• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

எஸ்.பொவின் 'சடங்கு'

Recommended Posts

எஸ்.பொவின் 'சடங்கு'

 இளங்கோ-டிசே

1,

ஸ்.பொ எனப்படுகின்ற எஸ்.பொன்னுத்துரையின் புனைவுகளில் பரவலாக வாசிக்கப்பட்ட நாவலாக 'சடங்கே' இருக்கக்கூடும். 1966ல் சுதந்திரன் பத்திரிகையில் தொடராக வந்து, பின்னர் சுதந்திரனால் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அன்றையகாலத்தில் ஒரு வருடத்துக்குள்ளேயே சடங்கு, 2000 பிரதிகள் விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியாவில் ராணி வாராந்திரி வெளியீடு சடங்கை 80களின் தொடக்கத்தில் மலிவு விற்பனையில் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றது. இந்தவகையில் இலங்கையில் மட்டுமில்லை, இந்தியாவிலும் 'சடங்கு' பெருமளவு வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.

 

sp.jpg

சடங்கை எஸ்.பொ எழுதத்தொடங்கியது தற்செயலான நிகழ்வு. கொழும்பில் 1966ல் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில்,  எஸ்.பொ அவரது நற்போக்கு இலக்கிய அறிக்கையை வாசித்துவிட்டு வெளியே வந்து நிற்கின்றார். அப்போது 'சுதந்திரன்' பத்திரிகையில் இணையாசிரியராக இருப்பவர் தமிழரசுக்கட்சி சார்பாக வெளிவந்து கொண்டிருந்த சுதந்திரனில் எழுதக் கேட்கின்றார். எஸ்.பொவோ 'உங்களுடைய கட்சி அரசியலை ஏற்றுக்கொள்ளாதவன் நான். கிழக்கிலங்கையில் உங்களுடைய கட்சியின் enemy number one என்று கருதப்படுபவன்' என்று அந்த அழைப்பை மறுக்கின்றார். சுதந்திரனின் இணையாசிரியரோ 'கட்சி அரசியலுக்கு அப்பால், நீங்கள் இலக்கியத்தின்பால் கொண்ட அக்கறை எமக்குப் பிடித்தமானது. தரமான இலக்கியத்தை வாசகர்களுக்கு நாங்களும் கொடுக்கவேண்டும்' என்று விடாது கேட்டுக்கொண்டதால் எஸ்.பொ, சுதந்திரன் பத்திரிகையில் தொடராக எழுதத் தொடங்கியதே சடங்காகும்.

சடங்கில் கொழும்பில் வேலை செய்யும் செந்தில்நாதன் யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை யாழ்தேவியில் போய் புதன்கிழமை திரும்பவும் கொழும்புக்கு வரும்வரை நடக்கும் சம்பவங்களே கதையாகின்றது. நாவலின் சரடாக பாலியல் இச்சை இருந்தாலும், எஸ்.பொ அதனூடாக யாழ்ப்பாணத்தின் கிடுகுவேலிக்கலாசாரத்தையும், அசலான யாழ்ப்பாணியின் முகத்தையும் செந்தில்நாதனூடாகக் கொண்டுவருகின்றார்.

யாழ்ப்பாணிகள் சொத்துச்சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக, கலாசாரத்தைக் காக்கின்றோம் என்று சொல்லியபடி சாதியில் இறுக்கமுடையவர்களாக, வெளியிடங்களுக்கு அவ்வளவு பயணஞ்செய்யாமலே எல்லாந் தெரிந்ததுமாதிரி உலக ஞானம் பேசுகின்றவர்களாக இருப்பதைச் சடங்கில் நாம் பார்க்கின்றோம். இவ்வாறு இருப்பது மட்டுமில்லை, இவ்வாறாக வாழ்வதுதான் பெருமைக்குரிய விடயமாகவும் நினைக்கின்ற யாழ்ப்பாணிகள் அன்று மட்டுமில்லை, சடங்கு எழுதப்பட்டு 50 வருடங்களான பின்,  இன்றுங்கூட அவ்வளவு மாறாமலே இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

2.

வெள்ளிக்கிழமை லோன் ஒன்று செந்தில்வேலுக்குக் கிடைத்துவிட, அதைப் பணமாக்கியபின், லோன் கிடைக்க வழிசெய்த நண்பரோடு சேர்ந்து ஒரு ஹொட்டலில் கொஞ்சம்  'பாவித்துவிட்டு', இப்படியே ரூமுக்குள் போனால் மற்ற நண்பர்கள் தன்னைக் குடிகாரன் என்று நினைத்துவிட்டு, 'வளர்ந்தோர்க்கு மட்டுமான' படத்தை சவோயில் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்புகின்றார். தான் குடிக்கவும் வேண்டும், ஆனால் பிறருக்குத் தெரிந்தால் மதிப்பிழந்துபோய் விடுமென்றும் நினைக்கின்ற செந்தில்நாதனை தொடக்கத்தில் விவரிக்கும்போதே நமக்கு எஸ்.பொ ஒரு அசலான யாழ்ப்பாணியை அறிமுகப்படுத்தி விடுகின்றார்.

மாகோவில் ரெயினில் ஏறும், மட்டக்களப்பில் இருந்து வரும் ஒரு பெண்ணோடு செந்தில்நாதன் பேச்சுக் கொடுக்கின்றார். அந்தப் பெண் மட்டக்களப்பைச் சேர்ந்தவர், அவரை மணம் புரிந்த ஆணோ யாழ்ப்பாணத்தவர். இதை அறிந்தவுடன் செந்தில்நாதன், அந்த ஆணைப் பற்றி 'சரிதான். கூழ்ப்பானைக்கே போய் விழுந்த ஞாயந்தான். அவன் குடிவெறியிலைதான் இவளிலை மாட்டியிருப்பான்' என்று வழக்கமான யாழ்ப்பாணிகளைப் போல நினைத்துக்கொள்கின்றார்.

இப்படி அறிமுகமற்ற பெண்ணோடு அவர் ரெயினில் பேச்சுக் கொடுத்தாலும், அவர் தன் மனைவி அன்னலட்சுமி எந்த ஆடவனுடனும் பேசுவதை விரும்புவதில்லை.
செந்தில்நாதன் ஒருமுறை அன்னலட்சுமி இப்படியான ரெயின் பயணத்தில், யாரோ அந்நியன் கேட்ட கேள்விக்குத்  தன்னை முந்திப் பதில் கொடுத்ததால், அன்னலட்சுமியோடு கிட்டத்தட்ட 2 நாள்கள் பேசாத கனவானும் ஆவார். 'இனி ஒருநாளும் இந்தப் பிழையைச் செய்யமாட்டேன்' என்று அன்னலட்சுமி பல மன்றாட்டங்களைச் சமர்ப்பித்து கண்ணீர் சிந்திக் கறையைக் கழுவியபின்னர்தான் செந்தில்நாதன் மன்னிப்பை அருளியுமிருக்கின்றார்.

செந்தில்நாதன், அவரது மனைவி அன்னலட்சுமி, அன்னலட்சுமியின் தாயார் செல்லப்பாக்கிய ஆச்சி, அவர்களின் ஐந்து பிள்ளைகள்தான் உள்ளடக்கியதுதான் செந்தில்நாதனின் உலகம். இந்த நாவலில் பாலியல் விழைவு ஒரு முக்கிய கண்ணி என்றாலும், எஸ்.பொ கூறும் பாலியல் இச்சை புதிய தம்பதிகளுக்கு வரும் பாலியல் ஆசை அல்ல. ஐந்து பிள்ளைகளுக்கும் பின்னாலும் இன்னமும் பெருகிக்கொண்டிருக்கும் பாலியல் விருப்பைத்தான் எஸ்.பொ அவ்வளவு நுட்பமாக வாசிக்கும் நமக்குக் காட்டுகின்றார்.

நம் தமிழ்சமூகத்தில் பாலியல் இச்சை என்பதே பிள்ளைகள் பெற்றவுடன் எல்லாத் தூண்டல் துலங்கல்களும் முற்றுப்பெற்றது போன்ற உணர்வுடன் இணைகளுக்கு இடையில் இருக்கையில், எஸ்.பொ, ஐந்து பிள்ளைகளைப் பெற்றபின்னமும் வற்றாத காமம் மீதான விருப்பைக் காட்டுவதுதான் இங்கு  அழகானது.
சடங்கில் எஸ்.பொ, ஐந்து பிள்ளைகளைப் பெற்ற ஒரு தம்பதியை முக்கிய பாத்திரங்களாக கொண்டு எழுதியதோடல்லாது, அவர்களுக்கு இன்னும் பெருகிக்கொண்டிருக்கும் அன்பையும், அந்த அன்புக்காக செய்கின்ற சில விட்டுக்கொடுப்புக்களையும் கதையின் போக்கில் சொல்லிப்போவதால் இன்றும் சடங்கை வாசிக்கச் சுவாரசியமாக இருக்கின்றது.

செல்லப்பாக்கிய ஆச்சிக்கும், மருமகன் செந்தில்நாதனுக்கும் இருக்கும் உறவு அசல் யாழ்ப்பாணிய உறவுதான். மருமகனிடம் எதையும் செல்லப்பாக்கிய ஆச்சி நேரடியாகச் சொல்வதில்லை. மகளுக்குச் சொல்வதுபோலவே, அவருக்குக் கட்டளைகள் இடப்படுகின்றன. சிலவேளை அன்னலட்சுமி அதை செந்தில்வேலுக்கு இன்னொருமுறை சொல்லிக் கடத்துகின்றார். சிலவற்றை அவரே நேரடியாகக் கேட்டு ஒன்றுமே மறுத்துப் பேசாது மாமியின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகின்றார்.

3.

மனைவி மீதான காதல், மாமி மீது மரியாதை போன்றவை யாழ்ப்பாணிகளுக்கும் இருக்கின்றதென்று காட்டும் அதே எஸ்.பொதான் யாழ்ப்பாணிகளின் அசல் முகத்தைக் காட்டவும் பின்னிற்கவில்லை. யாழ்ப்பாண ஆதிக்க சாதியில் பிறந்த செந்தில்நாதனின் வார்த்தைகளில் பள்ளன், பறையன், நளவன் என்பவை சாதாரணமாகத் திட்டும்போதெல்லாம் வந்துவிடுகின்றது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு வேலியடைக்கும் மாணிக்கத்துக்கு கோப்பி கொடுக்கும்போது சிரட்டையில் கோப்பி கொடுக்கும் யாழ்ப்பாணிகளின் 'தனித்துவம்' காட்டப்படுகின்றது.  அப்படியே இதை விட்டுவிட்டுப் போயிருந்தால் என் ஆசானாக எஸ்.பொவை ஏற்றுக்கொள்ளத் தயங்கியிருப்பேன். ஆனால் மாணிக்கம் எனது உடலுக்குக் கோப்பி கேடு என்று மறுக்கின்றார். கிளாஸில் கோப்பி குடித்தபடி இதைப் பார்க்கும் செந்தில்நாதன், மாணிக்கத்துக்கு உடல்நலப்பிரச்சினையல்ல, சிரட்டையில் கொடுப்பதுதான் பிரச்சினை என்று விளங்கிக்கொள்கின்றார்.

கொழும்பில் இருந்து வெளியுலகைப் பார்த்த செந்தில்நாதன் இதில் குறுக்கிடுவார் என்றுதானே நினைக்கின்றோம். இல்லை. செந்தில்நாதன் அசல் யாழ்ப்பாணியேதான். அவர், 'கொழும்பில்தான் எந்த வேறுபாடுகளும் இல்லாது ஒரே மேசையில் சாப்பிடும் இந்தச் சாதிகள் இங்கேயாவது இப்படியிருக்கட்டும்' என்று தானொரு அசலான சாதிமானை என்பதை நிரூபிக்கின்றார். அங்கு நிற்பதுதான் எஸ்.பொ.
 

en-vrac-i04%2B%25281%2529.jpg

எஸ்.பொ ஆளுமை விகசிக்கின்ற இன்னொரு இடம். வாசிகசாலையில் பத்திரிகைகளை வாசித்தபடி பலதும் பத்துமாக செந்தில்நாதன் ஊர்க்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்ற இடம். அப்போது எஸ்.பொ சடங்கை பத்திரிகையில் எழுதுகின்றார் என்று ஒரு பேச்சு வருகின்றது. அப்போதும் செந்தில்நாதனுடைய யாழ்ப்பாண மூளையை எஸ்.பொ அழகாகச் சொல்லிவிடுகின்றார்.
செந்தில்நாதன் எந்தக் கதைகளையும் வாசிப்பதில்லை. 'உதுகள் மினக்கெட்ட வேலையள்' என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதேசமயம் மற்றவர்கள் கதைப்பதை வைத்து- பிறர் சிந்திய கருத்துக்களைக் கேள்வி ஞானமாக வைத்து- எல்லாந் தெரிந்துமாதிரியாகப் பேசிவிடுவார். இப்போதுகூட இந்த சமூகவலைத்தளங்களில் நாம் நிறைய செந்தில்நாதன்களை இப்படிப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் அல்லவா?

செந்தில்நாதன் எஸ்.பொ 'சடங்கு' கதையை தொடராக எழுதுகின்றார் என அதை வாசிக்கும் ஒருவர் சொல்லும்போது செந்தில்நாதன் என்ன சொல்கின்றாரெனப் பாருங்கள்:
"உந்தப் பொன்னுத்துரை ஆர் தெரியுமோ? உந்தச் சாதியளும் இப்ப எழுத்தாளங்கள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறாங்கள். ஒருநாள்தான் ஆளைக் கண்டிருக்கிறன். அதுகும் றெயிலுக்கை. தலை கெட்ட வெறி. சத்தியும் எடுத்துப் போட்டு பேப்பரை விரிச்சுக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான். உவங்கள் முதலிலை தங்களைத் தாங்கள் திருத்த வேண்டும். குடிச்சு வெறிச்சுத் திரியிற உவங்கள் ஊரைத் திருத்த எழுதினமோ?" என்கின்றார்.

இப்போது வாசிக்கும் நமக்கும், தொடக்கக் காட்சியில் மட்டக்களப்புப் பெண்ணொடு ஏறும், காலையிலே பார் பக்கம் ஒதுங்கிய அந்த ஆணும் எஸ்.பொதான் என்று விளங்கின்றது. ரெயினில் அந்தப் பெண்ணிடம் 'உங்கள் கணவன் சரியாகக் குடிக்கின்றார் போல அவரின் கண்களைப் பார்க்கும்போதே தெரிகிறது' என செந்தில்நாதன் சொல்லும்போது, 'எனக்கும் அந்தக் கவலை இருக்கிறது' என்றுதான் அந்தப் பெண் முதலில் கூறுகின்றார். பின்னர் தொடர்ந்து செந்தில்நாதன், யாழ்ப்பாணத்துக்காரனை 'மடக்கிய' மட்டக்களப்புக்காரி ' என்ற எரிச்சலில் அவரின் குடிகாரக் கணவனைப் பற்றிப் பேசும்போது, அந்த பெண் எனது கணவர் சாதாரணமானவர் அல்ல, அவர் trained graduate என்று சொல்லி கணவரை விட்டுக்கொடுக்காது செந்தில்வேலின் வாயை அடைத்தும் விடுகின்றார்.

எஸ்.பொ தன்னைப் பற்றிய பாத்திரத்தையும் சடங்கில் நுழைப்பதன் மூலம், அவர் செந்தில்நாதனிடமிருந்து தன்னை விலத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். தன்னையே 'எளிய சாதியாக' நினைக்கும் ஒருவரையே, அவர் தனது இந்த நாவலில் முக்கிய பாத்திரமாக்கின்றார். உங்கள் சாதித்திமிர்களுக்கு மேலாய் நான் விகசித்து நிற்பேன் என்று எழுத்தால் எஸ்.பொ கொள்கின்ற பெருமிதம் இது.  நான் 'தீட்டுப்பட்டவன்' என்று என்னை உங்கள் இயல்புவாழ்க்கையில் இருந்து ஒதுக்கினாலும், உங்களைப் பற்றிப் பேசும் எனது இந்தக் கதையை வாசிக்கும்போது உங்கள் சாதிப்பெருமை எங்கே போனது என்று கேட்கின்ற இறுமாப்பு அது. எழுத்தால் சாதியை மீறிப்போகின்ற ஓர் அற்புதகணம் நிகழ்கின்றதை நாம் சடங்கில் தரிசிக்கின்றோம்.

இன்னொருவகையில் இது சாதியின்பேரில் பெருமைகொள்ளும் எல்லாம் யாழ்ப்பாணிகளும், அவமானங் கொள்கின்ற இடமும் கூட..  உங்களைப் பற்றிய அற்புதமான கதையை எழுதக்கூட உங்களால் விலத்தப்பட்ட ஒரு 'எளியசாதிக்காரனே' வந்து சொல்லவேண்டியிருக்கின்றது என்பதாகும். முதன்முதலாக சடங்கை வாசித்தபோது ஏன் எஸ்.பொ சடங்கில் தானல்லாத ஆதிக்கச்சாதியை முக்கியபாத்திரங்களாகக் கொண்டவர் என்று யோசித்ததுண்டு. ஆனால் இப்போது ஐந்தாறு தடவைகளுக்கு மேலாக சடங்கை வாசித்தபின், எஸ்.பொ இதை ஒரு நுட்பமாகத்தான் செய்திருக்கின்றார் போல இப்போது தோன்றுகின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் நின்று சொன்னால் இந்த ஆதிக்கச்சாதிகள் எதையும் வாசிக்காமல்,  எளிதில் ஒதுக்கிவிடுவார்கள் என்பதாலேயே, அவர்களையே பாத்திரமாக்கி, கலைத்துவம் இழக்காது அவர்களின் உண்மையான முகத்தை இங்கே தோலுரித்துக் காட்டியிருக்கின்றார் என்றே நான் சொல்வேன்..இப்படி யாழ்ப்பாண  ஆதிக்கசாதியின் அசலான பக்கங்களை வெளிப்படுத்தினாலும், தேவையற்ற காழ்ப்புக்களை அவர்கள் மீது எஸ்.பொ சடங்கில் திணித்தாரல்ல என்பதுதான் முக்கியமானது. ஆகவேதான் சடங்கு பிரச்சாரமில்லாது கலைத்துவமாகவும் ஒரு அரசியல் பிரதியாகவும் தன்னளவில் தனித்து மிளிர்கின்றது.

யாழ்ப்பாணிகள் எப்படி சொத்துக்காய் எதையும் இழப்பார்கள் என்பதை செல்லாப்பாக்கிய ஆச்சியினூடாகப் பார்க்கின்றோம். ஆச்சியின் காணியைப் பிரிப்பதில் அவரின் மகளான அன்னலட்சுமிக்கும், மகனான நவரத்தினத்துக்கும் சிக்கல் இருக்கின்றது. 'மகன் சொன்னபடி கேட்கின்றான் இல்லை, இனி கோர்ட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்று ஆச்சி முடிவுக்கு வருகின்றார். இறுதி முயற்சியாக செந்தில்நாதனை நவரத்தினத்திடம் சமாதானம் பேச அனுப்புகின்றார்.

செந்தில்நாதனோ, நவரத்தினம் ஊற்றிக்கொடுக்கும் சாராயத்தில் மயங்கி, நவரத்தினம் சொல்கின்ற எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிட்டு வந்துவிடுகின்றார். இதுவரை மரியாதையாக மருமகனை நடத்தியவர், இப்போது நேரடியாகவே ஒன்றுக்கு உதவாதவர் என்று செந்தில்நாதனையே செல்லப்பாக்கிய ஆச்சி திட்டிவிடுகின்றார். சொத்து என்று வந்தால் யாழ்ப்பாணிகளுக்கு உறவுகள் கூட முக்கியமில்லை.. ஆச்சிக்கு தன் மகனை, மருமகனைவிட தன் சொத்தே முக்கியமென எஸ்.பொ காட்டுகின்ற இந்த  இடமும் முக்கியமானது.

4.

பரவலாக பல்வேறுதரப்புக்களால் வாசிக்கப்படுகின்ற சுதந்திரனில்தான் இந்த நாவல் தொடராக வருகின்றது என்றபோதும் எஸ்.பொ தன் 'எழுத்தின் மீதான சத்தியத்தின்' முன் சமரசம் செய்துகொள்ளாததைப் பார்க்கின்றோம். முதலாவது அத்தியாத்திலேயே செந்தில்நாதன் 'சவோயில்' வயது வந்தோர்க்கான படம் பார்ப்பதிலிருந்து அதில் வரும் அழகிகள் ஆடைகளை அவிழ்த்து கனவில் ஆலிங்கனங்கள் செய்வது வரை விபரிக்கப்படுகின்றது. பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்தபின்னும் அந்த அழகிகளின் தனங்களோடு, அன்னலட்சுமியின் தனங்களை ஒப்பிட்டு கிளர்ச்சி அடைவதும் எழுதப்படுகின்றது.

அதுமட்டுமில்லாது நினைத்த தசை வேட்கை நடக்காததால் அன்னலட்சுமி தன் ஆட்காட்டிவிரலை உணர்ச்சி உற்பத்தி பெருகும் நுழைத்து இன்பம் பெறுவது உட்பட, பெண்களுக்கு வரும் மாதாந்த உதிரப்பெருக்கில் ஏற்படும் உளைச்சல்வரை எந்தத் தயக்கமுமில்லாது எஸ்.பொ 50 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிச் செல்கின்றார்.

'சடங்கில்' பாலியல் இச்சையை மூன்று மாதங்களுக்குப் பிறகு தீர்த்துக்கொள்ள செந்தில்நாதன் ஊருக்கு வந்து அது கடைசிவரை நிகழாமல் போகின்றது என்றுதான் நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் நுட்பமான வாசகருக்கு இங்கே எஸ்.பொ காட்டுகின்ற ஒரு நுண்ணிய இடமும் இருக்கின்றது. அது செவ்வாய்க்கிழமை பகல் பொழுது. அன்று பிள்ளைகளும் பாடசாலைக்குப் போய்விட, செல்லப்பாக்கிய ஆச்சியும் சந்தைக்கு எதையோ வாங்கச் சென்றுவிட, ஒரு தனிமை இவர்கள் இருவருக்கும் கிடைப்பதை நாம் அறிகின்றோம். செந்தில்நாதனும், அன்னலட்சுமியும் இவ்வளவு 'தாகத்தோடு' உடல் இணையக் காத்திருக்கின்றபோது இந்தப்பொழுதைப் பாவித்திருக்கலாம். ஆனால் எங்கள் எஸ்.பொ குறும்புக்காரர். அவர் அந்தச் சின்னச் சந்தோசத்தையும் கூட யாழ்ப்பாணியாகிய செந்தில்நாதனுக்குக் கொடுக்க விரும்பாமல் கடந்துபோய்விடுகின்றார்.

கிடுகுவேலிகளோடும், கந்தபுராணக் கலாசாரத்தோடும் இருக்கும் உங்களுக்கு, நான் தரக்கூடிய சிறியதண்டனையாக இதுவே இருக்குமென்று அந்த செவ்வாய்ப் பகலைக் கூட எஸ்.பொ இவர்களின் கூடலுக்கு விட்டுக்கொடுத்து விடவில்லை.  குடித்துவிட்டு சாத்துவாயோடு இப்படியே தூங்குக என்று எஸ்.பொ ஒரு மெல்லிய சாபத்தை அந்த செவ்வாயில் போட்டுவிடுகின்றார். கொஞ்சம் சில்மிஷம் செய்து உடலுறவுக்குத் தயாராகும்போது செல்லப்பாக்கிய ஆச்சியை எஸ்,பொ எழுத்தின் உள்ளே கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றார் . ஆக, இதுகூட  சாதித்திமிருள்ள யாழ்ப்பாணிக்கு ஒரு நுட்பமான தண்டனை என்பது நமக்கு விளங்கிவிடுகின்றது.

5.

சடங்கு என்று நாவலுக்குப் பெயர் கொடுத்ததாலோ என்னவோ இறுதியில் ஒரு சாமத்தியச் சடங்கோடு கதையை எஸ்.பொ முடித்துக்கொள்கின்றார். ஆனால் நமக்கு செந்தில்வேலின் மனம் அவாவியது வேறு ஒரு 'சடங்கை' என்பது விளங்குகின்றது. எந்தச் 'சடங்காயினும்' அது மரபின் தேவையற்ற பல விடயங்களைக் காவிக்கொண்டு வந்திருக்கின்றது. ஒரு 'சடங்கை' ப் பற்றிப் பேசிக்கொண்டு யாழ்ப்பாணிகள் காலங்காலமாய்க் காவிக்கொண்டு வந்துகொண்டிருக்கும் பல 'சடங்குகளை' எஸ்.பொ பேசுகின்றார்.

'சடங்கு' வெளிவந்து இன்று 50 வருடங்களான பின்னும், மீள வாசித்து புதுப்புதுப் பக்கங்களை கண்டுபிடிக்கக் கூடியதாக இருப்பதுதான் வியப்பளிப்பது.  அது அதனுள் பல நுண்ணிய பக்கங்களை ஒளித்துவைத்திருப்பதால்தான் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது இருக்கின்றது. எஸ்.பொ ஓர் அற்புதமான படைப்பாளியாக முற்றுமுழுதாக விகசித்து ஈழத்துச் சூழலில் ஒரு துருவநட்சத்திரமாக மாறியதென்பது 'சடங்கு' என்கின்ற இந்தப் புதினத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது என்று சொல்வேன்.
..........................................................

(நன்றி: 'அம்ருதா' - 2020)

 

http://djthamilan.blogspot.com/2020/01/blog-post.html

  • Like 1
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சொத்துச்சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக, கலாசாரத்தைக் காக்கின்றோம் என்று சொல்லியபடி சாதியில் இறுக்கமுடையவர்களாக, வெளியிடங்களுக்கு அவ்வளவு பயணஞ்செய்யாமலே எல்லாந் தெரிந்ததுமாதிரி உலக ஞானம் பேசுகின்றவர்களாக இருப்பதைச் சடங்கில் நாம் பார்க்கின்றோம். இவ்வாறு இருப்பது மட்டுமில்லை, இவ்வாறாக வாழ்வதுதான் பெருமைக்குரிய விடயமாகவும் நினைக்கின்ற யாழ்ப்பாணிகள் அன்று மட்டுமில்லை, சடங்கு எழுதப்பட்டு 50 வருடங்களான பின்,  இன்றுங்கூட அவ்வளவு மாறாமலே இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

யாழ்ப்பாணி என்பதன் பொருளை இன்றுதான் அறிந்தேன்😂🤣🤣

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

1 hour ago, கிருபன் said:

இவ்வாறு இருப்பது மட்டுமில்லை, இவ்வாறாக வாழ்வதுதான் பெருமைக்குரிய விடயமாகவும் நினைக்கின்ற யாழ்ப்பாணிகள் அன்று மட்டுமில்லை, சடங்கு எழுதப்பட்டு 50 வருடங்களான பின்,  இன்றுங்கூட அவ்வளவு மாறாமலே இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

 ✔️

Share this post


Link to post
Share on other sites

!சடங்கு! என்னிடம் இருக்கு அப்ப வாசிக்கும் போது புரியவில்லை😄...திரும்பவும் வாசிக்க வேண்டும் 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ரதி said:

!சடங்கு! என்னிடம் இருக்கு அப்ப வாசிக்கும் போது புரியவில்லை😄...திரும்பவும் வாசிக்க வேண்டும் 

 

நானும் திரும்பவும் படிக்கவேண்டும்😁

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சொத்துச்சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக, கலாசாரத்தைக் காக்கின்றோம் என்று சொல்லியபடி சாதியில் இறுக்கமுடையவர்களாக, வெளியிடங்களுக்கு அவ்வளவு பயணஞ்செய்யாமலே எல்லாந் தெரிந்ததுமாதிரி உலக ஞானம் பேசுகின்றவர்களாக இருப்பதைச் சடங்கில் நாம் பார்க்கின்றோம். இவ்வாறு இருப்பது மட்டுமில்லை, இவ்வாறாக வாழ்வதுதான் பெருமைக்குரிய விடயமாகவும் நினைக்கின்ற யாழ்ப்பாணிகள் அன்று மட்டுமில்லை, சடங்கு எழுதப்பட்டு 50 வருடங்களான பின்,  இன்றுங்கூட அவ்வளவு மாறாமலே இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

மறுக்கமுடியாத உண்மை. 

வாசிக்க தூண்டி உள்ள ஒரு நாவல். பகிர்ந்தமைக்கு நன்றி.

நான் திருகோணமலையில் வசித்தபொழுது யாழ்பாணிகளின் விருந்தோம்பலை வைத்து என் நண்பர் கேலி செய்வது வழமை. அப்பொழுது கோபம் வந்தது உண்மை, இப்பொழுது நினைக்கும் போது அவர் கூறியதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

நானும் திரும்பவும் படிக்கவேண்டும்😁

இனிதான் நான் வாங்கி படிக்க வேண்டும்.சடங்கு நாவலை பற்றிய தகவல் தந்து ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்😂
நம்மவர்களோ புது புது சடங்குகளை கண்டு பிடித்து கொண்டாடி வரும் நிலையில்  பிரிட்டன் அரச குடும்ப சடங்கில் இருந்து ஹரி மேகன் தம்பதி விலகியுள்ளனர்.😎

Share this post


Link to post
Share on other sites

நான் ஆறாம் ஆண்டில் படிக்கும்போது வாசித்த கதை*

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, வல்வை சகாறா said:

நான் ஆறாம் ஆண்டில் படிக்கும்போது வாசித்த கதை*

😮

பிஞ்சில பழுத்த வெம்பல்மாதிரித் தெரியவில்லையே!!

நான் மித்திரனில் தொடராக வந்த “கண்ணே கலைமானே”  அந்த வயதில் படித்திருந்தேன்.😜

செங்கை ஆழியானின் எழுதிய “கங்கைக்கரையோராம்” முதன் முதலாக எட்டு வயதில் 😁 படித்தது.
அது பேராதனைக்குப் போகவேண்டும் என்ற கனவை அப்போதே விதைத்ததுடன் கங்கா என்ற பெயரில் ஒரு கிறக்கத்தையும் ( 😍இன்றுவரை) தந்தது! ஆனால் பேராதனைக்கு 2002 ஹொலிடேயில் போனபோதுதான் கங்கையைப் பார்க்கக் கிடைத்தது. ஆனால் கங்கா என்ற பெயரில் ஒருவரையும் கண்டதில்லை☹️
 

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, கிருபன் said:

😮

பிஞ்சில பழுத்த வெம்பல்மாதிரித் தெரியவில்லையே!!

நான் மித்திரனில் தொடராக வந்த “கண்ணே கலைமானே”  அந்த வயதில் படித்திருந்தேன்.😜

செங்கை ஆழியானின் எழுதிய “கங்கைக்கரையோராம்” முதன் முதலாக எட்டு வயதில் 😁 படித்தது.
அது பேராதனைக்குப் போகவேண்டும் என்ற கனவை அப்போதே விதைத்ததுடன் கங்கா என்ற பெயரில் ஒரு கிறக்கத்தையும் ( 😍இன்றுவரை) தந்தது! ஆனால் பேராதனைக்கு 2002 ஹொலிடேயில் போனபோதுதான் கங்கையைப் பார்க்கக் கிடைத்தது. ஆனால் கங்கா என்ற பெயரில் ஒருவரையும் கண்டதில்லை☹️
 

கிருமி  அந்த நாட்களில் கதைப்புத்தகம் வாசிப்பது என்றால்  சரியான கிலி.... அம்மா நிறைய்புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி வாசிப்பார்..... ஆனால் அந்த வயதில் என்னை நாவல்கள் வாசிக்க அம்மா அநுமதிப்பதில்லை. அம்புலிமாமா, ரத்தினபாலா அப்படியே குமுதம் கல்கி கலைமகள் ஆனந்தவிகடன் என்று மட்டுப்படு;தி வைத்திருந்தார். அவர் மட்டுப்படுத்தியதாலோ என்னமோ எனக்கு கிடைப்பதையெல்லாம் வாசித்து முடித்துவிடுவேன் அப்படி ஒரு வெறி.... பலசரக்குக்கடைகளில் பொதிசெய்ய வைத்திருக்கும் என்ன புத்தகமென்றாலும் இரவல் வாங்கி வந்துவிடுவேன். அம்மாவிடம் ஒரு பலவீனம் புத்தகங்களை நேசிப்பது அவற்றை அழகாக உறைபோட்டு வைப்பது... வீட்டில் அடுக்கபட்டிருந்த புத்தகங்களெல்லாம் என் வாசிப்புப்பசிக்கு தீனிபோடும் வல்லமையை சொற்ப காலத்திற்குள் இழந்துவிட்டன. நமக்குக் கிடைத்த வரம் எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த வாசிகசாலை. அங்கு புதன்கிழமையும், சனிக்கிழமையும் இரண்டு நாவல்கள் 3 சஞ்சிகைகள் அங்கத்தவராக இணைந்தால் வாசிக்க  எடுக்கலாம். என் வாசிப்பை கட்டுப்படுத்திய அம்மா தன் வாசிப்பை முடக்க முடியாதவராக இருந்தார் எனக்கு அது பெருவரமாக இருந்தது. நாவல் புத்தகங்களை எடுத்து வந்து அம்மாவுக்கு கொடுப்பது நான்தான்.... அப்படியே அம்மா அசண்டையான தருணங்களில் அரை மணிநேரத்திற்குள் ஒரு நாவலை வாசித்து விழுங்கிவிடுவேன். சிறிது காலத்திற்குப் பிறகு அம்மாவால் என்னைக்கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விட்டது. இந்த நாயைத் திருத்த ஏலாது என்று கைவிட்டுவிட்டார். அப்போதெல்லாம் வாசிப்பை நின்று நிதானித்து அவற்றின் விம்பங்களை கிரகித்துக் கொள்வதில்லை. இதில் நாவல்கள் மட்டுமல்ல தேவார , திருவாசகம், சோதிடம், இலக்கியம் இதிகாசம் இப்படி எல்லாப்பக்கமும் சூறாவளி வாசிப்பு இருந்தது. ஒணவு உடகொள்ளும் நேரத்திலேயே ஒரு நாவல் முடியும்... உணவுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று அம்மாவிடம் நிறைய பேச்சு வாங்கியிருக்கிறேன். அம்மா என்னை அதிகம் கடிந்து கொண்டது இதற்காகத்தான் இருக்கும்.  இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் என்னுடைய சகோதரர்கள் என்னை நிலைகுலைய வைக்கமேண்டுமென்றால் அவர்கள் எனக்கு எதிராகப்பயன்படுத்தும் ஆயுதமும் அதுதான். நான் எனது ககோதரர்களுடன் போடும் சண்டைகளில் அதிகம் காயப்பட்டு தோல்வியடைவது நான் வாசிக்கும் புத்தகங்களில் அவர்கள் கைதொடும்போதுதான்... அது எல்லாம் ஒரு கனாக்காலம்

கிருமி..... எல்லாவற்றையும் கலந்து வாசித்ததால்  பிஞ்சில் பழுக்கும் நிலை ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அராபிய இரவுகள் கதையைக்கூட வாசித்திருக்கிறேன். சடுதியாக வாசித்து கிரகிக்கும் வேகம் இருந்தளவுக்கு எண்ணங்களை அலைக்கழிக்கவில்லை. தோழி கண்மணி கூடக் கேட்டார் அந்த வயதில் சடங்கு கதையை வாசித்து அதனை சரியாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள முடிந்ததா? ஏன் இல்லை சராசரி கொழும்பில் வேலை செய்யும் கதாநாயகன் மனைவி பிள்ளைகளைப்பார்க்க ஊர் வந்த நிற்கும் நாட்கள் கதையாக விரிந்துள்ளது. அநேகமாக நான் அன்றாடம் பார்த்தவர்களின் கதையாகவே இருந்தது. கணவன் மனைவி கூடல்கூட நாம் வெளிப்படையாக பேசிக்கொள்ளாத விடயமாக இருந்தாலும் கொழும்பிலிருந்து வந்தவருக்கும் ஊரில் அவரை எதிர்பார்த்து இருக்கும் மனைவிக்கும்  கிடைக்கின்ற சில நாட்கள் எப்படிக் கழிந்தன என்பதை அவ்வளவு உயிரோட்டமாக எஸ்.பொ எழுதியிருப்பார். இன்றும் கூட அக்கதை பழைய கதையாக இல்லாமல் நடைமுறைக்கதையாக தெரிவதுதான் எஸ் . பொ அவர்களுக்குக் கிடைத்த பெருவெற்றி. காலத்தால் கரைக்கமுடியாத கதையாக அடுத்த தலைமுறைக்கும் தொடரக்கூடியது.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, வல்வை சகாறா said:

இப்படி எல்லாப்பக்கமும் சூறாவளி வாசிப்பு இருந்தது

தொடர்ந்து வாசிக்கும்போது வாசிப்பவற்றில் போதாமையைக் காண்பவர்தான் எழுத்தாளாராக வருகின்றார். 😊

நானும் அக்கம் பக்கம் இருந்த வாசிகசாலைகளில் இருந்த புத்தகங்கள் எல்லாம் படித்துமுடித்திருந்தேன். பின்னர் வதிரியில் உள்ள பெரிய நூலகத்தில் புத்தகங்களை எடுப்பதற்காக அதற்கு அருகாமையில் வசிப்பதாக பிழையான முகவரி கொடுத்து சேர்ந்தேன்.😮 அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்! ஆனால் தீவிர விசாரானையில் வாசிக்க விரும்பிய புத்தகங்களின் பட்டியலைப் கேட்ட பின்னர் விசாரித்தவர் உடனடியாகவே சேர அனுமதித்தார். அந்த அமைதியான நூலகத்தில் படிப்பதே தியானம் மாதிரித்தான்!

எங்கள் ஹாட்லிக்கல்லூரி நூலகத்தை இராணுவம் எரித்திருந்தமையால் அரிய நூல்களை எல்லாம் படிக்கமுடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

நான் கொழும்பில் க.பொ.உயர்தரம் படித்துக் கொண்டு இருக்கும் போது தான் எஸ் போவின் நாவல்களான சடங்கு மற்றும் தீ ஆகியவற்றை வாசித்தனான்.  தீ நாவல் எங்கும் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்கும் போது, 90 களில் இடம்பெற்ற தமிழ் சாகித்திய விழா ஒன்றில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களை கண்டு அவரிடம் கேட்டுப்பார்க்க அடுத்த நாளே கொண்டு வந்து தந்தார்.

சடங்கு வாசித்தவர்களில் அனேகம் பேர் 'தீ' யும் வாசித்து இருப்பார்கள் என நம்புகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this