Jump to content

நான் மட்டும் தனித்திருக்கிறேன்


Recommended Posts

நான் மட்டும் தனித்திருக்கிறேன்

கொடுமையான நீ தோற்றுவிட்டாய்.
உன்னாலும் முடியவில்லை.
எவராலும் முடியாது என்பது
தெளிவாகவே எனக்கு தெரிகிறது.

உலகையே ஆட்டிப் படைக்கும்
உன்னாலும் முடியாது.
கொரோனாவே முடியாது.
உன்னாலும்  முடியாது.

உனது பார்வையிலிருந்து தப்ப
எல்லோரும் வீட்டில்
இருந்தே ஆகவேண்டும் என்ற போது
பயத்திலும் ஓர் மகிழ்ச்சி
எனக்குள் எட்டிப் பார்த்தது.

வீட்டில் எல்லோரும் ஒன்றாக,
ஆனாலும் இடைவெளி விட்டிருந்து
மனம்விட்டு பேசலாம் என
மனதுக்குள் நினைப்பு எழுந்தது.

ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது.
தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே
வாழ்க்கை நகருகின்றது.

கணவன் தன் காதலியுடன்
பொழுதைப் போக்க,
மகன் தன் நண்பர்களுடன்
அரட்டை அடித்து விளையாட,
மகள் தனது தோழிகளுடன்
உற்சாகப் பேச்சுகளில் நேரம் கழிக்க,
நான் மட்டும் தனியே வீட்டு வேலைகளில்

அவர்களுக்கான 
மூன்று வேளை உணவு 
மாறி மாறி என்ன செய்யலாம்
என யோசித்து யோசித்து சமைப்பது,
இடையே இடையே அவர்களுக்கான
தேவைகள் என செய்து கொண்டு,
அவர்கள் போட்டு கழற்றி வீசும்
உடைகளை எடுத்து துவைக்கப் போட்டு,
எடுத்து உலர்த்தி மடித்து வைத்து 
வீட்டினை துப்புரவு செய்து
ஆறுதலாக ஓய்ந்திருக்க நேரமின்றி
உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
இந்தக் கவலையை ஆரிடம் 
சொல்லி ஆறுதலடையாலாம் என 
நான் தவித்துக் கொண்டிருக்க,

மனைவிமாரால் வீட்டில் படும்
துன்பம் என காணொளிகளும்,
கிண்டலும் கேலியுமான படங்களும்
சமூகவலைத்தளங்களில் பறக்கின்றன.
அதனை இவர்கள் பார்த்துப் பார்த்து
சிரித்துக் களிக்கும் கொடுமையை
ஆரிடம் சொல்லி அழ?

வீட்டில் எல்லோருக்கும்
அவர்களின் கையில் உள்ள
கருவிகள் மட்டுமே 
உறவாகிப் போனதால்
அவர்களின் உண்மையான 
உறவான நான்
தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன்.
அந்தளவில்,
கொரானாவே என்னை மட்டுமே
மீண்டும் தனித்திருக்க வைக்க
உன்னால் முடிந்தது.
அதனால் நீயும் தோற்றுவிட்டாய்.

மந்தாகினி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.