Jump to content

தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜனவரி 15

யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன.   

எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள்.   

அரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது.  

இன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்தனைகளின் வெளிப்படுத்துகையாக, இதைக் கொள்ள முடியும். 

தமிழ்த் தேசியம் என்பது, சாதி, மதம், வர்க்க பேதங்களுக்கு அப்பாலான பொது அரசியல் நெறி ஆகும். ஆனால், அந்த நெறியைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் தரப்புகள், தேர்தல்களை முன்வைத்து ஆடும் ஆட்டம், பல நேரங்களில் சாதிய, மதவாத சிந்தனைகளோடு வெளிப்படையாக இயங்கும் நபர்களைக் காட்டிலும் ஆபத்தானதாக இருக்கின்றது.  

ஒரு சமூகத்தின் உரையாடல் மொழியில், ஒரு வார்த்தை, வாக்கியம் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகின்றது என்பது தொடர்பில், கவனம் செலுத்துவது அவசியமானது. (உதாரணத்துக்கு, ‘முடி’யைக் குறிக்கும் ‘மயிர்’ என்கிற சொல், சில இடங்களில் இழி வசையாகப் பாவிக்கப்படுகின்றது.) 

அவ்வாறான நிலையில், எந்தவித அக்கறையும் இன்றி, பொதுவெளியில் இழிவசையாக உரையாடுவதற்கு, ‘கௌரவ’ உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் குறித்து மட்டுமல்ல, அவர்களின் கட்சியையும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களையும்கூட, கேள்விக்குள்ளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், சக மாநகர சபை உறுப்பினர் ஒருவரைக் குறித்து, ‘பேஸ்புக்’கில் எழுதிய குலபேத மூதுரையொன்று, பிரச்சினைகளின் ஆரம்பமாக அமைந்தது. 

அந்தப் பிரச்சினை, தொலைக்காட்சி நேரலையில் அடுத்த கட்டத்தை அடைந்து, விடயம் பெரிதானதும் மூதுரைக்கு விளக்கவுரை கொடுத்து, குறித்த உறுப்பினர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். 

ஆனால், அந்த மன்னிப்பு என்பது, தார்மீக உணர்வோடு கேட்கப்பட்டதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், அந்த மூதுரையைக் கௌரவ உறுப்பினர், ‘பேஸ்புக்’கில் எழுதியதும், அதன் நோக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய பலரும் அதனை விமர்சித்திருந்தனர். 

ஆயினும், ‘கௌரவ’ உறுப்பினர், தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் இருந்தார். தமிழ்ச் சூழலில், குறிப்பாக, யாழ். மய்யவாத சூழலில், ‘குலம்’ என்கிற வார்த்தை, என்ன வகையில் கையாளப்படுகின்றது என்பது, அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது. அப்போதும், அவர் அதனைப் புறந்தள்ளினார்.  

அதன் அடுத்த கட்டமாகவே, ‘குலம்’ பற்றி எழுதியவரும், அதைத் தன்னை நோக்கி எழுதியதாகக் கருதிய ‘கௌரவ’ உறுப்பினரும், மற்றவர்களின் பிறப்பு வரையில், சபை அமர்வில் கேலி செய்து, சண்டையிட்டுக் கொண்டார்கள். 

குலம் பற்றி எழுதியவரை, பிறப்பை வைத்துக் கேலி செய்த ஈ.பி.டி.பி உறுப்பினர், தன்னுடைய சில்லறைத்தனத்தை நியாயப்படுத்துவதற்காக, மாநகர மேயர் தொடங்கி, விடுதலைப் புலிகளின் தலைவரின் சாதி வரை, எடுத்துப் பேசியிருக்கிறார்.  

இத்தனைக்கும், இந்த அருவருக்கத்தக்க சண்டையைப் பிடித்து, சட்டையைக் கிழித்துக் கொண்டவர்களில் ஒருவர், அரசியலறிவுத்துறை பட்டதாரி; இன்னொருவர் சிரேஷ்ட சட்டத்தரணி. 

படித்தவர்கள், அரசியலுக்கு வரவேண்டும் என்கிற பல்லவி எழுப்பப்படும் தருணங்களில் எல்லாம், இவர்கள் இருவரும் ஞாபகத்துக்கு வந்தால், அது பெரும் சாபக்கேடு ஆகும்.  

தமிழர் அரசியலில் சாதி, மதவாத அடிப்படை என்பது, இன்று நேற்று உருவான ஒன்றல்ல; ஆனால், விடுதலைப் புலிகள் காலத்தில், ஓரளவுக்கு வேரறுக்கப்பட்ட சாதிய, மதவாத சிந்தனைகள், அவர்களின் காலத்துக்குப் பின்னர், மீண்டும் பழைய வேகத்துடன் வளர்த்தெடுக்கப்படுவதைக் காணும் போதுதான், அச்சமாக இருக்கின்றது. 

குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்புகளிடம் அவை, பெருமளவில் எழும் போதுதான், பெருங்சிக்கல் ஏற்படுகின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை அவை, காணாமலாக்கக் கூடிய வீரியத்துடன் இருக்கின்றன.  

தமிழ் மக்களின் ஏக அங்கிகாரத்தைப் பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்டமைப்பொன்று, சாதிய, மதவாத அடிப்படைகளைக் கொண்டவர்களைக் கொண்டு, தேர்தல் அரசியலைச் செய்ய நினைக்கும் சூழல் என்பது, இன்னும் இன்னும் மோசமானது. 

தமிழ்த் தேசியப் போராட்டத்தோடும், அதுசார் வாழ்வோடும் கிளிநொச்சியின் ஆன்மாகவாக மாறிவிட்ட மலையக மக்களைக் குறித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பேசிய பழிச்சொல்லொன்று, பொதுவெளியில் உலா வந்தது. அந்தச் சொல்லை அவர், எந்தவித குற்றவுணர்வுமின்றிப் பேசியமை, ஒலிப்பதிவில் தெளிவாக இருந்தது. 

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மக்களை அவர் சந்தித்து, விடயத்தைச் சமாளிக்க முனைந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்போ குறித்த விடயம் தொடர்பில், எந்தக் கேள்வியையும் அவரிடம் எழுப்பியிருக்கவில்லை. குறைந்த பட்சம் விளக்கத்தைக் கூடக் கேட்கவில்லை.  

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பல சபைகளில் சாதி அடிப்படையிலான அணுகுமுறை மேலோங்கியது. குறிப்பாக, யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து, கூட்டமைப்புக்கு உள்ளேயே சாதிய பேச்சுகள் எழுந்தன. அது, ஊடக சூழல் வரையில் வியாபித்திருந்தது. 

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரும், அவரது ஆதரவாளர்களும் தற்போதைய மேயருக்கு (அப்போதைய மேயர் வேட்பாளர்) எதிராக, சாதிய விடயத்தை முன்னிறுத்தி, பிரசாரத்தை முன்னெடுத்தனர். 

எப்படியாவது, மேயர் வேட்பாளர் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், தங்களை முன்னிறுத்த முடியும் என்று கருதினார்கள். அதை ஒரு வகையிலான ‘கௌரவ’ நிலைப்பாடாக, அவர்கள் செய்தார்கள். இன்றைக்கு, அதே மாநகர சபைக்குள், ‘கௌரவ’  உறுப்பினர்கள், வெட்கம், மானம் இன்றிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  

தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும், கட்சியொன்று சாதிய, மதவாத, வர்க்க பேத அடிப்படைகளில் இருந்து, தோற்றம்பெற முடியாது. அப்படியாகத் தோற்றம் பெறுமானால், அவை சாதிக் கட்சியாக, மதவாதத்தைப் போதிக்கும் கட்சியாகவே இருக்கும். அப்படியான நிலையில், ஒரு அரசியல் நெறியை அதன் தர்க்க நியாயங்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். 

வெளியில் அனைத்து மக்களும் ஒன்றுதான் என்று முழங்கிக்கொண்டு, கட்சிக்குள்ளும் அதன் கட்டமைப்புக்குள்ளும் சாதிய, மதவாத, வர்க்க பேதங்களை கடைப்பிடிப்பது என்பது, அயோக்கியத்தனமானது. 

ஏற்றுக்கொள்ள முடியாத தவறொன்றை இழைத்தால், அவரை உடனடியாகத் தண்டிக்கும் சூழல் அல்லது, கட்சியிலிருந்து நீக்கும் சூழல் இல்லாத வரையில், இவ்வாறான குறுபுத்திக்காரர்களும் சாதியவாதிகளும் மேலெழுவதைத் தடுக்க முடியாது. இந்த நிலைப்பாட்டை நோக்கி, தமிழர் அரசியலில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் நகர வேண்டும்.  

தமிழ்த் தேசியக் கட்சிகளினதும், அதன் இணக்க அமைப்புகளினதும் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற சாதிய சிந்தனைகள், தொடர்பில் அவ்வப்போது, அதன் உறுப்பினர்களே, பொதுவெளியில் பொருமும் காட்சிகளை நாம் கடந்து வருகிறோம். 

அவை, அவ்வப்போது பேசப்பட்டு, மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால், அதை நிறுத்த முடியவில்லை. ஏனெனில், அடிப்படைகளைச் சரி செய்யாத எதுவும் மீட்சிபெற முடியாது.  

சாதிய, மத ரீதியாக பிரித்தாளுவதன் மூலம், தமிழ்த் தேசியத்தையும் அதன் அரசியலையும் உடைத்தெறிய முடியும் என்று பௌத்த சிங்கள பேரினவாதமும் அதன் இணக்க சக்திகளும் பிராந்திய வல்லரசுகளும் முனைப்போடு இருக்கின்றன. 

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தங்களுக்குள் இருக்கின்ற சாதிய, மதவாத சிந்தனைகளுக்கு கரும்புள்ளியிட்டு, தூக்கித் தூர எறிய வேண்டும். அப்போதுதான், தமிழ்த் தேசியமும்   அதன் ஆதரமான தமிழ் மக்களும் காக்கப்படுவார்கள்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலைச்-சீரழிக்கும்-சாதிய-மதவாத-அழுக்கு/91-244099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குச் சிறந்த தீர்வாக இளைய தலைமுறை  ஒன்றை புதிதாக விதை போட்டு, நீர் பாய்ச்சி, களை பிடுங்கி, உரம் போட்டு, கிளை வெட்டி வளர்க்க வேண்டும். 

இதற்கு ஆரம்பமாக வெளி நாடுகளில் இருந்து TNA க்கு போகும் நிதியை நிறுத்துவதனூடாக ஆரம்பிக்கலாம்.

அடுத்து ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.