தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும்  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் ஆகியோர்  இனவாதத்தை பேசியே மக்களாணையினை பெற முயற்சிக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி கிடைக்கப் பெற வேண்டுமாயின் பாரம்பரிய அரசியல் தீர்மானங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

virakesari.jpg

வடக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர்  சி. வி. விக்னேஷ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியோர்  அரசியலில் செல்வாக்கு செலுத்தி  தமிழ் மக்களை பயனற்றவர்களாக்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆதரவு  கிடைக்கப் பெறாத நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்திகளை தற்போதும் முன்னெடுத்து வருகின்றோம்.

இனவாதத்தை பேசியே கூட்டமைப்பினரும், சி. வி விக்னேஷ்வரனும்   தமிழ் மக்களை அரசியல் ரீதியான தீர்மானங்களில் திசைத்திருப்பியுள்ளார்கள். யதார்த்த நிலையினை தமிழர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளோம். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலிலும்  பெரும்பான்மையாக ஆதரவினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும். 

அபிவிருத்தியும், பொது உரிமைகளும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டுமாயின் இம்முறை தமிழ் மக்கள் அரசியல் ரீதியான பாரம்பரிய கொள்கையினை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் இனவாத கருத்துக்களை குறிப்பிடுபவர்களை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் தெரிவு செய்ய கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/71323