Jump to content

மகஇகவில் இருந்து மருதையன் விலகல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகஇகவில் இருந்து மருதையன் விலகல்!

45.jpg

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார்.

கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார்.

 

24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் இருவரும் தம் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர்.

இதுகுறித்து மருதையன் இன்று (பிப்ரவரி 24) விளக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

 

அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.

 

சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு பதிலிப்போர் நடத்தினர்.

1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.

 

தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, குற்றத்தை என் தலையில் சுமத்தினர். ‘போம்பழியெல்லாம் அமணன் தலையோடே’ என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது.

அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர். அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

ஆனால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த தந்திரசாலிகள்தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.

 

இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள்.

அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை.

முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, எனக்கு நானே நீதிபதி என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை.” என்று விளக்கம் அளித்திருக்கிறார் மருதையன்.

மேலும் அவர், “ ஜனவரி 11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம் என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள்.

ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது போல, என்மீது பொய்வழக்கு தொடுத்து வெளியே தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்.

மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை.

நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன் என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் வெளியேறுகிறேன் என்று சொல்வதை விட, வெளியேற்றப்படுகிறேன் என்பதே உண்மை.

“இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு – அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. அமைப்பு நலன், அமைப்பு முறை என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே. நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்” என்று உருக்கமாக விளக்கி முடித்திருக்கிறார் மருதையன்.
 

https://minnambalam.com/public/2020/02/24/45/maruthaiyan-makaika-resigned-from-all-positions

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.