Jump to content

யாழ் சுமந்த சிறுவன் - தீபச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சுமந்த சிறுவன் - தீபச்செல்வன்.

jaffna-boy.jpg

சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில்  தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன. கிளிநொச்சியின் பேருந்து நிலையம் என்பது பெரிதாக கொப்புகள் இல்லாத ஒரு பாலைமரம்தான். அது காயம்பட்ட பறவையைப் போல நெளிந்து நின்றது. அதன் சிறு நிழலில் பேருந்துகள் வந்து தரிப்பதுவும் போவதுமாய் இருந்தன.

தமிழீழப் பேருந்து நிலையத்தின் வெட்டி வீசப்பட்ட மஞ்சள் தகரங்களில் ஒரு பெட்டிக்கடை. மணிக்கூட்டையும் வழியையும் மாறி மாறிப் பார்க்கும் சத்தியனை கவனித்துக் கொண்டே தோள் துண்டினால் தண்ணீர் போத்தல்களை துடைத்துக் கொண்டிருந்தான் தங்கராசா. “என்ன சத்தி அண்ணை.. வீட்டுக்கு ஆரோ விருந்தாளி வாறினமோ?..” வெளித்தட்டில் வெற்றிலை சரைகளை அடுக்கிக் கொண்டு கதை குடுத்தான். “ஓம்… ஓம்… கொழும்பிலை இருந்து ஒருத்தர் வாறார்…” வழியை பார்த்துக் கொண்டே பதில் சொன்னான் சத்தியன்.

வீழ்ந்து கிடக்கும் நகரின் சுவர்களில் எல்லாம் ஏதேதோ எழுதப்பட்டிருந்தன. வீதி ஓரங்கள் எங்கும் சாம்பலும் துகளும் படிந்திருந்தன. ஒரு பேருந்து வந்து தரித்தது. கண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்குமான பேருந்து. கொழும்பில் இருந்து வவுனியா வரை புகையிரத்தில் வந்த ரோஹித் தான் ஏறியிருப்பது, வவுனியா யாழ்ப்பாண பேருந்து என்றும் அதன் இலக்கத்தையும் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

சத்தியன் ஒரு பத்திரிகையாளன். யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரிப் பத்திரிகையில் வேலை செய்யும் அவன், தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளிலும் ஈழத்து விசயங்களை எழுதுவான். தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் சுந்தரம்தான் இவனுக்கு ரோஹித்தை அறிமுகப்படுத்தினார். ரோஹித் குணரட்ண பிபிசியில் வேலை செய்கிறார். அவர் ஒரு முக்கியமான விசயமாக கிளிநொச்சி வருவதாகவும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் மிகுதி விசயங்களை நேரில் ரோஹித பேசுவார் என்றும் சுந்தரம் தனது கடிதத்தில் எழுதியிருந்தான்.

தொலைபேசியில் குறிப்பிட்ட இலக்கத்துடன் வவுனியா பேருந்து  வந்து தரிக்கவும் ரோஹித் இறங்கினார். அவரின் கண்கள் முழுதும் தேடல் அலைச்சலின் படிவு. கண்ணாடியின் மேலாய் அங்கும் இங்கும் பார்த்தார். “நான் இஞ்ச நிக்கிறன்..” என்றபடி கையசைத்துக் கொண்டே ரோஹித்தை நெருங்கிய சத்தியன் கைகளைப் பற்றி அவரை வரவேற்றான்.

ரோஹித்தின் கைகளில் இருந்த பைகளில் ஒன்றை  வாங்கிக் கொண்டு சைக்கிளை ஸ்டாண்ட் தட்டி எடுத்தான் சத்தியன். “ஏறுங்கோ உதிலை பக்கத்திலைதான்…” ரோஹித்தின் கண்கள் நகரத்தில் அங்கும் இங்குமாய் தென்படும் மனிதர்களின் பின்னால் அலைந்தன. பார்வையில் பெருந் தவிப்பு. இடிந்த கட்டிடங்களிலிருந்து வரும் காற்றில் அவரது மெல்லிய வெண்மைக் கேசங்கள் பறந்தன.

“கிளிநொச்சியிலை சண்டை நடக்கேல்லை… ஆனால் எல்லாம் அழிஞ்சிருக்குது..”  ரோஹித் தமிழில் ஓரளவு பேசினார். “கிளிநொச்சியை புடிச்ச பிறகு வுட்ட போட்டாக்கள் வீடியோ எதிலையுமே இப்பிடி எல்லாம் டமேச் ஆக இல்ல..” சத்தியன் தலையசைத்து ஆமோதித்தான். “பிறகுதான் எல்லாத்தையும் அழிச்சிருக்கினம்…” சத்தியன் சொன்னபோது, ஏன் அப்பிடி செய்யப்பட்டது என்பதை உணர்ந்தாற் போல கண்களை மூடினார்.

தமிழீழ சட்டக் கல்லூரியும் தமிழீழ நீதிமன்றமும் அருகருகே கூரைகள் சிதைக்கப்பட்ட நிலையிலிருந்தன. சைக்கிளை ஒருமுறை நிறுத்துமாறு பாவனை செய்தார் ரோஹித். நிழலரசின் நினைவுகள் அவரை உறுத்தியிருக்க வேண்டும். ஏதேதோ எழுதப்பட்டிருப்தைப் போல காயம் பட்ட அந்த சுவர்களை நன்றாகப் பார்த்தார். வெள்ளியில் பொறிக்கப்பட்ட பெயர்பலகையில் புலிச் சின்னத்தின் பாயும் கால்கள் மாத்திரம் இருந்தன. திரும்பவும் சைக்கிளை எடுத்தான் சத்தியன். இறக்கமான உள்ளொழுங்கையில் சைக்கிள் மிதந்தது.

சத்தியனின் காணியில் ஒரு சின்ன வேப்பமரம் மாத்திரம் தப்பியிருந்தது. அதன் அருகே தகரக்கால்களினால் ஆனதொரு கூடாரம். அதற்கும் சாளரங்கள் உண்டு. தொண்டு நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டதொரு கதவு. வேப்பமரத்தின் கீழாய் செல்லில் முறிந்த தென்னம் குத்தியொன்றுதான் இருக்கை. தனது உடுப்புப்பையை நிலத்தில் வைத்துவிட்டு அத் தென்னங்குற்றியில் அமர்ந்தார் ரோஹித். மெல்லிய வேம்பின் காற்று முகத்தில் மோதி களைப்பை தணித்தது.

கவிதா தேநீரை கொண்டு வந்து வைத்தாள். அந்த தேநீர் கோப்பையிலும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயரிருந்தது. ஆவி பறக்கும் அந்த தேனீரை தாகம் அடங்க மடமடவென குடித்தார். சத்தியனின் மகன் மாறனின் செருப்பொலி கேட்கவும் படலைப் பார்த்தார் ரோஹித். அவனைக் காணவும் அவர் கண்களில் ஏக்கம் மினுமினுத்தது. கைகளை காட்டி எதனையோ கேட்க முற்பட்டார் ரோஹித்.

“இவர்தான் என்ட பொடியன்.. பள்ளிக்கூடத்தாலை வாறார்..”

மாறன் வந்து சத்தியனின் மடிக்குள் அமர்ந்து கொண்டான்.

“இவர் ஆரப்பா…” என்றபடி சத்தியனின் தலையை அணைத்துக் கொண்டே காதுக்குள் குசுகுசுத்தான் அவன். “இவர் ரோஹித் மாமா… லண்டனிலை இருந்து வந்திருக்கிறார்…” செல்லமும் வெட்கமும் கலக்க ஆவென்றபடி சிரிக்கும் மாறனைப் பார்க்கும்போதும், ரோஹித்திற்கு தான் தேடி வந்த அந்த சிறுவன் திரும்பவும் நினைவில் மிதந்தான்.

ரோஹித் சத்தியனைப் பார்த்து அக் கதையை சொல்லத் துவங்கினார்.

“அது கடுமையான சண்டை நடந்த நேரம். மே 16 அல்லது 17 ஆக இருக்க வேண்டும். பிபிசிக்கு வந்த வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சிகளை பார்த்து மிக மனமுடைந்து போய் விட்டேன். உலகின் பெருந்துயர் மிகுந்த காட்சிகள் அவை. தமிழ் மக்களை நாம் நம்முடைய மக்களாக பார்க்கவில்லை என்பதே எனக்கு நிம்மதியை இழக்க வைத்தது. இன்னொரு நாட்டு மக்களைத்தான் ஒரு அந்நிய அரசு இப்பிடி எல்லாம் செய்யும். சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று வேறுபாடற்று இறந்து கிடந்தனர். எங்கும் மரணத்தின் நெடில். போரின் பெரும்புகை. அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவனைக் கண்டேன். எல்லோரும் கைகளில் ஏதும் இல்லாமல் கண்ணீரோடும், வெறுமையோடும் போகிறார்கள். போகுமிடம் அறியாது போகிறவர்கள் மத்தியில், அந்த சிறுவன் மாத்திரம், ஒரு யாழினை சுமந்து சென்றான். அந்தக் கணத்திலிருந்து அவன் என் உறக்கத்தை கலைத்து விட்டான். யார் அவன்? அந்த யாழுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? அவனிடம் ஏதோ ஒரு கதையிருக்கிறது. என்னால் தெரிந்துகொள்ளாமல், லண்டன் திரும்ப முடியாது.. அவனை நான் எப்படியாவது பார்க்க வேண்டும்… பார்த்துவிடுவேன்…”

முடித்துவிட்டு, ஒரு கேவலுடன் முகத்தை குனிந்தார் ரோஹித்.

அவரின் கரங்களைப் பற்றி சத்தியன் ஆறுதல் படுத்தினான். மறானின் முகம் வாடிற்று. கைகளில் யாழ் சுமந்த அந்த சிறுவனின் படம் இருந்தது. வீடியோவில் பிரதியெடுக்கப்பட்ட அந்தப் படம் தெளிவற்றது. மீண்டும் மீண்டும் ரோஹித் அந்தப் புகைப்படத்தை பார்த்தார். அவர் கண்கள் உடைந்தன. யாழை சுமந்து மக்களுடன் மக்களாக செல்லும் சிறுவன் ஒருவனின் பின் தோற்றம். சத்தியன் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான். அவனுக்கும் அச் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாட் காலை, ரோஹித் எழுந்து குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றார். தண்ணீருக்குள் தப்படித்துக் கொண்டிருந்த மாறன் ஓடிச் சென்று துவாயை சுற்றிக் கொண்டு வெட்கத்தில் நெளிந்தான். அருசி மாப் பிட்டும், பச்சை மிளகாய் சம்பலும் ரோஹித்திற்கு நன்றாக பிடித்துப் போய்விட்டது. “தங்கச்சி, சாப்பாடு மிச்சம் நல்லம்.. நம்படே சாப்பாடவிட உங்க சாப்பாடு மிச்சம் ருசி…” ரோஹித் இலேசாக புன்னகைக்க முயன்றார்.

மாறன் முன்னால் இருக்க, ரோஹித்தை பின்னால் சைக்கிளில் ஏற்றிக் கொண்டான் சத்தியன். “மாமா பைய்…” மாறனின் கையசைப்பு ரோஹித்தின் மனதில் மெல்லிய பனித்துளிகளைப் போலப் பட்டது. மாறனை பாடசாலையில் இறக்கிவிட்டு, பாடகர் செந்தாளனின் வீட்டை நோக்கி சைக்கிளை செலுத்தினான் அவன். அந்த சிறுவன் இசையுடன் தொடர்புடையவனாக இருக்கலாம், பாடகர்கள், இசையமப்பாளர்கள் யாருக்கும் அவனை தெரிந்திருக்கும், அவர்கள் பள்ளியில் அல்லது ஏதாவது நிகழ்வுகளில் அவனை சந்திருப்பார்கள் என்று ரோஹித் கூறினார். ஆனால் இப்படி ஒரு சிறுவனை தனக்கு தெரியவில்லை என்று வெறுமையாக தலையசைத்தான் செந்தாளன்.

“சண்முகன் ஐயாட்டை ஒருக்கால் கேளுங்கோ. அவர் சின்னப் பிள்ளையளுக்கு இசை வகுப்புக்கள் எடுத்தவர்…”

சண்முகனின் வீடு நோக்கி முல்லைத்தீவுக்கு பேருந்தில் பயணம் துவங்கியது. இடையில் பேருந்து நிறுத்தப்பட்டு, பைகள் சோதனையிடப்பட்டன. ரோஹித்தின் ஊடக அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த சிப்பாய் தீவிரவாதியைப் போல அவரைப் பார்த்தான்.

மாத்தளனை அடைந்தது பேருந்து. விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போர் தளபாடங்களை காட்சிக்கு வைத்திருந்தனர் இராணுவத்தினர். அவற்றை பார்வையிட நிறை நிறையாய் சிங்களச் சனங்கள். “பரவாய் இல்லே, இது உங்கட வீரத்தை மிச்சம் எங்கட மக்களுக்கு சொல்லும்…” ரோஹித்தின் பார்வையில் பெருமிதமிருந்தது.

முள்ளிவாய்க்கால் நெருங்கவும் அவர் தன்னை அறியாமலே இறங்கி நடக்கத் துவங்கினார். யாழ் சுமந்த சிறுவன்  அவரது கண்களுக்கு நன்றாகவே தெரிந்தான். பிணக்குவியல்கள் ஒருபுறம். குண்டுகளின் புகையும் நெருப்பும் சூழ்ந்த நிலம். சனங்கள் திசையறியாது செல்கின்றனர். எங்கும் காயங்களும் குருதியின் நிணமும்.. இறந்து கிடந்த போராளிகளின் மத்தியில், இன்னமும் துவக்குகளை நீட்டி சண்டை செய்கிறான் ஒருவன். அந்த சிறுவனை நெருங்குகிறார் ரோஹித். தனிமையில் உழன்று கத்தும் ஆட்காட்டியின் குரல், அவரது நினைவை உலுப்பிற்று.

எத் தடயங்களுமின்றி பற்றைக் காடுகளுடன் வெளித்திருந்தது முள்ளிவாய்க்கால். அந்தப் பற்றைகளுக்குள் இரகசியப் பறவைகள் முட்டையிட்டிருப்பது போலிருந்தது. அந்த சிறுவன் அந்தப் பற்றைகளிலிற்குலிருந்து வந்தாலென்ன என்று அவர் முணுமுணுத்தார். வெறும் காற்று வந்து முகத்தில் மோத அவர் நினைவுக் கடலில் இருந்து இடையிடையே கரைதொட்டு மிதந்தார்.

நந்திக்கடல், வட்டுவாகல் பாலம்… லண்டனிலிருந்தபடி, விடியோக்களில் தன்னை தின்றுழுப்பிய இடங்கள் அவருடன் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தன. இராணுவம் அவனை கொன்றிருக்குமா? போரில் எத்தனை சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்களில் ஒருவன் தனா அந்தச் சிறுவன்.. இல்லை… அந்த பிணங்களின் அருகே யாழ் ஏதுமே இருக்கவில்லையே.. அப்படியெனில் அந்தச் சிறுவன் இந்த வழியாய் சென்று இராணுவத்திடம் சரணடைந்திருப்பான் என்று சத்தியனுக்கு சொல்ல, அவனும் தலையசைத்துக் கொண்டான்.

இராணுவத்தினர் போரின் வெற்றி நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தனர். முல்லைத்தீவு வந்துவிட்டதை ரோஹித் உணர்ந்து இறங்குவதற்கு ஏதுவாக எழுந்து கொண்டார்.

உடைந்துபோனதொரு வீடு. ஒரு அறையின் மேலால் தாழ்ப்பாள்களை இழுத்துக் கட்டி, பழந்தடிகள் போடப்பட்டிருந்தன. சண்முகன் எழுந்து வந்தார். நெற்றி நிறைய திருநீறு. வெள்ளை வேட்டியை அவிழ்த்து விட்டபடி நடந்தார். கொண்டையை முடிந்து கொண்டார். அவரது மெல்லியதான பார்வையும் அசைவுகளும் பாடலைப் போலிருந்தன. அவர் உள்ளே அழைத்துச் சென்றார். உடைந்துபோன பலகைகளில் செய்யப்பட்ட இருக்கையில் சத்தியனையும் ரோஹித்தையும் இருக்கச் சொன்னார். அவரது மனைவி, தேசிக்காய் தண்ணியை கொண்டு வந்து வைத்தாள்.

சண்முகன் பெரிய இசையமைப்பாளர் என்பது ரோஹித்திற்கு தெரியும். அவரின் பாடல்கள்  பிபிசி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பட்டுள்ளன. அத்துடன் பிபிசியின் உலகளவிலான போட்டிகளிலும் சண்முகனின் பாடல்கள் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன.

சத்தியன் விசயத்தை சொன்னான்.

“நீங்கள் கிளிநொச்சியில இருந்த காலத்திலை இப்பிடி ஒரு பொடியனை கண்டிருக்கிறியளே? உங்களிட்ட படிச்ச மாதிரி ஏதும்?…”

அந்தப் புகைப்படத்தை பல கோணங்களிலும் பார்த்தார் சண்முகன். பிடிபடவில்லை. நெடுநேரமாய் பதிலற்று யோசித்தார். பெருத்த ஆவலுடன் அவரின் கண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ரோஹித். “என்னிட்டை நிறையப் பொடியள் படிச்சவங்கள்தான். எனக்கு சரியாய் பெடியனை தெரியேல்லயே… இந்தப் படத்திலை முகமும் வடிவாய்த் தெரியேல்லையே…” சண்முகன் முகத்திலும் ஏமாற்றமும் சோகமும் வியர்த்தது. புகைமண்டிய அந்தப் புகைப்படத்திற்குள் இன்னமும் வெகு தூரத்திற்கு அவன் தொலைவதைப் போலிருந்தது. ரோஹித்தின் கண்கள் ஏமாற்றத்தில் தத்தளித்தன.

கிளிநொச்சியில் தமிழீழ நுண்கலை கல்லூரியில் சிலவேளை படித்திருப்பான் என்றும் அதற்கு பொறுப்பாயிருந்த இசையரசனை ஒருமுறை கேட்குமாறும் சண்முகன்  சொல்லி வழியனுப்பி வைத்தார்.

இராணுவத்தினர் உடைந்த கடைக்கட்டிடங்களின் மேலே காவலரண்களை அமைத்திருந்தனர். அவர்களின் துவக்குகளின் வாய் ஏதோ சொல்ல முற்படுவதைப் போலிருக்கவும் திடுக்கிட்டார் ரோஹித்.

துவக்குகள் ஓய்ந்த பின்னரும், அமைதியில்லை. அது எப்போதும் வெடிக்க காத்திருக்கிறது என்ற நினைவுகள் ஒரு புறம். அந்த சிறுவனை தேடிக் கண்டு பிடிக்க முடியாதோ என்ற ஏக்கம் மறுபுறம், ரோஹித் உழல்ந்தார்.

இசையரசனை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.“இஞ்ச முன்னாள் போராளிகள் காரணம் இல்லாமல் எல்லாம் கைது செய்யப்படுறினம்.. எல்லாநேரமும் அவையள் கண்காணிக்கப்படுறினம்…”  இசையரசனின் தொலைபேசியை அணைத்து வைத்திருப்பதன் காரணத்தை சத்தியன் ரோஹித்திற்கு தெளிவுபடுத்தினான். விளங்கிக் கொண்டு தலையசைத்தபடி சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்த ரோஹித், சத்தியனை தட்டி அழைத்தார்.

“அந்த பொடியனுக்கு 2009இல, ஒரு பத்து பதினொரு வயசு அப்பிடி இருக்கும். இப்பகூட அவன் எந்த ஸ்கூல்ல சரி படிப்பான்… நாம கொஞ்சம் ஸ்கூல்களுக்கு போய் பாக்கிறது? அவனை அங்க கண்டு புடிக்க சான்ஸ் இருக்கு தானே” ரோஹித்தின் யோசனை மிகவும் சரியாகப்பட்டது சத்தியனுக்கு. அவன், கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் உள்ள சில பள்ளிகளுக்கு செல்லுவதற்கு பட்டியல் இட்டான்.

இடிந்த பாடசாலைக் கட்டங்களுக்குள் உடைந்த மேசை கதிரைகளை வைத்து வகுப்புக்கள். தாழ்ப்பாள் கூடாரங்களாக சில வகுப்பறைகள். பாடசாலைகள்மீது குண்டுகளைவீசுபவர்களை நினைக்க ரோஹித்திற்கு கடும் வெறுப்பாகவும் குற்ற உணர்வாகவும் இருந்தது. இப்படியெல்லாம் நடந்திருக்கக்கூடாது, இனியும் நடக்ககூடாது என நினைத்துக் கொண்டார்.

காலைப் பிரார்த்தனையில், அதிபர், ரோஹித்தையும் சத்தியனையும் அறிமுகப்படுத்தி, இவர்கள் ஏன் வந்திருக்கின்றார்கள் என்றும் அதிபர் மாணவர்களுக்கு சொன்னார். மாணவர்கள் மத்தியில் சென்று தாம் அவர்களுடன் உரையாடலாமா என்று சத்தியனை கேட்க, அதிபர் அனுமதிக்கவும் ரோஹித் மாணவர்களிடையே சென்றார்.

ரோஹித்தின் விழிகள் அந்த சிறுவனைத் தேடின. மளமளவென ஒவ்வொரு முகங்களையும் தேடிக் கொண்டே ஓடினார். எல்லா சிறுவர்களும் யாழ் சுமந்த சிறுவனைப்போலவே இருந்தனர். அவரின் கைகள் நடுங்கின. அவர் ஒரு மாணவனுக்கு அருகில் போய் நின்று சத்தியனை அழைத்தார். “இது நீங்க தானே? யாழோடை நீங்கள் முள்ளிவாய்க்கால் சண்டைக்குள்ள போனதா?” அவன் ஏதுமறியாதவனாய், “அது நான் இல்லை..” என நடுங்கியபடி தலையசைத்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்தது. ரோஹித் தலையை தடவிவிட்டு நகர்ந்தார்.

பாடசாலை விட்டு வரிசையாக வீடு திரும்பும் மாணவர்களை பார்த்துக் கொண்டே நின்றார். இத்தனைக்குப் பிறகும் புத்தகங்களை சுமந்து இடிந்த வகுப்பறைகளுக்கு சென்று திரும்பும் குழந்தைகள் அவருக்கு ஒரு நம்பிக்கையை தந்தனர். கால்களற்ற, கண்களற்ற, கைகளற்ற மாணவர்களின் முகங்களும் இனி தனது உற்றகத்தை கலைக்கப் போகிறதென நினைத்துக் கொண்டார் போலும். ஒரு பெருமூச்சுடன் வெளியிற் சென்றார்.

உறக்கமற்ற கண்களின் மேலாய் நினைவுகள் ஊர்ந்தன. நெஞ்சில் இரும்புத் துப்பாக்கி துளையிட்ட பாலச்சந்திரன், கைகள் பின்புறமாக கட்டப்பட்ட சிறுவர்கள்.. அடித்துக்கொல்லப்பட்டு சேற்றில் எறியப்பட்ட சிறுவன் எல்லோரும் அன்றிரவு ரோஹித்தின் நினைவுகளில் அலைந்து திரிந்தனர். அவர், யாழ் சுமந்த சிறுவனை அவர்களிடம் விசாரித்துக் கொண்டே சென்றார். அவனை தெரியவில்லை என அவர்களும் கைவிரித்தனர். அவனுக்கு ஏதும் நடந்திருக்காது என்று தன்னை தோற்றிக் கொண்டார்.

அந்த சிறுவர் இல்லத்தில், சிறுவர்கள் காலை உணவை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ரோஹித்தை கண்டதும் எழுந்து வணக்கமிட்டு அமர்ந்து கொண்டார்கள். அந்த இல்லத்தில் குடும்பத்தில் எல்லோரையும் இழந்த பல சிறுவர்கள் இருந்தார்கள். “என்னட்ட குடும்ப அட்டை இருக்குது.. நான் தான்  என்ட குடும்பத்துக்கு தலைவன்.. சண்டை முடிஞ்சு வந்தம்.. அம்மாவையும் காணல்லை… அப்பா செல்லடியிலை முதலே செத்திட்டார்..” அந்த சின்ன மனிதர்கள் பேசும் அபூர்வக் கதைகளால் ரோஹித்திற்கு உயிர் அறுபடும் வலி. “அதிலை இருக்கிறது நான் இல்லை…” இந்த வார்த்தைகள்தான் எல்லோரிடம் இருந்தும் வந்தது.

“நல்ல சட்டை… சாப்பாடு… இருக்க இடம்கூட இருக்கலாம்.. ஆனா அம்மா, அப்பா.. சகோதரம் இல்லாத லைப் வேஸ்ட் சத்தி… இந்த குழந்தைகளோடை கண்ணில அந்த ஏக்கம்தான் இருக்குது… முகத்தில.. அந்த சோகம் மட்டும்தான் இருக்குது…”

செஞ்சோலை, பாரதி இல்லம் என்று இன்னும் சில இல்லங்களுக்கு ரோஹித் ஏறி இறங்கினார். அவனைக் காணவே இல்லை. எங்கிருக்கிறான்? என்று மனம் அந்தரித்தது. இன்று பார்த்துவிடலாம். நாளை பாத்துவிடலாம் என்பது பொய்துக் கொண்டே இருந்தது. கண்கள் சுருள மறுத்தன.

மறுநாள் எழுந்த ரோஹித் ஒரு முடிவுக்கு வந்தார். தனது உடைகளை மடித்து உடுப்பு பையில் அடுக்குவதை கண்டதும் சத்தியன் திடுக்கிட்டான்..

“இன்னும் இரண்டு மூண்டு இடங்கள் இருக்குது.. பாப்பம்… பாத்திட்டு போகலாம்… எப்பிடியும் அவனை கண்டு பிடிச்சுவிடலாம்..”

“நிறைய ஸ்கூலுக்கு எல்லாம் போனது… எங்கையும் அவன் இல்லே… யாருக்கும் அந்த பொடியனை தெரிய இல்லே. சில பேர் பேசுறாங்க இல்லே… போன் ஓப் பண்ணுறாங்க.. எனக்கு மிச்சம் கவலை… இனி என்னதான் பண்றது… நான் புறப்படுறது சத்தி…”

அவனை பார்க்காமல் செல்லுவதில்லை என்ற கோரிக்கையை ரோஹித் எளிதாக கைவிடமாட்டார். சத்தியனின் முகம் வாடியது. தனது விடுமுறை நாட்கள் முடிந்து விட்டதென்றும், தாம் லண்டன் போக வேண்டும் என்றும் ரோஹித் சொல்லிக் கொண்டே புறப்பட தயாரானார்.

“எப்படி நான் அங்க போய் வேலை செய்யிறது? எனக்கு தெரிய இல்லே..”

“எனக்கு குழந்தைகள் யாருமில்லை.. என்ட மனுசி செத்து இப்ப இரண்டு வருசம்தான்… நான் அவனைக் கூட்டிப் போக ஆசைப் பட்டது…”

இவனைப் பார்த்தபடி ரோஹித் தன் பையை மூடிக் கொண்டார்.

அவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வெறுமை சத்தியனையும் வாட்டியது. “மாமா.. மாமா… திரும்ப எப்ப வருவீங்கள்…” மாறன், ரோஹித்தின் கைகளில் இருந்து கேட்டான். மாறன் எந்த மொழிச் சிரமங்களுமற்று அவருடன் ஏதோ எல்லாம் உரையாடினான்.

“அவனை எண்டைக்காவது பாப்பன் எண்டு கட்டாயம் நம்புகிறேன் சத்தியன்…”

“…”

“அவன்டை பெயரை தெரிஞ்சால் கூட என்ட மனம் அடங்கும்..”

அந்த யாழை நானொரு தடவை தொட்டுப் பாக்கவேணும்… அந்தப் பெடியனை கட்டி அழவேணும்.. சத்தியன்…”

சத்தியனின் மனமும் துயரக் குழம்பில் கொதித்தது. ரோஹித்தின் கண்களில் தேடல் துயர் கண்ணீராய் வழிந்தது. மாறனுக்கு முத்தமிட்டு, சத்தியனின் கைகளைப் பற்றி விடைபெற்று பேருந்தில் ஏறிக் கொண்டார் ரோஹித்.

இராணுவ வாகனங்கள் நிறைந்த வீதியில் மெல்ல மெல்ல பேருந்து அசைந்தது. “கச்சான்… கச்சான்…” என கூவியபடி அவருக்கு முன்னால் ஒரு சிறுவன் சென்றான். பின் சாயலில் அவன் யாழ் சுமந்த சிறுவனைப்போலவே இருந்தான். எழுந்து எட்டி அவனைப் பற்றி முகத்தைப் பார்த்தார் பதைபதப்புடன். அவனோ, “என்ன அண்ணை கச்சான் வேணுமோ” என்றபடி ரோஹித்தை பார்த்தான். மளமளவென அந்தப் படத்தை எடுத்து தன் பையிலிருந்து பதறியபடி எடுத்தார். அவனிடம் நீட்டினார்.. அவருக்கு வார்த்தை வரவில்லை. “இது நீங்க தானே…” அவனும் கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்தான். பிறகேதோ நினைத்துக்கொண்டு தலையசைத்தபடி, “உது நானில்லை…” என்றபடி ஒரு நிறுத்ததில் இறங்கி எதிர்பக்கமாக வந்த இன்னொரு பேருந்தில் ஏறினான். ரோஹித் செல்லும் பேருந்தை கழுத்தை நீட்டி மிரட்சியுடன் பார்த்தபடியே சென்றான். பேருந்து சாளரத்தால் தலையை வெளியில் நீட்டி ரோஹித்தும் பார்த்தார். இரண்டு பேருந்துகளும் தூரம் தூரமாய் மறைந்தன.

“சிங்களர் தேடும் சிறுவன்…” சத்தியன் எழுதிய ரோஹித்தின் தேடல் கதை, வலம்புரிப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அன்று முழுவதும் அவனுக்கு பல அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. “நல்ல கட்டுரை… மனசை பிழிஞ்சிட்டுது…” வரும் பாராட்டுக்களில் எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சியேதும் இல்லை.

இப்போது அவனுக்கு தெருவில் போகும் சிறுவர்களை பார்க்கும்போதெல்லாம் யாழ் சுமந்த சிறுவனையே அவன் தேடினான். ரோஹித்தின் மனம் உழல்வதைப் போல சத்தியனும் சஞ்சலத்தில் இருந்தான்.

 மாறன் யாழ் சுமந்த சிறுவனின் படத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். “ரோஹித் மாமா பாவம் எல்லா… நீங்கள் அவரை ஏன் சந்திக்கேல்லை… அப்பா, இந்த அண்ணா எங்கப்பா இருக்கிறார்…” யோசனையில் மாறனின் கேள்விகள் அவனுக்கு நுழையவில்லை.

வெளிநாடு ஒன்றிற்கு பத்திரிகை ஆசிரியர் சென்றிருப்பதால், அன்றைக்கு அலுவலகத்தில் சத்தியனுக்கு வேலை சற்று அதிகமாயிருந்தது. இவனை சந்திக்க யாரோ வந்திருப்பதாக தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்திகளை சரிபார்த்து, அவற்றின் தலைப்புக்களை செம்மைப்படுத்திக் கொண்டிருந்த சத்தியன், ஒருவேளை, யாழ் சுமந்த சிறுவன் பற்றி தகவல் தெரிவிக்கத்தான் யாரும் வந்திருப்பார்களோ? என்றெண்ணியபடி வரவேற்பறையை நோக்கி ஓடினான்.

எண்ணையும் தண்ணியும் காணாது உலர்ந்து புழுதி படிந்த தலை, தெருவோர மண் படிந்து சிவத்திருந்தது. யாருமற்று தானே தனித்தலையுமொரு சோகமும் தைரியமும் கலந்த முகம். பொத்தல்கள் விழுந்த சட்டை. நழுவி விடாமல்  ஊசியால் குத்தி இடுப்பில் தங்கிய காற்சட்டை. கைகளில் ஒரு பொலீத்தீன் பையில் கச்சான் சரைகள். இன்னொரு உரைப்பையில் ஏதேதோ பொருட்கள். பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கும். விசாரணைத் தொனியுடன் நின்றான்.

“நீங்கள்தான் சத்தியனோ…” பெரிய மனுசனைப் போல கேட்டான்.

“ஓம்… நீர்…”

“என்னை ஏன் அந்த சிங்களவர் தேடுறார்… அண்டைக்கும் பஸ்ஸில கண்டனான்… என்ட படத்தை காட்டி கேட்டவர்…”

முகத்தில் லேசாக பயம் இருந்தாலும் சற்று சண்டித்தனமாகவே கேட்டான்.

“அவருக்கு என்ன பிரச்சினை…”

சத்தியன் ஒரு கணம் உறைந்தான். “தம்பி முதலிலை இரும்…” அவன் கைகளைப் பற்றி இருக்கையில் அமர்த்தினான். ஆனாலும் அந்த சிறுவனின் கண்கள் இன்னும் விசாரணைத் தோறனையுடன்தான் இருந்தன.

“சண்டையிலை யாழோடை போனது நீங்கள்தானே?..”

அவன் பதிலற்று அமைதியனான்.

“அது நீங்கள்தானே… சொல்லுங்கோ தம்பி…”

அவன் மெல்ல உரைப்பையை எடுத்தான். அவிழ்த்து யாழை வெளியில் எடுத்தான். நரம்புகளை தட்டி வாசித்தான். சத்தியனின் கண்கள் உடைந்தன. அந்த இசை அவன் மனமெங்கும் எதையோ சுரக்கச் செய்தது.

“இது யாரின்டை யாழ்?..”

“அது என்டை அக்காவின்டை யாழ்.

“அவா இப்ப எங்கை..”

“அவா செத்திட்டா…”

“…”

“நாங்கள் எல்லாரும் இடம்பேந்து கொண்டிருந்தம்.. அப்பா, அம்மா, நான் அக்கா.. பின்னாலை ஆமி கலைச்சு கலைச்சு சுடுறான்… ஒரு சன்னம் வந்து அக்காவின்டை கழுத்திலை… பட்டிட்டுது… அக்கா அதிலையே செத்திட்டா.. நாங்கள் அதிலை விழுந்து கிடந்து அழுதம். ஆமி திரும்ப செல்லடிக்கத் துவங்கிட்டான். அக்காவை அப்பிடியே விட்டிட்டு வெளிக்கிட்டம்.. கொஞ்சத் தூரம் போன பிறகுதான் ஓடி வந்தன்.. அந்த யாழை அக்கா எந்த சண்டையிலையும் கைவிடாம எடுத்திட்டு வந்தவள். அதெண்டால் அவளுக்கு அப்பிடி உயிர்.. பங்கருக்குள்ளையும் அதை கட்டிப் பிடிச்சுக் கொண்டுதான் படுத்திருப்பாள். செல் கிட்ட கிட்ட வந்து விழுகுது. நான் ஓடிப் போய் அதை எடுத்துக் கொண்டு வந்து பாத்தால், அம்மாவை ஒரு செல் சரிச்சுப் போட்டுது.. அதுக்குள்ளை அப்பாவையும் தவறவிட்டிட்டன்… அவரும் காணாமல் போட்டார்…”

சொல்லி முடிக்கையில் அவன் கண்ணீர் கன்னங்களில் படிந்த புழுதியை கழுவிக்கொண்டு ஒழுகியது. அவனுக்குப் பெயர் மேகவண்ணன். பேருந்து நிலையம்தான் இப்போது அவன் வசிப்பிடம். எதற்காக ரோஹித் தேடி வந்தார் என்பதை சத்தியன் அவனுக்கு விளங்கப்படுத்தினான்.

“நான் பயந்திட்டன்… இல்லாட்டில் அவரோடை கதைச்சிருப்பன்… ”

“நான் ரோஹித் மாமாவுக்கு கடிதம் எழுதுறன்.. உங்களை அவரோடை கதைக்க வைக்கிறன்.. அவர் கெதியிலை வந்து உங்களை சந்திப்பார்…”

“சீ… நான் அவரோடை கதைச்சிருக்கலாம்…” திரும்ப திரும்ப தன்னை நொந்து தலையை குனிந்து கொண்டான் மேகவண்ணன்.

ரோஹித்தின் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது. அவர் இனி மிகவும் அமைதியாக உறங்குவார். அவரின் உறக்கமற்ற இரவுகளுக்கு முடிவு கிடைத்தன. ரோஹித் மேகவண்ணனை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார். சத்தியனின் மனதில் மகிழ்ச்சிப் பதகளிப்பு. ரோஹித்திற்கு கடிதம் எழுதுவதற்காய் மடிக் கணனியை திறந்தான். இணையங்களை தட்டி ஒருமுறை செய்திகளை பார்த்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டு மடிக்கணனியில் விரல்கள் சடசடத்தன.

“தமிழர்களை நேசித்த சிங்கள ஊடகவியலாளர் ரோஹித் காலமானார் …”

செய்தியின் தலைப்பை கண்டு அதிர்ந்தான் சத்தியன். “ஐயோ…”  பெருங்குரலெடுத்து குளறினான். திடுக்கிட்டெழும்பினாள் கவிதா. “என்டை கடவுளே…” என்றபடி சத்தியனை அணைத்துக் கொண்டு அவளும் கதறினாள். படுக்கையிலிருந்து திடுக்கிட்டு எழுந்த மேகவண்ணன் வாயடைத்து நின்றான். அவன் தலையை தடவியபடி குலுங்கினான் சத்தியன்.  “அப்பா ரோஹித் மாமாக்கு என்ன..” மாறனும் சினுங்கினான்.

மடிக் கணணியை அணைத்துவிட்டு குலுங்கிகுலுங்கி அழுதான் சத்தியன். மேகவண்ணன் யாழை மீட்டத் துவங்கினான். நரம்புகள் அறுந்த மனிதனின் குரலாய் அது தடுமாறியது.

ரோஹித் இறுதியாக அசைத்த கைகள் இவனின் நினைவை அசைத்தன. தன் சைக்கிளின் பின்னாலிருந்து சிறுவனைத் தேடிய அந்த விழிகளின் துயரக் கருவளையத்தின் படபடப்பது நினைவில் மறைய மறுத்தது. இடிந்துபோயிருந்த மேகவண்ணனை அருகில் இருத்திவிட்டு மாறனை மடியில் வைத்தபடி கண்களை மூடிக் கொண்டான். மூடிய விழிகளுக்குள் நீர் முட்ட கண்கள் மளமளவென அசைந்துடைந்தன.

நிலவும் ஒரு யாழைப் போல வளைந்திருந்தது.

http://www.vanakkamlondon.com/theepachelvan-07-03-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒர் பதிவு

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. 

தீபச்செல்வனவர்களின் பதிவுகள் கற்பனைகளல்ல. இதயத்தை நொருக்கிச் செல்லும்  இழப்புகளின் வலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமும் தேடலும் கொண்ட உண்மையின் பதிவு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.