Jump to content

‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா?
முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜனவரி 14

பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர்.   

“நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு, கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்” என்று, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.  

இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தலைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’ சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில் அணி ஒருபுறமாகவும் சஜித் தரப்பு மறுபுறமாகவும் கயிறிழுத்துக் கொண்டிருக்கின்றனர்.   

இந்த இலட்சணத்தில்தான், எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்கப் போவதாகச் சிறுபான்மைத் தலைவர்கள் சபதமிட்டு வருகின்றார்கள்.  

சிலரைத் தோற்கடிப்பதற்கு, எதிராளிகள் யாரும் தேவையில்லை. அவர்கள் தமக்குத் தாமே சொந்தச் செலவில், சூனியம் வைத்து, அந்தக் காரியத்தை முடித்து விடுவார்கள்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ, அந்தளவு ‘பாரிய’ தோல்வியை எதிர்கொள்வதற்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் காரணமாக இருந்தனர். ‘யானை’ அடிப்பதற்கு முன்னராக, ‘தானே’ அடித்துக் கொண்டு, அவர்களை அவர்களே தோற்கடித்துக் கொண்டனர்.  

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்குவதில் ரணில் தரப்புக்கும், சஜித் அணியினருக்கும் ஏற்பட்டிருந்த இழுபறிதான், அந்தக் தேர்தலில் சஜித் பிரேமதாஸ ‘பாரியளவில்’ தோல்வி அடைவதற்குப் பிரதான காரணமாக அமைந்திருந்தது.  

சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்வதில், ரணில் தரப்பினர் காட்டிய அசமந்தம், புறக்கணிப்பு ஆகியவைதான், 13 இலட்சம் வாக்குகளால் தோற்றுப் போகும் நிலையை, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்படுத்தியது.  

சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில், சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காட்டிய அக்கறையில், பாதிளவைக் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் வெளிக்காட்டவில்லை என்பதுதான் களநிலைவரமாக இருந்தது.  

இவ்வாறான, கசப்பான அனுபவங்களின் சூடு தணிவதற்குள்தான், “சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்கப் போகிறோம்” என்று, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள், சூழுரைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.  

அரசியலில், சஜித் பிரேமதாஸவின் நிலை, கிட்டத்தட்ட ‘சேற்றில் நாட்டிய கம்பு’ போல உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படாது விட்டால், அவர் வேறு ஓர் அணியை உருவாக்கக் கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.   

அப்படி நடந்தாலும் நடக்காமல் விட்டாலும், ரணில், சஜித் தரப்பினர்களின் ‘வெட்டுக் குத்து அரசியல்’, எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் உச்சத்தைத் தொடுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.  

இவ்வாறான சூழ்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாக உள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடைய நிலைதான் பரிதாபமாக உள்ளது.   

மிக நீண்ட காலமாகவே, ஐ.தே.கவுடன் கூட்டு வைத்துக் கொண்டு, தேர்தல்களில் யானைச் சின்னத்திலே களமிறங்கி வந்த சிறுபான்மைக் கட்சிகள், ரணில் - சஜித் இழுபறி காரணமாக, நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் களமிறங்குவது, அந்தக் கட்சிகளுக்குக் கடந்த காலங்களில் சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியே இரண்டாகப் பிளந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பொதுத் தேர்தலொன்றில் களமிறங்கும்போது, கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட சாதகங்களைப் போல், பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கதான் இந்தக் கணம் வரை இருந்து கொண்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை மிகப் பகிரங்கமாகவே பல இடங்களில் விமர்சித்தமையை நாம் கண்டிருந்தோம்.   

இந்தப் பின்னணியில், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணியமைத்துக் களமிறங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ரணில் தரப்பு நிறைவேற்றுமா என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது.  

எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஐ.தே.கவின் தலைமைத்துவம், சஜித் பிரேமதாஸவின் கைகளுக்குக் கிடைப்பதுதான், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் போன்ற சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கு, வாய்ப்பாக அமையும்.   

அப்படி நடக்கவில்லை என்றால், சஜித் பிரேமதாஸவின் அணியுடன் கூட்டணியமைத்து, மேற்படி தலைவர்களின் சிறுபான்மைக் கட்சிகள், பொதுத் தேர்தலில் புதியதொரு சின்னத்தில் போட்டியிட வேண்டும். அல்லது, சிறுபான்மைக் கட்சிகள் தத்தமது சின்னங்களில், தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.  

உற்சாகம் பெற்றுள்ள அதாவுல்லாஹ், கருணா தரப்புகள்  

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான சிறுபான்மைக் கட்சிகள், எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில், இத்தனை இடர்பாடுகள் காணப்படும். 

இத்தகைய சூழ்நிலையில், மறுபுறமாக, ஜனாதிபதியின் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, வெகு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிச் செயற்பட்டு வருகின்றன.   

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் போன்றோரை, அடிக்கடி களத்தில் காண முடிகிறது.  

ஜனாதிபதித் தேர்தலில், அதாவுல்லாஹ்,  கருணா அம்மான் போன்றோர், ஆதரவு வழங்கிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துவிட்டார் என்பதன் அர்த்தம்,  அதாவுல்லாஹ்வும் கருணா அம்மானும் அரசியலில் வென்று விட்டார்கள் என்று ஆகிவிடாது.   

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ள அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோர், மீண்டும் நாடாளுமன்றுக்குச் செல்வதிலேயே, அவர்களின் வெற்றி தங்கியுள்ளது.  

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மைக் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சற்று உசார் இழந்து போய் இருந்தாலும், அந்த நிலைவரமானது, அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோரின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்கிற கேள்விகளும் இருக்கின்றன.  

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அதிகாரத்தின் பக்கமாகச் சிறுபான்மை மக்கள் சாய்வது போல், ஒரு தோற்றப்பாடு காணப்படுகின்றது. அந்த நிலைவரத்தை, தமக்கான வாக்குகளின் அதிகரிப்பாக அதாவுல்லாஹ்வும் கருணாவும் கருதுகின்றார்கள் போலவும் தெரிகிறது. இந்தக் கணிப்பீடு, சரியானதுதானா என்பதை, எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.  

முஸ்லிம்களும் பொதுஜன பெரமுனவும்  

ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன கட்சியில், முஸ்லிம்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தில், முஸ்லிம்கள் எவரும் அமைச்சர்களாக இல்லை என்பதும் பாரிய குறைபாடுகளாகும்.   

குறிப்பாக, முஸ்லிம் நாடுகளுடன் கோட்டாவின் அரசாங்கம் நட்புறவை வளர்த்துக் கொள்வதில், இந்த நிலைவரமானது சிக்கலை ஏற்படுத்தும். எனவேதான், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, ஆகக் குறைந்தது 13 முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெற்றுக் கொள்வோம்” என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறியிருக்கின்றனர்.  

உண்மையில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுன பெற்றுக் கொள்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பொதுஜன பெரமுன சார்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கு, அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.   

பௌத்த பெரும்பான்மைவாதத்தைத் தூக்கிப் பிடித்து, அந்தக் கோஷத்தின் ஊடாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிக் கொண்ட பொதுஜன பெரமுன, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கோஷத்தையே முன்னிறுத்தும் என்பதற்கான நிலைவரங்கள்தான் காணப்படுகின்றன.   

இவ்வாறான சூழ்நிலையில், அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்ற பொதுஜன பெரமுனவின் பங்காளிகள், எவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் போகின்றனர் எனத் தெரியவில்லை.  

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்கு, பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதை விடவும், தேசியப்பட்டியல் ஊடாகச் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வதே அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோருக்கு நல்லதாக அமையும்.  

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி போன்ற கட்சிகள், கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் தேர்தலில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளதையும் களநிலைவரங்கள் காட்டுகின்றன.   

மேற்படி கட்சிகள் ஆதரித்த வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போனமை, மேற்படி கட்சிகளின் எதிராளிக் கட்சிகள், ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றமை, கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியை, இன்னும் பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று தமிழர், முஸ்லிம் மக்களிடத்தில் கூட, ஏற்பட்டுள்ள மனநிலை போன்றவை, மேற்படி சிறுபான்மைக் கட்சிகளுக்கான ஆதரவில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.  

சிறுபான்மையினரின் முடிவு  

இந்த எதிரும் புதிருமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான், எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு, சிறுபான்மையின சமூகங்கள் தள்ளப்பட்டுள்ளன.  

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் பிரதமர் வேறொரு கட்சியைச் சார்ந்தவராகவும் இருந்தமையால் ஏற்பட்ட இழுபறி குறித்து நாம் அறிவோம்.   

அரசாங்கம் நடத்தியதை விடவும், ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரக் கயிறிழுப்பில்தான் கடந்த ஆட்சியில் அதிகம் ஈடுபட்டனர். எனவே, தற்போது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ள நிலையில், அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தை, ஜனாதிபதிக்கு எதிரானதொரு தரப்பின் கையில் கொடுப்பது, சாதுரியமான செயற்பாடாக அமையுமா என்கிற கேள்வி, கணிசமானோரிடத்தில் உள்ளது.  

“கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால், இந்த நாட்டில் சிறுபான்மையினர் வாழவே முடியாது”  என்று, கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில், தமிழ், முஸ்லிம் தலைவர்கள், சிறுபான்மை மக்களிடத்தில் மிக மோசமானதொரு பீதியை ஏற்படுத்தியிருந்தனர்.   

ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அச்சம், ஆபத்துகளின் குறைந்தபட்சம் கூட, கோட்டாவின் ஆட்சியில் இப்போதைக்கு ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான விடயமாகும்.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில் விடப்பட்ட பிழைகளை, இப்போது அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். தங்கள் முன்னைய தோல்விக்கு, எவையெல்லாம் காரணமாக அமைந்திருந்தன என்பதை, நிச்சயமாக அவர்கள் புரிந்திருப்பார்கள்.   

எனவே, கோட்டாவின் ஆட்சியில் அந்தப் பிழைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமென, அவர்கள் நினைப்பார்களாயின், நல்லாட்சியை விடவும் நல்லதோர் ஆட்சியாகச் சிறுபான்மையினருக்கு, கோட்டாவின் ஆட்சி அமையும் என்று நம்பலாம்.  

எனவே, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் போக்கு, என்ன என்பதை விளங்கி, அதற்கு ஏற்றால்போல் சிறுபான்மையின சமூகங்கள், தமது அரசியல் வியூகங்களை வகுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.   

குறிப்பாக, ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலைப் புரிந்து கொண்டு, செயலாற்ற வேண்டியது முஸ்லிம்களுக்குள்ள பாரிய சவாலாகும். எதிர்வரும் பொதுத் தேர்தல், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் சோதனைக் காலமாகும்.  

அதிரடிகள் மட்டும் போதாது

புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன.   

“கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்” என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழியப் பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.  

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி பற்றி, மக்களிடமிருந்த புகார்கள் என்ன என்பது குறித்து, இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவார்.   

மஹிந்த ஏன் தோற்றுப் போனார் என்பதற்கான விடை, கோட்டாவுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால், எதையெல்லாம் தனது ஆட்சியில் தவிர்க்க வேண்டும்; எவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, அவர் செயற்பட்டு வருகின்றார். அவ்வளவுதான்.  
மஹிந்த ராஜபக்‌ஷ, தனது ஆட்சியில் படாடோபத்தைக் கடைப்பிடித்து வந்தார். ஒரு வெளிநாட்டுப் பயணம் என்றால், கிட்டத்தட்ட ஓர் ‘ஊரை’யே தன்னுடன் அழைத்துச் சென்றார். அதற்காகத் தனி விமானத்தைப் பயன்படுத்தியும் வந்தார். இவையெல்லாம், எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளானவை. மக்கள் இவற்றைக் கண்டு, முகம் சுழித்தார்கள்.  

இந்தப் பின்னணியில்தான், கடந்த காலத்தில் தனது சகோதரரின் ஆட்சியில் நடந்த தவறுகளையெல்லாம் தவிர்த்து, அதிரடியான நடவடிக்கைகள் மூலம், தனது ஆட்சியின் ஆரம்பத்தையே அட்டகாசமாக்கிக் கொண்டிருக்கிறார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.  

நாடாளுமன்றுக்கு அக்கிராசனர் உரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்த போது, தனக்கான பாதுகாப்பு அணிவகுப்பைத் தவிர்த்ததோடு,  சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் மரியாதையைக் கூட, “வேண்டாம்” என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.  

டி.ஏ. ராஜபக்‌ஷ பரம்பரையினர் அரசியலுக்குள் நுழையும் போது அணியும் குரக்கன் நிறத்துச் ‘சால்வை’யைத் தவிர்த்ததையும் ஜனாதிபதியின் மற்றோர் அதிரடியாகவே பார்க்க முடிகிறது.

பார்க்கும் இடமெல்லாம் சால்வைகளும் சால்வைகளின் ஆட்சி மீது, ஒரு கட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், மஹிந்தவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும் என்பதை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.  

ஆக, எதிரணியினர் ‘கோட்டா’ பற்றி ஏற்படுத்திய அச்சத்துக்கு அப்பாலானதோர் ஆட்சியொன்றை அவர் தொடங்கியுள்ளமை, சந்தோசமானதொரு விடயமாகும்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஒழுங்கையும் துப்புரவையும் விரும்புகின்ற ஒருவர். அவரின் இராணுவ வாழ்க்கை, அவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். அதனால், தூய்மையான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அவரால் இலகுவாக முடியும் என்கிற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.  

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை, களத்துக்கே சென்று நேரடியாகப் பார்த்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நடைமுறையை, ஜனாதிபதி தொடர்ந்து வருகிறார். இது மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவை மிகக்கடுமையாக, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விமர்சித்த ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் போன்றோரும், ஜனாதிபதியின் இந்த நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.  

ஆனால், பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற சிறுபான்மை மக்களுக்கு, ஜனாதிபதியின் இந்த அதிரடிகள் மட்டும் போதுமானதாக இருக்கப் போவதில்லை.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைக் கொண்டு, அவர் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தீர்த்து வைத்தல் அவசியமாகும். 

சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிட்டத்தட்ட இல்லாமலேயே, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றமையானது, இலங்கை அரசியலில் ஓர் அதிசயமாகும்.   

ஆனால், அதிசயங்கள் எப்போதும் நிகழ்வதில்லை என்பதையும் ஜனாதிபதி புரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசியலில் அதிசயங்கள் நிகழாத போதெல்லாம், சிறுபான்மை மக்களிடம்தான் தமது வெற்றிக்காகச் சிங்களத் தலைவர்கள் இறங்கி வந்திருக்கின்றனர்.  

எனவே, சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்லும் திட்டங்களை, ஜனாதிபதி தொடங்க வேண்டும். அந்தத் திட்டங்கள், அரசியலுக்கு அப்பாலானதாகவும் நேர்மை மிக்கதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.  

அப்படி அவர் செய்வாரானால், சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று, ஜனாதிபதியானவர் என்கிற கறையிலிருந்து, எதிர்காலத்தில் அவர் விடுபடலாம். தனது தேசத்தின் இரண்டு சமூகங்கள், ஜனாதிபதித் தேர்தலில், தன்னைப் புறக்கணித்தமையை கோட்டா போன்ற ஆளுமை மிக்க ஒருவர், சிறியதொரு விடயமாக எடுத்து கொள்ள மாட்டார். 

எனவே, தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரவணைக்க வேண்டிய தேவை, அவருக்கு உள்ளது. அதைச் செய்வார் என்று நம்புவோம்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டா-ஜனாதிபதி-சஜித்-பிரதமர்-கனவு-பலிக்குமா/91-244002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.