• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
சுப.சோமசுந்தரம்

வெய்துண்டல் அஞ்சுதும் - சுப. சோமசுந்தரம்

Recommended Posts

                                                வெய்துண்டல்  அஞ்சுதும்

-       சுப.சோமசுந்தரம்

 

            சமீபத்தில் ‘யாழ்’ இணையத்தில் “ஆபாசப் படங்களின் தாக்கம் : உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு” என்னும் தலைப்பில் வெளியான பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் என்னுள் தோற்றுவித்த சிந்தனைச் சிதறலே எனது இவ்வெழுத்து. அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வாக இருப்பினும், மேற்கத்தியத்தில் வேகமாகக் கரையும் இந்திய/தமிழ் சமூகங்களுக்குப் பொருந்தாதா என்ன?

 

            இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தமை அதிர்ச்சி தரும் தகவல். கருத்துக் கணிப்பில் பங்கு பெற்றோரும், இது குறித்து இணையத்தில் பதிவிட்டோரும், பின்னூட்டம் அளித்தோரும் அநேகமாக அனைவரும் இந்த மன விகாரங்களை ஆதரிக்கவில்லை என்பது ஆறுதல் செய்தி. இச்செயல்கள் எல்லை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணத்தில் முடிந்த கதைகளும் உள்ளன. வெகு சில பெண்கள் இந்த வன்முறையை விரும்புவதாகக் கூறுவது வக்கிரத்தின் உச்சம். மேலும் இவ்வாறான வன்முறைகள் ஆண்களின் ஏகபோக உரிமையாகத் தோன்றுகிறது. ஆபாசப் படங்களிலேயே பெண்களின் வன்முறை அருகி இருப்பதால், சமூகத்திலும் இது அரிதாகக் காணப்படலாம்.

 

            எப்படியாயினும் இது மனதின் விகாரம் சார்ந்த வன்முறையே. ஆணின் மன விகாரம் ‘கொடுமை விருப்ப’மாகவும் (sadism), ஏற்றுக் கொள்ளும் பெண்ணின் மன விகாரம் ‘வலியேற்பு விருப்ப’மாகவும் (Masochism) கொள்ளலாம். Sadism, Masochism என்ற ஆங்கிலச் சொற்களைத் தமிழில் வலிந்து மடைமாற்றம் செய்வதிலிருந்தே தெரிகிறது – தமிழ்ச் சமூகத்தில் இவ்விகாரங்கள் எக்காலத்தும் இருந்ததில்லை என்று.

 

            இந்த வன்முறை விகாரம் மேற்கத்திய உலகில் காலங்காலமாய் அரிதாகவோ அரிதினும் அரிதாகவோ இருந்திருக்கலாம். தற்காலத்தில் தகவல் பரிமாற்றம் எளிதானதால் ஆபாசப் படங்களின் மூலமாக, வெறித்தனம் ‘இயல்பானது’ என மாறி வருவதாக ‘ஸ்டீவன் போப்’ என்னும் உளவியல் அறிஞர் அச்சம் தெரிவிக்கிறார். கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது நூலிளையில் தப்பிய நிலையிலோ, சுய நினைவிழந்த நிலையிலோ பெண்கள் தம்மிடம் ஆலோசனைக்கு அழைத்து வரப்பட்டதைக் குறிக்கிறார்.

 

            இனி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வருவோமே ! நமக்கான வரலாற்றுக் குறிப்புகளும் ஆவணங்களும் நம் இலக்கியங்களும் கல்வெட்டுகளுமே. கல்வெட்டுகளில் ‘காமம்’ பற்றிய செய்திகள் நமக்கு அமைவதில்லை. வடவர் வரவுக்குப் பின் கோயில் சிற்பங்களில் கூட சோழர் காலந்தொட்டு அக்காட்சிகள் அமைத்தது வேறு கதை. அங்கும் விகாரங்கள் உண்டெனினும், வன்முறை காணப்படவில்லை. நமக்கான பண்பாட்டுப் பெட்டகங்கள் நம் இலக்கியங்களே.

 

            நம் உலகம் மேற்கத்தியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உடல் வன்முறை இங்கு துளியும் இல்லை. ஊடலின் மூலம் சிறிய மனவலியைத் தந்து, பெரும்பாலும் அதற்குத் தானே மருந்தாகவும் அமைவதே இங்குள்ள ‘விகார’(!) நிலை. அதிலும் மனவலியைத் தரும் Sadist ஆக தலைவியும், அவளிடம் கெஞ்சும் Masochist ஆக தலைவனும் சித்தரிக்கப்படுகிறார்கள். சமூகம் ஏற்றுக் கொண்ட மரபே பாடுபொருளாகும். பெருங்கதையில் மானனீகை ஊடல் கொள்ள, உதயணன், “மானே, தேனே, மானனீகாய்!” என அவள் கால் பற்றிக் கெஞ்சுதல் நம் நெஞ்சில் பதிந்த காட்சி.

 

            உலகியல் வாழ்வில் எந்த விடயமானாலும் வள்ளுவனைத் துணைகோடல் எளிதான ஒரு வழி. அவன் சொல்லாதவொன்று இப்பூவுலகில் ஏது? அவனை விட்டால் நமக்கும் பிழைப்பு ஏது? இலக்கியச் செல்வங்கள் எவ்வளவோ நம்மிடம் இருக்க, உடனே செலவழிக்க வழக்கம்போல் வள்ளுவனிடம் கடன் கேட்போமே ! அவனுக்கு அது வாராக்கடன்.

 

            ‘கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

              காட்டிய சூடினீர் என்று’    (குறள் 1313)

எனச் சிறுபிள்ளைத்தனமாக தலைவியின் வலி ஏற்படுத்தும் முயற்சி காணலாம். (கோடு – கிளை; காயும் – (பொய்க்)கோபம் கொள்வாள்; ஒருத்தியை – ஒருத்திக்கு (உருபு மயக்கம்) “கிளைகளில் மலர்ந்த பூக்களைச் சூடி என்னை அலங்கரித்துக் கொண்டாலும், வேறு ஒருத்திக்குக் காட்டவே சூடினீர் என்று ஊடல் கொள்கிறாள்” என்று தலைவன் கூற்றாய் வருகிறது. ஆண் பலதார வழக்கமுள்ள சமூகத்தில் எழுதப்பட்டது)

 

            ‘உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்

             புல்லாள் புலத்தக் கனள்’     (குறள்  1316)

என்று நுணுக்கமாக ரசித்து ஊடல் கொள்ளும் நிலையும் தலைவியிடம் உண்டு.

(உள்ளினேன் – நினைத்தேன்; புல்லாள் – அணைக்க மறுத்தாள்; புலத்தக்கனள் – புலவி (ஊடல்) கொண்டாள்; “உனை நினைத்தேன் என்றேன்; எனில் ஏன் மறந்தாய் என ஊடல் கொண்டாள்” – இது குறட்பொருள்)

 

            ‘புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

             அல்லல்நோய் காண்கம் சிறிது’     (குறள் 1301)

எனும் அளவிலேயே அவளது sadism உள்ளது என்பது குறிக்கத்தக்கது. (புல்லாது – அணையாது; இரா – இராப்பொழுது; அப்புலத்தை – அந்நிலையை; ‘அவரை அணையாது இருக்கும் அந்த இராப்பொழுதில் அவர் அடையும் துன்ப நோயை சற்று ரசித்துக் காண்போமே’ என்பது தலைவியின் கூற்று)

 

            ‘ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப

             நீடுக மன்னோ இரா’       (குறள்  1329)

என்ற அளவில் அவனது Masochism உள்ளது.

(“இந்த ஒளியிழை ஊடல் கொள்க; யான் இரந்து கெஞ்ச

   இந்த இராப்பொழுது நீள்க” என்பது தலைவன் கூற்று).

            எவ்விடத்தும் உடல் வலி தரும் நோக்கமில்லை. அது மட்டுமன்று. உடல் வலிக்கு எதிரான நிலைப்பாடும் இலக்கிய நயத்தோடு வலியுறுத்தப் பெறுகிறது.

 

            ‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

             அஞ்சுதும் வேபாக்கு அறிந்து’      (குறள் 1128)

என்பதன் மூலம் கற்பனையில் கூட உடற்துன்பம் கொடிது என நிறுவுகிறாள் நம் ‘sadist’ தலைவி ! (வெய்துண்டல் – வெம்மையான உணவைக் கொள்ளுதல்; ‘என் காதலர் நெஞ்சத்தில் இருப்பதால், சூடானவற்றை நான் உட்கொள்வதில்லை; உண்டால் அவரைச் சுடுமே’ என்பது தலைவி கூற்று)

 

            மனிதனும் சமூக விலங்கு என்பதால், பிறர் வலியில் இன்பம் காணுதல் சில சமயங்களில் இயற்கையாய்த் தோன்றலாம். பெண் ஆட்டினை உறவுக்கு முன் வயிற்றில் எட்டி உதைத்து இசைய வைக்கும் கிடாவைக் கண்டதுண்டு. சமூக வாழ்வை ஏற்படுத்திய மனிதன் சில தருணங்களில் இயற்கையை எதிர்த்து நிற்றலே மனித நாகரிகமாய் அமையும். ஆடையை எடுத்து உடுத்தியபோதே இயற்கையை எதிர்த்து நின்றோமே ! நம் மரபும் இலக்கியமும் இயற்கையுடன் இயைந்த வழி; இயற்கையை வெல்லும் வழியும் அதுவே.

           

 

  • Like 7
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கண்ணதாசன் தனது சினிமா பாடல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுவார்,

”சுற்றி நான்கு சுவர்களுக்குள்

தூக்கமின்றிக் கிடந்தோம்

சிறு துன்பம் போன்ற  இன்பத்திலே

இருவருமே மிதந்தோம்”

அவர் இதை எந்த இலக்கியத்தில் இருந்து எடுத்தார் என்பது தெரியவில்லை

Share this post


Link to post
Share on other sites

பேசாப் பொருளைப் பேசத் துணிந்த பெருந்தகை!

மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார் ( 1289)

என்ற வள்ளுவன் கண்ட அறவாழ்வில் பொருளீட்டி, இன்பம் துய்க்கும் நனி நாகரிகத் தமிழன் வாழ்ந்த வாழ்வின் பதிவுகள் நம்தம் தமிழரின் செவ்வி தலைப்பட்ட காதையைச் செருக்குடன் செப்பும். அறமில்லாப் பொருளீட்டும் அய்ரோப்பிய விலங்கியல் தடத்தில் பயணிப்பதை நனி நாகரிகமெனக் கொண்ட கீழ்மையை, செவ்வியுடன் கோடிட்ட தகைமை நனி நன்று!

 

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு புலமை வாய்ந்தவர்களும், தங்கள் புலமையை எழுத்தில் கொணரும் போது முறையான மொழிப்பிரயோகம் செய்யாவிட்டால் அதனை வாசிப்போரை கவர்வது கடினம்.

உங்கள் தமிழ் புலமை எழுத்தில் மிளிர்கிரது. 

தமிழர் நாகரீகத்தின் மேன்மையை தொட்டுச் செல்வதற்கு நன்றியும், உங்கள் மொழிப் புலமைக்கு வாழ்த்துக்களும்.

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 12/16/2019 at 9:02 PM, Kavi arunasalam said:

கண்ணதாசன் தனது சினிமா பாடல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுவார்,

”சுற்றி நான்கு சுவர்களுக்குள்

தூக்கமின்றிக் கிடந்தோம்

சிறு துன்பம் போன்ற  இன்பத்திலே

இருவருமே மிதந்தோம்”

அவர் இதை எந்த இலக்கியத்தில் இருந்து எடுத்தார் என்பது தெரியவில்லை

கண்டுபிடிக்க நானும் முயற்சிப்பேன் நண்பரே ! கண்ணதாசனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். இந்த அளவிற்குக் கற்பனை வளமுடையவர்தானே கண்ணதாசன் ! வாசிப்புக்கு நன்றி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஊடலில் பொய்க்கோபமும் கொள்வதும் , கூடலில் நகக்கீறல்களும் ஆங்காங்கே பற்கள் பதிந்த தடம் களும்  ஏற்படுவதுண்டு.(ஆனால் அவை பெரும்பாலும்  பெண்களால்தான் ஆண்களுக்கு ஏற்படும்).ஆனால் அவை வன்புணர்வோ அல்லது வன்முறையோ அல்ல. நல்ல சிந்தனையை நயமாக எடுத்துரைத்துள்ளீர்கள்.... நன்றி சோமசுந்தரம்......!   💐

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.