ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி

 
 
 

தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.  

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் நோக்கில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட விசேட தெரிவுப் போட்டி கடந்த 08ஆம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

முன்னதாக இத்தொடருக்காக 35 பேர் கொண்ட பூர்வாங்க அணியொன்றை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்திருந்தது

இதிலிருந்து 20 பேர் கொண்ட இறுதிக் குழுவை பத்மா பெத்துவல தலைமையிலான தேர்வுக் குழுவினர் பெயரிட்டுள்ளனர்

 

இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசலா அல்கம, 5 வருடங்களுக்குப் பிறகு தேசிய அணிக்குள் இடம்பிடித்துள்ளார்

அத்துடன், உலக வலைப்பந்தாட்ட அரங்கில் கோல் போடுவதில் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் இலங்கை வலைப்பந்தாட்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார்

இறுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 11ஆவது ஆசிய வல்லவர் சம்பியன்ஷிப் பட்டத்தை 9 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த தர்ஜினி, கடந்த வருடம் இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரிலும் அதிக கோல் போட்ட வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்

எனவே, தர்ஜினியின் சேவையை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் இம்முறை ஆசிய வலைப்பந்தாட்டத்திலும் எதிர்பார்த்து அவரை தேசிய அணியில் இணைத்துக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்

 

இதுஇவ்வாறிருக்க, வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவர், இம்முறை ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் களமிறங்கவுள்ளார்.  

இந்த நிலையில், எஞ்சிய 15 வீராங்கனைகளையும் இலங்கை அபிவிருத்தி குழாத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இலங்கையின் முன்னணி வலைப்பந்தாட்ட பயிற்சியாளர்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கின்ற ஷசிகா சமரசிங்க அபிவிருத்தி அணியின் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்

தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று வருகின்ற ஹட்டன் நெஷனல் வங்கி அணியின் பயிற்சியாளராக இவர் செயற்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அதுமாத்திரமின்றி, 2008 முதல் 2014 வரை இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவியாகவும், 2009 ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

 

 

இதுஇவ்வாறிருக்க, நேற்று தேர்வு செய்யப்பட்ட 20 வீராங்கனைகளில் இருந்து 12 பேரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் அழைப்பு வலைப்பந்தாட்ட தொடரில் பங்குபற்றச் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளது

இதற்கான விசேட தெரிவுப் போட்டியொன்று இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது

இந்த நிலையில், 2018 ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்டத் தொடர் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற உலக வல்லவர் வலைப்பந்தாட்டத் தொடர்களில் இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்ட சதுரங்கி ஜயசூரிய, தற்போது தேசிய அணியில் இல்லாத காரணத்தால், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய தலைவியாக இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. 

இலங்கை அணி விபரம் 

ருக்லா ஹப்புதன்திரி, தர்ஜினி சிவலிங்கம், இமேஷா சங்கல்பனி, தீபிகா தர்ஷனி, எழிலேந்தினி சேதுகாவலர், தர்ஷிகா அபேவிக்ரம, நவ்வலி ராஜபக்ஷ, கயத்ரி திசாநாயக்க, துஷானி சந்தகோ, ஹசித்தா மெண்டிஸ், துலங்கா தனஞ்சி, கயத்ரி கௌஷல்யா, துலங்கி வன்னிஆரச்சி, திலினி வத்தேககெதர, சுமுது அபேகுணவர்தன, மந்திரா சாமினி, சுலெகா குமாரி, சானிகா பெரேரா, டெக்லா ப்ரியதர்ஷனி, டிலானி பெரேரா, துஷானி பண்டார, தனஞ்சனி அமரவங்ச, திசலா அல்கம

http://www.thepapare.com/tharjini-sivalingam-ezhilenthini-in-sri-lanka-squad-for-asian-netball-championship-tamil/