Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜனவரி 09

சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும்.   

எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து விடுவதுண்டு. இது, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.   

இவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்தவர்களை, வரலாறு மிக மோசமாகத் தண்டித்துள்ளது; சில சமயங்களில் வஞ்சித்தும் உள்ளது.  

கடந்த வாரம், அமெரிக்கா ‘ட்ரோன்’ தாக்குதல்களின் மூலம், ஈரானின் இராணுவத் தளபதி குவாசிம் சொலெய்மானியை கொலை செய்தது.  இத்தாக்குதல்கள், ஈராக்கின் தலைநகரில் அமைந்துள்ள பக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே நடத்தப்பட்டது. அமெரிக்க - ஈரான் முறுகல் நிலையில், தவிர்க்கவியலாத மோதலை, இக்கொலைகள் சாத்தியமாக்கி உள்ளன.  

image_074da85b28.jpgஈரானிய அரசியலிலும் சமூகத்திலும் அதன் மீயுயர் தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்தபடியாக, மிகவும் செல்வாக்கும் மரியாதையும் கொண்டிருந்த சொலெய்மானியின் கொலை, ஈரானை மட்டுமன்றி, முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

இந்தக் கொலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிகுந்த பெருமிதத்துடன் மேற்கொண்டார். அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி, வீழ்த்தப்பட்டது போன்றதொரு பாவனையை, அவர் உருவாக்கினார்.   

இன்னொரு வகையில், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோதும், ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட போதும், எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதிகள் அவற்றைப் பெருமிதத்துடன் அறிவித்தார்களோ, அதேபோலவே குவாசிம் சொலெய்மானியின் கொலையும் அறிவிக்கப்பட்டது.   

ஒசாமா, அல்-பக்காதி போன்ற பயங்கரவாதிகள் போலல்ல சொலெய்மானி. இவர், உலக நாடொன்றின் இராணுவத்தின் தளபதி. இவர், இன்னொரு நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, கொல்லப்பட்டிருக்கிறார். இவை, இக்கொலையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.   

ஒரு கொலையும் அதன் கதையும்  

இந்தப் பத்தியில், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி, ‘2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்’ என்ற கட்டுரையில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும், அயலுறவுக் கொள்கைகளுக்கான முதன்மைச் சஞ்சிகையான ‘Foreign Policy’ இல், 2019ஆம் ஆண்டில், உலகின் முக்கியமான 100 சிந்தனையாளர்களில், பாதுகாப்புக் காவலர்கள் பிரிவில், முதலாவது இடம் குவாசிம் சொலெய்மானிக்கு வழங்கப்பட்டு இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அவரே, கடந்த வெள்ளிக்கிழமை (03) கொல்லப்பட்டிருக்கிறார்.   

இந்தக் கொலையைத் “தற்காப்புக்கான தாக்குதல்” என்று, அமெரிக்கா சொல்லிக் கொண்டாலும், இது கொலை என்பதில், எந்தவொரு சந்தேகமும் இல்லை. சர்வதேசச் சட்டங்களை, அமெரிக்கா மீறி இருக்கிறது.   

ஈராக்கின் அனுமதியின்றி, அமெரிக்க விமானங்கள், ஈராக்கிய வான்பரப்பைப் பயன்படுத்தி உள்ளன. ஈராக்கின் அனுமதி இன்றியே, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  

இந்தத் தாக்குதல்களுக்குக் கட்டாயம் விடையளிப்பதாக, ஈரான் தெரிவித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அல்-அசாத், இர்பிலில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது, கண்டம்விட்டுக் கண்டம் பாயும் குண்டுத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. தாக்குதல்  இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.   

image_47a283232b.jpg

ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், மிக விரைவில் அதற்கான எதிர்வினை இருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேலாக, “ஈரானின் முக்கியமான 52 இடங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும்” எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.   

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஈரானை இந்தப் போருக்குள் தள்ளுவதற்கு, அமெரிக்கா தொடர்ச்சியாக முயன்று வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து, அமெரிக்கா வெளியேறியது; ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது; கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகளை நடத்தியது.  

 இன்று, இதன் அடுத்த கட்டமாக, ஈரானின் இராணுவத் தளபதியைக் கொலை செய்துள்ளது. ஈரானை ஒரு போருக்குள் தள்ளுவதன் ஊடாக, அதைப் பலமிழக்கச் செய்வதனூடாக, மத்திய கிழக்கில், தனது ஆதிக்கத்தை முழுமையாகத் தக்கவைக்க, அமெரிக்கா முயல்கிறது.  

கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஈரானின் செல்வாக்கு, மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, சிரிய யுத்தத்தில், அமெரிக்க - நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக, சிரிய - ரஷ்ய - ஈரான் - ஹிஸ்புல்லா ஆகியவற்றின் இணைந்த கூட்டணி, வலுவான எதிர்ச் சக்தியாக மாற்றம் அடைந்துள்ளது.   

அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கிய, பிரதான சிந்தனையாளரும் செயற்பாட்டாளரும் ஆகிய குவாசிம் சொலெய்மானியின் கொலை, மிகப்பெரிய சவாலை இந்த அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது, நீண்டு வளரும் முரண்பாட்டுக்கான தொடக்கப்புள்ளி எனக் கருத முடியும்.   

இந்தக் கொலையை நிகழ்த்தியதன் மூலம், இரண்டு விடயங்களை அமெரிக்கா செய்துள்ளது.   
முதலாவது, ஈராக்கை விட, நில அளவில் நான்கு மடங்கு பெரியதும் இரண்டு மடங்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் மீது, போர் ஒன்றை ஏவியுள்ளது.   

இரண்டாவது, 2003இல் ஈராக்கை ஆக்கிரமித்ததன் மூலம், அமெரிக்கா அடைய விரும்பிய பலன்களை, அடையவில்லை என்பதையும் இது காட்டுகிறது.   

குவாசிம் சொலெய்மானி, ஈரானின் செல்வாக்கை மத்திய கிழக்கில் அதிகரிப்பதில், முக்கிய பங்காற்றி இருக்கிறார். அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதற்கும் இவரின் பங்களிப்பு முக்கியமானது. சிரிய யுத்தத்தில், அமெரிக்காவில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கான காரணங்களில், சொலெய்மானி முக்கிய பாத்திரம் வகித்தார்.  

ஈரானை ஆத்திரமூட்டுவதன் மூலம், வலிந்து போருக்கு இழுக்கும் அமெரிக்காவின் தந்திர வலைக்குள் சிக்காமல், ஈரானைத் தொடர்ச்சியாகத் தடுத்து வந்ததில், சொலெய்மானின் செயற்பாடுகள் முக்கியமானவை.  இன்றுவரை, ஈரான் எந்தவொரு போரிலும் சிக்கிச் சீரழியாமல் இருப்பதற்கு, குவாசிம் சொலெய்மானின் தலைமைத்துவம் முக்கியமானது. அவரால் பழக்கப்பட்ட, தெளிந்த மூலோபாயச் சிந்தனைகள், தொடர்ந்தும் ஈரானில், அவரது கொள்கைகளைத் தீர்மானிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.   

இந்தக் கொலையின் மூலம், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. எந்தவோர் அமெரிக்கப் படை வீரனோ, அமெரிக்க இராஜதந்திரியோ, அமெரிக்கச் சுற்றுலாப் பயணியோ சுதந்திரமாக உள்ளார் எனக் கருத முடியாத நிலை, மத்திய கிழக்கு எங்கும் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், தன்னையும் தனது மக்களையும் தற்காத்துக்கொள்ள, ஏராளமான பணத்தையும் வளங்களையும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில், அமெரிக்கா இருக்கிறது.   

ஈரான் தனது பதிலை, எந்த வகையிலும் எந்த இடத்திலும் எப்போதும் செய்ய முடியும் என்பதை, செவ்வாய்க்கிழமை (07) தாக்குதல் நிரூபித்துள்ளது. இது, அமெரிக்க இராணுவத்தில் மிகப்பெரிய நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த அபாயம், அமெரிக்காவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான ஏனைய நாடுகளுக்கும் உண்டு.   

image_ec48251868.jpg

விரும்பியோ விரும்பாமலோ, அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதன் மூலம், குவாசிம் சொலெய்மானியின் கொலைக்கு, அவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆகிறார்கள். இது, மத்திய கிழக்கில், புதிய அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தி உள்ளது.   

இந்தக் கொலை, பொருளாதாரத்திலும் உலகளாவிய ரீதியிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.  குவாசிம் சொலெய்மானி கொலையைத் தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகள், சரிவை அடைந்தன; சர்வதேச சந்தையில், எண்ணெய் விலை அதிகரித்தது; போருக்கான தொடக்கமாக, இதை அனைவரும் காண்கிறார்கள்.   

முடிவின் தொடக்கம்: மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் அமெரிக்கச் செல்வாக்கு  

குவாசிம் சொலெய்மானி கொலையைத் தொடர்ந்து, “நேரடியான இராணுவ மோதலில் ஈடுபடத் தமக்கு விருப்பமில்லை” என, சுவிட்சலாந்து தூதுவராலயம் மூலம், ஈரானுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம், தனது செயலுக்கான விலையைக் கொடுக்காமல், தப்பிப் பிழைக்க அமெரிக்கா முனைந்தது.   

ஆனால், “அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்து விட்டன; சொலெய்மானி கொலைக்கு, நிச்சயம் தண்டனை உண்டு” என ஈரான் பதிலளித்துள்ளது.   

இவ்வளவு காலமும், ஈரான் அவசரப்பட்டது கிடையாது. ஈரானுக்கு அவசரப்பட வேண்டிய தேவையும் இல்லை. களங்களும் காலமும் ஈரானுக்கு மிகவும் சாதகமாகவே உள்ளன.   

இந்தத் தாக்குதல்கள், ஈராக்கிலிருந்து மட்டுமல்ல; மத்திய கிழக்கில் இருந்தும், அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தமக்குள் பொதிந்து வைத்திருக்கின்றன.  இன்னொரு வகையில் சொல்வதானால், அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, மத்திய கிழக்கின் மீது, செல்வாக்குச் செலுத்தி வந்த தனது ஆதிக்கத்தை, முழுவதுமாக இழப்பதற்கான தொடக்கப் புள்ளியை, இப்போது இட்டுள்ளது.   

இப்போது, ஈரான் - அமெரிக்க அதிகாரப் போட்டியில், புதிய மய்யமாக, ஈராக் உருவாகியுள்ளது. ஈரானில் இனிவரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகள், ஈராக்கின் எதிர்காலத்தை மட்டுமன்றி, மத்திய கிழக்கின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வல்லவை.   

ஒரு தாக்குதலை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை அது கொன்றுள்ளது. சர்வதேச சட்டங்களைத் துச்சமென நினைத்து உள்ளது.   

இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில், ஐக்கிய நாடுகளில் உரையாற்றுவதற்கு முனைந்த, ஈரானின் வெளியுறவு அமைச்சருக்கு விசாவை, அமெரிக்கா மறுத்துள்ளது. இது ஒருபுறம் சட்டவிரோதமானது; இன்னொருபுறம், ஐக்கிய நாடுகள் சபையையே கேள்விக்கு உட்படுத்துகிறது.   

சொலெய்மானினின் கொலையின் பின், ஒரு பதற்றத்தை மத்திய கிழக்கில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இப்போது வேறு வழியின்றி, பாதுகாப்பான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதன் தாக்கங்கள், உலகெங்கும் உணரப்படும்.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரு-கொலை-ஒரு-கதை-ஒரு-முடிவின்-தொடக்கம்/91-243755

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.