• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி!

Recommended Posts

போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி!

Last updated Dec 31, 2019

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாமறிவோம்.

ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம்.

poonakari-brigade.jpg

அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும்.
அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தொலைநோக்குடன் கூடிய முயற்சியில் தோற்றம்பெற்ற பூநகரிப் படையணி பற்றி் சற்றுக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

40206150_852762728256038_896768661647471
பூநகரிக் கட்டளைப் பணியகம் என பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த அரசியல்துறைப் போராளிகள், ராஜன் கல்விப்பிரிவுப் போராளிகள் மற்றும் புதிய போராளிகள் எனப் பல்வேறு தரப்புப் போராளிகளுடன் 2007 இல் இப் படையணி உருவாக்கப்பட்டது.

அப்போது படையணியின் சிறப்புத் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் தளபதியாக கேணல் கீதனும் துணைத்தளபதியாக வேந்தனும் நியமிக்கப் பட்டனர்.
மிக அதிகளவான புதிய இளம் போராளிகளைக் கொண்டதொரு படையணியாக இருந்த போதும் இப்படையணி களங்களில் காட்டிய வீரமும், ஈகமும், உணர்வுவெளிப்பாடும் மிக உன்னதமானவை.

இருபது வயதைக்கூட எட்டாத அந்த இளைய தலைமுறையின் உறுதியும் தாங்குமாற்றலும் உயர்வானவை.

poonakari-brigade-6.jpg

பூநகரியைத் தளமாகவும் முக்கொம்பன் மற்றும் செம்மண்குன்று ஆகிய பகுதிகளை பயிற்சித் தளமாகவும் இப்படையணி கொண்டிருந்தது. மிகத் தாக்கமான பயிற்சிகள், சிறந்த தெளிவூட்டல், பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் இடையேயான சிறந்த உறவு நிலை, புரிந்துணர்வு என்பன மிகக் குறுகிய காலத்தில் படையணியின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

மன்னார் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இப்படையணி அங்கு அழைக்கப்பட்டது. இப்படையணியின் ஆண், பெண் போராளிகள் அங்கு நிலைப்படுத்தப்பட்டனர். அடம்பனைக் கைப்பற்ற படையினர் மேற்றுக்கொண்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் இப்போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்படடன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

poonakari-brigade-3.jpg

மன்னார் பரந்தவெளிகளில் எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள், ‘ராங்கி’ என்னும் கவச ஊர்தித் தாக்குதல்கள், பதுங்கிச்சூட்டுத் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு மட்டுமன்றி இயற்கையின் இரக்கமற்ற பெரும் தாக்குதல்களுக்கும் இவர்கள் தாக்குப் பிடிக்கவேண்டியிருந்தது.

ஆறடி உயர மண்ணணை அரையடியாகக் கரைந்த நிலையிலும், நகர்வகழிகளில் மார்பளவு நீர் நிறைந்திருந்தபோதும் அந்தக் களமுனையில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டியிருந்தது.

இரவுபகலின்றிப் பெய்த பெரு மழையில் விடியவிடிய நனைந்தபடி குளிரில் உடல் விறைக்க, அதிகாலையில் அலையெனவரும் எதிரியுடன் மோதவேண்டியிருந்தது.
இப்படையணியில் ஆண்போராளிகளுக்கு நிகராகப் பல சமயங்களில் அதற்கு மேலாக பெண் போராளிகள் செயற்பட்டனர். பல களமுனைகளில் ஆண் போராளிகளை, பெண் போராளிகள் வழிநடத்திச் செயற்பட்ட வரலாறுகளும் உண்டு.

மன்னாரில் மட்டுமன்றி, மணலாறு, poonakari-brigade-8.jpgமுகமாலைப் பகுதிகளிலும் இப்படையணி எதிரிகளுடன் சமரிட்டது. படைகளிலிருந்து விட்டோடுதல் பொதுவானது எனினும், இப்படையணியில் அது மிக மிக அரிதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்கொருவர் என இணைக்கப்பட்ட போராளிகளே இப்படையணியில் அதிகம் இருந்த போதும் பற்றுறுதியிலும் வீரத்திலும் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் நிரூபித்தே வந்துள்ளனர்.

விடுமுறையில் சென்றாலும், காயம்பட்டு மருத்துவமனை சென்றாலும் விரைந்து களம் திரும்பவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் என்றும் மேலோங்கியே நின்றது.

poonakari-brigade-5.jpg

இப்படையணியின் ஒருவருட நிகழ்வில் களங்களில் திறமையாகச் செயற்பட்டவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப்பேசிய முதுநிலைத்தளபதிகள் பிரிகேடியர் பானு ,பிரிகேடியர் தீபன் ஆகியோரின் கருத்துக்கள் இவற்றிற்குச் சான்றாக அமைந்தன.

அதுமட்டுமன்றி, இப்படையணியின் செயற்பாடுகளை அவதானித்து வந்த தேசியத்தலைவர் மிக இறுக்கமான காலச் சூழ்நிலையிலும் இந்த இளம் போராளிகளை சந்தித்து அளவளாவியது அவர்களுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பாகும்.

அனுபவம் மிக்க மூத்த போராளிகளாகவோ அல்லது அகவை அதிகம் கொண்டவர்களாகவோ இவர்களில் அநேகர் இல்லையாயினும், உணர்விலும் துணிவிலும் இவர்கள் என்றும் குறைந்து போய்விடவில்லை.

“ராங்கி” கவச ஊர்திகளால் காவலரண்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டபோதும், தளராது நிலைத்து நின்று முறியடித்த இளம் போராளிகள்…… ஒற்றையாளாக நின்று காப்பரண் காத்தவர்கள்…… பக்கவாட்டுக் காவலரண் எதிரியால் கைப்பற்றப் பட்டபோதும் வாரக்கணக்கில் நிலைத்து நின்று போரிட்டவர்கள…… காயமடைந்தும் களம் விட்டகலாதவர்கள்….… காவலரணை விட்டு வெளியேற மறுத்து இறுதிவரை இலக்குச் சொல்லி இல்லாமல் போனவர்கள்….. காதலனை, காதலியை களத்தில் இழந்தபோதும் கடுகளவும் கலங்காது தம்பணி தொடர்ந்தவர்கள்……

poonakari-brigade-7.jpg

இப்படையணியின் தளபதிகளாக, பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் அவரவர் பணிகளை முன்மாதிரியாகவும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுத்துச் சென்றனர்.

அந்த வகையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தளபதிகளான லெப்.கேணல் ஈழப்பிரியன், கேணல் கீதன் மற்றும் களங்களில் போராளிகளை வழிநடத்திய லெப்.கேணல் ரகு, லெப்கேணல் ஜெரோம், லெப். கேணல் மாறன், லெப். கேணல் செஞ்சுடர், மேஜர். குமரதேவன், மேஜர். கலைச்சோழன், கப்டன். ஆதிரை, சிறப்பு நடவடிக்கை அணிக்குப் பயிற்சி அளித்த லெப்.கேணல் நிசாந்தன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் நினைவில் கொள்ளத் தக்கவர்கள்.

போர் இறுதிக்கட்டத்தை அண்மித்த காலக்கட்டத்தில் இப்படையணியின் ஆண் போராளிகள் இம்ரான் பாண்டியன் படையணியுடனும், பெண் போராளிகள் வேறு படையணிகள், பிரிவுகளுடனும் இணைக்கப்பட்டனர்.

அதன்பின்னர், திரு.வேலவனைச் சிறப்புத் தளபதியாகக் கொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் துணைத்தளபதியாக கேணல்.கீதனும் நியமிக்கப்பட்டனர்.

பூநகரிப் படையணியின் போராளிகள் வேறு படையணிகளில், பிரிவுகளில் உள்வாங்கப்பட்டபோதும் அவர்கள் தமது தனித்துவமான பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்தும் பயணித்தனர்.

poonakari-brigade-4.jpg

பூநகரிப்படையணியின் செயற்பாட்டுக் கால அளவு குறுகியதாயினும் அதன் செயற்றிறனும் வீரமும் அர்ப்பணிப்புகளும் மிக வீரியமானவை. அந்த வகையில் அதன் மாவீரர்களும் போராளிகளும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்களே.

(இந்த எழுத்துருவாக்கம் இப்படையணியின் ஒரு முழுநிறைவான செயற்பாட்டுப் பதிவல்ல. இது மிகச் சுருக்கமான ஒரு நினைவுப்பதிவே. இன்னும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் அநேகம் உண்டு.
அவற்றை தெரிந்தவர்கள், சம்பந்தப் பட்டவர்கள் பதிவிடலாம். அறியத்தரலாம். தொடர்புடைய ஒளிப்படங்கள் இருப்பின் பதிவிடலாம் அல்லது தந்துதவலாம்.)

***

குறிப்பு:- தமிழன் வன்னிமகன்

ltte-col-keethan-maj-kadalarasan-1024x68

மேஜர் கடலரசன், பூநகரிக் கட்டளைப் பணியகம்: மன்னார் அடம்பன் களமுனை!

மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ”KP 02” எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. ‘ராங்கி’ மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும்.
நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது.
”KP 02′ இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ,” என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது…

poonakari-brigade-1-708x1024-1.jpg

“நான் அங்கேதான் நிக்கிறன் K7, சரமாரியான சூட்டொலிகள்.. எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாகத் தெளிவாகக் கேட்கிறது.”
இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல்தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல; அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர்.

நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008இன் ஆரம்பப் பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது.

இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்… உறுதியான உடலமைப்பு… குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான்.

சித்திரை மதம் 2008 அதிகாலை ‘வேட்டையா முறிப்புப்’ பகுதியில் எதிரியின் முன்னேற்ற நடவடிக்கை தொடங்கியது. எமது கட்டளைத் தளபதி லெப்.கேணல் ரகு (இப்போது மாவீரர்) அவர்களால் அழைக்கப்பட்டேன்.
“சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை.. இரும்பை உடனடியாக ‘மோட்டார் சைக்கிளில்’ கொண்டு அங்கு இறக்கிவிட்டு வா,” என்று எனக்குக் கட்டளை வழங்கப்பட்டது.
அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றிக்கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். “வேகமாப்போ …! வேகமாப் போ..!” என சத்தமிட்டபடி வருகிறான்.

சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் ‘”இஞ்ச விட்டுட்டு நீ போ” என்கிறான். “நானும் உங்களோட வாறன் கடல்,” என்று நானும் அவனுடன் புறப்பட, “அங்க ‘ரோமியோ-2’ இன் இடத்தில அவசரத்துக்கு ஆக்கள் இல்ல, நீ திரும்பிப் போ, கவனம்,” என்று கூறிவிட்டு, எதிரியை மறித்துத் தாக்குவதற்காக விரைகிறான்.

நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன், எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன.

இச்சண்டையில் கடலரசனின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

இப்படித்தான் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் எதிரியை மறித்துத் தாக்குதல் நடத்துவதிலும் விடுபட்ட நிலைகளை மீட்பதிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன.

கடலைப் பொறுத்தவரை PK இனை மட்டுமல்ல, RPG எனப்படும் உந்துகணைச் செலுத்தியையும் மிகத் துல்லியமாகக் கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் எதிரியின் நகர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாய் அமைந்திருந்தத.

மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை மூண்டது. “ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ,” என்று பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை பறந்தது.

கடலரசன் அந்தச் சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகின்றது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG இனை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்…

இன்னுமொரு இலக்கு… விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடைப் பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழத் துழைத்தது!

இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப்படுகின்றன.

ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று, விழுப்புண் பலதாங்கி, வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான்.

“தம்பி டேய், நான் வீரச்சாவடஞ்சா என்னப்பத்தி நாலுவரி எழுதுவியா..”
அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது…
 

https://www.thaarakam.com/news/106254

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this