Jump to content

அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை.


Recommended Posts

அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை. 

 

இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. 

 

உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்கள். சிறு வயதில் கல்வி முதல், வளர்ந்த வயதுகளில் பொருளாதாரம், நற்குடும்ப வாழ்க்கை, பேரன்கள்/பேத்திகள் என அவர்களின் கனவுகள் நீண்டுகொண்டே போகும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி என்று வாழ பழகிக்கொள்வார்கள். பிள்ளைகள் கூட உலகில் யாரிடமும் கொட்டித்தீர்க்க முடியாத பிரச்சனைகளை அம்மவிடம் சொல்லி ஆறுதலடையகூடிய மைய்யப்புள்ளியாக அம்மா இருப்பா. 

 

அம்மாவின் கனவுகளை/ஆசைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளே அம்மவையும் பிள்ளையையும் இணைக்கும் ஒரு ஒற்றைப்புள்ளி. அதை நிறைவேற்றினாலே பாதி அம்மாக்களை மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும். தன் பிள்ளை கஷ்டப்படாமல் வாழுகிறான் என்ற வசனமே அம்மாவுக்கு நிறை உணவாக இருக்கும்.  

 

சரி எனக்கு உலகத்து அம்மாக்களை விட என் அம்மாவைத்தான் அதிகம் தெரியும். அவவின் கல்விகனவுகளை நான் பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். நற்பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இருக்கிறேன். ரீச்சரின் பிள்ளைகள் என்றால் யார் என்ற அடிப்படை நியமங்களை ஒரளவுக்கேனும் உருவாக்கி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அம்மா எனக்கு விதித்த நியம உயரங்களை எல்லாம் தாண்டி அவவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன். அந்த அடிப்படை அஸ்திவாரங்களை வைத்து அம்மா கட்டிய கோட்டையை என்னால் முழுமையாக பூரணபடுத்த முடியவில்லை. இருப்பினும் கோட்டையை கட்டும் அளவுக்கு அம்மாவை தயார்படுத்தினேன் என்ற திருப்தி எனக்கு எப்பவும் உண்டு. வாத்தியார் பிள்ளைகள் மக்கு என்ற அடிபடை நியமவிதிகளை என் அம்மாவின் பிள்ளைகள் உடைத்தெறிந்து காலங்கள் ஆகிவிட்டன. 

 

அம்மாவின் ஆசைகள் வரையறைகுட்பட்டன அல்ல. அவை காலத்துடனும் சூழ்நிலைகளுடனும் வேரூன்றி விருட்சமாக வளரகூடியன. அம்மாவின் வயசுடன் ஆசைகள் மாறிப்போகும். அறுபது வயதில் கொழும்பில் வீடு வாங்க ஆசைப்பட்ட அம்மா, சாகும்போது பழைய வீட்டில் பலாமரம் நட ஆசைப்பட்டா. இது தான் அம்மா. இது தான் நியதி. என்னால் முடிந்தவற்றை எந்தவித மனகோணலும் இல்லாமல், அதற்கு ஒரு படி மேலே ஆழ்மன திருப்தியுடனே நான் நிறைவேற்ற முயற்சி செய்தேன். இது எந்த வித கண்ணீரும் இல்லாமல் இப்போ இதை எழுத்வதற்காகினும் எனக்கு உதவுகிறது. 

 

தன் பிள்ளைகள் தன் முதுமைக்காலத்தில் தன்னுடன் அல்லது தனக்கு அருகில் இருக்கவேண்டும் என்பது அம்மாக்களின் நியமவிதி. இதில் என் அம்மா விதி விலக்கல்ல. எழுதமுடியாக்காரணங்களுக்காக அம்மாவின் பிள்ளைகள் தூரவே இருந்தாலும் இன்றைய தொழினுட்ப உதவியுடன் அம்மா ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் தன் நடுங்கும் கைகளால், ஏதோ ஒரு வகையில் ஐபோனை இயக்கி தொடர்பெடுக்கும் அம்மவுக்கு ஒரு திருப்தி. 

 

நாங்களே எடுக்காவிட்டாலும், வரும் அழைப்பை நேரமின்மை என்ற ஒற்றை வார்த்தைமூலம் தட்டி கழிக்கும் தருணங்களே அதிகமாகிப்போய்விட்ட காலத்தில் உங்களுக்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அம்மாவின் அழைப்பை மட்டும் எடுக்காது விடாதீர்கள் அது அவவின் கடைசி அழைப்பாக கூட இருக்கலாம். 

அப்படியே அந்த அழைப்பை எடுத்தாலும் உங்களின் உணர்வுகளை அதில் காட்டிவிடாதீர்கள். அன்பாக ஆறுதலாக தூரத்தில் இருந்தாலும் அன்பை காட்டும் ஒரே ஊடகமாக அதனை பாவியுங்கள். இல்லையேல் இந்த குற்ற உணர்ச்சியே உங்களை மெல்ல கொன்றுவிடும். 

 

உங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அடிக்கடி அம்மாவைப்போய் பாருங்கள். நான் வருகிறேன் என்று கேட்டபோது தனக்கு ஆசை தான், ஆனால் நீ வரவேண்டாம் என்று தடுக்கும் உள்ளம் அம்மாவைத்தவிர யாருக்கும் வரமுடியாது. 

 

அம்மா ஆசைப்படும் இடங்களை/ வாழ்ந்த இடங்களை கொண்டு சென்று காட்டுங்கள். அம்மா ஆசைப்படும் உணவுகளை ஒரு தடவையேனும் வாங்கி கொடுங்கள். ஒரு முறையேனும் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள், தன் தட்டில் இருந்து உங்கள் தட்டுக்கு அம்மாபோடும் அப்பளத்திற்கு இருக்கும் சுவை உலகில் நீங்கள் எங்கு சாப்பிட்டாலும் கிடைக்காது. ஒரு முறையேனும் அம்மாவுக்கு அருகில் படுத்து உறங்குங்கள். உங்களுக்கு வியர்க்கும்போது அம்மா மட்டை எடுத்து விசுக்கும் வரம் ஒருவருக்கும் கிடைக்காது. காலையில் ஒரு முறையேனும் பல் துலக்கிவிடுங்கள், முகம் கழுவி விடுங்கள். அவ காட்டும் சாமிக்கு பூப்பறித்து வையுங்கள்.(இவையெல்லாம் நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா நாள் தோறும் செய்தவை.) 

 

அம்மா விரும்பும் பாடல்களை, படங்களை அவவுக்கு போட்டு காட்டுங்கள், அவற்றை பார்க்கும் போது அம்மாவின் முகத்தில் வரும் மலர்ச்சி உங்களின் வாழ்க்கையில் வரலாறாக பதியும். 

அம்மாவை திரும்பி எழும்பி நடக்கவைக்கும் சாத்தியங்கள் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும், அம்மாவின் நம்பிக்கையை எப்போதுமே உடைக்க விரும்பியதில்லை 

 

என் அம்மா தன் சாவுக்கு கூட நான் வந்தால் எனக்கு பிரச்சனை ஆகும் என்று வராமல் தடுக்கும் அளவுக்கு என் மீது பாசம் கொண்டவ. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என பல முறை சொல்லி இருக்கிறா. நான் செய்யும் வேலை என் உடலை வருத்துமா என்று அடிக்கடி கேட்பா. என்னை கஷ்டபடுத்த கூடாது என்று யாழ் சென்று வாழ நினைத்தவ. எனக்கு வேலை இல்லை என்றாலும் என் கஷ்டத்தை அம்மாவுக்கு காட்டினால் எங்கே ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் விட்டுவிடுவா என்று கடன் வாங்கித்தான் கடந்த சில மாதங்களாக காசு அனுப்புவேன். காசு திரும்ப எப்பவும் உழைச்சு கொள்ளலாம், ஆனால் காட்டவேண்டிய அன்பை அரவணைப்பை சரியான நேரத்தில் காட்டவில்லை என்றால் எதை எப்பவும் மீளளிக்கமுடியாது. 

 

என்னை பார்க்க ஐரோப்பா வரும்போதும் அண்ணாவை பார்க்க அவுஸ்ரேலியா போகும் போதும், அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னமே அம்மாவின் தயார்படுத்தல்கள் தொடங்கிவிடும். அம்மாவின் உற்சாகத்துக்கு அளவிருக்காது. இது நாடு பார்க்கும் ஆசை அல்ல. மகன்களை / பேரப்பிள்ளைகளை பார்க்கும் ஆசை. அம்மாக்களுக்கு மட்டுமே வரும் ஆசை. தயவு செய்து தவறவிட்டுவிடாதீர்கள். 

 

நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் ஒரு நாளாவது அம்மாவுடன் தங்குங்கள். அம்மாவின் கையால் ஒரு முறையேனும் ஒரு வாய் சோறேனும் சாப்பிடுங்கள். வாழ்வில் ஒரு முறையேனும் தாயை வீழ்ந்து வணங்குங்கள். அம்மா எப்பவுமே தான் பெற்ற பிள்ளைகளை சமனாகத்தான் பார்ப்பா. கம்முயூனஸம் என்றால் என்ன என்பதை அம்மாவிடம் கற்று தெரிந்து கொள்ளுங்கள்.  

 

சாவு யாரையும் விட்டுவைப்பதில்லை. அது உங்கள் அம்மா என்று தனிப்பட்ட பரிவு காட்டப்போவதுமில்லை. பெற்ற பிள்ளைகள் நாங்கள் இருக்கும்போது பரிவுகாட்டச்சொல்லி கேட்பதில் நியாயமும் இல்லை. பரிவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் இன்னும் தமிழில் நிகர் சொற்களுண்டோ அனைத்தையும் அம்மா வாழும்போதே காட்ட வேண்டிய அனைத்து கடைப்பாடுகளும் எங்களுக்கே உண்டு. 

 

“கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நான் கண் உள்ளபோதே சூரிய வணக்கம் செய்தவன் என்ற தார்மீக உரிமையில் கேட்கிறேன். “அம்மாவை கவனியுங்கள்.” எங்கோ ஒரு ஓரத்தில் உங்களை மட்டுமே தினமும் நினைத்துருகும் ஒரு சுயனலமற்ற உயிர் உள்ளது என்றால் அது அம்மாவின் இதயதுடிப்பு மட்டும் தான். 

 

“தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை”

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.”

“அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே”

“தாய் – கடவுளின் மனித உருவம்”

 

இன்னும் எத்தனையோ தாய் புகழ்பாடும் குறள்களும், பாடல்களும், பழமொழிகளும் வந்தாலும், அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை என்று இன்றும் எழுத வேண்டிவருகிறது என்றால் எங்கோ என்னமோ நாங்கள் பிழைவிடுகிறோம் என்று தானே அர்த்தம். எங்கள் பிழைகளை நாங்கள் மட்டுமே திருத்த முடியும் என்பது உலகறிந்த தத்துவம்.

 

 

நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து   நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை இழக்கும்போதுதான் அனாதை என்று உணர்கின்றோம். உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகலவன் said:

அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. 

பகலவன், தாயை இழந்த வலி எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 2009இல் எனது தாயை இழந்திருக்கிறேன். அப்பொழுது நான் எழுதியது,

தாயின் மடியில்

E9-F4-E399-3-B42-46-B1-ADE7-DF57-AD0-BD9
எனது சிறு வயதில் எனது
தந்தை காலமாகி விட்டதால், எனக்கு எல்லாமாக எனது தாயே இருந்தார். அப்பொழுதெல்லாம் எனது தாயார் நிற்கும் இடத்திற்கு பின்னால் சற்று எட்டிப் பார்த்தால் நான் நிற்பது தெரியும். எனது அம்மா போகும் இடம் எல்லாம் அவரது சேலையின் நுனியைப் பிடித்தபடி நான் போய்க் கொண்டிருப்பேன்.

ஒருநாள் பக்கத்து வீட்டு இரத்தினக்கா எனது அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னார். " இவன் என்ன எப்ப பாத்தூலும் உங்கடை சாறியைப் பிடிச்சுக் கொண்டு திரியிறான். நாளைக்கு உங்களுக்கு ஏதும் ஆச்சுது எண்டால் என்ன செய்யப் போறான்? இப்பிடித்தான் தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் அங்கை ஒரு பிள்ளை பெரிய கஸ்ரப்படுறான்.. " என்று யாருடையதோ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். வேண்டியவர்கள் யாரேனும் ஏதாவது சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் குணம் அம்மாவிடம் இருந்தது. அன்றும் அது அப்படியே ஆயிற்று.

இரவு படுக்கும் போது எனது முன்தலையைக் கோதி விட்டு என்னை நித்திரையாக்கும் எனது தாய் எனதருகில் அன்று படுக்கவில்லை.  அம்மா என்னை விட்டுப் போகாமல் இருக்கும் வண்ணம் அம்மாவின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு அம்மாவைப் பார்த்த வண்ணம் தூங்கிப் போனேன். விடிந்து பார்த்த பொழுது அம்மாவின் சேலை நுனி என் கையில் இருந்தது. அம்மா படுக்கையில் இல்லை. சேலையை மட்டும் என்னிடம் தந்து விட்டு வேறொரு சேலையைக் கட்டிக் கொண்டு அவர் எழுந்து போய் விட்டிருந்தார். எனது தலையைக் கோதி என்னை நித்திரையாக்கும் அவரது பணி முற்றுப் பட்டுப் போயிருந்தது பின்னாளில் விளங்கியது.

சமீபத்தில் எனது தாயார் காலமான போது நியூசிலாந்து சென்று அவரது இறுதிக் கிரிகைகளில் பங்கு பற்றினேன். எல்லாம் முடிந்து அக்காவின் வீட்டில் இருந்த போது அக்கா சொன்னாள் "உனக்கு அம்மாவின் நினைவாக ஏதும் வேணும் எண்டால், அம்மாவின்ரை அறைக்குள்ளை இருக்கு எடுத்துக் கொள்". என்று.

நான் புறப்படும் போது நினைவாக அம்மாவின் அறைக்குள் சென்று அம்மாவின் பொருட்களை அலசத் தொடங்கினேன். அக்கா அம்மாவின் நகைகள், பொருட்கள் என என்னென்னவோ எடுத்துக் காட்டினாள். எனது மனம் ஒரு சேலை மீது நிலை கொண்டிருந்தது. அந்த சேலையை அம்மா தனது 85வது பிறந்த நாளில் அணிந்திருந்தார். கத்தரிப்பூ நிறமுமில்லாமல், மண் நிறமும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒரு அழகிய நிறச் சேர்க்கையில் அந்த சேலை இருந்தது. எனக்கு இது மட்டும் போதும் என்று அந்த சேலையை எடுத்துக் கொண்டேன்.

வெலிங்டனில் இருந்து ஓக்லன்ட் உள் ஊர் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து சர்வதேச விமான நிலையத்திற்குப் போவதற்கு ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு பஸ் சேவை இருந்தது. நான் அங்கு போய்ச் சேர்ந்த போது பஸ் போய் விட்டிருந்தது. இன்னும் இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்து போக வேண்டும். தனியாக அங்கு காத்திருக்க மனது இசையவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.

தோளில் தொங்கும் பையில் அம்மாவின் சேலை இருந்தது. அன்று நான் சிறுவனாக இருந்த போது தனக்கு ஏதும் நடந்து விட்டால் தனித்து வாழப் பழகிக் கொள் என்று என்னிடம் தனது சேலையைத் தந்து விட்டு எட்டிப் போன அம்மா நினைவில் வந்தார். இன்று மட்டும் என்ன தனது சேலையைத் தந்து விட்டு என்னை விட்டுப் போயிருந்தார். நினைத்த போதே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. உள் ஊர் விமான நிலையத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர்கள் என்னை ஒரு விதமாகப் பார்ப்பது தெரிந்தது. நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனது தோளில் இருந்து தொங்கிய அம்மாவின் சேலை இருந்த பையை கைகளால் பற்றியபடி நடந்து கொண்டிருந்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் பகலவன்.பகிர்வுக்கு நன்றி ......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and food

இந்த உலகில்.... அம்மா தான், எமது நெருங்கிய நேரடி உறவு.
அதன் பின் தான்... தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லாம் வரும்.
பலருக்கும்... தாய் இருக்கும் போது, அவரின் அருமைகளை தெரிவதில்லை.

உலகின் பல மொழிகளிலும்... அம்மா என்று தாயை.. 
மம்மி. மம்மா... என்று கூப்பிடும் போது,
அந்த "ம்" என்ற எழுத்து... இருப்பது அதிசயமான  ஒரு ஒற்றுமை.    

மனதை..  கண் கலங்க வைத்த பதிவு. 
நன்றி பகலவன் & கவி அருணாசலம்.

இந்தத் தலைப்பை... 
யாழ். அகவையின்  22´வது சுய ஆக்கங்கள் பகுதியில் பதிந்திருக்கலாம்,
என்பது, எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.