மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் அது பொலிஸ் பணி­களை அர­சியல் மய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் என அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆனால் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் முறுகல் நிலை­மை­க­ளுமே பல்­வேறு வன்­மு­றை­க­ளுக்கு கடந்த காலங்­களில் வித்­திட்­டி­ருந்­தன என்­பதை கவ­னத்திற்கொள்ள வேண்டும். 

ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அர­சி­ய­லையும் தமிழ் மக்­க­ளையும் கையறு நிலை­மைக்குள் தள்­ளி­யுள்­ளது. தனி ஒரு சமூ­கத்தின் பெரும்­பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள அவர் பெரும்­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வதே தமது தலை­யாய கடமை என அந்த விளக்க உரையில் அவர் பிர­க­ட­னப்­ப­டுத்தியுள்ளார். 

பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்­போ­துதான் மக்­களின் இறை­யாண்­மையைப் பாது­காக்க முடியும் என்ற தனது அர­சியல் சித்­தாந்த தீர்­மா­னத்தை அவர் வெளி­யிட்­டுள்ளார். அர­சாங்­கத்தின் இந்தக் கொள்கை நிலைப்­பாட்டில் நாட்டிலுள்ள சிறு­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களோ அல்­லது அவர்­களின் அர­சியல் மற்றும் வாழ்­வியல் நலன்­களோ கவ­னத்திற்கொள்­ளப்­ப­ட­வில்லை.

தனக்கு வாக்­க­ளித்த மக்கள் இந்த நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற தேவையைக் கொண்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்ட அர­சியல் ரீதி­யான நிகழ்ச்சி நிரலை அவர்கள்  நிரா­க­ரித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார். 

sambanthan___goa.jpg

எனவே தேர்­தலில் தன்னை வெற்­றி­பெறச் செய்த அந்த மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்றும் வகையில் இன­வாத அர­சி­யலை இந்த நாட்டின் அர­சி­யல்­வா­திகள் கைவிட்டு, நாட்டின் சுபீட்­சத்­துக்­காகத் தம்­முடன் ஒன்­றி­ணைந்து உழைக்க முன்­வர வேண்டும் என ஜனா­தி­பதி தனது கொள்கை விளக்க உரையில் அழைப்பு விடுத்­துள்ளார். 

சுபீட்­சத்தின் நோக்கு என்­பதே ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ­ஷவின் கொள்கை விளக்க உரையின் தலைப்பு. இலங்­கையை சுபீட்­ச­முள்ள நாடாகக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே அந்தத் தலைப்பின் வெளிப்­ப­டை­யான இலக்­காகத் தோன்­று­கின்­றது. ஆனால் அந்த சுபீட்­சத்தின் நோக்கு பெரும்­பான்மை பலத்தின் மீது கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள அர­சியல் மேலாண்மை நிலைப்­பாட்டின் ஆழ­மான அம்­சங்­க­ளையே உள்­ள­டக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றது. 

ஏமாற்­றமும் கவ­லையும்

நாட்டின் 75 வீத பெரும்­பான்­மையைக் கொண்­டுள்ள சிங்­கள மக்­களின் வாக்குப் பலத்­தினால் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள போதிலும், நாட்டின் அதிபர் என்ற வகையில் அவர் அனைத்து மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் அவர்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமய, சமூக, வாழ்­வியல் எதிர்­பார்ப்­புக்­க­ளையும், அபி­லா­ஷைக­ளையும் கவ­னத்தில் கொண்­டி­ருக்க  வேண்­டி­யது அவ­சியம். 

ஜனா­தி­பதி பதவி என்­பது முழு நாட்­டையும் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு பதவி. நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் பொறுப்­பா­னதும், அவர்­களை சுபீட்­சத்தை நோக்கி வழி­ந­டத்­து­கின்ற பாரிய அர­சியல் பொறுப்பைக் கொண்ட தலை­மை­யு­மாகும். 

யாரு­டைய வாக்குப் பலம் ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாகச் செய்­தது என்­பது தேர்தல் நிலையில் வரை­ய­றைக்கு உட்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டதன் பின்னர் அவர் முழு நாட்­டி­னதும், நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் நன்மை தீமை­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வ­ரா­கின்றார். 

ஆகவே, உள்­ளூராட்சி சபை­களைப் போன்று அல்­லது மாகாண சபையைப் போன்று குறிப்­பிட்ட ஒரு குறு­கிய பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு சாரா­ரா­கிய மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தியைப் போன்று அந்த மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே உரித்­து­டை­யவர் என்ற வரை­ய­றைக்குள் முடங்­கி­விட முடி­யாது. 

ஆனால் அர­சாங்­கத்தின் சுபீட்­சத்தின் நோக்கு என்ற தலைப்­பி­லான கொள்கை நிலைப்­பாட்டுப் பிர­க­டனம் தேசிய மட்டம் என்ற பரந்து விரிந்த எல்லைப் பரப்பைத் தொட்டு நிற்க முயற்­சிக்­க­வில்லை. அது பெரும்­பான்மை இனத்­த­வர்கள் என்ற ஓர் இனம் சார்ந்­த­தா­கவும், அந்த இனத்­த­வர்­களின் ஏக­போக பிர­தி­நி­தித்­து­வத்தின் நிலைப்­பா­டா­கவும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.  

இந்த ஜன­நா­யகப் பெரும்­பான்மை மேலா­திக்க நிலை­மை­யா­னது, நாட்டின் சிறு­பான்மை இன மக்­களை ஏமாற்­றத்­திற்கும் அவர்­களின் எதிர்­காலம் குறித்த ஆழ­மான கவ­லைக்கும் ஆளாக்­கி­யுள்­ளது. 

 

பொறுப்­பான செயற்­பா­டுகள் இடம்­பெ­ற­வில்லை

ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­முன தனது வேட்­பா­ளரை அறி­வித்து பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­போது, தேர்­தலில் அந்தக் கட்சி வெற்றி பெறு­மே­யானால் நாட்டின் நிலை­மைகள் சுபீட்­ச­மு­டை­ய­தாக இருக்­க­மாட்­டாது என்ற எதிர்­பார்ப்பும் எதிர் உணர்வு நிலை­யுமே சிறு­பான்மை இன மக்கள் மனங்­களில் மேலோங்கி இருந்­தது. ஆனால் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்கு மாறாக தேர்­தலில் பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­யது. கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றார்.

எனவே, அவர் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால், சிறு­பான்மை இன மக்­களின் நலன்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­படும் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­க­னவே இருக்­கத்தான் செய்­தது. எனவே, அவர்­க­ளு­டைய தேர்தல் கால அச்ச நிலையைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லேயே ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான நிலை­மை­களும் மாற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. 

அபி­வி­ருத்­தியே அர­சாங்­கத்தின் முழு நோக்கம் என்றும் அபி­வி­ருத்­தியின் மூலம் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் புதிய அரசு பத­வி­யேற்­றதும் தெரிவிக்கப்­பட்­டது. அர­சியல் தீர்வு, பொறுப்பு கூறல் போன்ற விட­யங்­களைக் கைவிட்டு, நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள், அதற்­கான விட­யங்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் வகையில் அதி­காரப் பகிர்வு குறித்த பேச்­சுக்­களும் இடம்­பெ­ற­மாட்­டாது என்ற நிலை­மையும் கோடி­காட்­டப்­பட்­டது. அதி­காரப் பகிர்­வுக்கு இட­மில்லை என்ற நிலைப்­பாடும் வெளி­யி­டப்­பட்­டது. அர­சியல் வழியில் பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டா­ததன் விளை­வா­கவே ஆயு­த­ மோ­தல்கள் வெடித்­தன. யுத்த நிலைமை மூன்று தசாப்­தங்­க­ளுக்குத் தொடர்ந்து நில­வி­யது. 

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்­திற்கு முடிவு கண்­டதன் பின்னர் 6 ஆண்­டுகள் அதி­கா­ரத்திலிருந்த போதிலும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண முயற்­சிக்­க­வில்லை. யுத்த மோதல்­க­ளி­னாலும், யுத்தச் சூழ்­நிலை கார­ண­மா­கவும் எழுந்த பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் அந்த அரசு மேற்­கொள்­ள­வில்லை. 

 

அதி­கூ­டிய மேலாண்மை நிலைமை

யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும். அமை­தி­யாக வாழலாம் என எதிர்­பார்த்­தி­ருந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இரா­ணுவ மேலா­திக்­கமும், நெருக்­க­டி­க­ளுமே வெகு­ம­தி­யாகக் கிடைத்­தன. யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்­பு­க்களிலிருந்து மீள்­வ­தற்கும், அழிந்து நிர்­மூ­ல­மா­கிப்­போன அவர்­க­ளு­டைய வாழ்க்கை சுபீட்­ச­ம­டை­வ­தற்கும் இத­ய­சுத்­தி­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ல்லை. 

சுய­லாப அர­சியல் நோக்கம் கொண்ட ஆட்சிப் போக்கும், பேரின நன்மை சார்ந்த வேலைத்­திட்­டங்­க­ளுமே முனைப்பு பெற்­றி­ருந்­தன. உட்­கட்­ட­மைப்பு மற்றும் புனர்­வாழ்வுச் செயற்­பா­டு­க­ளுக்­கான வேலைத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மை­களின் உறு­திப்­ப­டுத்­த­லுடன் கூடிய புன­ர­மைப்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

புனர்­வாழ்வுச் செயற்­பா­டு­களில் அடிப்­படை உரி­மை­களை இழக்­கின்ற நிலை­மையும், ஏற்­க­னவே இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி­வ­ழி­யி­லான நிவா­ர­ணத்தைப் பெற முடி­யாத நிலை­மை­யுமே நில­வின. வாழ்க்­கைக்கும் வாழ்­வ­தற்­கான உரி­மை­க­ளுக்கும் மட்­டு­மன்றி உரிமை மறுப்­பு­க­ளுக்கு எதி­ரா­கவும் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டிய நிர்ப்­பந்­த­மான வாழ்க்கை நிலை­மை­க­ளுக்கே அந்த மக்கள் ஆளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். 

யுத்­தத்தில் கிடைத்த வெற்­றியை முத­லீ­டாகக் கொண்ட ஆட்சி எதேச்­ச­தி­காரப் போக்கில் நெறி­பி­றழ்ந்­ததன் கார­ண­மா­கவே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் தொடர்ந்து பொதுத் தேர்­த­லிலும் தோல்­வி­ய­டைய நேர்ந்­தது 

ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து நாட்டில் நல்­லாட்­சியை நிலவச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சி நடத்­திய நல்­லாட்சி அர­சாங்­கமும் திசை­மாறி திக்­கு­முக்­காடி இறு­தியில் 2019 ஜனா­தி­பதி தேர்­தலில் மண்­கவ்வ நேர்ந்­தது. இந்தத் தேர்­தலின் தோல்வி என்­பது மிக மோச­மா­ன­தொரு அர­சியல் பின்­ன­டை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது. 

மறு­பு­றத்தில் இந்தத் தேர்­தலின் வெற்­றி­யா­னது வர­லாற்­றி­லேயே அதி­கூ­டிய பெரும்­பான்­மை­யான 13 லட்சம் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களைக் கொண்­ட­தாக சிறப்பு பெற்­றி­ருக்­கின்­றது. ஆனால் அந்தச் சிறப்பு புதிய ஆட்­சியின் போக்­கிலும், புதிய அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பாட்­டிலும் மிளி­ர­வில்லை. மாறாக 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த மேலாண்மை மிக்க ஆட்­சியின் தொடர்ச்­சி­யா­கவும், அதிலும்  பார்க்க அதி­கூ­டிய மேலா­திக்கத் தன்மை கொண்­ட­தா­க­வுமே தோற்றம் கொண்­டி­ருக்­கின்­றது.

 

அர­சியல் ரீதி­யான அச்ச நிலை

ஜனா­தி­பதி கோத்­த­பா­யவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் காணப்­ப­ட­வில்லை என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கரு­து­கின்­றது. அவ்­வாறு கருத வேண்­டிய நிலை­யி­லேயே ஜனா­தி­ப­தி­யி­னதும், பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ­வி­னதும் கருத்­துக்கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

அர­சியல் தீர்வு காண்­பது சாத்­தி­ய­மில்லை என்­பது மட்­டு­மல்ல. பௌத்த மேலா­திக்க ஆட்­சிக்கு அதி­கா­ர­பூர்வ அந்­தஸ்தை அளிப்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெ­று­வ­தாக வெளி­யாகி உள்ள தக­வல்­க­ளை­ய­டுத்து, தமிழ் மக்­களின் இருப்­பையே கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கு­கின்ற போக்­கையே அரசு கடைப்­பி­டிக்­கின்­றது என்ற கருத்தும் தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­பிடமிருந்து வெளிப்­பட்­டுள்­ளது.

ஒற்­றை­யாட்சி மற்றும் பௌத்த மதம் என்­ப­னவற்­றுக்கு முத­லிடம் என்ற அர­சாங்­கத்தின் இறுக்­க­மான நிலைப்­பாடு தமிழ் அர­சியல் தலை­வர்­களை நிலை­த­டு­மாறச் செய்­துள்­ளது. அர­சியல் தீர்வு காணவும் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்கள் நடத்தத் தாங்கள் தயார் நிலையில் இருப்­ப­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­வர்கள் கூறு­கின்­றார்கள். ஆனால் அர­சாங்க தரப்பில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ அத்­த­கைய இணக்­கப்­பா­டான நிலை­மைக்கு இடம்­கொ­டுக்­காத நிலைப்­பாட்­டையே வெளிப்­ப­டுத்தியுள்­ளார்கள். 

பதின்­மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­டு­வது அவ­சியம் என இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி நேர­டி­யாக வலி­யு­றுத்­திய அதே­வே­கத்தில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ அதற்­கான சாத்­தி­ய­மில்லை என்­பதை வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்தார். 

பதின்­மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­டத்தின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­ச­பை­க­ளுக்கு உரிய அதி­கா­ரங்­களை இலங்கை– இந்­திய ஒப்­பந்­தத்தின் பின்னர் ஆட்சி நடத்­திய அர­சுகள் வழங்­கவே இல்லை. சட்ட ரீதி­யாக மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை வெட்டிக் குறைப்­ப­தற்கும், இய­லு­மானால் அந்த திருத்தச் சட்டத்தையே இல்­லாமல் செய்­வ­தற்­கு­மான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் அக்­க­றை­யுடன் ஈடு­பட்­டி­ருந்­தனர். 

இத­னையே அதி­கா­ர­பூர்­வ­மாக ஜனா­தி­பதி கோத்­த­பா­யவும் பின்­பற்­றி­யுள்ளார். ஒற்றை ஆட்­சியைப் பேணிப் பாது­காப்­ப­தற்கு உறுதி பூண்­டுள்ள அவர் மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ், காணி அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பது ஆபத்­தான நிலை­மை­களை உரு­வாக்கும் என்ற கரு­து­கோளை மாற்ற முடி­யாத கொள்­கை­யாக வெளிப்­ப­டுத்தியுள்ளார்.

 

பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் இருந்­தன

முன்­னைய அர­சுகள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கும், அதி­காரப் பகிர்வு குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் உரிய இணக்­க­மான போக்கை வெளிப்­ப­டுத்தி இருந்­தன. அர­சியல் தீர்வு காணும் வகையில் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வது குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி இருந்­தன. அதற்­காக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களில் இணக்கம் காணப்­பட்ட விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் ஒரு வரு­ட­மாக நடத்­தப்­பட்ட ஒரு பேச்­சு­வார்த்தை அர­சாங்­கத்­துடன் நடத்­தப்­ப­ட­வில்லை என அதி­ர­டி­யாக மறுத்­து­ரைக்­கப்­பட்­டது.

அவ்­வாறு இருந்த போதிலும், அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடத்­தலாம். பேச்­சு­வார்த்­தை­களை நடத்த முடியும். எப்­ப­டி­யா­வது ஓர் இணக்­கப்­பாட்டை எட்ட முடியும் என்ற நிலை­மைக்­கான அர­சியல் வெளி காணப்­பட்­டது. ஆனால் ஜனா­தி­பதி கோத்­த­பாய ஆட்­சியில் அத்­த­கைய இடை­வெ­ளியைக் காண முடி­ய­வில்லை. 

ஒற்றை ஆட்­சியே இறுக்­க­மாகப் பேணப்­படும். பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையும் முதன்மை நிலை­மையும் தளர்ச்­சி­யின்றி முன்­னெ­டுக்­கப்­படும். தேசிய பாது­காப்­புக்கு அதி முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும். அபி­வி­ருத்­திக்கு முத­லிடம் கொடுக்­கப்­பட்டு நாடு அபி­வி­ருத்தி செய்­யப்­படும் என்று அர­சாங்கம் தீவி­ர­மாகக் கவனம் செலுத்­து­கின்ற விட­யங்கள் குறித்து பட்­டி­ய­லிட்டு தெளி­வாகப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் கொள்கைப் பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்ட பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது, ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவை நேரில் சந்­திக்­கின்ற வாய்ப்பைப் பெற்­றி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுடன் ஆர்­வ­மா­கவோ கரி­ச­னை­யு­டனோ கலந்­து­ரை­யா­ட­வில்லை. மாறாக தவிர்த்துச் செல்­கின்ற ஒரு போக்­கி­லேயே அவ­ரு­டைய செயற்­பாடு அமைந்­தி­ருந்­தது. 

சிறு­பான்மை தேசிய இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­களை ஒரு பொருட்­டா­கவே கரு­தாத ஒரு போக்கைப் புதிய அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தையே இது வெளிப்­ப­டுத்தி உள்­ளது. தனக்குக் கிடைத்த அந்த சந்­தர்ப்­பத்தில் சம்­பந்தன் தெரி­வித்த கருத்­துக்­களை அவர் உணர்ந்து கொண்­ட­தா­கவோ அல்­லது ஏற்­றுக்­கொண்­ட­தா­கவோ தெரி­யாத வகை­யி­லேயே நடந்து கொண்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. 

இதனை புதிய அரசு தமிழ் மக்கள் தரப்­புடன் கொண்­டுள்ள வேண்டா வெறுப்­பான போக்கின் அடை­யா­ள­மா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டதன் பின்னர், ஜனா­தி­பதி கோத்­த­பாய அர­சாங்­கத்தின் கொள்கைப் பிர­க­டன உரையில் தெரி­விக்­கின்ற கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் என்று கூறப்­பட்­டது.

தந்­தி­ரோ­பாய செயற்­பாடே தேவை

ஒற்றை ஆட்­சியை இறுக்­க­மாக வலி­யு­றுத்தி பௌத்­தத்­திற்கும் தேசிய பாது­காப்­புக்கும் முத­லிடம் வழங்­கப்­படும் என அழுத்தி உரைத்து, நாட்டின் இறை­மையைப் பாது­காப்­ப­தற்கு பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும் என்­பதை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஆணித்­த­ர­மாகத் தமது கொள்கைப் பிர­க­டன உரையில் தெரி­வித்­துள்ளார். 

ஜனா­தி­ப­தியின் இந்த நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என தெரி­வித்­துள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடு தொடர்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அடுத்­த­தாக என்ன செய்யப் போகின்­றது எத்­த­கைய நிலைப்­பாட்டை முன்­னெ­டுக்கப் போகின்றது என்­பதை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்­தவில்லை. 

பதின்­மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் அம்­சங்கள் நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றவை. அவற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவற்­றுக்­கான மாற்று நட­வ­டிக்­கைகள் குறித்து அர­சி­யல்­வா­திகள் சிந்­திக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூதுக்­கு­ழு­வி­ன­ரு­ட­னான சந்­திப்பின்போது ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப க் ஷ தெரி­வித்­துள்ளார். 

ஒற்றை ஆட்­சியின் கீழே­யா­னாலும், மாகாண சபை ஆட்சி முறை­மையின் அடிப்­ப­டையில் பிராந்­திய சுயாட்­சிக்­கான ஆட்சி முறைமை குறித்து பேச்­சுக்கள் நடத்தி ஓர் அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்­காகக் காணப்­பட்ட வாய்ப்­பையும் இல்­லாமல் செய்­வ­தா­கவே ஜனா­தி­ப­தியின் இந்த கருத்து அமைந்­துள்­ளது.

மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் அது பொலிஸ் பணி­களை அர­சியல் மய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் என அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆனால் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் பொலி­சா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் முறுகல் நிலை­மை­க­ளுமே பல்­வேறு வன்­மு­றை­க­ளுக்கு கடந்த காலங்­களில் வித்­திட்­டி­ருந்­தன என்­பதை கவ­னத்திற் கொள்ள வேண்டும். 

மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டும்­போது சட்டம் ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை சீராக மேற்­கொள்­ளவும் பொலிஸ் சேவையை அர்த்­த­முள்ள வகையில் முன்னெடுப்பதற்கான நேரடி மேற்பார்வைகளை இலகுவாகச் செய்யவும் முடியும் என்று பலரும் கருதுகின்றார்கள். 

ஆனால் இந்த விடயத்தில் அரசு கடும்போக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதுடன் இது போன்ற விடயங்களில் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது. 

ஆகவே பல வழிகளிலும் இறுக்கமான ஒத்திசையாத நிலைப்பாட்டையும் போக்கையும் கடைப்பிடித்து, சிறுபான்மை இன மக்களை கருத்திற் கொள்ளாத அரசாங்கத்துடன் எந்த வகையில் தமிழ்த்தரப்பு அணுகு முறைகளை மேற்கொள்ளப் போகின்றது என்று தெரியவில்லை. 

அதேவேளை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள நெருக்கடியான அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்பினர் தங்களுக்குள் கூடி ஆராய்வதற்கும் நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்துச் சிந்திப்பதற்கும் இதுவரையிலும் முற்படவில்லை.

ஜனாதிபதி பதவியை ஏற்ற தினத்தன்றே சிறுபான்மை இன மக்களைப் புறமொதுக்குகின்ற போக்கு குறித்த கருத்துக்களை ஜனாதிபதி வெளியிட்டபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவருடைய பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையின் பின்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை கடும் போக்கில் அமைந்துள்ளதையடுத்து தமிழ்த்தரப்பு அரசியல் ரீதியாக தனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்திருப்பதையே காண முடிகின்றது. 

இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு உரிய முறையில் முகம் கொடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து தீர்க்கமாகச் சிந்திக்கவும் தந்திரோபாய ரீதியில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் முற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 

பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தரப்பினர் துணிவோடும் தெளிந்த சிந்தனையோடும் நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து வலுவான நிலையில் செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசியம். கட்டாயத் தேவையும்கூட. 

பி.மாணிக்­க­வா­சகம்

https://www.virakesari.lk/article/72812