Sign in to follow this  
ampanai

கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய அரிசி ஆலை

Recommended Posts

fea04.png?itok=KTkGPT94

மீண்டும் அங்கு அரிசி ஆலையொன்றை அமைத்தால் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு

அடையாளமே தெரியாமல் அழிந்து போய்க் கிடக்கும் சவளக்கடை அரிசி ஆலை

 

 

அதிகமான வளங்களைக் கொண்ட பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். ஒரு காலத்தில் பல தொழிற்சாலைகள் கிழக்கில் இயங்கின.

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, மிகப் பெரிய அரிசி ஆலைகள், மீன் பதனிடும் நிலையங்கள் என்பவை இவற்றுள் சிலவாகும்.

இவையெல்லாம் கடந்த கால போர்ச் சூழலின்போது கைவிடப்பட்டன. பல அழிக்கப்பட்டன. இன்று அவை பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. வளமோடு வாழ்ந்த இம்மக்கள் இன்னும் மீண்டெழவில்லை.

 

கிழக்கில் அழிந்து போன ஆலைகளில் சவளக்கடை அரிசி ஆலையும் ஒன்றாகும். அதன் கதை இது...

முன்னொரு காலத்தில் வளம்மிக்க சிறப்பான பிரதேசமாக சவளக்கடை கிராமம் திகழ்ந்தது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சவளக்கடை அமைந்துள்ளது. இப்பிரதேசம் விவசாயச் செய்கைக்குப் பேர் போன பிரதேசமாகும். அத்துடன் கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய அரிசி ஆலை அமைந்திருந்த இடமாகவும் சவளக்கடை உள்ளது. இங்கு அமைந்திருந்த அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக பணி புரிந்துள்ளனர். கண்டி, காலி, கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வந்து நின்று தங்கி வேலை செய்துள்ளனர்.

62 ஏக்கர் நிலப் பரப்பளவில் சவளக்கடை அரிசி ஆலை அமைந்திருந்தது. 24 மணி நேரமும் ஓயாது அங்கு வேலை நடைபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பழைமையான தொழிற்சாலையாக சவளக்கட அரிசி ஆலை இருந்துள்ளது. இக்காலத்தில் இலங்கையின் முதலாவதும், கிழக்கு ஆசியாவில் இரண்டாவதுமான அரிசி ஆலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்துள்ளது. அது எமது நாட்டுக்குப் பெருமையான விடயமாக இருந்துள்ளது.

1988 இற்குப் பின்னர் நாட்டில் ஆரம்பமான அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சவளக்கடை அரிசி ஆலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. 1990 இற்குப் பின்னர் இந்த அரிசி ஆலை இருந்த இடம் தெரியாதளவிற்கு அழிக்கப்பட்டது. இந்த இடத்திலா ஆசியாவின் இரண்டாவது அரிசி ஆலை அமைந்திருந்தது என்று சந்தேகப்படும் அளவிற்கு அவ்விடம் அடையாளத்தை இழந்து காட்சியளிக்கின்றது.

சவளக்கடை அரிசி ஆலையில் அக்காலத்தில் பணியாற்றிய குமார் என்பவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் கவலையுடன் பேசினார்.

அரிசி ஆலை இருந்த இடத்தில் முன்னைய அடையாளங்களைக் காண முடிந்தது. நீர் சேகரித்து வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த நீர்த்தொட்டிகள் மற்றும் கட்டடங்களின் இடிபாடுகள்,லோஞ்ஜர் எனப்படும் பாதைகள் (சிறு கப்பல்கள்) வந்து போனதற்கான தடங்கள், இரும்புக் கேடர்கள் என பல அங்கு காட்சியளித்தன. ஒரு பரந்த நிலப்பரப்பில் வளமோடு இருந்த அரிசி ஆலை இருந்த இடம் தெரியாமல் அழிந்து கிடப்பது மனதிற்கு வேதனையளித்தது.

இங்கிருந்த அரிசி ஆலை மீண்டும் புனரமைக்கப்படுமாக இருந்தால் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும். தொழில்நுட்பம் வளராத காலத்திலே சிறந்ததொரு அரிசி ஆலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்துள்ளது. தற்போது விவசாயத்துறையில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு நவீன அரிசி ஆலையை அங்கு அமைத்தால் பிரதேசம் மட்டுமல்ல நாடும் பயன் பெறும்.

சவளக்கடையைச் சேர்ந்த எஸ்.நடேசன்(69வயது) இவ்வாறு கூறினார்.

"அந்தக் காலத்தில் பஞ்சம் என்றதே கிடையாது. எங்கட பிரதேசம் நெல் விளையிற தங்கமான பூமி. அந்தளவிற்கு செழிப்பாக இருக்கும். டட்லி சேனநாயக்காவின் காலத்தில் உருவாக்கப்பட்ட சவளக்கடை அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆட்கள் வேலை செய்தனர். பதின்மூன்று வயதில் அங்கு வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆசியாவில் இரண்டாவது பெரிய அரிசி ஆலையாயிருந்தது. இங்கு ஏழு நெல் சேகரிப்பு இடங்கள் இருந்தன. அப்போது ஒரு அறையில் பத்தாயிரம் நெல் மூடைகளை அடுக்கி வைத்திருந்தோம். எந்த நாளும் லோஞ்சர் (கப்பல்) வாறதும் போறதுமாகத்தானிருக்கும். அரிசி ஆலையில இருந்து அந்தப் பக்கமும்இந்தப் பக்கமும் மூணு கிலோமீற்றர் தூரத்துக்கு லொறிகளும், மெசின்களும்,வண்டில்மாடுகளும் என வாகனங்கள் நிறைய நிற்கும். இருபத்தி நாலு மணித்தியாலமும் மாறி மாறி வேலை நடக்கும்.

எனக்கு அப்போது தினமும் ஒரு ரூபா ஐம்பது சதம் சம்பளம் கிடைக்கும். அது தாராளம். அரிசி என்ஜின் இருந்த இடத்திலதான் இப்ப பிரதேச செயலகம் கட்டியிருக்காங்க. இங்க பக்கத்துல நாற்பது அடி அகலத்தில் வாய்க்கால் இருக்கிறது. அந்த இடத்திலதான் கப்பல்கள் வந்து(லோஞ்ஜர்) தரித்து நிற்கும். அதில நெல் ஏற்றி மட்டக்களப்புக்கு கொண்டு போவாங்க. இந்த அரிசி ஆலையால நிறைய ஏழைக் குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இங்கு கொட்டப்படுற உமியை புடைத்து அதிலிருந்து குருநெல் எடுத்து சோறாக்கி வாழ்ந்த குடும்பங்கள் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்களை வாழ வைத்த ராசியான ஒரு தொழிற்சாலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்தது. அந்தக் காலத்தை இப்ப நினைத்தாலும் சந்தோசமாக இருக்குது. முழு நாட்டுக்கும் சோறு போட்ட அரிசி ஆலை. இதை மறுபடியும் அமைத்துக் கொடுத்தால் நிறையப் பேருக்கு வேலை கொடுக்கலாம்" என்றார் நடேசன்.

க. துரையப்பா என்பவர் இப்படிக் கூறுகிறார்;

"இந்த அரிசி ஆலையில் நான் நாட்டாமை வேலையை ஒப்பந்தம் எடுத்து வேலைக்கு ஆள்போட்டுச் செய்தன். அந்த நேரம் ஒரு நெல் மூடைக்கு இருபத்தைந்து சதம் தருவாங்க. ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு நெல் மூடையை தாங்கியில போட்டு அவிப்பார்கள். ஒரு பக்கம் நெல் போடுறது, மற்றப் பக்கம் நெல் அவிக்கிறது. அடுத்த பக்கம் நெல் குத்துறது, அடுக்கிறது என இருபத்து நாலு மணி நேரமும் ஓயாம வேலை நடக்கும். சவளக்கடை கிராமத்தில் ஒரே சனமாகத்தானிருக்கும். அரிசிக்கும், சாப்பாட்டுக்கும் குறைவேயில்ல. இப்ப இந்த ஊர்ச் சனங்களில் பலர் பட்டினி கிடக்குதுகள். அரிசி ஆலையில இருந்த அனைத்தையும் கழற்றிக் கொண்டு போயிற்றாங்க. இப்ப இங்கு எதுவுமே இல்லை" என்று வேதனையுடன் கூறினார் அவர்.

செ.கணபதிப்பிள்ளை (69வயது) என்பவர் தனது மனக்கவலையை இவ்வாறு எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"இங்கு வேலை இல்லை என்ற குறையே இருக்காது. ஒரு இருபத்தைந்து, முப்பது குவாட்டஸ் இங்கிருந்தது. அவற்றில் வெளியூரில் இருந்து வந்து வேல செய்யிறவங்க தங்கியிருந்தாங்க. இந்த மில்லில் இருந்து கொட்டுற உமி கூட நிறைய மக்களுக்கு பயன்பட்டிருக்குது. இங்கு எரிந்த சாம்பலைக் கூட மாட்டு வண்டியில் அள்ளிப் போய் கொட்டி வருமானம் பெற்றனர். எந்த நேரமும் வாகனங்களாகத்தான் இருக்கும். பசி பட்டினி என்பது கிடையாது. இப்போது எல்லாம் நாசமாப் போயிற்றுது" என்றார் கணபதிப்பிள்ளை.

ஆசியாவின் இரண்டாவது சவளக்கடை அரிசி ஆலை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள்.

 

https://www.thinakaran.lk/2020/03/14/கட்டுரைகள்/49541/கிழக்காசியாவின்-இரண்டாவது-பெரிய-அரிசி-ஆலை

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this