Jump to content

நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம்

கே. சஞ்சயன்   / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14


முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.  

அதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன.  

image_566067a106.jpg

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத் தரப்பு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டார்கள்.  

எனினும், சம்பிக்க ரணவக்கவின் கைது, புதிய அரசாங்கத்தின் மீது பெரும்பான்மைச் சிங்கள பௌத்த மக்கள், கொண்டிருந்த நம்பிக்கையைத் தளரச் செய்து விட்டது.  

அதற்குப் பின்னர், ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பிக்க ரணவக்க விடயத்தில், கையாண்டது போலல்லாமல், சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவர் கைது செய்யப்பட்டார்.  

ஆனால், ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திட்டமிட்டது போல, அவரைச் சிறைக்குக் கொண்டு போய், கம்பி எண்ண வைக்க முடியவில்லை.

image_7a863a06e1.jpg 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரைக் கெடுக்கும் சூழ்ச்சியை, ராஜித சேனாரத்ன  மேற்கொண்டார் என்று, சில அமைச்சர்கள் நியாயப்படுத்தி இருந்தனர்.   

அடுத்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிவைக்கப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடனான தொலைபேசி உரையாடல்ப் பதிவைத் தேடிப்போன பொலிஸார், அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத்துப்பாக்கியை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டி, அவரைக் கைது செய்தனர்.  

ஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.  

மூன்று முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படும் அளவுக்குப் பாரிய கொலைகளையோ, கொள்ளைகளையோ செய்திருக்கவில்லை.  

அரசாங்கத்தின் பழியுணர்வு தான், இவர்களை நோக்கிப் பொலிஸாரைத் திருப்பி விட்டதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகள், வலுவாக எழுந்திருக்கின்றன.  

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போதும், ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்ட போதும், அதைப் பல அமைச்சர்கள் நியாயப்படுத்திய போதும், ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது, அதை நியாயப்படுத்தியவர்கள் மிகமிகக் குறைவு.  

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதும், இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொலிஸாரின் நடவடிக்கைகளில், தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.  

image_d22ad4b032.jpg

ஜனாதிபதியும் பிரதமரும், சரியான வழியில் சென்றாலும், பொலிஸார் அவ்வாறு செயற்படவில்லை என்று அவர், ருவிட்டரில் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.  

மற்றோர் அமைச்சரான ஷெஹான் சேனசிங்க, பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, அவப்பெயரை ஏற்படுத்துகின்ற ஏதோவொரு சூழ்ச்சி இருக்கிறது என்று பொருமியிருக்கிறார்.  

“பொலிஸ் நிர்வாகத்தில், அரசாங்கம் தலையிடவில்லை. சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்திருக்கிறது” என்று கூறியிருக்கும் அவர், “இந்தக் கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் அல்ல” என்றும் தெரிவித்திருக்கிறார்.  

“இதற்குப் பின்னால், யாரோ ஒருவர் இருக்கிறார்” என்று கூறி, தங்களை மீறி நடக்கின்ற விடயங்களாக, இவற்றைக் காண்பிக்க முனைந்திருக்கிறார் செஹான் செனசிங்க.  

பொது ஜன பெரமுனவில் உள்ள, மிகத் தீவிரமான ராஜபக்‌ஷ விசுவாசிகளில் செஹான் சேனசிங்கவும் காஞ்சன விஜேசேகரவும் முக்கியமானவர்கள்.  

அவர்களுக்கு, இப்போதைய நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது போலக் காண்பித்துக் கொள்ள முனைந்தாலும், தங்களின் அரசாங்கம் மீது, பழி வரப் போகிறது என்ற அச்சமே, அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதனால்தான், பழியைப் பொலிஸ் மீது போட முனைந்திருக்கிறார்கள்.  

“முன்னைய அரசாங்கம், பொலிஸ் சேவையை, அரசியல் மயப்படுத்தி விட்டது. பொலிஸார் யாருடைய கட்டளைப்படி நடக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றும் செஹான் சேனசிங்க கூறியிருப்பது, வேடிக்கையின் உச்சம். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அலகாகவே, பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் உத்தரவை, மீறி நடக்க முடியாது. அதுவும் ஆட்சியில் இருப்பது, மைத்திரிபால சிறிசேன அல்ல; கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

தன்னால் மட்டுமே, நாட்டில் உறுதியான ஆட்சியைத் தர முடியும் என்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்றும் மேடைகளில் இறுமாப்புடன் கூறி, ஆட்சியைப் பிடித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார்.  

அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் உள்ளது என்று கூறினால், அந்த அசிங்கம், யாருக்குச் சென்று சேரும்?  

தன்னால் மட்டுமே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய ராஜபக்‌ஷ வாக்குறுதி கொடுத்திருக்கும் நிலையில், பொலிஸார் தம் விருப்பப்படி செயற்படுகிறார்கள் என்றால், அது யாருடைய இயலாமையாகக் கொள்ளப்படும்?  

ஒருவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தால், அதிகாரமற்ற நிலையில் ஜனாதிபதி இருக்கிறார்; பொலிஸாரைக் கூட, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது; கட்டு மீறி அவர்களே செயற்படுகிறார்கள் என்ற மாயையை, சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு, அரசாங்கம் முனைகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது.  

அவ்வாறான ஓர் எண்ணத்தை, நாட்டு மக்களின் மனத்தில் பதியச் செய்வதன் மூலம், அரசமைப்பைத் திருத்தும் தமது திட்டத்துக்கு, அங்கிகாரம் பெறுவதற்கு அரசாங்கம் முற்படவும் கூடும்.  

அதேவேளை, பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தம் விருப்பப்படி செயற்படுகிறது என்றால், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, ஜனாதிபதியின் பொறுப்பேயாகும்.  

ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட, எந்தவோர் அமைச்சுப் பதவியையும் வைத்திருக்க முடியாது.  

ஆனாலும், பொலிஸ் திணைக்களத்தை உள்ளடக்கிய, பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருப்பது, யாருடைய தவறு?  

ஏனையவர்களின் மீது, நம்பிக்கை வைக்காவிடினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமோ, அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவிடமோ பாதுகாப்பு அமைச்சை முழுமையாக ஒப்படைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் இருப்பது தான் அரசியல் சூழ்ச்சி.  

பொலிஸ் திணைக்களத்தை, 2013இல் செய்தது போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் ஒப்படைத்திருக்கலாம்.  

அதைவிட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவே இருக்கிறார். ஆக, பொலிஸ் திணைக்களம், தாம் விரும்பியபடியே செயற்படுகிறது; அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்ற வாதமோ, குற்றச்சாட்டோ அர்த்தமற்றது.  இது, பழியை வேறோருவரின் மீது போடுவதற்கான முயற்சி. அடுத்தடுத்து, முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ததால், இந்த அரசாங்கம், பழியுணர்ச்சி கொண்ட ஓர் அரசாங்கம் என்ற கருத்து, மேலோங்கி விட்டது.  

பாரிய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் எல்லாம், சுதந்திரமாக வெளியில் உலாவுகின்ற நிலையில், சிறிய விவகாரங்களை வைத்து, முன்னாள் அமைச்சர்கள் வேட்டையாடப்பட்டது, அரசாங்கத்துக்குக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இவ்வாறான நிலையில் தான், பொலிஸ் தரப்பின் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டுத் தப்பிக்க முனைகிறது, தற்போதைய அரசாங்கம்.  

அதையும் மீறி, இதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலையில், தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.  

அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டும், பொலிஸ் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டும், மக்களைப் பொய்யான திசைக்குத் திருப்ப முடியாது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவின் மீது, சிங்கள பௌத்த மக்கள், பெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைத் தற்போதைய அரசாங்கம், நாசமாக்கும் வகையில் தான் செயற்படுகிறது.  

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும் நாள் எப்போது என்று, அமைச்சர்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறானதொரு நிலையில், அரசியல் பழிவாங்கல்களால் அரசாங்கம் ஏறிய வேகத்திலேயே, கீழே சரியத் தொடங்கி இருக்கிறது.  

இது ஐ.தே.க தரப்புக்கு நம்பிக்கையூட்டுகிறது. அதனால் தான், அவர்கள் எப்படியும் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையை-நாசமாக்கும்-அரசாங்கம்/91-243818

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.