சுப.சோமசுந்தரம்

நட்பென்ன உறவென்ன ! by சுப.சோமசுந்தரம்

Recommended Posts

                                           நட்பென்ன உறவென்ன !

-       சுப. சோமசுந்தரம்

 

            எனது இந்த அறுபதாம் அகவையில் சமூக விலங்காக எல்லோரையும் போல் நான் வாழ்ந்ததைத் திருப்பிப் பார்க்கிறேன். எத்தனை உறவுகள் எத்தகைய நட்புகள், அத்தனையும் ஒரு பெரிய புத்தகமாக எழுதித் தள்ளும் அளவிற்கு என் மனத்திரையில் ஓடுகின்றன. வாசிப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு என்னால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை, ஏன் இறுமாப்பே உண்டு என வைத்துக் கொள்ளலாம். புத்தக அளவிற்கு எழுத வேண்டியதை ஒரு கட்டுரையில் சுருக்க நினைக்கும் பேராசை இப்போது.

 

            உறவோ நட்போ, நம் வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் (படுத்தும் பாடுகளும்) அளப்பரியன. உறவுக்கும் நட்புக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுண்டு. நட்பு நமது தெரிவு (choice). நமது இயல்புக்கு ஒத்து வருவதை நாம் தெரிந்து தெளிதலே நட்பு. உறவு நமது தெரிவில்லை. முகம், நிறம் போன்று நமது பிறப்பாலோ அல்லது அதன் நீட்சியாக திருமணம் என்ற சமூக ஏற்பாட்டினாலோ அமைவது; சில நேரங்களில் அமைந்து தொலைவது. அமைந்த நட்பு ஏதோவொரு தருணத்தில் சரியாக வரவில்லையென்றால், அது தேரான் தெளிவு; நம் குற்றம். அமைந்த உறவு ஒத்து வரவில்லையென்றால், அது விதியின் விளையாட்டு; கருவின் குற்றம். அதிலும் தவிர்க்க முடியாத உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் என்ற வகையில் இந்நிலை ஏற்படின், அது உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினையன்றி வேறென்ன ! உறவோ, நட்போ நாம் கடந்து வரும் சிலர் நமது விருப்பப் பட்டியலில் இல்லையென்றால், அன்னார் ஏதோவொரு வகையில் தீயோர் என்றோ, குறையுள்ளோர் என்றோ பொருளில்லை; நாம் நல்லோர் என்றோ, குறையற்றோர் என்ற பொருளுமில்லை; நமக்கு ஒத்து வரவில்லை, அவ்வளவே !

 

            (கூட்டுக்) குடும்ப உறவு என்னும் அமைப்பு நமது நாட்டில் மிக வலுவானது என மார் தட்டுகிறோம். இது சங்க கால நிலைமையாயிருக்கலாம். என் ஆச்சிமார் தாத்தாமார்களிடம் கேட்ட வரை நம் குடும்ப முறை ஆண்டான் – அடிமை நெறிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பின் முதலாளிகள் வெளியே உருவாயினர். அதற்கு முன் நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பத்தினர் கூட்டாக இருந்து பாடுபட, சொத்துரிமையாளர்களான பெற்றொரும் உற்றோரும் முதலாளிகளாகவும் ஏனையோர் தொழிலாளர்களாகவும் – பெரும்பாலும் அடிமைகளாகவும் – அமைந்தனர். இந்த வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டவள் பெண்தான் என்பது தனியாக வேறு தலைப்பிட்டு எழுதப்பட வேண்டிய விடயம். அடிமையின் மனைவி அடிமைதானே ! அதிலும் பெண்ணடிமை ! உறவுகளுக்குள் – அன்றைய காலத்து அடிமைகளுக்குள் – போட்டியும், பொறாமையும், போட்டுக் கொடுத்தலும் வாழ்வின் அங்கமாகவே பெரும்பாலானோர் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைக்கும் அலுவலகத்தில் பார்க்கிறோமே ! போட்டியும் பொறாமையும் மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களிடமும் உள்ள இயற்கை உணர்வு. ஒரு குழந்தையைத் தூக்கினால் இன்னொரு குழந்தைக்குக் கோபமும் அழுகையும் வருகிறதே ! பெரும்பாலான விடயங்களில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் சில விடயங்களில் வேறுபட்டு நிற்பது. இயற்கையை எதிர்த்து சட்டை போட்டுக் கொள்ளவில்லையா ! அதுபோல் வளரும் போது பொறாமை போன்ற தீவினைகள் அகற்றிப் பக்குவமடைவதாலேயே விலங்கிலிருந்து மாறுபட்டு மனிதம் ஆரம்பமாகிறது. இப்பக்குவத்தை வெகு சிலர் அடைவதும் பெரும்பாலானோர் அதனை எட்டாமலேயே வாழ்ந்து மடிவதும் உலக நியதி. நிலவுடைமைச் சமூகத்தில் பக்குவமடைந்த மனிதன் கூட அடிமைச் சங்கிலியை உடைத்து அல்லது தனக்கு ஒத்துவராதவரிடமிருந்து தன்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிப் பயணிக்க இயலாத கையறு நிலை. ஆனால் பொருளாதார விடுதலை பெற்ற தற்காலத்திலும் தனது தலையில் ஏற்றப்பட்ட விரும்பத்தகாத உறவுச் சுமைகளை இறக்கி வைக்காமல் தவிப்பது, தவறான கற்பிதங்களால் ஏற்பட்ட பழமைவாத நீட்சி (Hangover) அன்றி வேறென்ன ? முன்பே கூறியதைப் போல் நமது பொறுப்புகளுடன் கூடிய உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் பற்றி இங்கு பெரிதும் பேச வரவில்லை. விதியின்பாற் பட்டு இவ்வுறவுகளே சுமையானால், எவ்விதப் பொறுப்புத் துறப்புமின்றிக் கடமையாற்றி இரு தரப்பிலும் நிம்மதிக்கு இடையூறின்றி, நாம் வாழ்வதும் அவர்களை வாழ்விப்பதும் நம் கடமையாகிறது. இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதெல்லாம் அவரவர் சூழ்நிலையும் முதிர்ச்சி நிலையும் தீர்மானிக்கும். உலகில் எல்லாவற்றையும் பட்டியலிட முடியுமா என்ன ? ஏனைய உறவுகள் நல்லெண்ணம் என்னும் வலுவான சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பின், அஃது நமக்கான அரும்பெறல். நூலிழையில் நிற்பது அறுந்து போகக் கடவது அல்லது வேறு வழியின்றி அறுத்து விடக் கடவது. இவ்வுலகில் நம் மகிழ்ச்சிக்குத் தடைக்கல்லாக எதுவும் இருக்க முடியாது. இருப்பின் அதனைப் புறந்தள்ளுவதே விவேகம். இரு தரப்பினரும் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கே கால அளவில் மிகக் குறுகிய இவ்வுலக வாழ்க்கை; புகார் கூறியும் புறங்கூறியும் வீணடிப்பதற்காக அல்ல.

 

            மேற்கூறியவை நட்பிற்கும் பொருந்தும். ஆனால் மேற்கூறிய சூழ்நிலைகள் நட்பில் அருகியே வரும். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, முன்னர் கூறியதைப் போல நமது தேர்ந்து தெளிதலால் ஏற்படுவது நட்பு. இரண்டு, நட்பில் அநேகமாக எதிர்ப்பார்ப்பு இல்லை. எதிர்ப்பார்ப்பு இல்லாத உறவோ நட்போ ஆல்போல் தழைத்து நிற்க வல்லது.

 

            இனி என் தனிபட்ட அனுபவங்களைத் தொட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன். நட்பில் நான் தோற்ற கதையுண்டு. அது தேர்வில் நான் வல்லவன் அல்லன் என எனக்குச் சுட்டியது. அத்தருணத்தில் துரோகத்தைக் கடந்து செல்லுகையில் கிடைத்த அனுபவங்களை என் சேமிப்பில் வைத்ததுண்டு. உறவுகளில் நான் எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்தது இல்லை. எல்லை தாண்டியதில்லை. உடன் பிறந்தவர்களிடம் கூட அவரவர் விவகாரங்களில் அவர்களே சொன்னால் தவிர அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை. நட்போ உறவோ அவர்கள் நம்மை எங்கே நிறுத்தி வைக்க நினைக்கிறார்களோ, அங்கே நின்று கொள்வதே நாகரிகம் என்று நினைக்கிறேன். அவர்களிடமும் அவ்வாறே எதிர்பார்ப்பதற்குப் பெயர் ‘எதிர்ப்பார்ப்பு’ என்றால், என்னிடமும் எதிர்ப்பார்ப்பு உண்டு என்று முன்னர் கூறியதற்கு மாறாக திருத்திக் கொள்கிறேன்.

 

            ஒரு குரூர வேடிக்கையாக சமீபத்திய நிகழ்வொன்றைக் கூறி நிறைவு செய்கிறேன். என் இல்ல விழா ஒன்று கூடி வந்தது. உறவுகளில் நல்லோர் உளப்பூர்வமாய் வாழ்த்தினர். சிலர் தங்கள் எல்லை மீறி அங்கும் இங்கும் விசாரணையை ஆரம்பித்து என் வீட்டு நிகழ்வுக்கு அவர்கள் பரபரப்பானது என் செவியில் சேர்ந்தது. எதிர்ப்பார்ப்புகள் இல்லாத என் தரப்பின் மீது பல எதிர்ப்பார்ப்புகளை வைத்துப் புகார்களும் புறங்கூறல்களும் பரிமாறப்பட்டன. என் உள்மனது சொன்னது, “இத்தகையோர் வராத விழா எத்துணை நன்றாயிருக்கும்?” அவ்வாறே நிகழ்ந்தது. அன்றைய தினம் கொரோனா நோய்த் தடுப்பாக மக்களே சுய ஊரடங்கு நிகழ்த்த அரசு கேட்டுக் கொண்டது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட இல்ல விழாக்களை அரசு அனுமதித்தது. யாரெல்லாம் வர வேண்டாம் என்று நினைத்தேனோ, அவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை. யார் வரவேண்டும் என்று நினைப்பேனோ, அவர்களிலும் சிலரால் வர இயலவில்லை என்பது வேறு விடயம்; அவர்களின் வாழ்த்து தொலைபேசியில் கிட்டியது. குறைந்த வருகையுடன் விழா வெகு விமர்சையாக நடந்தேறியது. எனக்கான நீதியை மக்களைக் கொல்லும் கொரோனா தந்த நகைமுரண் பற்றி மகிழ்வது மனித மனத்தின் குரூரம். “அந்த விழாவிற்கு வந்த யாருக்கேனும் நோய்த்தொற்று வந்தால் அல்லது உனக்கே வந்தால்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. ‘The Alchemist’ என்ற புகழ்பெற்ற நாவலில், “When you want something, all universe conspires in helping you achieve it” என்று நம்பிக்கை தரும் (optimistic) கவித்துவமான வரி நினைவுக்கு வருகிறது. நாம் வெறுக்கும் ஒரு கொடுமை தற்செயல் நிகழ்வாக எனக்கு ஒரு சிறு நன்மையைத் தந்தது என்ற மட்டில் நிறுத்திக் கொள்கிறேன்.

 

            நமக்குச் சரியாக வராத உறவு, நட்பு இவற்றை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், பெரும்பாலானோர் லாவகமாக விலக்கிச் சென்று கொண்டுதான் இருப்பீர்கள். முடிவு செய்யத் தெரியாத பாமரர்களுக்கு நான் எழுதியதாக வைத்துக் கொள்ளலாம். ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் கடைசியில், “யாராவது உயிருடன் இருக்கிறீர்களா?” என்று ஒலிபெருக்கி சாதனத்தில் கேட்பார்களே, அதுபோல் “யாராவது அறியாத பாமரர்கள் இருக்கிறீர்களா?” என்று கேட்டுச் சொல்லிக் கொள்கிறேன், “உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒட்டி வாழுங்கள். தேவையானால் வெட்டி விட்டும் வாழுங்கள். மிக முக்கியமானது  - வாழுங்கள்!”

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 5

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2020 at 9:27 AM, சுப.சோமசுந்தரம் said:

“உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒட்டி வாழுங்கள். தேவையானால் வெட்டி விட்டும் வாழுங்கள். மிக முக்கியமானது  - வாழுங்கள்!”

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!👍🏾

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.