Jump to content

வேட்டு - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வேட்டு - ஜெயமோகன்

art-apple-head-bullet-through-head-briefcase-720P-wallpaper-middle-size.jpg

எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான்

பழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப்பம் விட்டு “ஃபாக்டு” என்றான்.

ஸ்ரீதரன் “அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியுமா ஔசேப்பச்சா? வாழ்க்கையில் நீடிக்கும் உண்மைகளும் உண்டுதானே?”என்றான்.

குமாரன் மாஸ்டர் “அதெல்லாம் சும்மா… மக்களே வயாகாரா முதல் எல்லாவற்றையும் நானே சோதனை செய்துபார்த்துவிட்டேன். எதுவுமே நீடிக்காது. வீணாக ரத்தஅழுத்தம் கூடும், அவ்வளவுதான்” என்றார்

எருமைமாடு என்றேனே, எருமைமாடுதான் வேண்டும். வழக்கமாக இறைச்சிக்கு வரும் காளைக் கன்றுகள் மென்மையானவை. வறுத்தால் கொழகொழவென்று ஆகிவிடுபவை. இந்த இஞ்சி-குருமிளகு மசாலாவுக்கு இறைச்சி நன்றாகச் சுக்காவற்றல்போல ஆகவேண்டும். மெல்லுந்தோறும் சுவை ஏறிவரவேண்டும்.

ஜானம்மா என் தட்டை பார்த்துவிட்டு “சூடாக இன்னும் கொஞ்சம் எடுக்கட்டா நாயரே?” என்றாள்.

“எடு!”என்று நான் சொன்னேன். “டேய் போதும்டா… பாதாளம் வரை போவது பணமும் காரமும்தான், தெரியுமா?” என்றான் ஸ்ரீதரன்

இந்த இடம் முழுப்பிலங்காடு,  தலைசேரிக்கு அருகே தர்மடம் என்ற புகழ்பெற்ற கடற்கரைக்கு மேலும் சற்று வடக்கே , குஞ்சிப்புழா ரிசர்வ்ஃபாரஸ்டின் விளிம்பில் அமைந்திருக்கிறது. கடலோரமாக இந்த ரிசார்ட்டை ‘சர்க்கஸ்’ ஜானம்மா அவள் கணவர் ‘ரைஃபிள்’ குஞ்ஞாமனுடன் சேர்ந்து நடத்துகிறாள். வசதியான விடுதி அல்ல, நடுத்தரமானது. அதிகம்பேர் வருவதில்லை. ஆனால் மாட்டிறைச்சியின் உயர்தரச் சுவைக்கு இங்கேதான் வந்தாகவேண்டும்.

மிக அருகே கடற்கரை. தர்மடத்திலிருந்து தள்ளி இருப்பதனால் கடற்கரையில் கூட்டமிருக்காது. ஆனால் கடல் தர்மடம் அளவுக்கே அழகாக இருக்கும். விசித்திரமான வடிவில் நவீனச் சிற்பங்கள்போல அலைகளால் அரிக்கப்பட்ட மாமிசச் செந்நிறப்பாறைகள் கடலுக்குள் நின்றிருக்கும்.

“நீ போடா அறிவுகெட்ட தீய்யா… நான் உன்னிடம் பேசவில்லை. நான் பேசிக்கொண்டிருப்பது அறிவும் படிப்பும் பக்தியும் உள்ள ஒரிஜினல் கவுண்டனிடம்… கவுண்டன் இஸ் எ ஜெண்டில்மேன்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்.

பழனியப்பன் உருக்கமாக “யெஸ்” என்றான். ”வெரி ட்ரூ!”

ஜானம்மா அப்பால் நின்று என்னிடம் கையால் என்ன வேண்டும் என்றாள். நான் தண்ணீர் என்று கைகாட்டினேன்.

ஜானம்மாவை திரும்பி பார்த்த ஔசேப்பச்சன் “உதாரணமாக இந்த ஜானம்மா. இவளை எனக்கு பதினெட்டு வருடங்களாகத் தெரியும். நான் இங்கே பக்கத்தில் எஞ்சீனியராக வந்தபோது இவள் இங்கே சிறிய மெஸ் போட்டிருந்தாள். அங்கிருந்து இந்த விடுதி. எல்லாம் இந்த பீஃப் பொரியல்.. மக்களே பீஃப் என்பது மெல்லுந்தோறும் சுவையாகக்கூடியது. ஒரு நல்ல ராகம்போல… அல்லது… சரி அதைவிடு” என்றான் “சிலர் அதை சிக்கனைத் தின்பதுபோல சவைத்து விழுங்குகிறார்கள். பீஃப் நல்ல சுணையுள்ள ஆண்களுக்கு உரியது. குறிப்பாக அசலான மார்த்தோமா கிறிஸ்தவர்கள்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்…”

“ஔசேப்பச்சா நீ ஏன் ஜானம்மாவை உதாரணமாகச் சொன்னாய்?”என்றார் குமாரன் மாஸ்டர்.

“நானா?”

“ஆமாம்”

“நான் சொன்னேனா?”

“ஆமாம்”

“சொல்லியிருப்பேன்”என்று ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டான். ”நான் சொல்லவருவது என்னவென்றால் இந்த பீஃப் என்பது புனித தாமஸ் கொடுங்கல்லூரில் வந்து சிலுவையோடு இறங்கியபோது…”

“நீ ஜானம்மாவைப் பற்றிச் சொல்லு ஔசேப்பச்சா.. தாமஸ் சிலுவையோடு நாசமாகப் போகட்டும்”

“ஜானம்மா!” என்று சுட்டுவிரலைத் தூக்கிய ஔசேப்பச்சன் ஞானம்கனிந்த பாவனையில் மெல்லச் சிரித்து “நம் ஜானம்மா முன்பு சர்க்கஸ் விளையாட்டிலிருந்தாள். ஆகவேதான் அவளுக்கு சர்க்கஸ் ஜானம்மா என்று பெயர் தெரியுமா?” என்றான்.

“சர்க்கஸா? நான் வேறேதோ என்று நினைத்தேன்”

“நீ என்ன நினைத்தாய்?” என்று பழனியப்பன் ஆர்வமாகக் கேட்டான்

“கவுண்டரே, நீ வாயைமூடு, ஔசேப்பச்சா நீ சொல்” என்றேன்

“என்ன நினைத்தாய்?” என்று பழனியப்பன் மெல்ல கேட்டான்

“கவுண்டா நீ கொஞ்சம் சும்மா இருப்பாயா மாட்டாயா? ஔசேப்பச்சா சொல்லு” என்றார் குமாரன் மாஸ்டர்

“ஜானம்மாவின் சொந்த ஊர் தலைச்சேரிப் பக்கம் குந்நும்மல்காவு என்ற கிராமம். அங்கே உள்ள அந்தோணியார் சக்தி வாய்தவர். அதைவிடு. இந்த ஜானம்மாவின் அக்கா பார்வதி. இருவரும் சிறுவயதிலேயே சர்க்கஸுக்கு போய்விட்டார்கள். உண்மையைச் சொன்னால் போகவில்லை, கொண்டுபோகப்பட்டார்கள். உனக்குத் தெரியுமா தெரியவில்லை, அந்தக்காலத்தில் இந்தியா முழுக்க சர்க்கஸுக்கு தலைச்சேரியிலிருந்துதான் போவார்கள். சர்க்கஸ்காரர்களின் ஏஜெண்டுகள் தலைச்சேரிப் பக்கம் கிராமங்களுக்கு வந்து மூன்றுவயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை விலை கொடுத்து வாங்குவார்கள். தரித்திரம் மூத்திருந்த காலம். பெற்றோர்களும் விற்றுவிடுவார்கள்”

.

”அடப்பாவமே!” என்றான் பழனியப்பன்

”விற்கப்படாத குழந்தைகள் பெரும்பாலும் பட்டினிகிடந்து சொறிபிடித்து காலரா வந்து சாகும்” என்றான் ஔசேப்பச்சன். ‘சர்க்கஸில் நல்ல சாப்பாடு உண்டு. ஆனால் அந்தக்கால சர்க்கஸ் பயிற்சி என்பது ஒரு பெரிய சித்திரவதை. உடம்பை ஒரு ரப்பர்சரடு போல ஆக்கிவிடுவார்கள். ஜானம்மா டிரப்பீஸ் ஆடுவாள். ஒரு கம்பியின் முனையை வாயால் கடித்துக்கொண்டு மொத்த உடலையும் தலைகீழாக தூக்குவாள். அவளுடைய இரு கால்களுக்குமேல் பார்வதி நிற்பாள்”

”அவர்கள் இருந்த சர்க்கஸுக்கு நியூகிராண்ட் சர்க்கஸ் என்று பெயர்.அதன் உரிமையாளன் கோவாக்காரனாகிய பெரேரா. அவனுக்கு தான் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்று நினைப்பு. ஆனால் உண்மையில் அவனிடமிருந்தது கெட்டுப்போன தென்னமேரிக்கப் போர்ச்சுக்கல் ரத்தம். அதுவேகூட விபச்சாரத்தில் வந்தது. சரி அதைவிடு” என்றான் ஔசேப்பச்சன். “பெரேரா தன் சர்க்கஸில் உள்ள சிறுமிகளை மட்டும்தான் காமத்திற்குப் பயன்படுத்துவான். அவர்கள் கொஞ்சம் முதிர்ந்ததும் சர்க்கஸிலேயே எவராவது அவர்களை பெரேராவிடமிருந்து விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அதற்குள் புதிய பெண்குழந்தைகள் வந்துவிடுவார்கள்”

அப்படி ஜானம்மாவையும் அவள் தங்கையையும் வாங்கியவன் தாமரைச்சேரிக்காரன் வேலாயுதன். புல்லட் வேலாயுதன் என்று ரிங்கில் அவனுக்குப் பெயர். பீஃப் வேலாயுதன் என்று சர்க்கஸ் சகாக்கள் சொல்வார்கள். அவன் அப்போது நியூகிராண்ட் சர்க்கஸில் துப்பாக்கி வித்தை காட்டிக்கொண்டிருந்தான்.

துப்பாக்கி அன்று மிக அரிதான பொருள். சர்க்கஸில் மட்டும்தான் மக்கள் அதைப் பார்க்கமுடியும். ஆகவே துப்பாக்கிவித்தைகளுக்கு அன்று பெரிய மதிப்பு. ஆகவே வேலாயுதன் ஒரு ஸ்டார் மாதிரி. அவனுடைய வித்தை இருநூறடி தொலைவில் ஒரு பெண்ணை தலையில் ஒரு ஆப்பிளுடன் நிற்கவைப்பது. ஒரு வின்செஸ்டர் மாடல் 77 செமி ஆட்டமாட்டிக் ரைஃபிளால் அவன் தலையிலிருக்கும் ஆப்பிளை குறிபார்த்துச் சுடுவான். அவன் குறிபார்க்க நெடுநேரமாகும். அப்போது இசையே இருக்காது. பார்வையாளர்கள் எச்சில்விழுங்குவதும் மூச்சுவிடுவதும் கேட்கும்

எல்லாரும் பெரும்பாலும் தெளிந்து கதைகேட்கும் கூர்மையை அடைந்துவிட்டோம். பழனியப்பனின் கண்கள் கஞ்சா இழுத்ததுபோல விரிந்திருந்தன

ஒருநாளைக்கு பன்னிரண்டு முறை அப்படி அவன் சுடுவான். ஒரு ஷோவில் நான்குமுறை. நியூ கிராண்ட் சர்க்கசின் மிகப்பெரிய ஐட்டம் நம்பர்களில் ஒன்று அது. அவனுக்கு அங்கே நல்ல சம்பளம். அவன் மனைவி சம்பாதான் ஆப்பிளுடன்  முன்னால் நிற்பவள். ஒருநாள் சம்பாவை நிறுத்தி அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது குண்டு அவள் நெற்றியில் பாய்ந்துவிட்டது. அங்கேயே அவள் இறந்தாள்.ஆனால் சர்க்கஸ்காரர்கள் தனி உலகம். பொதுமக்களுக்கு அங்கே நுழைய அனுமதி இல்லை. பெரேரா சம்பாவை உடனடியாக உள்ளூர் மயானத்தில் எரித்துவிட்டார். விஷயம் முடிந்தது

ஆனால் வேலாயுதன் அப்படியே உடைந்து சோர்ந்துவிட்டான். பலநாட்கள் சும்மா இருந்தான். வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போய்விடுகிறேன் என்றான். வாங்கிய முன்பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தந்துவிடுகிறேன் என்றான்.அவனை நம்பி அப்படியே விட பேரேராவுக்கு மனமில்லை. அவன் பெரிய குண்டன், பயில்வான். ஒருநாளைக்கு நான்கு கிலோ பீஃப் வேண்டும். அதையும் அவனே சமைத்துக்கொள்வான். துப்பாக்கி வித்தை தவிர தசையுடல் காட்டும் வித்தையும் செய்வான். உடலின் தசைகளை தனித்தனியாக அசைக்க அவனால் முடியும். ஆனால் அதை கொஞ்சம் பெண்கள் கிக்கிக்கீ என்று சிரித்து ரசிப்பார்களே ஒழிய அது மைய வித்தை அல்ல. வேறு வித்தைகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும்போது நடுவே செய்யபப்டவேண்டியது. அவனுடைய தீனிச்செலவு விலங்குகளின் செலவு அளவுக்கே ஆயிற்று.

ஆகவே பெரேரா ஒரு முடிவு எடுத்தார். அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த பார்வதியை அவர் வேலாயுதனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். பார்வதி அதைக்கேட்டு பயந்து நடுங்கி வீரிட்டு அலறி மயங்கி விழுந்தாள். அவளை கூட்டிக்கொண்டு போய் டேப்பால் கையை கட்டி நிர்வாணமாக தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடித்தார் பெரேரா. இரண்டுநாள் அடியும் கொலைப்பட்டினியும். “நீ ஒப்புக்கொள்ளாவிட்டால் உன் தங்கை போகட்டும்” என்று பெரேரா சொன்னதும் அவள் ஒப்புக்கொண்டாள். அவர்களுக்கு சுருக்கமாக சர்க்கஸில் உள்ள பிள்ளையார் முன்னாலேயே திருமணம் நடந்தது

அதன்பின் பார்வதிதான் அவன் முன் தலையில் ஆப்பிளுடன் நின்றாள். வேலாயுதன் ஒருநாளுக்கு பன்னிரண்டு குண்டுகளை அவளை நோக்கி சுட்டான். எல்லாமே மிகச்சரியாக ஆப்பிளைச் சிதறடித்தன. ஒவ்வொருமுறை துப்பாக்கி முன் நிற்கும்போதும் பார்வதி பயந்து நடுங்குவதும், அழுவதும், அவளை ஜானம்மாவும் இரண்டு பெண்களும் சமாதானம் செய்து கூட்டிச்சென்று துப்பாக்கி முன் நிற்கச் செய்வதும், வேலாயுதன் சட்டென்று மனம்தளர்ந்து ரைஃபிளை வீசிவிட்டு திரும்பச் செல்லமுயல்வதும் ,அவனை பெரேரா வந்து மிரட்டி திட்டி சுடவைப்பதும் வழக்கம்.

ஆனால் அதெல்லாம் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு. உண்மையில் பார்வதிக்கு எந்த பயமும் இல்லை. அவள் ரிங்குக்கு ஆப்பிளுடன் செல்வது வரை கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்துகொண்டிருப்பாள். அல்லது எதையாவது தின்றுகொண்டிருப்பாள். சர்க்கசில் உள்ள இரண்டு முக்கியமான இன்பங்கள் அவை. நிறையபேர் நம்மை பார்ப்பதும், விதவிதமாகத் தின்பதும். கடும் பயிற்சி என்பதனால் எந்நேரமும் நல்ல பசி இருக்கும். ஆகவே எதைத்தின்றாலும் சுவையாக இருக்கும். சிறுவயதிலேயே நீச்சலுடையில் கூட்டத்தில் தோன்றி பழகிவிட்டிருந்தமையால் எந்த வெட்கமும் இருக்காது. ஆனால் பலர் பார்ப்பதும் கைதட்டுவதும் பாராட்டிக் கூச்சல் போடுவதும் மகிழ்ச்சியை அளிக்கும். அவர்களை மேலும் கூச்சலிடும்படி எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றும்.

பார்வதிக்கு ஏன் பயமே இல்லை என்று எல்லாருக்கும் ஆச்சரியம்தான். பெரேராவே அவளிடம் நாலைந்துமுறை கேட்டார். “அவர் வச்ச குறி தவறாது” என்று அவள் ஆணித்தரமாகச் சொன்னாள். “தவறித்தானே சம்பா செத்தாள்?”என்றார் பெரேரா. “அது அவள் விதி… அவள் நின்றது சரியில்லை” என்றாள். ”சரி நீ நம்பினால் சரி” என்று பெரேரா சொல்லிவிட்டார்.

”நீ ஒரு கிறுக்கிடீ” என்றள் டிரெப்பீஸ் விளையாட்டுக்காரி ஸெலினா. “அவர் குறி தவறவே தவறாது, எனக்கு தெரியும்” என்றாள் பார்வதி. “தவறினால்?” என்றாள் சமையற்காரி காளியம்மை. “சாகவேண்டியதுதான். கணவன் கையால் செத்தால் மோட்சம்தானே?”என்றாள் பார்வதி. காளியம்மையும் கேட்டிருந்த பெண்களும் வாயில் கைவைத்து வார்த்தையில்லாமல் அமர்ந்திருந்தார்கள்

மற்ற பெண்களுக்கும் ஆச்சரியம்தான். எப்படி அத்தனை ஆழமான நம்பிக்கை வருகிறது? அந்த நம்பிக்கை அவர்களுக்கு அவர்களின் கணவர்கள்மேல் வரவில்லையே? கடைசியில் பெரேராவே “வேலாயுதன்தான் அசல் ஆண்பிள்ளை. எவனொருவன் பெண்ணை முழுமையாக தன் காலில் விழவைக்கிறானோ அவன்தான் முழு ஆண்” என்றார். “அது வேலாயுதனின் தனித் திறமைதான்” என்று மற்றவர்களும் ஒப்புக்கொண்டார்கள். “இத்தனைக்கும் இதுவரை மூன்றுமுறை அவன் சுட்டு அவன் மனைவிகளே செத்திருக்கிறார்கள்” என்றார் கோமாளியான குமாரன் நாயர்.

“ஆனாலும் அது மிகப்பெரிய திறமைதான்” என்று பழனி சொன்னான். “துப்பாக்கியாலே பன்னிரண்டு தடவை சுடுவது என்றால்!”

“ஆமாம், ஒரு முறை ஒரு நிமிஷம் மனம் பதறிவிட்டதென்றால்? பெண்டாட்டிகள் மேல் நமக்கு ஆயிரம் கோபம் இருக்கும்” என்றார் குமாரன் மாஸ்டர்

“அதில்தான் நுட்பம் இருக்கிறது” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “அந்த நுட்பம் பெரேரா உட்பட எவருக்குமே தெரியாது. அதுதான் வேலாயுதனின் வாழ்க்கைக்கே அடிப்படை. அவனை அப்படி ஒரு ஆண்பிள்ளையாக நிறுத்தியதே அதுதான்”

“என்னது?”

“அவன் துப்பாக்கியில் குண்டே போடுவதில்லை. வெறும் கார்ட்ரிஜ்தான்…”

“அப்படியென்றால்?”

“அந்த ஆப்பிளை அவன்தான் தயார் செய்வான். அதற்குள் ஒரு சுண்டுவிரல் அளவுக்கு ஒரு மிகச்சிறிய கார்ட்ரிஜ்ஜை செருகுவான். அதில் ஒரு சிக்னலர் இருக்கும். அது பார்வதியின் கையில் இருக்கும்.  கையில் என்றால் அவளுடைய கவுனின் பாக்கெட்டுக்குள். அவள் அதன்மேல் கையை வைத்திருப்பாள். வேலாயுதம் சுட்டு ஒளியும் சத்தமும் வந்த அதே கணம் அவள் அதை கையால் அழுத்துவாள். ஆப்பிள் வெடித்துச் சிதறும் அதற்குள் இருந்து குண்டின் ஈயமும் விழுந்திருக்கும். ஆகவே கண்டுபிடிக்கமுடியாது”

“அடப்பாவி!” என்று பழனியப்பன் சொன்னான்

இதை ஆர்மீனியன் கன் டிரிக் என்பார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆர்மீனியன் சர்க்கஸ்களில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் அப்போதும் ஒருசிலருக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். குருசிஷ்ய அடிப்படையில் அதை கற்றுக்கொடுத்தார்கள். வேலாயுதன் அதை பாம்பேயைச் சேர்ந்த அங்கிலோ இந்தியரான எட்வர்ட் ஜான் என்பவரிடமிருந்து கற்றுக்கொண்டான்

அந்த ரகசியத்தை அவன் பார்வதிக்கு முதலிரவு நாளிலேயே சொல்லிவிட்டான். அவள் பயம் தெளிந்து அவனுடன் இருந்தது அதனால்தான். அவள் அதை ஜானம்மாவிடம்கூட சொல்லவில்லை.

ஆனால் அந்த தந்திரம் அவ்வளவு எளியது அல்ல. கணவனின் துப்பாக்கியையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அவன் கை அந்த ரைஃபிளின் விசையில் அழுத்தியதும் தன் கையிலுள்ள பித்தானை அழுத்தவேண்டும். ஒரே கணத்தில் அது நிகழவேண்டும். ஒருகணம் பிந்திவிட்டால் தந்திரம் வெளியே தெரிந்து ஊரே நாறி விடும்.

அவர்கள் இருவரும் சர்க்கஸ் கூடாரத்திற்கு வெளியே ஒரு பொட்டல்காட்டில் அதற்காக பத்துப்பதினைந்து நாட்கள் கடுமையான பயிற்சியை எடுத்தார்கள். உண்மையில் அந்தப் பயிற்சி வழியாகத்தான் அவர்கள் இருவரும் நெருக்கமானவர்களாக ஆனார்கள். வேலாயுதன் ஒரு வகையா அப்பாவி என்று பார்வதிக்குப் புரிந்தது. அவனுக்கு தீனிதான் முதல் பற்று, மற்றதெல்லாம் பிறகுதான்.

அவன் இளமையிலேயே கைவிடப்பட்ட குழந்தை. தெருவில் பட்டினி கிடந்து வளர்ந்தவன். ஓட்டலில் வேலைபார்த்தான். உடலை பெருக்கி தசையை வளர்த்தபின் சர்க்கஸில் சேர்ந்தான். அவனுடைய குருவுக்கு ஒருபால் காமப்பழக்கம். அவருக்கு மனைவிபோல எட்டாண்டுகள் இருந்தபோது அவர் அவனுக்கு அந்த வித்தையைச் சொல்லிக்கொடுத்தார்.

அவளுக்கு வேலாயுதன்மேல் அனுதாபம் ஏற்பட்டது. அது பிரியமாக ஆகியது. அவனுக்கான பீஃப் சமையலை அவளே செய்ய ஆரம்பித்தாள். அவன் விதவிதமான சமையல்முறைகளைச் சொல்லிக்கொடுத்தான். அவனுக்கும் அவளுக்குமான இசைவு கூடிக்கூடி வந்தது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுபட்டு வாழலாயினர்.

இருவரும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். சேர்ந்து டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்பார்கள். அவர்களை லட்சியத் தம்பதிகள் என்று சர்க்கஸ் பெண்கள் கேலி செய்தனர். “ஆமாடி, அதற்கு என்ன இப்போ?” என்று பார்வதி சொல்வாள். “எனக்கும் இதுபோல ஒரு மண்ணனை தேடித்தா அக்கா” என்று ஜானம்மை பாதிவேடிக்கையாக கேட்பதுண்டு.

அவர்களிடையே அந்த நேரக்கணக்கு தவறுவதே இல்லை. அவன் கைவிரலும் அவள் கைவிரலும் ஒரே கணம் அசைய அவன் துப்பாக்கியிலும் அவளுடைய ஆப்பிளிலும் ஒரே கணம் வெடி வெடித்தது. மறுகணம் சூழ்ந்திருந்த பல்லாயிரம்பேரில் இருந்து “ஆ!”என்ற வியப்பொலி எழுந்தது. அவர்கள் அந்த ஒலியை விரும்பினார்கள். கூடாரத்தில் இருக்கும்போது அவர்களைச் சூழ்ந்து அந்த ஒலி இருப்பதுபோல எண்ணினார்கள்.

அவளுக்கு வாழ்க்கை எளிதாகியது. வேலாயுதனுக்கு நல்ல சம்பளம். ஆகவே அவளுக்கு நல்ல தீனி கிடைத்தது. வெளியே போய் சினிமா பார்க்கவும் துணிகள் வாங்கவும் முடிந்தது. சொந்தமாக ரேடியோ வாட்ச் எல்லாம் வாங்கினாள். நகைகளும் வாங்கினாள். தங்கைக்கும் நகைகளும் துணிகளும் வாங்கிக்கொடுத்தாள். ரகசியமாக நிறைய பணமும் சேர்த்து வைத்திருந்தாள்.

சர்க்கஸிலிருந்து பெண்கள் முப்பது வயதில் ஓய்வுபெறவேண்டியிருக்கும். மிக ஆரோக்கியமாக இருந்தால் முப்பத்தைந்து. அதன்பின் நரகவாழ்க்கைதான். மூட்டுவலி, தசைவலி இருக்கும். போதைப்பழக்கம் இருக்கும். பெரும்பாலானவர்கள் விபச்சாரத்திற்குத்தான் போவார்கள். பணத்துடன் எங்காவது சென்று இன்னொரு வாழ்க்கையை ஆரம்பித்தால் தப்பித்துக்கொள்ளலாம்.

எல்லாம் சரியாகப் போயிருந்தால் பார்வதி வேலாயுதனுடன் ஜானம்மாவையும் அழைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளில் தலைச்சேரிக்கு திரும்பியிருப்பாள். ஆனால் நடுவே பாஸ்கரன் வந்து சேர்ந்தான். அவனும் ஒரு துப்பாக்கிக்காரன். கௌபாய் உடையை அணிந்து துப்பாக்கியால் சுட்டு வித்தை காட்டுபவன். தொப்பியை பறக்கவைப்பான். குப்பிகளையும், மிதக்கும் முட்டை ஓடுகளையும் சுட்டு உடைப்பான். வந்த முதல்நாளே அவன் வேலாயுதனின் தந்திரத்தை தெரிந்துகொண்டான்

”அதெப்படி?” என்றான் குமாரன் மாஸ்டர்

”ஆணுக்கு ஆண் தெரிந்துகொள்வதுதான். இல்லை பார்வதியைப் பார்த்து தெரிந்துகொண்டானோ என்னவோ”

“பிறகு?”

பாஸ்கரன் பார்வதிக்கு வலைவீச தொடங்கினான். பார்த்துக்கொண்டே இருப்பது. கண்ணோடு கண் சந்திப்பது. அங்கே இங்கே வழிமறித்து மற்ற பேச்சு பேசுவது. அவள் அவனை தவிர்க்க முயன்றாள். ஆனால் அவளால் அவனை விலக்கவே முடியவில்லை. அவள் உடல் அவளை அறியாமலேயே அவனுக்கு அழைப்பு அளித்தது. அவன் நினைப்பாகவே இருந்தாள். ஏனென்றால் அவன் உண்மையாகவே துப்பாக்கிவீரன்.

ஒருநாள் அவன் அவளை சரியாக ஒரு கூடாரங்களுக்கு நடுவே மறித்து பிடித்துக்கொண்டான். வேலாயுதனின் துப்பாக்கியில் குண்டு இருப்பதில்லை என்பது தனக்கு தெரியும் என்றான். அவள் பதறிப்போய் அதை ஆவேசமாக மறுத்தாள். அவளுடைய பதற்றமே அது உண்மை என்று காட்டுகிறது என்று அவன் சொன்னான். அதன்பின் அவள் அவனிடம் மன்றாடத் தொடங்கினாள். கண்ணீர்விட்டாள். காலைப்பிடித்தாள்.

அதெல்லாம் செல்லுபடியாகாது, தன்னுடன் படுத்தே ஆகவேண்டும் என்று அவன் சொன்னான். இல்லாவிட்டால் பெரேராவுக்குச் சொல்வேன், அல்லது சர்க்கஸ் நடக்கும்போதே அந்தச் சூழ்ச்சியை வெளிப்படுத்தி வேலாயுதனை அவமானப்படுத்துவேன் என்றான். வேறுவழியில்லாமல் அவள் அவனுக்கு உடன்பட்டாள்.

அவர்கள் உடலுறவுகொள்வது விஜய், அஜய் என்று பெயரிடப்பட்ட இரு புலிகள் வாழ்ந்த கூண்டுகளுக்கு நடுவே . நான்குபக்கமும் தட்டிபோட்டு வளைக்கப்பட்ட கொட்டகைக்குள் கூண்டுகளுக்குள் புலிகள் இருந்தன. பக்கத்திலேயே ஒரு சிங்கம் நான்கு கரடிகள் ஒரு சிறுத்தை. அவற்றுக்கு காலையில் மாமிச உணவு கொடுத்து கூண்டுகளை மூடி திரைபோட்டுவிடுவார்கள். அவை இருட்டில் நன்றாகத் தூங்கும். அப்போது அப்பகுதிக்கு யாருமே வரமாட்டார்கள். அவள் குளிக்கவும் துணிதுவைக்கவும் செல்வதுபோல கிளம்பி அங்கே வருவாள். வேறுவழியே அவன் அங்கே வருவான்.

மனிதவாடையில் புலிகள் உறுமிக் கூச்சலிடும். கூண்டுக்குள் அலைமோதியபடி நடக்கும். அங்கே அவற்றின் மூத்திரத்தின் சூர் நிறைந்திருக்கும். அவர்கள் நடுவே கூடாரத்துணியை விரித்துப் படுத்துக்கொள்வார்கள். அவளுக்கு முதலில் அந்த நாற்றமும் ஓசையும் மனம்பதறச் செய்தன. குமட்டல் எழுந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே அது பழகிவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கவும் தொடங்கியது. பிறகு அது அவளை வெறிகொள்ளச் செய்தது. அவள் பாஸ்கரனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தாள்.

ஆனால் வேலாயுதனுக்கு ஒன்றும் தெரியாது. அவள் அவனிடம் மேலும் அன்பாக இருந்தாள். ஆகவே அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் பார்வதி பாஸ்கரனிடம் அவனால் தன்னை மணந்துகொள்ள முடியுமா என்று கேட்டாள். அவன் வேலாயுதன் விடமாட்டானே என்றான். “நீ மெய்யாகவே துப்பாக்கிவீரன் தானே? அவன் டம்மி. அவனுக்குச் சுடவே தெரியாது” என்று பார்வதி சொன்னாள். “நீ அவனை மிக எளிதாக ஜெயிகலாம், எனக்குத்தெரியும்”

அவன் ஒப்புக்கொண்டான். ஒருநாள் பார்வதி வேலாயுதனிடம் பாஸ்கரனுக்கு வேலாயுதனின் துப்பாக்கி தந்திரம் தெரிந்துவிட்டது என்றாள். அவன் திடுக்கிட்டான். பாஸ்கரன் எல்லாவற்றையும் பெரேராவிடம் சொல்லிவிடுவதாக மிரட்டுகிறான் என்றாள் பார்வதி. “அவன் நம்மை அழித்துவிடுவான்… அவனுக்கு என்மேல் ஒரு கண்” என்றாள்.

வேலாயுதன் இரவெல்லாம் அரற்றிக்கொண்டிருந்தான். மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் சேர்ந்துசென்று பாஸ்கரனைப் பார்த்தார்கள். வேலாயுதன் பாஸ்கரனிடம் தன் வாழ்க்கையை அழிக்கவேண்டாம் என்று மன்றாடினான்.வேறொரு தொழிலும் தெரியாது என்று காலைப்பிடித்தான். பார்வதியும் அழுதாள்.

ஆனால் பாஸ்கரன் இறங்கிவரவில்லை.வேலாயுதன் ஊரை ஏமாற்றுகிறான் என்றான். “அது தொழில்வித்தை” என்று வேலாயுதன் சொன்னான். “இல்லை இதே வித்தையை குண்டுபோட்டுத்தான் செய்வார்கள்” என்றான் பாஸ்கரன். “எவரும் அப்படிச் செய்யமுடியாது” என்றான் வேலாயுதன். “நான் செய்கிறேன் என்ன பந்தயம்?” என்றான் பாஸ்கரன்.

வாக்குவாதம் முற்றியது. கடைசியில் அவர்கள் பந்தயம் கட்டினார்கள். பொட்டல்காட்டுக்குப் போவது. அங்கே இருநூறடி தொலைவில் ஆப்பிள் வைத்து சுடுவது. ரைஃபிளில் குண்டு போட்டு சுட்டுக்காட்டவேண்டும். பந்தயம் பத்தாயிரம் ரூபாய். பாஸ்கரன் அந்த சவாலை ஏற்றுக்கொண்டான். எவராலும் இருநூறடி தொலைவுக்கு விஞ்செஸ்டர் ரைபிளால் சுடமுடியாது என்று வேலாயுதன் நம்பினான்.

அவர்கள் பொட்டலுக்குச் சென்றார்கள். நல்ல மதியவெயில் நேரம். அங்கே சென்று நின்றதும் பாஸ்கரன் “நான் சும்மா சுடமாட்டேன், பார்வதி தலையில் ஆப்பிளுடன் இலக்காக நிற்கவேண்டும்” என்றான். வேலாயுதன் பதறிப்போய் “துப்பாக்கியின் முன்னாலா? முடியவே முடியாது!” என்று கூச்சலிட்டான். “இல்லாவிட்டால் நீ நில்” என்றான் பாஸ்கரன். வேலாயுதன் திகைத்துப்போய் நின்றான்.

“நான் சுட்டுகாட்டுகிறேன், தைரியம் இருந்தால் நில்லுங்கள். இல்லாவிட்டால் தோற்றேன் என ஒத்துக்கொள்ளுங்கள்” என்றான் பாஸ்கரன். “ஆனால் பந்தயம் ரூபாய் அல்ல, சுட்டால் பார்வதியை நீ எனக்கு விட்டுக்கொடுக்கவேண்டும். எனக்கு அவள் சொந்தமாகவேண்டும்“.

வேலாயுதன் பதறிப்போய் கூச்சலிட்டான். பாஸ்கரனை அடிக்கப்போனான். பாஸ்கரன் “பந்தயம் பந்தயம்தான்” என்றான். “இல்லாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பேரேரா முடிவெடுக்கட்டும்” என்றான். வேலாயுதன் மன்றாடினான். சீற்றம்கொண்டு கூச்சலிட்டான். பாஸ்கரன் மசிந்துவரவே இல்லை

சட்டென்று “நான் நிற்கிறேன்“ என்றாள் பார்வதி. பாஸ்கரனிடம் “போட்டியில் தோற்றால் நீ வேலாயுதனின் ரகசியத்தை எவரிடமும் சொல்லக்கூடாது, அவர் காலில் தொட்டு வணங்கி மன்னிப்பும் கேட்கவேண்டும்“ என்றாள். பாஸ்கரன் “சரி” என்று ஒப்புக்கொண்டான்.

ஆனால் வேலாயுதன் பதற்றம் அடைந்து கூச்சலிட்டான். “வேண்டாம் வேண்டாம்!” என்று அழுதான். “ஏன் பயப்படுகிறீர்கள்? இந்த பொறுக்கியைப் பார்த்து பயப்படுவதா? இவன் குண்டு நாலடி தள்ளித்தான் போகும். நாம் ஜெயித்தால் இவனுடைய தொந்தரவு இல்லாமலாகும். இல்லை குண்டு பாய்ந்து நான் செத்தால் உங்களுக்காக உயிர்விட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லி வேலாயுதன் கொண்டுவந்திருந்த ஆப்பிளை வாங்கிக்கொண்டாள் பார்வதி.

நிதானமாக நடந்து சென்று பாறை அருகே நின்று ஆப்பிளை தலையில் வைத்துக்கொண்டாள். அவளுடைய கண்கள் மட்டும் தொலைவில் தெரிந்தன. வேலாயுதன் “பார்வதியே! பார்வதியே!” என்று கதறி அழுதபடி அமர்ந்துவிட்டான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

பாஸ்கரன் பதற்றப்படவில்லை. அவன் பார்வதியின் தலையில் ஆப்பிளை அசையாமல்  சரியாக அமைத்து வைத்தான். திரும்பி வந்து நின்று குறிபார்த்தான். கவனமாகச் சுட்டான். மிகச்சரியாக ஆப்பிளில் குண்டு பட்டு அது சிதைந்து தெறித்தது.

வேலாயுதன் வெறியுடன் கூச்சலிட்டபடி பாஸ்கரனை கொல்லப்பாய்ந்தான். பார்வதி ஓடிவந்து அவனை தடுத்தாள். ”வேண்டாம், வேண்டாம்… நீங்கள் சொன்ன சொல் சொல்லாகவே இருக்கட்டும். நாம் தோற்றுவிட்டோம். என்னை மன்னியுங்கள்” என்று கதறினாள்.வேலாயுதனும் கதறி அழுதான். “வேறுவழியே இல்லை. என்னை விட்டுவிடுங்கள்”என்றாள் பார்வதி.

வேலாயுதன் உண்மையில் மனம் தளர்ந்துவிட்டான். அவனை பார்த்து பாஸ்கரன் சொன்னான். “இதோபார் நீயே கொண்டுவந்த ஆப்பிள் அது. அதை துப்பாக்கியில் குண்டு போட்டு சுட்டிருக்கிறேன். இது நீ செய்தது போல தந்திரம் இல்லை, உண்மையான துப்பாக்கி வித்தை. உன்னை நான் அந்த ஆப்பிளைச் சுட்டதுபோல இருநூறடி தொலைவிலிருந்தே சுடமுடியும். நீ கூடாரத்தில் தூங்கும்போது வெளியே என் கூடாரத்திலிருந்தே சுடுவேன். எங்கே போனாலும் உனக்கு பாதுகாப்பில்லை. இருநூறடி தொலைவில் குறிபார்த்துச் சுடுபவனிடமிருந்து யாருமே தப்பமுடியாது. வீணாக என் துப்பாக்கியால் சாகாதே. அவளை விட்டுவிட்டு ஓடு”

அவர்கள் திரும்பி வந்தனர். வேலாயுதன் வழியெல்லாம் அழுதுகொண்டிருந்தான். பார்வதி கண்ணீருடன் வேலாயுதனிடம் விடைபெற்றாள். அவள் பாஸ்கரனுடன் அவன் கூடாரத்திற்குச் சென்றுவிட்டாள். தன் கூடாரத்திற்கு வந்த வேலாயுதன் வாயில் ரைஃபிளை நுழைத்துச் சுட்டுக்கொண்டான்

“பரிதாபமான கதை” என்றான் பழனியப்பன்

“ஆனால் அவன் சாகவேண்டியவன்தான். ஏற்கனவே அவன் மூன்று மனைவிகளை கொன்றிருக்கிறான்“ என்றார் குமாரன் மாஸ்டர்

“ஆமாம், ஒருபெண்ணைப் பார்த்ததும் முன்பு இருந்தவளை கொல்வது வேலாயுதனின் வழி. அந்த முந்தைய மனைவி அவன் துப்பாக்கியில் குண்டு இல்லை என்று நம்பி சென்று நிற்பாள். அதில் அவன் குண்டு போட்டிருப்பான்”

”ஆக மொத்தம் நான்குமுறை துப்பாக்கியில் குண்டு போட்டிருக்கிறான்“ என்றார் குமாரன் மாஸ்டர்

“ என்ன இருந்தாலும் அந்த பாஸ்கரன் மெய்யாகவேஆண்பிள்ளைச் சிங்கம்… அவன் உண்மையான வீரன். அவள் அவனுக்குச் சொந்தமானதுதான் நியாயம்… நான் அவனைத்தான் ஆதரிப்பேன்” என்றான் பழனி.

ஸ்ரீதரன் ‘கவுண்டா, இப்படி அப்பாவியாக நீ இருந்தால் எப்படி தொழில் செய்வாய்?” என்றான்

“தமிழ்நாட்டில் மற்றவர்கள் கவுண்டர்களைவிட அப்பாவிகள்” என்றான் ஸ்ரீதரன் “அதுதான் அவர்களின் தொழில்ரகசியம்”

”சரி நீ சொல், அவன் எப்படி சுட்டான்? அந்த ஆப்பிள் வேலாயுதன் கொண்டுவந்தது இல்லையா?”

“ஆமாம்… ஆனால் பார்வதியின் தலையில் ஆப்பிளை சரியாக வைத்தபோது அதை எடுத்துவிட்டு தானே கொண்டுவந்த வேறு ஆப்பிளை வைத்துவிட்டான் பாஸ்கரன். அதில் சிக்னலர் வைத்த கார்ட்ரிட்ஜ் இருந்தது. அது பார்வதிக்கே தெரியாது“

“அப்படியென்றால்?”

“பாஸ்கரனின் தந்திரம் வேறு. அவன் எவரையும் நம்புவதில்லை. அவனிடமிருந்தது இருநூறடி தொலைவில் வெடிக்கச் செய்யும் நவீன சிக்னலர். அவன் அதை தன் ஷூவுக்குள் வைத்திருந்தான். கையால் துப்பாக்கி விசையை அழுத்தும்போது காலின் கட்டைவிரலால் சிக்னலரை அழுத்துவான். அந்த ரகசியத்தை அவன் பார்வதியிடம் கடைசிவரை சொல்லவில்லை”

“அவர்கள் அந்த துப்பாக்கிவித்தையை எவ்வளவுநாள் செய்தார்கள்?”

“நான்கு ஆண்டுகள்”

”நான்கு ஆண்டுகள்… பன்னிரண்டு பெருக்கம் முந்நூற்றி அறுபது பெருக்கம் நான்கு. அய்யோ… இத்தனை தடவை இவள் அவனை நம்பி துப்பாக்கியின் முன்னால் தலையில் ஆப்பிளுடன் நின்றிருக்கிறாள்” என்று பழனியப்பன் சொன்னான். “இவன்தான் ஆண்மகன்… சந்தேகமே இல்லை. இவன்தான் சரியான கௌபாய்… கிளிண்ட் ஈஸ்ட்வுட்! …அடாடா!”

நான் “பாஸ்கரன் இப்போது இருக்கிறானா?” என்றேன்

“இல்லை, அவன் ஆகாய ஊஞ்சலும் ஆடுவான். ஒருமுறை எதிர் ஊஞ்சலில் ஆடிய பெண் கைநீட்டும்போது தவறவிட்டுவிட்டாள். கீழே வலையும் தொய்ந்திருந்தது. தலை நொறுங்கி அங்கேயே செத்துவிட்டான்”

.

”ஓ” என்றான் பழனியப்பன் “பாவம், நல்ல வித்தைக்காரன்”

“அதன்பின் பார்வதி ஜானம்மாவுடன் இங்கே தலைச்சேரிக்கு வந்துவிட்டாள். வேலாயுதன் பாஸ்கரன் இரண்டுபேருக்குமே நல்ல சேமிப்பு இருந்தது. இன்ஷ்யூரன்ஸும் இருந்தது. இரண்டு பணமும் இவர்களுக்கே வந்தது. அந்ந்தப்பணத்தைகொண்டுதான் இந்த இடத்தை வாங்கினார்கள்”

“பார்வதி இங்கேயா இருக்கிறாள்… எங்கே?” என்றேன்

“அவள்தான் இங்கே சமையல்… சமையல்கட்டிலேயே இருப்பாள்“ என்றான் ஔசேப்பச்சன் “ஜானம்மோ, பாறுவம்மையை வரச்சொல்லு.. நம்மாட்கள் பார்க்கவேண்டுமாம்”

பார்வதியம்மை ஜானுவைப்போலவே இருந்தாள், இன்னும் கொஞ்சம் நிறமாக. நான் அவளை அதற்கு முன் பார்த்ததில்லை. ஒருவேளை பார்த்திருந்தால்கூட ஜானம்மை என்று நினைத்திருக்கலாம்

“உங்கள் கதையை அச்சாயன் சொன்னான்” என்றேன்

“அவன் கொஞ்சம் கதைவிடுவான்… ஆனால் கதை எனக்குப்பிடிக்கும்” என்றாள் பார்வதியம்மா

பழனியப்பன் “நல்ல தைரியம்தான்…எப்படி அவன் முன் தலையில் ஆப்பிளுடன் நின்றீர்கள்?” என்றான்

“என்ன தைரியம்? யாராவது இருநூறு அடி தூரத்திற்கு மனிதத் தலையில் இருக்கும் ஆப்பிளைச் சுடமுடியுமா? அவனிடம் சுவிட்ச் இருக்கிறது என்று எனக்கு முதலிலேயே தெரியும். அவன் எனக்கு தெரியக்கூடாது என்று நினைத்தான். தெரியாது என்று நானும் நடித்தேன்” என்றார் பார்வதியம்மா

“கடைசிவரை தெரியாதா?” என்றான் பழனியப்பன், கொந்தளிப்புடன்.

“இல்லை, தெரியாது.. பீஃப் வறுவல் கொஞ்சம் கொண்டுவரட்டுமா?”

“கொஞ்சம்” என்றேன்.  “மறுபடி ஊற்றிக்கொள்ளவேண்டும். தெளிந்துவிட்டது”

அவள் திரும்பிச் சென்றாள். யானைப்பின்பக்கம். அவள் போவதைப் பார்த்தபின் ஔசேப்பச்சன் என்னிடம் “இதெல்லாம் அவளே என்னிடம் சொன்னது. அவள் நல்ல பார்ட்டி. இப்போது வயதாகிவிட்டது”என்றான்

“ஓ” என்றான் பழனியப்பன் ‘இப்போதும் ஆள் நன்றாகத்தான் இருக்கிறாள்”

“நீ முட்டிப்பார்…”

“வளையுமா?”

“ரப்பர் மாதிரி” என்றான் ஔசேப்பச்சன். “ஆனால் அதற்குமுன் அவளைப் பற்றி ஒன்று தெரிந்திருக்கவேண்டும். அந்த ஆகாய ஊஞ்சலில் எதிரில் வந்து பிடியை தவறவிட்டது யார் தெரியுமா/?”

என் நெஞ்சு படபடத்தது. “யார்?”

“ஜானம்மா”

நெடுநேரம் அமைதி நிலவியது. பழனியப்பன் பெருமூச்சுவிட்டான்

குமாரன் மாஸ்டர் “ஔசேப்பச்சா இந்த ரைஃபிள் குஞ்ஞாமன் துப்பாக்கிக்காரனா? எந்நேரமும் ரைஃபிளுடன் அலைகிறானே?” என்றார்

“சேச்சே, இவன் டம்மி. அது துப்பாக்கியே இல்லை” என்றான் ஔசேப்பச்சன்

https://www.jeyamohan.in/130303#.XoJF0S_TVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திருப்பங்களுடன் கூடிய கதை.....நன்றி கிருபன்.......!   👍

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே.......தூக்குத்தூக்கி படத்தில் வரும் ஒரு பாட்டு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 9:19 PM, கிருபன் said:

அதன்பின் பார்வதி ஜானம்மாவுடன் இங்கே தலைச்சேரிக்கு வந்துவிட்டாள். வேலாயுதன் பாஸ்கரன் இரண்டுபேருக்குமே நல்ல சேமிப்பு இருந்தது. இன்ஷ்யூரன்ஸும் இருந்தது. இரண்டு பணமும் இவர்களுக்கே வந்தது. அந்ந்தப்பணத்தைகொண்டுதான் இந்த இடத்தை வாங்கினார்கள்”

ஆண்கள் தைரியசாலிகளாக இருக்கலாம் பெண்கள் புத்திசாலிகள். எம்ஜிஆர் எவ்வளவு கஸ்ரப்பட்டு அதிமுக வை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.  பின்னாளில் ஜெயல்லிதா சுலபமாக ஆட்சியைப் பிடிக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் கொரோனாவினால் எல்லோரையும் போல சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல் என்று வீடுறைந்து இருக்கின்றார். ஆனால் தனிமையின் புனைவுக் களியாட்டு என்று தினமும் சிறுகதைகளாக எழுதித் தள்ளுகின்றார். அவர் எழுதும் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாசிக்கமுடியாது என்றாலும் கிடைக்கும் நேரத்தில் படித்தவற்றில் பிடித்தவற்றை யாழில் ஒட்டுகின்றேன்😀

 

ஜெயமோகனின் தளத்தில் இருந்து 

https://www.jeyamohan.in/130188#.XoWWcS_TVR4

இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் உலகியல்நுட்பங்களையும் சொல்வனவோ அரசியலை முன்வைப்பனவோ வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக மாயயதார்த்தம் – மிகுபுனைவுக் கதைகள் சிறந்தவை என்பது என் எண்ணம். எனக்கு உண்மையில் இங்கிருந்து எங்காவது கிளம்பிப் பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் கதைகளே இப்போதைய மனநிலையில் பிடித்திருக்கின்றன

ஒரு பதினைந்துநாட்களை புனைவுக்களியாட்டாக ஆக்கிக்கொண்டால் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

ஜெயமோகன் கொரோனாவினால் எல்லோரையும் போல சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல் என்று வீடுறைந்து இருக்கின்றார். ஆனால் தனிமையின் புனைவுக் களியாட்டு என்று தினமும் சிறுகதைகளாக எழுதித் தள்ளுகின்றார். அவர் எழுதும் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாசிக்கமுடியாது என்றாலும் கிடைக்கும் நேரத்தில் படித்தவற்றில் பிடித்தவற்றை யாழில் ஒட்டுகின்றேன்😀

 

ஜெயமோகனின் தளத்தில் இருந்து 

https://www.jeyamohan.in/130188#.XoWWcS_TVR4

இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் உலகியல்நுட்பங்களையும் சொல்வனவோ அரசியலை முன்வைப்பனவோ வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக மாயயதார்த்தம் – மிகுபுனைவுக் கதைகள் சிறந்தவை என்பது என் எண்ணம். எனக்கு உண்மையில் இங்கிருந்து எங்காவது கிளம்பிப் பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் கதைகளே இப்போதைய மனநிலையில் பிடித்திருக்கின்றன

ஒரு பதினைந்துநாட்களை புனைவுக்களியாட்டாக ஆக்கிக்கொண்டால் என்ன?

 

நான் பிரயாணங்கள் போது அ .முத்துலிங்கத்தின் "திகடசக்கரம்" என்னும் புத்தகம்தான் எடுத்து செல்வது.சிறிய புத்தகம்.கோட் பையில் வைத்து கொண்டு போகலாம்.பலமுறை படித்தாலும் அலுக்காது.அதிகம் யோசிக்கவும் வைக்காது.கதையுடன் சேர்ந்த இயல்பான நகைசுவை. எனக்கு மிகவும் பிடிக்கும்....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 9:19 PM, கிருபன் said:

இல்லை, அவன் ஆகாய ஊஞ்சலும் ஆடுவான். ஒருமுறை எதிர் ஊஞ்சலில் ஆடிய பெண் கைநீட்டும்போது தவறவிட்டுவிட்டாள். கீழே வலையும் தொய்ந்திருந்தது. தலை நொறுங்கி அங்கேயே செத்துவிட்டான்”

இந்தக் கதையில் ஒன்று என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. கதை நடந்த காலப் பகுதி பழையது. அன்றைய காலப் பகுதியில் சர்க்கஸ் இல் ஆண்கள் நிலையான ஊஞ்சலில் இருப்பார்கள். பெண்கள்தான் (சில ஆண்களும்) பாய்ந்து கரணங்கள் போட்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் ஆணின் கையைப் பிடித்து அல்லது அந்த ஆண் அவர்களின் காலைப் பிடித்து சாகசம் செய்வார்கள்.

நிலையான ஊஞ்சலில் இருப்பவர் பாய்ந்து வருபவரை பற்றிக் கொள்ளாமல் விட்டால் அவர் கீழே விழுந்துவிடுவார் என்பது உண்மை.

 

பாஸ்கரன் கொல்லப்படவேண்டும் என்பதற்காக  ஜெயமோகன் மெதுவாக  ஆட்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கிறார் போல் இருக்கிறது.

ஆனாலும் உங்களுக்குப் பிடித்திருப்பது போல் கதை எனக்கும் பிடித்திருக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக்கொண்டிருக்கும்போது எனக்கும் இந்த logic இடித்தது. ஆனால் மாய யதார்த்தக் (magical realism) கதையில் ஜெயமோகன் வித்தை காட்டியிருக்கின்றார் என்று புரிந்தது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

நான் பிரயாணங்கள் போது அ .முத்துலிங்கத்தின் "திகடசக்கரம்" என்னும் புத்தகம்தான் எடுத்து செல்வது.சிறிய புத்தகம்.கோட் பையில் வைத்து கொண்டு போகலாம்.பலமுறை படித்தாலும் அலுக்காது.அதிகம் யோசிக்கவும் வைக்காது.கதையுடன் சேர்ந்த இயல்பான நகைசுவை. எனக்கு மிகவும் பிடிக்கும்....!  😁

Cocoville ஐச் சேர்ந்த திரு. முடுலிங்கவின் கதைகள் சில படித்திருக்கின்றேன். ஒரு சின்னக் கதையைச் சுத்தி பல விடயங்களைப் பின்னுவார். பல நாடுகளில் வேலை நிமித்தம் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கின்றது. 

ஷோபாசக்தி முத்துலிங்கத்தைக் கிண்டலடித்து எழுதிய கதை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

Cocoville ஐச் சேர்ந்த திரு. முடுலிங்கவின் கதைகள் சில படித்திருக்கின்றேன். ஒரு சின்னக் கதையைச் சுத்தி பல விடயங்களைப் பின்னுவார். பல நாடுகளில் வேலை நிமித்தம் இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கின்றது. 

ஷோபாசக்தி முத்துலிங்கத்தைக் கிண்டலடித்து எழுதிய கதை!

 

கதையைப் படித்தேன் சிரிச்சு முடியவில்லை......ஒருத்தரை நையாண்டி செய்வதென்றாலும் அவர் மனம் நோகாமலும் அவரே ரசிக்கும்படியாகவும் செய்ய வேண்டும்...... சூப்பர் சோபாசக்தி......!  😂

நன்றி கிருபன்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.