைய வரலாற்றிலேயே, அதிகமாகப் பெற்ற 6.84 சதவீத வாக்குகளையும் 22 நாடாளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.   

அடுத்த தேர்தல் இடம்பெற்ற 2010 இற்குள், நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பு, யுத்தத்தில் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தனித்து இயங்கத் தொடங்கியது.   

2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), டெலோ என்ற மூன்று கட்சிகளாகச் சுருங்கியிருந்தது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமாரோடு செல்லாமல், கூட்டமைப்பிலேயே தொடர்ந்திருந்தார். இது 2010இன் நிலை.   

2010 இலிருந்து இன்று வரை, கூட்டமைப்பின் நிலை இன்னும் மாறியிருக்கிறது. கூட்டமைப்பின் இன்னொரு ஸ்தாபக அமைப்பான ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), கூட்டமைப்பிலிருந்து விலகித் தனித்தியங்கி வருகிறது.   மறுபுறத்தில், அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதியுத்தம் வரையிலும் கூட, இராணுவத்தோடு இணைந்து செயற்பட்டுவந்த புளோட் அமைப்பு, இறுதி யுத்த நிறைவுக்குப் பின்னர் கூட்டமைப்போடு இணைந்து கொண்டது.   இன்று, டெலோ தொடர்ந்து கூட்டமைப்பின் பங்காளியாக இருந்தாலும், டெலோவில் இருந்தும் கூட்டமைப்பில் இருந்தும் பிரிந்து, டெலோ முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் தனிக்கட்சியொன்றை அண்மையில் ஆரம்பித்திருக்கிறார்கள்.   

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த நீதியரசர். சீ.வி. விக்னேஸ்வரன், தற்போது தனிக்கட்சி அமைத்துச் செயற்பட்டு வருகிறார்.  

டெலோ, புளொட் ஆகியவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தாலும், கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளில், அவர்களால் எந்தளவு தூரம் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.  

இன்றைய சூழலில், நடைமுறை யதார்த்தத்தில் ‘கூட்டமைப்பு’ என்பது, தமிழரசுக் கட்சிதான் என்ற நிலைதான் உண்மை. டெலோவோ புளொட்டோ கூட்டமைப்பில் இருந்து விலகாமல் இருப்பதற்கு, இருக்கக்கூடிய ஒரே நியாயம், கூட்டமைப்பில் இருந்து விலகிய எந்தவொரு கட்சியும் தேர்தலில் பெருவெற்றியை ஈட்டியதில்லை என்பதுதான்.   

ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாகத் தனித்தியங்கி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால், உள்ளூராட்சி மன்றுகளில் சில ஆசனங்களை வென்றதைத் தாண்டி, வெற்றிபெற முடியவில்லை.   

இந்த யதார்த்தம் தான், தமிழரசுக் கட்சி கூட ‘கூட்டமைப்பை’ தனது இஷ்டத்துக்கு கொண்டு நடத்த வழிசமைத்திருக்கிறது. ‘நாடாளுமன்றம் போக வேண்டுமா, நான் சொல்வதைக் கேட்டு அமைதியாக இருந்தால், கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடலாம்; நான் செய்வது பிடிக்கவில்லையா, நீங்கள் விலகிப்போகலாம்’ என்ற ‘நாட்டாமை’ இராஜ்ஜியம், தமிழரசுக் கட்சியால், கூட்டமைப்புக்குள் நடத்தப்படுவது, யாரும் அறியாத பரம இரகசியம் அல்ல.   

தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ்த் தேசியத்தின் ஜனநாயகக் குரலாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வடக்கு-கிழக்கில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மேடை என்ற அளவுக்குச் சுருங்கியிருக்கிறது; சுருக்கப்பட்டிருக்கிறது.  

மறுபுறத்தில், தமிழ்த் தேசியத்தைக் காக்கும் பெயரில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, பல உதிரிக் கட்சிகள் உருவாகியிருக்கின்றன. அவை, பயணிக்கும் வழி தெரியாது, ஆளுக்கொரு திசையில் போய்க்கொண்டிருக்கின்றன.   

இவையெல்லாம் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. தமிழ் மக்களிடையே, தமிழ் அரசியலில் பரப்பில் பலமானதோர் அரசியல் தலைமை இல்லை. அதன் விளைவுதான் இன்று, தமிழர் அரசியலும் தமிழ்த் தேசியமும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.   

தமிழ்த் தேசியம், ஒரு புறத்தில் தாயகம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பவற்றையும் பேசும்; மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரிக்கும். இதில் எது தமிழ்த் தேசியம், இரண்டும் தமிழ்த் தேசியமாக இருக்க முடியாதா, தமிழ்த் தேசியம் என்பது ஒன்றானால், அதனைக் காக்க எதற்கு இத்தனை உதிரிக்கட்சிகள், தலைமை என்பது எப்போதும் ஏகமானதாகத்தான் இருக்க வேண்டுமா? எனப் பல கேள்விகள் இன்று எழுந்துகொண்டிருக்கின்றன.   

தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரலை, நாம் இந்தப் பின்புலத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-அரசியலும்-தமிழ்த்-தேசியமும்/91-243168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகளுக்கான மாற்று மருந்து?

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்  - பகுதி - 04

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜனவரி 06

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இப்பத்தியின் முன்னைய பகுதிகளில் ஆராய்ந்தது போலவே, காலத்தின் தேவை கருதி உருவானதொரு கூட்டணியாகும்.   

கூட்டணிக் கட்சிகளிடையே, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைப் புள்ளியில், அவை ஒன்றிணைந்து நின்றன. தேர்தல் கூட்டணி என்ற வட்டத்தைத் தாண்டி, அதற்குத் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயகக் குரலாகச் செயற்பட வேண்டிய கடப்பாடும் இருந்தது.   

விடுதலைப் புலிகள் அமைப்பு, கூட்டமைப்பைத் தனது ஜனநாயக அரசியல் முகவராகச் சுவீகரித்துக் கொண்டதானது, கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், சாதகமானதும்  பாதகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்தியது.   

2009ஆம் ஆண்டில் யுத்த இறுதி வரை, கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் ஒருவகையான கட்டுக்கோப்போடு இயங்கியது. உள்ளக முரண்பாடுகள் இருந்தாலும், அவை ஒற்றுமையைச் சிதைக்கக் கூடியளவுக்கு இருக்கவில்லை. இதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு முக்கியமான காரணம் என்றால், அது மிகையல்ல.   

மேலும், ‘கூட்டமைப்பில் ஒரு கழுதை நிறுத்தப்பட்டாலும் அது வெற்றிபெறும்’ என்றளவுக்கு வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு முக்கிய காரணமாக இருந்தது.   

ஆனால், மறுபுறத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துக்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ‘புரொக்ஸி’கள் என்ற முத்திரையே, இன்றுவரை கூட்டமைப்பின் மீது தொடர்ந்து வருகிறது.   

இது, தமிழ்த் தேசியத்தின் கருத்துகளைத் தெற்கில் கொண்டு வந்து சேர்ப்பதற்குக் குறிப்பாக, வெகுஜன வௌியில் கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பெருந்தடையாக மாறிவிட்டது.   

மேலும், கூட்டமைப்பின் தமிழ்த் தேசியச் செயற்பாடுகள், பெருமளவுக்கு விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியச் சித்தாந்த வரையறைகளுக்குள் முடங்கிவிட்டன. அதைத் தாண்டி, தமிழ்த் தேசியம் பரிணாம வளர்ச்சியடையாது போனது, பெரும் துரதிர்ஷ்டமாகும்.

மறுபுறத்தில், 2009இற்குப் பின்னர், கூட்டமைப்புக்குள் உருவான கட்சி முரண்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் தொடங்குகின்றன; தனிநபர் முரண்பாடுகளும் மேலோங்கத் தொடங்குகின்றன.   

இதன் விளைவாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து விலகியது. அவருடன், விடுதலைப் புலிகளால் அரசியலில் களமிறக்கப்பட்ட கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில், தமது அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.   

மறுபுறத்தில், இறுதி யுத்த முடிவு வரை அரசாங்கத்தோடும் அரசாங்கப் படைகளோடும் இணைந்து செயற்பட்டு வந்த புளொட் அமைப்பு, காலவோட்டத்தில் கூட்டமைப்போடு இணைந்து கொண்டது. வடக்கு, கிழக்கில் கூட்டமைப்புக்கு உள்ள அரசியல் செல்வாக்கு, குறிப்பாகத் தேர்தல் ரீதியான செல்வாக்கு, புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைவதற்கு முக்கியமான காரணமாகும்.    

மறுபுறத்தில், மிக நீண்ட காலமாகக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப், அத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியிலும், கூட்டமைப்புக்குள் இருந்ததற்கான காரணமும் தேர்தல் சார்ந்ததுதான்.   

ஏனெனில், கூட்டமைப்பை விட்டுக் கொள்கை அடிப்படையில் வௌியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் எவருமே, இன்றுவரை தமிழ் மக்களிடையே கொள்கை சார் பேச்சுகளாலும் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களாலும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், அந்தச் சல சலப்புகளைத் தேர்தல் வெற்றியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.   

மறுபுறத்தில், கூட்டமைப்பின் ‘பொது வேட்பாளராக’, வடமாகாண சபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று, வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்த சீ.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் இருந்து விலகி, தற்போது தனிக்கட்சியொன்றை ஸ்தாபித்து இயங்கி வருகிறார். அவரது பிரிவுக்கும், கொள்கை முரண்பாடுகளையே காரணமாக, அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.   

இன்று, கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் என்ற மூன்று கட்சிகளாகக் காணப்பட்டாலும், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பலரும் கூட்டமைப்பை விட்டு விலகிவருகின்றனர்.   

டெலோ அமைப்போ, புளொட் அமைப்போ கூட்டமைப்பில் நீடிப்பதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணங்களைத் தவிர, வேறு காரணங்களோ, நியாயங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர், பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் முடிவாகத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எடுத்த முடிவுகளைப் பொதுவிலேயே விமர்சித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார்கள்.  

ஆகவே, இன்று கூட்டமைப்பு என்பது, சித்தாந்த ரீதியில், தமிழரசுக் கட்சி மட்டும்தான்; டெலோ, புளொட் ஆகிய இரண்டும், வெறும் தேர்தல் கூட்டணியாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்கின்றன என்பது வௌ்ளிடைமலை. இந்தச் சூழலில்தான், மீண்டும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமை பற்றிய கேள்வி எழுகிறது.  

வரலாற்றில் இரண்டு முறை, பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில், பெரும் இலட்சிய நோக்கோடு உருவாக்கப்பட்டு, பின்னர் உள்முரண்பாடுகளால் பிளவடைந்துபோனதுதான், தமிழ் அரசியல் கட்சிகள் இடையான கூட்டின் கதையாகும்.   

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில், தேர்தல் அரசியலும் தனிநபர் முரண்பாடுகளும், இந்த ஒற்றுமை சிதைவடையக் காரணமாக இருந்துள்ளன. ஆனால், இதன் விளைவு, தமிழ் மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.   

தமிழ்க் கட்சிகள் தத்துவ, சித்தாந்த, கொள்கை நிலைப்பாடுகளில் ஒரு குரலாக இயங்கும்போது, தமிழ் அரசியலின் மொத்த வலுவும் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தவே பயன்படும்.   

மறுபுறத்தில், உள்ளக முரண்பாடுகள் தமிழ்க் கட்சிகளிடையே அதிகரிக்கும் போது, தமிழ் அரசியலின் சக்தியானது, பெருமளவுக்குக் கட்சிகள் இடையேயான ‘குழாயடிச் சண்டை’களுக்காகவே செலவிடப்படுகிறது. இது தமிழ்த் தேசியத்துக்கு மிகப்பெரும் இழப்பாகும்.   
இன்று தமிழர் அரசியலின் வலுவானது, பெருமளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டுக்கும் இடையிலான கட்சிச் சண்டையிலேயே செலவிடப்படுகிறது என்றால் அது மிகையல்ல.   

ஒருவரையொருவர் விமர்சிப்பதிலும் குற்றஞ்சுமத்துவதிலுமே தமிழ் அரசியலின் சக்தியும் நேரமும் செலவிடப்படுகிறது. உண்மையில், இது தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்குச் செலவிடப்பட வேண்டிய அரசியல் சக்தியும் நேரமுமாகும். ஆனால், அவை அர்த்தமின்றி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

மறுபுறத்தில், தனிநபர் முரண்பாடுகள் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையை மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தின் நலன்களையும் சவாலுக்கு உட்படுத்துவதாகவே இருக்கிறது. குமார் பொன்னம்பலமும் நீலன் திருச்செல்வமும் ஒருதளத்தில் இணைவது, எவ்வளவு சிக்கலாக இருந்ததோ, அதைவிடச் சிக்கலாகவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆபிரஹாம் சுமந்திரனும் இணைவது சிக்கலாக இருக்கிறது. இதற்குக் கொள்கை முரண்பாடு என்ற முகத்தைத் தாண்டி, தனிநபர் முரண்பாடு என்ற முகமே முக்கியமான காரணமாகத் தெரிகிறது.  

மற்றக் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைவதுதான், இங்கு பிரச்சினை என்று கருதிவிடவும் முடியாது. ஏனென்றால், தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு, கூட்டமைப்பில் இருந்து விலகியவர்களால் கூட, மாற்றுத் தளமொன்றில், இதுவரை ஒன்றிணைய முடியாதுள்ளது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது.   

அவர்கள், மாற்றுத்தளமொன்றில் இணைவது, அவர்களுக்குத் தேர்தல் ரீதியிலான பலத்தைத் தரும் என்றாலும் கூட, அதைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.   

நீதியரசர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய போது, அவரோடு சிவில் சமூக அமைப்பில் இணைந்து இயங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமசந்திரனும் கூட, அவரோடு இணைந்து கூட்டணியாக இயங்கமுடியாது போனது என்பதுதான் துரதிர்ஷ்டகரமான உண்மை. இதற்கு, சுரேஷ் பிரேமசந்திரனுடன் இணைந்து, கஜேந்திரகுமார் இயங்க மறுப்பதுதான் முக்கியமான காரணமாகப் பேசப்பட்டது.   

எல்லா விலகல்களுக்கும், கொள்கை முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், அந்தக் கொள்கை எனும் முகத்திரைக்குள், தனிமனித முரண்பாடுகள் ஒளிந்திருப்பது, மக்களுக்குத் தெரியாமல் இல்லை.   

ஆனால், இந்தக் கொள்கை, தனிமனித முரண்பாடுகளால் கடைசியில் பாதிக்கப்படுவது தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களுமாகவே இருக்கிறார்கள்.  

இந்த நிலையில், இந்த முரண்பாடுகளுக்கு, உடனடி மாற்று மருந்து என்பது கிடையாது என்ற யதார்த்தத்தை, நாம் புரிந்துகொண்டாலும், இந்த ஒற்றுமையீனத்தால், தமிழ்த் தேசியம் சிதைவுறுவதைத் தடுக்க, குறைந்தபட்ச ஒற்றுமை, புரிந்துணர்வைத் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்படுத்துவது அவசியமாகிறது.   

இது எவ்வாறு ஏற்படுத்தப்பட முடியும் என்பதுதான், சிம்மசொப்பனமான கேள்வி. முதற்கட்டமாக, தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்து பேச்சு வார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கக் கூடிய ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும்.   

இது தொடர்ந்து செயற்படும் அமைப்பாகவும் தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாடுகளைக் கலந்தாய்ந்து, ஒன்றுபட்ட குரலாக அதை வௌிப்படுத்தும் தளமாகவும் அமைய வேண்டும். இதில் சிவில் சமூகம் அவதானிகளாகப் பங்கெடுத்தாலும், இது முற்று முழுதான அரசியல் தளமாகவே அமைய வேண்டும்.   

சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் கலந்துரையாட ஏலவே, ‘தமிழ் மக்கள் பேரவை’ உள்ளிட்ட தளங்கள் காணப்படுகின்றன. ஒரு கூட்டணியாக, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையாது விட்டாலும், முதற்கட்டமாக, தமிழ்த் தேசியத்தின் நலன் கருதியேனும், கலந்துரையாடல், பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கக் கூடிய ஒரு தளத்தில் இணைவது அவசியமாகிறது.   

ஒன்றோடொன்று முரண்பட்டு நின்ற ஆயுதக் குழுக்கள், ஒருமித்த குரலில் ‘திம்புக் கோட்பாடுகளை’ முன்வைத்தது போல, தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தவும் எடுத்துரைக்கவுமேனும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு தளத்தில் இணைவது அத்தியாவசியமாகிறது.   

இந்த முதற்படி, வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படும் போது, இயல்பாகவே அடுத்த கட்டம் தொடர்பிலான தௌிவான பார்வை அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைக்கும். அவை, தேர்தல் கூட்டாக அமைகிறதா இல்லையா என்பதை, காலம் தீர்மானிக்கட்டும். ஆனால், குறைந்த பட்சம், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள், தமிழ்த் தேசியத்தை சித்தாந்த, கருத்தியல் ரீதியில் முன்வைப்பதிலேனும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். அல்லாது போனால், இந்த உள்ளக முரண்பாடுகளால் தமிழ்த் தேசியம், இனி மெல்லச் சாகடிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலைதான் ஏற்படும்.  

ஆகவே, குறைந்தபட்சமாக ஒரு தளத்தில் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியம் பற்றியும் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் பேசவும் கலந்துரையாடவுமேனும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழ்க் கட்சிகள் தயாராக இருக்கின்றனவா என்பதுதான் முக்கியமான கேள்வி.   

அவ்வாறு செய்வதற்கு, ஒரு தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சி தயாரில்லை என்றால், அதன் உள்நோக்கம், நிகழ்ச்சி நிரல் பற்றி, தமிழ் மக்கள் ஐயம் கொள்ளவும் கேள்வியெழுப்பவும் வேண்டிய நிலை ஏற்படும்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முரண்பாடுகளுக்கான-மாற்று-மருந்து/91-243548

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.