Jump to content

தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                            தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு

-       சுப. சோமசுந்தரம்

 

            இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் !

 

            பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை.

 

            முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள் உண்டே ! நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை.

 

            அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட?) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள்.

 

            மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முயற்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன்? ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது.

 

            ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் !

 

            தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் ! இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ? ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்களைப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள்? எந்த சாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள்? எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு.

 

            இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே!

 

            அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் ? அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா? ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா? தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளினிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது?” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே? பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரிதும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான்.

 

            அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு ! பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே.

திருமூலரின்

         ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

          போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்

          பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே

          சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’

என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே ! மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே ! இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் ! மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது நடந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் !

 

            உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே ! வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன ! இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால்.

 

            ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே ! ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் ! நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே ! ஆனால் (அறியாமையால் அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு  இல்லாமல் போனது எப்படி ? மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே ! மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் ? அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா? இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்? உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக? தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ? அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே ! உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன?

 

            தந்தை பெரியார் வெறுத்துப் போய்  கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார்? நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா? இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா ? திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள்? காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவா அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா? ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா? எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? சக்கரம் சுழலத்தானே வேண்டும் !

 

            உங்கள் மனதுடன் நான் பேச நினைத்தது இவ்வளவுதான். உங்கள் அடையாளத்துடன் வாழ உங்களுக்கு முழு உரிமை உண்டு. உயிரைக் கொடுத்தேனும் தமிழனின் அடையாளத்தைக் காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. போனது போகட்டும்.

                        “நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன்

                         தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன்”

என்று கம்ப நாடன் சொன்னது போல் நீங்கள் தமிழினத்திடம் கொள்ளும் உறவே மனித நீதியாக அமைய முடியும். தமிழனுடன் நில்லுங்கள், தோழர் ! அவன் என்றும் உங்களைத் தாங்கி நிற்பான். வந்தாரை வாழ வைப்பதே அவன் கண்ட அறம்.

 

Link to comment
Share on other sites

ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

"மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?" என்ற வினாவுக்கு, இப்பதிவையே விடையாக, தமிழ் Quora தளத்தில் மீள்பதிவு செய்தேன்.

ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களின் விடையைக் காட்டிலும், சிறந்த விடையை, மேற்கண்ட Quora வினாவுக்கு, இப்பூமிதனில் யாங்கணும் யாம் கண்டதில்லை! உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை!

இவ்விடையில், வெறுப்பு இல்லை! தோழமை உண்டு! கனிவு உண்டு! பாசம் உண்டு! தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நட்பு உண்டு! நடந்தவை போகட்டும். இனியாவது நன்மை நடக்கட்டும்.

மனம் திருந்தி வாருங்கள் பிராமணத் தோழர்களே! நாம் இணைந்து புதியதோர் உலகம் உலகம் செய்வோம்!

Link to comment
Share on other sites

தமிழ் Quora வில் ஐயா சோமசுந்தரம் அவர்களின் பதிவிற்கு, ஐயா அசோகன் அண்ணாவி சுப்பிரமணியன் அவர்கள் அளித்த பின்னூட்டம் சோமசுந்தரம் ஐயாவுக்கு உரியது என்பதால்,  இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன். 

-------------

வசைபாடி களை அறிவார்ந்த கருத்துக்களால் வெல்ல முடியும் என்பதை நீருபணம் செய்துள்ளீர்கள் சகோதரரே. நீண்ட நாளுக்கு பிறகு நீண்ட நெடிய பதிலை படித்ததில் பெரும் மகிழ்ச்சி நன்றி.

--------//
 
main-thumb-20486788-200-pwzsihofvmsgusvlbeatlvrakpsnvzbq.jpeg

ஐயா சோமசுந்தரம் அவர்கள் சார்பில், தங்கள் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் சார்பிலும், என் சார்பிலும், தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் ஐயா. அன்னாரை, தமிழ் குவாராவில் எழுதுங்கள் என்று பலமுறை அழைத்து விட்டேன். இன்னும் சற்று காலம் கழித்து வருகிறேன் என்பார்கள். இப்பதிவின் மூலம், ஐயா சோமசுந்தரம் அவர்களின் எழுத்தையும், ஆளுமையையும், நம் தமிழ் Quora அன்பர்களிடம் சேர்த்துவிட்டேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

இதற்கான உங்கள் பதில் குறித்து விவேகானந்தன் சபாபதி (Vivekanandhan S) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?”
 

வரலாறு மற்றும் சமூக நீதி புத்தகங்கள் நூறு படித்து பெற்ற திருப்தி உங்கள் பதிலில் கிடைத்தது அய்யா,சோமசுந்தரம் அய்யா கண்டிப்பாக குவாராவில் எழுதும் நாள் கூடிய விரைவில் அமைய ஆவலாய் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

இதற்கான உங்கள் பதில் குறித்து சண்முக சுந்தரம் துரைராசன் (Shanmuga Sundaram Durairajan) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தளவிற்கு பிராமணர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்?”
 

என் உயிர் நண்பரும் பிராமணரே. மிகச் சிறந்த மனிதர் ஆயினும் அவர் மனம் நோகாமல் என் கருத்தை முன் வைக்க உங்கள் பதில் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள் அய்யா.

Link to comment
Share on other sites

Quote

ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம்

Quote

ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது.

வடக்கில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் பேசுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் தமிழ் பேசுகிறார்களா? அது எப்படி தமது மொழியை கைவிட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணரின் மனச்சாட்சியை கேட்பதைவிட

தமிழரின் மனச்சாட்சியை முடியுமென்றால் தட்டி எழுப்புங்கள்.

திரைத்துறைக்கும் அப்பப்ப பணத்துக்கும் அடிமையாகிப் போன தமிழினத்தை தட்டி எழுப்பினாலே பிராமணர் அடங்கிப் போய்விடுவர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 3:03 PM, சுப.சோமசுந்தரம் said:

ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது

பிராமணர்களின் பேச்சு வழக்கு தமது அடையாளத்தைத் தக்க வைக்கும் நோக்கமாக இருக்கலாம். அத்துடன் அதிகாரத்தைத் தக்கவைக்க branding தேவைதானே.

ஆனால் பேச்சுவழக்கைக் கொண்டு பரவிய இனக்குழு என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆனால் பேச்சுவழக்கைக் கொண்டு பரவிய இனக்குழு என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.

உண்மை. பேச்சு வழக்கு இடத்தைப் பொறுத்தே மாறுபடும். நெல்லைத் தமிழ், குமரி மாவட்டத் தமிழ், மதுரைத் தமிழ் ......என்று. ஆனால்  பிராமணர்கள் (சவுராட்டிரர்கள் கூட) தமிழகம் முழுவதும் ஒரே தமிழ் பேசுவதில் அவர்கள் பரவிய இனக்குழு என்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதுவே வலுவான காரணமாக முன்வைக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மாறுபாடாகவும் நிகழ்கிறது.  உதாரணமாக திருநெல்வேலி சைவ வேளாளர் தஞ்சைத் தரணியிலிருந்து புலம் பெயர்ந்திருக்க வேண்டும் என்று அவர் காலத்து மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் இராபர்ட் கால்டுவெல் 'History of Tirunelveli' என்ற தமது வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று  தஞ்சை வேளாளரும் திருநெல்வேலி வேளாளரும் தமது இல்லங்களில் ஒரே மாதிரியான சில பழக்க வழக்கங்கள் கொண்டிருப்பினும், ஒரே மாதிரியான தமிழ் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சோமசுந்தரம் அவர்களே,

உங்கள் தமிழ் புலமை கண்டு நான் முன்பே பலதடவை வியந்தது உண்டு. 

ஆனால் உங்களுக்குள் இப்படி ஒரு உலகமகா நகைச்சுவை உணர்வும் இருப்பது தெரியாமல் போய்விட்டது ஐயா😂.

பிராமணியத்திடம் போய் மனச்சாட்சியை தேடுறீங்களே ஐயா அவங்க என்ன வச்சு கொண்டா வஞ்சகம் செய்யுறாங்க.😂

large.41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg.e0ff82681145544706123dfac62df2f4.jpeg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.