Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விதியே கதை எழுது……..

( 1 )
வானத்தில் வட்டநிலவு இரவல் ஒளியில் எறித்துக் கொண்டிருந்தது.
கட்டிலில் விழி மூடாமல் விழித்திருந்தாள் கவிதா.
வானில் ஓடி மேகத்திரையில் முகம் மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் வெண்நிலவின் அழகை ரசிக்க மனமின்றி மேகக் கூட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன அவள் விழிகள்.
ஒரு காலத்தில் வெள்ளி நிலா பவனி வரும் அழகை ரசித்து ரசித்து கவிதை எழுதி அந்த மோகத்தைத் தூண்டுகின்ற முழுமதியின் அழகில் மனதைப் பறி கொடுத்து மனம் லயித்துக் கிடந்தவள் அவள்.
அதிலும் பனிக்காலம் முழுவதும் பார்க்க முடியாத அந்த நிலவு வசந்தகாலத்தில் பார்க்கக் கூடியதாக மூடிக்கிடந்த சாளரங்கள் திறக்கப்பட்டு திரைச் சீலைகள் விலக்கப்பட்டு வானத்திரையின் நீல வண்ணத்தை ரசிக்கும் யாருக்கும் மனம் லயிக்கும்.
ஆனால் கவிதாவின் மனதில் வெறுமை மிஞ்சி கிடந்தது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்கிறாள்
நினைவலைகள் மனதில் மோதி இருபத்தைந்து ஆண்டுகள் வேகமாகப் பின்னோக்கி ஓடின.
கவிதாவும் அவளது தோழிகளுமாய் பறந்து திரிந்த பள்ளிக்காலம்.
துடிப்பும் துருதுருவென்ற தோற்றமும் மிடுக்கான நடையும் கொண்ட கவிதா பதினைந்து வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் அறிவிலும் அதி விவேகியாக விளங்கினாள்.
அன்று வகுப்பறை என்றமில்லாதவாறு ஏதோ அமைதியுடனும் மாணவர்கள் முகத்தில்  பலத்த சிந்தனையுமாக காணப்பட்டது.
“என்னப்பா இண்டைக்கு ஒருநாளுமில்லாமல் வகுப்பு அமைதியாக் கிடக்கு”
“நீர் நேற்று வராதபடியால உமக்கு தொரியாதென்று நினைக்கிறேன். நேற்றிலிருந்து எங்களுக்கு ஒரே யோசனையாக் கிடக்குது.”
“ ஓ, நான் நேற்று ஒருநாள் பள்ளிக்கூடம் கட் அடிச்சவுடன் இங்க என்ன நடந்தது?”
கவிதா நகைச்சுவையாகத்தான் கேட்டாள்.
அப்பொழுது நாடெங்கும் இராணுவக் கெடுபிடிகளும் கைதுகளும் கண்ணிவெடித் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் ஆரம்பித்திருந்த காலம்.
“இங்க எல்லோரும் இயக்கங்களைப் பற்றியும் போராட்டம் பற்றியும்தான் ஒரே கதையாக் கிடக்கு.
“என்னவாம் நாங்களும் எங்கட விடுதலைக்காகப் போராடத்தானே வேணும்” கவிதா சாதாரணமாகத்தான் சொன்னாள்.
வகுப்பில் சில மாணவ மாணவிகள் தீவிரமாக போராட்டத்தைப் பற்றி பேசத் தொடங்கினர்.
( 2 )
கவிதாவுக்கும் தானும் நாட்டிற்காக போரட வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் அவளது அடிமனதில் இருந்து அதற்கு தடையாக மனம் தடுமாறியது.
காரணம் சிறிது காலமாக அவளது பாடசாலையில் உயர் வகுப்பில் படிக்கும் சுரேசிடம் நாட்டம் ஏற்பட்டிருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நோக்குவதும் புன்னகைப்பதுமம் ஒருவர் மனதை மற்றவருக்கு வெளிப்படுத்த போதுமானதாக இருந்தது.
தாய் மண்ணில் தணியாத தாகமாய் மண்தாகம்.
அன்று பாடசாலை முடிந்ததும் கூட்டம் நடைபெற்றது.
இரு இளைஞர்கள் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவ மாணவிகள் தீவிரமானார்கள்.
நாட்டில் நடைபெறம் நிகழ்வுகள் அவர்கள் மனங்களில் போராட்ட உணர்வை தோற்றுவித்தது.
“எத்தனை நாட்களுக்குத்தான் அடிக்க அடிக்க பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது.
இளம் இரத்தம் எதையும் சிந்திக்கவில்லை.
எழுச்சியுடன் செயற்பட ஆரம்பித்தனர்.
மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் தமது பெயர்களை பட்டியலிடத் தொடங்கினர்.
சுரேஸ் ஏற்கெனவே பெயரை பதிவு செய்து விட்டதை அறிந்த கவிதா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.
பெற்றவர்கள் மத்தியில் பிள்ளைகளை  தாய்மண்காக்க அனுப்புவதா? அல்லது தடை செய்வதா? ஏன்பதே பெரும் மனப் போராட்டமாக போய்விட்டது.
“அம்மா வகுப்பில எல்லோரும் பெயர் கொடுத்திற்றினம்” மெதுவாகத் தாயிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்த நினைத்தாள் கவிதா.
ஒரே மகள் என்று கண்ணும் கருத்துமாக பொத்திப் பொத்தி வளர்த்த மகள் கேட்ட விதம் அன்னையின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
“கவிதா நீ படித்து பெரிய ஆளாக வர வேணுமென்றுதானே அப்பா இவ்வளவு கஸ்ரப்பட்டு உழைக்கிறேர்.”
“அம்மா இப்பிடி எல்லாரும் சொன்னா யாரம்மா எங்கட மண்ணுக்காகப் போராடிறது”
அம்மாவுக்கு நிலமையின் தீவிரம் தெரிய இந்த நிலையில் பேசாமல் இருப்பதுதான் நல்லது என நினைத்து மௌனமானார்.
அடுத்த நாள் வீதியில் சுரேஸ் எதிர்ப்பட கவிதா தயங்கி நின்றாள். சுரேஸ் எதுவும் பேசவில்லை. அவனது கனிவான பார்வையில் காதல் தெரிந்தாலும் அதனை மிஞ்சிய விடுதலை வேட்கை கொழுந்து விட்டு எரிவதை அவதானித்தாள்.
“என்ன நீங்களும் பேர் கொடுத்திற்றீங்களா?”
கவிதாவின் கேள்வியில் வேதனை கலந்த அன்பு.
“என்ன செய்யிறது இந்த காலக்கட்டத்தில எங்கட சந்தோசத்தை விட எம் மக்களின் எதிர்காலத்திற்காக நாம் போகத்தான் வேணும்”
“அப்ப நான்”?
கவிதா தயக்கத்துடன் சுரேசை ஏறிட்டாள்.
“உமக்கும் விருப்பமெண்டால் பேர் கொடுக்கலாம்” ஆனால்…சுரேஸ் தயக்கத்துடன் இழுத்தான்.
“என்ன ஆனால்?” கேள்வியைப் பதிலாக்கினாள் கவிதா.
“இல்லை நீர் நல்லா படிப்பீர் எண்டு தெரியும். அதிலும் ஒரே பிள்ளை .”
அதற்குமேல் வீதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால் இருவரும் விழிகளால் விடைகொடுத்தனர்.


( 3 )

கவிதாவும் பெயர் கொடுக்கப் போகிறாள் என்ற செய்தி நண்பிகளுடாக கவிதா வீட்டிற்கும் எட்டி விட்டது.
அப்பா கார்த்திகேசு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கமலம் “என்னப்பா எனக்கு பெரிய கவலையாக் கிடக்கு. இங்க பள்ளிக்கூடத்தில பிள்ளைகள் எல்லாம் பேர் கொடுக்கினமாம். நீங்க கேள்விப்படஇல்லையே”
“கேள்விப்படாமல் என்ன? நாட்டு நிலமை அப்பிடிக் கிடக்குது. ஏன் கவிதா ஏதும் சொன்னவளே?”
ஆதங்கத்துடன் கார்த்திகேசு கேள்வியைத் தொடுத்தார்.
“எனக்கென்னவோ இவளும் பேர் கொடுக்கப்போறதா சந்தேகமாக் கிடக்கு. பக்கத்து வீட்டு ராஜியும் சாடமாடையாச் சொன்னவள்”
“இளம் இரத்தம். விடுதலைக்காகப் போராட வேணுமெண்டு எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் எங்களுக்கு கவிதாவை விட்டா யார் இருக்கினம்.”
அம்மாவும் அப்பாவும் அங்கலாய்ப்புடன் பேசிக் கொண்டிருப்பதை தூங்குவதுபோல் பாவனை செய்தபடி கவிதா தூங்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சுரேசே பேர் கொடுத்திற்றான் இனி நான் ஏன் யோசிப்பான் என்று ஒரு பக்கமும் அப்பா அம்மா பாவம் . என்னை எத்தனை எதிர்பார்ப்போடு தாங்கித் தாங்கி வளர்த்தார்கள்.
அவர்களது எதிர்பார்ப்பினை ஏமாற்றுவதா? ஏன்ற இன்னொரு பக்கமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அந்த இரவுப் பொழுது கழிந்தது.


(4)

இரு நாட்களின் பின் ஊரே அல்லோலகல்லோகப் பட்டது.  இராணுவம் சுற்றி வளைத்து இளைஞர்களையும் யுவதிகளையும் கைது செய்து விசாரணைக்காகக் கொண்டு போவது தொடர்ந்தது.
பக்கத்து வீட்டு ராஜியும் லைப்ரரிக்கு போய் விட்டு வரும் வழியில் மறித்து விசாரித்துவிட்டு விடுவதாகக் கூறி இராணுவம் கொண்டு சென்று விட்டது.
கவிதாவின் அப்பாவும் அம்மாவும் இரவுமுழுவதும் தூங்கவில்லை. விடிந்ததும் விடியாததுமாக கையில் கிடைத்த பொருட்களுடன் கவிதாவையும் கூட்டிக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு பாதுகாப்பாகச் சென்று விட்டனர்.
ஏப்பிடி கவிதாவைக் காப்பாற்றுவது என்பதே இருவருக்கும் பெரிய கவலையாகப் போய் விட்டது.
“என்னப்பா அங்க இவ்வளவு; சனமிருக்கு. நாங்க மட்டும் இங்க வந்திற்றம். என்ர படிப்பும் வீணாகப் போகுது.” கவிதா மெதுவாக முணுமுணுத்தாள்.
“அது சரி பிள்ளை படிப்பு வீணாகப் போகுதெண்டு பார்த்தால் நாங்க உன்னையும் பறி கொடுத்திருவம்”
எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கார்த்திகேசு பெருமூச்சு விட்டார்.
அம்மா கமலமோ எப்பிடியாவது மகளை காப்பாற்ற வேண்டும் .எப்படி காப்பாற்றுவது என்று கடவுளை கை எடுத்து கும்பிட்டபடி இருந்தாள்.
அவர்கள் தங்கி இருந்த உறவினர் வீட்டில் இன்னும் ஒரு குடும்பமும் தங்கி இருந்தனர்.
அம்மாவின் அங்கலாய்ப்பைக் கேட்ட அந்தப் பெண் “கமலம் அக்கா எனக்குத் தெரிந்த இடத்தில மாப்பிள்ளை ஒன்று இருக்கு. பொடியன் கனடாவில இருந்து வந்திருக்கிறான்.
பொம்பிளை தேடிக் கொண்டிருக்கினம். உங்களுக்கு விருப்பமெண்டா சொல்லுங்கோ. கதைக்கிறன்.

(5)


துடுப்பில்லாமல் மூழ்கும் நிலையில் இருப்பதாகக் கலங்கிக் கொண்டிருந்த கமலம் இத் துடுப்பை இறுக்கிப் பிடித்தக் கொண்டாள்.
“என்னப்பா கவிதாவுக்கு ஒரு நல்ல இடத்தில மாப்பிள்ளை இருக்காம்.”
கமலம்; சொல்லி முடிக்க முதலே “என்ன மாப்பிள்ளையே உனக்கென்ன விசரே?
அவளுக்கு இப்பதான் பதினாறு வயது அதுக்குள்ள கலியாணக் கதை கதைக்கிறாய” கார்த்திகேசு எரிந்து விழுந்தார்.
“உங்களுக்கு எப்பிடி விளங்கப் படுத்திறது எண்டு  எனக்குத் தெரியல்லை. இவள் கவிதா இயக்கத்திற்கு பேர் கொடுக்கத் துணிந்திற்றாள். அதோட ஆமியின்ர கண்ணில இருந்தும் எப்பிடிப் பாதுகாக்கிறது எண்டும் தெரியல்ல.”
“அதுக்கு” கையறு நிலையில் கார்த்திகேசு மனைவியை ஏறிட்டார்.
“ஒரு கலியாணத்தைக் கட்டிக் கொடுத்திற்றால் பிள்ளை எங்கையாவது பத்திரமா இருக்குதெண்டாவது நிம்மதி கிடைக்கும்.”
கார்த்திகேசின் மறுப்பு கமலத்தின் நியாயத்திற்கு முன் எடுபடவில்லை.
எப்பிடி எப்படியோ அழுது அடம்பிடித்து கெஞ்சி கொஞ்சி எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் கவிதாவின் கோரிக்கை எடுபடவில்லை.
ஒருகணம் சுரேசின் முகம் நினைவில் வந்து போனது.
ஏன்ன செய்தும் பெற்றவளின் பிடிவாதத்திற்கும் அன்பிற்கும் முன்னால் கவிதா எதுவும் செய்யத் திராணியற்றுப் போனாள்

பதினாறு வயதுப் பருவம். இல்லறம் பற்றியோ குடும்ப வாழ்வு பற்றியோ எவ்வித அறிவோ எதிர்பார்ப்போ இல்லாத இளமைப் பருவம்.
முன்பின் தெரியாத அதிலும் வயதிலும் சரிபாதி கூடிய முகமறியாத ஒருவனை மணமகனாக ஏற்றுக் கொள்வது கவிதாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியின் மனநிலையை ஒத்திருந்தது.
திருமண ஏற்பாடுகள் மளமளவென்று நடைபெற்றன.
கவிதாவோ எதுவும் செய்ய முடியாமல் எடுப்பார் கைப் பிள்ளையாக நடைப்பிணமாக நடமாடினாள்.


( 6 )

திருமணநாளும் வந்தது.
பட்டுப் புடவை நகை  பூ பழம் மாலை மரியாதை ஊர்வலம் எல்லாமே மிக விமரிசையாக நடைபெற்றது.
“கவிதா நல்ல வடிவா இருக்கிறாள்”
“மாப்பிள்ளை கொடுத்து வைத்தவர்”
கவிதாவுக்கு என்ன குறை சொத்து சுகத்துக்கு கறை இல்லை”
வந்திருந்த அமைவரும் சொத்து சுகம் பற்றியும் வசதி வாய்ப்புகள் பற்றியும் வாய் கிழியக் கதைத்தனரே ஒழிய கவிதாவுக்குள்ளும் ஒரு மனம் இருப்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.
மாலையானதும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்தனர்.
பெற்றவர்களைப் பிரிந்து செல்வது வேதனையாக இருந்தாலும் கவிதாவால் இவ் அவசரத் திருமணத்தையோ பெற்றவர்கள் தனக்கு நன்மை செய்வதாக செய்த இந்த ஏற்பாடுகள் பற்றியோ மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சிந்தித்து செயற்படாமல் ஏதோ அவசரம் அவசரமாக தமது பொறுப்புக்களை தட்டிக் கழித்ததாகவே எண்ணத் தோன்றியது.
அலங்காரச் சிலையாக கவிதாவை ஒப்பனை செய்தனர்.
சின்னஞ்சிறு பெண்ணாக தன் கனவுகள் அனைத்தும் சிதைக்கப்பட்ட ஓர் ஓவியமாக திருமண பந்தத்தை சுமக்கத் திராணியற்று மாப்பிள்ளையின் முகத்தைக்கூட முழுதும் பார்த்தறியாத ஓர் பரிதாபத்துக்குரிய பாவையாக புகுந்த வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைத்தாள்.
மாப்பிள்ளை கண்ணன் கனடாவில் குடிபுகுந்து ஜந்து வருடங்களாகின்றன.
ஊரில் பத்தாம் வகுப்பு  படித்தபின் மேலே படிக்க விருப்பமில்லாததாலும் நண்பர்கள் சேர்க்கை நல்லதாக அமையாததாலும் பெற்றவர்கள் அவனை கனடா அனுப்பி விட்டனர்.
அவனும் அங்கு சென்ற இந்த ஜந்து வருடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே அறையில் வாழ்ந்து பலவித பழக்கங்களிலம் ஈடுபட்டு மது மாது சிகரட் என்று எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகி இருந்தான்.
ஆனாலும் ஊரிலும் வீட்டிலும் உள்ளவர்களுக்கு அவன் கனடா மாப்பிள்ளை.


( 7 )
தாம்பத்திய உறவு பற்றியோ பாலியல் அறிவு பற்றியோ எதுவும் அறிந்திராத பதினாறு வயது நிரம்பிய அந்த பிஞ்சு மனதில் எத்தனையோ உணர்வுகள்.
பயம், அதிர்ச்சி, கோபம், வெறுப்பு, களைப்பு, இப்படி அத்தனையும் கலந்த ஓர் அயர்ச்சி.
அந்த சின்னப் பெண்ணை அழகாக அலங்கரித்து வேள்விக்கு அனுப்பும் ஆடுபோல ஆயத்தங்கள் நடந்தன.
நேரமாக ஆக அவள் வேதனை பெற்றவர்கள் மேல் கோபமாக மாறியது.
“கவிதா கொஞ்சமாவது சாப்பிடு. நீ காலையிலிருந்து சரியா சாப்பிட இல்லை”
அம்மா ஆதங்கத்துடன் நெருங்கி வந்தாள்
“எனக்கு வேணாம் நீங்களே சாப்பிடுங்க”
“ஏன் கவிதா கோவமா?”
“இல்லை சந்தோசம்” வெறுப்புடன் பதிலளித்தாள்.
முதலிரவுக்கான அறை ஆயத்தமாக இருந்தது.
வீட்டு மண்டபத்தினுள் கண்ணனின் உடன்பிறப்புகள் உறவுகள் அனைவரும் கூடியிருந்து கண்ணனுடன் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தனர்.
கண்ணனோ கனடா கதைகளை அவர்களுக்கு கூறி ஏதோ சொர்க்கத்தின் கதவுகள் தூரமில்லை என்ற தோரணையில் கதை அளந்து கொண்டிருந்தான்.
கவிதா தனிக்காட்டில் அகப்பட்ட மான்போல மிரள மிரள விழித்துக்கொண்டிருந்தாள்
இரவு சாமப் பொழுதாகிக்கொண்டிருந்தது.
கவிதாவோ சோர்ந்து துவண்டு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.
மாப்பிள்ளை கண்ணன் வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி முதலிரவு அறைக்குள் பிரவேசித்தான்.
அவன் பார்தத முதல் பார்வையிலேயே கவிதா மிரண்டு போனாள்.
அவனது கண்கள் சிவந்திருப்பதை பார்த்தவள் அவன் குடித்திருப்பானோ என்று நினைத்தாள்.
அவளது மிரட்சியான கண்களைப் பார்த்தவன் “ ஏன் இப்பிடி பயப்படுபகிறாய்”என்றபடி தமது சேட்டை கழட்டி கங்கரில் மாட்டினான்.
அவனது கழுத்தில் புதிதான தங்கச் செயின் பளபளத்தது.
கவிதா குனிந்து தனது கழுத்தில் தொங்கும் தாலிச் சரடைப் பார்த்தாள்.
அதுவும் பளபளவென்று தன்னைப் பார்த்த சிரிப்பது போல உணர்ந்தாள்.
அவளைப் பற்றியோ அவளது உணர்வுகளைப் பற்றியோசிறிதும் சிந்தனை அற்றவனாய் கண்ணன் தன் லீலைகளை ஆரம்பிக்க கவிதாவோ பொறியில் சிக்கிய எலிபோல தன் எதிர்ப்புக்களை ஆரம்பித்தாள்.
கண்ணனின் ஆண்மைக்கு முன் சிறுபெண்ணான கவிதாவின் வீரம் எடுபடவில்லை.
சில திரைப்படங்களில் பெண்களை ஆண்கள் துரத்திப் பிடித்து துகிலுரிவதுபோல் அவளது நிலையும் ஆனது.
ஒரு கட்டத்துக்குமேல் எதுவும் செய்யத் திராணியற்று செயலிழந்து விட்டாள்.
கவிஞர்கள் இதைத்தான் சொர்க்கத்தின் திறப்பு விழா என்று பாடினார்களோ.
இது நரகத்தின் திறப்புவிழா என்று எந்தக் கவிஞனும் பாடாதது ஏன்?
அவள் உடலின் வேதனையை விட மனதின் வேதனையை அதிகமாக உணர்ந்தாள்.
தனது தேவை நிறைவேறிய திருப்தியுடன் அவளைப்பற்றி சிறிதும் சிந்தனை அற்றவனாய் கண்ணன் நிம்மதியாக உறக்கத்தை அணைத்துக் கொண்டான்.

அவளோ யாரை நோவது.? பெற்றவர்களையா? தெய்வத்தையா? அல்லது எமது மண்ணின் அவலத்தையா? யாரை நோவது?
விடிய விடிய என்னென்னவோ எண்ணங்களினால் அலக்கழிக்கப்பட்டு எதிர் காலத்தை எண்ணி ஏக்கத்துடன் விழிகளில் வழியும் கண்ணீரைக்கூட துடைக்க மனமின்றி துவண்டு கிடந்தாள்.
( 8 )

விடிந்தது.
திருமண வீட்டின் கலகலப்புக்கு குறைவில்லை.
கவிதாவும் தன் வேதனைகளை விழுங்கியபடி முகத்தில் செயற்கைச் சிரிப்புடன் பெற்றவர்களையும் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த தன் கவலைகளை தனக்குள் புதைத்தபடி வலம் வந்தாள்.
அம்மா அப்பாவின் முகத்தில் நிம்மதிப் பெருமூச்சு.
பெற்றவர்கள் ஏன் இப்படி பிள்ளைகளின் உணர்வுகளை சிந்திக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள் என்று புரியவேயில்லை.
வீதியில் மாணவ மாணவிகள் பாடசாலை சீருடையுடன் போகும் பொழுதெல்லாம் ஏக்கம் அவள் இதயத்தை பிராண்டும்.
இவர்களைப்போல் கவலைகள் ஏதுமற்று சிட்டுக்குருவிகள் போல் பறக்க இனி தனக்கு இறக்கைகள் முளைக்காதா? ஏன்று மனம் அங்கலாய்க்கும்.
“கவிதா நீயும் கண்ணனோட கோயிலுக்கு போயிற்று வா” மாமியாரின் கோரிக்கையை தட்ட முடியாமல் கவிதாவும் பட்டுப்புடவை நகைகள் தலையில் பூ என புதுப்பெண்ணின் அலங்காரத்துடன் புறப்பட்டாள்.
வீதியில் செல்பவர்கள் எல்லோரும் தன்னைப் பார்க்கும் பார்வையில் பரிவா? பாசமா? பரிகாசமா? எதுவென்று புரியாத உணர்வில் கவிதா தனக்குள் ஒடுங்கிப் போனாள்.

( 9 )

ஊரிலும் அமைதி குலைந்து ஆங்காங்கே கைதுகளும் சுற்றி வளைப்புக்களும் வெடியோசைகளுமாக இருந்தது.
கண்ணனும் கனடா புறப்படும் நாளும் நெருங்கியது.
இப்பொழுதெல்லாம் வெள்ளம் தலைக்கு மேல் போனபின் சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? என்ற மனநிலையில் கண்ணன் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டாள்.
சரி இந்த மட்டிலாவது தனக்கு விடுதலை என்ற எண்ணமே அவள் மனதில் மண்டிக் கிடந்தது.
உறவினர் வீட்டிற்கு பயணம் சொல்ல போவதற்காக கண்ணனுடன் கவிதாவும் புறப்பட்டு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
எதிர்த் திசையிலிருந்து சீருடை அணிந்த வீரர்கள் சிலர் வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை ஏக்கத்துடன் ஏறிட்டு நோக்கிய அவள் விக்கித்துப் போனாள்.
சுரேசின் உறுதியான விழிகள் தன்னை உற்று நோக்குவதை அவதானித்தாள்.
அவனது விழிகளை சந்திக்க திராணியற்று தலை குனிந்தாள்.
சுரேசின் முகத்தில் தடுமாற்றம் தெரிந்தாலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.
கண்ணன் இவர்களது மனப் போராட்டம் ஏதும் அறியாதவனாய் சைக்கிளை உழக்கியபடி
வீரர்களுக்கு கை அசைத்து விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.
கவிதா தன் கண்களில் முட்டிய நீரை கண்களில் தூசு விழுந்ததைப்போல் துடைத்துக் கொண்டாள்.
கண்ணன் கனடா போகுமுன் அவளையும் அங்கு எடுக்கும் நடவடிக்கைக்கு ஏதுவாக அவளது தேவையான பத்திரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டான்.
அவளுக்கு எதிலும் வெறுமையாக இருந்தது.
தன் சின்னஞ் சிறிய உலகத்தை விட்டு பெரிய வான்பரப்பில் திக்குத் திசை தெரியாத பறவைபோல திக்கு முக்காடி தவித்துக் கொண்டிருந்தாள்.
நாட்கள் மாதங்களாகின.
இந்த ஒரு வருடத்திலும் அவளை காலம் எவ்வளவோ மாற்றிப் போட்டு விட்டது.
அவளது கையில் மழலையாக தவழும் கோகுல் அவளுக்கு ஒரு புதிய உலகைக் காட்டினான்.
கோகுலின் சிரிப்பும் விளையாட்டும் அவளது கவலைகளை மறக்க வைத்தது மட்டுமன்றி அவளது மனதில் தாய்மை என்னும் புதிய உறவையும் மனைவி என்ற அந்தஸ்தையும் நிலை நாட்டியது.
தான் தனக்காக இல்லா விட்டாலும் தன் கோகுலுக்காகவாவது குடும்பம் என்ற வட்டத்துக்குள் வாழத்தான் வேண்டும் என்ற முடிவுடன் நாட்களை கழித்தாள்.
கண்ணனும் கனடா போய் இருவருடங்களாகி விட்டது.
கவிதாவுக்கு கனடா செல்வதற்கான விசாவுக்கு ஆயத்தமாக மெடிக்கல் இன்ரவியூ என்று அனைத்தும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
வீட்டிலோ அப்பா அம்மாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி  மறுபுறம் பிரிவுத் துயர்.
ஓருபடியாக எல்லா ஆயத்தங்களும் முடிந்து கவிதாவும் கனடா செல்வதற்கான நாளும் வந்தது.

( 10 )
கண்ணன் பியர்சன் எயாப்போட்டில் அவளையும் குழந்தையையும் சந்திக்த அந்தக் கணத்தில் ஏதோ ஒரு ஒளிமயமான எதிர்காலம் கண்முன் விரிவதாய்க் கற்பனை.
இதுதான் பெண்மையின் பலவீனமா?
மகனைக் கண்டதும் பாசத்துடன் ஓடி வந்து வாரி அணைப்பான் என்ற எதிர் பார்ப்பும் அங்கு பொய்த்துப் போக அவளது மனதின் எதிர்பார்ப்பும் காற்றுப் போன பலூனாய் சோர்ந்து போனது.
அவனது அப்பாட்மென்டுக்கு சென்றால் அது ஒழுங்கற்று இருந்தது. அவள்
 இதை எதிர்பார்த்ததுதான்.இருந்தாலும் குடியும் குடித்தனமுமாக இருக்கும் கணவனை கொஞ்சமாவது மாற்றி எடுக்கலாம் என்ற நப்பாசையுடன் செயற்பட்டாள்.
நாளுக்கு நாள் நிலமை மோசமாகியதே தவிர மாறியதாகத் தெரியவில்லை.
அடிக்கடி குடிபோதையில் அவளைக் கண்டபடி பேசுவதும் மனதைக் காயப்படுத்தும் சுடு சொற்களால் புண்படுத்துவதும் வழக்கமாகியது.
கோகுல் பாவம். அப்பாவுடன் அன்னியோன்னியமாகப் பழகுவதற்குப் பதில் அப்பாவைக் கண்டால் பயந்து வெருண்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வான்.
குழந்தை அம்மாவுடன் ஒட்டியபடியே இருப்பதை பொறுக்காத கண்ணன் குடிபோதை தலைக்கேறினால் “என்ர பிள்ளையெண்டாத்தானே என்னோட ஒட்டும்” என்ற வார்த்தைகளால் அவளை வதைக்கவும் செய்வான்.
அவன் வேலைக்கு சென்று வருமட்டும் அவளும் கோகுலும் வீட்டைப் பூட்டியபடியே காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
அப்பாட்மென்ட் பல்கனியால் வெளியே பார்க்கும்  வேளைகளில் குதூகலமாக செல்லும் குழந்தைகளையும் பெற்றவர்களையும் கை கோர்த்தபடி செல்லும் இளம் ஜோடிகளையும் பார்த்து பெருமூசு;சு விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது தவிப்பாள்.
கண்ணன் அவளை வெளியே எங்கும் கூட்டிப் போவதில்லை.
வேலையால் வந்தபின்பும் அவளுடன் அன்பாய் ஆதரவாய் பேசுவதும் இல்லை.
வீட்டில் உள்ள ஜடப் பொருட்களில் ஒன்றாகத்தான் அவளையும் நடத்தினான்.
ஏதோ கடமைக்காக சமைப்பது சாப்பிடுவது படுப்பது உறங்குவது என்ற இயந்திரத்தனமான இருப்பு.

( 11 )

பெற்றவர்களைப் பிரிந்து வாழ்வது மனதுக்குள் மிகுந்த வேதனையாக இருந்தாலும் தனது உணர்வுகளை மதிக்காத அவர்களை நினைக்கும் பொழுது சில சமயம் கோபம் வருவதுண்டு இருந்தும் கண்ணனின் உதாசீனம் அவளை வருத்தியது.
தாய் மடியில் தலைசாய்த்து தன் வேதனைகளை கொட்டி தீர்க்க முடியாதா என்று அடிக்கடி மனம் ஏங்கும்.
எப்பவாவது தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் போது தான் நலமாக இருப்பதாக கூறி அவர்களை சந்தோசப்படுத்தி விடுவாள்.
இப்பொழுதெல்லாம் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான சூழ்நிலைகளை கேட்டும் அறிந்தும் அவளால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
தானும் தனது மண்ணுக்காக போராடச் சென்றிருக்கலாமோ என்று மனம் தத்தளிக்கும்.
சென்றமுறை அம்மா கதைக்கும்பொழுது அப்பாவுக்கும் நல்ல சுகமில்லை என்று கூறி இருந்தது நினைவுக்கு வர அப்பாவின் சுகத்திற்காக கடவுளை வேண்டினாள்.
ஒரு முறை சென்று பார்க்க முடியுமா? ஏன்ற ஏக்கத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டாள்.
நாளடைவில் வெள்ளி சனி இரவுகளில் ஓரிரு நண்பர்களாக வீட்டிற்கு அழைத்து வர ஆரம்பித்தான்.
வீட்டில் இரவு வெகு நேரம் வரை பார்ட்டியும் காட்ஸ் விளையாட்டுமாக பொழுது போக்கினர்.
ஆரம்பத்தில் கவிதாவுக்கு வியப்பாக இருந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அதுவே பழகிப் போய்விட்டாலும் அவர்களின் சிரிப்பும் பார்வையும் அச்சமூட்டியது.
“ ஏய் கவிதா கெதியா இரண்டு முட்டை பொரிச்சு எடுத்து வா”
“ இண்டைக்கு இறைச்சி வாங்கினனான் பிரட்டல் செய்து வை”
இப்படி தமக்கு தொட்டுக் கொள்ள சுவையான உணவு தயாரிக்க ஓடர் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
நண்பர்களும் குடிபோதையில் உணவின் சுவையை பாராட்டுவதுடன் அவளையும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
சில சமயம் குடிபோதையில் பிதற்றுவதுடன் உணவு பரிமாறும் போது அவளையும் தொட்டு விட முயற்சி செய்தனர்.
இது எதையும் கண்ணன் கண்டு கொள்வதில்லையா அல்லது கண்டும் காணாததுபோல பாவனை செய்கிறானா என்ற கவிதாவுக்கு புரியவில்லை.
கண்ணனோ நண்பரைக் கண்டு விட்டால் கவிதாவையோ கோகுலையோ பொருட்படுத்தாமல் தனது கேளிக்கையிலேயே கருத்தாய் இருப்பான்.
கவிதா இதைப்பற்றி ஏதாவது கண்ணனிடம் முறையிட ஆரம்பித்தால் கண்ணன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கவிதாவையே ஏதாவது குறை கண்டு பிடித்து எரிந்து விழுவான்.
அவளுக்கோ தர்ம சங்கடம்.

( 12 )

அன்று  கண்ணனுக்கு பிறந்தநாள்.
பார்ட்டி களை கட்டியது.
உணவுகளும் விதவிதமாக ஓடர் பண்ணி எடுத்ததுடன் வீட்டிலும் கவிதாவிடம் சொல்லி பிரட்டல் பொரியல் என்று விதவிதமாக தயாரித்து வைத்திருந்தான்.
நேரம் போகப்போக அனைவருக்கும் நல்ல போதை.
கண்ணன்  சுயநினைவை இழக்கும் நிலையில் இருந்தான்.
போதை முற்றிய நண்பர்கள் “ தண்ணி வேணும்”
“யூஸ் வேணும் “ என்று அடிக்கடி கவிதாவை அழைத்தனர்.
கோகுலும் நித்திரையாகி விட்டான்.
இவர்களின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் கவிதா அறைக்குள் சென்று கோகுலுடன் படுத்து விட்டாள்.
கண்ணனும் போதை தலைக்கேறி செற்றியில் விழுந்து கிடந்தான்.
நண்பர்களோ வீட்டுக்கு போவதாய் இல்லை.
கவிதா வெளியே வந்து “ நேரம் போச்சுது. நீங்க வீட்ட போனால் நான் கதவைப் பூட்டி விட்டு படுக்கலாம்” என்று கூறிப் பார்த்தாள்.
போதையில் இருந்த நண்பர்களுக்கோ இவள் கூறியது எதுவும் காதில் ஏறவில்லை.
அவர்களது பார்வையும் சிரிப்பும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
அவள் மீண்டும் மீண்டும் கேட்க அவர்கள் மனமில்லாதவர்களாக தட்டுத் தடுமாறிக் கொண்டு புறப்பட்டனர்.
அவளோ முன் கதவை தாழிட்டு விட்டு அறைக்குள் சென்றாள்.
நாள் முழுவதும் வேலை செய்த களைப்பும் மனச் சோர்வுமாக கட்டிலில் விழுந்தவள் உறங்கி விட்டாள்.

 

( 13 )
காலை
சுயநினைவுக்கு வந்த கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
வாசல் கதவு பூட்டி இருந்தது.
நண்பர்களைக் காணவில்லை.
உணவு பொருட்களும் வெற்றுப் போத்தல்களும் கிளாசுகளமாக வீடு அலங்கோலமாகக் கிடந்தது.
“ஏய் கவிதா” ஆத்திரத்துடன் அலறினான்.
திடுக்கிட்டு முழித்த கவிதா பயத்துடன் ஓடிவந்தாள்.
“ஏனடி அவங்களெல்லாம் எங்க?”
கவிதாவுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.
“என்ன நான் கேக்கிறன் உனக்கு பதில் சொல்ல கஸ்ரமாக்கும்”
கவிதாவுக்கு ஆத்திரமாக வந்தது,
“என்ன சொல்ல? நீங்க மதியில்லாமல் கிடந்ததையா?”
இனிமேல் இப்படிப் பார்டிகள் வீட்டில வைக்க வேணாம்”
“ஓ அதுதான் என்ர பிரண்ட்ஸ் எல்லோரையும் கலைத்து விட்டிட்டியாக்கும்”
“எல்லாருக்கும் நல்ல வெறி. வீட்டுக்கு போகாமல் இங்க என்ன செய்யிறது.”
“எனக்குத் தெரியும் என்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றதும் உனக்கு பிடிக்கஇல்லை.”
“எனக்கு பிடிச்சதை மட்டும்தான் நீங்க செய்யிறீங்களாக்கும்” கவிதாவால் பொறுமையுடன் பதில் சொல்ல முடியவில்லை.
“ஏன் உனக்கு பிடிச்சதையும் செய்யலாம். அதுதான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. நீ என்னை கவனிக்க மாட்டாய். ஆனால் என்ர பிரண்ட்ஸ் வந்தா விழுந்து விழுந்து கவனிப்பாய்.”
ஆத்திரம் புத்தியை மறைக்க அவளை புண்படுத்த வேணுமென்று மென்மேலும் வார்த்தைகளை கொட்டத் தொடங்கினான்.
கவிதா தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.
தானே நண்பர்களைக் கூட்டி வந்து விரும்பின சாப்பாடு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தி அவங்களைச் சரியாக கவனிக்காட்டி அதற்கும் தன்மேல் சீறிப்பாய்ந்து இப்ப இப்படி அவதூறு சொல்கிறானே என்ற மனம் வெதும்பினாள்.

( 14 )

நாளுக்கு நாள் கவிதாவால் கண்ணனது சித்திரவதைகளையும் மனதை தைக்கும் வார்த்தைகளையும் பொறுக்க முடியவில்லை.
தினம் தினம் தனது நண்பர்களுடன் அவளை சேர்த்து வைத்து பேசுவதும் குத்தல் பேச்சக்களால் அவளை வருத்துவதுமாக இருந்தான்.
அன்றும் அப்படித்தான் வேலையால் வரும்பொழுதே குடித்து விட்டு வந்தான்.
கவிதா அவனது சிவந்த விழிகளைப் பார்த்து பயந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“என்னடி என்னைக் கண்டால் பதுங்கிறாய் அவங்கள் வந்தால் மட்டும் பல்லைக் காட்டி சிரிக்கிறாய்”
“நான் எப்ப சிரிச்சனான். நீங்கதான் அவங்களைக் கூட்டிக்கொண்டு வந்து குடிச்சு கும்மாளமிடுறீங்கள்”
“என்ன கும்மாளமிடுறனோ? நீ அடிக்கிற கும்மாளமெல்லாம் எனக்குத் தெரியோதோ?”
கண்ணனின்  பேச்சு கவிதாவை ஆத்திரமூட்டியது. அவளுக்கு கோவம் எரிச்சல் வெறுப்பு
“ஓம் நான் கும்மாளமடிப்பன். அதுக்கு இப்ப என்ன?”
இந்தப் பதிலை எதிர்பார்க்காத கண்ணன் “என்ன சொன்னனீ” என்று ஆத்திரத்துடன் அவளது தலை முடியைப் பிடித்து தலையை சுவரில் ஓங்கி அடித்தான்.
நெற்றி உடைந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது. கோகுல் வேறு பயத்தில் அலறத் தொடங்கினான்.
கண்ணனோ “ இப்பிடியே கிடந்து சாவு” என்றபடி வெளியேறி விட்டான்.
கவிதா ஒரு கையால் காயத்தை பொத்திப் பிடித்தபடி மறுகையால் கோகுலை அணைத்தபடி
சென்று தொலைபேசியில் 911 என்ற இலக்கத்தை அழுத்தி தனது வீட்டு விபரத்தை சொன்னாள்.

(  15 )

மெள்ள மெள்ள தன் உக்கிரத்துடன் கிளை விடத் தொடங்கிய தீ அவள் அணிந்திரந்த ஆடைகளில் தொடங்கி உடலில் தன் சூட்டைப் பரப்பத் தொடங்கியது.
அவளது மனமோ உடலில் பரவும் சூட்டைவிட மிகத் தீவிரமான தீயில் தீய்ந்து கொண்டிருந்தது.
அந்தத் தீயின் முன் உடலில் பரவிய சூடு குறைவாக இருப்பதாகவே அவள் உணர்ந்தாள்.
எத்தனை தடவை எண்ணி எண்ணி கை விட்ட அந்த எண்ணம் இன்று தாள முடியாத வலியுடன் அரங்கேறியுள்ளது.
குத்திக் காயப்படுத்துவது ஒருமுறையா? இருமுறையா? ஏவ்வளவுக்குத்தான் அவளால் தாங்க முடியும்.
இனியும் இப்படி தினம் தினம் தீக்குளிப்பதை விட ஒரேயடியாகத் தீயுடன் சங்கமமாவது அவளுக்கு ஒன்றும் அசாதரணமாகத் தெரியவில்லை.
சுடட்டும் நன்றாகச் சுடட்டும்.
நாவினால் சுடும் வடுக்களைத் தாங்கி வலிகளை வலிந்து தழுவி ஆரம்பத்தில் கண்களில் உருண்ட கண்ணீரும் வற்றி அனலில் காய்ந்து வெடித்த விளைநிலமாய் மனம் பிளவு பட்டுக் கிடந்தது.
தனக்கென்று இனி யாருமில்லை.
இறைவனும் கேட்க நாதியற்று போனதாய் உணர்ந்தாள்.
இது தனக்கல்ல. தன்னை கடிமணம் புரிந்து கனவுகளைச் சிதைத்து மனதைக் கடற்பாறை கொண்டு பிளந்து தான் மட்டும் தன் சுகம் மட்டும் போதும் என நினைக்கும் அவனுக்கான தண்டனை.
ஒருகணம் கோகுலின் முகம் வந்து மறைந்தது.
அவனே வேணாம். பிள்ளை எதற்கு?
உலகை வெறுத்ததனால் உறவுகளும் தொலைந்து போன உணர்வு.

( 16)
நேற்றுவரை நிகழ்ந்தவைகள் அனைத்தும் நிழற்படமாய் கண்களுக்குள் ஒருகணம் வந்து போயின.
எங்கோ மேலே மேலே போய்க்கொண்டிருந்தவளை யாரோ கையில் கட்டி எழுப்புவது போல இருந்தது.
யாராயிருக்கும்?
நெற்றியில் விண்விண் என்று வலித்தது. மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
பக்கத்தில் வைத்தியர்  மறுபுறம் தாதி கையினில் குற்றியுள்ள ஊசியின்மூலம் மருந்து
ஏறிக்கொண்டிருந்தது.
சந்தேகத்துடன் தன் முகத்தையும் கைகளையும் தொட்டுப் பார்த்தாள்.
தீ சுட்டதற்கான எந்த தடயமுமில்லை.
எப்படி எனது எண்ணத்தில் இப்படி ஒரு நினைவு வந்தது. எனது கோகுலை விட்டுவிட்டு எப்படி நான் இப்படி ஓர் முடிவெடுக்கக் கூடும்.
தலையில் அடிபட்ட மயக்கத்தில் தன் மனதின் நிழலாக வந்த கனவினை எண்ணி வேதனைப்பட்டாள். அத்தனை கோழையா நான்?
“கோகுல் கோகுல்”; அவளது உதட்டசைவை அவதானித்த தாதி கோகுலைத்  தூக்கி வந்தாள்.
குழந்தை அம்மாவைக்கண்டதும் மகிழ்ச்சியுடன் சிரித்தது.
கையை நீட்டி குழந்தையை அணைத்து மகிழ்ந்தாள்.
வாழ்க்கையின் பொருள்தான் என்ன? வாழ்ந்துதான் பார்த்தாலென்ன?
சோதனைகள் வாழ்வின் முடிவல்ல.
சாதனைகளின் ஆரம்பம்.
மனதில் உறுதியுடன் எதிர்காலக் கனவுகளுடன் கோகுலை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

 

 • Like 9
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை எங்காவது உயிரோடு இருக்கட்டும் என்ற பெற்றோரின் ஆதங்கம்......வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் எதையும் யோசிக்காமல் கல்யாணம் செய்து வைத்து விடுவது.....அந்தப்பிள்ளையின் மனதை புரிந்து கொள்ளாமல் இருப்பது ....என்பதை தெளிவாக கதை சொல்லிக் கொண்டு போகின்றது......!   👍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுடச்சுட படித்துக் கருத்திட்ட சுவிக்கும் விருப்பிட்ட கவி அருணாச்சலத்திற்கும் நன்றிகள்.இப்படி வந்து மாட்டுப்பட்டு அல்லல்படும் அநேகம் பேரை சந்திக்கிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற அனுபவத்தை நானும் அனுபவித்திருப்பதால் இதுபற்றி அதிகம் விளக்கத் தோன்றவில்லை. ஒடுகட்டத்தில் நாங்களே போதுமடா சாமியென எல்லாக்கட்டுக்களையும் உடைத்துக் கொண்டு வெளியேறும் தைரியத்தை காலம் தரும். அதுவே என்னையும் வெளியில் கொண்டு வந்தது. இது போல நிலமையில் வாழும் பலரையும் கொண்டு வரும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பாக எழுதிமுடித்துவிட்டீர்கள் அக்கா. இப்படி எத்தனை பெண்களின் வாழ்வு போரினாலும் பெற்றோராலும் சீரழிந்து போய் இருக்கின்றது. 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதற்கோணல் முற்றும் கோணல் என்பது போல் இப்படி இக்கட்டுக்களில் மாட்டி வாழ்வைத் தொலைத்த பலர் அதை விட்டு வெளியே வந்தபின்பும் நிம்மதி கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. அவர்கள் வாழ்வு முழுவதும் எத்தனையோ பிரச்சனைகள். குடும்பத்தினரால் சுற்றி இருப்பவர்களினால் சமூகத்தினால் பல இன்னல்களைச் சந்திப்பதை காணக்கூடியதாய் உள்ளது. படித்து கருத்திட்ட சாந்தி சுமே இருவருக்கும் பச்சையிட்ட குமாரசாமிக்கும் நன்றிகள்.

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

உயிர் தப்பினால் போதும் என்று அவசரத்தில் நடக்கும் கலியாணங்கள் சில அவலத்தில் முடிந்திருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகளில் வீட்டு வன்முறைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை என்று தெரிந்தும் சமூகத்திற்காக உடல்ரீதியானதும் உளரீதியானதும் சித்திரவதைகளை சிலர் பொறுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனைத்தாண்டி வெளியில் வந்து சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்கவும் வழிகள் உள்ளன என்று கதை சொல்கின்றது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி கதையைப் படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன். இப்படி எத்தனை அவலங்களை எம் சமூகம் சந்தித்து விட்டது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு வருவதென்பது சுலபமானதாயில்லை. இளம் தாய்மார் இப்படி வெளியே வந்தாலும் சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ விடாது மனஉளைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருப்பதையும் காண்கிறோம். கருத்துக்கு நன்றிகள் கிருபன். பச்சைப் புள்ளியிட்ட ரதிக்கும் நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாட்டில் சில நபர்களின் காவாலித்தனம் பெண்களின் வாழ்க்கையை சோகமாக மாற்றிவிட்டது...

Edited by putthan
 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.