Sign in to follow this  
nunavilan

G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம்

Recommended Posts

5G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 1

Tam Sivathasan B.Eng. (Hons)

இன்ரெர்நெட், செல் ஃபோன், கணனி, செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்று வரும்போது கடந்த சில வருடங்களில் 5G என்ற சொற்பதம் அதிகம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இங்கு G எனப்படுவது தலைமுறை (generation). 1990களில் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபோது இது 1G எனப் பெயரிடப்படாவிட்டாலும் அதில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களின் படிகளின்படி நாம் இப்போது 5G க்குள் செல்லவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியான கம்பிகள் இல்லாமல் காற்றில் செய்திகளை அனுப்பும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்ப விளக்கம் இங்கே தரப்படுகிறது.

‘கூப்பிடு தூரம்’

ஒருவர் பேசும்போது வெளிப்படும் சத்தம் ஒரு குறிப்பிட்ட (கூப்பிடு தூரம்) தூரத்துக்கு மட்டுமே செல்லும் சக்தி கொண்டது. காரணம் அச் செய்தி அலை வடிவத்தில் காற்றில் செல்ல வேண்டும். காற்றிலுள்ள (வெளி) துணிக்கைகளத் துள்ள (அதிர) வைப்பதன் மூலமே இச்சத்தத்தினால் நகர முடிகிறது. இச் சத்தம் அதிக தூரத்துக்குச் செல்ல வேண்டுமானால் அதிக வலுவுடன் அந்த அதிர்வு இருக்க வேண்டும். இந்த அதிர்வைத் தரக்கூடிய அலைகளை ரேடியோ அலைகள் (radio waves (RF)) என்கிறோம். இந்த அதிர்வின் அளவை ஹேர்ட்ஸ் (Hertz) என்றும், அதன் மடங்குகளை – ஆயிரம் (Kilo Hertz), ஆயிரமாயிரம் (Mega Hertz), ஆயிரமாயிரமாயிரமாயிரம் (Giga Hertz) என்று விஞ்ஞான உலகில் சொல்வார்கள் (இப்பொழுது 18 பூச்சியங்களைக் கொண்ட அளவான Exa Hertz பாவனைக்கு வந்திருக்கிறது).

download-2-4.jpg

மனித காதுகளினால் கேட்கக்கூடிய சத்தத்தின் அதிர்வெண் 3Hz முதல் 20KHz (0 டெசிபல் முதல் 40 டெசிபல் வரை) என அறியப்பட்டுள்ளது. இந்த ஒலிக்கற்றைக்கு வெளியில் அதிர்வை ஏற்படுத்தும் சத்தங்களை நம்மால் கேட்க முடியாது. ஆனால் சில விலங்கினங்களாலும், தாவர இனங்களாலும் பல் வேறுபட்ட அதிர்வுகளைக் கேட்கமுடியுமென்றும் சொல்கிறார்கள். உதாரணமாக பூகம்பம் வருவதற்கு முன் எழும் நிலநடுக்க அதிர்வைக் கோழி, பாம்பு, யானை போன்றவற்றால் கேட்க முடிகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவ்வதிர்வுகளுக்கு அவை எதிர்வினையாற்றுவதிலிருந்தே நாம் அதைக் கண்டறிந்துள்ளோம். எந்தவித சத்தத்தையும் ஒரு ‘மைக்கிறோஃபோன்’ மின்னலையாக (electrical signal) மாற்றித் தருகின்றது. இதை மேலும் வலுவாகவும், பெரிதாகவும் ஆக்கித்தருகிறது ‘amplifier’.

எமது உட்செவியிலுள்ள செவிப்பறை என்னும் சவ்வு (மேளத்தின் இறுக்கமான தோல் போன்றது) எங்கோ தொலைவிலிருந்து வந்து சேரும் ஒரு சத்தத்தின் அதிர்வை உணரும்போது, அதை மூளை பகுத்துணரும்போது அச்சத்தத்தை நாம் ஏற்கெனவே கற்றுக்கொண்ட மொழியோடு ஒப்பிட்டு, அதில் பரிமாறப்பட்ட செய்தியைக் கிரகித்து (interpret) அறிந்துகொள்கிறோம். இச் சத்தம் 3Hz க்குக் குறைவாகவோ அல்லது 20KHz க்கு அதிகமாகவோ இருப்பின் அதை எங்கள் மூளையால் கிரகிக்க முடியாது போய்விடுகிறது. இந்த 3Hz – 20KHz பிரதேசத்தை அல்லது பட்டையை base band என்பார்கள். இதுவே நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் bandwidth. அத்தோடு இந்த அதிர்வுப் பலத்துடன் சத்தம் நீண்ட தூரத்துக்குச் சென்றுவிடவும் முடியாது. அதற்குள் அதன் பலத்தை இழந்துவிடும்.

 

சத்தத்தை அல்லது செய்தியைக் காற்றில் நீண்ட தூரத்துக்குக் கொண்டு செல்லும் முறைகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு விடயத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த அதிர்வெண்ணை அதிகரித்தால் அது செல்லும் தூரத்தை அதிகரிக்கலாம் என்ற உண்மையை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் அவ்திர்வெண்கள் 20 KHz க்கும் அதிகமானவை என்பதால் எமது காதுகளால் கேட்க முடியாது போய்விடும்.

download-1-3.jpg

எங்கள் காதுகளும் மூளையும் தமக்குள் செய்துள்ள ஒப்பந்தம் ஒரு வடி கட்டியை (filter) பாவிப்பது என்று. அதன் பிரகாரம் Baseband இற்கு அப்பாலுள்ள அதிர்வுகளுடன் வரும் செய்திகளை அவை தணிக்கை செய்துவிடுகின்றன. உடலுக்கு அவை தீமையை விளைவிக்கலாமென்ற காரணத்துக்காகவும் இருக்கலாம்.

இப்பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர்தான் இத்தாலிய விஞ்ஞானியான மார்க்கோணி. முதன் முதலாக அவர் அத்லாந்திக் சமுத்திரத்தைக் கடந்து சத்தத்தைக் காற்றலைகளூடு வெற்றிகரமாக அனுப்பி வைக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.

வாகனத் தத்துவம்
download-10.jpg
மார்க்கோணி

இலகுவாகச் சொல்வதானால் ஒரு பண்டத்தைத் தூர தேசங்களுக்கு அனுப்புவதற்கு எப்படி நாம் வாகனமொன்றைப் பாவிக்கிறோமோ அதே தத்துவம்தான் இங்கும் பாவிக்கப்படுகிறது. ஒரு தேவைக்குரிய பண்டத்தால் தானாக நீண்டதூரம் சென்று உரியவரை அடைய முடியாது. எனவே அதை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம். உரிய இடத்தில் அப்பொருள் வாகனத்திலிருந்தும் இறக்கிவைக்கப்படுகிறது.

சத்த விஞ்ஞானத்திலும் இதே அணுகுமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது.

‘சுமக்கும் அதிர்வெண்’ (Carrier Frequency)

இங்கு அதிக தூரம் செல்லக்கூடிய, ஆனால் எமது காதுகளால் கேட்கமுடியாத சத்தம் உயர் அதிர்வெண்களைக் கொண்டது (carrier frequency). இது ‘ரேடியோ அதிர்வெண்’ (Radio Frequency) வடிவத்தில் இருக்கும். கேட்கக்கூடிய சத்தம் (audible frequency) (3Hz-20 KHz வகையானது. இதை அதே வடிவத்தில் ஆனால் மின்னலைகளாக மாற்றப்பட்டுப் பண்டமாக்கப்படுகிறது. முதலாவது வாகனம், இரண்டாவது பண்டம். இந்த விஞ்ஞானம் நமக்குச் செய்த பெரும் உதவி பண்டத்தை வாகனத்தில் ஏற்றி நெடுந்தூரம் செல்ல வைக்கவல்ல தொழில்நுட்பத்தைத் தந்தது. எவ்வளவு தூரம் போகவேண்டுமென்பதை உயர் அதிர்வெண் தீர்மானிக்கும். வாகனத்துக்கு எரிபொருள் (வலு) எவ்வளவு அதிகமிருக்கிறதோ அவ்வளவுதூரத்துக்கு அது தன் பண்டத்தைக் கொண்டு செல்லும். வாகனத்தின் வலு அதன் எரிபொருள். இங்கு அது (transmission power) கிலோவாட்ஸ் (Kilowatts (KW)) இல் சொல்லப்படும். வாகனத்தின் கொள்ளளவு (capacity) எந்தளவு இருக்கிறதோ அந்தளவுக்கு அதில் பண்டங்களை அனுப்பி வைக்கலாம். தன் வலுவைப் பற்றிப் பண்டம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, 3Hz-20KHz இற்குள் இருந்துவிட்டால் போதுமானது.

‘பண்பேற்றம்’ (Modulation)

அதற்கு முன் இன்னுமொரு விடயம். இந்த பண்டத்தை வாகனத்தில் ஏற்றும் முறைகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தொடர் வண்டியை (ரயில்) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பெட்டிகளின் மேல் உட்கார்ந்தும் சிலர் பயணிக்கிறார்கள். பெட்டிகளின் உள்ளும் ஏறியும் பயணிக்கிறார்கள். இந்த ‘சத்த’ ப் போக்குவரத்திலும் இவ்விரண்டு முறைகளுமுண்டு. அண்ணளவான உருவகமாக மட்டுமே இதைச் சொல்கிறேன். இந்த முறையைத் தமிழில் பண்பேற்றம் (modulation) எனப் பேராசிரியர் கூகிள் சொல்கிறார்.

அதாவது சொல்லவந்த செய்தியை ஏதோ ஒரு வகையில் வாகனத்துடன் கட்டி ஏற்றி அனுப்பி விடுவது. இதைக் கட்டும் கருவியை transmitter என்றும் சேர்க்கப்பட வேண்டிய இடத்தில் சேர்ந்ததும் அதை அவிழ்க்கும் கருவியை receiver என்றும் சொல்வார்கள். பண்டத்தை நாம் இப்போ ஒலிக்கற்றை (sound waves) என அழைப்போம். கட்டும் கருவியின் வலுவைப் பொறுத்து (transmission power) அதன் பயணி எவ்வளவு தூரம் போகலாமென்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த ஒலிக்கற்றையை வாகனத்தின் மேல் வைத்துக் கட்டியே அனுப்பப்பட்டது. இதை ‘உயரப் பண்பேற்றம்’ (amplitude modulation (AM))என்று அழைத்தார்கள். இது நீண்ட தூரத்துக்குச் செல்லும் என்றாலும் அதிக தூரத்துக்குப் போகும்போது அதன் தரத்தை, வலுவை இழந்துவிடுவது அவதானிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இன்னுமொரு உத்தியைக் கையாண்டார்கள் தூரம் எங்களுக்குப் பிரச்சினை இல்லைத் தரம் தான் எங்களுக்குத் தேவை என்பவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தியே ‘அதிர்வுப் பண்பேற்றம்’ (frequency modulation (FM)). இவ்விரண்டு நடைமுறைகளின்போதும் கட்டி அனுப்பப்படும் முறையும், அவிழ்க்கப்படும் முறையும் வித்தியாசம். அதுபற்றி நாம் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

‘பட்டை’ (Bandwidth)
download-3-1.jpg

மனிதக் காதுகளால் கேட்கக்கூடிய bandwidth அல்லது baseband 3Hz – 20KHz எனப் பார்த்தோம். இதைக் கேட்கும் அதிர்வெண் / பட்டை (audible frequency / bandwidth) என்பார்கள். இப்போது தொடர் வண்டியின் (carrier) முதலாவது பெட்டியில் (செய்தி) பயணம் செய்கிறது என வைத்துக்கொள்வோம். இவ்வண்டி ஏற்கெனவே இன்னுமொரு கேட்க முடியாத அதிர்வெண்ணில்தான் (carrier frequency) பயணிக்கும் (அதிக தூரம் போகவேண்டுமென்பதால்). இங்கு செய்தி FM முறையில் பண்பேற்றம் செய்யப்பட்டு ஏற்றி அனுப்பப்பட்டிருக்கிறது எனவும் வைத்துக்கொள்வோம். அச் செய்தி ஏற்றப்பட்டிருக்கும் பெட்டியின் இலக்கம் அதன் அதிர்வெண் 89.1 M என்று வைத்துக்கொண்டால் அக் குறிப்பிட்ட செய்தி அந்த அதிர்வெண்னில் பயணம் செய்கிறது எனக் கருதப்படும்.

இந்த ஒரு பண்டத்தை, உதாரணமாக, 50 கி.மீ. ருக்கு அப்பால் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அந்தத் தொடர்வண்டியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு வியாபார ரீதியாக அது நட்டம். எனவே அவர் அப் பாதையிலுள்ள வாடிக்கையாளர்கள் வேறு சிலருக்கும் பண்டங்களை விநியோகிக்கும். அவை இரண்டாவது, மூன்றாவது என்று பெட்டிகளில் ஏற்றப்படலாம். இப்படி எத்தனை பெட்டிகள் அத் தொடர்வண்டியில் சேர்க்கப்படுகிறதோ அவற்றுக்கு 89.2, 89.3…..99.1 என்று விலாசங்களை இடலாம். எந்த விலாசத்தில் அந்தக் குறிப்பிட்ட செய்தி இறக்கப்பட வேண்டுமோ அங்கு உள்ள விசேட கருவி அதற்கான செய்தியைத் தனியே பிரித்து எடுத்துவிடும். அதைப் பிரித்தெடுக்கும் கருவிகள்தான் உங்கள் வீடுகளிலுள்ள வானொலிகள் (radio receivers). நீங்கள் திருப்பும் சில்லு (dial) ஒரு வகையில் வடிகட்டி (filter). தொடர் வண்டியில் நீங்கள் தெரிவு செய்த பெட்டியிலிருந்து செய்தியை இறக்கித் தரும் கருவிதான் உங்கள் வானொலி.

download-4-3.jpg
‘கற்றை’ (Spectrum)

இப்படிப் பல அதிர்வெண்களால் தொடுக்கப்பட்ட தொடர் வண்டியை மொத்தமாக bandwidth என அழைக்கிறோம். இடையில், உதாரணத்துக்கு 10 முதல் 15 பெட்டிகள் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமானால் அதைக் (10-15) கற்றை (spectrum) என்போம். Bandwidth எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவுக்குப் பண்டங்களை அனுப்பலாம். அதனால் ஏகப்பட்ட இலாபத்தையும் சம்பாதிக்கலாம். இதனால்தான் அனேகமான நாடுகள் இந்த அலைக்கற்றை விநியோகத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. பல ஊழல் அரசியல்வாதிகள் தாம் பெற்றுக்கொண்டோ அல்லது தமது உறவினர்களுக்கோ இவ்வொலிக்கற்றைகளை விற்றோ பெரும் லாபங்களை ஈட்டி வருகின்றார்கள்.

தொடரும்….

https://marumoli.com/5g-என்றால்-என்ன-எளிய-முறையி/

Share this post


Link to post
Share on other sites

எந்த முடடாளுக்கும் இலகுவாக புரியும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது ......எனக்கே கொஞ்சம் புரிஞ்சிருக்கு என்றால் பார்த்து கொள்ளுங்கள்.நன்றி நுணா........!   😁

Share this post


Link to post
Share on other sites

5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 2

 

Tam Sivathasan, B.Eng. (Hons)

பாகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத்தில் பாவிக்கப்படும் அடிப்படைக் கூறுகளான சொற்பிரயோகங்கள் சிவற்றைப் பற்றியும், தகவல் (பண்டம்) எப்படி வண்டிகளால் (carrier) சுமக்கப்பட்டு நெடுந்தூரம் கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றியும் பார்த்தோம். பாகம் இரண்டில் எப்படி அந்தத் தொடர் வண்டி அலைவரிசைக் கற்றைகள் அவற்றின் தன்மை, பாவனை, செயற்பாடு என்ற முறையில் பகுக்கப்பட்டுப் பங்கிடப்படுகின்றன எந்பதைப் பார்ப்போம்.

images-1-2.jpg
5G வலையில் அகப்படும் உலகம்

தொலைக் காட்சி, கைத் தொலைபேசி, வானொலி ஆகியன தமது தகவல்களை ரேடியோ அலைகள் வடிவத்தில் பெற்று அதிர்வுகளாக ஒளி, ஒலி அலைகளாக மாற்றுகின்றன. இந்த ரேடியோ அலைகள் மின்காந்த (electromagnetic waves) வகையைச் சேர்ந்தவை. அவ்வலைகள் குறிக்கப்பட்ட அதிர்வெண்களில் (frequencies) பரிமாறப்படுகின்றன. இப்படிப் பல அதிர்வெண்களைக் கொண்ட அடுக்குகளை அலைக்கற்றை (spectrum) என பாகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

இப்படியான மின்காந்த அலைகளின் பட்டை (electromagnetic spectrum), குறைந்த அதிர்வெண்ணிலிருந்து கூடிய அதிர்வெண் வரை, 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பாவிக்கப்படுகிறது. வலுவைப் பொறுத்தவரையிலும் அதிகுறைந்த அதிர்வெண், அதிகுறைந்த வலுவையும், அதிகூடிய அதிர்வெண் அதிகூடிய வலுவையும் கொண்டிருக்கும் என்பதனால் அந்த ஒழுங்கிலேயே அவை இங்கு விபரிக்கப்படுகின்றன.

download-5-3.jpg

அவையாவன (ஏறு வரிசையில்): ரேடியோ அலைகள் (Radio Waves), மைக்ரோ அலைகள் (Micro Waves|, இன்ஃப்றா றெட் அலைகள் (Infra Red Waves), பார்க்கக்கூடிய அலை (Visible), அல்ட்றா வயலட் அலைகள், எக்ஸ் கதிர்கள் (X-Rays), காமா கதிர்கள் (Gamma Rays) ஆகும். இவற்றில் பார்க்கக்கூடிய அலைக்கற்றையைத் தான் நாம் ஏழு வர்ணங்களாக (நிறமாலை)மேலும் பிரிக்கிறோம்.

இந்த மின்காந்த அலைவரிசைப் பட்டையில் எம் வாசகர்களுக்கு அதிகம் தொடர்புடையது றேடியோ அலைககள் அல்லது அலைவரிசை என்பதால் அதைப்பற்றிக் கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம்.

றேடியோ அலைகள்

ரேடியோ அலைகள், 3 KHz இலிருந்து 3 GHz வரை இருக்கும் அலைக்கற்றை அல்லது பட்டைக்குள் (spectrum) அடங்கும். இதை ULF, ELF, AM , FM, VHF, UHF எனப் பிரித்து அவற்றின் பாவனைக்கேற்பப் பங்கிடப்படும்.

அலைவரிசைப் பங்கீடு

அமெரிக்காவில் இவ்வலைக்கற்றையைப் பிரித்தளிக்கும் வேலையைத் தேசிய தொலைத் தொடர்பு, தகவல் அதிகாரசபை (National Telecommunications and Information Administration) செய்கிறது. கனடாவில், கனடிய வானொலி, தொலைத் தொடர்பு ஆணையம் (Canadian Radio and Telecommunication  Commission) இவ் வேலையைச் செய்கிறது. 

புதிதாக ஒரு அலைவரிசை சந்தைக்கு வரும்போது இன் நிறுவனங்கள் அவற்றை ஏலத்தில் விடுவதுமுண்டு. அப்போது பல பணக்கார நிறுவனங்கள் இவற்றை முண்டியடித்து வாங்குவார்கள். சில வேளைகளில் அரசாங்கம் தன் அதிகாரத்தைப் பாவித்து சிறுபான்மை இனங்களின் கலாச்சார அமைப்புகளின் தேவைகளுக்காகவோ அல்லது மத அமைப்புகளின் தேவைகளுக்காகவோ இவற்றை ஒதுக்கிக் கொடுக்கின்றன. இவ்விடயத்தில் இவற்றைக் கோரும் அமைப்புகள் பற்றியும் அவற்றின் தகமைகள் பற்றியும் தீர விசாரித்தே இவ்வலைவரிசைகளை அதற்குப் பொறுப்பான அரச நிறுவனம் ஒதுக்குகிறது. இவ்வலைவரிசையில் இருக்கக்கூடிய ‘துண்டுகள்’ (slots) எல்லாம் அநேகமாகத் தீர்ந்துபோய் விடுவதால் எனப்படும்.

நீங்கள் AM வரிசையில் ஒரு வானொலி தொடங்கப்போகிறீர்கள் என்றால் இந்த அலைவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் 3KHz முதல் 1700 KHz வரையிலான பட்டைக்குள் (bandwidth) இருக்கக்கூடிய ஒரு அலைவரிசையைத் (துண்டைத்) தேர்ந்தெடுக்க வேண்டும். இவை ஆரம்பத்தில் பிரித்தளிக்கப்பட்டபோது ஏற்கெனவே விடயம் தெரிந்தவர்கள், அல்லது வசதியுள்ளவர்கள் வாங்கி விட்டிருப்பார்கள். அதனால் ஏற்கெனவே வாங்கிய ‘துணடை’ ஒருவர் விற்கும்போதோ அல்லது பறிமுதல் செய்யப்பட்ட ‘துண்டு’ ஏலத்தில் மீள்விநியோகம் செய்யப்படும்போதோதான், அனேகமாக, குறிப்பிட்ட அலைவரிசையை நீங்கள் வாங்குவது சாத்தியமாகும்.

குறுக்கீடுகள் (Interferences)

சாதாரண AM அலைவரிசைக்குப் 10KHz பட்டை (துண்டு) ஒதுக்கப்படும். அந்த அலைவரிசையின் சொந்தர்காரர் அதற்கென வழங்கப்பட்ட எல்லைகளுக்க அப்பால் ஒலிபரப்ப முடியும். சில வேளைகளில் தொழில்நுட்பக் காரணங்களினால் அருகருகே ஒதுக்கப்பட்ட அலைவரிசைப் பட்டைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிடும்போது அது ‘தலையீடு’ (interference) அல்லது ‘குறுக்குப் பேச்சு’ (cross talk) எனப்படும். இது சில வேளைகளில் பரிவர்த்தனை நிலையங்களிலோ (transmitting stations) அல்லது வானொலிப் பெட்டிகளிலோ (radio receivers) ஏற்படும் கருவிக் கோளாறுகளால் ஏற்படலாம்.

பாகம் ஒன்றில் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு பட்டைகளும் தொடர் வண்டியின் ஒரு பெட்டியெனில் அதிலுள்ள குறிப்பிட்ட பெட்டியில் வரும் தகவலைக் கச்சிதமாகப் பிரித்தெடுக்கும் வல்லமை உங்கள் வசம் இருக்கும் வானொலிப் பெட்டியில் இருக்கவேண்டும். உங்கள் வானொலிப் பெட்டி ஒரு தகவல் வடிகட்டி. சிறந்த வடிகட்டியானால் அயல் பெட்டிகளில் பயணம் செய்யும் தகவல்களின் ‘தலையீடுகளையும்’, ‘குறுக்குப் பேச்சுக்களையும்’ துல்லியமாக வடிகட்டி உங்களுக்கு நேர்த்தியான இசையையோ அல்லது தகவலையோ தரும்.

அதி குறைந்த அதிர்வெண்கள் (ELF, VLF)

அதி குறைந்த றேடியோ அதிர்வெண்களை உள்ளடக்கிய அலைக்கற்றையை Extremely Low Frequency (ELF) Radio Waves அல்லது Very Low Frequencies (VLF) என்பார்கள். இது பாறைகளையும், தண்ணீரையும் துளைத்துக்கொண்டு நீண்ட தூரத்துக்குப் போக வல்லதால் சுரங்கங்கள், குகைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிலுள்ளோருடன் தொடர்புகளைப் பேணுவதற்காகப் பாவிக்கிறார்கள். மின்னல் வரும்போது பிறப்பிக்கப்படும் மின்காந்த அலைகள் இந்த வகையைச் சாரும். இந்த அலைகள் மண்ணுக்கும் விண்ணுக்குமிடையில் (ionosphere) பட்டுத் தெறிக்கும்போது சில வேளைகளில் செய்மதித் தொடர்புகளின்போது அனுப்பப்படும் சமிக்ஞைகளைக் (signals) குழப்பி விடுகின்றன.

குறைந்த, மத்திய அலைவரிசைகள் (Low & Mediuam Frequencies)

இந்த வரிசையில் 535 KHz முதல் 1700 KHz (1.7 MHz) வரை ஒலிபரப்புக்களையோ அல்லது தகவல்கள் அனுப்புவதையோ செய்யலாம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் AM வானொலிகள் போன்றவற்றுடன் தொடர்புகளைப் பேணவும், ஒலிபரப்புகளைச் செய்யவும் இந்த அலைக்கற்றை வரிசை பாவிக்கப்படுகின்றது.

AM அலைவரிசை (AM Radio Broadcast)

AM அலைவரிசையில் 1906 முதல் ஒலிபரப்பு நடைபெற்று வருகிறது. அதற்கான அலைவரிசை ஒதுக்கீடு 1920 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது

AM அலைவரிசையில் செய்யப்படும் ஒலிபரப்பு நீண்ட தூரத்துக்குச் செல்கிறது. குறிப்பாக இரவில் விண்ணின் அயன் மண்டலம் (ionosphere) துலக்கமாக இருப்பதால் ஒலிபரப்பு அதில் பட்டுத் தெறித்து நெடுந்தூரத்துக்குச் செல்கிறது. AM ஒலிபரப்புக்குக் குந்தகம் விளைவிப்பது இரும்பு கலந்து அமைக்கப்பட்ட உயர் கட்டிடங்கள். இக்கட்டிடங்களினால் ஒலிபரப்பின் சத்தம் குறைக்கப்படுகிறது.

றேடியோ அலைப் பட்டையில் அலைவரிசைகளைப் பாவிக்கும் சாதனங்கள்
 • AM radio – 535 kilohertz to 1.7 megahertz
 • Short wave radio – bands from 5.9 megahertz to 26.1 megahertz
 • Citizens band (CB) radio – 26.96 megahertz to 27.41 megahertz
 • Television stations – 54 to 88 megahertz for channels 2 through 6
 • FM radio – 88 megahertz to 108 megahertz
 • Television stations – 174 to 220 megahertz for channels 7 through 13
 • Garage door openers, alarm systems, etc. – Around 40 megahertz
 • Standard cordless phones: Bands from 40 to 50 megahertz
 • Baby monitors: 49 megahertz
 • Radio controlled airplanes: Around 72 megahertz, which is different from…
 • Radio controlled cars: Around 75 megahertz
 • Wildlife tracking collars: 215 to 220 megahertz
 • MIR space station: 145 megahertz and 437 megahertz
 • Cell phones: 824 to 849 megahertz
 • New 900-MHz cordless phones: Obviously around 900 megahertz!
 • Air traffic control radar: 960 to 1,215 megahertz
 • Global Positioning System (GPS): 1,227 and 1,575 megahertz
 • Deep space radio communications: 2290 megahertz to 2300 megahertz
 • https://marumoli.com/5g-எளிய-முறையில்-தகவல்-தொழி/?fbclid=IwAR1MQ6VTTxn8HPgflCX8X-OPAuA9xc864WOU_eBdoAGNu1nq7YGeVHWAYHU
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழில் தொழில் நுட்ப கட்டுரைகள் வரத்து  குறைவானது .சுஜாதா வுக்கு பின் யாரும் தொடுவது இல்லை என்றே கூறலாம் இதனால் 5ஜி  கோபுரத்தை கண்டாலும் உயரமான மின் காற்றாலைகளை  கண்டாலும்  பயந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் கூட்டம் ஒன்றை   தமிழக சின்னத்திரை தொடர்களும் பிக்பொஸ் போன்ற தொடர்களும் உருவாக்கி வைத்துள்ளன.  அல்லது நாசவே வியக்கும் சிதம்பரம் எனும் முட்டாள் தனமான  காணொளிகளும்  இணையவெளியெங்கும் கும்மியடிக்கின்றன நன்றி நுணா இணைப்புக்கு .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this