Jump to content

சாய்ந்தமருது நகர சபை: எதிர்பாராத எதிர்வினை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது நகர சபை: எதிர்பாராத எதிர்வினை

மொஹமட் பாதுஷா

ஜனநாயக ரீதியிலான பெரும் போராட்டங்கள், முயற்சிகளுக்குப் பிறகு, சாய்ந்தமருதுக்கான நகர சபைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.  

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, அப்பிரதேச மக்கள் கோரிவந்த தனியான உள்ளூராட்சி சபையைத் தருவதாக ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாகப் பல ஆட்சியாளர்கள் கூறிவந்தாலும், ராஜபக்‌ஷ ஆட்சியிலேயே காலம் கனிந்திருக்கின்றது என்று, எண்ணிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத எதிர்வினைகள் தோற்றம்பெற்று மேலெழுந்துள்ளன.   

கடந்த சில நாள்களாக, இது தொடர்பில் எதிர்பாராத விதமாக மேலெழுந்துள்ள விமர்சனங்கள், எதிர்வினைகள் நல்ல சகுணங்களாகத் தெரிந்திருக்கவில்லை. 

இவ்வாறிருக்கையில், சிங்கள வாக்குகளையும் இனவாதத்தையும் நம்பியிருக்கும், தேசிய அரசியலில் ஏற்பட்ட அதிர்வுகள், கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் உணரப்பட்டன.  

இந்தப் பின்னணியில், அமைச்சரவைச் சர்ச்சைகளை அடுத்து, சாய்ந்தமருது நகர சபைக்கான பிரகடனத்தை வெளியிடும் வர்த்தமானி அறிவித்தல், நடைமுறைக்கு வருவதை இடைநிறுத்தி வைப்பதற்கு அல்லது, செல்லுபடியற்றதாக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.   

இதனடிப்படையில், இவ்வர்த்தமானி செல்லுபடியற்றதாக மாறி, நகர சபைக் கனவு, சாய்ந்தமருது மக்களின் கைகளுக்கு எட்டாமல் போவதற்கான நிகழ்தகவுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், இப் ‘பத்தி’ எழுதப்படும் வரையில், வர்த்தமானியை இடைநிறுத்தும் விதத்திலான, சட்டபூர்வமான எந்த அறிவித்தலும் வெளியாகி இருக்கவில்லை.  

முன்னதாக, 2020 பெப்ரவரி 14ஆம் திகதி, உள்நாட்டலுவல்கள் பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் வெளியிடப்பட்ட 2162/50 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியின் ஊடாக, 2022 மார்ச் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், சாய்ந்தமருது நகர சபைப் பிரகடனம் செய்யப்பட்டது.   

கல்முனை மாநகர சபையின் ஆயுள்காலம் நிறைவடையும் திகதி, மேற்படி மாநகர சபையின் ஆட்புலத்துக்குள் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, புதிய நகர சபைக்குள் உள்ளடக்கப்படும். சாய்ந்தமருதின் 17 கிராம சேவகர் பிரிவுகள், எல்லைகள் பற்றியும் இந்த அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்டிருந்தது.   

கடந்த மூன்று தசாப்தங்களுக்குள், தமக்கு ஓர் உள்ளூராட்சி அதிகார சபை வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராடி, ஒற்றுமையாக நின்று முன்னகர்வுகளைச் செய்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்ற ஒரு பிரதேசமாக சாய்ந்தமருதைக் கருதும் நிலையிருந்தது.   

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற அடிப்படையில் ஒரு பிரதேசம், ஒரு பிராந்தியம், ஒரு சமூகம் ஒருமித்துச் செயற்பட்டால் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவுகள் அதிகம் என்பதை உணர்த்தும் ஒரு பிரதேசமாகவும் சாய்ந்தமருதைக் குறிப்பிடலாம் என்றிருந்தது. 

ஆனால், நிலைமைகள் சடுதியாக மாறிவிட்டன. இருப்பினும், நகர சபை வர்த்தமானி வலிதற்றதாக ஆக்கப்பட்டாலும், ஒற்றுமைக்குச் சாய்ந்தமருது முன்மாதிரியே.  

அந்தவகையில், சாய்ந்தமருது மக்களும் புதிய நகர சபையைப் பெற்றுக் கொள்வதற்காக உழைத்த அரசியல், சமூக சக்திகளும் இவ்வெற்றியை நேற்றுக் காலை வரை கொண்டாடிக் கொண்டிருந்தன. நகர சபைக் கனவு நிறைவேறுவதற்காக உழைத்த பொதுஜன பெரமுன கட்சி முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், தேர்தலை முன்னிட்டு, நிர்வாக சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், வை.எம். ஹனீபா தலைமையிலான சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் போன்ற தரப்புகளை மய்யப்படுத்தியதாக இந்த மகிழ்ச்சி வெளிப்படுத்தல்கள், இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.   இதேவேளை, தமது மாநகர எல்லைக்குள் இருந்து, சாய்ந்தமருதைப் பிரித்து, தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வதால், ஒரு பிரதேசம் என்ற அடிப்படையில் தமக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்தும் தொடர்ச்சியாகக் கூறி வந்த கல்முனை முஸ்லிம் மக்கள், சாய்ந்தமருது நகர சபைப் பிரகடனத்தால் அதிர்ந்து போயிருந்தனர்.  

image_c27ea663c0.jpg

நேற்றுக் காலையில் இருந்தே, அம்மக்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளத் தொடங்கியிருந்தனர் என்பதுடன், கல்முனை மாநகர சபையில் அவர்கள் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பலத்தை, எதிர்காலத்தில் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளலாம்? இதற்கான மாற்று வழிகள் என்ன என்பன போன்ற, அவர்கள் மனதில் உள்ள பலதரப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.  

தனியாக ஒரு நகர சபை, பின்திகதியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டமை, எந்தளவுக்கு முஸ்லிம்களுக்குக் குறிப்பாக, சாய்ந்தமருது மக்களுக்கும் அவர்களின் கோரிக்கையில் நியாயம் கண்டவர்களுக்கும் எந்தளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோ, அந்தளவுக்கு தென்னிலங்கை அரசியலிலும் ஒரு குறிப்பிட்டளவான பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் இவ்விடயம் அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது.  

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், அதற்குப் பின்னர் இடம்பெற்ற சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவங்களை, சாய்ந்தமருது நகர சபை பிரகடனத்துடன் தொடர்புபடுத்தி, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மட்டுமன்றி, அரசியல்வாதிகள் சிலரும் வழக்கம் போல, இதைவைத்து அரசியல் செய்யும் நோக்கில் கருத்துகளைத் தெரிவித்து வருவதைக் காண முடிகின்றது.   

இந்நிலைமைகள், வர்த்தமானியை வாபஸ் பெறுவது குறித்து, அரசாங்கம் சிந்திக்கும் நிலைக்குச் சென்றிருப்பது கவனிக்கத்தக்கது.   கல்முனை மாநகர சபைக்குள் இருந்து, சாய்ந்தமருதை பிரித்தெடுக்கக் கூடாது என்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். அவ்வாறே, ஏன் பிரிக்க வேண்டும் என்பதற்கும் நிறையவே விளக்கங்கள் இருக்கின்றன.   

ஆனால், இதனையெல்லாம் அலசி ஆராயாமல், புவியியல் ரீதியான எந்த அறிவுமின்றி, சாய்ந்தமருதைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தியும் கல்முனை பிரதேச செயலக விடயத்தை இதனுடன் போட்டுக் குழப்பியும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.  

கல்முனை பட்டிண சபை, கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு என இயங்கிவந்த நான்கு கிராமிய சபைகளும் 1987இல் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்ட போது இணைக்கப்பட்டன.   

சாய்ந்தமருதும் இதில் உள்ளடக்கப்பட்ட போதும், அப்போது அவ்வூர் மக்கள் எதிர்க்கவில்லை. என்றாலும், 90களின் பிற்பகுதியில் இருந்தே, உள்ளூராட்சி சபை வேண்டுமென்ற கோரிக்கைகள், முளைவிடத் தொடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.   

இதன் அடிப்படையிலேயே, மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பால், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை தரப்பட்டது. 2001ஆம் ஆண்டு, கல்முனை மாநகர சபையாகியது. அதன்பிற்பாடு, நிலைமைகள் தீவிரமடைந்தன.   

தனியான பிரதேச சபை, நகர சபை வேண்டுமென்று, சாய்ந்தமருதில் இருந்து குரல்கள் எழத் தொடங்கின. கல்முனை மாநகர சபை, தம்மைப் புறக்கணிப்பதாக சாய்ந்தமருது மக்கள் சொன்னாலும் கூட, இந்தக் கோரிக்கைக்குப் பின்னால், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட மேயர் நியமன நகர்வு போன்ற பல அரசியல், பொருளாதார காரணங்கள் இருந்தன.  

இவற்றையெல்லாம் கடந்து, மக்கள் தம்மை ஆள்வதற்கான ஒரு மிகச் சிறிய அதிகார அலகு என்ற கோணத்தில் பார்த்தால் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையில் நிறையவே நியாயங்கள் இருந்தன.   

இந்தப் பின்னணியிலேயே, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த போது, கல்முனை மாநகர எல்லையை நான்காகப் பிரித்து, நான்கு நகர சபைகள் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அது கைகூடவில்லை.  

இதற்கு முக்கிய காரணமும் சிக்கலும் கல்முனை மக்களின் நிலைப்பாடுதான்! கல்முனை என்கின்ற ஊருக்குள் கணிசமான தமிழ் மக்களும் வாழ்கின்ற சூழலில், அங்கு எல்லைப் பிரச்சினை பெரிய இடியப்பச் சிக்கலாக இருக்கின்ற சூழலில், கல்முனை மாநகர எல்லைக்குள் வரும் சாய்ந்தமருதைத் தனியான உள்ளூராட்சி சபையாகப் பிரித்து விட்டால், கிழக்கின் முக்கிய நகரமான கல்முனையில் முஸ்லிம்களின் பலம் குறைவடைந்து விடும் எனப் பயந்தார்கள்.   ஆட்புலம் குறைவது மட்டுமன்றி, முஸ்லிம்களின் வாக்குகள் சிதறுண்டால், மாநகர சபையில் மேயர் பதவிகூடக் கிடைக்காது என்று சொன்னார்கள்; சொல்கின்றார்கள்.  

ஆதலால், கல்முனையைப் பகைத்துக் கொண்டு, சாய்ந்தமருதின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. கல்முனையை நான்கு சபையாகப் பிரித்தோ, வேறு ஒரு நியாயமான அடிப்படையிலோ தீர்வு காண்பதற்கு, அன்றைய ஆட்சியாளர்களுக்குத் திராணி இருக்கவும் இல்லை. ஆனால், கோட்டாபய, மஹிந்த அரசாங்கம் கடந்த 14ஆம் திகதி அதைச் செய்தது.  

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் ஓரணியாகத் திரண்டு, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு, கல்முனை மாநகர சபைக்குத் தமது உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். இதற்குச் சமாந்திரமாக, எழுச்சிப் போராட்டங்களையும், ஜனநாயக முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.  இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. ரணில் அரசாங்கம் தனியான உள்ளூராட்சி சபை தரவில்லை என்ற கோபத்தின் காரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சாய்ந்தமருது மக்களில் கணிசமானோர் மொட்டுச் சின்ன வேட்பாளரை ஆதரிக்கும், ஒரு சவால்மிக்க முடிவை எடுத்தனர்.  

பல தடவை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாஹ்வையும் சந்தித்துப் பேசினர். அதாவுல்லாஹ் சமூக, அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்து கொடுப்பதான முடிவை எடுத்தார். “நான் சொன்னதைச் செய்வேன்; செய்வதையே சொல்வேன்”என்று மஹிந்த ராஜபக்‌ஷவும் வாக்குறுதியளித்தார்.  

கல்முனையில் ஹரீஸ் எம்.பியின் ஆதரவோ மக்களின் கணிசமான வாக்குகளோ அடுத்த தேர்தலில் மொட்டுச் சின்னத்துக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற சூழலில், வாக்குறுதி அளிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை வழங்க ராஜபக்‌ஷ அரசாங்கம் முடிவெடுத்தது.  

ஆளும் கட்சிக்கான சாய்ந்தமருதின் ஆதரவு, ஏ.எல்.எம்.சலீம் அடுத்த தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கவுள்ளமை போன்ற காரணங்களுக்கு மேலதிகமாக, தேசிய காங்கிரஸ் தலைவர், இதை முடித்துக் கொடுப்பது என முழுமூச்சாகச் செயற்பட்டார்.   கடைசி நேரத்தில், சில எதிர் அழுத்தங்கள் வந்தபோதும், அதாவுல்லாஹ்வின் பகீரத பிரயத்தனம் காரணமாக, வர்த்தமானி வெளியாகியதாகச் சொல்லலாம். இதனால், அதாவுல்லாஹ்வைச் சாய்ந்தமருது மக்கள் கொண்டாடினர்.  

 கல்முனையில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, அங்குள்ள முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், வேறு உள்ளூராட்சி மன்றங்களும் உருவாக்கப்படுவதுடன், பிரதேச செயலக நெருக்கடிக்கும் சுமுக தீர்வு காணப்பட வேண்டியுள்ளது; இது வேறு விடயம்.  ஆனால், இந்த விடயத்தைச் சில இனவாத சக்திகளும் அரசியல்வாதிகளும் இப்போது தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா, மரிக்கார் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.   

“நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மரிக்கார் எம்.பி, பின்னர் விளக்கமளித்திருந்தாலும், முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள், இதுபற்றிக் கதைப்பது மிகவும் மோசமான நன்றி மறத்தலாகும்.  

தமது அரசியலுக்காக, ராஜபக்‌ஷ அரசாங்கத்தைச் சூடேற்றுவதற்காக இவ்விடயத்தை, பயங்கரவாதத் தாக்குதல்களோடு தொடர்புபடுத்திப் பேசுகின்ற இழிவான அரசியல் கலாசாரமே இதுவெனத் தோன்றுகின்றது.   

ஒருவேளை, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் சாய்ந்தமருது நகர சபை வழங்கப்பட்டிருந்தால், ராஜபக்‌ஷ சார்பு அரசியல்வாதிகள் இதை இன்னும் அதிகமாக விமர்சித்திருப்பார்கள்.  

இவ்வாறு, பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கைமாறாக கோட்டாபய அரசாங்கம், சாய்ந்தமருது நகர சபையை வழங்கியிருப்பது போன்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுவதும், எதிரணி அரசியல்வாதிகள் இதை வைத்து, அரசியல் செய்ய விளைவதும் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணம், சாய்ந்தமருது மக்களின் அளவு கடந்த கொண்டாட்டங்கள் என்றும் கூறலாம்.  விமல் வீரவன்ச போன்றோர், இவ்விடயத்தை பேசியுள்ளனர். அமைச்சரவை குறித்த வர்த்தமானியை அங்கிகரிக்கவில்லை.  எனவே, அரசாங்கம் இந்த நகர சபை பிரகடன வர்த்தமானியை வாபஸ் பெறலாம்.  எவ்வாறிருப்பினும், வாபஸ் பெறாமல், இந்த வர்த்தமானி அமுலுக்கு வருவதை இடைநிறுத்தும் அறிவிப்பையே அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.  

ராஜபக்‌ஷ அரசாங்கம், அந்தளவுக்குத் தமது காலடியைப் பின்னோக்கி எடுத்து வைக்காது என்றாலும், இனவாதமும், அவசர அவசரமாக நடந்து கொண்டதும், அளவுமீறிய கொண்டாட்டங்களும் இதற்குப் பின்னால் பலமான அழுத்தமொன்றைப் பிரயோகித்துள்ளன எனத் தெரிகின்றது.   இது விடயத்தில் சாய்ந்தமருது மக்களும் அதாவுல்லாஹ் போன்ற அரசியல்வாதிகளும் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.  

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சமகாலத்தில் கல்முனை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் அங்கு மேலதிகமாக நகர சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், ஹிருணிகா போல கருத்துத் தெரிவிப்போருக்கு, ஐ.தே.கவில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் விளக்கமளிக்க வேண்டும். ஆளும் கட்சியில் இருந்து சர்ச்சைகளைக் கிளப்புவோருக்கு, மொட்டு சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் விளக்கமளிக்க வேண்டும்.  

உண்மையில் இந்த வர்த்தமானி வாபஸ் பெறப்படுமானால், செல்லுடியற்றதாக ஆக்கப்படுமானால் ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்குப் பின்னடைவுதான். அதாவுல்லாஹ்வின் அரசியலுக்கும் சறுக்கலாகவே அமையும். நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்ற ஒரு விவகாரம் தொடர்பாகத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல், வர்த்தமானி வெளியிடப்பட்டு, வாரத்துக்குப் பின்னர் தூங்கி எழுந்தது போல் ஓடிவந்து, செல்லுபடியற்றதாக்குவது நல்லதாகத் தெரியவில்லை.   

சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமன்றி, கல்முனையில் உள்ள முஸ்லிம்கள், தமிழர்களுக்கும் சமகாலத்தில் தீர்வு வழங்கவே இதைச் செய்கின்றோம் என்பது கொஞ்சம் உண்மை என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கின்ற காரணங்களை, விளங்க முடியாதளவுக்கு முஸ்லிம்கள் மடமைச் சமூகம் அல்ல.  

வெளி மாவட்டத்திலிருந்து வரும் வேட்பாளர்களின் மனக்கணக்கு

 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மூன்று, நான்கு பிரதான கட்சிகள் நேரடியாகவோ சிலவேளைகளில் கூட்டணி அமைத்தோ போட்டியிட உள்ளதாகத் தெரிகின்றது.   

இந்தப் பின்புலத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுஜனப் பெரமுன,  ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாஸ தலைமையிலான இதயத்தில் போட்டியிடும் என அனுமானிக்க முடிகின்றது.தமிழ்க் கட்சிகளும் இதையொத்த நிலைப்பாடுகளையே எடுக்கும் எனலாம்.  

இந்தச் சூழலில், சில அரசியல்வாதிகள் தமது சொந்த மாவட்டத்தில் அல்லாமல், வேறு மாவட்டங்களில் போட்டியிட மனக்கணக்குப் போடுவதாகத் தெரிகின்றது. பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவர் ‘சாடைமாடை’யாக இதை அறிவித்தும் உள்ளனர்.  

இது இலங்கை அரசியலுக்கோ, முஸ்லிம் அரசியல் களரிக்கோ புதிதல்ல. வழக்கமாக நடப்பதுதான். 

பல சிங்கள அரசியல்வாதிகள், வேறு மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும் களமிறங்கிய வரலாறு இருக்கின்றது.  

ஆனால், ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் பிறந்து, போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரே, தமக்கு வாக்களித்த மக்களுக்குப் போதுமான சேவை செய்வதை காணக் கிடைப்பதில்லை. இவ்வாறிருக்கையில், இவ்வாறு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வாக்குகளைச் சுருட்டிக் கொள்வோர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமக்கு வாக்களித்த மக்களைத் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை. 

எனவே இந்தப் போக்கு தடை செய்யப்பட வேண்டும்.  

ஒரு மாவட்டத்துக்கான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வரையறுக்கப்பட்டதாகும். இது அங்குள்ள மக்களின் உரிமையாகும். எனவே, இப்போதே வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பதில், போட்டாபோட்டி நிலவுகின்ற சூழலில், வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வந்து களமிறக்க அனுமதிக்க முடியாது.  

ஒரு மாவட்டத்தில், வேட்பாளருக்கு ஆள் இல்லை என்றால், வெளியாள் ஒருவரை அனுமதிப்பது பரவாயில்லை. அவ்வாறில்லாத பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் பிறந்த அல்லது, குறிப்பிட்ட காலம் வசிக்கின்ற ஒருவரையே வேட்பாளராக நியமிக்க முடியும் என்ற விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.  

நாடாளுமன்ற உறுப்புரிமையை எடுத்துக் கொண்டு கட்சி தாவுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தோல்வியடைந்த வேட்பாளருக்குத் தேசியப்பட்டியல் கொடுக்கக் கூடாது என்றும், ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு வரையறை விதிக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுவது போல இது விடயத்திலும் விழிப்புணர்வு அவசியமாகும்.  

அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், தேர்தல் சட்டத் திருத்தங்கள் வந்தாலும், வராவிட்டாலும் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது. வெளிமாவட்ட வேட்பாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாய்ந்தமருது-நகர-சபை-எதிர்பாராத-எதிர்வினை/91-245858

Link to comment
Share on other sites

போட்டவெடியெல்லாம் வீணாப்போயிட்டுதே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.